பெருமைமிகு வரலாற்று
நாயகர் பி.டி.ஆர்!
“ஆண்டுகள் பல கடந்து முதுமை எய்திய போதிலும் உமக்கு நரையும் திரையும் ஏற்படாமைக்குக் காரணம் என்ன?” எனக் கேட்டாரிடம் சங்கப்புலவர் பிசிராந்தையார் பலவற்றைப் பட்டியலிட்டுவிட்டு, முடிமணியாக ஒன்றைச் சொன்னார். அந்த ஒன்று, இன்றும் எல்லோரது நினைவிலும் நிற்கும். “சான்றோர் பலர் யான் வாழும் ஊரே!” எனக் கூறியது நினைவெல்லாம் கடந்த வரலாறு வடிவெடுப்பதற்கு உரிய காரணத்தையும் சுட்டிக்காட்டும்.
சான்றோர் பலர் வாழ்வதே, அவ்வாறு வாய்ப்பதே, ஒரு ஊருக்குப் பெருமை; ஒரு நாட்டுக்குப் பெருமை.
‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ (996) என வள்ளுவர் ‘பண்புடைமை’ அதிகாரத்தில் வரையறுப்பது போல, இந்தப் பாருலகம் நிலைபெற்றிருப்பதற்கு முக்கிய அடிப்படை ஒரு சிலராவது பண்புடையவர்களாக அவ்வப் போது தோன்றி, வாழ்க்கை நெறி காட்டுவதால் தான். அவ்வாறு சான்றோர்கள் காலந்தோறும் வந்து பிறக்காத வறட்டு மலட்டுத்தனம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுவிட்டால், அந்தச் சமுதாயம் வாழும் நிலம் மண்ணோடு மண்ணாய் மக்கிப் போகும் என்கிறார் வள்ளுவர்.
சான்றோர் பலரும், பண்புடையாரும் வாழ்வதே- வாழும் சூழல் அமைவதே ஒரு சமுதாயத்திற்கு, அதன் வரலாற்றுப் பெருமைக்குக் கிட்டக்கூடிய பெறற்கரிய பேறு.
வரலாற்று நாயகராக வடிவெடுக்கும் பண்புடைச் சான்றோர் ஒருவருக்குப் பெருமைகள் பல வகைகளால் அமையும்.
பிறந்த குலப்பெருமை
பெற்றுள்ள கல்விப் பெருமை
சேர்ந்த செல்வப் பெருமை
சேகரித்த அனுபவப் பெருமை
உடல் அழகு வலிமைப் பெருமை
ஒருங்கே கொண்ட அதிகாரப் பெருமை
ஒழுக்கப் படிப்பால் வந்த பெருமை
சாதித்த சாதனைப் பெருமை…
இந்த எண்வகைப் பெருமைகளும் கைவரப்பெறுவோர் சரித்திர நாயகர்களாக உயர்வர்; பிறரையும் உயர்த்துவர்.
‘இத்தனை பெருமைகளோடும், நீங்கள் அறிய, இங்கே வாழ்ந்தவர் பெயரை உடனே சொல்லுங்கள்’ எனக் கேட்டால், சட்டென ஒரு மூன்று எழுத்துப் பெயரைச் சொல்லிவிடுவேன்…
அவர்தான் பெருமை மிகு ஐயா பி.டி.ஆர்.!
சென்ற தலைமுறையில் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் காவலர்களாகத் திகழ்ந்த இரு தியாகராசர்கள் மதுரை மாநகர்ப்புறத்திற்கும் மாண்பார் தமிழ்நாட்டுக்கும் பெருமை யளித்தனர். ஒருவர் ஆலையரசர் கருமுத்து தியாகராசர்; மற்றவர் நீதிக்கட்சித் தலைவர் தமிழவேள் பொன்னம்பல தியாகராசர்.
நூற்றாண்டுகளைக் கடந்தும் பெருமைச் சான்றோராகப் போற்றப்படும் பி.டி.ஆர். அவர்கள் தென்னக வரலாற்றில் தனி முத்திரை பொறித்தவர்; தலைமைச் சிங்கமாக உலாவியவர்; சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் போராடியவர்; அறநெறிக் காவலராகவும் ஆன்மிகச் செல்வராகவும் பொலிந்தவர். பி.டி.ஆர். எனும் மூன்றெழுத்து மோகன விலாசத்தால் பாளையம் இல்லத்தையும் பண்பார் தமிழ் உள்ளத்தையும் சரித்திர சாசனங்கள் ஆக்கியவர்.
