ஒளிமயமான வாழ்க்கை

கடல் கடந்து நெடுந்தொலைவு வந்து வாழும் நீங்கள் உங்களுக்கு நேரிடும் துன்பங்களை எல்லாம் இன்பமாக ஏற்று வெற்றி கண்டு வருகிறீர்கள். வாழ்க்கையினை ஒரு வேள்வி எனக் கொண்டு, உழைப்பெனும் நெய்யூற்றி, அதனைச் சுடர் ஓங்கி எரியச் செய்து வருகிறீர்கள்; பிறர் வாழ்வையும் ஒளிமயமாக்குகிறீர்கள்.

அந்த ஒளி – தாயகத்திற்கும் வெளிச்சம் தரும் வகையில் பரவட்டும். இந்த நாட்டில் நீங்கள் வளமாக விழுதூன்றிச் செல்வம், செல்வாக்கு எனும் நலமான கிளைகளை விரித்துள்ளீர்கள். என்றாலும் வேர்கள் எல்லாம் நமது மண்ணின் மரபில், பண்பாட்டுத் தோட்டத்தில் என்றும் ஊன்றி நிற்கும் வகையில் மிகக் கவனமாக இருக்கிறீர்கள்.

அதற்காகவே இத்தகைய தமிழ் தழுவிய விழாக்களை நடத்துகிறீர்கள்; திருக்குறளுக்கு மேடையமைத்து மகிழ்கிறீர்கள். மதுரையில் நாங்கள் தொடங்கியுள்ள ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ உங்களோடு நேயம் நிறைந்த நட்புறவை நாடி நிற்கும்: நாடியவற்றை எல்லாம் நலம் பெற வைக்கும். உங்கள் அன்புறவால் எங்கள் பணி மேலும் உறுதி பெறும்…

இவையெல்லாம் அங்கு நான் உரையாற்றிய, அன்பர்களுடன் உறவாடிய சிந்தனைச் சிதறல்கள். அங்கு நான் உரையாற்றினேன் என்பதை விட விழாவுக்கு வந்த அன்பர்களின் கலந்துரையாடலில் இருந்தே மிகுதியும் கற்றேன் என்பதே பொருந்தும்.

அன்று விழா முடிந்ததும் அன்பர்கள் பலரும் என்னைச் சூழ்ந்துகொண்டனர். ஒருவர் மேடையில் ஆற்றிய உரை பயன் தந்ததா என அறிய முடிவில் அவரைச் சூழும் அன்பர்கள் கூட்டம்தான் சரியான சான்று. “வெகு நாட்களுக்குப் பின்னர், கருத்தாழம் மிக்க பேச்சைக் கேட்டோம்” என நண்பர் ஒருவர் என்னை மகிழ்விக்க, முகமனுரையாகச் சொல்லி வைத்தார், என்றாலும், பேச்சாளன் எவனுக்கும் இத்தகைய புகழுரையே முதல் ஆசார மரியாதை; நிறைவு அணிமாலை.

மதுரை – காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்வசம் கொடுத்து அனுப்பிய பரிசுகளையும் நூல்களையும் அங்கு வழங்கினேன். சிக்காகோ தமிழ்ச் சங்கம், நியூயார்க் தமிழ்ச் சங்கம், நியூஜெர்ஸி சங்கம் ஆகியவற்றிலிருந்து விழாவுக்கு வந்தவர்கள், நான் அங்கெல்லாம் பேச வரவேண்டும் என்றார்கள்.

விருந்துக்குக் கூட்டிச் செல்ல – நண்பர்கள் வெங்கடராமானுஜமும் நாராயணனும் நெடுநேரம் காத்திருந்த சுவடு – அவர்கள் முகபாவனையில் தெரிந்தது. செவிக்குணவு ஆனபின் வயிற்றுக்கு உரிய விருந்து வேண்டும் அல்லவா?

