குறள் நிலா முற்றம் – 8

ஒருங்கிணைப்பாளர்

“போராட்ட காலத் தலைமை வேறு, சுதந்திரம் பெற்றபின் அமையும் உரிமைக் காலத் தலைமை வேறு. அங்கே தியாகம் அடிப்படை, இங்கே ஒழுக்கம் அடிப்படை.”

பேராசிரியர்

“இதைக் கிரேக்கச் சிந்தனையாளரான சாக்ரடீசும், ‘அரசியல்’ எனும் உன்னதமான சித்தாந்த நூலை அளித்த பிளேட்டோவும் அன்றே சொல்லியிருந்தார்கள்.”

 

ஒருவர்

“நினைவில் இருந்தால் அதை நிலா முற்றத்திலும் உலவ விடுங்களேன்.”

ஆட்சி பீடத்திற்கு வர அருகதை என்ன?

பேராசிரியர்

“மிகச் சாதாரணமான தொழிலுக்குக் கூட அதற்கான ஒரு பயிற்சி இல்லாமல் எவரும் மேற்கொள்ளுவது இல்லை. ஆனால், மிகக் கடினமான ஆட்சித் தொழிலுக்கு மட்டும் எவர் வேண்டுமானாலும் தகுதியுடையவர்கள் என்று முன் வந்து விடுகிறார்கள்..”

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கா.கருப்பையா

“சாக்ரடீஸ் அரசியலைத் ‘தொண்டு’ என்று சொல்லாமல் ‘ஆட்சித் தொழில்’ என்று அன்று சொன்னது இன்றைக்கும் எவ்வளவு பொருத்தம் என்பதை நினைவுகூர்ந்து சொன்ன பேராசிரியர்க்கு உளமார்ந்த நன்றி. அதற்காகவாவது கைதட்டு வோமே!” (கர ஒலி)

புலவர்

“இன்று அரசியல் என்பது முழுக்க முழுக்க ஒரு மோசடியான தொழில் போலத் தானே ஆகி வருகிறது? ‘தேர்தல்களில் தில்லுமுல்லு; தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் வாக்குறுதிகள் காற்றில் பறப்பு…” என்று மிக மட்டமான நிலைக்கு அரசியல் சரியாமல் தடுப்பது அனைவரின் பொறுப்பு அல்லவா..?”

ஒருங்கிணைப்பாளர்

“மொழிப் போர்க்காலத்தில் பேரறிஞர் அண்ணா எழுதியதை அவையோர்க்கு நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும்.”

சில குரல்கள்

“சொல்லுங்கள், அண்ணாவை மறந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நீங்களாவது நினைவில் வைத்திருக்கிறீர்களே!”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘சுதந்திரம், விடுதலை என்றால் சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல; வாலிபன் எண்ணுவது புதிய நிலை, புது அழகு, புது உருவம், புதிய மகிழ்ச்சி! நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான். உண்மையும்  அதுதான்!’ என்றார் அண்ணா.”

இடைமறிக்கும் ஒரு குரல்

“ஆனால், அநியாயமாக உண்மை நிலை அப்படி மாறவில்லையே..! (எல்லோரும் சிவப்புத் துண்டு அணிந்திருந்த அவர் பக்கம் திரும்பிப் பார்த்தல்)

ஒருங்கிணைப்பாளர்

“பொதுவுடைமைப் பேராளர் தோழர் ஐயா சொல்வதையும் கேட்போமே..”

தோழர்

“‘நாம் மக்களுக்காக வாழ்பவர்கள்; மக்களைக் காட்டிலும் அதிகாரச் சலுகைகளையும் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள் மட்டும் வாழ முற்படக்கூடாது என்று ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்ற தோழர் லெனின் வழிக்கோட்டில் வழுவாது நின்று பணியாற்றுகின்றன நாங்கள் பொறுப் பேற்றுள்ள மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா முதலிய மாநிலங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“நம் திருக்குறள் பேரவையும் அது வானொலியுடன் இணைந்து நடத்தும் நிலாமுற்ற அரங்கும் அரசியல் பிரச்சாரங்களுக்கு அப்பாற் பட்டவை.”

தோழர்

“நான் நடைமுறையைத்தான் யதார்த்த எடுத்துக் காட்டாகச் சொன்னேன். அரசியல் பேசவில்லை.”

பேராசிரியர்

“நல்ல அரசியல்வாதிகள் எல்லாக் கட்சி களிலும் இருக்கிறார்கள். எல்லோருமே மோசமாகி விட்டார்கள் என்றோ, இந்தக் கட்சிதான் ஒழுக்கக்கோட்டில் நிற்கிறது என்றோ வெளிப்படையான விமர்சனம் வேண்டாம். நாம் பொதுவான நடைமுறைகளையே தொடர்ந்து சிந்திப்போம். தனி நிலா முற்றம் கூட்டி ஆராய்வோம்.”

(அவையில் சற்று அமைதி)

புலவர்

“அப்படியானால் மாதந்தோறும் பௌர்ணமி வரும்; நிலாமுற்றமும் சுவையான விருந்தும் தொடரும் என நம்பலாமா?”

மாதந்தோறும் பௌர்ணமி! முரணா – அரணா?

மற்றொருவர்

“எங்கள் புலவர் ஐயா.. எதை மறந்தாலும் சுவையான சாப்பாட்டை மட்டும் மறக்கவே மாட்டார்.”

புலவர்

“அட… நான் சொன்னது செவிக்கு உணவை ஐயா! நீர்தான் வயிற்றுப் பெருச்சாளி” (சிரிப்பு)

மற்றோர் அன்பர்

“‘செவிக்குச் சுவையா? வயிற்றுக்குச் சுவையா?’ எனும் முரண்பாட்டுச் சர்ச்சை போதும். நிலா முற்றம் கூடத் தொடங்கியவுடன் ‘திருக்குறளில் முரண்கள்’ பற்றியும் கருதுவோம் எனச் சொன்னது என்ன ஆயிற்று? தூக்கம் வரும் முன்னர் முரண்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாமா?”

பேராசிரியர்

“‘வள்ளுவ முரண்கள்’ என்றதும் என் நினைவு, நான் பயின்று, பணியாற்றிய அழகப்பர் கல்லூரிக்கு ஓடுகிறது. அங்கே தமிழ்த்துறைத் தலைவராகவும் முதல்வராகவும் துலங்கிய பேராசான் வ.சுப.மாணிக்கனார் முதுகலை, தமிழ் மாணவர் வகுப்பை மாற்றி அமைத்திருந்தார். இங்கு வந்துள்ள பேராசிரியர் வளனரசு அப்போது அங்கே பயின்ற முதல்நிலை எம்.ஏ.மாணவர். அவருக்கும் அந்த வகுப்பறை அமைப்பு நினைவில் இருக்கக்கூடும்.”

பேராசிரியர் வளனரசு

“ஆம். அந்த வகுப்பில் இருபாலருமாக இருபது பேர் எம்.ஏ. தமிழ் பயின்றோம். வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருப்போம் – பின்புறத்தில் ஒரு வரிசை நாற்காலிகள் போடப் பட்டிருக்கும். தனிக் கதவும் இருக்கும். பாடம் நடக்கும் போது வேறு வகுப்புக்களில் பாட வேளை இல்லாது, ஓய்வில் இருக்கும் பேராசிரி யர்கள், தாம் விரும்பினால் அந்த வரிசையில், ஓசையின்றி வந்தமர்ந்து, வேறு ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்கும் பாடத்தைத் தாமும் கேட்கும் பயன் பெறவே இந்த ஏற்பாடு.”

பேராசிரியர்

“அது மட்டுமல்ல. எம்.ஏ. முதுகலை வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்க்கு அது ஒரு அக்கினிப் பிரவேசம் போலவே அறிஞர் வ.சுப.மா. வைத்தார். அதாவது, பாடம் நடத்தும் பேராசிரியர், மாணவர்க்கு ஏற்றாற்போலப் புரியும் படி. இன்னும் சொல்லப் போனால், தம் புலமையை மட்டும் அருவியாகக் கொட்டாமல் பாடம் நடத்த வேண்டும். அதே சமயம், பின்னால் அமர்ந்திருக்கும் பேராசிரியர்கள் ஏற்கும் வகையிலும் செய்தாக வேண்டும்.”

புலவர்

“இப்படியெல்லாம் வகுப்புக்களில் யாரும் நடத்தவும் மாட்டார்கள்; அமர்ந்து கேட்க இசையவும் மாட்டார்கள். அது வ.சுப.மா.வின் வசந்த காலம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“அந்த வசந்த காலங்கள் மீண்டும் வலம்வர வாழ்த்துவோம்.. வ.சுப.மா. கூறிய வள்ளுவ முரண் களைத் தாண்டி விட்டாரே பேராசிரியர் குழந்தைநாதன்?”

குறளிலும் முரண்களா?

பேராசிரியர்

“தாண்டிவிடவில்லை; நினைவைக் கொஞ்சம் தோண்டுகிறேன். சொல்கிறேன். ஒரு நாள் எம்.ஏ.வகுப்புப் பாடம். பேராசிரியர் இரா.சாரங்க பாணியின் ‘திருக்குறள் உரை வேற்றுமை முதல் தொகுதி’ வெளிவந்த சமயம் என நினைக்கிறேன். அது திருக்குறள் திறனாய்வு வகுப்பு.. ஒரு மாணவர் அவர் பெயரும் மாணிக்கம் என்றே நினைவு. ‘ஐயா குறளில் முரண்கள் பல உள்ளனவே. அவற்றிற்கு எப்படி அமைதி கூறுவது?’ எனக் கேட்டார். அதற்கு அறிஞர் வ.சுப.மா.. இடை மறித்துக் கேட்ட வினா விடை என்ன தெரியுமா?”

கூட்டத்தில் ஒருவர்

“சுவையாய் இருந்தால் சொல்லுங்கள்..”

பேராசிரியர்

“நீதிமன்றத்தில் திருடியதற்காகக் குற்றம் சுமத்தப்பட்டுக் கூண்டில் நிற்கும் விசாரணைக் கைதியிடம் குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர், முதல் கேள்வியாக, ‘நீ களவாடிய பொருளை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறாய்’ என்று மடக்கி வினவுவார். அதாவது, அவன்தான் திருடினான் என்பதை உறுதி செய்து கொண்டவர் போல, அவனே ஒப்புக் கொள்ளத் தூண்டும் வகையில் கேள்வி தொடுப்பார் அல்லவா? அதைப் போல, மாணவர் மாணிக்கமும், ‘திருக்குறளில் உள்ள முரண்களுக்கு அமைதி என்ன?’ எனக் கேட்கும் போதே, திருக்குறளில் முரண்கள் நிறைய உள்ளன என்று என்னை ஒப்புக் கொள்ளச் செய்யும் கட்டாயம் அதில் தொனிக்கிறது. குறளின் முரண்களுக்கு அமைதி தேடும் முன்னர், குறட்பாக்களில் குழப்பம் உண்டா என்பதை முதலில் சற்றே சிந்திக்கச் செய்தது இன்றும் மறக்க முடியாத காட்சி. பேராசிரியர் வளனரசால் சில குறட்பாக்களை நினைவுகூர முடியும் என நினைக்கிறேன்.”

பேராசிரியர் வளனரசு

“நன்றி பேராசிரியர் ஐயா அவர்களே! ஒரு சில குறள்கள் நினைவில் படருகின்றன.”

ஒருங்கிணைப்பாளர்

“நீங்கள் அன்றைய நினைவேட்டைப் புரட்டுங்கள்; நானும் இன்றைய குழப்பங்களைச் சொல்ல முற்படுகின்றேன்.”

பேராசிரியர் வளனரசு

“சான்றாக, ஓரிரு குறட்பாக்கள் நினைவிற்கு வருகின்றன.”

“நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

     கொல்லாமை சூழும் நெறி” (324)

எனும் அறத்துப்பால் குறளும்,

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்

                           பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்” (550)

எனும் பொருட்பால் குறளும் தம்முள் முரண்படுவதாகத் தோன்றுகின்றன.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இதற்குப் பேரறிஞர் வ.சுப.மா. அவர்களே தம் ‘வள்ளுவம்’ எனும் புகழேட்டில் பொருத்தமான விளக்கங்களை அப்போதே தந்துள்ளார். இக்குறட் பாக்களைப் போலவே, ஒறாமை, ஒறுப்பு; நெஞ்சத் துறவு, வஞ்சத் துறவு பற்றி மேலோட்டமாகத் தோன்றும் முரண்பாடுகளுக்கும் சரியான வள்ளுவப் பார்வையோடு அரண்கோலியுள்ளதை இந்த நிலாமுற்ற அவைக்கு நினைவூட்டுவது அவசியம்.

பேரறிஞர் வ.சுப.மா. அகநிலையறங்கள், புறநிலையறங்கள் என இரண்டாகப் பகுத்து, ஒரு மனிதன் அகநிலையிலும் புறநிலைப் பொறுப்பிலும் ஆற்ற வேண்டிய கடமைகளை முரண் எனக் கருத வேண்டாம் என விளக்க ஓர் உவமை சொன்னார், தந்தை ஒருவன், தன் மகன் சொந்த வீட்டிலேயே திருடிவிட்டால், அதைக் குடிமானம் கருதி வெளியில் சொல்லாமல், தன் மகனைத் திருத்தவோ, கண்டிக்கவோ முனைகிறான். அவனே நீதிபதி பொறுப்பேற்றிருக்கும் போது, அதே மகன் பிற இடத்தில் திருடியமைக்காகக் குற்றவாளிக் கூண்டில் எதிர்நிற்கும் போது, தன் மகன் எனவும் பாராது, உரிய நியாயமோ, தண்டனையோ அளிக்க வேண்டிய இக்கட்டான பொறுப்பிற்கு உள்ளாகிறான். இவ்விரு நிலைகளையும் ‘முரண்’ என்பதா? அல்லது ‘அரண்’ என்பதா?”

பேராசிரியர் வளனரசு

“பேராசிரியர் எடுத்துக்காட்டிய உவமைக்குப் பொருத்தமான குறட்பாக்களாக..