அரசாண்ட அரிய நாயக முதலியாரது மரபு வழியான உத்தம பாளையம் முதன்மைக் குடும்பத்தில், செல்வச் சூழலில் பிறந்து இளமையில் பெற்றோர் இருவரையும் இழந்த போதிலும், சிற்றப்பாவின் சீராட்டில் வளர்ந்து சேதுபதிப் பள்ளியில் அகரம் பயிலத் தொடங்கி, சீமை சென்று பார்-அட்-லா பட்டம் பெற்றுத் திரும்பியது வரை பொன்னம்பல தியாகராசர் வாழ்வில் மகத்தான சம்பவங்கள் ஏதும் இல்லை.
ஆனால் 1920-இல் பார்-அட்-லா பட்டத்தோடு தமிழகம் திரும்பிய பின்னர்தான் அவரது பொது வாழ்வில் பூபாளங்கள் தொடங்கின. ஏறத்தாழ அதே ஆண்டுகளில் சீமைப்பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பிய பண்டித நேருவை தேசியப் போராட்ட வெள்ளம் ஏந்திச் செல்லக் காத்திருந்தது. பி.டி.ஆரையோ தமிழ்நாட்டில் புரையோடிக் கிடந்த சாதிப்புன்மையும் ஆதிக்க வர்க்கச் சழக்கும் சமூக நீதிச் சூழலில் எதிர்நீச்சல் போடச் செய்தன. அவ்வளவு பட்டம் பெற்றவர் தேசியப் போரில் ஈடுபட்டு, மிக எளிதில் பிறரைப் போலப் பிரபலமாகி இருக்கலாம். ஆனால் பி.டி.ஆர். ஆங்கில ஆட்சிக்கு இசைந்திருந்து, ஆளப்படும் மக்களின் சமத்துவ உரிமை கைவரப்பெற்று அப்புறம் அன்னிய அரசை எதிர்க்க வேண்டும் என ஏற்றுக்கொண்டார். இல்லாவிடில் வெள்ளையர் வெளியேறினாலும் வேறு ஒரு மேல் சாதிக் கொள்ளையரே பெரும்பான்மையரைச் சுரண்டுவர் சாதிய அடிமைகள் என்றென்றும் சரித்திர அடிமைகளாகவே நீடிப்பர். எனவே சமத்துவம் நல்கும் சமூகச் சமநீதியே உடனடித் தேவை என அன்று புறப்பட்ட ஜஸ்டிஸ் நீதிக் கட்சியைச் சார்ந்தார்; சுய மரியாதை இயக்கத்திற்கு வலிமை ஊட்டினார்.
1920-40களில் காங்கிரஸ் மாகாண சுயாட்சி முதலிய பொறுப்புக்களை ஏற்கச் சம்மதிக்கும் முன்னர், டொமினியன் அந்தஸ்தை ஆங்கில அரசு முதல்படியாக ஜஸ்டிஸ் பார்ட்டி தயாராகி விட்டது. வடபுலத்தை விட, தென்னகத்தே காங்கிரஸ் இயக்கத்திலும் மேல் சாதியினர் ஆதிக்கமே நீடித்ததால் படித்தவர், பாமரர் அனைவரையும் ஓரணியில் கூட்டும் நீதி இயக்கமாக அது மாறியது.
சர் பி.டி.தியாகராசர், பனகல் மன்னர், பொப்பிலிராஜா, கே.வி.ரெட்டி, முத்தைய அரசர் ஆகியோர் இயக்கச் செம்மல்களாகப் புகழோச்சி வந்தனர்.
