குறள் நிலா முற்றம் 14


ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

திருக்குறள் பேரவை அன்பர் ஒருவர்

“நல்லாட்சி அமைவதெல்லாம் ஓட்டுப் போடும் வாக்காளர் கையிலும், தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர் தோளிலுமே உள்ளது. ஆனாலும் இந்த இரு சாராரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணராத அவலத்தை நம் திருக்குறள் பேரவையில் சில ஆண்டுகளுக்கு முன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அயர்வோடு, ஆறாத் துயரோடு ஆற்றிய உரை நம் பேரவை நண்பர்களுக்கெல்லாம் நினைவில் இருக்கும் எனக் கருதுகிறேன். பேராசிரியர் அவர்களே உங்கள் நினைவில் இருந்தால் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லுங்கள்.”

மற்றொருவர்

“நெடுநேரம் அமர்ந்துவிட்டோம், அரசியலுக்குள் நுழைந்தவுடன் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது.” (சிரிப்பலைகள்)

உணவுக்குப் பின் மீண்டும் நிலா முற்ற அவை கூடுகிறது.

பெரும்புலவர்

“தேர்தல், வாக்காளர் கடமை பற்றி எல்லாம், குன்றக்குடி மகாசந்நிதான அமரர் பிரான் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் நம்மிடையே ஆற்றிய அறிவுரை பற்றிப் பேராசிரியர் நினைவோட்டங் களைக் கொணருவார் எனச் சொல்லி உணவுக்காகக் கலைந்தோம்… ஆனால், தேர்தலில் உரிமையாய் வாக்களிக்கச் சாவடிக்கு வர, படித்தவர்களும் நல்லவர்களும் பொதுவாகத் தயக்கம் காட்டுவதால் பொல்லாதவர்கள் கள்ள ஓட்டுப் போட்டு விடுகிறார்கள்.”

இன்னோர் இளைஞர்

“அதுபோல, நிலா முற்ற அன்பர்கள் வாக்களிக்கச் செல்லத் தேர்தல் எதுவும் இப்போது நடக்கவில்லையே.. நம் திருக்குறள் பேரவையினர் தேர்தலைப் புறக்கணிக்க மாட்டார்கள். அது புனிதமான, குடியாட்சி உரிமை, கடமை என்றே கருதுவார்கள். எந்தத் தில்லுமுல்லுக்கும், பொய்ம்மை, கயமைக்கும் இணங்க மாட்டார்கள். அதை என் போன்ற இளைஞர் சமுதாயமும் கண்விழிப்போடு கட்டிக் காக்கும்.”

அரசு அதிகாரி ஒருவர்

“வாழ்க இளமைச் சமுதாயம்!” (கரஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“சமுதாயப் பிரச்சினைகளுக்கெல்லாம், திருக்குறள் வழியே தீர்வுகள் காண முற்படும் ஓர் இயக்கமே நம் திருக்குறள் பேரவை. சீரிய சிந்தனைகளும், உயரிய கோட்பாடுகளும் நிறைந்துள்ளது நம் நாடு; எனினும், அவை விடுதலைப் போர்க்கால இயக்கம் போல, இந்தக் குடியுரிமை ஆக்க நெறிக்குச் செயல்படாமல் போனதால், ஆளும் கட்சி, மாற்றுக் கட்சி என்றில்லாமல், ஆளுக்கொரு கட்சி என வேர்க் கொல்லிகள் புகுந்ததால் நம் ஜனநாயகம் சாக்காட்டை நோக்கிப் போகிறதே என நம் வணக்கத்திற்கு என்றும் உரிய அடிகளார் அவர்கள் பலமுறை நம் அரங்கங்களில் மட்டும் இன்றி – பேசும் மேடைகளில் எல்லாம் – உளம் வருந்தியது உண்டு, அவற்றுள் சில செய்திகளையாவது பேராசிரியர் சொல்லட்டும்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற அரசாகப் புதிய குடியாட்சி அமையும் எனச் சுதந்திரம் பெற்ற நாள் முதல் கனவு கண்டோம். ‘எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கும் இவ்வையகம்’ எனும் புரட்சிக் கவிஞர் உறுதியும், ‘முப்பது கோடியும் வாழ்வோம், வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’ எனும் மகாகவி சபதமும் நனவாகும் என நம்பினோம்.”

