குறள் நிலா முற்றம் – 4

ஒரு பேராசிரியர்

“நான் ஒரு கருத்தைக் கூறலாமா? வள்ளுவம் சொல்வது புறவாழ்வில் காணப்படும் போலியான தொரு பொதுமைப் பார்வை இல்லை; ஒவ்வொரு நபரின் தனி நெஞ்சத் தூய்மை! ஒரு சமூகத்தில் வாழும் மனிதரிடையே மொழி, மதம், குலம், கட்சி எனப் பல வகையால் முரண்பாடும், வேறுபாடும் தலைதூக்குவது உலகியற்கை. மனமாசு குறைவுபட்டால், எவ்வகை வேற்றுமை யிடையேயும் உறவு பூணவும், உதவி செய்யவும் சிந்தை மலரும்; செயலாக வளரும்.

எனவே, திருக்குறளுக்குச் சாதி, சமயம் என்றெல்லாம் சாயம் பூசும் ‘பொதுமை’ நிலைக்களம் இல்லை; மக்கள் மனமே நிலைக் களம். ஆளுக்கொரு மனம் உடைய அந்தப் பன்மை நிலைக்களம். நம் மனதில் கணந்தோறும் விரிந்து பரவும் நல்ல, தீய எண்ணங்கள் என்பன நிலைக்களம். பொதுமைக்குள்ளே பகைமையும் வேற்றுமைக்குள் நட்புறுதியும் கண்ட மனநல அறிஞர் வள்ளுவர். ஆதலால், தனித்தனி நபர்களின் வஞ்சனையை மாற்றி, நெஞ்சத் தூய்மை செய்வதே அவரது நூலின் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“தன் நெஞ்சறிவது பொய்யற்க”      (குறள் 293)

“நெஞ்சில் துறவார் துறந்தார் போல”  (குறள் 276)

“மனத்தது மாசாக மாண்டார் நீராடி”  (குறள் 278)

“வஞ்சக மனத்தான் படிற்றொழுக்கம்” (குறள் 271)

“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”        (குறள் 786)

எனப் பல்வேறு குறள்களில் நெஞ்சத்தையே வள்ளுவர் சுட்டிப் பேசுகிறார் என்பதை நாம் ஏற்கலாம்.”

வள்ளுவர் மருத்துவரா? மனநலச் செம்மலா? – ஒரு குரல்

“வள்ளுவரை மருத்துவராகவும், திருக்குறளை மருந்துக் கடையாகவும் உவமித்துள்ளதைச் சொன்னார்கள். அதுபற்றி மேலும் சிந்திக்கலாமே..?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல அவர் உடற் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார். மருத்துவர் என்ன செய்கிறார்? மக்கள் உடலையும், பல்வேறு உறுப்புக்களையும் நிலைக்களமாகக் கொண்டு, நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார் அவர், உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார். பசி, உறக்கம், செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கேற்ப சிகிச்சை தருகிறார். இவ்வாறு தன்னிடம் நலம் நாடி வரும் நோயினர் அனைவர்க்கும் சாதி சமய வேறுபாடு கருதாது சிகிச்சையளிக்கும் மருத்துவரைப் போல, வள்ளுவரும் நம் சமுதாய, தனிநபர் நடப்பியலுக்கேற்ற நலம்தரும் நடைமுறைகளைத் தொகுத்துரைக்கிறார். மருத்துவர் கைநாடி பார்க்கிறார்; வள்ளுவர் நம் மன நோயை நோக்குகிறார். இரண்டும் பணி முறையில் ஒன்றுதான்; முழு நலம் பெறுவதே முதன்மை நோக்கம்.

