குறள் நிலா முற்றம் – 7

 

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைக்குப் புகழ், பாராட்டு என்பதெல்லாம் பணபலமோ, ஆட்பலமோ உள்ளவர்களின் கைக்கருவியாகி விட்டது உண்மை. செய்தித் தாள்கள் போன்ற ஊடகங்கள் அவர்களுக்கு விலைபோகி விடுவதும் மறுக்க முடியாத நடைமுறை. அவையோர்க்கு இங்கே ஒன்றை நினைவூட்டுவது என் கடமை. மேலும், இது குறள் நிலா முற்றமாக இருப்பதால், புகழ் – போலி என்பதைப் பற்றிய வள்ளுவர் கருத்தைச் சுற்றி வருவதைவிட, வள்ளுவப் பெருந்தகை புகழுக்கு ஊறு செய்பவை என எவ்வெவற்றைப் பட்டியலிட்டாரோ அவற்றையும் இன்றைய வாழ்வோட்டத் தோடு கருதிப் பார்க்கலாம்.”

புலவர் இடைமறித்து

“‘திருக்குறள் செம்ம’லின் கருத்தை நான் வழிமொழிகிறேன். வள்ளுவப் பேராசான் ‘பிறன்மனை விழைபவன், என்றும் நீங்காப் பழியை எய்துவான்’ என எச்சரித்தார். ஆனாலும் இன்று பிற நங்கையரை அவமானப்படுத்துவது ‘ஈவ் டீசிங்’ (பெண் சீண்டல்) எனும் புதுப்பெயரில் விளம்பர மாகப் பிரபலமாகி வருகிறது. தவறு செய்பவர்கள், சிறிய தண்டனைக்குப் பின் மீண்டும் வேறு வழியில் புகழேணி தேடிக் கொள்ளுகிறார்களே..!”

ஒருவர் இடை மறித்து

“புகழ் ஏணி அல்ல… ‘புளுகு ஏணி’ என்று சொல்க” (சிரிப்பலை)

புலவர்

“ஐயா சுட்டிக்காட்டியது போல… ‘ஒறுத்தார்க்கு ஒரு நாள் இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்’ (156) என்றார் வள்ளுவர்.

ஆனால், இன்று அரசியல்வாதிகள், சாதி, வர்க்கம், மதம், ஆசாரம் எனும் பல பெயர்களால், பின்னணியால் பிறரைத் துன்புறுத்திச் சுகம் தேடி விட்டுப் பின்னர் பணத்தாலும், அதிகாரச் செல்வாக்காலும் தமக்குத் தனியாகத் தணியாத தொரு புகழைத் தேடிக் கொண்டு விடுகிறார்கள்; உண்மைப் புகழைக் கொன்று புதைத்தும் விடுகிறார்கள். இதுதான் கண்கூடு.”

மற்றொருவர்

“‘வறியார்க்கு ஒன்று ஈவதே புகழ், ஈகையால் வருவதே புகழ்’ என்பவையெல்லாம் பழைய புராணங்கள்… இன்று புகழின் மறுபெயர்.. அப்பட்டமான, அறுவெறுப்பான விளம்பரம் என்று சாதனைப் பண்டங்களைப் பெரிதாக விளம்பரப்படுத்திப் பொருள் குவிப்பதைப் போல, அற்பமான செயல்களைப் பெரிய சுவரொட்டி களால் விளம்பரப்படுத்தி இப்போது சுய விளம்பரமும் ஆதாயமும் தேடுகிறார்கள். சினிமா விளம்பரமாகிவிட்ட இந்த மாய வலையில் நம் தமிழகத்து இளைய சமுதாயமும் மயங்கி விழுந்து வருவதுதான் என் போன்ற வயதானவர்களுக்கு வருத்தத்தை, துயரத்தைத் தருகிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“புலவர் ஐயாவின் மனத்துயரை நாமும் பங்கிட்டுக் கொள்ளுவதே நியாயம். இதனை வள்ளுவர் அன்றே தெளிந்திருந்தார் என்றே கருத வேண்டியுள்ளது.”

புலவர்

“‘திருக்குறள் செம்மல்’ புதிர் போடுகிறாரா?”

ஒழுக்கமில்லாமலே விழுப்பமா?

ஒருங்கிணைப்பாளர்

“புதிர் அல்ல புலவர் ஐயா, வள்ளுவர் அதிகார முறைவைப்பை நினைத்து இக் கருத்தைச் சொன்னேன்.”

