செய்க பொருளை*

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திடப்’ பொருள் வேண்டும். ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என அறுதியிட்டுக் கூறிய வள்ளுவப் பேராசான், ‘செய்க பொருளை!’ என மாந்தருக்கெல்லாம் அறிவுறுத்துகிறார். குறள் முழுவதிலும், பல்வேறு மாந்தருக்கும் நிலைக்கும் ஏற்றவாறு, வெவ்வேறு நடைத்திறங்களைக் கையாளும் வள்ளுவச் செம்மல், ‘உண்ணற்க கள்ளை’ எனத் தீய பழக்கத்தைக் கைவிடுமாறு வியங்கோளாக வேண்டுதல் நடையில் கூறிய வள்ளுவர், இங்கே, ‘செய்க பொருளை!’ என ஆக்க நெறிக்கு ஆட்பட வருமாறு கட்டளையிடுகிறார்; கண்டிப்பாக வற்புறுத்துகிறார்.

தனிநபர், குடும்ப, சமுதாய உயர்வுகளுக்கு மட்டுமன்றி, ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் பொருள் வளம் மிகமிக இன்றியமையாதது. உலகின் புகழ்பெற்ற நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், இரசாயனம், உலக அமைதி, இலக்கியம் ஆகியவற்றில் சாதனை புரிந்த சான்றோர்க்கு வழங்கப்படுவதோடு மற்றுமொரு மாண்பார்ந்த துறைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதுதான் பொருளாதாரம் எனும் பொலிவுமிகு துறை. இப் பொருளாதார இயலில், புதியதொரு சித்தாந்தத்தை ஆய்ந்து விளங்கும் அறிஞருக்கு அப்பரிசு அளிக்கப்படுகிறது. வரலாறு, புவியியல், தத்துவ இயல் முதலியவற்றிற்குக் கிட்டாத நோபல் பரிசைப் பெறும் பெருமையும் பொருளாதார இயலுக்குக் கிட்டியிருப்பதே ‘பொருள்’ எனும் வாழ்வுண்மைக்கு அளிக்கப்படும் சிகரச் சிறப்பு எனக் கருதலாம்.

தமிழர்கள் வாழ்க்கை எனும் மாடத்திற்கு நாட்டிக் கொண்ட உறுதிப் பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் தொல்காப்பியம் தொட்டு, அனைத்துக் காலங்களிலும், புதுப்புதுச் சிந்தனைகளால் பொலிவு பெற்று, மெருகேறி வந்துள்ளன. ஆனால், வள்ளுவர், ‘வீடு’ என்பதனைத் தனியாக விரித்துப் பேசவில்லை! அறம், பொருள், இன்பம் என முப்பாலாக்கி, அறநெறிக்கும், இன்ப நுகர்விற்கும், பொருளையே நடுவணாக அமைத்து, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட வேண்டுமானால், வையகத்துள் வாழ்வாங்கு, இன்பமுற வாழ்ந்தால் போதும் என எல்லை கோலுகிறார்.

மனித இனம் கண்ட வலிமையானதொரு சமுதாய வரன்முறை ‘நாடு’ எனும் அமைப்பு. இந்த நாடு எனும் நிலப்பரப்பு மேடாக இருக்கலாம், பள்ளமாக இருக்கலாம்; காடாக இருக்கலாம், கட்டாந்தரையாகப் போகலாம்; பசுமையாகச் செழிக்கலாம், பாலைவனமாகவும் மாறிப் போகலாம். ஔவைப் பெருமாட்டி அருளிய புறநானூற்றுப் பாடல்,

“நாடாகொன்றோ, காடாகொன்றோ;

     அவலாகொன்றோ, மிசையாகொன்றோ;

     எவ்வழி நல்லவர் ஆடவர்;

     அவ்வழி நல்லை வாழிய நிலனே”          (187)

என மக்களோடு நிலத்தை வாழ்த்துவது போல, வாழும் நிலப்பகுதி எப்படி இருப்பினும், அதில் வதியும் மக்கள், நல்லவர்களாய், வல்லவர்களாய் இருப்பின், நிலமும் சிறந்து உயரும்; நிலத்தில் வாழும் மக்களும் நிலை உயர்ந்து தலைமை பெறுவர் என வரலாற்றில் படிக்கிறோம்.