அப்போது பொதுப்பணி ஆர்வத்தோடு, சட்டமன்றத் தேர்தலில் வாகை சூடிய இளைஞர் பி.டி.ஆர். அமைச்சுப் பொறுப்பேற்றிட அழைக்கப்பட்டார். ஆறு ஆண்டுக் காலம் பல நிலைகளில், வெவ்வேறு துறைகளில் அவர் செயலாற்றினார். உள்ளூர்த் தல சுயாட்சியில் தன்னிறைவுக்கு அப்போதே வழிகோலினார். கல்வி, குடிநீர், சுகாதாரம் எனும் மூன்றனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக்காக முதல் குரல் கொடுத்தார். ‘சரிகைக் குல்லாக் கட்சி’ என்று நீதிக்கட்சியை ஏளனம் செய்தோர் இருந்த போதிலும், சர் பி.டி.ராஜன் – எதிரணியினராலும் மரியாதையோடு ஏற்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தே ஜெர்மனியும் ஜப்பானும் அசுர பலத்தால் அதிரடி வெற்றிகளைப் பெற்று வந்த சூழலில் – ‘இந்தியர்கள் பிரிட்டனுக்கு எதிராக அச்சு நாடுகள் வெற்றிபெற ரகசியமாகச் செயல்படவேண்டும் என்ற ராட்சத நாடுகள் ஜெயித்தால் மானுட உரிமையே பறிபோய்விடும் இப்போது பிரிட்டனை ஜெயிக்க வைப்போம்; பின்னர் அதனுடன் வாதிடுவோம்’ என யுத்த நிதி திரட்ட முற்பட்டார். ஒரு போர் விமானம் மதுரை மக்கள் பெயரால் வாங்கிடப் பெரு நிதி குவித்தார். பி.டி.ஆரின் கருத்தே பின்னர் வரலாற்று உண்மையும் ஆயிற்று.
சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே சுயமரியாதை இயக்கத்தின் இந்தி எதிர்ப்புப் போர், விதவையர் மறுமணம், முதலியவற்றில் தந்தை பெரியாரின் தளபதி ஆனார்.
பார்-அட்-லா பட்டம் பெற்றவர் நீதிமன்றத்தையே மறந்துவிட்டாரா?
அது முடியுமா? பி.டிஆரால் இயலுமா?
அரசியல் பணிமாற்றம் கண்ட அந்த வினாடியே, 1937-இல் மதுரை வழக்கறிஞர் அவைக்குள் (ஙிணீக்ஷீ) பிரவேசமாகி விட்டார். அன்றைய பிரபலங்களான சட்ட வல்லுநர்கள் பி.ரங்கசாமி நாயுடு, துரைசாமிப்பிள்ளை, சுப்பிரமணிய ஐயர் ஆகியோருக்கு நிகராக வாதிட்டு பல கிரிமினல் வழக்குகளில் வாகை சூடினார். பின்னர் பிரபலங்களான பலர் அப்போது அவருடைய ஜுனியர்களாகப் பழகிவந்தனர்! வழக்கறிஞர்கள் திரு. ஞி. சந்தோஷம், வி.ராஜையா, ழி.ரி. பாகுலேயன் எனும் இப்பட்டியல் பெரியது அதிலும் பெரிய பணி மதுரை நீதிமன்றக் கட்டிட வளாகமாக – இப்போதுள்ள இடத்தைத் தேர்வு செய்த குழுவில் பணியாற்றிய வகைமை.
வகைமைகள் வளர்வதற்கெல்லாம் வழியமைத்தவை இரண்டு – ஒன்று பி.டி.ஆர் எனும் விரிந்த மனம்; மற்றொன்று பாளையம் இல்லம் எனும் திறந்த வாயில், அடையா நெடுங்கதவம்.
“குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு” (793)
என நட்பாராய்தலுக்கு வள்ளுவர் கூறிய இலக்கணம்- பாளையம் இல்லத்தாருக்கே பொருந்தும். அந்தத் திருமனையின் செல்வாக்குக்கு அது தேடிக் கொண்ட நட்புச் செல்வங்களே அடித்தளம்.
ஒரு வரலாற்றை தனியொருவர் வாழ்வுப் போக்கை வளர்கதையாக்கி வழங்குவது, மூலவேரிலிருந்து முளைத்து மேல் எழும் பண்புக் கிளையும் நட்பு மலர்களும் தான்… பாளையம் தருவில் மலர்களுக்கும் கனிகளுக்கும் பஞ்சமே ஏற்பட்டதில்லை.
