வள்ளுவன் புகழ் வையகம் எல்லாம்!

“அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்

     திறம்தெரிந்து தேறப் படும்”          (501)

என்பது பொருட்பாலில் ‘தெரிந்து தெளிதல்’ அதிகாரத்தின் முதல் குறள்.

தனக்குத் துணையாக இருக்க வல்லோரைத் தெரிந்து தெளிய வழிகாட்டும் குறட்பா இது. அறத்தில் நம்பிக்கை உறுதி உடையவரா? பொருள் வகையில் நாணயம் ஆனவரா? இன்ப வேட்கைக்கு எளிதில் அடிமையாகக் கூடியவரா? தன் உயிர்க்கு அஞ்சி நெருக்கடியில் நம்பியோரைக் கைவிட முற்படுபவரா? என்றெல்லாம் ஒருவரை ஆய்ந்து தெளியவேண்டும் எனக் கூறுகிறது இக்குறள்:

தலைமைப் பண்பு விழைவார்க்கு மட்டும் இக்குறள் பொருந்தும் என நினைக்காமல் தலையாய நூலாக நாம் ஏற்க விழையும் நூலுக்கும் இத்தேர்ச்சி முறை பொருந்தும் என்பது என் கருத்து. அந்த வினாடிக்கு மட்டும் இன்பம் தந்து பின் மறக்கச் செய்யும் நூலை விட எக்காலத்திற்கும் எச்சூழலிலும் கைகொடுத்து உதவ வல்லதே சிறந்த நூல். அப்படிச் சிறந்து நிற்கும் தலைமை நூலாகத் திருக்குறளை நாம் பெற்றுள்ளோம். எனினும் எந்த அளவுக்கு அதில் தெளிவு பெற முயல்கிறோம்?

ஒருவனுடைய அறிவை ஆராய்கையில், மறக்கக்கூடாத அடிப்படையான உண்மை ஒன்று உண்டு. எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் என இவ்வுலகில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓரளவேனும் உலக ஞானம் இருக்கவே செய்யும். அதுபோலச் சிறந்த அறிஞரிடத்தில் ஓரளவு அறியாமை இருப்பதும் இயல்பு.

“அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

     இன்மை அரிதே வெளிறு”           (503)

எனும் இக்குறட்பா, திருக்குறளைப் போற்றிப் பயில்வார்க்கும் ஒரு வகையில் பொருந்தும். திருக்குறளின் அரிய கருத்துக்களைப் பிழையறக் கற்றாலும் கூட, நமக்கு அதனை முழுதுறத் தெரிந்து கொண்டதொரு மனநிறைவு ஏற்படுவதில்லை.

சமுத்திரக் கரையில் நின்று அதனை நாள்தோறும் பார்த்தாலும் கூட மீண்டும் மீண்டும் சென்று அலை எழுச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எவர்க்கும் குறைவதில்லை. வானத்தில் வலம்வரும் பூரணச் சந்திரனை எத்தனைதரம் பார்த்தாலும் மனம் சலிப்பதில்லை. மீண்டும் அதை அண்ணாந்து பார்க்கவே ஆவல் பிறக்கும். தெருவில் மணியோசை எழுப்பி வரும் கோவில் யானையைப் பலமுறை பார்த்திருந்தாலும், அது மறுநாள் மணியடித்து வரும்போதெல்லாம், சிறுபிள்ளை போல மீண்டும் அதனை வியப்புடன் பார்க்கும் விருப்பில் இருந்து யாராலும் விடுபட முடிவதில்லை. திருக்குறள் பயிற்சிக்கும் இது பொருந்தும். எத்தனை முறை புரட்டினாலும் திருக்குறள் எழுப்பும் அறிவுரை அலைகள் ஓய்வதில்லை; பலமுறை பயின்றாலும் அதன் முழுநிலவொளி ஊற்று வற்றிப் போவதில்லை. எத்தனை தடவை திருப்பிப் பார்த்தாலும் அதன் பொருட்பெருமை வியப்பூட்டத் தவறுவதில்லை.

“வள்ளுவன் புகழ் வையமெல்லாம் வாரி இறையடா தமிழா” என இளமையில் கேட்ட திரைப்பாடலை இன்று கேட்டாலும் நமக்குள் அது கிளர்ச்சியூட்டாமல் இருப்பதில்லை. அப்பாடலின் எடுப்பான இசையைவிட, அழுத்தமான பொருட்செறிவே அப்பாடலை இன்றும் நினைக்கச் செய்கிறது.

வையகம் முழுமைக்கும் உரிய நூல் திருக்குறள். அதனை இயற்றிய திருவள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் எனினும் அவர் யாத்த நூலே அவரை உலகறியச் செய்துள்ளது. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனும் தொடர் நூல் வழியாக – ஆசிரியரையும் உலகப் பொதுவுடைமை ஆக்கிவிட்டது.

வள்ளுவம் – உலக நூல், அறம் – பொருள் – முதலான அதன் கருத்துக்கள், ஒருநாட்டார்க்கோ, மதத்தார்க்கோ மட்டும் உரியன அல்ல. திருக்குறள் முழுதும் வரும் ‘உலகு’ எனும் சொல்லாட்சியே இவ்வுண்மையை நிலைநிறுத்தும். பழந்தமிழ்ப் பண்பாட்டின் மூல வித்தாகிய – ‘உலகு’ எனும் கருத்து விரிந்த சிந்தனை மரமாகிச் செழித்திருப்பதே திருக்குறள் எனும் பண்ணை நிலம். பின்னர் உலகம் தோன்றிய சீவகாருண்ய, மனிதாபிமான, சமதர்ம உணர்வுகள் அனைத்தும் திருக்குறள் எனும் பேராலமர நிழலுக்குள் அடங்கிவிடுவன என்றே சொல்ல வேண்டும்.

