காலந்தோறும் அருளாளர்கள் சிலர் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அப்பேரருளாளர்கள் உலகில் வாழும் மக்களுக்கு ஏற்ற வாழ்வியல் நெறிமுறைகளை எடுத்துரைத்துள்ளார்கள். அவர்களின் நல்லறவுரைகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை. அத்தகைய இறையருளார்களுள் உலக மானுட வாழ்வுக்குத் தகுந்த நெறிகளை வகுத்துத் தந்தவர் திருவள்ளுவர்.
“இல்லறமல்லது நல்லறமில்லை” என்பது சான்றோர் தம் வாக்கு அத்தகைய இல்லறம் சிறப்பதற்கான பல நெறிகளைத் திருக்குறள் வழங்கியுள்ளது. உலகளாவிய பொது நோக்குடையதாகவும் தமிழர்தம் பண்பாட்டின் சிறப்பைப் பறைசாற்றுவதாகவும் அமைந்த நூல் திருக்குறள். அதில் இல்லறம் என்பது பற்றியும் அதனை எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் நல்ல கருத்துக்கள் நிரம்பியுள்ளன. இல்லறம் நமக்கேயுரிய சிறந்த பண்பாட்டின் சின்னம்; பாரம்பரியமான மரபு வழிகளினால் பின்னப்பட்டு உறவுமுறைகளினாலும் சொந்தபந்தங்களினாலும் செதுக்கப் பட்ட ஒரு கட்டமைப்பு; நல்ல மனைவி நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்விகம் என்றும், குடும்பம் ஒரு கோயில் என்றும், குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றும் போற்றிப் பெருமைப்படத்தக்க ஒன்று. இத்தகைய இல்லற வாழ்வு பெருமை பெறவேண்டும் என்றால் அறத்தோடு பொருந்தி வாழ வேண்டும். இல்லற வாழ்வுக்கு அறமே அடிப்படை.
அறவாழ்க்கை என்றால் என்ன? எப்படி எளிதாக, இன்பமாக, பெருமையுடையதாக, புகழுடையதாக வாழ்வது? இதற்கு திருவள்ளுவர் வழிகாட்டுகிறார்.
‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’. இங்கு பட்டது என்றில்லை; பட்டதே என்று தேற்ற ஏகாரத்தில் கூறி அறத்தின் வலிமையை முழுமைப்படுத்துகிறார். அறம் வேறல்ல, இல்வாழ்க்கை வேறல்ல என்பதை வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.
வாழ்க்கைத் துணையோடு அறநெறிகளில் இருந்து பிழையாமல் இல்வாழ்க்கை நடத்துபவரே இல்வாழ்க்கையால் வரும் பயனை அடையக் கூடியவர்கள். இல்வாழ்க்கை வாழ்கின்றவன், தன்னலம் துறந்து பிறர்நலம் பேணி வாழ்கின்றவன்; தன்னுடைய மனைவி, பிள்ளைகள் பெற்றோர், சுற்றத்தார், வறியவர்கள், மூதாதையர், சமுதாயத்தில் ஆதரவற்ற வர்கள், துறவு மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்து வாழ்பவன். இல்லற வாழ்க்கை வாழ்பவனுக்கு இத்தகைய மூவகையாரையும் காத்தல் கடமையாகிறது.
“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை” (41)
“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை” (42)
குடியில் தோன்றி மறைந்த முன்னோரை நினைவுகூர்வதும் இறைவனைப் போற்றுவதும் விருந்தினரைப் பாதுகாப்பதும் இல்லறத்தின் கடமை. விருந்தோம்பல் நமது தலையாய பண்பாகும். விருந்து என்பது புதுமை என்பதைக் குறிக்கும். விருந்தினர் (புதியவர்) வீடு தேடி வந்துவிட்டால் அவர்களை இன்முகம் காட்டி வரவேற்பதுடன் இனிமையாகப் பேசி உணவு கொடுத்து மகிழ்விப்பதே விருந்தோம்பல். அத்தகைய விருந்தோம்பலை இல்லறத்தார் கடமையாகக் கொண்டு செய்தல் வேண்டும். அதுபோல உதவி தேடிவரும் உறவினர்களுக்கு உதவுவது போன்ற கடமைகளிலிருந்து தவறாது வாழ்தல் அவசியம். இவற்றிற்கு அன்பு அடிப்படை யானதாகும். அன்பு இல்லறத்திற்கு உரிய பண்பாகும். இல்லற வாழ்க்கையில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் பண்பாடாகும். மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது பண்பாடு. கலித்தொகை ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ எனக் கூறும். உலக ஒழுக்கம் அறிந்து நடத்தல் என்று பொருள்.
“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்” (997)
என்பார் திருவள்ளுவர். மக்களுக்கு உரிய நற்பண்புகள் இல்லாதவர் அரத்தின் கூர்மை போல அறிவுக் கூர்மை யுடையவரே ஆனாலும் உணர்வற்ற மரத்திற்கு ஒப்பாவார். தனக்கு உள்ளதைப் பிறரோடு பகிர்ந்து வாழ்வதும், இரவலர்க்கும் வறியவர்க்கும் ஈந்து வாழ்வதும் தமிழ்ப் பண்பாடாகும் அன்பு வாழ்வும், அறவாழ்வும் பிறர் இன்பத் திற்காக வாழும் வாழ்வாகும். அடக்கமான வாழ்வே சிறந்த வாழ்வு. அடக்கமான வாழ்வே அமைதியான வாழ்வு. அவ்வாழ்வில் இன்பமும் புகழும் தேடி வரும்.
