இன்பம் பயக்கும் வினை

செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை’

துணிவுள்ள மனம் துன்பம் வந்தபோதும் கலங்காது. துணிவுள்ள நெஞ்சம் அஞ்சாமை உடையது; ஊக்கமும். உறுதியும் உடையது. அறிவும், கல்வியும் இருந்தும் பலர் வெற்றிபெறாது தோற்பதன் காரணம் துணிவின்மையே. செயல்களைச் செம்மையாக எளிதில் முடிக்கத் துணையாக இருப்பது துணிவே.

செயல் செய்யும்போது, தொழில் ஆற்றும்போது, உண்மைகளை அஞ்சாது சொல்லிச் செயல்படுத்தும் போது, துன்பங்கள் நேர்வது இயற்கை. முடிவில் இன்பம் தரும் செயலானால் துன்பங்கண்டு மயங்கவோ, கலங்கவோ வேண்டியதில்லை. ஆகவேதான், அச்சமின்றி, எழுச்சியோடு ‘செய்க செயலை’ என்று வலியுறுத்துவார் வள்ளுவர்.

‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்றாலும், அஞ்சுவதற்கு அஞ்சவேண்டும். பழி, பாவங்கள், தீமைகள் கண்டு அஞ்சவேண்டும் என்றாலும், துன்பங்கருதி நற்செயல்கள் செய்ய அஞ்சவேண்டியதில்லை. தன்னலங்கருதி பாதகம் செய்பவர்களைக் கண்டு பயம் கொண்டு வாழ்ந்தால் தனிவாழ்வும், சமுதாயமும் படிப்படியாகக் கெட்டு சீர்குலைந்து விடும். கல்வியும், அறிவும் பெற்றவர்கள் அச்சத்தாலும், தன்னலத்தாலும், அக்கறையின்மையாலும் தீமைகளை எதிர்க்காமலும் தவறுகளும் இயற்கையானவை என்று நியாயப்படுத்தியும் வாழ்ந்தால் நாடு சீர்கேடுறும்.

நெஞ்சில் உறுதியின்றி, நேர்மைத்திறனுமின்றி ஆற்றல் இருந்தும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் இதுவே எல்லாத் தீமைகளுக்கும், பாவங்களுக்கும் அடிப்படையாக மாறிவிடும்.

கற்றவர்களிடம் உள்ள காரணமற்ற அச்சமும், பயமும் நீங்கினால் மக்களிடையே நிலவும் அறியாமையாகிய வறுமை நீங்கும். மக்களும் சரியான வழி நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். கற்றவர்கள் உண்மைகளைத் துணிவோடும், தெளிவோடும் விளக்கிக் கூறும்போது – அவசியமானால் இடித்து எடுத்துரைக்கும் போது – நாட்டு மக்கள் எழுச்சியுற்று விழிப்படைவார்கள்; அறநெறிகள் தழைக்கும்.

அறத்தோடு கூடிய செயல்களைச் செய்யும்போது முதலில் துன்பம் நேரிட்டாலும், முடிவில் அச்செயல் இன்பம் பயக்கும். துணிவே வெற்றியை அளிக்கும்.

“துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

 இன்பம் பயக்கும் வினை”          (669)

பேராற்றல் படைத்த மனிதன் தன் ஆற்றலை உணர வேண்டும்.

“வலிமை படைத்தோர் வாழ்வுக்கு உரியவர்”

என்று கூறுகிறது கீதை.

“உள்ளம் உடைமை உடைமை”

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

 திண்ணிய ராகப் பெறின்”           (666)

என்று மனிதனின் வலிவையும் பேராற்றலையும் வியந்து பேசுவார் வள்ளுவர்.

ஆகவே அரிய காரியம் என்று அயர்ந்துவிடாமல், ஊக்கத்துடன் துன்பம் கண்டு அஞ்சாது அரும்பெரும் காரியங்களைச் சாதிக்க வேண்டும்.

மனித உயிர்களை அன்போடு நேசித்து, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்று உணர்ந்து, என்பும் பிறருக்கு உரியதாக்கி, அன்புற்றமர்ந்து, தொண்டு செய்து, இன்புற்று இனிது வாழ்வோம்.

4423total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>