வள்ளுவர் ஒரு ‘நாடு’ என்பது, எப்படி எல்லாம் இருத்தல் வேண்டும் என்பதற்குத் தனி அதிகாரமே செய்துள்ளார். வள்ளுவரைப் போல உலகில், நாடு என்பதனை விளக்க, சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், சாணக்கியர், மாக்கியவெல்லி, மார்க்ஸ் முதலியோர் காலம் காலமாக எண்ணற்ற இலக்கணங்களைப் புதுப்புதுவகையாய் எழுதி இருப்பினும் அவை எல்லாம் வள்ளுவரது ‘நாடு’ அதிகாரத்தின் 10 குறட்களுக்கு உள்ளேயே அடங்கி விடுகின்றன. அந்த அளவுக்கு அடிப்படை உண்மைகளை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் வள்ளுவர் பெருமான்.

‘நாடு’ என்பது நாடாத வளங்களை, எல்லாம், தன்னகத்தே கொண்டதாக அமைந்திருப்பது சிறப்பு. எல்லா நாட்டிற்கும் இத்தகைய இயற்கைக் கொடை கிட்டிவிடுவதில்லை.

ஒரு நாட்டில் எவ்வளவுதான் இயற்கைச் செல்வங்களும், எண்ணற்ற கனி வளங்களும், ஏடு தொலையாத நிதி நலன்களும் எல்லைகாணவியலாது பொதிந்து கிடந்தாலும் அவை எல்லாம், ‘தொட்டனைத்தூறும் மணற்கேணியைப் போல’ மனிதர்களின் தொடர்ந்த முயற்சிக்கும், முற்போக்குச் சிந்தனை முனைப்பிற்கும் தக்கவாறே ஒன்றாய் பலவாய் பயன் நல்கும்.

ஒரு நாட்டிற்கு நான்கு திசைகள்தான் எல்லை என வள்ளுவர் கருதவில்லை. இசையும் துறைகளை எல்லாம் எல்லைகளாக்கிக் கொள்ளலாம் என்றே நினைத்தார்.

பிணி இன்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமமாகிய காவலரசு ஆகிய ஐந்தும் நாட்டுக்கு உரிய நல்லணிகள்; நவைபடா அரண்கள் என்கிறார் வள்ளுவர். செல்வமாகிய சிந்தை நிறைவால் முதலீடு செய்து, உழைப்பால் விளைவு களைப் பெருக்கி, பிணி இன்மை எனும் பெருநலத்தோடு, இன்பம் தழைக்க, இனிது வாழலாம் என்றாலும், இவை நான்கிற்கும் வலுவான, நிலையான, ஏமமாகிய காவலும், கண்போலக் காக்கும் அரசமைவும் கட்டாயம் வேண்டும் என்கிறார் அவர். மேலும், எல்லா அமைவுகளும் இருந்து, வேந்தமைவு, நல்ல ஆட்சிப் பேறு இல்லாத நாடு, தலைமை பெற்று நீடித்து நிற்கமுடியாது என்கிறார்; பல்குழுவும், பாழ் செய்யும் உட்பகையும், அரசை அன்றாடம் அலைக்கழிக்கும் வன்முறைக் குறும்புகளும் ஒரு நாட்டில் கள்ளியாய்ப் படராமல் இருப்பது அந்த நாட்டின் இறையாண்மையைப் (ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) பொறுத்தது என்கிறார்.

நாட்டிற்கு ஆகாதன இவை இவை எனச் சொன்னமை போல, நாட்டு உயர்வுக்கு ஆக்கம் தருவனவும் இவை இவை என வள்ளுவக் குறளின் பொருட்பால் புதுமைக்குப் புதுமையாய் விளங்குகிறது:-

“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்

     செல்வதும் சேர்வது நாடு”      (731)