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் என்பதோடு, களை கட்ட தனொடு நேர்”

“குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

     வடுவன்று வேந்தன் தொழில்”   (549)

என்னும் குறளை மாணிக்கனார் எடுத்துக் காட்டுவார். நாட்டுத் தலைவன், தனி மனிதன், வேந்தன் அல்லது அமைச்சன் எனும் இரண்டு நிலைப்பாடுகள் உடையவன். குடிமக்களுக்குப் பெரிதும் இடையூறு செய்பவரைத் தண்டித்துக் கொல்லுதல் பொதுநலம் காக்கும் அவனது (வேந்தன்) தொழில்; அதே சமயம், குடிநலம் பேணாது, தன் பதவியைக் காத்துக் கொள்ளு வதற்காகச் சட்டத்தை வளைத்துப் பிறரைத் தண்டிக்க முற்பட்டால் அதனை ‘நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும்நெறி’ (324) எனும் ‘கொல்லாமை’ அதிகாரப் பாடலோடு முரணுவதாகக் கருதக்கூடாது. ‘அதிகார துஷ்பிரயோகம்’ எனும் மகாப்பழியாகவே அது பிந்திய வரலாற்றில் இடம்பெறும்.”

புலவர் ஒருவர் இடைமறித்து

“‘பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

      நன்மை பயக்கும் எனின்’           (292)

என எல்லோர்க்கும் நன்மை பயக்குமானால் ஒருவன், தன்னலம் நோக்காது, பொய் கூற நேர்ந்தாலும், அது வாய்மையின் இடத்தில் வைத்து மதிக்கப்படும் என வள்ளுவர் மனவியல் புரட்சியை அன்றே செய்துவிட்டார்.”

மற்றொரு பெரும்புலவர்

“வள்ளுவர் அப்படிப் பொதுநலம் நோக்கிச் சொல்லும் பொய்யினை, வாய்மை என்று முழுமையாக ஏற்கவே இல்லை. அதனை வாய்மை எனும் இடத்தில் கொள்ளலாம்; அப்போதைக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்று தான் கருதியிருக்க வேண்டும் என நான் அடித்துச் சொல்லுகிறேன்.”

கூட்டத்திலிருந்து ஒரு குரல்

“புலவரய்யா யாரையும் அடித்துவிட வேண்டாம். நாங்களே தங்கள் கருத்தை வள்ளுவர் கருத்தாக ஏற்றுக் கைதட்டி விடுகிறோம்” (கரவொலிகள் – சிரிப்பலைகள்)

பேராசிரியர்

“பொய்யோ வாய்மை எனும் இடமோ இவை இரண்டுமே ஒருவரின் மனத்தைக் களமாகக் கொண்டவை என்பது உளவியலாரின் தீர்ப்பு. மனிதன் என்பவன் மனதால் வாழ்கிறான். மன எழுச்சியும் வளர்ச்சியுமே ஒரு தனி மனிதனின் மலர்ச்சியும் தளர்ச்சியும் என்பது அறிவியல் துணிபு.”

மற்றொருவர்

“ஐயா… ஓர் இடைமறிப்புக்கு மன்னிக்கவும்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் சொல்லுங்கள். நீங்கள் முடித்ததும் வள்ளுவ முரண்களாக என் மனதில் எழுந்த ஐயங்களை இந்த அவை முன்னர் வைக்க விரும்புகிறேன்.”

பேராசிரியர்

“நான் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். மக்களிடம் வள்ளுவர் காலத்தில் இருந்த மனம் தானே இன்றும் இருக்கிறது? அதே அகவுணர்வு தானே இப்போதும் இருத்தல் வேண்டும்? மனச்சான்று, காலத்திற்குக் காலம் மாறுபடுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“இது சிந்திக்க வேண்டிய கேள்விதான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக வள்ளுவத்தின் மூலமே நமக்குப் புலனாகிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலே கூட சமுதாய மக்களில் பலருக்கு நல்ல மனம் இல்லை என்பதை அவரே இயற்றியுள்ள ‘கயமை’ எனும் தனி அதிகாரம் அழுத்தமாகச் சொல்கிறது.”

இடையில் ஒருவர்

“கயவராய் இருப்பதற்கு மன அழுத்தம் அவசியம் தான்” (அவையில் சிறு புன்முறுவல் பிரதிபலிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“அது மட்டும் அல்ல; மனம் மாறுபடும் இயல்புடையது என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் ‘மகளிர் மனம் போல மாறுபடும்’ எனவும் வள்ளுவம் கூறுவதாக நினைவு! ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்” எனக் கவியரசு கண்ணதாசனும் பாடியுள்ளார்.”

பெரும்புலவர் இடைமறித்து

“மகளிர் மனப் போக்குப் பற்றிய ஆய்வில் இறங்கினால் எளிதில் மீள முடியாது; முரண்கள் முட்டி மோத ஆரம்பித்துவிடும். எனவே ஒருங்கிணைப்பாளர் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் சற்று முன்னர் கூற நினைத்த வள்ளுவ முரண்களைக் கோடிட்டுக் காட்டட்டும். நாமும் உடன் சிந்திப்போம்.”

ஒருங்கிணைப்பாளர்

“நான் வள்ளுவத்தில் முரண்பாடுகளை விட உடன்பாடுகளையே பெரிதும் காண்கிறேன். சிறு முரண்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவற்றைக் காலச் சூழலோடும் பாட வேறுபாட்டோடும் பொருத்தி அமைதி காண முற்படுவேன். மனம் பற்றி நிறையச் சொன்னார்கள். இந்த இடத்தில் டாக்டர் மு.வ. அவர்கள் கூறிய கருத்தை முதலில் முன்வைக்க விரும்புகிறேன். அவர் சொன்னார்:

‘பிற உயிர்களை விட மக்கள் வாழ்வு சிறந்திருக்கக் காரணம் அவர்கள் பெற்றுள்ள மனம் எனும் கருவிதான். அதைப் பயன்படுத்தவும் பண்படுத்தவும் வல்லவர்களாக அவர்கள் துலங்க வேண்டும். மக்கள் வாழ்வு என்பது ஐம்புல நிலைக்கும் அப்பாற்பட்ட உற்றுணர்ந்து ஒப்புரவோடு வாழ வேண்டிய மனத்தால் வாழும் வாழ்க்கை ஆகும். இந்த மனம் பண்படும் இடம், காதல் வாழ்க்கை; மனம் பயன்படும் இடம், பொது வாழ்க்கை; மனம் வாழும் இடம், தனி வாழ்க்கை.’”

அரசு அதிகாரி

“அறிஞர் மு.வ.வைச் சரியான இடத்தில் பொருத்தமாக நினைவூட்டி, எங்கள் மனங்களையும் நிறைத்து விட்டீர்களே?” (கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என வள்ளுவரே முத்தாய்ப்பு இட்ட பின்னர், நாம் மனத்தைப் போட்டு இதற்கு மேலும் குழப்பிக் கொள்ள வேண்டுமா?

குறள் பட்டிமன்றங்களில் எல்லாம் வினாவாக எழுப்பப்படும் குறளை இந்த நிலா முற்ற அவையில் என் மனதைத் தாக்கிய முதல் முரணாக வைக்கிறேன்.

அந்தக் குறட்பா:

“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

     பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை’    (37)

அறத்தாறு என்றால் அறத்தின் பயன். ஆனால் இங்கு ஊழ்வினையையும் சுட்டுவது போலப் படுகிறது. அதாவது பல்லக்கைத் தாங்குவோர் தீவினை செய்தோர், அதில் ஏறி அமர்ந்து செல்வோர் நல்வினை செய்தோர் எனப் பன்னெடுங் காலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது.”

அறத்தாறு – இதுதானா?

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“இன்றைய குடியாட்சிக்கு வந்து பொன்விழாக் கொண்டாடி விட்ட நம் நாட்டு நிலை என்ன? வாக்களித்தோர் தீவினை செய்தோராகவும், எப்படியோ வெற்றி பெற்றோர் நல்வினையாளராகவும் நாடகங்கள் அரங்கேறு கின்றனவே? வேட்பாளராக விழைவோர் தம் பூர்வ கதையை எல்லாம் தெரிவித்தாக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் அளவுக்கு ஆட்சிக் கட்டி லேறுவோர் மீது அவநம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே? அவர்கள் எல்லாம் நல்வினைப் பயனால் ஆட்சிக்கு வருகிறார்கள்; ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுகிறது’ என்பது தானே நடைமுறை?”

ஒருங்கிணைப்பாளர்

“அரசுப் பொறுப்பில் இருக்கும் அன்பர் அடுக்கிய ஐயங்கள் இன்றைய நம் குடியாட்சி முறையைச் சீர்குலைத்து வரும் கயமைகள் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை; ஆனால், குறட்பாவின் உண்மைப் பொருள் எதுவாயிருக்கும் என நாம் மனம் விட்டுச் சிந்திக்கலாமே?”

 

பேராசிரியர் வளனரசு

“இந்தக் குறளுக்கு ஊழைக் கருத்தில் கொண்டு பொருள் காண முற்பட்டால் ஏற்றத்தாழ்வு எண்ணமே நம்முன் நந்தி போல் நிற்கும்.”

ஒருவர்

“அப்படியானால் வள்ளுவர் ‘ஊழ்’ பற்றித் தனி அதிகாரமே செய்துள்ளமைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“ஊழுக்கு அவர் தனி அதிகாரம் செய்திருப்பினும் அங்கு அவர் கருதிய பொருளமைதி இந்தக் குறளுக்குப் பொருந்தாது என்பது பல அறிஞர் முடிபு. அப்படிக் கருதினால் சமுதாயத்தில் உயர்வு தாழ்வுப் போராட்டத்திற்கு, சமூக நியதிக்கு, சட்டத்திற்கு எல்லாம் அப்பால் போய், ஏதோ ஒரு சமாதானம் தேடிக் கொள்ளுவதாகவே அமையும். வள்ளுவர் ஊழில் உறுதி இல்லாதவர் அல்லர். அது இக்குறளுக்குப் பொருந்துமா என மட்டுமே நாம் கருத வேண்டும்.”

ஒருங்கிணைப்பாளர்

அறநெறி என்பது இரு சாராருக்கும் பொதுமையானது தான். பல்லக்கைத் தாங்குவோரும் மனிதரே. அதில் அமர்ந்து செல்வோரும் மனிதரே. பல்லக்கைச் சுமப்போராயினும் அவர்கள் அற நெறியில் நின்றால் அறவோர் ஆகலாம். அதில் அமர்ந்து செல்வோராயினும் அவர்கள் அறநெறி பற்றி நின்றாலே அறவோர் ஆகலாம். அறவோர் ஆகும் வாய்ப்பு இருசாரார்க்குமே உண்டு. அது அவரவர் செயல் விளைவே அன்றி – அறத்தின் பயன் எனக்கொண்டு, ஏதோ முற்பிறவிப் பயன் என ஊழை மாசுபடுத்தக் கூடாது, காரணம் காட்டக் கூடாது.

‘அறத்தான் வருவதே இன்பம்’ என்பதுதான் வள்ளுவத்தின் உண்மைப் பொருள்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 7

 

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைக்குப் புகழ், பாராட்டு என்பதெல்லாம் பணபலமோ, ஆட்பலமோ உள்ளவர்களின் கைக்கருவியாகி விட்டது உண்மை. செய்தித் தாள்கள் போன்ற ஊடகங்கள் அவர்களுக்கு விலைபோகி விடுவதும் மறுக்க முடியாத நடைமுறை. அவையோர்க்கு இங்கே ஒன்றை நினைவூட்டுவது என் கடமை. மேலும், இது குறள் நிலா முற்றமாக இருப்பதால், புகழ் – போலி என்பதைப் பற்றிய வள்ளுவர் கருத்தைச் சுற்றி வருவதைவிட, வள்ளுவப் பெருந்தகை புகழுக்கு ஊறு செய்பவை என எவ்வெவற்றைப் பட்டியலிட்டாரோ அவற்றையும் இன்றைய வாழ்வோட்டத் தோடு கருதிப் பார்க்கலாம்.”

புலவர் இடைமறித்து

“‘திருக்குறள் செம்ம’லின் கருத்தை நான் வழிமொழிகிறேன். வள்ளுவப் பேராசான் ‘பிறன்மனை விழைபவன், என்றும் நீங்காப் பழியை எய்துவான்’ என எச்சரித்தார். ஆனாலும் இன்று பிற நங்கையரை அவமானப்படுத்துவது ‘ஈவ் டீசிங்’ (பெண் சீண்டல்) எனும் புதுப்பெயரில் விளம்பர மாகப் பிரபலமாகி வருகிறது. தவறு செய்பவர்கள், சிறிய தண்டனைக்குப் பின் மீண்டும் வேறு வழியில் புகழேணி தேடிக் கொள்ளுகிறார்களே..!”

ஒருவர் இடை மறித்து

“புகழ் ஏணி அல்ல… ‘புளுகு ஏணி’ என்று சொல்க” (சிரிப்பலை)

புலவர்

“ஐயா சுட்டிக்காட்டியது போல… ‘ஒறுத்தார்க்கு ஒரு நாள் இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்’ (156) என்றார் வள்ளுவர்.

ஆனால், இன்று அரசியல்வாதிகள், சாதி, வர்க்கம், மதம், ஆசாரம் எனும் பல பெயர்களால், பின்னணியால் பிறரைத் துன்புறுத்திச் சுகம் தேடி விட்டுப் பின்னர் பணத்தாலும், அதிகாரச் செல்வாக்காலும் தமக்குத் தனியாகத் தணியாத தொரு புகழைத் தேடிக் கொண்டு விடுகிறார்கள்; உண்மைப் புகழைக் கொன்று புதைத்தும் விடுகிறார்கள். இதுதான் கண்கூடு.”

மற்றொருவர்

“‘வறியார்க்கு ஒன்று ஈவதே புகழ், ஈகையால் வருவதே புகழ்’ என்பவையெல்லாம் பழைய புராணங்கள்… இன்று புகழின் மறுபெயர்.. அப்பட்டமான, அறுவெறுப்பான விளம்பரம் என்று சாதனைப் பண்டங்களைப் பெரிதாக விளம்பரப்படுத்திப் பொருள் குவிப்பதைப் போல, அற்பமான செயல்களைப் பெரிய சுவரொட்டி களால் விளம்பரப்படுத்தி இப்போது சுய விளம்பரமும் ஆதாயமும் தேடுகிறார்கள். சினிமா விளம்பரமாகிவிட்ட இந்த மாய வலையில் நம் தமிழகத்து இளைய சமுதாயமும் மயங்கி விழுந்து வருவதுதான் என் போன்ற வயதானவர்களுக்கு வருத்தத்தை, துயரத்தைத் தருகிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“புலவர் ஐயாவின் மனத்துயரை நாமும் பங்கிட்டுக் கொள்ளுவதே நியாயம். இதனை வள்ளுவர் அன்றே தெளிந்திருந்தார் என்றே கருத வேண்டியுள்ளது.”