இன்று நம் நாட்டிலும் உலகிலும் காணும் இன, மொழி, சமய, மாறுபாடு வேறுபாடுகள் எல்லாம், பூசல்கள் எல்லாம் எரிமலை போன்றவை. மனதுக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் போராட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள். பிரஷர் குக்கரில் மூடிவைத்துள்ள பாத்திரத்தைச் சற்றே திறந்தவுடன், அது பெருமூச்சுவிட்டு ஆவியைக் கக்குவது போல, சந்தர்ப்பம் ஏற்படும்போது உள்ளக் கொதிப்பெல்லாம் கலவரமாக, போராக வெடிக்கிறது. அமைதி அமைதி என நாடு கூட்டிப் பேசிக் கொண்டே, அணுகுண்டுகளையும் பேரழிவு ஆயுதங்களையும் ஏவும் அச்சம், அபாயம் பரப்பப்படுகிறது. நல்லரசுகள் கூட, வல்லரசுகளாக அரக்க ஆட்சி நடத்தத் துடிக்கும் பேரபாயம் உலகை நடுங்கச் செய்து வருகிறது. மக்களது தனி நல்வாழ்வு எனும் கல்லறைகள் மீது பொறாமை எனும் போலி ஆதிக்கக் கோபுரமே எழுப்பப்படுகிறது. எனவே நீரினைத் தேக்கி வைக்கும் ஊருணியைத் தூய்மை செய்யாமல் அதனை ஊருக்குக் கொணரும் வாய்க்கால்கள், குழாய்களை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? எனவே ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்பது போல பொதுமை நோக்கோடு, தனிமனித நெஞ்சங்களையும் நிமிர்த்தவே முற்படுகிறார்.

‘மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்பதைத் தானே வள்ளுவமும் பிற அறநூல்களும் கூறியுள்ளன..?” என்று திசை திருப்பினார் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அன்பர் ஒருவர்.

பலரது உதவியும் தன்முயற்சியும் கூடி அமைந்ததே வாழ்க்கை என்பதைத்தான் குறளும் அதைத் தொடர்ந்த நம் அறநூல்களும் கூறியுள்ளன; நம் இலக்கியங்களும் பேசியுள்ளன.

ஒருங்கிணைப்பாளர் 

“உணர்வுக்கும் கற்பனைக்கும் தலைமையிடம் தந்து அமைவன இலக்கியங்கள்; சிந்தனைக்கும் அறிவுக்கும் முதலிடம் தந்து தொகுக்கப்படுவன நீதி நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியன. சமுதாயத்தில் வாழும் மனிதனுக்குரிய எல்லாச் சமுதாய ஒழுகலாறுகளையும் தனிமனித வரையறை களையும் விரித்து விளக்கி, தொகுத்து வகுத்துக்கூற வேண்டியவை அறநூல்கள். இந்த நீதி நூல்கள் சான்றோர் சிந்தனையிலும் தோன்றலாம்; சமூக நலனுக்காக நாளடைவில் உருவான பழக்க வழக்கங்களாலும் அமையலாம். இவை வாய்மொழி களாகவே தொடர்ந்ததால் பழமொழிகள், மூதுரைகள் என அழைக்கப்படுகின்றன.

திருக்குறளுக்கெல்லாம் முற்பட்ட நம் சங்க இலக்கியங்களில், ஆங்காங்கு அறநெறி முறைமைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன.

“அறநெறி இதுவெனத் தெளிந்த” என ஐங்குறுநூறும்,

“அறங்கடைப்பட்ட வாழ்க்கை” என அகநானூறும்,

“அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்” எனப்

பொருநராற்றுப்படையும்

என ஒரு புலவர் ஆதாரச் சீட்டுடன் படிக்கத் தொடங்கி விடவே அவரை இடைமறித்த ஒரு கல்லூரிப் பேராசிரியர்,

“அதுதான் எல்லோரும் நன்கறிந்த புறநானூற்றுப் பாடலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் போற்றத்தகும் வாழ்க்கை முறையாகச் சொல்லப்பட்டு விட்டதே? அதைத்தானே செங்கல் அடுக்குப் போலத் தாங்கள் படித்துக் காட்டிய ஆதாரங்களும் வலியுறுத்துகின்றன.”

ஓர் அன்பர்

“ஐயா செங்கல் அடுக்கு என்றதும் நம் தவத்திரு அடிகளார் ஆற்றிய அருளுரை ஒன்று நினைவில் மறிக்கிறது. அதைச் சொல்ல நிலா முற்ற அன்பர்கள் சற்றே அனுமதிக்க வேண்டும்.”

ஓர் இடைக்குரல்

“ஐயா ஏதோ செங்கல் கட்டுமானம் பற்றிப்  பேசுகிறார், கேளுங்கள்.”

