காலங்கள்தோறும் திருக்குறள் ஆட்சி

உலக மக்களின் சமுதாயப் பெருந்தோட்டத்தில் கோடானு கோடிச் சிந்தனை மலர்கள் பூத்துள்ளன. அவ்வாறு பூத்தவற்றுள் பெரும்பாலானவை, ஒரு பகல் வாழ்க்கையோடு, வாடி உதிர்ந்துபோய் உள்ளன. ஒரு சில மட்டுமே, கற்பகத்தருப் பூக்களைப் போல, காலம் கடந்தும் பயன்தந்து வருகின்றன. உலக சமயநூல்களோடும் தத்துவ ஏடுகளோடும் இவ்வாறு நிலைபெற்றவை கலைத்திறப் படைப்புக்களாகக் காலம் வென்று நிலவுகின்றன.

‘காலம் வென்று நிலவுதல்’ என்பது கடுமையான ஓர் உரைகல். சமயத் தத்துவமாயினும் சமுதாயச் சிந்தனையாயினும் – அது உருவாக்கப்பட்ட காலத்திற்கு மக்களைக் கூட்டிச் சென்று அறிவுறுத்தலாம். அது மட்டுமின்றி, மக்கள் தலைமுறைகள் வாழும் காலம் தோறும் – உடன்வந்து மிகு நன்மை தருவதாகவும் நீடிக்கலாம். திருக்குறள் காலத்தை வென்ற நூல் என மேடைகளில் முழங்கக் கேட்கிறோம். திருக்குறள் தான் எழுதப்பெற்ற காலப் பொதுமையைப் புலப்படுத்துவதோடு, நாம் வாழும் காலப் புதுமைக்கும் உகந்ததாக இருவழியில் நிலைபெற்று விளங்குகிறது. இதுவே திருக்குறளின் சிறப்பு, சமய நூல்களைப் போல. அவற்றையும் விட இது பெற்றுள்ள அழியாச் சிறப்பு. வேத உபநிடதங்கள், பகவத் கீதை, விவிலியம், திருக்குரான் ஆகியவற்றோடு திருக்குறளை ஒப்பிட்டு அது ‘தமிழ் வேதம்’ என்றும் ‘உத்தர வேதம்’ என்றும் பலர் போற்றி முழங்குவர். எனினும் வேதம் – வேதாந்தம் – எனும் சமயச் சிமிழ்களுக்குள் மட்டும் வள்ளுவத்தை அடக்கி, அதன் காலப் பொதுமையை விளக்கிக்காட்ட முற்படலாகாது. “சமயக் கணக்கர் மதி வழி கூறாமல் உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவமே நலம் தருவது” எனக் கொள்ளவேண்டும்.

‘உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவம்’ எனும் கருத்து நம் சிந்தனைக்கு உரியது. வள்ளுவர் வாழ்ந்த காலத்தில், தமிழ்நாட்டிலேயே பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்த போதிலும், பல வழிபாட்டு முறைகள் இருந்த போதிலும் அவற்றைக் கடந்து இறை நம்பிக்கை, வழிபாட்டுப் பொதுமை, சான்றாண்மை முதலிய பொது அறங்களையே அவர் அடிப்படையாகக் கொண்டார்; எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வகையில், சால்பு நெறிகளையே வலியுறுத்தினார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

     தெய்வத்துள் வைக்கப் படும்”         (50)

என இங்கு வாழ்வாங்கு வாழும் முறைக்கே அழுத்தம் கொடுத்தார். வான், நரகு, இருள்சேர் இருவினை, எழுமை, ஊழ் என்றெல்லாம் வள்ளுவர் துறக்க உலக நம்பிக்கைகள் பற்றிச் சொல்லியுள்ளார். எனினும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதையே முன்னிலை அமர வாழ்வாக்கிக் காட்டுகிறார். மனித நேயமே – எல்லோரும் ஏற்கத்தக்க சமய நெறி- என சமரச விளக்கம் தந்தார். இந்த மனிதநேயச் சிந்தனைகளே எக்காலத்திற்கும், எந்த நாட்டிற்கும் ஏற்றவை. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனும் பொது அறம் உலகெல்லாம் நிலவ வேண்டும் என்பதே அறிஞர் விழைவு: என்றாலும், அது என்று கைகூடும்; என்றைக்கு மனித குலம் உய்யும்?

அந்த உய்வு நாள் வரும் வரை ஓய்ந்து இருக்க முடியுமா? வள்ளுவர் அப்படிச் சொல்லவில்லை. சமய வழி, வகுப்பு வழி, சாம்ராஜ்ய வழி பலப்பலவாக இருந்தாலும், ஓரிடத்தில் – ஒரு கட்டமைவில் வாழ நேர்ந்த பல்வகைப் பிரிவனர் – தம் அனைவர் நலத்திற்கும் பொதுவான உணர்வுகளைப் பேணி வளர்த்து வாழ வேண்டும் என்கிறார்.

“அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய்

     தந்நோய்போல் போற்றாக் கடை?”          (315)

என்பதை விட வேறொரு சமய நெறி உண்டா என வினவுகிறார்.

“மறந்தும் பிறன் கேடு சூழற்க”       (204)

“பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்”          (972)

“அறத்தான் வருவதே இன்பம்”       (39)

“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”        (131)

என வள்ளுவர் கூறிய இவையெல்லாம் எக்காலத்தவர்க்கும், எச்சமயத்தவர்க்கும் ஏற்புடைய பொதுமைக் குறள் போதனைகள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் கூறியவை இன்றும் அப்படியே பொருந்துகின்றன. இந்தப் பொருத்தமே காலம் வென்று வாழும் நூல் எனும் பெருமையைத் திருக்குறளுக்கு அளிக்கிறது.

இன்றைய வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்கள்; புதுப்புதுப் பிரச்சினைகள். இவற்றிற்கெல்லாம் தீர்வு தேடி அலைவதே ஒரு பெரிய வாழ்க்கைப் போராட்டமாக உள்ளது. தக்க தீர்வுகளைத் தேடுவோர்க்குத் திருக்குறள் வழிகாட்டுகிறது.

அதிலும் வள்ளுவத்தின் தனித்தன்மை புலப்படும். தீர்வுகளை எதிர்மறைப் பிணக்கின்றி, உடன்பாட்டு முறையால் நம்பிக்கையூட்டிச் சொல்லும் தன்மை விளங்கும். சான்றாக ஒரு குறளைச் சொல்ல விழைகிறேன்.

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

துன்பமும் முடிவில் ஒருவகையில் இன்பமானதே எனக் கருதிச் செயலாற்றுபவன், இறுதியில் தன் பகைவரும் போற்றித் தன்பால் வரக்கூடிய சிறப்பினை அடைவான் என்று ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்ளும் உயர்தனிச் செயல் முறையை இக்குறள் சொல்லுகிறது; அத்தகையவருக்குத் தமது பகைவரும் விரும்பத்தக்கவையில் சிறப்புகள் வந்து சேரும் என நம்பிக்கையூட்டுகிறது.

952total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>