புலவர்

“‘திருக்குறள் செம்மல்’ புதிர் போடுகிறாரா?”

ஒழுக்கமில்லாமலே விழுப்பமா?

ஒருங்கிணைப்பாளர்

“புதிர் அல்ல புலவர் ஐயா, வள்ளுவர் அதிகார முறைவைப்பை நினைத்து இக் கருத்தைச் சொன்னேன்.”

ஒரு குரல்

“சொல்லுங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘புகழ்’ என்பது ஒருவருடைய அற ஒழுக்கத்தால் விளையும் நல்ல பயிர். எனவேதான் வள்ளுவர் பொது வாழ்க்கைப் பகுதியாகிய பொருட்பாலில் அதைச் சேர்க்காமல் அற வாழ்க்கை அடிப்படைகளான இல்வாழ்க்கை, ஒப்புரவு, ஈகை என்பவற்றோடு புகழையும் ஓரதிகாரமாக இணைத்துப் புகழை உயர்த்தி வைத்தார், ‘ஈதல் இசைபட வாழ்தலே புகழ்’ என்றார் (கைதட்டல்). இக்கருத்தைச் சொன்ன அறிஞர் மு.வ.வை நினைவு கூர்வோம்.”

வருமான வரித் துறை அதிகாரி

“தாங்கள் சரியான இடத்தில் அறிஞர் மு.வ.வின் கருத்தை, வள்ளுவர் புகழை அறத்துப்பாலொடு அன்று சேர்த்தமை போல, இன்று செய்து விட்டீர்கள். இப்போது மு.வ. எழுதிய மற்றொரு கருத்தை என் நினைவில் உள்ள வரை சொல்ல ஆசைப்படுகிறேன். ‘ஒழுக்கம் உடையவர்கள் மூலையில் கிடக்க, ஒழுக்கமற்ற சிலரைச் செய்தித் தாள்களும், வார இதழ்களும் வானளாவப் புகழ்ந்து பாராட்டுகின்றன. அவற்றின் விளம்பரங்களைப் படித்து, அந்தப் புகழுரைகளை உண்மை என நம்பிவிடுகிறார்கள் பொதுமக்கள்.’ இப்படிப்பட்ட சிலரைப் பார்த்துக் கேட்கும் இளைஞர்களின் மனதில் ஒரு திகைப்பு ஏற்படுகிறது. ஒழுக்கம் இல்லாமலே விழுப்பம் பெறமுடிகிறதே என்று எண்ணிப் பார்க்கிறார்கள். உடனே அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை தளிர்க்கிறது. புதிய ஆராதனையாகப் போலிகளுக்கு போஸ்டர் ஒட்டப் போய்விடுகிறார்கள்.”

வாக்குச் சீட்டின் வலிமை தெரியாமை

ஒருங்கிணைப்பாளர்

“வருமான வரித் துறை ஆணையர் கூறிய கருத்தை யாரும் மறுக்க முடியாது. இச்சமயத்தில் என் இனிய நண்பரும் இளைய சமுதாயத்தைப் பார்த்து ‘உன்னால் முடியும் தம்பி’ என நம்பிக்கை எழுச்சி ஊட்டிட ஓயாது முற்பட்டிருப்பவருமான திரு.எம்.எஸ்.உதயமூர்த்தி கூறிய கருத்தைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். அவர் சொன்னார்:

‘அரசியல் விழிப்பில்லாத நாட்டில், தங்கள் வாக்குச் சீட்டின் வலிமையை உணராத மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில், தலைவன் என்பவன் தான்தோன்றியாகப் போகவும், தாறுமாறாகப் புகழ் தேடவும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு..’ அந்தப் புகழோசைகள் தான் இன்று எங்கும் எதிரொலிக்கின்றன; நம்மைச் செவிடுகள் ஆக்குகின்றன.”

(ஓய்வு பெற்ற பேராசிரியர் முற்றத்தில் சேருதல்)

ஒருங்கிணைப்பாளர்

“நம் பேராசிரியர் இப்போது தான் வந்து அரங்கில் நம்மோடு அமர்ந்துள்ளார். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் அவர் தம் கருத்தையும் சொல்லட்டுமே.”

பேராசிரியர்

“நிலா முற்றத்தின் தொடக்கத்திலேயே வர முயன்றேன். ‘ஙிமீttமீக்ஷீ றீணீtமீ tலீணீஸீ ஸீமீஸ்மீக்ஷீ’ எனும் ஆங்கிலத் தொடர் போல சற்றே தாமதமானாலும் நிலா நீலவானின் உச்சிக்கு வரும் முன்னர் ஓடி வந்துவிட்டேன்; சற்று உங்கள் விவாதப் போக்கை உன்னிப்பாகக் கேட்டேன். ‘திருக்குறள் செம்மல்’ என் கருத்தையும் கேட்கிறார். நாம் நாடு விடுதலை பெற்றுப் பொன்விழாக் கண்டு, மணிவிழா ஆண்டினை இப்போது நெருங்கிக் கொண்டிருக் கிறோம்.”

இடைமறித்த நடுவர்

“தம்பதியர்க்கு மணிவிழாப் போல, தாய்நாட்டுக்கும் மணிவிழாக் காண்போம்.”

ஒருவர்

“பேராசிரியர் கூறியபடி இப்படி விழாக்கள் காணும் ஆரவாரத்திலேயே வீண் பொழுது போக்கி விட்டு கடமையைச் செய்து விட்டதொரு போலியான மதர்ப்பிலேயே நாட்களை ஓட்டி வருகிறோம். வளரும் தலைமுறைக்குத் தவறான வழிகாட்டி வருகிறோம்.”

புலவர்

“பேராசிரியர் ஐயா அவர்கள் அரசியல் கற்றவர். புதிராகச் சொல்லாமல் புரியும்படி சொல்லுமாறு வேண்டுகிறேன்.”

எத்தனை எத்தனை பேதங்கள்?

பேராசிரியர்

“உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளுகிறோம். ஆனால், எதிலும் கட்டுப்பாடற்ற, நேர்மையற்ற நடவடிக்கைகளால், நம்மையும் நாட்டையும் நாமே சீர்குலைத்து வருகிறோம். நம்மிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சீன நாடு மிகப்பெரியதொரு வல்லரசாக, கட்டுக்கோப்புடன் உயர்ந்து வருவதைக் கண்டும் காணாதவர்களாய் ஊமையராய், செவிடராய் வாழ்கிறோம், வளர்கிறோம்.”

புலவர்

“நம் மக்கள் ‘ஆட்டுமந்தைகளைப் போல’ இருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன்.”

பேராசிரியர்

“இன்றைய நடப்பு அப்படித்தான் சொல்லத் தூண்டுகிறது. மந்தை மனப்பான்மையே புரையோடி வருகிறது.”

புலவர்

“ஏதோ.. சந்தை மனப்பான்மைப் பொருளாதாரம் என்கிறார்களே..?”

இன்னொருவர்

“புலவரய்யா… பேராசிரியர் தம் கருத்தைச் சொல்ல விடுங்கள்! நீங்கள் குறிப்பிட்டது சந்தை மனப்பான்மை அதாவது ‘விணீக்ஷீளீமீtவீஸீரீ ணிநீஷீஸீஷீனீஹ்’ என உலகையே பெரியதொரு சந்தையாக மாற்றிவரும் பொருளாதார ஆதிக்கம். பேராசிரியர் சொல்ல வந்தது…”

பேராசிரியர்

“நம் மக்களின் இன்றைய மனப்போக்கு சந்தை மனப்பாங்கு. அதாவது தேர்தலில் வாக்காளர்களும் தேர்தலுக்குப் பின் தேர்வு பெற்றவர்களும் விலை போவது என்பதெல்லாம் விபரீதப் போக்குத் தான். அந்தச் சந்தை அல்லது மொந்தை மனப்போக்கைத்தான் ‘மந்தை மனப்பான்மை” என்கிறேன்.

வருமான வரி ஆணையர்

“இப்படி ‘ஆட்டு மந்தைகளாக இருக்கும் சமூகத்தவர்க்கு ஓநாய்களே தலைவர்களாக வருவார்கள்’ என்றான் மேலை நாட்டு அரசியல் அறிஞன் ஒருவன்.”

புலவர்

“ஐயா, மிக அருமையான மேற்கோளைத் தூக்கிப் போட்டுவிட்டார். நம் மக்கள் ஆட்டு மந்தைகள் போல கட்சிக் கட்டுப்பாடு, ஆட்சிப் பொறுப்பு எனும் வகைகளில் ஆட்டுவிக்கப்படும் தலையாட்டி பொம்மைகளாகவே இருக்கிறார்கள். ‘வாக்கு’ எனும் புனிதமான உரிமைச் சீட்டைப் பொறுப்புணர்வோடு பயன்படுத்தத் தெரியாமையால் அல்லது அறியாமையால், இன்னும் சொல்லப் போனால்  வாக்காளர்கள் தேர்தல் காலங்களில் முட்டாள்கள் ஆக இருப்பதால், அயோக்கியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகிறார்கள்.”

“புலவர் ஐயா என் கருத்தையே எதிரொலித்தார். ஆட்டுமந்தைச் சமுதாயம் ஓநாய்களின் தலைமையில் ஊர்வலமாகப் போகும் பரிதாபக் காட்சியே அண்மையில் பல மாநிலங்களில் அரங்கேறி வருகிறது. நம் ஜனநாயகம் பண நாயகத்தாலும் அடியாட்களின் பலமான ஆதிக்கத்தாலும் மூலையில் அடங்கிக் கிடக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையின் ஓரங்களிலேயே ஒதுக்கப்பட்டுள்ளார்கள்; ஒடுக்கப்பட்டும் வருகிறார்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“இதனை அமரத்துவம் பெற்ற மகா சந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ‘வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்’ எனும் கையேட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக்காட்டியுள்ளார். அந்தச் சிறு நூலைக் கையோடு கொண்டு வந்துள்ளேன்.”

நூலை எடுத்து, பக்கத்தைப் பிரித்து முன்னால் அமர்ந்துள்ள திருக்குறள் பேரவை இளைய அன்பரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்ல, அவர் படிக்கிறார்.

அது எழுத்தில் மட்டுமே இருக்கும்!

“அரசியல், பொருளாதார, சமுதாயப் பிரச்சினை களுக்குத் திருக்குறள் வழியாகத் தீர்வுகள் காண- வழிகாட்ட – முயன்று வரும் இயக்கம் ‘திருக்குறள் பேரவை’. உயர்ந்த சிந்தனைகளும் சீரிய கோட்பாடுகளும் நிறைந்து கிடக்கும் இந்த நாட்டில் அவை செயல்படாமல் போனதால் வறுமையும் அறியாமையும் தொடர்ந்து நிலவி வருகின்றன. உழைக்கும் மக்களில் மிகப்பெரும் பான்மையினர் தொடர்ந்து ஏழைகளாகவே உள்ளனர். சிந்தனை யாளர்களில் பலர் இத்தகைய அவலங்களைக் கண்டும் கையறு நிலையில் புலம்புவதும் தொடர்கிறது.

எந்த வகையிலேனும் பொருட் செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டால், அதன் மூலம் ஆட்சியின் செல்வாக்கைப் பெற்று அனுபவிக்க முடியும் என்ற நிலை, தனி உடைமைச் சமுதாய அமைப்பில் உலகியலாக உள்ளது. பொருட் செல்வத்தின் செல்வாக்காலும் அல்லது அதிகாரத்தின் செல்வாக்காலும் தனிச்சலுகைகள் பெறும் நிலை உள்ள வரையில், உற்பத்தி பெருகினாலும் அது எல்லோருக்கும் உரியவாறு கிடைக்காது: வறுமை போகாது. ஒழுக்கமும் நற்பண்புகளும் நிலைக்கமாட்டா. செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் எதையும் செய்யக்கூடிய நிலையில் சிலரும், அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே பிறரை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் நிலையில் பலரும் உள்ள எந்த நாட்டிலும் மக்களாட்சி உண்மையில் மலராது. அந்நிலை நீடிக்கும் வரையில், நாட்டில் எல்லோரும் சமம் என்பது எழுத்தில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் நிலவாது. அத்தகைய நிலை நீங்கி இங்கும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ சமத்துவ சமுதாயம் அமைய வேண்டுமானால் ‘சொல் வேறு செயல் வேறு’ என வேலியிடும் கொடியவர்களைப் பொது வாழ்விலிருந்து மக்கள் அகற்ற வேண்டும்.”

பேராசிரியர் (உற்சாகமாக)

“மகாசந்நிதானம், தவத்திரு அடிகளாரின் இந்த அறிவுரை ஓர் எச்சரிக்கை; அவர் சொல்வது போல் சமுதாயப் போலிகளை, அரசியல் கூத்தாடி களை, வேடதாரிகளை அவ்வளவு எளிதில் மக்களால் – அதுவும் நம் மக்களால்- நீக்க முடியும் என நான் கருதவில்லை. நிலா முற்ற அவை என்ன நினைக்கிறதோ…?” (அவையில் கர ஒலி- அமைதி)

ஒருங்கிணைப்பாளர்

“அடிகளாரின் கருத்தை அன்பர் உணர்ச்சியோடு படிக்கக் கேட்டோம்; மக்கள், மக்கள் என்று யாரையோ ஒரு சாராரை தனிமைப் படுத்தக் கூடாது; நாமும்  அந்தப் பொதுமக்களில் ஒரு பகுதியினர்தானே? நம்மில் படித்தவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் நபரில் எத்தனை பேர், தீவிர அரசியலில் பங்கேற்க முன் நிற்க முற்படுகிறோம்? அரசியல் என்றால் ‘தீண்டத்தகாத ஒன்று’ எனக் கருதி சமுதாய விளிம்பில் ஓரமாகச் சென்று விடுகிறோமே! இதைத்தான் சமுதாயச் சிந்தனையாளர் டாக்டர் உதயமூர்த்தியும் அடிக்கடி நினைவுகூர்ந்து ஊரெங்கும் சொல்லி மனம் உளைகிறார்.”

