மேனிலைப் பள்ளித் தமிழ்ப் பெரும்புலவர் ஐயா ஒருவர் எழுந்தார்
“அவையோரே வணக்கம்… புதுமை, புதுமை என்றீர்கள், நம் தமிழ் இலக்கியங்களில் – அதாவது வேறு எந்த உலக இலக்கியத்திலும் இல்லாத புதுமை மேல் கணக்கு – கீழ்க்கணக்கு நூல்கள் எனும் இருவகைப் பாகுபாடு.
நம் பண்டைய தமிழ் நூல்கள் பதினெண் மேல் கணக்கு – பதினெண் கீழ்க்கணக்கு என இருதொகை களாகத் தொகுக்கப்பட்டன என்பதை அடியேன் நினைவூட்டுகிறேன்.
அகம் – புறம் பற்றியன எல்லாம் மேற்கணக்கு நூல்களாயின; நீதிநூல்கள் எல்லாம் கீழ்க்கணக்கு வகைகள் ஆயின.
நான் கற்றவரை…
ஒன்று – பல அடிகள் இல்லாத செய்யுள்களின் தொகுதி.
மற்றொன்று – அறம் பொருள் இன்பம் எனும் பொருள் பற்றி வருவது எனும் இரண்டு இலக்கணங்களைக் கொண்டது பதினெண் கீழ்க்கணக்கு.”
இடைமறித்த இன்னொரு புலவர்
“ஐயா… அடிக்கணக்குப் போட்டு, நாலடி நானூறு, பழமொழி நானூறு என ஆரம்பித்தால் நாம் குறள் நிலா முற்றமே நடத்த முடியாது. நிலா மறைந்து பொழுது விடிந்துவிடும். திருக்குறளுக்குத் திரும்பினால் போதுமே…”
ஒருவர்
“காலந்தொறும் திருக்குறளுக்குத் தான் திரும்பி உள்ளோம்; இனியும் திரும்புவோம்.. திரும்பத் திரும்ப நாம் தேடி வருவதால்தான் திருக்குறள் (திரும்பத் திரும்ப வரும் குறள்) எனப் பெயர் பெற்றது பொருத்தமோ எனத் தோன்றுகிறது.”
இன்னொருவர்
“ஐயா கூறிய நகைச்சுவை, சிரிப்பை மூட்ட வில்லையே? அப்படியானால் திருவாசகம், திருவருட்பா என வருவதற்கு என்ன காரணம் சொல்வது…? திரு என்பது என்றும் மாறாச் சிறப்பு நோக்கிய ஓர் அடைமொழி.”
ஒருங்கிணைப்பாளர்
“ஐயா கூறியபடி நாம் மீண்டும் திருக்குறள் எனும் நீதி நூல் பார்வைக்கே திரும்புவோமே…”
பண்பட்ட பழமை, புண்படுத்தும் புதுமை
“வீரம், காதல், கொடை உள்ளிட்ட உன்னதமான மனித நேய உணர்வுகளிலும் இயற்கை இன்பத்திலும் ஈடுபட்டிருந்த நம் பழந்தமிழ்ப் புலவர்களின் உள்ளம், சிந்தனை என்பன பிந்திய காலங்களில் நீதிகளைப் பாடும் நிலைக்கு மாறியது.
இதற்கு முக்கிய காரணம், நாட்டை நன்கு ஆண்ட சேர, சோழ, பாண்டிய மரபுகளின் மாண்புகள் குறைந்து, களப்பிரர் எனும் வேற்றவர் ஆட்சி ஊடுருவி தமிழ்ச் சமுதாயத்தை உருக்குலைக்க முற்பட்டதே என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி உள்ளார்கள்.
பண்பட்ட பழைய ஆட்சி முறைமைகள் தடம் மாறிப் புதிய முரண்பட்ட ஆட்சிப் போக்கு படர்கள்ளியாக முளைத்தது என்பது உண்மைதான். எனவே புண்பட்ட இச்சமுதாயப் போக்கை மீண்டும் பழைய தடத்தில் நிலை நிறுத்திட அறநெறிகளைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கக் கூடும். ‘வாழ்வின் அவசியத் தேவையே புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குகிறது’ என்பது அறிவியல் பொன்மொழி. அத்தகைய தேவையின் அக்கால விளைவே, எக்காலமும் போற்றும் திருக்குறள் போன்ற நீதி நூல்களின் வரவும் வாழ்வும் என நாமும் ஏற்போமே?
