புகழ் வாழ்வு

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

     பொன்றாது நிற்பதுஒன்று இல்.”      (233)

மனிதர் அனைவரும் வாழ்வில் அவரவருக்கு உரிய தகுதிக்கேற்பப் புகழோடு வாழ விரும்புகின்றனர். தேடிச்சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கையல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.

அறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள்தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.

‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்று குறுந்தொகை கூறுவது போல் உண்மையான முயற்சியும் உழைப்புமே ஒருவனை உயர்த்தும்; பெருமையும் புகழும் சேர்க்கும். பயனுள்ளவனாக, பிறர்க்கு உதவுபவனாக, பிறர் துன்பங் களைத் தீர்ப்பவனாக இருந்தால்தான் புகழ் நிலைத்து நிற்கும். புகழ் அறத்தின் ஒளிவடிவம். நல்லவர்களால் போற்றப்படுவதே புகழ். மனச்சான்றைப் போற்றி, குற்ற மில்லாமல் குணங்கொண்டு செம்மையோடு வாழ்பவர் களுக்குப் புகழ் உயிர்மூச்சு போன்றது. புகழின்றி உயர்ந்தவருக்கு வாழ்வு இல்லை. நற்செயல்கள் செய்பவரின் பெருமையும் சிறப்பும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக இருப்பதில்லை. அவர்களது அருமை தொடக்கத்தில் தெரியாவிட்டாலும் நாளடைவில் மிகவும் சிறப்பாக நன்றாகவே உணரப்படும். அறம் இல்லாத இடத்தில் புகழ் நிலைத்து நிற்காது. அறத்தோடு, கடின உழைப்போடு, மனச்சாட்சியைப் போற்றி இடைவிடாது தனக்குத்தானே தன்னை குற்றங்களிலிருந்து நீங்கி காத்துக் கொள்பவர்களுக்கே புகழ் என்றும் நிலைத்து நிற்கும். இல்லாவிட்டால் புகழ்வேட்கை கொண்டவர் களுக்கு வாழ்க்கை கானல் நீர் ஆகிவிடும். உண்மையான புகழ் ஆழமாக வேரோடி நிற்கும் ஆலமரம் போன்றது. நல்ல அடித்தளத்தில் கட்டப்பட்ட கோபுரம் போன்றது; தனக்குரிய உண்மையான தகுதியுடனும், நேர்மையுடனும், மனச்சான்றைப் போற்றி வாழ்பவர் என்றும்  இன்பத்துடன், புகழுடன் வாழ்வர்.

போலித் தகுதியால், குறுக்கு வழியில் புகழ்பெற முயல்பவன் வேகமாக உயர்வான். ஒரு புயல்காற்றில் காகிதமும், சருகுகளும், குப்பைகளும் கோபுரத்திற்கு மேல் உயர்வது போல போலிப்புகழ், தற்புகழ்ச்சி போலி நாணயம் போன்றது. புழக்கத்தில் தண்டனையைத் தருவது. வீண் புகழ்ச்சியால் ஆணவம் அதிகம் தலைகாட்டும். வீண்புகழ்ச்சி அளிப்பவரையும் அழிக்கும். பெறுபவரையும் சீரழிக்கும். வெற்று உபச்சாரம், போலிப்புகழ்ச்சிகளைக் கண்டு மயங்காமல் வாழவேண்டும். சிலர் சிலகாலத்திற்கு நன்றாகப் புகழப்படுகின்றனர்; கொண்டாடப்படுகின்றனர். கால மாறுதலால் புகழின் உச்சியில் நின்றவர்கள், பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்; போற்றப்பட்டவர்கள் பழித்துப் புறக்கணிக்கப்படுகின்றனர். மக்கள் புகழும்போது புகழ் பெற்றவர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்; வாழ்த்துக்களை வழங்கியவர்கள், வசவுகளையும் வழங்கிடுவர்.

நம் தகுதிக்கேற்ற புகழ்ச்சிகளே நிலைத்து நிற்கும். ஆகவே என்றும் உழைத்து, முயற்சி செய்து, செம்மையாக வாழ்ந்து, தனக்கு உரிய பொருளுடைமை, கல்வியுடைமை, அறிவுடைமை, உழைப்பு இவைகளைப் பிறர்க்கும் வழங்கிப் பிறர்க்கு பயன்பட வாழ்ந்தால்தான் ஊரும் நாடும் உலகமும் போற்றும். வசையும், பழிச்சொல்லும் இல்லாமல் புகழுடன் வாழ்பவர்களே வாழ்பவர்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் வாழ்ந்தாலும் உடல் சுமந்து உயிரோடு இருந்தாலும் வாழாதவர்களே. உலகம் மாறிவருவது. இங்கு நிலையாமை தான் நிலைத்தது இத்தகைய மாறிவரும் உலகில், நிலை யாமை உள்ள உலகில் நிலைத்து நிற்பது, எதுவென்றால், அது அழிவற்ற புகழ் அன்றி வேறு ஒன்று இல்லை.

“வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய

     வாழ்வாரே வாழா தவர்.”      (240)

 

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

     தம்புகழ் நிறுவி தாம்மாய்ந் தனரே” – (புறநானூறு)