குன்றாத விளைவுகளும், கூட்டிச் சேர்க்கும் உழைப்பார்வம் மிக்க, தகுதி வாய்ந்த மக்களும், இவற்றை எல்லாம் கொண்டு செலுத்தும் குறைவற்ற செல்வரும் நாட்டின் முப்பரிமாணம் போன்ற அங்கங்கள்; ஆக்கங்கள். உலகப் பொருளாதாரச் சிந்தனையில் செல்வர்களை எல்லாம் முதலாளிகள் எனப் பேதப்படுத்திப் பார்க்கும் வர்க்கப் போராட்டச் சிந்தனைகளும், அவற்றைத் தூண்டும் சுயலாப ஆதிக்கப் போக்கும் அண்மை வரலாற்றில் இடர்ப்பாடான நிலைகளைத் தோற்றுவித்துள்ளன. என்றாலும், இந்த நூற்றாண்டில் நாம் வாழும் இந்தக் காலகட்டப் பகுதியில் அச்சிந்தனைப் போக்கிலும் புதிய திருப்பங்கள் ஏற்பட்டே வருகின்றன.

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் & அவன்

     காணத்தகுந்தது வறுமையாம்;

     பூணத்தகுந்தது பொறுமையாம்”

என்றும்,

“பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்

     புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்”

என்று பாரதிதாசன் குமுறியமை போல, ஏழையர் இன்னலுறவும், செல்வர்கள் நாளுக்கு நாள் சீமான்களாகச் செழிக்கவும் நேரிட்டன என்பதும் வரலாற்று உண்மைதான் என்றாலும், முதலாளித்துவமும் தொழிலாளி வர்க்கமும் எதிர்த் துருவங்களாகவே என்றும் இராமல், சமநிலைச் சந்திப்பிற்கு வரும் புதிய வரலாறு புலப்பட்டு வருவதும் நம் கண்களில் படுகிறது. இரு சாராரும் தத்தமது பொறுப்புக்களை உணர்ந்து, கூடிச் செயல்படும் கூட்டுணர்வு உலகெலாம் அரும்பு கட்டி வருவதும் தெரிகிறது.

இத்தகைய நாட்டுணர்வும் கூட்டுணர்வும் உடைய செல்வர்களே, உழைப்பாளர்களே நாட்டுக்குத் தேவை என்பது வள்ளுவத் திட்டம். மண்வளம் கொண்ட நாட்டைத் தமது அதிக உழைப்புத் திறத்தால் மேலும் செழிப்புறச் செய்பவர்களே பெரிதும் வேண்டும் என்பதும் வள்ளுவப் பொருளாதாரக் கொள்கை.

பொருள் என்பது பணம் மட்டும் அன்று.

“பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருள்அல்லது இல்லை பொருள்”         (751)

எனப் பொருளுக்கு வள்ளுவர் எக்காலமும் ஏற்ற பொலிவு மிக்க விளக்கம் தருகிறார். உடல் உழைப்பு, மூளை உழைப்பு, நிர்வாகத் திறன், நிதி அளிப்பு, கொள்கை வரையறை, கூடிச்செய்யும் ஆக்கம் ஆகிய அனைத்தும் பொருளாகவே கருதப்படும். அறிவு நலமும், ஆக்கச் சிந்தனையும், ஆய்வுத் திறமும், ஊக்க முயற்சியும் செல்வக்கூறுகளாகவே, திருக்குறள் வகுக்கும் பொருள் செயல் வகைகளாகவே கருதப்பட வேண்டும்.

இயற்கை வளம் இயல்பாக அமையப் பெற்றிராத சிறுசிறு நாடுகள் கூட, தமது ஆட்சிச் சிறப்பால், ஆக்க பூர்வமான அணுகுமுறையால் உலகில் இன்று பொருளாதார முதன்மை பெற்று நிற்கக் காண்கிறோம். வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பக் கலைகளைத் தேர்ந்து; மேம்பாட்டு நோக்கோடு திட்டங்களை வகுத்து; பொதுநல உணர்வோடு அவற்றைச் செயலாக்கி; கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளைக் கைக்கொண்டு அந்நாடுகள் – சிறுநாடுகள் எனினும், சீமான் நாடுகளாக- வெற்றிவலம் வரக் காணுகிறோம். இயற்கை வளத்தோடு. தொழில் திறமையோடு, மனித உழைப்போடு கொண்டு கூட்டிச் செயலாற்றும் ‘வினைத்திட்பம்’ எனும் ஆக்கஆட்சி முறையையும், பொதுநலம் பேணும் சீரிய அணுகுமுறையையும் (ஷிஹ்stமீனீ) கொண்டுள்ள நாடுகள் அகிலத்தன்மை பெற்றுவரக் கண்டு அதிசயிக்கிறோம்; ஆச்சரியப்படுகிறோம்.