நீதி நூல்களின் காலம் – ‘சங்கம் மருவிய காலம்’ என இலக்கிய முறையில் குறிக்கப் பட்டாலும், சரித்திரக் கணிப்புப்படி – கி.பி. 100 முதல் கி.பி. 500 வரை – என்று பூர்ணலிங்கம் பிள்ளை, வையாபுரியார், இராச மாணிக்கனார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பலர் ஒருவாறாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
நீதி நூல்களில் எல்லாம் தலையாயது திருக்குறள் என்பதில் இன்றுவரை எவருக்கும் ஐயம் இல்லை.
குறளை யாத்த பெருந்தகை தம் குலப் பெயரை, வாழ்ந்த நாட்டை, இடப்பெயரை, ஆட்சிக் காலப்பெயரை… என ஒரு சிறு குறிப்புக் கூடக் கோடிட்டுக் காட்டியிருந்தால் இந்தச் சிக்கல் ஏற்பட்டிராது. அது தானே வள்ளுவரின் பெருமை! சரித்திரம் எனும் சிமிழுக்குள் – தமிழ்ப்பற்று எனும் வட்டாரத்திற்குள் – தம்மை ஒடுக்கிக் கொள்ள விரும்பாதவராய், சமுதாயப் பொதுமனிதராய், உலகக் குடிமகனாய், தாம் யாத்த நூல் வழியாக மட்டுமே தம்மை இனம் காட்டி இன்றும் வாழ்கிறார்.
வள்ளுவரைத் தொடர்ந்து வந்த காலகட்டங் களிலேயே குறளை – ‘வாயுறை வாழ்த்து’, ‘பொய்யா மொழி’ எனும் புனை பெயரிட்டு வழங்கினரே தவிர- இயேசுவை அவரது சீடர்கள் வரலாறு எழுதி விளக்கங்கள் செய்தது போல, நபிகள் நாயகத்தையும், புத்தர் பிரானையும் அவரது அன்பர்கள் சரித்திர நாயகராக்கிக் காத்தது போல வள்ளுவம் எழுதியவரையும் நமக்கு நன்கு முகம் காட்ட அன்றைய புலவர்கள் முன் வராததே நமது தவக்குறை.”
பேராசிரியர்
“ஐயா… அப்படி அடியோடு மறுத்துச் சொல்லி விடாதீர்கள். திருக்குறளுக்கு முன்னுரைப் பாயிரம் போல விளங்கும் பல புலவர்கள் புகழ்ந்து போற்றிய ‘திருவள்ளுவ மாலை’யும் பின்னர் வந்த காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும் இன்று வரை வள்ளுவரை ஒரு வரலாற்று நாயகராகவே நிலைநிறுத்தியுள்ளன. இது உலகிற்கே ஒரு புதுமை இல்லையா? பொருளாதாரத்தில் ஆடம்-ஸ்மித்தையும், வரலாற்றில் மாக்கியவெல்லியையும் சமுதாயப் புரட்சியில் மார்க்ஸையும், நம் நாட்டு அரசியல் விடுதலைச் சட்டம் எனும் ஆக்கங்களில் அண்ணல் காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கார், பண்டித நேரு போன்றோரையும் சிலை வைத்துப் போற்றும் சமுதாயப் பிரிவுகள், அரசியல் கட்சிகள் எல்லாம் திருவள்ளுவருக்கும் சிலை நாட்டி, கோட்டம் அமைத்துக் கொண்டாடி வருவது இனிவரும் தலைமுறையாலும் நிச்சயம் தொடர்ந்து போற்றப்படும். எனவே வள்ளுவரைப் பற்றிய செவிவழிக் கதைகளில் சிந்தை செலுத்தாது, அவர் கூறிச்சென்ற செம்மை நெறிகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருப்போம். அதுவே திருவள்ளுவரைத் தினந்தோறும் போற்றும் திருவழிபாடு.
திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே பல நூல்களைக் கற்றவர், தமக்கு அமைந்த இல்லறத்தைச் செம்மையாக நடத்தி மகிழ்ந்தவர், அரசியல் உள்ளிட்ட கோட்பாடுகளில் போதிய அறிவு பெற்றவர், நீண்ட காலம் அமைதியாக வாழ்ந்தவர், பல சமயத்தாரோடு பழகிப் பழகிப் பொதுமை நாட்டமே வாழுங்கலையென வகுத்தவர், அறத்தின் மீது அசையாத அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்.
இதுதான் வள்ளுவர் எனும் பெருந்தகையின் வரலாறு எனச் சரித்திரத்தில் பொறித்து வைப்போமே!”
மற்றோர் அறிஞர்
“இத்தனை வள்ளுவத் தனிச் சிறப்புக்களோடு இந்த ஒன்றையும் நிலா முற்றம் ஏற்க வேண்டும்.”
ஓர் அன்பர்
“என்ன? … சுருக்கமாகச் சொல்லுங்கள்.”
முன்னவர்
“வள்ளுவர் செய்த திருக்குறளின் அதிகாரப் பாகுபாடும் அதன் அருமைப்பாடும் வேறெந்த உலக நூலினும் காண முடியாததொரு விந்தை. ‘அறம் பொருள் இன்பம் வீடு எனும் புருஷார்த்தங்கள் நான்கு’ எனப் போதிக்கப்பட்ட அந்தக் காலத்தில், முதல் மூன்றைப் பற்றி மட்டும் 1330 குறள்களைப் பாடி முடித்துக் கொண்டார். வீடு பேறு பற்றித் தனியாக ஒரு பகுதியைச் செய்ய வில்லை. இது ஏன்?”
ஒருங்கிணைப்பாளர்
“அறம் பொருள் இன்பம் எனும் மூன்று நிலைகளில் நெறியோடு இவ்வுலகில் வாழ்ந்து காட்ட முற்பட்டாலே, வீடு எனும் முக்திநிலை தானாகவே வந்தமையும் என்பதே வள்ளுவத் தகைமை. சிந்தைக்கு எட்டாத அந்த முக்தியைப் பற்றி எல்லாம் சொற்களால் விளக்குவதும் விவாதங்களை எழுப்புவதும் வீண் என வள்ளுவர் கருதியிருக்கக்கூடும்.”
ஓர் அறிஞர்
“ஆயினும் ‘மெய்யுணர்தல்’ எனும் தனி அதிகாரம் வீடு பேறடையும் வழியைச் சொல்லுகிறதே…”
பேராசிரியர்
“ஏனய்யா! ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ (50) எனும் ஒரு குறள் போதுமே… அதை நம் பாரதிப் புலவர் மறவாமல் நினைவூட்டிய ‘மண் பயனுற வேண்டும் – வானகம் இங்கு தென்பட வேண்டும்’ எனும் தொடரை நாம்தான் மறந்து விட்டோம்…”
ஓர் அன்பர்
“அந்த வானகத்து வீட்டை விடுங்கள் ஐயா… இந்த வையகத்தில் குடியிருக்க ஒரு குடிசையாவது கிட்டாதா? எனும் கவலையைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள்..”
அன்பர் ஒருவர்
“கோட்டை, குடிசைப் பாகுபாடுகளை விடுத்து வள்ளுவர் வகுத்த குறளதிகாரப் பகுப்புகளின் அருமைப்பாட்டைப் பற்றிச் சிறிது பேசுவோமே? என் கருத்தைச் சொல்லட்டுமா?” என ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்.