இடைமறித்த மூத்த அரசு அதிகாரி

“ஆனால், ஆண்டுக்கு ஆண்டு வறுமையும் வரிச் சுமையும்தான் அதிகரித்து வந்தன. எப்படியேனும் செல்வத்தைச் சேர்த்து அதைக் கொண்டு ஆட்சிச் செல்வாக்குப் பெற்று, அவரவர் அனுபவிக்கும் புதிய ஜமீன்தார் ராஜ்யங்களே உருவாயின.”

மற்றொருவர்

“செல்வச் செருக்காலும் அதிகார பலத்தாலும் தனிச் சலுகையோடு, நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் பலரிடம் நீடிக்கும் வரை, சமுதாயத்தில் சமத்துவம் நிலவாது. இந்நிலை மாறாத போது புள்ளி விவரப்படி உற்பத்தி பெருகினாலும், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடுவோர் எண்ணிக்கை குறையாது; புரட்சி ஓயாது. அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்படும் நிலை நீடிக்கும் வரை நியாயமான மக்களாட்சி மலராது.”

ஒருங்கிணைப்பாளர்

“சொல் வேறு, செயல் வேறு எனும் போக்கு உடையவர்கள் அரசியல் களத்தில் அதிகமாக நுழைந்தமை யால் ஏற்பட்டு வரும் அவக்கேடு இது. இதனைக் களைய வேண்டுமானால், வாக்காளர்கள், நல்லவர்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அடிகளார் வற்புறுத்தி வந்தார்கள்.”

பேராசிரியர்

“வள்ளுவர் மன்னராட்சிக் காலத்தே வாழ்ந்து சமுதாயக் கோட்பாடுகளை வகுத்தவர் எனினும்- குடிதழுவிக் கோலோச்சும் மக்களாட்சி முறையை, அப்போதே, முதன்முதலில் சொல்லிவிட்டார் என்பது அடிகளாரின் உறுதிப்பாடு. அவர் கொடுங்கோன்மை புரிந்த அரசுகளையும் அறிந்திருந்ததாலோ என்னவோ, அதனை நீக்கி- நல்லாட்சி நடத்தும் அரசை அமைப்பதே குறளின் குறிக்கோள் எனப் பல அதிகாரங்களில் வரையறுத்தார். இந்தக் குடியாட்சி வரையறுப்பின் அடித்தளம் வாக்காளர்கள். இந்த வாக்காளர்களின் அரசியல் அறிவு, தகுதி ஆகியவற்றிற்கு ஏற்பவே ஆட்சியும் அமையும்.”

மற்றொரு பேராசிரியர்

“மக்கள் ஆட்டு மந்தைகளாக இருந்தால் ஓநாய்களே ஆட்சிக்கு வருவார்கள் என்பது ஒரு மேலை நாட்டு அரசியல் ஞானியின் அறிவுரை” (அரங்கில் கர ஒலி)

பேராசிரியர்

“அடிகளாரின் கருத்தைத் தொடருகிறேன்; நாம் நமது நாட்டைச் சொத்தாகக் கருத வேண்டும்.”

ஒரு புலவர்

“அதனால்தான் அவரவர் பங்குகளைச் சுரண்ட ஆசைப்படுகிறார்கள்” (சிரிப்பலை)

பேராசிரியர்

“அடிகளார் பெருந்தகை நாடு நம் சொத்து என்பது போல, நாமும் நாட்டின் சொத்து எனப் பெருமையோடு கருதி, கடமைப் பொறுப்போடு செயல்படத் தூண்டி வந்தார். வளர்ச்சி எனும் திட்டப் பணிகளைக் காரணம் காட்டி இதுவரை நம்நாடு வாங்கியுள்ள வெளிநாட்டுக் கடன் சுமை எப்போது இறக்கி வைக்கப்படுமோ என ஏங்கினார். எனவே பொருளாதாரச் சீரழிவை இப்போதாவது தடுத்து வளம் செழிக்கும் பாதைக்கு நாட்டைக் கொணரவல்ல நல்ல ஆட்சியைத் திறம்படத் தேர்ந்தமைக்கப் பல உரைகளில் தொடர்ந்து மன்றாடினார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நம் நாட்டில் வசியும் வளனும் சுரப்பதை விட, நாள்தோறும் பசியும் பகையும் பெருகக் கண்டு, நம் அடிகளார் கண்ணீர் மல்கியதை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அதனால்தான் – நல்குரவோடு பல்குறைத் துன்பங்களும் சென்றுபடும் நிலை வந்தாக வேண்டும் என வலியுறுத்தினார்.”

