குறள் நிலா முற்றம் – 10

Image result for thirukkural

 

பேராசிரியர்

“குணம் என்னும் குன்றார்க்கு வெகுளி ஏற்படுவது இயல்புதான் என்றே வள்ளுவர் ஏற்கிறார்.”

புலவர் ஒருவர்

ஆனால், அது ஒரு கணமே நீடிக்கும் – அதற்குள் காத்துக் கொள்க என மீட்சியும் சொல்கிறார். இந்த இளைஞர் அந்த ஒரு கணத்திற்குள் ஓடி வந்துவிட்டார் என நினைக்கிறேன்.”

இளைஞர்

“குணம் எனும் குன்றேறி நிற்பதாகக் கருதப்படும் பெரியவரிடம் கோபாக்கினி போலச் சுட்டெரிக்கும் சினம் வரலாம் என வள்ளுவர் சொல்லுகிறாரா?”

ஒருங்கிணைப்பாளர்

“சுயநலம் கருதாது, பொதுநலப் பணியில் முனைந்திருக்கும் போது இடையூறுவரின், அதுவும் ஒரு வகையில் குணநல வெளிப்பாடு எனவே கொள்ள வேண்டும். அத்தகைய சினம் – வெகுளி, கரவின்றிச் சடுதியில் வெளிப்பட்டுவிடும். மின்னல் போல ஒரு வெட்டுவெட்டிவிட்டு, விரைவில் மறைந்தும் விடும் என்பதே என் கருத்து.”

“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

     வேந்தனும் வெந்து கெடும்.”         (899)

உயரிய கொள்கையால் உரம் பெற்ற சான்றோர்க்குக் கோபமே வரக்கூடாது என்பது நடைமுறைச் சாத்தியமா? எனும் கேள்வி இங்கு முரணாக முன் நிற்கிறது.”

வருமான வரித் துறை அதிகாரி

“இயேசுபிரான், நபிகள் நாயகம் உள்ளிட்ட சமய நிறுவனர்களுக்கும், காந்தியடிகள் போன்ற அகிம்சையே உயிராகக் கொண்டோர்க்கும், பண்டித நேரு போன்ற ஆட்சிப் பொறுப்பாளர் களுக்கும் அவ்வப்போது சினம் ஏற்பட்டதை வரலாற்றில் படித்திருக்கிறோம்.”

வாழ நூல் செய்த வள்ளுவர்

வளனரசு

“வள்ளுவப் பெருந்தகை எப்பொருளையும் அதன் பயன்பாடு கருதியே விளக்குவார். உலகுக்கு ஒட்டக்கூடிய ஒழுக்க வரைமுறையே பேசுவார். வாழ நூல் செய்தவர் ஆதலால் செயல்பாட்டுக்கு வரும் அற முறைகளையே அடுக்கிச் சொல்வார் என்பது எங்கள் பேராசான் வ.சுப.மா.வின் வள்ளுவம்.”

பேராசிரியர்

“இங்கு கூறிய கருத்துக்கு உடன்பட்டு ஒன்று சொல்வேன். ஈட்டும் பொருளனைத்தையும் ஈகையாகத் தந்துவிடுக என வள்ளுவர் சொல்லவில்லையே?

“ஆற்றின் அளவறிந்து ஈக; அது பொருள்

     போற்றி வழங்கும் நெறி”            (477)

என்றே போதிக்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த நடைமுறைக்கு உகந்த முறையினையே அவர் கூறும் சான்றோர் சினம், அல்லது சாதாரண மக்கள் வெகுளாமை என்பனவற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

