கனடா நாட்டுப் பயணம்
விழுமிய திருக்குறள் பிறந்த நம்நாடு, நழுவவிட்ட அந்த நல்லுணர்வை ஏக்கத்துடன் கனடா நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை எண்ணத் தொடங்கினேன். அமெரிக்காவில் இத்தனை நாட்களும் எப்படியோ ஓடிவிட்டன!
தமிழில் ‘நல்வரவு’ கூறும் திருநாடு
உலக நாடுகளுள் சோவியத் யூனியனுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய நாடு நோக்கிப் பயணமாக வேண்டும். அதுதான் கண்ணாரக் காணவேண்டிய கனடா!
வட அமெரிக்கக் கண்டத்தின் வடபாதி முழுதும் வியாபித்துள்ள இயற்கைக் கொலுமண்டபம் இந்த நாடு. கிழக்கே அட்லாண்டிக் சமுத்திரம்; மேற்கே பசிபிக் சமுத்திரம்; தெற்கே அமெரிக்கா; வடக்கே ஆர்க்டிக்.
எவ்வளவு பெரிய நாடு! ஆனால் மக்கள்தொகை மிகக்குறைவு. சுமார் 3கோடி மக்கள்; மூன்று நூற்றாண்டுக் குடியேற்ற வம்சா வழியினர்.
வடதுருவத்தை ஒட்டியுள்ள கனடாவின் குளிர்காலப் பருவம் மிக நீண்டது; கோடைப் பருவம் மிகச்சுருங்கியது.
நம் நாட்டில் மூன்றே பருவங்கள்தான் உண்டு கோடைக் காலம், மிகுகோடைக் காலம், சுடும்கோடைக் காலம்!
ஆனால் கனடாவைப் போன்ற நாடுகளில் மட்டும் இயற்கை மிகுந்த கருணை காட்டுகிறது! இங்கு உள்ள காடுகளின் அடர்த்தியை, நீரோடைகளின் பாய்ச்சலை, பயிர்களின் பசுமையை, மக்களின் வளமையைப் பார்த்தாலே… இயற்கையின் பாரபட்சம் புரிகிறது.
இங்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்து முதன்முதலில் குடியேறியவர்கள் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும். அவர்களுக்குள் மூண்ட ஆதிக்கச் சண்டை ‘ஏழாண்டுப் போர்’ என வருணிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கை ஓங்கியதால் – மாட்சிமை தங்கிய மன்னர் ஆட்சியின் கீழ் . டொமினியன் ஆகி, ஆஸ்திரேலியாவைப் போல் காமன்வெல்த் அங்க நாடாகச் செல்வம் கொழிக்கிறது. ஆங்கிலமும் பிரெஞ்சும் அரசு மொழிகள். அங்கும் மொழி- இனச் சிக்கல் உண்டு. எனினும் பொதுவளர்ச்சிக்கு ஊறு செய்யாமல் ஒத்துப் போகிறார்கள். சமீப ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்கு சரணாலயமாகவும் இந்நாடு ஒருவகையில் தமிழ் மானம் காக்கிறது!
இயன்றவரை ஈழத் தமிழர் மானம் காக்கக் கைகொடுக்கும் கனடாவில் இனிய தமிழ் மணமும் கமழுவதை நுகர அரிய வாய்ப்பு இப்பயணத்தில் கிட்டியது.
சமச்சீரான வெப்பதட்பமுடைய வாழ்க்கைக்கு உகந்த நாடுகள் என உலகில் ஆஸ்திரேலியாவையும், கனடாவையும் சொல்லுவார்கள். அமெரிக்காவில் பொதுவான, ஆங்கிலக் கலாச்சாரப் பின்னணி புலப்படுவதுபோல் அதையடுத்துள்ள கனடாவில் பிரெஞ்சக் கலாச்சாரச் சூழல் வெளிப்படை யாகத் தெரியும் என்றும் சொல்லுவார்கள். அதுவும் உண்மை எனக் கண்டறிய அதிவேகமாக அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூயார்க்கிலிருந்து கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும் இடங்களில் எல்லாம், நம்மை வரவேற்று உபசரிக்க நண்பர்கள் இருந்துவிட்டால் எந்த நாட்டிற்கும் போய்வரலாம். நற்பயனாக எங்களுக்கு இந்தப்பேறு எங்கும் கிட்டியது. சென்னையில் உள்ள பிரபல டாக்டர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் புதல்வி திருமதி. ரீத்தா, திரு.பார்த்திபன் அவர்களின் துணைவியார். இவர் அவர் சகோதரி சத்யா, மதுரையைச் சேர்ந்த திரு.அசோகன், கானடியன் ஆப் செட் ஸ்கிரீனிங் எனும் நிறுவனத்தை நடத்தும் ரோட்டரி கழக உறுப்பினர் திரு.ஸ்டூவர்ட் ஜெரோம், திரு.விஜயநாதன் மற்றும் பலர் எங்களுக்கு இனிய வரவேற்பு அளித்தனர்.