“வளமை எல்லாம் ஒரு நாடு தன்னகத்தே

     வகை வகையாய்க் கொண்டாலும் & அவற்றை

     வழிநடத்த ஆள் இல்லாது போனால், அந்நாடு

     படுத்திருக்கும் நந்தியாய் ஆகும்”

எனப் புதுக்கவிதை ஒன்று குரல் கொடுத்துள்ளது. அதுபோல வளமை பெற்றிருந்தும் வழிநடத்தத் தக்க தலைமை பெறாத நிறுவனங்களும் நாடுகளும் சவலைப் பிள்ளைகளாக, சாண் ஏறி முழம் வழுக்கும் அவலங்களாகவே தத்தளிக்கும்.

“பொருள்எனும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்

     எண்ணிய தேயத்துச் சென்று”         (753)

என வள்ளுவர் கூறுவது போல, பொருள் எனும் பொய்யா விளக்கம் தனது நாட்டில் உள்ள பகையை வென்று, பதப்படுத்தித் தருவதோடு நில்லாது, பிற தேசங்களுக்கும் சென்று அங்கும் இருளகற்றும் என்பதை இன்று நடைமுறையில் காணுகிறோம். ஒரு நாட்டின் செல்வங்கள், பிற நாட்டிலும் பொருளாதாரங்களாகப் பூத்துக் குலுங்கும் புதுமைகளைக் காணுகிறோம். உள்நாட்டு உரிமைகளைப் பாதிக்காத அந்நிய முதலீடுகள் பல நாடுகளில் ஊக்கு விக்கப்படுவதையும், அவை ஊற்றுக்களாகச் சுரப்பதையும் இன்றைய பொருளங்காடியில் காணுகிறோம்.

நாட்டு மக்களின் செய்வினைத் திறனே, நாட்டின் செல்வமாகச் சேருகிறது. மதிநுட்பம் நூலோடு உடையவர்கள், அறிஞர்கள் நாட்டுச் சிந்தனை உடையவர்களாக வழிகாட்டவும் தலைமை ஏற்கவும் முற்பட வேண்டும். இலாப நோக்கிற்காகத் தொழிலில் முதலீடு செய்வது போல, நாட்டு மக்கள் உயர்வுக்காகவும் தொண்டுள்ளத்தோடு, தியாகம் எனும் முதலீடாகச் செய்ய வேண்டும். ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ ஆகையால், அறிவோடு செல்வமும் உடையவர்கள், சொந்த முயற்சியால் தாம் உயர்ந்து, சொந்த நாட்டையும் உயர்த்தும்போது எல்லாம் உடையதாக நாடும் ஓங்கி நிற்கிறது.

நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலத்தில் இருந்தே, இத்தகைய பொருளாதாரச் சிந்தனை, நம் தமிழ் மரபின் ஊடு சரமாக விளங்கி வந்துள்ளது. பல்வேறு நாடுகளுக்குச் சென்று, தம் உழைப்பினை ஈந்து, அந்நாடுகளைச் செல்வச் செழிப்புடையதாக்கிய செய்தி எல்லாம் தமிழின வரலாறு என எழுதப்பட்டுள்ளது. காலச்சூழல் மாறியமையால், எதிர்பார்ப்புச் சிந்தனையும், வருமுன் காக்கும் பெற்றியும் சேர்ந்தமையாமையால், தமிழ் மக்கள் பல்வேறு நாடுகளில் குடியேறி வதியும் நிலையே பெரும்பாலாகத் தோன்றுகிறது. இவ்வாறு குடியேறி வாழ்வது, தமிழினத்திற்கு மட்டுமே ஏற்பட்டுவிட்ட வரலாற்று நிகழ்வில்லை; பல இன மக்கள், பல நாடுகளில் குடியேறி வாழும் வகைமையே இப்போது வளர்ந்து வருகிறது.