ஒருவர் உள்ளத்தில் உருவாகும் வெறுப்பும் பகையுமே வெகுளியாய், சடுதியில் வெளிப்படுகிறது. அது அருளுடைமைக்கு மாறானது. எனவே, அதற்கு இடம் தராமல் காத்து வர வேண்டும். ஆயினும் குறிப்பாக வலியார் – மெலியார் என எல்லோரிடமும் சகட்டு மேனிக்குச் சினம் காட்டி எரிந்துவிழுதல் மனிதப் பண்பு ஆகாது. செல்லிடத்தும் காப்பதே சினம். பிற இடத்தில் அதைக் காப்பதும், காத்துக் கொள்ளாததும் ஒன்றுதான். எனவே நிர்வாகச் செயலினூடே சிலரது இடையீட்டால் பொறுப்பில் உள்ளோருக்கு அடக்கமுடியாதபடி வெகுளி ஏற்படினும், சினம் கொள்ளமாட்டேன் எனும் உறுதியை நாள் தோறும் வளர்த்து வந்தால்தான், தப்பித்தவறியும் சினம் கொள்ளாமல் பிறரோடு, தன்னையும் காத்துக் கொள்ள முடியும்.”

ஓர் அன்பர்

“அலுவலகக் கோபத்தைப் பற்றிப் பேசுவதைவிட அன்றாடம் வீட்டில் மனைவி மக்களோடு எல்லாம் கோபப்படாமல் பொழுதை ஓட்ட முடிவதில்லை; கல்விக் கூடத்தில் மாணவரைக் கண்டிக்காமல் இருக்க முடிவதில்லை.”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

 ‘கோலைப் பேணிக் குழந்தையைக் கெடு’ எனும் பழமொழியே நியாயமான கோபம் – உலோகத்தைச் சூடேற்றி உருவமைப்பதற்குச் சமமானது என்றே உளவியல் ரீதியாகச் சொல்லுகிறது. கோபமே கொள்ளாத சாதுவை ‘அப்பிராணி’ என்றும் ‘மண்ணாந்தை’ என்றும் பட்டம் சூட்டி நையாண்டி செய்கிறது.”

பெரும்புலவர்

“சப்-கலெக்டர் ஐயா… ஆங்கிலப் பழமொழியைச் சொன்னார்… நான் ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் பயின்ற நாளில் கேட்டும் சொல்லியும் மகிழ்ந்த பாடலைச் சொல்லட்டுமா?”

அன்பர் ஒருவர்

“பெரும் புலவர் ஐயா பாட முற்பட்டால் அதைத் தடுத்துவிட முடியுமா? நீங்கள், உங்கள் பழைய பாட்டைப் பாடுங்கள்; எங்கள் பாட்டிற்கு நாங்கள் இருக்கிறோம்.”

பெரும்புலவர்

“அந்தக் காலம் அச்சுப்புத்தகம் வராத – ஏடும் எழுத்தாணியும் மாணவப் படைக் கலங்களாக இருந்த காலம்.”

அன்பர்

“சரி ஐயா – பாட்டைச் சொல்லுங்கள்”

ஏடும் எழுத்தாணியும்

பெரும்புலவர்

“ஏடு கிழியாதா? எழுத்தாணி ஒடியாதா? வாத்தியாரு சாவாரா? வயிற்றெரிச்சல் தீராதா?” (எல்லோரும் சிரித்தல்)

அன்பர்

“புலவர் ஐயா.. எத்தனை ஏட்டைக் கிழித்தாரோ, எத்தனை எழுத்தாணியை ஒடித்தாரோ… ஆனால் (பட்ட) பாட்டை மட்டும் மறக்காமல் சொல்லிவிட்டார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நாட்டு நிலவரப் போக்கில் சீர்குலைவு ஏற்படக் காணும் போது சான்றோர் வாய் மூடி இருக்கலாகாது; இருக்கவும் மாட்டார்கள். அத்தகைய ஏந்திய, உயரிய கொள்கையர் சீற்றம் கொள்ள நேரிட்டால், ஆட்சித் தலைவனாகிய வேந்தனோ, அவர் யாராயினும் இடைமுறிந்து வீழ்ந்து விடுவர்; ஆட்சியும் கவிழ்ந்துவிடும்.”

