அங்கெல்லாம் வாழும் வள்ளுவம்!

டெய்ட்டன் நகர் சென்றடைந்தோம். நண்பர்களால் ‘நாணா’ என்று அழைக்கப்படும் திரு.பி.சி.எம். நாராயணனும், திரு.வெங்கடராமானுஜனும் அன்புள்ளத் தோடும் இன்முகத்தோடும் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் எங்களது நெடிய பயணக் களைப்பெல்லாம் பறந்தோடிவிட்டன. பிராங்க்பர்ட்டில் விமானம் மாறிப்போன எங்களது லக்கேஜ் பத்திரமாக வந்து சேரும் நம்பிக்கையுடன் நண்பர்கள் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

நம்பிக்கை பழுதுபடவில்லை. மூன்று நாள் கழித்து எங்கள் பெட்டிகள் எல்லாம் பத்திரமாக, நாங்கள் தங்கி யிருந்த முகவரிக்கே வந்து சேர்ந்தன. அவை சரியாக வந்துவிட்டனவா என விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து அறிந்து கொண்டனர். அவர்கள் இவ்வகையில் காட்டிய அக்கறையும் பரிவும் எங்கள் நெஞ்சைத் தொட்டன. அவர்களது திறன்மிகு சேவைக்கெல்லாம் காரணமாய் இருப்பன. ஒன்றுகூடிப் பணிபுரியும் குழுமச் செயல்முறை அதற்கேற்ற புதிய நிர்வாகநெறி ஏற்பு  விரைந்து செயலாற்ற உதவும் நுட்பக் கருவிப் பயிற்சி; நேரம் போற்றிப்  பிறரை  மதித்து ஆரவாரம் இன்றிப் பணியாற்றும் கலைத் தேர்ச்சி – ஆகியனதான் என்பதை நண்பர்கள் எடுத்துச் சொன்னார்கள். சில விவரங்களைக் கேட்கச் சென்னை விமான நிலையத்தில் இரைந்து கத்திப் பேசியது போல இங்கு தேவைப்படவில்லை. பரிவோடு அமைதியாகக் கேட்டு, ‘இயலாது’ என்பதைக் கூட இங்கிதமாகத் தெரிவித்தார்கள்.

“இன்சொல் இனிதுஎன்றல் காண்பான் எவன்கொலோ

     வன்சொல் வழங்கு வது?”      (99)

என வள்ளுவர் நம் மொழியில் எழுதினார். ஆனால் அதனை நம்மைவிட, கிழக்கே ஜப்பானியரும், மேற்கே அமெரிக்கருமே போற்றி வாழுகின்றார்கள். வள்ளுவம் அங்கெல்லாம் வாழுகிறது! நன்றாக வாழுகிறது!

மாணவர் விடுதியா? நட்சத்திர ஓட்டலா?

ஒஹையோ பல்கலைக்கழக மாணவர் விடுதியில் நாங்கள் மூன்று நாட்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அது மாணவர் விடுதியாகவா தெரிந்தது? ஐந்து நட்சத்திர ஓட்டல் போல, அத்தனை வசதிகளுடன், அவ்வளவு எழிலுடன் விளங்கியது. அறிவியல் முன்னேற்ற வசதிகளை எல்லாம் அங்கே காணமுடிந்தது. அறைகளைத் திறக்கும் பூட்டு-சாவிகள் எல்லாமே கம்ப்யூட்டர் இணைப்பு உடையவை. இவ்வாறு மனிதர்களையும் இயந்திரங்களையும் கம்ப்யூட்டர் – மின்னணுப் பெட்டிகளே ஆள்கின்றன; ஆட்டிவைக்கின்றன. அவற்றின் செயல் நுட்பம் கூறும் நூல்களும் ஏடுகளுமே நடைபாதைக் கடைகள் வரை ஆக்ரமித்துள்ளன. மதிநுட்பம் நூலோடு உடையதாக மாணவப் பருவ முதலே அவர்கள் உயரப் பல நிலை ஆக்கம் அளிக்கின்றன. அப்பல்கலைக்கழக மாணவர்களிடமும் தனிமுத்திரை பொலியச் செய்திருந்தன.

“உங்களுக்கு இங்கே ஒரு நாள் முழு ஓய்வு! நாளை முதல் மாநாட்டு விருந்தினராகி விடுவீர்கள்….” என்றபடி நண்பர்கள் விடைபெற்றனர். “ஒரு நாள் முழு ஓய்வு” எனும் முதல் பகுதி தேனாக இனித்தது: “மறுநாள் மாநாடு” என்ற பிற்பகுதி ஏதோ ஒரு பாரத்தைச் சுமத்துவது போன்ற நிலைக்கு உள்ளாக்கியது.