படித்தவன் பொய்மை வாழ்வு!

பேராசிரியர்

“டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் பேச்சை நானும் கேட்ட நினைவு இருக்கிறது. மதுரையில் இளைஞர் மேடையில் அவர் பேசியபோது சொன்னார்: ‘அரசியல் மூன்றாம் தர மனிதர்களால் நிறைந்திருக்கிறது என வைத்துக் கொண்டால், அதற்குப் படித்தவர்கள் காட்டும் போலித்தனமும் அவர்கள் ஈடுபடாததும்தான் காரணம். படித்தவர்கள், நாட்டின் பொதுநலப் பணிகளில் இறங்காத போது, அந்தக் காரியங்களை யாராவது செய்ய முன் வருவார்கள். அவர்களை விடத் திறமையில் குறைந்தவர்கள் எல்லாருக்குமாக முடிவெடுப்பார்கள். எனவே அதன் பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டியது தான்…”

அவையிலிருந்து ஓர் அரசு அதிகாரி (ஓய்வு பெற்றவர்)

“எங்களைப் போன்ற அரசு ஊழியர்கள் பணிக்காலத்தே அரசியலில் ஈடுபட அனுமதி இல்லை; ஓய்வு பெற்ற பின்னர் மாறிவரும் சமூகச் சூழலோடு ஈடு கொடுத்துப் பொறுப்பேற்க எல்லோராலும் முடிவதில்லை.”

மற்றவர் – இடைமறித்து

“ஐயா! அப்படிச் சொல்லாதீர்கள்! இது அப்பட்டமான நழுவல், கை கழுவல்! எத்தனையோ அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பின்னரும் அரசியல் சமுதாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைச் சான்றுகளுடன் சொல்ல முடியும்” (பலரும் ஆமோதித்தல்)

முன்னவர்

“நான் பணிக்காலத்தே தீவிர அரசியல் நாட்டம் கொள்ளுவதற்கு உள்ள தடைகளையே குறிப்பிட்டேன்.”

இன்னொருவர்

“அரசியல் சாராத எத்தனையோ தொண்டு அமைப்புக்கள் உள்ளன. நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு, ஊனமுற்றோர் மறு வாழ்வு, அனாதையர் பராமரிப்பு, மகளிர் உரிமைக் காப்பு, சுற்றுச்சூழல் மாசுக்காப்பு என எண்ணிலடங்காத் தொண்டர் குழாம்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தை ஒதுக்கிப் பிறர் பணி செய்யும் தொண்டு மனம் தான் வேண்டும்; அது நம்மில் படித்த பலரிடம் பரவலாக இருப்பதில்லை. எனவே இடைவெளியில், புல்லுருவிகள் புகுந்து விடுகின்றன, நாடு காடாகிறது.”

இன்னொருவர்

“படித்தவர்கள் பணியிடையே சமுதாயத் தொண்டும் செய்வதும் துணை புரிவதும் தனியாக இருக்கட்டும்; தேர்தல்களில் வாக்களிக்கக் கூடச் சாவடிகளுக்கு வராத இந்தப் படித்த குடிமக்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.”

மற்றொருவர்

“நான் எல்லாத் தேர்தல்களிலும் ஓட்டுப் போட்டவன் ஐயா… வெளியூர் போனாலும் வாக்களிப்பதற்காகவே ஊர் திரும்ப மறவாதவன் நான்.”

இன்னொருவர்

“நீங்கள் உரிய நேரத்தில் வாக்களிக்கச் சாவடிக்குப் போகாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் வாக்கையே இன்னொரு ‘குடிமகன்’ போட்டுவிடுவார்.” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“ஜனநாயகத்தில் மக்கள் அரசியலில் நேர்முகக் கவனம் செலுத்துவதும், வாக்களிப்புப் போன்ற கடமை களைத் தவறாமல் செய்வதும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்துக் கணிப்பதும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உரமாக அமையும். ஆனால், நம் நாட்டில் அடியாட்களும் தீய சக்திகளும் தலையெடுக்க நேர்ந்தது ஒரு துரதிர்ஷ்டம் மட்டும் அல்ல; தேசிய அவமானமும் கூட என்றே சொல்லலாம்.

நான் திருச்சிக் கல்லூரியில் பொருளாதார முதுகலை வகுப்பில் பயின்று கொண்டிருந்தபோது கேட்ட அறிஞர் அண்ணாவின் கருத்தொன்றை நிலாமுற்ற அன்பர்கள் கவனத்திற்குக் கொணர விரும்புகிறேன்.”

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

“மக்களாட்சியில் ஆட்சிப் பொறுப்பு யார் கையில் இருக்கிறதோ, அவர்களுடைய குணத்தையே மக்களாட்சி பெறுகிறது. நல்லவர்கள், நாணயமானவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், மக்களாட்சி நல்லதாகும்; இல்லையேல் விபரீதங்கள் விளையும்” என்றார் அறிஞர் அண்ணா!

அவையிலிருந்து ஒரு பெரியவர்

“‘யதா ராஜா ததா பிரஜா’ என வடமொழி யிலும், ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ எனத் தமிழிலும் பன்னெடுங் காலமாகச் சொல்லி வந்த பழமொழியும் அதுதான்.”

பேராசிரியர்

“மக்கள் எத்தகையவர்களோ, அத்தகைய தன்மை உடையவர்களையே தமது தலைவர் களாகப் பெறுவார்கள்’ என மேலைநாட்டு அரசியல் அறிஞர் சொன்னாரே…”

இடைமறித்த ஒருவர்

“அப்படியானால்.. உரிமைப் போர்க் காலத்தே நம் நாட்டில் முப்பது கோடி மக்களும் இருந்த இழிநிலையை, மகாகவி பாரதி பாடினானே…

‘நெஞ்சில் உரமும் இன்றி

     நேர்மைத் திறமும் இன்றி

     வஞ்சனை செய்வாரடி & கிளியே

     வாய்ச் சொல்லில் வீரரடி…’

எனக் ‘கிளிக்கண்ணி’யில் பாடினானே…”

மற்றொருவர்

“அவன் பாடியது சரி. அதை வைத்து ஐயா என்ன சொல்ல வருகிறீர்கள்?”

முதலில் பேசியவர்

“மக்கள் அவ்வாறு ஊமைகளாய், கோழைகளாய் சிப்பாய் வரக் கண்டு வீட்டுக்குள் ஓடிப் பதுங்குவோராய் வாழ நேர்ந்த சூழலிலும் நம் மக்களை அணி திரட்ட அண்ணல் காந்தியடிகள் தொட்டு, வீர வாஞ்சிநாதன் வரை ஆயிரமாயிரம் பேர் சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் உருவாகவில்லையா? ‘மக்களைப் போலத்தான் தலைவர்கள் அமைவார்கள்’ என்பது பொது விதி இல்லை. மக்கள், ஆட்டு மந்தையாகச் சிதறினாலும் அவர்களைச் சேர்த்து இணைக்க, காலம் தக்க தலைவர்களைக் கருணையோடு நல்கியே தீரும். அந்த வகையில் பாரத நாட்டினரான நாம் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள் (ஆவேசமாகப் பேசி நிறுத்தி விட்டு) இவ்வளவு வேகமாகப் பேசுகிறேன். இதற்குக் கூட கை தட்ட மாட்டேன். என்கிறீர்களே!”  (சிரிப்பும் கர ஒலியும்)

ஒருங்கிணைப்பாளர்

“போராட்ட காலத் தலைமை வேறு, சுதந்திரம் பெற்றபின் அமையும் உரிமைக் காலத் தலைமை வேறு. அங்கே தியாகம் அடிப்படை, இங்கே ஒழுக்கம் அடிப்படை.”

 

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 6

Related image

ஒருவர்

“மன்னிக்கவும்… மொழிபெயர்ப்பு முறைகள் – முரண்பாடுகள் பற்றிக் கூற எனக்குப் போதிய ஞானம் இல்லை; ஆனால் குறள் கூறும் கருத்துக்களில் ஆங்காங்கே பல என்று சொல்லாவிட்டாலும் சில முரண்கள் தோன்றுவதாக என் சிற்றறிவு சுட்டுவது உண்டு.”

மற்றோர் அன்பர்

“‘குறளில் முரண்பாடு’ என்று இவர் புதிய சர்ச்சையைக் கிளப்புகிறாரே..?”

ஒருங்கிணைப்பாளர்

“சர்ச்சைகள், சந்தேகங்கள் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? .. குறள் கூறும் செய்திகளில் முரண்கள் இருப்பது போலத் தோன்றுவதும் உண்மை என அறிஞர்கள் சிலர் கருதியது உண்டு. அவற்றையும் நிலா முற்றத்தில் சிந்தித்துச் சிறந்ததைப் பாராட்டுவோம், சிறப்பில்லாததைச் சீராக்குவோம்.”

ஓர் அன்பர்

“ஐயா… இந்த முரண்பாட்டிற்குள் நுழைந்தால் நம் வயிறுகள் முரண்பாடு செய்யும் போலத் தோன்றுகிறது. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். செவி நிறையக் கேட்டு விட்டோம். வயிற்றுக்கு ஏதேனும் வருமா எனப் பாருங்கள். வயிறு கிள்ளுகிறது” (சிரிப்பலை)

மற்றோர் அன்பர்

“அதோ.. உணவுப் பண்டங்களின் வரிசை வைப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? இரண்டு வரிசை இருக்கிறது! அதென்ன இரண்டு வரிசை? ஒன்று சைவம்; மற்றொன்று அசைவம்.”

ஒருங்கிணைப்பாளர்

“உணவுக்கு முன் ஒரு நிமிடம்… கவிஞர் கருப்பையா அவர்களே, திருக்குறளின் சிறப்பான பெருமைகளை எடுத்துக் கூறுங்கள்?

கவிஞர் கா.கருப்பையா

திருக்குறளுக்குச் சூட்டப்பெற்ற புகழாரங்கள் சில:

    “திருக்குறள் நீரோட்டம் பாயாத தமிழ்வயல்களே இல்லை”

– மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்

மானிட வேதம்

“சினமெனும் வேதம் மற்றும் இடமெனும் பேதம் மாறும்

 தினமெனும் வேதம் யாவும் தீர்த்தொரு பொதுமை கண்டு

 வாழ்வியல் படைத்த மேதை வள்ளுவன் தந்தமுப்பால்

 சூழ்நிலை அனைத்தும் தன்னுள் சூழ்ந்தொரு பாதை

காட்டும்,

 மானிட வேதம் சிந்த வையத்தார் அனைவர்கட்கும்

 தேனினும் இனிய எங்கள் செந்தமிழ் தந்த செல்வம்”

& அறிஞர் வா.செ.கு. (குலோத்துங்கன்)

ஒப்பற்ற நூல்

“வானுக்குச் செங்கதிரவன் போன்றும்

     புனல் வன்மைக்குக் காவிரியாறு போன்றும்

     நல்ல மானத்தைக் காத்து வாழ எண்ணும்

     வையக மாந்தர்க்கு ஒப்பற்ற நூல் திருக்குறள்…”

& பாவேந்தர் பாரதிதாசன்

வளரும் எண்ணம்

“வள்ளுவரின் குறள் மீது விழியை நாட்டி

     வடித்த இரண்டடி எடுத்து மனத்துள் போட்டுத்

     தெள்ளிதின் நற்பொருள் கண்டே உளம்பூரித்துச்

     சிந்தித்துப் பார்க்குங்கால் வளரும் எண்ணம்”

& கவியரசு கண்ணதாசன்

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்…” என்றுதானே வள்ளுவர் சொன்னார்; நாம் செவிக்கு இதுவரை உணர்வு பெற்றோம்; இனி வாயுணர்வுக்கு வகை வகையாக வைக்கப் பட்டுள்ளவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு வருவோமே! பந்திக்கு முந்துங்கள் ஐயா!”

 

ஒருவர்

“நிலா முற்றத்தில் செவிக்குக் கிட்டிய உணவால் நிறைவு கிட்டியதா..?”

மற்றவர்

“அல்லது வயிற்றுக்குக் கிட்டிய அறுசுவை உணவால் நிறைவு ஏற்பட்டதா? எனச் சொல்ல முடியாத அளவு நிலாச்சோறும் சுவையாய் இருந்தது; வள்ளுவச் செய்திகளும் சுவையாய் இருந்தன.”

முன்னவர்

“அது சரி… நாம் சைவப் பந்திக்குச் சென்று வந்தோம். அசைவத்தை நாடிச் சென்றவர்கள் எங்கே? இன்னும் காணோமே…”

இரண்டாமவர்

“அதோ பாரும் ஐயா… அசைந்து அசைந்து, ஆடியபடி வருகிறார்கள். நடக்கக்கூட முடியாமல்.. அவர்தான் அசைவ வேட்டைக்குப் போனவர்… அவர் அசைந்தாடி வந்தபின் சாப்பாட்டை ருசித்துப் பாராட்டுவார். வந்த பின் கேட்டால் நமக்கும் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். கட்சி மாறி விடுவோம்.” 

முன்னவர்

“செவிக்கு இனிய உணவோடு நாவிற்குச் சுவையான அமுதும் அளித்தமையை உளமாரப் பாராட்ட வேண்டும்.”

மற்றவர்

“நீரே பாராட்டிவிட்டீர் மிக அரிதாக, ஆச்சரியமாக!”

முன்னவர்

“ஏன் அப்படிச் சொல்கிறீர்? நல்லதைப் பாராட்ட வேண்டியது மனிதப் பண்பு அல்லவா?”

மற்றவர்

“அந்த நல்ல இயல்பு தமிழர்களாகிய நம்மிடம் அதிகம் இல்லையே? இது நம் தவக்குறை; நம் ஒருமித்த வளர்ச்சிக்கும் தடை.”

ஓர் அரசு அதிகாரி

“ஆங்கிலத்தில் வரும் புகழ்பெற்ற மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் அண்மையில் படித்தேன்: “மனிதன் சற்று அதிகமாகவே உணர்ச்சி வசப்படுபவன், அவன் முதுகைச் சற்று ‘சபாஷ்’ எனத் தட்டிக் கொடுத்துவிட்டால், உடனே தலை கனத்துப்போய் விடுமாம், கர்வம் வந்துவிடுமாம்.”