பேராசிரியர்

“ஒருங்கிணைப்பாளர் கூறிய இந்த கருத்தைத் தொடர்ந்து நான் சொல்ல வருவது ஒன்று உண்டு. சினம், கோபம், வெகுளி என்பன எல்லாம் வாழ்க்கைப் போக்கில் நமக்கு ஏற்படும் இயல்பான தொரு மெய் உணர்வு. புராண கால விசுவாமித்திரர் சாபம் தொட்டு, இராமாயண இராம பிரானின் சினம், பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலி சபதம், மதுரையை எரித்த கண்ணகியின் ஆறாச் சினம், கண்ணகியையும் கோவலனையும் மதுரைக்குக் கூட்டி வந்த கவுந்தியடிகள் இடைவழியில் குறுக்கிட்ட தீயவர்களை முள்ளுடைக்காட்டில் முது நரிகளாகிடச் சபித்த கோபம் எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் சமுதாயத்தை அணி கோலிக் காப்பது இந்த அன்றாட மன உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் (லிணீஷ்s) என ஒரு தொகுப்பு இன்றேல் இன்று சமூக ஆட்சியோ, அரசமைப்போ இராது.”

அன்பர்

“இந்தச் சட்டத்தாலும் பல சமயம் தீங்கு நேரிட்டுள்ளதே?”

பேராசிரியர்

“உரிமைப் போர்க்காலத்தில் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கம் நடத்தியதற்கும் இன்று பல வகைகளில் நாடெங்கும் சட்ட எதிர்ப்பு உண்ணாவிரதங்கள் நடப்பதற்கும் உரிய காரணம் – சட்டம் எப்போதும் சரிவரச் செயல்படாமையே அல்லது செயல்படவிடாமையே.”

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

அரசு அதிகாரி

“அத்தகைய சங்கடமான சூழலில் என்ன செய்வது?”

ஒருங்கிணைப்பாளர்

“அங்கே தான் சான்றோர்கள் வந்து முன் நிற்கிறார்கள். நமது பெரிய ஆதீனம் அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் முதலிய பண்பட்ட அருளாளர்களும் ஞானசீலர்களும் சமுதாயத்தை நெறிப்படுத்த முன் வருகிறார்கள்! அத்தகைய ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என முத்தாய்ப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. உலகம் வாழ்வது சட்டத்தால் அல்ல; சம்பிரதாயக் கோட்பாடுகளால் அல்ல; உலகு உயிர்ப்பது பண்பட்ட பெரியோரின் தன்னலமற்ற வழிகாட்டுதலால் மட்டுமே! அத்தகைய சான்றோர் சினம் கொள்ள நேர்ந்தாலும், அது ஒரு கணமே நீடித்தாலும்… அத்தகைய சூழல் ஏற்படாமல் முற்காக்கும் தற்காப்பே மக்களுக்கும் நல்லது; ஆட்சிக்கும் பொருந்துவது. மற்றொன்று பிறர் நலமும் பேணும் நல்ல சமுதாய அமைப்பில் போராட்டத் தேவையே ஏற்படாமல் போய்விடும்; அதையும் மீறிப் போரிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தை ஓர் அரசமைப்போ, நிர்வாகமோ உருவாக்கு மானால், அதுவும் இடைமுரிந்து அழிந்து போய்விடும் எனும் கருத்தில் யாருக்கும் முரண் இருக்க முடியாது.”

‘தமிழ்ப் பாவை’ கருணைதாசன்

“வாழ்க்கையில் இன்று முரண்கள் அதிகமாகி முட்டுக்கட்டையிடும் களங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில் புதிய அங்கங்கள் ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் உருவாகி வருவதையும் அவற்றைப் பயன் கொள்வதை¬யும் முரணாக ஏற்க வேண்டிய தில்லை. ஆனால் வாழ்வியல் அடிப்படைத் துறைகளான கல்வி, அரசு, நிர்வாகம், ஆன்மீகப் போக்கு, பொதுத்துறை நிறுவனச்செயல்பாடு, மக்கள் போராட்டம் என நாள்தோறும் புதுப்புது முரண்கள் முளைத்து வருவதை நாம் கண்டும் காணாமல் இருக்க இயலாதல்லவா..? அந்த முரண்களைப் பற்றியும்…”