டெய்ட்டன் நகர ஒஹையோ பல்கலைக்கழக அரங்கில் ஆண்டுதோறும் நிகழும் தமிழ் விழாவை, ஒரு வேள்வி போலவும், விரதம் போலவும் அங்குள்ள தமிழன்பர்கள் நடத்தி வருகின்றனர். டெய்ட்டனுக்குப் பல நூறு மைல்களுக்கு அப்பால் பணிபுரிபவர்கள் எல்லாம், இவ் விழாவினை ஒரு கைங்கரியமாக நடத்திட ஆண்டு தோறும் ஒன்று கூடி விடுகின்றனர். நான் பங்கேற்க அழைக்கப் பட்டிருந்த இது பதினான்காம் ஆண்டுவிழா. அதன் மூன்று நாள் கருத்தரங்கிற்குத் தமிழகத்திலிருந்து மூவர் அழைக்கப்பட்டிருந்தோம்.

மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், பட்டிமன்ற நாவலர், சிரிப்புச் செல்வர் சாலமன் பாப்பையா அவர்களும், தமிழ்க் கவியரசு, புகழார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், தமிழ்நாடு, திருக்குறள் பேரவைப் பொதுச் செயலரான நானுமே அம்மூவர்!

மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் கவியரசு வைரமுத்து பங்கேற்றார். பட்டிமன்ற நாயகர், பேராசிரியர் சாலமன் பாப்பையா முதல்நாள் அரங்கில் உரையாற்றினார். பயணத்தில் எனக்கு நேர்ந்த ஒருநாள் தாமதத்தால் நான் முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேராசிரியர் உரையைக் கேட்க இயலவில்லை. முன்னரே ஏற்பாடாகி யிருந்த மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் உடனே போய்விட்டார் என்று அறிந்தேன். மறுநாள் நிகழ்வில் நானும் கவியரசும் உரையாற்றினோம்.

என் உரை அமெரிக்கத் தமிழன்பர்களைப் பாராட்டுவதாக அமைந்தது அது எனக்கு மட்டும் அன்றி, விருந்தினராகச் செல்லும் எவருக்கும் இது இயல்பே ஆகும்.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

     சாந்துணையும் கல்லாத வாறு”  (397)

எனும் குறள் வழிக் கோட்பாட்டிற்கு இலக்கியமாய், முயற்சியே வாழ்வின் மூச்சாகக் கொண்ட அமெரிக்கத் தமிழர்களை மனதாரப் பாராட்டத் தொடங்கினேன். “கற்பவருக்குத் தமது சொந்த ஊரும் நாடும் போல, அவர்கள் சென்றிருந்து வாழும் தேசமும் சொந்தம் என ஏற்கப்படுவதே சிறப்பு. நீங்கள் இங்கே வந்து, இதனையே சொந்த நாடாக ஏற்று, இதன் வளத்திற்கும் மேம்பாட்டிற்கும் உங்கள் உழைப்பினை நல்கி வருகிறீர்கள். உங்கள் திறமையையும் ஞானத்தையும் வழங்கி இங்கு தலைமை பெற்றுத் திகழுகிறீர்கள். ‘என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு’ எனும் கேள்விக்கு இடமின்றி, வளரும் தொழில் நுட்பத்திறங்களை எல்லாம் உங்கள் இடையறா உழைப்பால் சாதனையாக்கிக் கொண்டுள்ளீர்கள். இந்த அனுபவக் கல்வியால் இன்று அமெரிக்க நாடு பயன்பெற்று வருவதைப் போல, நாளை நமது மண்ணும் நலம் பெற உதவி வருகிறீர்கள்.

‘எவ்வது உறைவது உலகம்’ என அறிந்து அதனோடு உறையும் ஈடுபாடே அனுபவக் கல்வி; இணக்கம் தரும் இந்த ஆக்கநெறிக் கல்வியால் நீங்கள் அனைத்திலும் ஆக்கம் பெற்றுத் திகழுகிறீர்கள். ‘உலகம் தழுவியது ஒட்பம்’ என வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல, இன்றைய உலகத் தேவையையும் சூழலையும் தழுவி நின்று, நட்பாக்கிக் கொண்டு, மலர்தலும் கூம்பலும் இல்லாத அறிவுத் திறத்தால் முதன்மையாக இந்த நாட்டிற்கு உங்களையும் உங்கள் உழைப்பினையும் அளித்து வருகிறீர்கள். நாடா வளமுடைய விரிந்த, மிகப்பரந்த நாடு இது என்றாலும், அதன் இன்றைய தேவைக்கு ஏற்ற பணிகளை நீங்கள் செய்து வருவதால் அரசும் மக்களும் மதிக்கும் பெருமைக்கு உரியவர்களாக விளங்குகிறீர்கள். செல்வச் சிறப்புடைய நாட்டமைவில் புற வளங்களை எல்லாம் நீங்கள் பழுதறப் பெற்று வசதியோடு வாழ்கிறீர்கள் என்றாலும், மேலைநாட்டாரைப் பொதுவாகப் பற்றியுள்ள ஒருவகை ஏக்கம், ஏதோ ஒரு தாகம் உங்களிடம் இருப்பது போல நான் உணர்கிறேன்.