முன்னவர் தொடர்கிறார்

“ஆயிரமாயிரம் செங்கற்கள் குவிந்து கிடந்தாலும் தாமாக அவை கட்டிடமாவது இல்லை! அவற்றை நூல் பிடித்து அளந்து முறையாக அடுக்கிச் சந்து பதிந்தால்தான், சுவரை எழுப்ப முடியும். உடைந்த செங்கற்களையும் முழுச் செங்கற்களையும் இணைத்து, இடைவெளி ஏற்படும் இடங்களில் சுவரது தேவைக்கேற்றபடி முழுச்செங்கலையும் கையில் உள்ள பூசு கரண்டியால் உடைத்துப் போட்டுச் சந்துகளை நிரப்புகிறார்கள் கொத்தனார்கள். அது போல மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயமெனும் சுவரைக் கட்டிஎழுப்ப ஒத்துழைக்க வேண்டும். தானும் முன்வர வேண்டும். உடைந்த செங்கலையும் முழுச்செங்கல்லையும் இணைத்துக் கட்டிடத்தை எழுப்புவார் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவர்களையும் வலிமை அற்றவர் களையும் இணைத்து, ஒருசேர வளர்ச்சி வலிமை நோக்கிக் கூட்டிச் செல்லுபவரே சமுதாயத் தலைவர்; சரியான வழிகாட்டி.”

“அதைத்தானே ஐயா அரசியலிலும் சமதர்மம்எனப்புதுப் பெயரிட்டுச் சொல்லுகிறார்கள். பொதுவுடைமை எனப் போதிக்கிறீர்கள்..!” என இடைச்செருகலானார், ஒரு கல்லூரிப் பொருளாதாரப் பேராசிரியர்; ஒருங்கிணைப்பாளர் கருத்துத் தொடர்ச்சியை இட்டு நிரப்பினார்.

ஒப்புரவு ஒப்பற்றது

‘சோசியலிசம்’ என்ற ஆங்கிலச் சொல் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து, உள்ளம் ஒன்றிப் பழகும் பண்பாட்டைக் குறிப்பதாகும். சமுதாயத்தையே நேசிக்கும் நெறியைப் போற்றுவது ஆகும். இதைத்தான் வள்ளுவர் ‘ஒப்புரவு’ எனக் குறிப்பிடுகிறார். நம்மோடு உள்ள மற்றவர்களோடு சேர்ந்து பழகும்போது அப்படிச் சேர்ந்து வாழ்வதனால் ஏதேனும் இடர்களோ, கேடுகளோ விளையுமானாலும் அவற்றைக் கூடுதல் பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே  வலியுறுத்துகிறார்.

‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ என்கிறார் வள்ளுவர். ‘ஒத்தது அறிதல்’ என்பதற்குப் பொருள் மற்றவர்களுக்கும் ஏற்புடையதைப் புரிந்து கொண்டு பழகுதல் என்பதுதான். அப்படி மற்றவர்களுக்கும் ஒத்ததை அறிந்து இணங்கி விட்டுக்கொடுத்து வாழ முனைவதுதான் உண்மையிலேயே நாம் உயிர்வாழ்தல் எனப்படும்.”

உடன்பாட்டோடு தொடரும் திருக்குறள் பேரவையின் அன்பர் ஒருவர் கூறுவது:

“அதாவது பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டாலும் பொறுத்துக் கொள் என்கிறார் வள்ளுவர். மனிதனையும் மனிதனையும் இணைத்துச் சமுதாயம் எனும் கட்டிடத்தை உருவாக்க இப்பொறுமைப் பண்பு, பெருமிதச் சால்பு மிகவும் அவசியம் என்பதே அவர் கூறும் ஆக்கநெறி.”

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

“நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் அறிவித்தவர் வள்ளுவர் என்பதை அறிவோம். நண்பர் ஒருவர் நஞ்சு கலந்த பானத்தைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்துவிடு; நஞ்சு கலந்தது என்று அஞ்சாமல் பருகிவிடு என்று கூறுகிறார்.”

 

 

 

ஓர் அன்பர்

“ஏனய்யா அப்படிச் சொன்னார்…?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவரின் இந்தக் கருத்து சங்க இலக்கியத்தில் உண்டு; பின்னர் வந்த பெரிய புராணத்தில் ‘தத்தா நமர்’ என்று தொழுத கையுள் படையொடுங்கிடக் கண்டும் பண்போடு சாகும் முன் அன்போடு மன்னித்த மன்னன் வரலாற்றில் உண்டு.”

 

இடையே ஒருவர்

“சாக்ரடீஸ் கதையும் அப்படித்தான். அதைத்தான் வள்ளுவர் முன்பே வலியுறுத்தினார்.”