ஒரு குரல்

“சொல்லுங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘புகழ்’ என்பது ஒருவருடைய அற ஒழுக்கத்தால் விளையும் நல்ல பயிர். எனவேதான் வள்ளுவர் பொது வாழ்க்கைப் பகுதியாகிய பொருட்பாலில் அதைச் சேர்க்காமல் அற வாழ்க்கை அடிப்படைகளான இல்வாழ்க்கை, ஒப்புரவு, ஈகை என்பவற்றோடு புகழையும் ஓரதிகாரமாக இணைத்துப் புகழை உயர்த்தி வைத்தார், ‘ஈதல் இசைபட வாழ்தலே புகழ்’ என்றார் (கைதட்டல்). இக்கருத்தைச் சொன்ன அறிஞர் மு.வ.வை நினைவு கூர்வோம்.”

வருமான வரித் துறை அதிகாரி

“தாங்கள் சரியான இடத்தில் அறிஞர் மு.வ.வின் கருத்தை, வள்ளுவர் புகழை அறத்துப்பாலொடு அன்று சேர்த்தமை போல, இன்று செய்து விட்டீர்கள். இப்போது மு.வ. எழுதிய மற்றொரு கருத்தை என் நினைவில் உள்ள வரை சொல்ல ஆசைப்படுகிறேன். ‘ஒழுக்கம் உடையவர்கள் மூலையில் கிடக்க, ஒழுக்கமற்ற சிலரைச் செய்தித் தாள்களும், வார இதழ்களும் வானளாவப் புகழ்ந்து பாராட்டுகின்றன. அவற்றின் விளம்பரங்களைப் படித்து, அந்தப் புகழுரைகளை உண்மை என நம்பிவிடுகிறார்கள் பொதுமக்கள்.’ இப்படிப்பட்ட சிலரைப் பார்த்துக் கேட்கும் இளைஞர்களின் மனதில் ஒரு திகைப்பு ஏற்படுகிறது. ஒழுக்கம் இல்லாமலே விழுப்பம் பெறமுடிகிறதே என்று எண்ணிப் பார்க்கிறார்கள். உடனே அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை தளிர்க்கிறது. புதிய ஆராதனையாகப் போலிகளுக்கு போஸ்டர் ஒட்டப் போய்விடுகிறார்கள்.”

வாக்குச் சீட்டின் வலிமை தெரியாமை

ஒருங்கிணைப்பாளர்

“வருமான வரித் துறை ஆணையர் கூறிய கருத்தை யாரும் மறுக்க முடியாது. இச்சமயத்தில் என் இனிய நண்பரும் இளைய சமுதாயத்தைப் பார்த்து ‘உன்னால் முடியும் தம்பி’ என நம்பிக்கை எழுச்சி ஊட்டிட ஓயாது முற்பட்டிருப்பவருமான திரு.எம்.எஸ்.உதயமூர்த்தி கூறிய கருத்தைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். அவர் சொன்னார்:

‘அரசியல் விழிப்பில்லாத நாட்டில், தங்கள் வாக்குச் சீட்டின் வலிமையை உணராத மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில், தலைவன் என்பவன் தான்தோன்றியாகப் போகவும், தாறுமாறாகப் புகழ் தேடவும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு..’ அந்தப் புகழோசைகள் தான் இன்று எங்கும் எதிரொலிக்கின்றன; நம்மைச் செவிடுகள் ஆக்குகின்றன.”

(ஓய்வு பெற்ற பேராசிரியர் முற்றத்தில் சேருதல்)

ஒருங்கிணைப்பாளர்

“நம் பேராசிரியர் இப்போது தான் வந்து அரங்கில் நம்மோடு அமர்ந்துள்ளார். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் அவர் தம் கருத்தையும் சொல்லட்டுமே.”

பேராசிரியர்

“நிலா முற்றத்தின் தொடக்கத்திலேயே வர முயன்றேன். ‘ஙிமீttமீக்ஷீ றீணீtமீ tலீணீஸீ ஸீமீஸ்மீக்ஷீ’ எனும் ஆங்கிலத் தொடர் போல சற்றே தாமதமானாலும் நிலா நீலவானின் உச்சிக்கு வரும் முன்னர் ஓடி வந்துவிட்டேன்; சற்று உங்கள் விவாதப் போக்கை உன்னிப்பாகக் கேட்டேன். ‘திருக்குறள் செம்மல்’ என் கருத்தையும் கேட்கிறார். நாம் நாடு விடுதலை பெற்றுப் பொன்விழாக் கண்டு, மணிவிழா ஆண்டினை இப்போது நெருங்கிக் கொண்டிருக் கிறோம்.”