‘உலகு ஒரு குலம்’ என உபதேசம் செய்து நின்று விடாமல் ஒருகுலச் சிந்தனை உருவாவதற்கான கருவிகளையும் திருக்குறள் அளிக்கிறது. அவற்றுள் முதல் கருவி அன்பு,

“அன்பின் வழியது உயிர்நிலை; அஃதுஇலார்க்கு

     என்புதோல் போர்த்த உடம்பு”       (80)

என்பது அக்கருவியின் ஆற்றலைக் கூறுகிறது. அன்பு, இயற்கை உணர்வு; எல்லா உயிர்களிடமும் விளங்குவது; அனைத்தையும் வளர்ப்பது; பரிணாம வளர்ச்சியாக; கூர்தல் அறமாக என்றும் நிலவுவது, அந்த அன்பு விரைந்து வளரும் களம் மாந்தர் மனம். மனத்தாலமைவதே வாழ்வு. அன்பின் வழியே வாழ்க்கை வளர்தல் வேண்டும். அவ்வாறு வளரும் வாழ்வு பண்பும் பயனும் தரும்; வாழ்க்கைக் கலையாக நீடு நிலவும்.

வள்ளுவம் வழங்கும் மற்றோர் ஆற்றல் மிகு கருவி: அறம்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதன்; அனைத்துஅறன்”(34)

என்றும்,

“அழுக்காறு, அவா,வெகுளி, இன்னாச்சொல் நான்கும்

     இழுக்கா இயன்றது அறம்”           (35)

என்றும் குறள் நெறி கூறுகிறது அன்பு – அறம் எனும் குறள் நெறிகளைப் பயன் கொள்ளும் துறைகளாக, இல்வாழ்க்கை தொட்டு எல்லா அதிகாரங்களும் படிக்கட்டுப் போல அமைக்கப்பட்டுள்ளன.

‘திருக்குறள் – ஒரு சுரங்கம்’ என்பார் திரு.வி.க. அதிலிருந்து இதுவரை எத்தனையோ கருத்துச் செல்வங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு ஆயிரமாயிரம் இலக்கியங்களுக்கு ஆபரணக் கற்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. அணிவோர்க் கெல்லாம் விலைமதிப்பற்ற அழகுச் செல்வங்களாக இன்றும் துலங்குகின்றன.

‘திருக்குறள் ஒரு பெரிய சந்தை’ என்பார் அறிஞர் வ.சுப.மா. அங்காடியில் பல்வகைப் பண்டங்களும் பகர்ந்து விற்கப்படுவது போல, வள்ளுவச் சந்தையில் எல்லாப் பொருளும் விலை கூறப்படுகின்றன. எத்தன்மையுடை யோர்க்கு, எப்பொருள் தேவையோ, அதனை இச்சந்தையில் பெறலாம். நடப்புச் சந்தையில் பல இனச் சரக்குகளும், ஓரினத்துள்ளே பலவகைப் பொருள்களும் உள்ளமை போலத் திருக்குறள் சந்தையில் உள்ள அதிகாரங்களும் பல இனச்சரக்குகள். திருக்குறள் சந்தைப் பொருள்களை எல்லாம் ஒருவரே ஏகபோகமாகக் கொள்முதல் செய்ய முடியாது; செய்யவும் இயலாது. கைப்பணத்திற்கேற்பவும், அன்றாடத் தேவைக்கேற்பவும் பண்டங்களை வாங்கினால் போதும்; வாங்கிக் கொள்வதால் எல்லாப் பொருளும் விற்பனையாகிவிடும் தன்மையுடையன.

‘திருக்குறளை ஓர் உயிர்மருந்துக் கடை’ என ஒப்பிடுவார் அறிஞர் வ.சுப.மாணிக்கனார். அவரவர் நோய்க்கேற்றபடி, உரிய மருந்துகள் கடையில் இருப்பதைப் போல, நம் வாழ்வுக்கேற்ற தனி அறங்களும் பொது அறங்களும் திருக்குறள் மருந்துக் கடையில் உண்டு. அவற்றை நாமே வாங்கிப் பிணிதீர்த்துக் கொள்ளலாம்.

பலருக்கும் பல வகையில் பயன்படும் சிறப்பு வாய்ந்த தனிப்பொது நூலாகிய திருக்குறளை இலக்கியமாகக் கருதிக் கலைநயம் காணலாம்; ஒழுக்க நூலாகப் பேணலாம்; அரசியல் நூலாகப் படிக்கலாம்; காலம் மாறினாலும் அடிப்படை அறங்கள் மாறுவதில்லை எனும் பேருண்மையை அறியலாம்.

சமய நூல்களுக்குக் கொடுக்கும் உயரிய இடத்தைத் திருக்குறளுக்குத் தந்து அனைத்துச் சமயத்தவரும் ஒருங்குகூடி இங்கே விழா எடுத்துள்ளீர்கள். உங்கள் பேரன்பையும் பெருமுயற்சியையும் இங்கு வந்துள்ள நாங்கள் மட்டுமின்றி தமிழ் உலகும் வாழ்த்தி நிற்கும் என நம்புகிறேன்.

2399total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>