மாநாட்டு மலர்

ஒரு மாநாட்டை நடத்துவோர், அது தொடர்பான மலர் ஒன்றை வெளியிடுவது வழக்கமாகியுள்ளது. மாநாட்டு உரைகள் எல்லாம் காற்றோடு போய்விடாமல் அவற்றைச் சரமாகத் தொகுத்து அச்சிடுவதால், அவ்வுரைகள் நிலைபெற்றுப் பயன்படுகின்றன. இந்த 14-ஆம் ஆண்டுவிழாவை ஒட்டி அழகான மலர்த்தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். வழக்கமாக சமூக சேவை தொடர்பான கருத்தரங்கங்களையே நடத்தியமைக்குப் பதிலாக இம்முறை ‘தமிழ்ப் பாரம்பரியத்திற்கு நமது வணக்கம்’  எனும் பொதுத்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். மலரில் பல்வகை மணங்கள். தமிழ்க்கவிதைகள் பல தலைப்புக்களில்…. பயன்தரும் சிந்தனை விருந்துகள்… அமெரிக்காவில் வளரும் தமது குழந்தைகளுக்கு நினைவூட்டுவதற்காக, தமிழ் எழுத்து அகரவரிசை முழுவதையும் மலர் அட்டையின் பின்புறத்தில் எடுப்பாக அச்சேற்றியிருந்தார்கள். ஆங்கிலச் சூழலில் வளரும் பிள்ளைகளிடம் அருந்தமிழ் மொழியை அறிமுகப்படுத்த அவர்கள் கொண்டுள்ள அக்கறை புலப்பட்டது. அதே சமயம், என் மனம், செந்தமிழ் நாட்டுத் ‘தீது சேர்’ பள்ளிகளுக்குத் தாவியது. ஆங்கிலக் கல்வி பயிலச் சென்ற பாரதி அன்று மனம் நொந்து பாடிய வரிகள் இன்றும் பொருந்திட என் நினைவில் ஊசலாடின.

“நலமோர் எட்டுணையும் கண்டிலேன் & இதை

     நாற்பதினாயிரம் கோயிலில் சொல்லுவேன்”

எனச் சத்தியம் செய்தான். அந்த அவல நிலை….. இப்போது நச்சுக்காய்ச்சலாக, போலி நாகரிகமாகத் தமிழ்நாட்டு, மழலைப் பள்ளிகளில் தலை எடுத்து வருவதை எண்ணிப் பார்த்தேன். மிக விரிந்து வரும் கல்வித் தேவைகளை எல்லாம் ஈடு செய்ய அரசினால் மட்டும் இயலாதபோது – தனியார் முயற்சிகள் – கல்விக் கூடங்களைத் தொடங்கி நடத்த முற்படுவது காலம் கருதிய சமுதாயப்பணிதான். இப்பள்ளிகளில் தாய்மொழிக்கல்விக்கு இடம் தராமல், ஆரம்பம் முதலே குழந்தைகளை – பெற்றோர்க்கும் பிறந்த மண்ணுக்கும் அந்நியராக்கும் ஆகா முயற்சி தமிழ்நாட்டில் குடிசைத் தொழில் போல வளர்ந்து வருகிறது. தொண்டு நோக்கம் இன்றி – தொழில் நாட்டத்தோடு மட்டும் நடத்தப்படும் பெரும்பாலான மழலைப் பள்ளிகள், தமிழ்மொழியையும் தாயகப் பண்பாட்டையும் அறவே மறக்கச் செய்யும் அழிவுக்கே துணைபுரிகின்றன.