அரசு அதிகாரி

“இன்று சந்தித்த எண்ணற்ற முரண்களோடு நிலா முற்ற அரங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.. சாப்பாடு காத்திருக்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘தமிழ்ப்பாவை’ ஆசிரியர் சுட்டியது போல, நமக்குத் தோன்றும் முரண்களை எல்லாம் அடுத்து வரும் அரங்கில் கலந்து ஆய்வோம். இந்த அரங்கு அன்ன மீனாட்சி உணவக வள்ளுவர் அரங்கில் விரைவில் நிகழ்வுறும். இப்போது தமிழ் வாழ்த்துடன் உணவுக்குச் சொல்வோம். அனைவரும் வருக.”

(நிலவை மேகம் மறைக்கிறது)

அமர்வு மிமிமி

அன்ன மீனாட்சி வள்ளுவர் மன்ற அரங்கு இறைவாழ்த்துடனும் குறள் வாழ்த்துடனும் தொடங்கியது.

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைய நிலா முற்றத் தொடர்ச்சி அரங்கிற்கு மகளிர் அதிகமாக வந்துள்ளமை பெருமை தருகிறது.”

ஒருவர்

“அன்ன மீனாட்சி அரங்கில் அறுசுவையோடு நடக்கும் போது மகளிர் அதிகமாக வருவது இயல்புதானே!”

ஒருங்கிணைப்பாளர்

“முதலில் எங்கள் வி.கே.கே.மேனிலைப் பள்ளித் தமிழாசிரியர் திருமிகு வள்ளியம்மை வந்துள்ளார். அவர் தொடங்கட்டும்.”

வள்ளியம்மை

“நான் குறளைப் போலவே கடவுள் வாழ்த்துடன் என் ஐயத்தைத் தொடங்குகிறேன். வள்ளுவப் பேராசான் தம் பொதுமை நூலில் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ எனத் தொடங்கு கிறார். ஆதிபகவன் என்பது சமண, பௌத்த சமயத் தொடர்புடையவை.  அப்படியானால் வள்ளுவர் எந்தச் சமயத்தவர்?”

வளனரசு

“எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய (ஆங்கில நெடுங்கணக்கின் ‘ஏ’ உட்பட) எழுத்தை முதன்மையாகக் கொண்டிருப்பது போல, உலகம் ‘பகவனை’ அதாவது ஒரு மூலப் பொருளை முதலாகக் கொண்டுள்ளது என்பது நேர் பொருள்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இந்த ‘பகவன்’ எனும் சொல் வடமொழியில் இல்லை. வள்ளுவரால் உருவாக்கப்பட்ட தூய தமிழ்ச்சொல் என்றே அறிஞர் பலர் கருதினர். ஏனெனில், இச்சொல் சங்க இலக்கியங்களில் பயிலப்படவில்லை; சிலம்பு, மணிமேகலையில் முறையே அருகப் பெருமானையும் புத்தரையும் அதிலும் கூட இடுகுறிப் பெயராகவே சுட்டுகிறது.”

இடைமறித்த புலவர்

“இன்னா நாற்பதில் முதல் பாடலிலும் வருகிறது.”

பேராசிரியர்

“ஆனால் உரையாசிரியர்கள்தான் வடமொழிச் சொல்லோ எனக் கருதி ‘வழிபாட்டுக்கு உரியவன்’ எனப் பொருளமைதியைத் தந்துவிட்டனர் எனலாம். ‘ஆதிபகவன்’ எனும் சொல், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியங்கள், ஏன் பிற்காலத் தேவார திருவாசகம், திருமந்திரம், ஆழ்வார் பாசுரங்களிலும் இல்லை என அறுதியிட்டுச் சொல்லலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“ஆனால், குறளில், ‘முதல’ எனும் சொல் அடிப்படையானது, காரணமானது, முதன்மை யானது எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது என ஏற்போமே.”