இன்னொருவர்

“ஆனால், பலருக்குத் தட்டிக்கொடுக்காமலே கர்வம் தலைக்கேறி விடுகிறதே?”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த கர்வம் பார்க்கும் சர்ச்சையை விடுத்து,  நாம் உணவுக்கு முன் பேசிய, வள்ளுவ முரண், அரண்களைப் பற்றிப் பேசுவோமா..?”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“அதற்கும் முன்பாக நிலா முற்ற விருந்துச் சாப்பாட்டைப் பற்றி ஓரிரு சொற்களில் பாராட்டட்டுமே.. ‘பண்பு பாராட்டும் உலகு’ என வள்ளுவரே சொல்லி உள்ளாரே..?”

 

ஒருங்கிணைப்பாளர்

“‘பண்பு’, ‘பாராட்டு’, ‘நாகரிகம்’ எனும் சொற்களுக்கு அறிவுபூர்வமாகச் சரியான விளக்கம் ஒரு போதும் சொல்ல இயலாது; உணர்வை வேண்டுமானால் ஓரளவு புலப்படுத்தலாம்.

இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் அரசியல், சமுதாயக் காழ்ப்புணர்வுகள், சுயநல வேட்டைகள் முதலியவை காரணமாகப் பண்புகள் அருகி வருகின்றன என்பது ஓரளவு ஏற்கத்தக்கதுதான் என்றாலும் பாராட்டும் பண்பினைச் சிறு வயது முதலே ஊக்கியும் போற்றியும் வளர்க்க வேண்டியது அனைவரின் அன்றாட வாழ்வுப் பொறுப்பே ஆகும். நலம் கண்ட இடத்துப் பாராட்டுவது பண்புடையாரிடம் மட்டும் காணப்பெற்றால் போதாது. பலரிடம் பரவ வேண்டும்.”

பண்பு பாராட்டும் பக்குவம்

புலவர் ஒருவர்

“‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு’ (994) எனும் தமிழ்மறை, அறிவுடையோர் பண்பு பாராட்டுவதே சிறப்பு என அறிவுறுத்துகிறது. எல்லோரும் பாராட்ட முற்பட்டால் அறிவுடையோராகவும், ஆட்சித் திறத்தை ஊக்குவிப்போராகவும் வளரலாம்; தாமும் உயர்ந்து, நாட்டோரையும் உயர்த்தலாம். பாராட்டு வோரிடத்திலும் அதனை ஏற்போரிடத்திலும் பாராட்டுதல் எனும் பண்பு மேன்மேலும் சிறந்தோங்கிடவே துணை புரியும்.”

தமிழ்ச் சங்கக் கல்லூரிப் பேராசான்

“பாராட்டு எனும் போது என் நினைவில் படரும் இரு சங்கப் பாடல்களின் செய்திகளைச் சுருக்கமாகச் சொல்ல எனக்கு இந்த நிலா முற்ற அவை இசைவு தர வேண்டும்.”

ஒருவர்

“நிலா மறைந்து பொழுது விடிவதற்குள் சொன்னால் தூங்கி விடாமல் கேட்போம்… புலவரய்யா… புறநானூற்றிலேயே எங்களை மூழ்கடித்துவிடக்கூடாது” (சிரிப்பு)

பேராசான்

“நான் அகத்துறை நற்றிணைப் பாடலில் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல் ஒன்றின் கருத்தைச் சொல்ல விழைந்தேன். போருக்குச் சென்ற வீரன், ஆற்றலோடு போர் முடித்து வெற்றி வீரனாகத் தன் மனையாளைக் காணக் குதிரை பூட்டிய தேரில் விரைந்திடும் காட்சியை, ஒக்கூரார் ஓவியமாக்கி உள்ளார். ‘வாயு வேகம் மனோ வேகம்’ என விரைந்து வந்திட அவனுக்கு உதவிய தேரோட்டியையும் குதிரைகளையும் செய்வினை முடித்த செம்மல் உள்ளத்தோடும், புரிந்த காதலொடும் வந்த அவன் ‘போர் முடித்துத் தேரில் ஏறியதைத் தான் அறிவேன்; ஆனால் இவ்வளவு விரைவில் வந்தது எப்படி என அறியேன். என்னப்பா..! வானில் சுழலும் காற்றைக் குதிரைகளாகப் பூட்டிவந்தாயா! அல்லது மனத்தைப் பூட்டி வந்தாயா?’ என வியந்து கேட்கும் அளவுக்கு விரைந்து வந்து இறங்கிக் காலமெல்லாம் காத்திருந்த தன் மனையாளை மார்புடன் கட்டி அணைத்துக் கொள்ளுகிறான்… இது மாசாத்தியார் வெற்றி வீரன் ஒருவன் தன்னிலும் நிலை தாழ்ந்த குதிரைச் சாரதியை மனதாரப் பாராட்டுவதாக அமைத்த அரிய காட்சி. அதுபோல, ‘யான் கண்டனையர் என் இளையரும்’ எனப் பிசிராந்தையார் எனும் புறநானூற்றுப் பெரும்புலவர் தம்மினும் இளைஞரைப் பெருமையுறப் பாராட்டினார். முதுமையிலும் கவலையால் நரை முடி படராது எனச் சான்று காட்டினார். எனவே ‘யார் யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றாற் போல, யார் சிறந்த பணி செய்தாலும் சிந்தை குளிரப் பாராட்டும் சிறந்த மனம் வேண்டும். ‘சின்னப் பசங்க தானே..?’ என அலட்சியப்படுத்துவதால், அவர்கள் பெரியவர்களைத் தாமும் அலட்சியப்படுத்துவதில் கைதேர்ந்தவர் களாகி வருவது சமுதாயக் காட்சியாகி விட்டது.”

ஒருவர்

“சிறிய வயதினர் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துச் சீர்பெறுவதும், சீரழிவதும் ஒருபுறம் இருக்கட்டும். பெரியவர் களாகிய நம்மில் பலர் நடத்தும் பாராட்டு விழாக்களின் பரிதாபக் காட்சியைப் பலமுறை கண்டு வியந்து பயந்தே போன அந்த அதிர்ச்சியில் சொல்கிறேன்.”

இன்னொருவர்

“எங்களுக்கும் அதிர்ச்சியூட்டாமல் சொல்லுங்கள்.”

புகழோசையா? விளம்பர இரைச்சலா?

பெரும்புலவர் தொடருகிறார்

“இன்று சிறந்த சாதனை புரிந்தமைக்காக ஒருவரை உரிய முறையில் பாராட்டுவதை அனைவரும் வரவேற்பது முறைமை. ஆனால் என்ன நடக்கிறது? சாதாரணமான அற்பக் காரியத்தைக்கூட, விளம்பரத்தால் மிகைப்படுத்தி சம்பந்தப்பட்டவரிடமும் பிறரிடமும் நன்கொடை வசூலித்துப் ‘பாராட்டு விழா’ எனும் பெயரில் ஒரு பகட்டு விழாவை நடத்தி, தானும் ‘சாதனை யாள’ரோடு முதல் வரிசையில் நின்று, புகைப்படம் எடுத்து, மறுநாள் பத்திரிகையில் அதைப் பிரசுரிக்கக் கண்டு மனச்சாந்தி பெறும் ஒரு மாயையே இன்று பாராட்டாக, புகழாக உலா வருகிறது என்பது என் கருத்து.”

ஒருங்கிணைப்பாளர்

“இந்தக் கருத்தை நம் மூதறிஞர் மு.வ. ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை நிலா முற்ற அவையின் கவனத்திற்குக் கொணர்கிறேன்.

பொருளும் புகழும் வாழ்வுக்குத் தேவை. ‘புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்’ என்ற வள்ளுவர், ஒருவர் மறைவுக்குப்பின்னர் தாம் பெற்ற மக்களைப் போல அவருக்கு எஞ்சி நிற்கப்போவது அவர் ஈட்டும் புகழே என வலியுறுத்திச் சொல்லியுள்ளார்.”

ஒருவர்

“வள்ளுவர் ‘புகழெனும் எச்சம்’ என்றே குறிக்கிறார்: ‘இசையெனும் எச்சம்’ (238): அன்பரின் நினைவூட்டலுக்கு நன்றி. ஆனால் வள்ளுவர் காலச் சமுதாய வாழ்வு ஊரளவில் – கிராம அளவில் – சுருங்கியதொரு குடிமை வாழ்வாக இருந்தது. எனவே ஒருவர் புகழுக்கு உரியவர் தானா என ஒரு சாதனையாளரை உண்மையிலேயே நேரிடையாகக் கண்டறிந்து போற்றிப் பாராட்டு வதையும் அதைச் சமுதாயத்தவர் ஒருமனமாக ஏற்பதையும் உணர முடியும். ஆனால், போலிப் புகழ் ஊர்வலங்கள் இன்று, உலகின் நாலா திசையிலும் ஒரு வகையில் விரிந்துள்ளன; இன்னொரு வகையில் உலகம் கைக்குள் அடங்கு மாறு சுருங்கியும் உள்ளது. இன்றுள்ள அறிவியல் சாதனத் தொடர்புப் பெருக்கத்தின் காரணமாக ஒரு வினாடிக்குள் ஒருவர் உலகப் புகழுக்கோ அல்லது உலகின் கவனத்துக்கோ கொணரப் பட்டு விடுகிறார்.”

இடைமறிக்கும் ஒருவர்

“அதை கின்னஸ் சாதனை எனப் பதிவு செய்கிறார்கள். அப்புறம் இன்னொருவர் அந்த நுனியைத் தொட்டவுடன் முந்தையவர் பெயர் காணாமல் போய்விடுகிறதே, அது புகழா? போலியா?”

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைக்குப் புகழ், பாராட்டு என்பதெல்லாம் பணபலமோ, ஆட்பலமோ உள்ளவர்களின் கைக்கருவியாகி விட்டது உண்மை. செய்தித் தாள்கள் போன்ற ஊடகங்கள் அவர்களுக்கு விலைபோகி விடுவதும் மறுக்க முடியாத நடைமுறை. அவையோர்க்கு இங்கே ஒன்றை நினைவூட்டுவது என் கடமை. மேலும், இது குறள் நிலா முற்றமாக இருப்பதால், புகழ் – போலி என்பதைப் பற்றிய வள்ளுவர் கருத்தைச் சுற்றி வருவதைவிட, வள்ளுவப் பெருந்தகை புகழுக்கு ஊறு செய்பவை என எவ்வெவற்றைப் பட்டியலிட்டாரோ அவற்றையும் இன்றைய வாழ்வோட்டத் தோடு கருதிப் பார்க்கலாம்.”

இடைமறித்த ஒருவர்

“மன்னிக்கவும்… மொழிபெயர்ப்பு முறைகள் – முரண்பாடுகள் பற்றிக் கூற எனக்குப் போதிய ஞானம் இல்லை; ஆனால் குறள் கூறும் கருத்துக்களில் ஆங்காங்கே பல என்று சொல்லாவிட்டாலும் சில முரண்கள் தோன்றுவதாக என் சிற்றறிவு சுட்டுவது உண்டு.”

மற்றோர் அன்பர்

“‘குறளில் முரண்பாடு’ என்று இவர் புதிய சர்ச்சையைக் கிளப்புகிறாரே..?”

ஒருங்கிணைப்பாளர்

“சர்ச்சைகள், சந்தேகங்கள் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? .. குறள் கூறும் செய்திகளில் முரண்கள் இருப்பது போலத் தோன்றுவதும் உண்மை என அறிஞர்கள் சிலர் கருதியது உண்டு. அவற்றையும் நிலா முற்றத்தில் சிந்தித்துச் சிறந்ததைப் பாராட்டுவோம், சிறப்பில்லாததைச் சீராக்குவோம்.”

ஓர் அன்பர்

“ஐயா… இந்த முரண்பாட்டிற்குள் நுழைந்தால் நம் வயிறுகள் முரண்பாடு செய்யும் போலத் தோன்றுகிறது. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். செவி நிறையக் கேட்டு விட்டோம். வயிற்றுக்கு ஏதேனும் வருமா எனப் பாருங்கள். வயிறு கிள்ளுகிறது” (சிரிப்பலை)

மற்றோர் அன்பர்

“அதோ.. உணவுப் பண்டங்களின் வரிசை வைப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? இரண்டு வரிசை இருக்கிறது! அதென்ன இரண்டு வரிசை? ஒன்று சைவம்; மற்றொன்று அசைவம்.”

ஒருங்கிணைப்பாளர்

 

“செவிக்கு இனிய உணவோடு நாவிற்குச் சுவையான அமுதும் அளித்தமையை உளமாரப் பாராட்ட வேண்டும்.”

 

“சிறிய வயதினர் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துச் சீர்பெறுவதும், சீரழிவதும் ஒருபுறம் இருக்கட்டும். பெரியவர் களாகிய நம்மில் பலர் நடத்தும் பாராட்டு விழாக்களின் பரிதாபக் காட்சியைப் பலமுறை கண்டு வியந்து பயந்தே போன அந்த அதிர்ச்சியில் சொல்கிறேன்.”

இன்னொருவர்

“எங்களுக்கும் அதிர்ச்சியூட்டாமல் சொல்லுங்கள்.”

புகழோசையா? விளம்பர இரைச்சலா?

பெரும்புலவர் தொடருகிறார்

“இன்று சிறந்த சாதனை புரிந்தமைக்காக ஒருவரை உரிய முறையில் பாராட்டுவதை அனைவரும் வரவேற்பது முறைமை. ஆனால் என்ன நடக்கிறது? சாதாரணமான அற்பக் காரியத்தைக்கூட, விளம்பரத்தால் மிகைப்படுத்தி சம்பந்தப்பட்டவரிடமும் பிறரிடமும் நன்கொடை வசூலித்துப் ‘பாராட்டு விழா’ எனும் பெயரில் ஒரு பகட்டு விழாவை நடத்தி, தானும் ‘சாதனை யாள’ரோடு முதல் வரிசையில் நின்று, புகைப்படம் எடுத்து, மறுநாள் பத்திரிகையில் அதைப் பிரசுரிக்கக் கண்டு மனச்சாந்தி பெறும் ஒரு மாயையே இன்று பாராட்டாக, புகழாக உலா வருகிறது என்பது என் கருத்து.”