இடைமறித்த நடுவர்

“தம்பதியர்க்கு மணிவிழாப் போல, தாய்நாட்டுக்கும் மணிவிழாக் காண்போம்.”

ஒருவர்

“பேராசிரியர் கூறியபடி இப்படி விழாக்கள் காணும் ஆரவாரத்திலேயே வீண் பொழுது போக்கி விட்டு கடமையைச் செய்து விட்டதொரு போலியான மதர்ப்பிலேயே நாட்களை ஓட்டி வருகிறோம். வளரும் தலைமுறைக்குத் தவறான வழிகாட்டி வருகிறோம்.”

புலவர்

“பேராசிரியர் ஐயா அவர்கள் அரசியல் கற்றவர். புதிராகச் சொல்லாமல் புரியும்படி சொல்லுமாறு வேண்டுகிறேன்.”

எத்தனை எத்தனை பேதங்கள்?

பேராசிரியர்

“உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளுகிறோம். ஆனால், எதிலும் கட்டுப்பாடற்ற, நேர்மையற்ற நடவடிக்கைகளால், நம்மையும் நாட்டையும் நாமே சீர்குலைத்து வருகிறோம். நம்மிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சீன நாடு மிகப்பெரியதொரு வல்லரசாக, கட்டுக்கோப்புடன் உயர்ந்து வருவதைக் கண்டும் காணாதவர்களாய் ஊமையராய், செவிடராய் வாழ்கிறோம், வளர்கிறோம்.”

புலவர்

“நம் மக்கள் ‘ஆட்டுமந்தைகளைப் போல’ இருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன்.”

பேராசிரியர்

“இன்றைய நடப்பு அப்படித்தான் சொல்லத் தூண்டுகிறது. மந்தை மனப்பான்மையே புரையோடி வருகிறது.”

புலவர்

“ஏதோ.. சந்தை மனப்பான்மைப் பொருளாதாரம் என்கிறார்களே..?”

இன்னொருவர்

“புலவரய்யா… பேராசிரியர் தம் கருத்தைச் சொல்ல விடுங்கள்! நீங்கள் குறிப்பிட்டது சந்தை மனப்பான்மை அதாவது ‘விணீக்ஷீளீமீtவீஸீரீ ணிநீஷீஸீஷீனீஹ்’ என உலகையே பெரியதொரு சந்தையாக மாற்றிவரும் பொருளாதார ஆதிக்கம். பேராசிரியர் சொல்ல வந்தது…”

பேராசிரியர்

“நம் மக்களின் இன்றைய மனப்போக்கு சந்தை மனப்பாங்கு. அதாவது தேர்தலில் வாக்காளர்களும் தேர்தலுக்குப் பின் தேர்வு பெற்றவர்களும் விலை போவது என்பதெல்லாம் விபரீதப் போக்குத் தான். அந்தச் சந்தை அல்லது மொந்தை மனப்போக்கைத்தான் ‘மந்தை மனப்பான்மை” என்கிறேன்.

வருமான வரி ஆணையர்

“இப்படி ‘ஆட்டு மந்தைகளாக இருக்கும் சமூகத்தவர்க்கு ஓநாய்களே தலைவர்களாக வருவார்கள்’ என்றான் மேலை நாட்டு அரசியல் அறிஞன் ஒருவன்.”

புலவர்

“ஐயா, மிக அருமையான மேற்கோளைத் தூக்கிப் போட்டுவிட்டார். நம் மக்கள் ஆட்டு மந்தைகள் போல கட்சிக் கட்டுப்பாடு, ஆட்சிப் பொறுப்பு எனும் வகைகளில் ஆட்டுவிக்கப்படும் தலையாட்டி பொம்மைகளாகவே இருக்கிறார்கள். ‘வாக்கு’ எனும் புனிதமான உரிமைச் சீட்டைப் பொறுப்புணர்வோடு பயன்படுத்தத் தெரியாமையால் அல்லது அறியாமையால், இன்னும் சொல்லப் போனால்  வாக்காளர்கள் தேர்தல் காலங்களில் முட்டாள்கள் ஆக இருப்பதால், அயோக்கியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகிறார்கள்.”