பெரும்புலவர்

“நோய் நாடி நோய் ‘முதல்’ நாடி, ‘முதல்’ இல்லார்க்கு ஊதியம் இல்லை… எனப் பின்னர் வரும் சொற் பயன்பாடுகளோடு இணைத்தும் இதைச் சிந்திக்கலாமே?”

வேறு ஒரு புலவர்

“திருவாய் மொழியிலும் ‘ஆதி எம் பகவன்’ என வருவதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே’ எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவர், கடவுள் வாழ்த்தோடு தொடங்கினார் என்பதை மறுப்போர் கடவுள் சார்பினை ஏற்காது படிமுறை  வளர்ச்சி, உலோகாயதச் சிந்தனை  எனும் எண்ணத்தோடும் ஏற்கலாம்.”

பேராசிரியர்

“ஆனால், வள்ளுவர் பிந்திய குறள் வரிசையில், நிலையாமை, துறவு, மெய்யுணர்வு பற்றி எல்லாம் குறிப்பிடுவதால் இறைமை வழிபாடே இல்லாதவர் என முடிவு கட்டுவது பொருந்துமா?”

புலவர் செல்வ கணபதி

“குறளில் ‘கடவுள்’ எனும் சொல் இல்லை. பரிமேலழகர் தம் உரையில் புகுத்திய இதனை மாற்றி ‘இறைவழிபாடு’ எனவும் ஏற்கலாம்.”

கருணைதாசன்

“நாவலர் தாம் எழுதிய உரையில் ‘அறிவன்’ என்றார்; கலைஞர் தம் உரையில் ‘வழிபாடு’ எனும் பொதுச் சொல்லால் குறிப்பிட்டுவிட்டார்.”

வளனரசு

“தமிழாசிரியை அவர்கள் கூறியபடி, ‘வள்ளுவர் – சமண, பௌத்த சமயச் சார்பினரோ?’ எனும் கேள்விக்கே திரும்பவும் வர விழைகிறேன்… வள்ளுவர் காலத்தே இவ்விரு சமயங்களும் இங்கு நிமிர்ந்திருந்த தடயங்கள் உள்ளன. கல்லாடனாரும் இறைமையைக் குறிக்கும் சொல்லாக ஏற்றது இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், எந்த இறைமை? சமணமா? பௌத்தமா? வள்ளுவர் பௌத்தர் போல முடியை மழித்தலும் வேண்டா, சமணர் போலத் தாடி வளர்த்தலுமாகிய வெளி அடையாளம் வேண்டா, உலகு பழித்ததை ஒதுக்கி வாழ்ந்தாலே அது இறைமை வழிபாடுதான் என உறுதிபட, நடுவு நிலை பேணி விளக்கினார். எனவே வள்ளுவரைச் சமயச் சிமிழுக்குள் அடைக்க முயல வேண்டாம்.

‘சமயக் கண்ணர் தம் மதிவழிச் செல்லாது உலகியல் கூறிப் பொது இது’ என்ற திருவள்ளுவ மாலைச் செய்தியை, வள்ளுவப் பொதுமைக்கும் மாலையாக அணிவித்து இவ்விவாதத்தை இத்துடன் நிறைவு செய்யலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“அறிவு பெறப் பெற, அறிவின் தூய்மையை எட்டி அடைய முற்பட வேண்டும். தூய அறிவு வடிவானதொரு பரம்பொருள் கடவுள் எனக் கொள்ளலாம். வாலறிவனான அவன் திருவடிகளைத் தொழாவிட்டால், கற்ற கல்வியால் பயன் இல்லை. அத்தகைய ‘வாலறிவன்’ யார் எனத் தேர்ந்து தெளிவதும், ஓர்ந்து தொழுவதும் அவரவர் மனத்தைப் பொறுத்தது; சார்ந்துள்ள நம்பிக்கையைப் பொறுத்தது. இதைச் சர்ச்சைக்கு உரியதாக்கிச் சமர்கள் புரிந்த சரித்திர ஏடுகளின் ரத்தக் கறைகள் மீண்டும் கசிய வேண்டாம். எனவேதான் நமது இந்தியத் திருநாடு, சமயங்கள் பலவற்றின் விளைநிலமாயிருந்து வந்துள்ள போதிலும் – சமயச்சார்பற்ற நாடாக (ஷிமீநீuறீணீக்ஷீ ஷிtணீtமீ) தன்னை அரசியல் சட்டபூர்வமாக அறிவித்து உலகிற்கே வழிகாட்டியும் வருகிறது.” (கைதட்டல்)