 

( தொடரும் )

 

குறள் நிலா முற்றம் – 1

குறள் நிலா முற்றம்

 

பாகம் : 1

Image result for குறள் நிலா முற்றம்

ஒருங்கிணைப்பாளர்:  

 

‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன்

 

 

 

ஏற்பாடு : மதுரை வானொலி நிலையம்

‘வழிபாட்டு நூலா? வழிகாட்டும் நூலா?

திருக்குறள் நாம் வாழும் காலச் சூழ்நிலைக்கெல்லாம் பொருந்தும் வகையில் நம் முன்னர் எழும் சமூகச் சிக்கல்களுக்குத் தக்க தீர்வைத் தருமா? படித்துச் சுவைத்து நுகர்வதற்கு உரிய இலக்கியமாக மட்டுமே நீடிக்குமா? அல்லது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் சமுதாயத்திற்கும் தனி நபர்களுக்கும் பொருந்தும் வகையில் வழிகாட்டுமா? அது கைகூப்பித் தொழும் வழிபாட்டு நூலாகப் போற்றப்படுகிறதா? அல்லது நம்மைக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் வழிகாட்டு நூலாக ஏற்கப்படுகிறதா? மனிதர்களிடையே இயல்பாக உள்ள முரண்களைப் போலத் திருக்குறள் கூறும் வாழ்வியல் சிந்தனைகளிலும் முரண்கள் இருப்பது போலத் தெரிகிறது. அவையெல்லாம் உண்மையிலேயே முரண்பாடுகளா? அல்லது தெளிவுறு மனத்தோடு சிந்தித்தால் அம்முரண்களினூடேயும் வலுவான அரண் போன்ற கோட்பாடுகள் அமைந்திருப்பதைத் தெளிந்து கொள்ள முடியுமா?… எனப் பல்வேறு சிந்தனைக் கீற்றுகளுடன் நிலா முற்றத்தில் அறிஞர் அவை கூடியிருந்தது.

நீலவான் ஆடைக்குள் முகம் மறைத்திருந்த நிலவு, மேகத்திரள் தாண்டி மேலெழுந்து தன் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுவது போல, மெல்லென அதிர்ந்த மின்னல் போலத் தொடங்கிய நிலா முற்ற அரங்கு, நேரம் ஆக ஆகக் கூடியிருந்த அறிஞர் பெருமக்களின் கலந்துரையாடலாலும் கருத்து மோதல்களாலும் விளக்கம் பெறத் தொடங்கிவிட்டது. தனிப்பேச்சு, கருத்தரங்கம், பட்டிமன்றம் எனும் முப்பரிமாணம் கொண்ட முற்றமாக அது பயன் நல்கலாயிற்று.

திருக்குறள் தமிழ்மொழியில் தோன்றியமை நம் தமிழ் பெற்றதொரு வரலாற்றுப்பெருமை. பாரதியாரைப் போற்றிப் பாடிய பாவேந்தர் பாரதிதாசன்,

“என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!

     தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்,

     தமிழால் பாரதி தகுதி பெற்றதும்…!”

என வியந்து முடிவுரை கூறியதைப் போல…

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே  தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

எனப் பாரதிப் புலவரே வள்ளுவத்தால் தமிழ் மொழியும் நாடும் பெற்ற உலகப் பெருமைக்கு முத்தாய்ப்பிட்டுப் பாடிவிட்டார்.

‘தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி, வழிவழியாக வாழ்வு பெற்று இன்றும் வழக்கில் உள்ளது எனப் போற்றிப் பாராட்டப் பெறும் பெருமைக்குரிய ஒரே நூல் திருக்குறள்’ எனப் பழங்கதை போலப் பேசி வருகிறோம்; நமக்குள்ளே மகிழ்கிறோம். இந்தச் சிறப்பு திருக்குறளுக்கு உண்மையிலேயே பொருந்துமா? அல்லது ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என நமக்கு நாமே கூடிப் பேசிக் கலைகிறோமா? எனச் சிலர் வினாத் தொடுத்திட, நிலா முற்றம் களைகட்டியது.

இடைமறித்த பேராசிரியர்

“திருக்குறளின் கருத்து கால எல்லை க்கு உட்பட்டதல்ல. காலம் கடந்த தத்துவங்களையும் சமுதாயச் சிந்தனைகளையும் நடைமுறைப்படுத்த வல்ல செயல் நூல் அது. பகவத் கீதை, விவிலியம், திருக்குர்ஆன் போன்ற சமய நூல்களைப் போல உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்புச் செய்யப் பெற்றுள்ள ஒரே வாழ்விலக்கிய நூல் அது ஒன்றுதான். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு எனும் வரையறைகளைக் கடந்து உலக மெல்லாம் தழுவிக் கொள்ளத்தக்க தகுதியுடைய பொது நூல். அது மனித குலத்தின் நீதி நூல்; வாழும் நியதி நூல்.”

மற்றோர் அறிஞர்

“வள்ளுவத்தில் அதிசயங்களோ, அற்புதங்களோ, சூத்திரங்களோ, சூட்சுமங்களோ இல்லை; அன்று வள்ளுவர் வரைந்தளித்ததை இன்று நாம் அப்படியே கையாள முடியவில்லை என்றால், அது நூலின் பிழையில்லை; நம் இன்றைய சமூக வாழ்வின் பிழை. நாம் மனிதத் தன்மையிலிருந்தும் மனிதப் பண்பிலிருந்தும் நெடுந்தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே இந்தப் பிழைக்குக் காரணம்.

நமது பிள்ளைகளுக்கு அளிக்கப்பெறும் கல்விக்கும் அவர்களோடு நாம் வாழும் வாழ்க்கைக்கும் இன்று உள்ள உறவு ‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவு’ போலத்தான் உள்ளது! (சிரிப்பு)….

நம் வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் முழுமையாய்ப் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை, அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி.

சாதாரண மனிதன் கூட, நடை பயிலக் கூடிய எளிய அற நெறியையே வள்ளுவர் கூறினார்; அதையும் தனித்தனி அதிகார வரம்பிற்குள் நின்று, எளிய முறையில் கூறினார்.

திருக்குறள் ஒரு வாழ்க்கை அனுபவ விளக்கம். வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் கண்டறிந்த, உற்றறிந்த உணர்வோடு தொகுத்துச் சொல்லும் கையடக்க ஏடு. அதிகாலைப் பனிப்பொழிவால் தரையில் படர்ந்துள்ள புல்லின் இதழ் நுனியில் தூங்கும் அந்தப் பனித்திவலையைச் சற்று உற்றுப் பார்த்தால், அதில் வானத்து விளிம்பு முழுதுமே தெரியும். அதைப் போல ஒரு குறட்பாவைப் படித்தாலும் போதும்… அது தான் பேச வந்த ஒரு பொருள் பற்றிய விரிவெல்லை முழுவதையுமே நமக்குக் காட்டிவிடும்…”

கூட்டத்தில் ஒருவர்

“ஒவ்வொரு குறட்பாவும் பனித்துளி காட்டும் பளிங்கு மா மண்டபம் என்பது அழகான உவமை.”

ஒருங்கிணைப்பாளர்

“இப்போது வள்ளுவரைப் பற்றி எனக்கு வேறொரு உவமை சொல்லத் தோன்றுகிறது…! திருவள்ளுவர் சமுதாயத்தில் பல்வேறு துறைகளையும், நிலைகளையும் ஆய்ந்தறிந்து, நாட்டில் அதுவரை பரவியிருந்த அறிஞர் மற்றும் புலவர்தம் கருத்துக்களையும் கேட்டு, படித்து, அறிந்து, தெளிந்து, எல்லாவற்றையும் நினைவில் கொண்டு, வள்ளுவத்தைச் செய்திருக்கிறார். மிகச்சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றியிருக்கிறார். அவர் ஒரு கைத்திறமிக்க ‘சொல் தச்சராகவே’ – ‘கருத்துச் சிற்பியாகவே’ இன்றும் நமக்குத் தோன்றுகிறார்… மக்கள் அள்ளித்தெளித்த கோலம் போல இன்று வாழ்கிறார்கள்… வள்ளுவர் அன்றே எழுதிய குறட்பாக்களைப் புள்ளிகளாக்கிப் புதுக்கோலம் புனைந்துள்ளார்…. இல்லத்து முன்றிலில் விடிகாலை தோறும் கோலமிட்டு மனைவிளக்கம் தரும் மங்கையர் பணி போல, வாழ்வில் அன்றாடம் நாமும் நல்லாடை புனைதல் போல, புதுப்புதுக் கருத்துப் பொலிவால் புதுநலன்கள் பெறுவோம்; புத்துணர்ச்சி பெருகக் காண்போம். ஒவ்வொரு நாளையும் ஒரு திருநாள் போலக் கருதி, புதுமலர் போலச் சூடி அன்றாட வரலாற்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும் – அகம் – புறம் எனும் இரு நிலைகளிலும் – வளர்ச்சிக்கு உரிய மாற்றங்களை வழங்குவதே குறளின் நிலைபேற்றிற்கும் நீடு புகழுக்கும் காரணம்.

உலக சமுதாயங்களில் புறத்துறை வாழ்வில் புரட்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பது வரலாறு. ஆனால் அகம் – புறம் எனும் இரு துறைகளிலும் சமச்சீரான மாற்றங்களைச் செய்து, பிறருடன் இணங்கி, ஏற்றமுற வாழ வழிகாட்டிய சான்றோர் மட்டுமே உலக நாகரிகத்தை உருவாக்கியவர்கள். அத்தகையோர் எண்ணிக் கையில் மிகச்சிலரே ஆயினும் அவர்களால் தான் இன்றளவும் உலகம் புதுப்புதுச் சிந்தனை மலர்களால் தன்னைச் சிங்காரித்துக் கொள்கிறது.”

இடைமறித்த ஒரு பேராசிரியர்

“உலக நாகரிகத்தை, சிந்தனைச் செல்வத்தை உருவாக்கிய சான்றோருள் திருவள்ளுவர் தலையாயவர் என இங்கே எதிரொலித்த செய்தி கேட்டு என் செவிகள் எல்லாம் இனித்தன… உங்கள் செவிகளும் இத்தேனினு மினிய கனிகளை நுகர்ந்திருக்கும்…”

புலவர்

ஐயா அவர்கள் ‘செவிநுகர் கனிகள்’ எனும் கம்பன் வாக்கைத் தான் நினைவூட்டுகிறார்.

கம்பன் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளுக்கு விளக்கவுரை போலச் செய்துள்ளதைத் தான் நினைவூட்டினேன்; குறளின் சூத்திரங்களைக் கம்பன் தன் பாத்திரங்கள் வாயிலாகப் பேசினான்!

தமிழுக்குக் ‘கதி’ எனக் கம்பரையும் திருவள்ளு வரையும் சொல்வது அதனால்தான் வந்தது…”

இன்னொருவர்

“சரி… சரி… குறள் முற்றத்துக்கு வருவோம்… கம்பரும் வள்ளுவரும் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் என்றென்றும் நிலைபெறச் செய்தார்கள். தமிழர்களாகிய நாம் செய்த தவம் அது ஒன்று போதும்.

தமிழ் முனிவர் திரு.வி.க. அன்று சொன்னதை இந்த நிலா முற்ற அரங்கில் நினைவூட்ட விரும்புகிறேன்.”

பேராசிரியர்

“சொல்லுங்கள் சுருக்கமாக.”

“திருவள்ளுவரின் பிறப்பு வளர்ப்பு பற்றிய உண்மை வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. அவரது வரலாறு சொல்லப்படுகிறது. அவற்றுள் பெரும்பாலானவை வெறும் புனைந்துரைகள், கற்பனைகள் என விட்டுவிடலாம். வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இல்வாழ்க்கையில் நின்று ஒழுகியவர் என்பதும், மக்களை ஈன்று புறந்தந்தவர் என்பதும், அறவோர் என்பதும், தெய்வப் புலவராகப் போற்றப்பட்டவர் என்பதும் அவர் அருளிய நூலால் இனிது விளங்குகின்றன” என்கிறார் திரு.வி.க.

மற்றொரு பேராசிரியர்

“அதனால்தான் திரு.வி.க. அவர்களின் மாணவராகத் தம்மை வரித்துக் கொண்டு வாழ்ந்த அறிஞர் மு.வரதராசனார் தாம் எழுதிய நூலுக்குத் ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ எனப் பொருத்தமாகப் பெயரிட்டார்…

ஒருங்கிணைப்பாளர்

“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா?”

 

( தொடரும் )

குறள் நிலா முற்றம்

குறள் நிலா முற்றம்

 

Image result for குறள் நிலா முற்றம்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’

எனப் பாரதியார் பாடியது வெறும் புனைந்துரை இல்லை. வள்ளுவரது நெஞ்சமும் உலகோர் வாழ்வியல்பும் ஒரு தராசில் சம எடையாக நிறுத்தளந்தது போல், ஒரு சீராக நிற்பதைக் கண்டறிந்து கூறிய புகழுரை. வள்ளுவமே சமுதாயம் முழுவதற்கும் உரிய சரியான வாழ்க்கை விளக்கம் என அறுதியிட்ட தீர்ப்புரை.

திருவள்ளுவர் தமிழ்நாட்டிலே பிறந்தார். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மண்ணோடும் மரபோடும் ஒன்றிக் கலந்து உருவாகியிருந்த பண்பாட்டுச் சிந்தனைகளால் உரம் பெற்று வளர்ந்தார். அந்த வளர்ச்சியின் பயனாகக் குறட்பாக்களை வித்துக்களாக்கி ஈந்து உதவினார். அந்த வித்துக்கள் உலகின் எந்தச் சமுதாயப் புலத்தினும் ஊன்றிச் செழித்தோங்கும் இயல்புடையவை; அந்த முத்துக்கள் ஒவ்வொருவருக்கும் அணிகலனாக அழகு சேர்க்கக்கூடிய தனிச்சிறப்புடையவை.