பேராசிரியர்

“நமது நாடு பசி, பிணி, செறுபகை என்பனவற்றில் இருந்து விடுதலை பெறுவது ஒரு புறம் இருக்க, நாடு தழுவிய வளர்ச்சி நிலைபெற வேண்டுமானால், நமது நாட்டின் அளப்பரிய ஆற்றலான மனித வளத்தை மூலைக்கல்லாகக் கொண்டே இதர கட்டுமானங் களையும் முறையாக எழுப்ப வேண்டும் எனக் கட்டளையிட்டார், திட்டமும் தந்தார் மகா சந்நிதானம் அவர்கள்.”

பெரும்புலவர் செல்வ கணபதி

“அறிவியலையும் கிராமப்புறத் தொழில் களையும் ஓரணியில் கொணர்ந்து, புதுமையான வளர்ச்சித் திட்டங்களை…”

இடைமறித்த அன்பர்

“சுவாமிகளின் இந்த ஒருங்கமைப்புத் திட்டத்தைக் ‘குன்றக்குடித் திட்டம்’ (ரிuஸீக்ஷீணீளீuபீவீ றிறீணீஸீ) என மைய அரசே பாராட்டியது. ஆனால் வழக்கம் போல அத்திட்டத்தை ஊர்தோறும் வளர்க்காமல் தயங்கியும் நின்று கொண்டது.”

பேராசிரியர்

“அடிகளார் பெருந்தகை நம்மவர் உழைப்பெல்லாம்- சாதி – சமய – மொழிச் சிக்கல்கள் போன்ற வேண்டாத, உடனடிப் பயனற்ற, நாட்டுக்கு ஊனம் தரக்கூடிய பிரச்சினைகளிலேயே செலவிடப்பட்டு, விழலுக்கு இறைத்த நீராகிறதே எனவும் வேதனையுற்றார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நான் முன்பே குறிப்பிட்டது போல… ‘பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும்’ நம் நாட்டில்தான் அதிகம் என்பது அடிகளார் வருத்தம்.”

அரசு அதிகாரி

“நம் ஊர்களில் ஊர்வலமோ, போராட்டமோ, கோஷமோ, கொடி பிடிப்போ இல்லாத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் மனப்போக்கும் அப்படி, ஆட்சியாளர் மனப்பக்குவம் இன்மையும் அப்படியே.”

திருக்குறள் செம்மல்

“‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த, வகுத்தலும் வல்லது அரசு’ (385) – எனும் குறளில் குன்றக்குடி அடிகளார் ‘வகுத்தல்’ எனும் சொல்லுக்கே, செயலுக்கே அதிக அழுத்தம் தருவார். நாட்டில் உருவாக்கப்பெறும் உற்பத்திப் பொருள்கள் எல்லாம் உரியவாறு மக்கள் நுகர்வுக்குப் பயன்படுவதில்லையே? செல்வம் மறுமுதலீடாக மீண்டும் சுழற்சிக்கு வருவதில்லையே? வேலை வாய்ப்பும் பெருகுவதில்லையே! என்பது அடிகளாரின் வள்ளுவச் சிந்தனை, ஏக்கம்.”