“புலவர் ஐயா என் கருத்தையே எதிரொலித்தார். ஆட்டுமந்தைச் சமுதாயம் ஓநாய்களின் தலைமையில் ஊர்வலமாகப் போகும் பரிதாபக் காட்சியே அண்மையில் பல மாநிலங்களில் அரங்கேறி வருகிறது. நம் ஜனநாயகம் பண நாயகத்தாலும் அடியாட்களின் பலமான ஆதிக்கத்தாலும் மூலையில் அடங்கிக் கிடக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையின் ஓரங்களிலேயே ஒதுக்கப்பட்டுள்ளார்கள்; ஒடுக்கப்பட்டும் வருகிறார்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“இதனை அமரத்துவம் பெற்ற மகா சந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ‘வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்’ எனும் கையேட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக்காட்டியுள்ளார். அந்தச் சிறு நூலைக் கையோடு கொண்டு வந்துள்ளேன்.”

நூலை எடுத்து, பக்கத்தைப் பிரித்து முன்னால் அமர்ந்துள்ள திருக்குறள் பேரவை இளைய அன்பரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்ல, அவர் படிக்கிறார்.

அது எழுத்தில் மட்டுமே இருக்கும்!

“அரசியல், பொருளாதார, சமுதாயப் பிரச்சினை களுக்குத் திருக்குறள் வழியாகத் தீர்வுகள் காண- வழிகாட்ட – முயன்று வரும் இயக்கம் ‘திருக்குறள் பேரவை’. உயர்ந்த சிந்தனைகளும் சீரிய கோட்பாடுகளும் நிறைந்து கிடக்கும் இந்த நாட்டில் அவை செயல்படாமல் போனதால் வறுமையும் அறியாமையும் தொடர்ந்து நிலவி வருகின்றன. உழைக்கும் மக்களில் மிகப்பெரும் பான்மையினர் தொடர்ந்து ஏழைகளாகவே உள்ளனர். சிந்தனை யாளர்களில் பலர் இத்தகைய அவலங்களைக் கண்டும் கையறு நிலையில் புலம்புவதும் தொடர்கிறது.

எந்த வகையிலேனும் பொருட் செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டால், அதன் மூலம் ஆட்சியின் செல்வாக்கைப் பெற்று அனுபவிக்க முடியும் என்ற நிலை, தனி உடைமைச் சமுதாய அமைப்பில் உலகியலாக உள்ளது. பொருட் செல்வத்தின் செல்வாக்காலும் அல்லது அதிகாரத்தின் செல்வாக்காலும் தனிச்சலுகைகள் பெறும் நிலை உள்ள வரையில், உற்பத்தி பெருகினாலும் அது எல்லோருக்கும் உரியவாறு கிடைக்காது: வறுமை போகாது. ஒழுக்கமும் நற்பண்புகளும் நிலைக்கமாட்டா. செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் எதையும் செய்யக்கூடிய நிலையில் சிலரும், அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே பிறரை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் நிலையில் பலரும் உள்ள எந்த நாட்டிலும் மக்களாட்சி உண்மையில் மலராது. அந்நிலை நீடிக்கும் வரையில், நாட்டில் எல்லோரும் சமம் என்பது எழுத்தில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் நிலவாது. அத்தகைய நிலை நீங்கி இங்கும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ சமத்துவ சமுதாயம் அமைய வேண்டுமானால் ‘சொல் வேறு செயல் வேறு’ என வேலியிடும் கொடியவர்களைப் பொது வாழ்விலிருந்து மக்கள் அகற்ற வேண்டும்.”

பேராசிரியர் (உற்சாகமாக)

“மகாசந்நிதானம், தவத்திரு அடிகளாரின் இந்த அறிவுரை ஓர் எச்சரிக்கை; அவர் சொல்வது போல் சமுதாயப் போலிகளை, அரசியல் கூத்தாடி களை, வேடதாரிகளை அவ்வளவு எளிதில் மக்களால் – அதுவும் நம் மக்களால்- நீக்க முடியும் என நான் கருதவில்லை. நிலா முற்ற அவை என்ன நினைக்கிறதோ…?” (அவையில் கர ஒலி- அமைதி)