புறநாகரிகத்தில் பெற்றுள்ள வளர்ச்சி, வசதி போல, உங்களது அகநாகரிகத்தில், பண்பாட்டுப் பின்னணியில், ஆன்மிக நாட்டத்தில், கலை நலத் தேட்டத்தில் எல்லாம் ஒரு முழுமை வேண்டுமென நாடி நிற்பது புலனாகிறது. அப்புலப்பாடே இம்மூன்று நாள் தமிழியல் விழாவினை நடத்த உங்களைத் தூண்டி வருகிறது எனக் கருதுகிறேன்.

திருக்குறள் உலகப் பொதுமறை, திருமால் விசுவரூபம் எடுத்து இம்மண்ணுலகை ஓரடியாலும், விண்ணுலகை மற்றொரு அடியாலும் அளந்தார் என்பது போல, வள்ளுவர் குறுகத் தரித்த குறளடிகளால், மாந்தரின் அக உலகை, உணர்வை எல்லாம் அளந்தறிந்து வழங்கியுள்ளார்.

எல்லா மனிதர்க்கும், எக்காலத்திற்கும் பொருந்துவன வாகிய, வாழ்க்கைத் தத்துவங்களைக் கொண்ட திருக்குறளை, அது பிறந்த மண்ணுக்கு உரியவர்கள் அடிக்கடி மறந்து போனாலும், பிற நாடுகளில் வாழ்பவர்கள் உச்சி மேல் வைத்துப் போற்றுகின்றனர்; இயன்ற வரை குறள் நெறிகளைப் பின்பற்றிப் பிறர் மதிக்கவும், வியக்கவும் வாழ்கின்றனர்.

இந்த நாட்டில் உள்ளோர் மதிக்கவும், இங்கே வந்து போகும் எங்களைப் போன்றோர் வியக்கவும் நீங்கள் வாழ்வதைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் கடின உழைப்பையும் இடையறா முயற்சியையும் நெஞ்சுவக்கப் பாராட்டுகிறேன். இந்த நாட்டு மக்களுக்கு இயல்பாகவே செல்வ ஆதாரங்கள் பெருகிக் கிடப்பதால், அவர்கள் ஓரளவு உழைத்தே அதிகம் சம்பாதித்து விடுகின்றனர். இங்கு வந்து வாழும் நீங்கள் ஓய்வு நேரத்தையும் குறைத்துக்கொண்டு அவர்களுக்குப் போட்டியாக ஓடிஓடி உழைக்கிறீர்கள் எனக் கேள்வியுற்றுச் சிந்தை அயர்ந்தேன். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ எனும் வினாவுக்கு நீங்களே உரிய விடையாக விளங்கு கிறீர்கள். இந்த உழைப்பின் தரமும், திறமும் தாய்த் தமிழ்நாட்டவர்களுக்கும் பாடமாக அமையவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

மேற்கொண்ட துறை எதுவாயினும், தொழில் எதுவாயினும் அதிலெல்லாம் தலைமையும் பெருமையும் பெற்றுத் துலங்குகிறீர்கள். எங்களால் திருக்குறள் அறியப் படுவதைவிட, உங்களைப் போன்றோரால் அது செயல் வடிவில் பரப்பப்படுவது, நிலையான பெருமையினைப் பெற்றுத்தரும். செயலுக்கு வராத நூலால் பயனில்லை; செயலாக்கம் கொண்ட மக்கள் போற்றாத இலக்கியம் வளர்வதில்லை. போலியான – ஆசாரப் புகழ் – ஒரு நூலுக்கு நூற்றாண்டு வாழ்வைத் தரமாட்டாது.

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப் பாரதியார் பாடினார். முதன்முதலாகத் திருக்குறளை, மேலைய உலகிற்கு வழங்கி அறிமுகப்படுத்தும் பணியைக் கூட நாம் செய்யவில்லை. தமிழ் உணர்வறிந்த மேலை நாட்டறிஞர்கள் எடுத்துச் சொன்ன பின்னரே திருக்குறள் பல மொழிகளில் உலகறியத் தொடங்கியது.

2934total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>