நாங்கள் கனடா போய்ச் சேர்ந்ததும் அமெரிக்கா விலிருந்து திரு.நாராயணன் குடும்பத்தினரும் எங்களுக்குத் துணையிருக்க வழிகாட்ட வந்து (அங்கிருந்து சுமார் 400 மைல்தான்) சேர்ந்து கொண்டனர். கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம். நீர் அருவி, ஆலயக் கோபுரம்! அதிலும் நாங்கள் பார்த்த நயாகரா அருவி (நீர்வீழ்ச்சி) உலகிலே மிகப்பெரிது, அதன் பிரமாண்ட தோற்றமும், இடையறாது கொட்டும் நீர்ப் பெருக்கும், வண்ண வண்ணக்கோலமும் நெஞ்சைப் பின்னிப் பிணைத்தன.
நம் பாண்டிய நாட்டுச் சங்கப்புலவன் கணியன் பூங்குன்றனார் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பாட்டில் தொடரும் வரிகளான ‘கல்பொருது இரங்கும் மல்லல்பேர்யாற்று நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப்படூஉம்’ என்ற வரிகள் இப்பெரும் நீர்வீழ்ச்சியைக் கண்டவுடன் தோன்றின.
தேக்கிவைக்கப்பட்ட செல்வம், தேக்கிவைக்கப்பட்டு பயன்படுத்தாத நீர் போல அலையாமல், நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல, பரந்து விரிந்து பாலை நிலத்தை எல்லாம் செழிப்பாக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலும் கனடாவிலும் உற்பத்தியாகும் பொருட்களை நுகர்வோர் அதிகமாக இருப்பதனால், அங்கு பணப்புழக்கத்தின் வேகம் காரணமாகப் பொருளாதார நிலையும் மேம்பட்டு இருக்கிறது. நமது நாட்டிலும் பணப் புழக்கம் தேங்கி இருக்காமல் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் நம் வளர்ச்சியும் மேம்படும்.
உலகிலேயே மிகப் பெரிய சியென் கோபுரத்தைப் பார்க்கச் சென்றோம். சிகாகோவில் நாங்கள் பார்த்த சியொ டவர் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு இதைப்பார்க்க வந்தபோது மலைப்புத் தோன்றவில்லை. ஆனால் மனதைத் தொடும் ஒரு காட்சி என்னை மெய்சிலிர்க்கவைத்தது. அந்த மாபெரும் டவரின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு வாசகத்தில் ‘நல்வரவு’ எனத் தமிழில் மின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு உலகில் உள்ள பலமொழிகளில் எழுதியிருப்பினும் இந்தியா விலிருந்து தேர்ந்தெழுதிய நான்கு மொழிகளில் நமது தமிழ் மொழியும் ஒன்று என்றவுடன் என் எண்ணமெல்லாம், இதயமெல்லாம் பூத்தன; வான் முட்ட உயர்ந்திருந்த கோபுரத்தின் படிக்கட்டுக்குச் செல்லக் கால்கள் தயங்கின. “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும், வண்மொழி வாழியவே!” என மகாகவி பாரதி அன்று பாடினானே… அந்த வானத்துக்கே இந்தத் தமிழ் வாசகம் என்னைத் தூக்கிப் போவது போலப் பிரமையுற்றேன். அந்த வாசகத்தின் முன்னர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
‘நல்வரவு’ எனத் தமிழ் வரவேற்பு அளித்த தமிழன்பர்கள் உள்ளமும், இல்லமும் எங்களுக்குச் சென்றவிடமெல்லாம் நல்வரவு கூறின.