சுதந்திரம் வந்த பின்னர் காங்கிரஸ் அரச கட்டில் ஏறியபோது 1952-இல் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு தலைவராக வந்து அப்போதும் வரலாறு படைத்தார். தற்காலிக சபாநாயகராக, மேலவை உறுப்பினராக சட்ட ஞானம் நிறைந்த செயலாற்றிப் புகழ்பெற்றவர். அக்காலத் தலைவர்களான மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராசர், அறிஞர் அண்ணா, மேதை ஜி.டி.நாயுடு ஆகியோர் போற்றும் சான்றோர்கள் ஆனார். தேவிகுளம் பீர்மேட்டுப் போராட்டத்தில் தமிழ் மண்ணுரிமை கோரினார்.
அரசியல் பணிகள் என்பன, ஆற்று வெள்ளம் போல அதன் பயன்களும் புகழும் பிரளயமாகப் பெருகிவரும்; பின்னர் அருகிப் போகும். ஆனால், சமய, சமுதாயப் பணிகள் என்பவை ஊற்று நீர் போன்றவை. மழை ஓய்ந்த பின்னரும் மறுபயன் தருபவை; மறுமலர்ச்சி ஊட்டுபவை.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்திடவும் மதுரைப் பல்கலைக்கழகம் பிறந்திடவும் பி.டி.ஆரே காரணர். மதுரைத் தமிழ்ச் சங்க பொன்விழாச் சிறக்கவும், முதல் உலகத் தமிழ்மாநாடு கோலாலம்பூரில் பொலிவுறவும் பி.டி.ஆரே முதன்மையர்.
சமய மறுமலர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும்பணி தமிழகத்தில் புதிய பக்தி இயக்கத்தையே தோற்றுவித்து விட்டது. கடவுள் மறுப்புக் கொள்கையரோடு அவருக்கு அரசியல் தொடர்பு இருந்தபோதிலும் சமயத் தனி ஒழுக்கத்தில் அவர் தனிப்பாதையில் நடந்தார், அந்தப் பாதையில் பலரையும் பவனி வரச் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலைப் புனரமைத்து நடப்பித்த பெருங்குட முழுக்கும், அன்னை மீனாட்சிக்குச் சூட்டிய வைரக் கிரீடமும், அய்யப்ப சுவாமிகள் பக்தியைத் தமிழ்நாட்டில் மாபெரும் பக்திப் புரட்சி இயக்கமாக மாற்றுவித்ததும், திருவாதவூர், வடபழனியாண்டவர் ஆலயம் உள்ளிட்ட புனரமைப்பும் பி.டி.ஆர் அவர்களின் முத்திரைத் தொண்டுகள்.
பி.டி.ஆர். பெற்ற மக்களுள் பொறியியல் கற்று, புல்லாங்குழல் இசை ஆய்ந்து, புலன் திருந்தும் ஆன்மவியல் நாடி, வள்ளுவர் கழகப் புகழ் வளர்ப்பவர் ஒருவர்.
தந்தை வழிச் சுவடு சேர்ந்து சட்டம் பயின்று, கல்வி சமுதாயப் பணிக்கே ஆட்பட்டு வளர்நிலைக் கழகத்திலேயே சார்ந்திருப்பர் பழனிவேல்ராஜா!
தந்தையின் விலாசத்தாலேயே கட்டப்பெறும் இத்தலைமுறைத் தலைவர் பி.டி.ஆர். அவர்கள் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகராக ஆற்றிவரும் ஆக்கங்களை நாடு போற்றுகிறது; தந்தை வழியே தனயர்களின் வாழ்வும் வரலாற்று மடல்களாகக் கண்டு மனம் பூரிக்கிறது.
வரலாற்றுச் சான்றோர்கள், சமுதாயத்தின் கருவூலங்கள் ஆகும்போதே அந்தச் சமுதாய வாழ்வின் புது ரத்தம் புனலாகப் பரந்தோடும். நம் தமிழகச் சான்றோர்களையும் நாம் சரித்திர நாயகர்களாக ஆக்கி, வளரும் நம் பிள்ளை களுக்குப் பாடமாக்கிச் சொல்ல வேண்டும். அலெக்சாண்டரையும் அக்பரையும் படிக்கும் பிள்ளைகள், தமிழவேள் பி.டி.ஆரையும் பிற தமிழினச் சான்றோரையும் பற்றிப் பயிலும்போதே உண்மைத் தமிழக வரலாறு ஒளிவிடும்.
தமிழக ஒளிவிளக்காக வரலாறு படைத்த பி.டி.ஆரின் வாழ்க்கை நமக்கு ஒளியூட்டுக.
சமீபத்திய கருத்துகள்