பேராசிரியர்

“சமயம் என்பது வேறு; ஆன்மீகம் (ஷிஜீவீக்ஷீவீtuணீறீவீsனீ) ஆகிய அருள் என்பது அதன் வழியே அடையக் கூடிய நற்பேறு. இவற்றில் ஏற்பட்டு வரும் மயக்கமே நாட்டில் குழப்பமாக, கலவரமாகக்கூட நீடிக்கிறது. உண்மைச் சமயங்கள் வேறு; சமய நெறியாளர் போல நடிக்கும் கபட வேடதாரிகள் வேறு.”

புலவர் செல்வ கணபதி

“ ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு’ (247) எனும்  இறுதியுரை போல, நமக்கு அருளும் வேண்டும்; பொருளும் வேண்டும்.”

கருணைதாசன்

“ஆனால் இந்த இரண்டையும் கபட வேடத்தால் கவரும் நிலை பரவுகிறதே என்பதுதான் நல்லவர்களிடையே ஏற்பட்டுவரும் கலக்கம்… மரம் பழுக்க உழைத்த தோட்டக்காரன் கனிகொய்யக் கருதியிருக்கும் போது எல்லாம் வெம்பி விழுந்த பரிதாப நிலை பரவக்கூடாதே… மக்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? எனப் பிரித்தறிய முடியாது. எல்லோரும் ஆன்மிக அடையாளங்களுக்குள் ஒரே மாதிரியாகத் தோன்றும் புதியதொரு ‘சமய விழிப்பு’ ஏற்படுகிறதே. இது நலம் பயக்குமா?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“‘தமிழ்ப் பாவை’ ஆசிரியர் மக்களையும் கயவரையும் ஒன்று போலக் காண்கிறார் எனக் கருதத் தோன்றுகிறது.”

கருணைதாசன்

“நினைவூட்டலுக்கு நன்றி. ஒரே உடை, ஒரே மாதிரி தோற்றப் பொலிவு. நல்லவர் – தீயவர் யாரெனப் பகுத்தறிய முடியாத் தவிப்பு. ‘மக்களே போல்வர் கயவர்’ எனும்படி வள்ளுவரே மயங்கியது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் கயமையைக் கண்டு கடியும் குறட்பா வரிசையில் மக்களில் கயவர் உருவுடையவர் பலர் உண்டு எனும் உலகியலைக் கண்முன் கொணரும் கருத்து இது; மயக்கம் ஏதும் இல்லை; சற்றுத் தயக்கம் வருவதை விளக்கவே வள்ளுவர் முயன்றுள்ளார்.

மக்கள் கயவரைப் போலத் தோன்றுபவர்கள் என்பதை விட, கயவர்கள் மக்கள் போல நடிப்பார்கள் எனப் பொருள் கொள்ளுவதே நலம்.