ஒருங்கிணைப்பாளர்

“அடிகளாரின் கருத்தை அன்பர் உணர்ச்சியோடு படிக்கக் கேட்டோம்; மக்கள், மக்கள் என்று யாரையோ ஒரு சாராரை தனிமைப் படுத்தக் கூடாது; நாமும்  அந்தப் பொதுமக்களில் ஒரு பகுதியினர்தானே? நம்மில் படித்தவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் நபரில் எத்தனை பேர், தீவிர அரசியலில் பங்கேற்க முன் நிற்க முற்படுகிறோம்? அரசியல் என்றால் ‘தீண்டத்தகாத ஒன்று’ எனக் கருதி சமுதாய விளிம்பில் ஓரமாகச் சென்று விடுகிறோமே! இதைத்தான் சமுதாயச் சிந்தனையாளர் டாக்டர் உதயமூர்த்தியும் அடிக்கடி நினைவுகூர்ந்து ஊரெங்கும் சொல்லி மனம் உளைகிறார்.”

படித்தவன் பொய்மை வாழ்வு!

பேராசிரியர்

“டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் பேச்சை நானும் கேட்ட நினைவு இருக்கிறது. மதுரையில் இளைஞர் மேடையில் அவர் பேசியபோது சொன்னார்: ‘அரசியல் மூன்றாம் தர மனிதர்களால் நிறைந்திருக்கிறது என வைத்துக் கொண்டால், அதற்குப் படித்தவர்கள் காட்டும் போலித்தனமும் அவர்கள் ஈடுபடாததும்தான் காரணம். படித்தவர்கள், நாட்டின் பொதுநலப் பணிகளில் இறங்காத போது, அந்தக் காரியங்களை யாராவது செய்ய முன் வருவார்கள். அவர்களை விடத் திறமையில் குறைந்தவர்கள் எல்லாருக்குமாக முடிவெடுப்பார்கள். எனவே அதன் பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டியது தான்…”

அவையிலிருந்து ஓர் அரசு அதிகாரி (ஓய்வு பெற்றவர்)

“எங்களைப் போன்ற அரசு ஊழியர்கள் பணிக்காலத்தே அரசியலில் ஈடுபட அனுமதி இல்லை; ஓய்வு பெற்ற பின்னர் மாறிவரும் சமூகச் சூழலோடு ஈடு கொடுத்துப் பொறுப்பேற்க எல்லோராலும் முடிவதில்லை.”

மற்றவர் – இடைமறித்து

“ஐயா! அப்படிச் சொல்லாதீர்கள்! இது அப்பட்டமான நழுவல், கை கழுவல்! எத்தனையோ அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பின்னரும் அரசியல் சமுதாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைச் சான்றுகளுடன் சொல்ல முடியும்” (பலரும் ஆமோதித்தல்)

முன்னவர்

“நான் பணிக்காலத்தே தீவிர அரசியல் நாட்டம் கொள்ளுவதற்கு உள்ள தடைகளையே குறிப்பிட்டேன்.”

இன்னொருவர்

“அரசியல் சாராத எத்தனையோ தொண்டு அமைப்புக்கள் உள்ளன. நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு, ஊனமுற்றோர் மறு வாழ்வு, அனாதையர் பராமரிப்பு, மகளிர் உரிமைக் காப்பு, சுற்றுச்சூழல் மாசுக்காப்பு என எண்ணிலடங்காத் தொண்டர் குழாம்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தை ஒதுக்கிப் பிறர் பணி செய்யும் தொண்டு மனம் தான் வேண்டும்; அது நம்மில் படித்த பலரிடம் பரவலாக இருப்பதில்லை. எனவே இடைவெளியில், புல்லுருவிகள் புகுந்து விடுகின்றன, நாடு காடாகிறது.”

இன்னொருவர்

“படித்தவர்கள் பணியிடையே சமுதாயத் தொண்டும் செய்வதும் துணை புரிவதும் தனியாக இருக்கட்டும்; தேர்தல்களில் வாக்களிக்கக் கூடச் சாவடிகளுக்கு வராத இந்தப் படித்த குடிமக்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.”

மற்றொருவர்

“நான் எல்லாத் தேர்தல்களிலும் ஓட்டுப் போட்டவன் ஐயா… வெளியூர் போனாலும் வாக்களிப்பதற்காகவே ஊர் திரும்ப மறவாதவன் நான்.”

