முன்னேற்றப் பாதையில் நாம்…
பாதை தெரியுது
‘ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி’ என்று பழந்தமிழ் இலக்கியத்தால் போற்றப்பெற்ற வணிக மரபினரான ஆயிர வைசிய சமூகத்தின் ஐந்தாம் மாநில மாநாட்டு மலருக்கு ஒரு கட்டுரை எழுதிட வேண்டும் எனக் கருதியபோது என் எண்ணமெல்லாம், உணர்வெல்லாம் பல திசைகளில், பல நிலைகளில் ஓடிப் பரவின. வரலாற்றுப் பெருமையும் வழிவழித் தொன்மையும் கொண்ட இச் சமூகத்தின் பழம்பெருமை; சமூகப் பிரிவுகளாலும் காலச் சூழலாலும் இடைக்காலத்தே ஏற்பட்ட நலிவு; கடின உழைப்பும் கட்டுக்கோப்பும் கொண்டு அமைந்த ஒற்றுமை யுணர்வால் எதிர்காலத்தில் அமையப் போகும் உயர்வு எனும் இவற்றைச் சிந்திக்க என் உணர்வலைகள் வாய்க்கால் தேடின.
பதினெட்டாம் பெருக்கு
மாநாட்டில் அன்பர்கள் எல்லாம் உற்சாகம் கொப்பளிக்க வந்து கூடுவது பதினெட்டாம் பெருக்கின் போது ஆற்று வெள்ளம் பிரவாகமாகப் பெருகி வரும் பிரமை போலத் தென்படும். அது நெடிது காலம் நீட்டிக்காது. ஆற்று வெள்ளத்தை அணை கட்டித் தேக்கி வைப்பது போல, ஓடிப்பெருகும் உணர்ச்சிப் பிரவாகங்களைக் கருத்துக் கோவையாக, சிந்தனைக் கருவூலமாகத் தேக்கி வைக்கும் ஒரு நிரந்தர முயற்சியே மாநாட்டு மலர் வெளியீடு. எனவே இந்த மாநாட்டு மலரினை என் சிந்தனைகளை ஏந்திவரும் வாய்க்காலாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
கண்டிப்பா? கவனிப்பா?
நம் இந்திய நாடு விடுதலை பெற்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதந்திரப் போர் நடந்த காலத்தில், நமக்குள்ளே வேரூன்றிக் கிடந்த சாதி, சமயப் பூசல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு,
“வேதியராயினும் ஒன்றே & அன்றி
வேறு குலத்த வராயினும் ஒன்றே”
என வீறு கொண்டு போரிட்டோம். ஆனால் கண்ணினு மினிய சுதந்திரம் பெற்ற பின்னர் பழைய சாதிப்பிரிவுகள் புதுவலிமை பெற்று வளரக் காணுகிறோம். அரசியல் பொருளாதாரச் சூழல்கள் இப்பிரிவுகளுக்குப் புத்துரம் தந்து வருவதையும் காணுகிறோம். இது கண்டிக்கத்தக்க ஒன்றில்லை; ஆனால் கவனிக்க வேண்டிய ஒன்று. அடிமைப்பட்டுக் கிடந்தபோது அன்னிய ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்த்தோம். அதற்கு நாடு தழுவிய ஒற்றுமை தேவைப்பட்டது. சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி நலத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் ஒருவரை ஒருவர் முந்த வேண்டும் எனும் போட்டி ஏற்பட்டது. இப்போட்டி பல சமூக, சமுதாய அமைப்புகளைப் புத்தெழுச்சி பெறச் செய்துள்ளது. இந்த எழுச்சிப் பாதையில் நடைபோட நம் ஆயிர வைசிய சமூகமும் வந்தாக வேண்டிய கட்டாயத்தின் விளைவே நமது மாநில மாநாடு.
சமூகம் – சமுதாயம்
சமூகம், சமுதாயம் – என்பன எளிதில் வரையறுக்க முடியாத விரிவாக்கச் சொற்கள் என்பர். தனி நபர்களால் குடும்பமும், குடும்பங்களால் சமூகமும், சமூகங்களால் சமுதாயமும் அமைகின்றன. எனவே சமூகம் என்பதைச் சிறியதொரு வட்டமாகவும், சமுதாயம் என்பதைப் பெரியதொரு வட்டமாகவும் கொள்ளலாம். சமூகம் என்றால் சிஷீனீனீuஸீவீtஹ் எனும் கருவையும், சமுதாயம் என்றால் ஷிஷீநீவீமீtஹ் எனும் கருத்தையும் ஏற்கலாம்.