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்பது தமிழர் போற்றும் தொடக்கக் கல்விக் கொள்கை. மொழியின் அகரம் முதலிய எழுத்து முறைகளைக் குழந்தையின் மனதில் பதியும் வகையில் முயன்று கற்பிப்பவனே இறைவனுக்கு நிகராவான். மேல் வகுப்புக்களில் பாடம் புகட்டுபவன் கருத்தைக் கற்பிப்பவன்; எழுத்தை போதிப்பவன் போல இறைவன் நிலையில் வைத்து அவன் எண்ணப்பட மாட்டான். ஆசானைப் போலவே கல்விக்கூடங்களும் இறைமை நிலைக்குத் தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். மதுரையில் நான் நிர்வகிக்கும் பள்ளி, ஆங்கில வழி மேனிலைக் கல்வி நிலையம்; எனினும் தமிழ் மொழிக் கல்விக்கும் திருக்குறள் பயிற்சிக்கும் ஆரம்ப நிலை தொட்டே உரிய ஆக்கம் தந்துவருகிறேன்.

இவ்வகையில் உங்களிடமிருந்து புதிய தகவல்களையும் புதிய அணுகுமுறைகளையும் இங்கு வந்து அறிந்து கொண்டேன். அயல்நாடுகளுக்கு வரும்போது தான், தாய்மொழியான நம் தமிழின் அருமை பெருமை தெரிகிறது; அதுவும் உங்களிடம் வந்தபோது இன்னும் விரிவாக, தெளிவாகப் புலப்படுகிறது.

ஆண்டு மலரில் திருவள்ளுவர் உருவத்தை அட்டைப் படமாகப் போட்டிருந்தார்கள். அந்த அழகிய கையேட்டில் தமிழ்நாட்டு வரைபடத்தை மாவட்டப் பெயர்களுடன் அச்சிட்டிருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. “தமிழ்நாட்டில் இப்போது எத்தனை மாவட்டம்?” எனக் கேட்டால் தமிழ்நாட்டவர்களுக்குச் சரியாகச் சொல்லத் தெரியாது என்பது உறுதி. அதைச் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று நம்மில் பலர் கவலைப்படவும் மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் வாழும் அன்பர்கள், ஆங்கில மொழியில் தமிழ்நாட்டு வரைபடத்தை அச்சிட்டு எங்கெங்கு நம் உதவிகள் தேவைப்படும் என விளக்கியும் இருந்தமை என் மனதை எப்படியெல்லாமோ நெருடியது.

மாநாடு நடந்த டெய்டன் நகரைப் பற்றிய விவரங்களையும் மலரில் தந்திருந்தார்கள். பொட்டல் காடாய் இருந்த இந்தப் பிரதேசத்தில், சின்சினாட்டி எனும் பகுதியிலிருந்து – பூர்வ குடியினரும் புதுக்காலனியரும் குடியேறி – தம் தளபதி டெய்டன் பெயரில் இந்த நகரை உருவாக்கினார்கள். ஊருக்கு – நகருக்குப் பெயரிடும்போது அதோடு அதன் வளர்ச்சியோடு தொடர்புடையவர்களையே நினைத்துப் போற்றும் மரபை, மாண்பைப் பின்பற்றுகிறார்கள்.

நகரங்களுக்கெல்லாம் வைரம் போல், பன்முகப் பட்டை தீட்டப்பட்ட வைர நகராகத்  திகழும் இங்கேதான், ஆகாய விமானத்தை முதன்முதலில் இயக்கிக் காட்டிய – அந்த ரைட் சகோதரர்கள்  பிறந்தார்களாம்.

அந்தப் பெருமைக்கேற்ப, உலகப்புகழ் பெற்ற ஜெனரல் மேட்டார்ஸ் நிறுவனம், விமானப் படைத்தளம், விமானத்தொழில் நுட்பக்கூடம் – எனும் பிரபல தொழில் அமைப்புக்கள் உள்ளன. ஆண்டுதோறும் இங்கு நிகழும் சர்வதேச விமானக் கண்காட்சிகளை (கிமிஸி ஷிபிளிகீ) கண்டுகளிக்க, புது நுட்பங்களை அறிய நம் ஊர்ச் சித்திரைத் திருவிழாப் போலக் கூட்டம் வருமாம். புதுரகப் போர் விமானங்கள், ஆகாயத்தில் அசுரச் சாதனைகள் புரிந்து பறப்பதைக் காணச் சென்ற ஆண்டு, இந்த விமானங்கள் காட்சிக்கு இரண்டு லட்சம் பேர் வந்தார்களாம்.