இன்னொருவர்

“நீங்கள் உரிய நேரத்தில் வாக்களிக்கச் சாவடிக்குப் போகாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் வாக்கையே இன்னொரு ‘குடிமகன்’ போட்டுவிடுவார்.” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“ஜனநாயகத்தில் மக்கள் அரசியலில் நேர்முகக் கவனம் செலுத்துவதும், வாக்களிப்புப் போன்ற கடமை களைத் தவறாமல் செய்வதும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்துக் கணிப்பதும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உரமாக அமையும். ஆனால், நம் நாட்டில் அடியாட்களும் தீய சக்திகளும் தலையெடுக்க நேர்ந்தது ஒரு துரதிர்ஷ்டம் மட்டும் அல்ல; தேசிய அவமானமும் கூட என்றே சொல்லலாம்.

நான் திருச்சிக் கல்லூரியில் பொருளாதார முதுகலை வகுப்பில் பயின்று கொண்டிருந்தபோது கேட்ட அறிஞர் அண்ணாவின் கருத்தொன்றை நிலாமுற்ற அன்பர்கள் கவனத்திற்குக் கொணர விரும்புகிறேன்.”

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

“மக்களாட்சியில் ஆட்சிப் பொறுப்பு யார் கையில் இருக்கிறதோ, அவர்களுடைய குணத்தையே மக்களாட்சி பெறுகிறது. நல்லவர்கள், நாணயமானவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், மக்களாட்சி நல்லதாகும்; இல்லையேல் விபரீதங்கள் விளையும்” என்றார் அறிஞர் அண்ணா!

அவையிலிருந்து ஒரு பெரியவர்

“‘யதா ராஜா ததா பிரஜா’ என வடமொழி யிலும், ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ எனத் தமிழிலும் பன்னெடுங் காலமாகச் சொல்லி வந்த பழமொழியும் அதுதான்.”

பேராசிரியர்

“மக்கள் எத்தகையவர்களோ, அத்தகைய தன்மை உடையவர்களையே தமது தலைவர் களாகப் பெறுவார்கள்’ என மேலைநாட்டு அரசியல் அறிஞர் சொன்னாரே…”

இடைமறித்த ஒருவர்

“அப்படியானால்.. உரிமைப் போர்க் காலத்தே நம் நாட்டில் முப்பது கோடி மக்களும் இருந்த இழிநிலையை, மகாகவி பாரதி பாடினானே…

‘நெஞ்சில் உரமும் இன்றி

     நேர்மைத் திறமும் இன்றி

     வஞ்சனை செய்வாரடி & கிளியே

     வாய்ச் சொல்லில் வீரரடி…’

எனக் ‘கிளிக்கண்ணி’யில் பாடினானே…”

மற்றொருவர்

“அவன் பாடியது சரி. அதை வைத்து ஐயா என்ன சொல்ல வருகிறீர்கள்?”

முதலில் பேசியவர்

“மக்கள் அவ்வாறு ஊமைகளாய், கோழைகளாய் சிப்பாய் வரக் கண்டு வீட்டுக்குள் ஓடிப் பதுங்குவோராய் வாழ நேர்ந்த சூழலிலும் நம் மக்களை அணி திரட்ட அண்ணல் காந்தியடிகள் தொட்டு, வீர வாஞ்சிநாதன் வரை ஆயிரமாயிரம் பேர் சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் உருவாகவில்லையா? ‘மக்களைப் போலத்தான் தலைவர்கள் அமைவார்கள்’ என்பது பொது விதி இல்லை. மக்கள், ஆட்டு மந்தையாகச் சிதறினாலும் அவர்களைச் சேர்த்து இணைக்க, காலம் தக்க தலைவர்களைக் கருணையோடு நல்கியே தீரும். அந்த வகையில் பாரத நாட்டினரான நாம் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள் (ஆவேசமாகப் பேசி நிறுத்தி விட்டு) இவ்வளவு வேகமாகப் பேசுகிறேன். இதற்குக் கூட கை தட்ட மாட்டேன். என்கிறீர்களே!”  (சிரிப்பும் கர ஒலியும்)

ஒருங்கிணைப்பாளர்

“போராட்ட காலத் தலைமை வேறு, சுதந்திரம் பெற்றபின் அமையும் உரிமைக் காலத் தலைமை வேறு. அங்கே தியாகம் அடிப்படை, இங்கே ஒழுக்கம் அடிப்படை.”

 

( தொடரும் )

10157total visits,3visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>