வள்ளுவர் ஒரு நாட்டில் பிறந்தவர் எனினும் உலகச் சிந்தனையாளர். ‘மக்கள் எல்லோரும் ஒரு குலம்; மாநிலம் முழுவதும் ஒரு வீடு’ எனும் பரந்த நோக்குடையவர். கிரேக்கத்து அரிஸ்டாட்டிலைப் போல – பண்டைய இந்தியாவின் ஆதிமனுவைப் போல – அகிலப் பார்வை யுடையவர்; அறிவியல் – ஆன்மீகம் – மார்க்சியம் – காந்தியம் எனப் பல்துறைச் சார்புப் போக்கினர்க்கும் பொதுநலம் கூறும் சால்புடையவர்.

நூல்கள் இரு வகைப்படும் எனஅறிஞர் கூறுவர். எழுதப்பட்ட காலத்திற்கே நம்மைக் கூட்டிச் செல்வன முதல் வகை: நாம் வாழும் காலத்திற்குத் தாமும் உடன் நின்று வழி காட்டுபவை இரண்டாம் வகை.

திருக்குறளில் முதல் வகைப் பாங்கு ஓரளவிற்கும் இரண்டாம் நிலைப்பேறு பேரளவிலும் இணைந்திருப்ப தாக அறிஞர்கள் அரங்கு கூட்டிப் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்குத் திருக்குறள் வற்றாத ஊற்றாக, வளங்குன்றாத சுரங்கமாகப் பயன் தந்து கொண்டே இருக்கிறது.

என்றாலும் திருக்குறளை வாழ்க்கை விளக்கமாக ஏற்போரிடம் ஓர் ஐயம் அவ்வப்போது ஏற்பட்டு வருவதையும் மறுப்பதற்கு இல்லை.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால்

     இல்லாத எப்பொருளும் இல்லையால்”

என அன்று பாடிய திருவள்ளுவ மாலை இன்றைக்கும் வாடாத மாலை ஆகுமா? எனக் கேட்டு, நமது வாழ்க்கைப் போக்கிற்கெல்லாம் திருக்குறள் துணையாக வந்து விடுமா?  அவரவர் வாழ்க்கைக்கெல்லாம் வள்ளுவம் உதவுமா? என்பதோடு ஒவ்வொருவர் வாழ்வுக்கும் வள்ளுவம் வழி காட்ட வேண்டும் எனும் ஆர்வமும் தலைதூக்கி நிற்கிறது.

வள்ளுவத்தை மட்டுமல்ல, சமயப் போதனைகள், மார்க்சியம், காந்தியம் ஆகிய உண்மைகள் அனைத்தையும் வாழும் காலம் எனும் உரைகல்லில் உரசிப் பார்த்து எடை போட்டு அறியவே விழைகின்றனர்.

காலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை. காலத்தின் மாறுதல்கள் உடைமாற்ற நாகரிகங்களைப் போன்றவை; அடிப்படை உண்மைப் பண்புகள் உயிரைப் போன்றவை என்பர் அறிஞர்.

‘காந்தியக் கதராடையே சோபிதம்’ எனப் பாடிய காலம் சடுதியில் மாறியுள்ள சூழலில், வள்ளுவப் பழைய உடை இன்றைய புதுயுகத் தேவைக்கெல்லாம் பொருந்துமா எனக் கேட்டுப் பார்ப்பதில், எடைபோட்டுப் பார்ப்பதில் தவறில்லை.

‘நாம் வாழும் இந்தக் காலத்திற்கு வள்ளுவம் வழி காட்டுமா?’ என்பது பயனுள்ள கேள்வியே ஆகும்.

இக்கேள்விக்குப் பலரை ஒருங்கு கூட்டி, விவாதப் பொருளாக இதை முன்வைத்துப் பயன்தர மதுரை வானொலி புதுமையான நிகழ்ச்சியை ஒரு சரமாகத் தொடுக்க முனைந்தது. நிகழ்ச்சிகளை வானொலி அரங்கில் இருந்தே ஒலிபரப்பும் பழைய முறையை மாற்றி ‘வாசலுக்கு வரும் நேசக் கரங்களை’ நீட்டி நிகழ்ச்சிகளை அமைக்கும் புதுமையை அரங்கேற்றியது. அதில் ஒன்று நிலா முற்றம்.

‘நீலவான் ஆடைக்குள் ஒளி மறைத்து

     நிலாவென்று முகம் காட்டும்’

வளர்பிறை, மாதந்தோறும் முழுமதியாக வானக் காட்சி தருவது. வீட்டுவெளியில் வந்து அண்ணாந்து பார்த்து மகிழவோ வியக்கவோ நமக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை – விருப்பம் இருப்பதில்லை.

வீட்டு அறைக்குள் அமர்ந்து உண்ணும் சாப்பாட்டை நம் வீட்டு முற்றத்திலேயே பிள்ளைகளுடன் குடும்பத் தாருடன் ஒன்றாய் அமர்ந்து குலவிப் பேசி அதை நிலாச் சோறாக உண்பதிலும் நாட்டம் கொள்வதில்லை! இயற்கையை ரசிக்க எங்கெல்லாமோ பயணம் போகிறோம். வீட்டிற்குள்ளேயே – வீட்டருகே வலம் வரும் விந்தைகள் கூட நம் கண்ணிலோ மனத்திலோ படுவதில்லை; படிவதில்லை.

திருக்குறள் சிந்தனையைப் பலரது கருத்திலும் படரச் செய்யக் கருதிய வானொலி நிலையம் அதை நிலா முற்ற விருந்தாக, அரங்காகக் கூட்டியது.

அந்த அரங்க அமைப்பினை என் வீட்டு முற்றத்தில் நிலா விருந்தாக்கிட நான் விழைந்தேன். மதுரைத் தமிழ் அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அழைத்து வர வானொலியார் இசைந்தார்.

என் இல்லத்து விரிந்த முற்றத்தில் திருக்குறள் நிலா முற்றம் கூடியது.

‘குறள் நெறிகள் நம் காலத்திற்குப் பொருந்துமா?’ எனும் தலைப்பில் விவாத மேடைச் சிந்தனைகளைத் தொகுத்து ஒரு சரமாக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப் பட்டது.

இளமைப் பருவம் முதல் குறட்பாக்களில் சிந்தை மயங்கி வளர்ந்து குறள் கருத்துக்களைச் சமுதாயப் பொது உடைமை ஆக்கிப் பரப்பும் ‘உலகத்திருக்குறள் பேரவை’ யின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றிருந்த எனக்குக் குறள் பற்றிய அறிஞர் பெருமக்களின் சிந்தனைகளோடு இணையும் இனிய வாய்ப்பு இது எனக் கருதினேன்.

குறள் நிலா முற்ற அரங்கு கூடியிருந்தது.

திருக்குறள் பேரவையின் தமிழ்நாட்டமைப்பின் துணைத்தலைவர், செயலாளர், பல கிளைப் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், புலவர்கள், அரசு உயர்நிலை அலுவலர்கள், சமூக இயக்கச் சிந்தனையாளர்கள், நாட்டுநலத் தொண்டர்கள் என ஒரு பிரதிநிதித்துவப் பேரணி போலக் கூடி இருந்தது அவை.

வானத்திலே முழுமை நிலா, அழகு நிலா மேலெழுந்து கொண்டிருந்தது. நிலா முற்ற அரங்கில் குறள் நெறிச் சிந்தனைகள் அறிஞர்களிடையே உலா வரத் தொடங்கின. இந்த நிலா முற்ற விருந்தில் குறள் அமுதம் அருந்திட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இந்நூல் சிறப்புற வெளிவரப் பெரிதும் துணையாக, இருந்த பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் இரா.மோகன் ஆகியோருக்கும், அணிந்துரை நல்கிய வணக்கத்திற்கு உரிய மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார், மூதறிஞர்.தமிழண்ணல், இசைவாணர் எஸ்.மோகன்காந்தி ஆகிய சான்றோர்களுக்கும் எனது இதய நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.

ந.மணிமொழியன்

பொதுச்செயலாளர்

உலகத் திருக்குறள் பேரவை

வழிகாட்டும் மணிமொழியம்

Image result for மணிமொழியன்

 

வழிகாட்டும் மணிமொழியம்

 