இங்கு நடக்கும் தமிழ் விழாக்களுக்கு அமெரிக்காவின் பிற பகுதிகளில், நெடுந்தொலைவில் பணிபுரியும் அன்பர்கள் எல்லாம் திரண்டு வந்து கூடி விடுகிறார்கள். நமது பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பரிவர்த்தனை செய்து கொள்வதுடன், அமெரிக்க அறிஞர்களையும் கூட்டி வந்து உறவினை வலுப்படுத்திக் கொள்கின்றனர். திருக்குறள் முதலிய இலக்கியங்களின் வழிவரும் பண்பாட்டுக் கோலங்களை அறிய அமெரிக்கர்கள் அதிகம் விரும்புவதாக அறிந்தேன்.

மனிதர் வாழும் வாழ்க்கை நெறியே பண்பாடு, திருக்குறளின் வாழ்க்கை நெறி, அக்காலச் சூழலில் அமைந்த சமூக, சமய, அரசியல் வாழ்வு, பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றை விளக்குகிறது. ஆனால் எக்காலத்திற்கும் பொருந்தும் அறங்களை உண்மைகளின் அடிப்படையில் விளக்குவதால் முக்காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதோடு பண்பாட்டுத் தொடர்ச்சியை இணைக்கும் இனிய சரடாகவும் இருக்கிறது.

திருவள்ளுவர் ‘பண்பு’ எனும் சொல்லைப் பல நிலைகளில் ஆண்டிருந்தாலும் – ‘பண்பாடு’ என்பதனை நாகரிகம் என்ற சொல்லால்தான் குறிப்பிடுகிறார்.

“பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

     நாகரிகம் வேண்டு பவர்”       (580)

இக்காலத்தில் – நாகரிகம் – பண்பாடு எனும் இரண்டுமே ஒரே பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டாலும், பண்பாடு – என்பதே ஆழ்ந்த பொருளமைதி உடையதாகத் தெரிகிறது. உள்ளச் செம்மையைக் காட்டுவதற்கே அச்சொல் பயன்பட்டது. அக்காலச் சூழலில்- உள்ளச் செம்மையோடு, அறம் தழுவி வாழ்ந்தமையே- பண்பாட்டு வளர்ச்சியாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று நாகரிகம் என்பது விரிந்த பொருளில் பேசப்படுகிறது. உடை, ஒப்பனை, செல்வப்பகட்டு என்பன இன்று நாகரிகப் புறவடிவங்களாக ஜொலிக்கின்றன. வசதியோடு வாழும் அமெரிக்க மக்களைப் போன்றவர்கள் ஆயுத, பொருளாதார பலத்தால் பிறரை அடக்கி ஆள்பவர்கள் நாகரிகத்தில் உச்சிக் கொம்பில் இருப்போராகவும், அஞ்சி தம் நாட்டளவில் அடங்கி இருக்க நேர்ந்தோர் காட்டுமிராண்டிப் பழங்குடியினர் போலவும் எண்ணப்படுகின்றனர்; இகழப்படுகின்றனர். ஆனால் அமெரிக்க அறிஞர்கள் சிலர் – தமது நாகரிக மேதகவையும் தாண்டி வந்து – உள்ளப் பண்பே உயரிய நாகரிகம் – எனப் பேசும் திருக்குறளின் வாழ்க்கைத் தத்துவங்களை அறிந்து கொள்ள விழைகின்றனர் என்பது மகிழ்ச்சியளித்தது.

அமெரிக்கத் தமிழ் மாநாடுகள் அவர்களிடையே இந்த விழைவை மேலும் வளர்த்திருப்பதை டெய்ட்டன் விழாவிலேயே காண முடிந்தது.

3867total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>