கனடாவிலிருந்து, ஏற்கெனவே திட்டமிட்ட எங்கள் ஐரோப்பியப் பயணத்தில் விடுபட்டுப் போயிருந்த பிரெஞ்சு நாட்டுக்குப் போக விசா எடுக்க முடியும் என்றார்கள். அந்த முயற்சியில் நண்பர்கள் ஓடி ஓடி அலைந்தார்கள். ஆனால் 45 நாள் அவகாசம் வேண்டும் என அதிகாரிகள் உதட்டைப் பிதுக்கி விட்டார்கள். நான்கு நாட்கள் இதில் வீணாகிவிட்டன.
கனடாவிலும் விரிவான பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தரவும் முடியவில்லை. அதற்கேற்ப எங்கள் பயணத்தை நீட்டிக்கவும் இயலவில்லை. நண்பர்கள் வீடுகளில் பலரும் வந்து கூடி கலந்துரையாடி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சிகளுக்காகவே ஏற்பாடு செய்திருந்தார்கள்.
திரு.பார்த்திபன் – ரீத்தா தம்பதியினரின் உபசாரத்தை மறக்கவே முடியாது. அவர்கள் இல்லத்தில் நிகழ்ந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்துத் தமிழன்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர். ஈழத்தின் கண்ணீர்க் கதையும் அங்கு விரைவில் தமிழர் நல்வாழ்வுக்கு உரிய சுமுக நிலை ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் கவலையும், எல்லாப் பிரிவினரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய அவசியம் பற்றியும் கருத்துக்கள் தங்குதடையின்றி வந்தன. யாழ்ப்பாணத் தமிழன்பர்கள் கூறியவற்றைக் கேட்ட போது எங்கள் கண்கள் கண்ணீர்க் குளமாயின.
பின்னர் ‘திருக்குறள் பெருமைகளும் நமது பண்பாட்டுச் சிறப்புகளும்’ பேசப்பட்டன. இவற்றைக் கேட்பதில் அங்கு உள்ளோருக்கு உள்ள ஆர்வத்தை, அக்கறையை நாம் இங்கெல்லாம் காணமுடிவதில்லை. தன்னிடம் பூத்த தாமரையின் அழகு குளத்துக்குத் தெரியவில்லை என்றால் எங்கே போய் முறையிடுவது?
உலகத் திருக்குறள் பேரவையின் நோக்கங்கள் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதன் கிளை ஒன்றைக் கனடாவிலும் நிறுவத் தாம் எல்லா வகையிலும் ஒத்துழைப்பதாக உற்சாகம் அளித்தனர்.
கனடாவில் சீக்கியர்களும் தமிழர்களும் கணிசமாக உள்ளனர். சீக்கியர்களின் பற்றுறுதிக்கும் உழைப்புக்கும் நிகராக நம் தமிழர்களும் விளங்கக்கண்டு பெருமிதமும் பேருவகையும் கொண்டேன்.
கலந்துரையாடல்களில் உற்சாகமாகக் கலந்து கொண்ட திரு.பார்த்திபன் ஒவ்வொரு வேளை விருந்தின்போதும் புதிது புதிதாக நண்பர்களைக் கூட்டி வருவார். நீண்ட உரையாடல்கள் தொடரும். சமயம், தத்துவம், கலை, இலக்கியம், தொழில், வாணிபம் என்றெல்லாம் கலந்துரையாடல் வலம் வரும். இவ்வுரையாடல்களில் எனக்கு ஏற்பட்ட பயனும் அனுபவமும் மிக அதிகம். அவற்றையெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டு இலண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அருமை நண்பர் திரு.பார்த்திபன், “உங்கள் பேச்சால் வசீகரிக்கப் பட்டேன்” என்றார். ஆனால் உண்மையில் வசீகரிக்கப் பட்டது நாங்கள்தான். கனடாவில் வாழும் நம் சகோதரர்களின் அன்பும் உபசாரமும் திருக்குறள் வாழ்வும் வாக்குறுதியும் எங்களை என்றென்றும் வசீகரித்துக் கொண்டன….!
“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே அன்பர் தொழில்” (394)
எனப் புதுக்குறள் புனையும் ஆசை வளர்ந்தது!
சமீபத்திய கருத்துகள்