  1. எனது திருக்குறள் ஈடுபாட்டு வளர்ச்சிக்கு உதவியவை இரண்டு; ஒன்று, நான் பெற்ற பேறு; மற்றொன்று, எனக்கு அமைந்த வாய்ப்பு.
  2. ஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்து வந்தன. வாழ்வின் புதிய அனுபவங்களுக்கு உட்பட்ட போதெல்லாம் வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான்விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின.
  3. மேலை நாடுகளிலே ஒருவருக்கு ஒருவர் பேசுகின்ற சமயத்திலே பொறுமையாகவும் முழுமையாகவும் மற்றவர் பேச்சைக் கவனிக்கின்றார்கள். ஒரு செய்தியைச் சொல்லும் போது இடையில் யாரும் குறுக்கிடுவது இல்லை. மென்மையாகப் பேசுகின்றார்கள். பேசி முடித்தவுடன் தங்களுடைய உடன்பாட்டையோ மறுப்பையோ இதமாக நயம்படக் கூறுகிறார்கள். சில சமயம் உடன்படாக் கருத்துக்களுக்கு மௌனமாக ஒரு புன்னகை செய்து விட்டுவிடுகின்றனர். இவை எல்லாம் எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தன.
  4. உலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும்போது மட்டும் ஊர் கூட்டி முழக்க மிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவது தான் நம் வழக்கம்.
  5. வள்ளுவர் நம் மொழியில் எழுதினார். ஆனால் அதனை நம்மைவிட, கிழக்கே ஜப்பானியரும், மேற்கே அமெரிக்கருமே போற்றி வாழுகின்றார்கள். வள்ளுவம் அங்கெல்லாம் வாழுகிறது! நன்றாக வாழுகிறது!
  6. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப் பாரதியார் பாடினார். முதன்முதலாகத் திருக்குறளை, மேலைய உலகிற்கு வழங்கி அறிமுகப்படுத்தும் பணியைக் கூட நாம் செய்யவில்லை. தமிழ் உணர்வறிந்த மேலை நாட்டு அறிஞர்கள் எடுத்துச் சொன்ன பின்னரே திருக்குறள் பல மொழிகளில் உலகறியத் தொடங்கியது.
  7. பலருக்கும் பல வகையில் பயன்படும் சிறப்பு வாய்ந்த தனிப்பொது நூலாகிய திருக்குறளை இலக்கியமாகக் கருதிக் கலைநயம் காணலாம்; ஒழுக்க நூலாகப் பேணலாம்; அரசியல் நூலாகப் படிக்கலாம். காலம் மாறினாலும் அடிப்படை அறங்கள் மாறுவதில்லை எனும் பேருண்மையை அறியலாம்.
  8. இன்றைய வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்கள்; புதுப்புதுப் பிரச்சினைகள். இவற்றிற்கெல்லாம் தீர்வு தேடி அலைவதே ஒரு பெரிய வாழ்க்கைப் போராட்ட மாக உள்ளது. தக்க தீர்வுகளைத் தேடுவார்க்குத் திருக்குறள் வழிகாட்டுகிறது.
  9. எக் காலத்திற்கும், எந்தச் சூழலுக்கும் பொருந்தும் வகையில் வாழ்க்கை அறம் வகுத்திருப்பதே வள்ளுவத் தனிச்சிறப்பு.
  10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.
  11. ‘உலகம் ஒரு குலம்’ என்பதே திருக்குறளின் உயிரோட்டம். உலகம் ஒரு குலமாக விளங்க வேண்டும் எனில், அந்த உயிரோட்டத்திற்கு, அன்பு எனும் குருதியோட்டம் நிலையாக இயங்குதல் வேண்டும். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதே வள்ளுவத்தின் நிலையான குருதியோட்டம்.
  12. குறள் முழுவதிலும், பல்வேறு மாந்தருக்கும் நிலைக்கும் ஏற்றவாறு, வெவ்வேறு நடைத்திறங்களைக் கையாளும் வள்ளுவச் செம்மல், ‘உண்ணற்க கள்ளை’ எனத் தீய பழக்கத்தைக் கைவிடுமாறு, வியங்கோளாக வேண்டுதல் நடையில் கூறிய வள்ளுவர், இங்கே, ‘செய்க பொருளை’ என ஆக்க நெறிக்கு ஆட்பட வருமாறு கட்டளையிடுகிறார்; கண்டிப்பாக வற்புறுத்து கிறார்.
  13. திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனிநபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்
  14. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட் பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனிநாட்டை விட, உலகு என்பது பெரியது அல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பது அல்லவா?
  15. ‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்நான்கும், இழுக்கா இயன்றது அறம்’ (35) என மனதில் பாசு படியாது பளிங்கு மாடம் போல வள்ளுவர் வலியுறுத்தி இருப்பது – இன்றும் நாம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதொரு மனோதத்துவக் கருத்து. மனத்தின் முழுத் தூய்மையே அறம் என்பது திருக்குறளின் தீர்மானம்.
  16. வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல, அவர் உடல் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார்… அவர் நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார்; உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார்; பசி, செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கு ஏற்ப சிகிச்சை தருகிறார்.
  17. ‘ஆண்மை’ என்றால் ஆளுமை. அது புற வீரத்தை விட, அக ஒழுக்கமான மன அடக்கத்தில் தான் தலைநிமிர்ந்து விளங்கும். அது கோழைத்தனம் அல்ல.
  18. ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு’ (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமை மிகுவதையே இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது.
  19. திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாக சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்றார்.
  20. கீதை காட்டும் பாதையும் வள்ளுவர் காட்டும் வழியும் ஒன்றொடு ஒன்று இசைந்தவை; இணைந்தவை. கீதையில் குறளையும் குறளில் கீதையையும் காண்கின்றோம்.
  21. ‘சத்யமேவ ஜயதே’ என்ற இந்தியக் குடியரசின் இலச்சினையும் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தமிழக அரசின் இலச்சினையும் வாய்மையின் சிறப்புக் கருதியே பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வுண்மைகள் நம் இதயத்தில் இடம்பெற வேண்டும்.
  22. உண்மையில் எந்த ஒன்றும் முற்றிலும் துன்பம் தருவதில்லை. அத் துன்பத்தின் ஊடேயும் – புகை நடுவினில் தீ இருப்பதைப் போல – அத் துயரத்தின் நடுவிலும் வாழ்க்கை எனும் நம்பிக்கைத் தீ கனன்று கொண்டே இருக்கும்.
  23. உலகப் போக்கோடு – அந்த வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவதை விட, அதற்கு எதிர்நீச்சல் இடும்போது தான் வாழ்வில் ஒரு வகைச் சுகம் தெரிகிறது. இந்தச் சுக அனுபவம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் உரியது; சற்று முயலும் எவர்க்கும் எளியது; நாளடைவில் எல்லோர்க்கும் இனியது.
  24. ‘பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா? பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?’ என்பது ஒரு பழைய திரைப் பாடல். ‘பேணி வளர்க்க வேண்டும்’ எனும் தொடரிலேயே பெற்றோர்கள், தம் பிள்ளைகளைப் பொறுத்தவரை பேண வேண்டிய விருப்பங்களும் விழைவுகளும் பொதிந்துள்ளன.
  25. பிள்ளைகளைப் பள்ளியில் பணம் கட்டிச் சேர்ப்பதோடு தம் கடமை முடிந்துவிட்டது. பையன் தானாக வளர்ந்து விடுவான் என நினைக்கக்கூடாது வேம்புச் செடியை நட்டுவிட்டுத் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதுமா? செடி வளர்கையில் ஆடு மாடு கடிக்காமல் சுற்றி அதற்கு வேலி வனைவதும், அது நன்கு உயரும் வரை காப்பதும் கடமை அல்லவா! பெற்றோர்கள் வேலி போடவும் வேண்டும், விருப்பம் போல வளர்ந்து உயர்ந்திட உதவவும் வேண்டும்.
  26. அறிவு என்பது நினைத்தவுடன் வாங்கிச் சேர்க்கும் பொருள் இல்லை. அவரவர் இயல்பிலே தோன்றி, முறையாக வளர்ந்திட, வளர்க்கப்பட வேண்டியதொரு தரு. சிறு வித்து வளர்ந்த மரம் ஆவது போல, பிள்ளை களிடம் உள்ள இயல்பே அறிவாக, ஆக்கமாகப் பரிணமிக்கிறது.
  27. கல்வியின் தலையாய நோக்கம் அறிவைத் தருவது மட்டும் இல்லை. நல்ல மக்களாக வளர்ந்திட உதவும் பண்பாக்கமே கல்வியின் இலட்சியம்.
  28. கல்வி என்றால் வளர்ச்சி! எதன் வளர்ச்சி? மனம், உடல், ஆன்மா எனும் மூன்றின் ஒருங்கிணைந்த, ஒத்த, பரிபூரணமான வளர்ச்சியே!
  29. கல்வி என்றால் செலவு என மட்டும் பொருள் இல்லை. கல்வி என்பது இன்று கைவிட்டுச் செலவிடுவது போலத் தோன்றும் நாளைய முதலீடு.
  30. பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளர வேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.
  31. இலக்கியம் இனியதொரு வாழ்க்கைக் கலை; கலைகளுள் எல்லாம் சிறந்த கலை. ஓவியம், சிற்பம் முதலிய கலைகள் காலத்தின் கைப்பட்டுச் சிதைய நேரிட்டாலும் கூட, காலத்தை வென்று நிற்கும் அரிய கலையாக இலக்கியமே விளங்குகிறது.
  32. இலக்கியம் புலவர்கள் உணர்வில் வாழ்ந்தால் மட்டும் போதாது; பொதுமக்கள் நாவிலும் அது அன்றாடம் புழங்கிவருதல் வேண்டும்.
  33. இலக்கியங்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், நிரந்து இனிது சொல்லும் வல்லமையால் ஞாலத்தை விரைந்து தொழில் கேட்கச் செய்ய வல்லவை.
  34. பிற மொழியினரை விட, தமிழ் மொழியினர்க்கு இலக்கியத்தைப் பேசி மகிழ்வதில் ஒரு தனிநாட்டமும் ஆர்வமும் எப்போதும் இருந்து வருதல் கண்கூடு. சங்க இலக்கிய மாநாடு, திருக்குறள் பேரவை, சிலம்பு மேடை, உலகத்தமிழ் மாநாடு, பட்டிமன்றம், இலக்கிய வட்டம், வழக்காடு மன்றம் எனப் பல்வேறு முறைகளில், வெவ்வேறு நிலைகளில் இங்கே இலக்கியம் எப்போதும் வாழ்வு பெற்றே வருகிறது.
  35. இந்திய நாட்டுப் பொது நூல்களின் வரிசையில் முன்னிடம் பெறுபவை இராமாயணமும் மகாபாரதமும் திருக்குறளும் ஆகும். இராமாயணம் – இனியதொரு நீதிநூல்; மகாபாரதம் – விரிந்ததொரு சமூகச் சாத்திரம்; திருக்குறள் – ஓர் உலகப் பொதுமறை.
  36. திருக்குறளும் கீதையும் வாழ்வில் முழு நிறைவு நூல்கள் ஆகும். மனிதனை நிறைமனிதன் ஆக்குவது இரு நூல்களின் அடிப்படை ஆகும்.
  37. வாழ்வில் இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல இயற்கையானவை. வாழ்வெல்லாம் இன்பமாகவே வாழ்ந்தாரும் இல்லை; முழுதும் துன்பத்தால் துவண்டாரும் இல்லை என்பது பழமொழி.
  38. இன்பம், பிறரை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது; ஆனால் துன்பம், நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தித் தருகிறது.
  39. எதையும் தாங்கும் இதயம் கொண்டு, சிறு துன்பங் களைப் பழக்கமான ஒன்றாக ஏற்றுப் பெருந் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி ஒன்றாகக் கருதித் துணிந்து, ஆற்றலும் வன்மையும் பெற்று வாழ வேண்டும்.
  40. பகைவரும் மதிக்கும் சிறப்புப் பெற வேண்டும் எனில், துன்பத்தையே இன்பமாக மாற்றும் ஆற்றல் பெற வேண்டும்.
  41. துன்பம் – ஒருவகையில் – பலருக்கும் கசப்புத்தான். என்றாலும் கசப்பே நாளடைவில் நாம் விரும்பும் சுவையாகிவிட முடியும். வேப்பங் கொழுத்தைச் சிறிது சிறிதாகத் தின்னப் பழகிக்கொண்டால் – அதுசுவையான மருந்தாகி நலம் செய்வதைப் போல- துன்பச் சுவையும் நலம் தரும் மருந்தாகிவிடும்.
  42. வாழ்வில் துன்பமும் சில சமயங்களில் நமக்குத் தேவைதான். அழுக்குத் துணியை அடித்துத் தோய்த்து மாசு நீக்குதல் போல, நம்மைப் பிடிக்கும் பல்வேறு மனமாசுகளையும் நீக்கிக்கொள்ள, அத் துன்பத் தோய்வே தக்க பயன் தரும்.
  43. சிறந்த மனிதர்களிடம் சில மணித்துளிகள் கேட்பது, பல புத்தகங்கள் படித்து அவற்றின் சாரத்தை ஈர்த்துக் கொள்ளும் வாய்ப்பிற்கு நிகராகும்.
  44. ‘யார் கூறுகின்றார்’ என்று பார்க்காமல், ‘யாது கூறினார்’ என்று ஆய்ந்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
  45. நல்லவர்கள் வல்லவர்களிடம் பொது நன்மை கருதி அட்டை போல் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
  46. மனம் மாசற்று இருப்பது தான் அறம். உள்ளம் தூய்மையுடையதாய், உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவதுதான் அறம்.
  47. ‘நேற்று இருந்தார் இன்று இல்லை, இன்று இருப்பவர் நாளை இல்லை’ என்ற வியப்பான உலகில், காலம் தாழ்த்தாது, வாழும் ஒவ்வொரு நாளும் அறம் செய்ய வேண்டும்.
  48. சான்றாமைக்கு ஆழி எனப்படும், ஊழி பெயரிலும் தாம் பெயராச் சான்றோர் வாழும் வரை, மனிதப் பண்புகள், உணர்வுகள் மனிதனிடம் நிலைத்து நிற்கும் வரை, அறம் அழியாது; அறத்தை அழிக்க முடியாது.
  49. மனத்தோடு வாய்மை மொழிந்து, சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபடாமல் உண்மையாளர் களாய், நல்ல அரிய செயல் செய்பவர்களால் தான் உலகம் வாழ்கிறது.
  50. சிறுசிறு வெற்றிகளில் திருப்தி அடையாமல், பெரும் வெற்றி நோக்கிப் பீடுநடை போட வேண்டும்.
  51. பிறருக்குச் சொல்வது வேறு – அவ்வாறு தாம் வாழ்ந்து காட்டும் நடைமுறை உலகம் வேறு – இரண்டும் வெவ்வேறு என்ற மனப்போக்கு இன்று மலிந்து கிடக்கிறது. எதை எண்ணுகின்றோமோ, அதைச் சொல்கின்ற துணிவும், சொல்லிய வண்ணம் செயலாக்கும் திறனும் அற்று நாம் வாழ்வதே இதற்குக் காரணம்.
  52. நெஞ்சில் உறுதியின்றி, நேர்மைத் திறனுமின்றி ஆற்றல் இருந்தும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் இதுவே எல்லாத் தீமைகளுக்கும் பாவங்களுக்கும் அடிப்படையாக மாறி விடும்.
  53. ஒருவன் எண்ணும் எண்ணமும், சொல்லும் சொற்களும் அவன் உயர்ந்தவனா? தாழ்ந்தவனா?, சிறியவனா? பெரியவனா? என்ற உண்மைகளை உரைகல்லாகக் காட்டிவிடும். செய்கின்ற செயலின் திறத்தால் ‘தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்ற அடிப்படையில் அவரவர் தகுதியை அறியலாம்.
  54. வேள்வியால் கிடைப்பது விண்ணில் வாழும் அமரர் விரும்பும் அமரத்தன்மை தரும் அவியுணவு. கேள்வியால் கிடைப்பது மண்ணிலே வாழ்வோர் விரும்பும் இறவாச் சிறப்புடைய அமுத வாழ்வு.
  55. தகுதி மிக உடையவர் முயற்சியால் பெருஞ்செல்வம் ஈட்டினால் அப்பொருளைத் தமக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் நலம் பயக்கும்படி பயன்படுத்துவர்.
  56. உயர்ந்த புகழ் பிறர்க்கு உதவுதலிலே உள்ளது. தன்னலம் இழந்து உதவுவது தலையாய புகழ் ஆகும்.
  57. ஒருவனுடைய அறிவை ஆராய்கையில், மறக்கக் கூடாத அடிப்படையான உண்மை ஒன்று உண்டு. எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் என இவ்வுலகில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓரளவேனும் உலக ஞானம் இருக்கவே செய்யும். அதுபோலச் சிறந்த அறிஞரிடத்தில் ஓரளவு அறியாமை இருப்பதும் இயல்பு.
  58. நாம் பல கருத்துக்களை விரிவாக, ஆழமாக விவாதம் செய்கின்றோம். நல்ல கருத்துக்களை உணர்ச்சி வசமாகப் பேசி மகிழ்வதோடு அமைதி அடைந்து விடுகின்றோம். அப் பிரச்சினைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துத் தீர்வு காண்பதில்லை.
  59. தமிழிசை இயக்கம் பாட நூலோடு, பண்முறை ஆராய்ச்சியோடு, மாநாட்டோடு, மலர் வெளியிட்டோடு நின்று விடுகிறது. இது நாள்வரை இப்படி இருந்தது போதும், இனிமேல் தமிழிசை இயக்கத்தின் எல்லைகள் விரிய வேண்டும்… வெளிநாட்டார் நாடிப் போற்றும் வகையில் நம் தமிழிசை தேனார் தமிழிசையாய்ச் சிறக்க வேண்டும்.
  60. தமிழ் இசை, தமிழர் மனங்களை எல்லாம் இசையச் செய்து, இசைபட வாழச் செய்து, தமிழரை உலகெல்லாம் போற்றும் ஆற்றல் பெற வேண்டும். தமிழ் இசை தமிழர் இசையாக வாழ்க! வளம் பெருகுக!
  61. எக்காலத்திற்கும் பொருந்தும் அறங்களை உண்மை களின் அடிப்படையில் விளக்குவதால் திருக்குறள் முக்காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதொடு, பண்பாட்டுத் தொடர்ச்சியை இணைக்கும் இனிய சரடாகவும் இருக்கிறது.
  62. உழைப்பும் திறமையும் வலிமையும் வாழ்வில் வளமை சேர்க்கும் என்பதே அமெரிக்க வாழ்க்கை.
  63. நாளை நாளை என்று நாட்களைத் தள்ளிப் போட்டுத் தட்டிக் கழித்து விடாமல், நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழோடு வாழத் தலைப்பட வேண்டும்.
  64. உழைப்பால் தான் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உறுதியாக ஏற்பட்டாக வேண்டும்.
  65. அறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள் தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.
  66. இளமைப் பருவத்தில் நம் நெஞ்சம் எனும் வானில் எத்தனையோ ஏற்றம் மிக்க இலட்சியங்கள் இடம் பெறுவது உண்டு. அவற்றுள் சில மட்டும் வளர்பிறையாக வளர்ந்து, முழுமதியாக நிலைக்கும்.
  67. தேடிச் சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கை அல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.
  68. கல்வி, அறிவு, செல்வம், பண்பு, செல்வாக்கு, புகழ் பெற முயன்று உழைப்பவனே உயர்ந்தவன்; அவ்வாறு முயலாது சோம்பி, உண்டு, உறங்கி, களித்துத் திரிபவன் நிந்தனைக்கு உரியவன்; சமுதாயத்தைப் பாழ்படுத்துபவன், முயற்சியும், உழைப்பும், ஊக்கமும், தொண்டும் உடையவன் தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்துவான்.
  69. கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்; நீர் அருவி, ஆலயக் கோபுரம்.
  70. பயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம்… நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப்போனவர்களின் பார்வையினைப் ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே!’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்.
  71. எண்ணம், சொல், செயல் மூன்றனுள் அடிப்படை யானது எண்ணமே. மனம் என்னும் நிலம் நலமாக இருப்பின், அதில் விளையும் சொல்லும், செயலும் நலமாக, ஆக்கமாகச் செழிக்கும்.
Pages: 1 2