“மூன்று பால், 133 அதிகாரங்கள், அதிகாரத்திற்குப் பத்துப் பத்துக் குறள் என வரையறுத்துக் கொண்டது வள்ளுவரின் சிந்தனை ஒருமைப் பாட்டிற்கும் அறிவாண்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. ஒவ்வொரு பத்திலும் ஒவ்வொரு பண்பு அல்லது கொள்கையை விளக்குகிறார். அரசியல், பொருளாதாரம் முதலிய அன்றாட வாழ்வுத் துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்த போதும் வள்ளுவர் அறத்துப் பாலை 38 அதிகாரங்களாகவும், இரண்டாம் பகுதியான பொருட்பாலில் அரசியல் அமைப்பின் அரசியல், அமைச்சியல், குடிமக்கள் பண்புகள் என்பதைப் பற்றி 70 அதிகாரங்களும், மூன்றாம் பகுதியில் உயர்ந்த காதலர் உணர்வுகள் பற்றி 25 அதிகாரங்களும் வைத்துள்ளார்.”
இடைமறித்த பேராசிரியர்
“தாங்கள் குறித்த முதல் பகுதியான அறத்துப்பாலில் வள்ளுவர் ஒரு சான்றோராகத் திகழ்கிறார்; இரண்டாம் பகுதியான பொருட்பாலில் தேர்ந்த அரசியல் அறிஞராகக் காட்சி யளிக்கிறார்; மூன்றாம் பகுதியான இன்பத்துப் பாலில் இன்றைய சினிமாப் பாடலாசிரியர்களை எல்லாம் விஞ்சிய காதல் கவிஞர் போலக் கற்பனை மழை பொழிகிறார்.
இந்த மூன்று பகுதி 133 அதிகாரப் பத்துக்களிலும் உள்ள தலைப்புக்களில் கடந்த 2000 ஆண்டுகளாக எவ்வளவோ சிந்தனைப் புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பத்துக் குறள் மட்டும் போதாது; அத்தோடு இன்னும் சில புதிய செய்திகளையும் சேர்த்தால்தான் அந்த அதிகாரம் இன்றைய தேவையை நிறைவு செய்யும் என எவரும் சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு அதிகாரப் பத்தும் முழுமை பெற்றதொரு சிந்தனை மாடமாக அறிவுக் கதிர் வீசுவதுதான் வள்ளுவரின் மாண்பு; மகத்தானசிறப்பு.
வள்ளுவத்திற்கு, தொடக்க காலத்தில் விளக்க உரை எழுத முற்பட்ட 10 பெரும் புலவர்களைத் தொடர்ந்து காலந்தொறும் இன்றுவரை எத்தனையோ வல்லுநர்கள் உரைகள் எழுதிய வண்ணம் உள்ளனர்.”
எத்தனை எத்தனை உரைகள்? துறைகள்?
புலவர் குழந்தையின் புரட்சி உரை; நாமக்கல்லாரின் நல்லுரை; திரு.வி.க.வின் தெளிவுரை; குறள் விருதாளர் கு.ச.ஆனந்தனாரின் விளக்கவுரை; அண்மையில் கலைஞர் எழுதிய புதிய உரை என நூற்றுக்கணக்கான உரைச் செல்வங்களும் – பேரறிஞர்கள் வ.சுப.மா., டாக்டர் மு.வ. போன்றோரின் விளக்க உரைகளும் போற்றத்தக்கவை என்றாலும்கூட, எந்த ஒரு புத்துரை வரவாலும் வள்ளுவக் குறட்பாக்களின் மூலநூல் நுட்பத்தை ஓரணுவும் மாற்ற முடியவில்லை என்பதுதான் இமாலயச் சிறப்பு. தமிழில் இதுவரை வந்துள்ள எண்ணற்ற உரைகள் ஒரு புறம் இருக்க, உலக மொழிகளில், அதாவது 100க்கும் மேற்பட்ட மொழிகளில் குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சமய நூல்களான விவிலியம், குர்ஆன் என்பனவற்றிற்கு ஈடாக உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்ட சமயச் சார்பற்ற வாழ்வியல் நூல் எனும் பெருமை வள்ளுவத்திற்கே உண்டு.
வள்ளுவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வடமொழியில் அர்த்த சாத்திரத்திற்கு இணையாக மொழியாக்கம் செய்ததாக ஒரு செய்தி. அந்த மூலப்பிரதி கிட்டவில்லை.