பேராசிரியர்

“நமது நாட்டில் ஆட்சியை அமைக்க உதவும் களம்- தேர்தல், அத்தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு ஏற்கக் கூடிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க உதவும் உரிமை – வாக்குச்சீட்டு. ஆற்றல் மிக்க, புனிதமான இந்த வாக்குச் சீட்டால் நல்லவரை, ஒழுக்கத்திலும் செயலிலும் வல்லவரைத் தெரிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த நல்லவர் – தனி நபராக ஒற்றைப் பனையாக நின்றால் ஏதும் செய்ய முடியாது. ஏனெனில் குடியாட்சியின் கட்டுமானம் – கட்சி அமைப்பு. நாணயமானவர்கள் இடம்பெற அதிக அளவில் முன்வந்தாக வேண்டும் என்பது அடிகளார் அவர்களின் விருப்பம். அப்போதுதான், ‘சான்றோர் பழிக்கும் வினை’ என்பன தொடரமாட்டா. வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே. அதை நிறைவேற்றாத வரை நாணயமானவர்கள் என எப்படி ஏற்க முடியும்?”

ஒருங்கிணைப்பாளர்

“இதற்கெல்லாம் அடிப்படை நல்ல குடிமக்களாக நாம் அமைவதுதான்.”

இடையில் ஒருவர்

“இப்பொழுது குடிமகன்கள் நிறையப் பேர் பாதையெங்கும் காணப்படுகிறார்கள். அத்தகையவர் களுக்குப் பஞ்சமே இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்ல செங்கற்களால் நல்ல கட்டிடம் எழும்பும். அது போல நல்ல குடிமக்களால் – ‘வரப்புயர’ என ஔவை சொன்னது போல – வீடும் நாடும் உயரும். நாடு என்பதன் நுண்துளி வட்டம் அவரவர் குடி எனும் குடும்பம். எனவேதான் வள்ளுவர் ஒவ்வொருவரும் உழைப்பால் தம் நிலையை உயர்த்தி – தாம் பிறந்து வளரும் குடியையும் மேம்படுத்த முற்பட்டாலே – நாடு தானாகச் செழித்தோங்கும் எனக் குடிமைப் பண்பை வலியுறுத்தினார். அத்தகையோர் பருவம்- காலம் – பொழுது பாராமல், கடுமையாக உழைத்துக் குடிமானம் காப்பர். ‘பொதுப்பணியில் கடமையைச் செய்யச் சோர்வடைய மாட்டேன்’ என நினைத்தாலே – முற்பட்டாலே – அதைவிடப் பெருமையின் பீடுடையது இல் என்று ஊக்கு விக்கிறார் வள்ளுவர். இந்த நாட்டின் ஒவ்வொரு உரிமை மகனும், மகளும் தன்னலம் இல்லா உழைப்பால், நிர்வாகத் திறமையால், வளர்ச்சி மேலாண்மையால் தன் குடியை நிமிர்த்தி – நாட்டையும் உயர்த்த – பெருமையுடனும் உறுதிமாறா வீரப்பொறுப்புடனும் மார் தட்டிப் புறப்பட்டு அணிவகுத்தால் நம் இந்தியத் திருநாடு, பாரதி பாடியது போல் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ ஆகும். நம் பெருமைக் கெல்லாம் உரிய தாயகம் ஆகும். என நம் தவத்திரு அடிகளார் கண்ட கனவை, அதற்கும் பல ஆண்டுகட்கு முன்னரே, ‘மண் பயனுற வேண்டும் – வானகம் இங்கு தென்பட வேண்டும்’ என மகாகவி பாரதி வேண்டிய வரத்தை – நம் காலத்திலேயே நாமே நடைமுறை ஆக்க உறுதி பூணுவோம். அதில் வெற்றியும் காண்போம். இந்த உறுதியுடன் நிலா முற்ற அரங்குகள் பலவற்றில் ஒன்று கூடிச் சிந்தித்து ஒரு புதிய இலட்சிய ஓவியத்தை வரைந்து தந்துள்ள உங்கள் அனைவர்க்கும், வானொலிக்கும், உலகத் திருக்குறள் பேரவை சார்பாக உளமார்ந்த நன்றி கூறுகிறேன். நமது நிலா முற்றம் மீண்டும் ஒரு முழுநிலா இரவில் கூடும். வள்ளுவரின் நிருவாகவியல் சிந்தனைகள் பற்றியும், திருக்குறளைத் தேசிய நூலாக்குதல் பற்றியும் ஆராயும், ஆவன செய்யும். ‘புகழ்ந்தவை போற்றிச் செய்தல் வேண்டும்’ எனும் வள்ளுவ வாழ்த்துடன் விடை பெறுவோம்.”

650total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>