“நஞ்சு கலந்தது என்று நன்கு தெரிந்தும் தெரியாதவர் போல, அந்த நினைப்பிற்குள் சிக்காமலே பருகி விடு என்கிறார். நஞ்சு கலந்தது என நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரத் தொடங்கும். நஞ்சு கலந்தது என்பதைத் தெரிந்து கொண்டோமோ என அதைக் கலந்து வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் அஞ்சுவார் அல்லது வருந்தி உளைச்சலுக்கு ஆளாவார். அந்த வருத்தத்தைக் கூட அவருக்குத் தரக்கூடாது என உறுதியாயிருக்க வேண்டுமாம். அதனால் என்ன பயன்? நஞ்சு கலந்தது என்று நினைத்து அஞ்சாமல், வருவது வரட்டும் எனப் பருகி விட்டால், மரண பயத்தைக் கடந்தே துணிந்தால், அந்த நஞ்சு கூட ஒருவரைக் கொன்று விட முடியாது. தக்க சிகிச்சை பெறும்வரை நஞ்சையும் முறித்து உயிர் காக்க வல்லமை நெஞ்சத்தில் உறுதியாக நிலைகொள்ளும் என்கிறார். நஞ்சையும் அஞ்சாது பருகுவதால் அதைச் சற்றாவது முறிக்கும் வலிமை செங்குருதிக்கு உண்டாகி விடுமாம்.”

“ஆமாங்க, புலியடிச்சுச் சாகிறவனை விட கிலி பிடிச்சுச் செத்தவன்தாங்க அதிகம்” என ஒருவர் இடை மறிக்க, நிலா முற்ற அவையில் சிரிப்பு அலைகள் பரவின.

ஒரு சிவநெறிச் சீலர் நீறுபூசிய நெற்றி யுடையவராய்ப் பணிவோடு எழுந்தார், பகர்ந்தார்:

“அவையோரே… நம் அப்பர் சுவாமிகளுக்குக் கூட நஞ்சு கொடுக்கப்பட்டதைச் சேக்கிழார் பாடியுள்ளாரே?

அப்பர் அடிகள் நஞ்சுண்ட பின்னரும் சாகாமல் நமசிவாய மந்திரத்தையல்லவா உச்சரித்தார்?”

இன்னொருவர்

“அப்பரடிகள் போல நஞ்சுண்போர் எல்லாம் நமசிவாய மந்திரத்தால் மட்டும் பிழைத்துவிட்டால், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு ஆளைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய அவசியமில்லையே! நாமெல்லாம் அப்பரடிகள் போலவோ சாக்ரடீஸ் போலவோ இருந்துவிட முடியுமா..?”

மற்றொருவர்

“நாம் என்ன நஞ்சு சாப்பிடாமலா இருக்கிறோம்? இன்று நாம் உண்ணும் சாப்பாட்டில் கலப்படம்; நோய்க்குப் பருகும் மருந்தில் கலப்படம்; பல்துலக்கக் காலையில் உபயோகிக்கும் பற்பசை தொட்டு அனைத்திலும், நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை, ரசாயனக் கலவையை, தெரிந்தும் தெரியாமலே உட்கொண்டு எப்படியோ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”

ஓர் அன்பர்

“ஐயா தம் வீட்டில் மனைவி சமைத்துத் தரும் சாப்பாடு பிடிக்காமல் அப்படிச் சொல்லுகிறார் என நினைக்கிறேன்.”

(அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

 

“இந்த விவாதத்தை வள்ளுவரின் குறளோடு அதாவது,

‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

 நாகரிகம் வேண்டு பவர்”      (580)

என்பதோடு தொடர்வோம். அன்பும் அருளும் இரண்டற இணைந்ததே அந்த நயத்தக்க நாகரிகம். அத்தகைய நல்வாழ்வு வேண்டும். அதை நாடும் மனமாவது வேண்டும் என்பதே குறள் முதலிய நம் நீதி நூல்களின் தொடர்ச்சியான உருவாக்கத் திற்கான காரணம் எனக் கருதலாம். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் நேரிடும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவனவே குறள் உள்ளிட்ட நமது நீதி நூல்கள். வீட்டிலும், நாட்டிலும் மனம் பண்பட்டதொரு நாகரிகம் மலர வேண்டும் என்பதே தமிழில் ஒரு தொடர் போலத் தொகுக்கப்பட்ட நீதி நூல் ஆக்கங்களுக்கான அடிப்படைக் காரணம். வேறு மொழி எதிலும் காணப்படாத புதுமை இது!”

(  தொடரும் )

4955total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>