ஆனால் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் போந்து – தேம்பாவணிக் காப்பியத்தைச் சமயத் தொண்டுடன் தமிழ்க் காப்பியமாகத் தந்த – வீரமாமுனிவர் எனும் பெஸ்கி முனிவர் – இலத்தீனில் சில அதிகாரங்களை மொழிபெயர்த்து – மேலை நாட்டுக்கு அறிமுகம் செய்தார். அதன் பின்னர் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் அடுத்தடுத்து மொழிபெயர்க்கப் பட்டன.
ஆங்கிலத்தில் இத்திருப்பணியைத் தொடங்கியவரும் ஒரு கிறித்தவப் பெரியரான டாக்டர் ஜி.யூ.போப் என்பது வரலாறு. தம் கல்லறையில் தம்மை ‘ஒரு தமிழ் மாணவர்’ எனச் சாசனக் கல்லில் பொறித்து வைக்கச் சொல்லும் அளவுக்குத் திருக்குறளும் திருவாசகமும் அவர் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.
பிரெஞ்சுப் பேரறிஞர் ஏரியல் என்பார் “இயேசு பிரானுடைய புகழ்பெற்ற மலைப் பொழிவின் எதிரொலியாகத் திருக்குறள் செய்திகளை உபதேசங்களாக ஏற்கிறேன்…” எனப் புகழாரம் சூட்டினார். காந்தியடிகள் முதலான இந்த நூற்றாண்டுச் சான்றோரும், ஆல்பர்ட் ஸ்வைட்சர் போலும் ஜெர்மன் தத்துவ ஞானியரும், பல்துறைப் பேரறிஞர்களும் “வாழ்வுக்கு உரிய அன்பு நெறிகளைக் கூறும் உன்னதமான நூல்” என்றும், “உயரிய ஞானத்தைப் புகட்டும் செம்மைத் தொகுப்புச் செல்வம் இது போல உலகில் வேறு எந்த இலக்கியமும் இல்லை” என்றும் போற்றி உள்ளனர்.
டாக்டர் ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு ஒருபுறம் இருக்க, நம் நாட்டு இரு மொழிப் பேரறிஞர்கள் பலர் குறளை ஆங்கிலம் – இந்தி உள்ளிட்ட மொழிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளனர். அந்தப் பட்டியலில் சென்ற தலைமுறையினரான – வ.வே.சு.ஐயர், ராஜாஜி, கே.எம்.பாலசுப்பிர மணியம், வி.ஆர்.ஆர்.தீட்சிதர், எம்.எஸ்.பூரண லிங்கம் பிள்ளை ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இவர்களுக்கெல்லாம் காலத்தால் முந்திய பேரறிவாளர்களான வணக்கத்திற்கு உரிய – எல்லிஸ், ரெவரண்ட் டிரூ ஜான் லாசரஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
காவல்துறையின் உயர்நிலை அதிகாரியாக இருந்த டாக்டர் எஸ்.எம்.டயஸ் ஐ.பி.எஸ். அவர்கள் அண்மையில் டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பொறுப்பாசிரியர் அவர்களின் மேற்பார்வையில் வெளியிட்ட அருமையான, ஆயிரம் பக்க இரு தொகுதிகள், டெல்லியில் துணை ஜனாதிபதி இந்தியில் வெளியிட்ட பேராசிரியர் வெங்கட கிருஷ்ணனின் இனிய மொழியாக்கம் என இன்னும் வளர்ந்து கொண்டே செல்லுகிறது இந்தப் பட்டியல். இதனை நன்கு ஆய்வு செய்து நீண்ட வரிசையாக நிரல்படுத்தப் பல்கலைக்கழகங்கள் முற்பட வேண்டும். இந்த நிலா முற்றம் மட்டும் போதாது; பற்பல நிலா முற்றங்கள் கூட வேண்டும். இவ்வாறாக எத்தனையோ மொழி பெயர்ப்புக்கள் எண்ணற்ற மொழிகளில் வந்தாலும் குறட்பாக்கள் கூறும் செய்திகளில் முரண்பாடுகள் இல்லை என்பதை நாம் ஏற்கலாம்.”
( தொடரும் )
சமீபத்திய கருத்துகள்