பசித்தவர் ஒருவருக்காவது உணவிட்ட பின்னரே தான் உண்ணவேண்டும் என்பது நமது பண்பாடு. பசித்து வருவோரின் பசியாற்றுவது எல்லா அறங்களிலும் சிறந்த அறமாகும்.
உலகத்தோடு ஒட்ட வாழ்வதே ஒப்புரவான வாழ்க்கை யாகும். மானத்தை உயிரினும் பெரிதாகக் கொண்டு பிறர் இன்புற மாண்புடன் வாழும் வாழ்வே ஒப்புரவு வாழ்க்கை. உலகத்தோடு ஒத்து வாழ்வதும், உலகத்து ஆன்றோரும் சான்றோரும் காட்டிய நல்வழியில் வாழ்வதும் சிறந்த வாழ்க்கை. எளிமை காட்டி அன்புடன் இனிமையாகப் பேசிப் பழகுவது சிறந்தது. அன்புள்ளம் கொண்டவர்கள் பிறர் மனம் புண்படும்படி ஒரு நாளும் பேசமாட்டார்கள். இன்சொல் ஒருவனுக்கு நண்பர்களைத் தேடித் தருகிறது. கடுஞ்சொல் அவருக்குப் பகைவர்களை உருவாக்கி விடுகிறது. இனிய சொற்கள் இருக்க, கடுஞ்சொற்களைக் கூறுவதை வள்ளுவர் தன்னிடம் கனிகள் நிறைந்திருக்க ஒருவன் துவர்க்கும் காய்களைத் தின்னுவதற்குச் சமம் என்கிறார்.
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.” (100)
இல்வாழ்வான் என்போன் சமுதாயம் அறத்தோடு வாழத் துணை நிற்பவன். அத்தகைய அறவாழ்க்கை வாழ்பவர் அன்பும் அறனும் உடையவராக, துறவு நிலையிலும் மேம்பட்டவராகக் கருதப்படுகிறார்.
இல்லறத்தைத் துறந்து வாழ்வோர் பின்பற்றுவது துறவறம். அத்தகைய துறவு நிலையில் வாழ்கின்றவர்கள் சிறப்புக்கு உரியவர்கள். அவர்களுடைய பெருமைகளை அளவிட முடியாது.
“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று” (22)
“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு” (23)
உலகில் இருவேறு நிலைகள் உள்ளன. நன்மை, தீமை; இனிமை, கடுமை; அறம் – மறம்; இன்பம் – துன்பம் எனும் வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து துறந்தவர் தம் பெருமை நிலைத்து விளங்கக்கூடியது அத்தகைய துறவு நிலையில் நின்று தவ ஒழுக்கத்தை மேற்கொண்டோர்க்கும் இல்லறத்தாரே உணவளித்தும் துணையாக இருந்தும் பாதுகாக்கும் கடமையுடையவர்கள்.
“ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து” (48)
இல்வாழ்வை அவ்வாழ்விற்கு உரிய இயல்புகளோடு வாழ்வதுதான் சிறப்பானதாகும். அத்தகைய சிறப்புடன் வாழ்பவன், ஐம்புலன்களையும் அடக்கி துறவறம் மேற்கொண்ட துறவிகளை விடச் சிறந்தவன். தவம் செய்யும் துறவிகளைத் தவநெறிகளில் நிலைத்திருக்கச் செய்பவன் இல்வாழ்வானே ஆவான். அவ்வாறு துறவிகளுக்குத் துணையாய் இருப்பதோடு தானும் அறநெறிகளில் சிறிதும் பிறழாது வாழ்பவனது இல்வாழ்க்கை அத்துறவிகளின் தவவலிமையிலும் சிறந்ததும் வலிமையுடையதும் ஆகும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”
என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூற்றாகக் குறிப்பிடுவார்.
இல்வாழ்வான் என்பான் எல்லோரிடத்தும் அன்பாக இருக்கும் தன்மையுடையவனாகவும் நல்வழியில் நடப்பவனாகவும் இருத்தல் வேண்டும். அவ்விதம் அன்பும் அறிவும் கொண்டு வாழ்வதே சிறந்த இல்லற வாழ்வாகும். இத்தகைய இல்லறவாழ்வை மேற்கொள்பவனுக்கு அவ்வாழ்வால் பெறவேண்டிய பலன்கள் யாவும் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.” (45)
“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்” (46)
அறநெறியில் நல்ஒழுக்கத்துடன் இல்வாழ்க்கை நடத்தக்கூடிய ஒருவனுக்கு அதற்குப் புறம்பான வழிகளில் முயன்று பெறும் பயன் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர். திருவள்ளுவர் வாழ்க்கை நலத்தில் ஒரு நுட்பத்தைக் காட்டுகிறார். துறவறத்தில் சிறந்து விளங்கும் தவத்திற்குத் தரும் சிறப்புக்களை எல்லாம் இல்லறத்திற்குத் தருகிறார்; இல்வாழ்வில் இல்லற நெறிப்படி ஒருவன் சிறப்புடன் வாழ்வானேயானால் அவன் மண்ணுலகில் வாழ்பவனே எனினும் வானில் உறையும் தெய்வங்களுக்கு நிகராக வைத்து அவனைப் போற்றுகிறார்; இல்வாழ்வானைத் ‘தெய்வம்’ என்ற நிலையில் உயர்த்திக் கூறியதின் மூலம் இல் வாழ்க்கையின் மேன்மையையும் பெருமையையும் அறிவுறுத்திக் காட்டுகிறார்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (50)
சமீபத்திய கருத்துகள்