இவ்வாறு குடியேறி வாழும் வகைமைக்கு உள்ளான மக்கள், அவ்வந்நாடுகளையே தமது சொந்த நாடு போலப் பாவித்து, வாழவும் வளரவும் முற்பட வேண்டும். தாயகத்தின் மீது ஒரு காலும், புகுந்த நிலத்தின் மீது மற்றொரு காலுமாக, இரட்டைப் படகின் பயணம் செய்யும் இரண்டும் கெட்டான் நிலைக்கு இடம் தரக்கூடாது. வாழும் மண்ணில் வளத்தைப் பெருக்குவதோடு, தாமும் இசைந்து வாழ்ந்து, உயரத் தலைப்பட வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் செலவிட்டுச் சோம்பலுறும் கேளிக்கை களுக்கு உள்ளாகாது, சிக்கனமாக வாழ்ந்து, சேமிப்பை எல்லாம் முதலீடாக்கி, சிறுசிறு தொழில், வணிக முயற்சிகளில் நாட்டமுற்று நாளும் வளரவேண்டும். புகுந்த நாட்டில் நன்கு வேரூன்றாமல், கூடித் தொழில் செய்ய முயலாமல், அன்றாடம் காய்ச்சி வாழ்க்கையில் அல்லல் படக்கூடாது.

“தண்ணீருக்குள் மூழ்குபவன், உயிர் பிழைக்க மூச்சு விடுவதற்காகத் துடிப்பதைப் போல, இவ்வுலக பந்தங்களில் மூழ்கியிருப்பவன் இறையருளைப் பெறுவதற்காகவும் துடிப்புணர்வு கொள்ள வேண்டும்” என்றார் விவேகானந்தர். இறையருளைப் பெற ஆன்மா துடிப்பதைப் போல, பொருட்சிறப்பைக் கைக்கொள்ள அருமுயற்சித் துடிப்பும் அமைதல் வேண்டும். இத்தகைய துடிப்புணர்வுடைய மக்களும் நாடுமே மாநில உயர்வு பெறும்.

இன்றைய வாழ்க்கை முறையில் விரைவு, துணிவு, ஆற்றல் என்பன பொருள் செய்யும் வகைக்கு மிகத் தேவை. காலத்தைப் பொன் எனப் போற்றி, கடமையைக் கண் எனக் கருதி, காலமறிந்து, இடமறிந்து, கருவிகளைப் பயன்கொண்டு, பொருளாக்கம் செய்யும் நாடே முன்னிடம் பெற்றுத் திகழ்கிறது. ‘நாள் ஒன்று புலர்ந்தால் புதுமை ஒன்று பூக்கும்’ என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், புதிய கண்டுபிடிப்புக்களும் அறிவியல் அற்புதங்களும் உலக அரங்கில் போட்டியிட்டு வந்துகொண்டே இருக்கின்றன. ‘வலிமையுடையதே வாழும்’ என்ற சட்டமே ஆட்சி புரியும் இன்றைய தொழில் வாணிபப் போட்டி உலகில் விரைந்து மதிநுட்பத்தோடு வினையாற்ற நாம் முயல வேண்டும். நமது சிந்தையிலும் செயலிலும் போட்டியுணர்வும் வெற்றி நாட்டமும் மேம்பட்டுத் துலங்க வேண்டும். எனினும் இழப்பீட்டிற்கு அஞ்சாமல், தொழில் முனைவோராகத் தலை எடுக்கும் நாட்டம் சிறக்க வேண்டும். ‘செய்க பொருளை’ எனும் வள்ளுவக் கட்டளை தனிநபரை உயர்த்தும், சமுதாயத்தை மேம்படுத்தும், நாட்டை வளமுறுத்தும், நல்லுலகை வாழ்விக்கும், நிறைநலத்தோடு இறையருளும் சேர்ந்து எல்லாவற்றையும் சித்தியாக்கும் என்கிறது அபிராமி அந்தாதியின் ‘கலையாத கல்வியும்’ எனத் தொடங்கும் பாடல்.

செய்வோம் பொருளை; சிறப்போம் வாழ்வில்!

 

2133total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>