மக்கள், விலங்குகள் எனும் உயிரினங்களைப் பொறுத்தவரை புலி, மான் முதலியன தோற்றத்திலும் செயலிலும் தத்தமது இயல்பினின்று – குணத்திலிருந்து- வேறுபடுவதில்லை. ஆனால் மனிதர்களில் விலங்குக் குணம் உடையோரும் உண்டு. விலங்கை அடையாளம் கண்டு கொள்ளுவதைப் போல, உடல் அமைப்பால் ஒன்று போலத் தோன்றினாலும், குணநிலையில் குள்ள நரி மனமுடையோரை – வஞ்சகரை – எளிதில் இனம் கண்டுபிடித்துவிட முடியாது என்கிறார் வள்ளுவர். அத்தகையோரை ‘மக்களே போல்வர் கயவர்’ எனும் அருமையான உவமையால் மனதில் பதியும்படியாகக் குறிப்பிடுகிறார். இதிலே ஒரு கேலி, நையாண்டி, ஷிணீக்ஷீநீணீsனீ எல்லாம் புலப்படச் செய்கிறார்!”

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“ ‘தேவர் அனையர் கயவர்’ எனும் குறளில் கயவரை மனிதரைவிட உயர்த்தி, தேவர் நிலையோடு ஒப்பிடுவது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“‘தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

 மேவன செய்தொழுக லான்.’        (1073)

மக்களும் கயவரும் வடிவால் முழுவதும் ஒத்திருப்பர். ஆனால் குணத்தால், பண்பால், செயலால் மாறுபட்டவர் என நேரடி விளக்கம் தந்த வள்ளுவர் இந்தக் ‘கயமை’ அதிகாரக் குறளில் மேவன செய்து ஒழுகுதல், அதாவது செய்யக் கூடியவை, தவிர்க்க வேண்டியவை எனும் அறநெறிக் கோட்பாடுகளை மதியாது, மனம் விரும்பியபடி எல்லாம் நடப்பர் என இருசாராரையுமே சாடுகிறார்! கட்டுப்பாடற்ற போது தேவர் – கயவர் – மக்கள் எல்லாம் ஒரு நிலையரே ஆவர் என்கிறார்.”

பெரும்புலவர்

“எற்றிற்குரியராக, விரைவில் அரசியலில் சமுதாய ஒழுக்கக்கேட்டில் விலை போகும் விற்றற்குரியராக விளங்கும் கயவரை விடுத்து, அச்சமே கீழ்களது ஆசாரமாகக் கொள்ளாத மிச்சம் உள்ள நன்மக்களைப் பற்றி நிலா முற்ற அரங்கு தடம் மாறலாமே!”

தலைமை ஆசான் கணேசன்

“புலவர் ஐயா சொன்னபடி தடம் மாற விடாமல் தடுக்கும் வினா ஒன்று. ‘வாழ்க்கைத் துணை நலம்’ வகுத்த வள்ளுவர் அதில் பெண் களுக்கு மட்டுமே அறிவுரை கூறி, ஆண்களை விட்டுவிட்டாரே அது ஏன்?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“தலைமையாசிரியர் குறிப்பிட்ட இந்த ‘வாழ்க்கைத் துணைநலம்’ எனும் அருமையான சொல்லமைப்பு சங்க இலக்கியந்தொட்டு வேறு எந்த இலக்கியத்திலும் கையாளப் பெறாத, வள்ளுவப் பெருந்தகையே முதன்முதலில் உருவாக்கித் தந்த சிறப்பான சொல்லடைவு. ‘கற்புநிலை என்று சொல்ல வந்தால், இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ எனப் பின்னாளில் பாரதியை உரிமைப் பொதுமை பேச வைத்த தலைப்பு என இதைக் கருதி மேல் விளக்கம் தரச் செம்மல் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்லறமாக இல்லறம் விளங்கிடக் காதலன் ஒருவனைக் கைப்பிடித்தோ, ஏற்பாட்டுத் திருமணமோ செய்து கொண்டு மனையறம் ஏற்ற மங்கை நல்லாளிடம் வேண்டும் குணநலச் சிறப்புக்களை ‘வாழ்க்கைத் துணை நலம்’ எனும் அதிகாரத்தில் வகுத்த வள்ளுவர், அவருக்குத் துணையான கணவன் கடைப்பிடித்தாக வேண்டிய ஒழுக்கங்களையும் கூறாமல் விடவில்லை.”

( தொடரும் )

1928total visits,3visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>