நம் ஆயிர வைசிய மரபினை இந்த இருவகையிலும் அடக்கலாம் என்பது என் கருத்து. இதன் 18 பிரிவுகள் 18 சமூகங்களைப் போல; இந்த 18 பிரிவுகளும் ஒரே ஆயிர வைசியக் குலத்தின் கீழ் வருகையில் – அது ஒரு சமுதாயத்தைப் போல. பிற சமுதாயங்களோடும், நாட்டோடும் ஒப்பிடுகையில் – நாம் ஒரு சிறு பிரிவாகிறோம். எனவே நம் வளர்ச்சிக்குத் திட்டமிடுகையில் சமூகக் கண்ணோட்டமும் வேண்டும்; சமுதாயக் கண்ணோட்டமும் வேண்டும்.
தனி மரமா? தோப்பா?
‘ஆயிரங் கோத்திரங்கள்’ அல்லது ‘குடிகள்’ எனும் பழம்பெயர்கள் நமது ஆதார வித்துக்கள். இக்குடிகளைச் சார்ந்த ஒவ்வொரு தனி நபரும் முக்கியமானவர். தனிமரம் தோப்பு ஆவதில்லை; என்றாலும் தனி மரங்கள் இல்லாமலும் தோப்பு ஏற்படுவதில்லை. அத் தனித்தனி மரங்களே சேர்த்தமைந்து தோப்பாக அமைகின்றன. எனவே சமூக வளர்ச்சி பற்றிக் கருதும் போது தனிநபர் வளர்ச்சிக்குத் தலைமையிடம் தர வேண்டும். தனித்தனி வளையங்கள் சேர்ந்து சங்கிலி அமைகிறது; இதில் ஒரு வளையம் பலமற்றுப் போனால், அந்தச் சங்கிலி முழுவதுமே பயனற்றுப் போகும். நம் சமூகத்தில் தனி நபர் எனும் ‘வளையம்’ – சமூகச் சங்கிலிக்கே வலிமை தரும் வண்ணம் வனப்புற்று அமைந்துள்ளதா எனச் சிந்திப்போம்.
‘இன நலம் எல்லாப் புகழும் தரும்…’
‘வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை’ எனும் தமிழ் நெறிக்கு ஏற்ப, ‘வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி’ நம் சமூகம் அக்காலத்தில் செயல்பட்டது. சிறுசிறு ஊர்களில் சிதறி வாழ்ந்ததற்கு ஏற்ப சிறுசிறு வணிகத்திலே பெரும்பாலோர் ஈடுபட்டனர். சிலருக்கு வெளிநாட்டு வாணிபமும், பலருக்கு வேளாண்மையும் துணைநின்றன. கூட்டுக்குடும்ப அமைப்பே போற்றப்பட்டதால் வளரும் போதே நமக்கு ஒரு பாதுகாப்பு வேலி இருக்கிறது என்ற மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது. தீவிரமாகவும், துணிச்சலோடும் வளர முற்பட்ட சிலருக்கு இந்தப் பாதுகாப்பு வேலியே தடைப்படுத்தும் சுவராக அமைந்த போது அந்த வேலியைச் சிதைக்காமலே வளரும் உத்தி மிகச் சிலருக்கே தெரிந்தது; பிறர் அடங்கி இருந்துவிட்டனர். பல பொருள் சில்லறை வணிகம், ஆபரணத் தொழில் எனும் குலத் தொழில்கள், நம் இளைஞர்களுக்குக் கல்லாமலே பாகம்படும் கலை களாகக் கைவந்தமையால், மாறிவரும் சூழலுக்கு ஏற்ற படி தொழில் நுட்பக் கல்வியும் உயர்கல்வியும் பெறுவதைத் தேவையற்றதாகக் கருதிவிட்டோம். வசதி உடையவர்கள் கூடத் தம் பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வி தரத் தவறிவிட்டனர்.
குடி என்னும் குன்றா விளக்கம்
இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில், இரு தடவை சென்னை ஷெரிப்பாக உயர்பதவி வகித்த நம் குலத்தவரான திரு.பி.இராமசாமிச் செட்டியார் எனும் பெருந்தகை தம் மக்கள் நால்வரையும் மேலைநாட்டுக்கு அனுப்பி உயர் கல்வி பெறச் செய்தார். அவருடைய முதல் மகன் பி.இரத்தினவேலுச் செட்டியார் இந்தியருள் முதல் மிசிஷி அதிகாரியாகப் பட்டம் பெற்று வந்தார் எனும் வரலாற்றுப் பெருமையை நாம் அறியவும் இல்லை; அப் பெருமையைப் பின்பற்றி நடக்கவும் இல்லை. பிற சமூகத்தவர் உயர்கல்வி பெறுவதில் போட்டியிட்டு முன்னேறப் போராட்டங்கள் நடத்திய போது – அதற்கான கல்வி, வேலைவாய்ப்புச் சலுகைகளைப் பெற வரிந்து கட்டி நின்ற போது – நாம் முன்னேறிய சமூகமா அல்லது பிற்பட்ட சமூகமா எனும் ஆராய்ச்சியிலேயே தேங்கிவிட்டோம். அரசாங்க உத்தியோகம் பெறுவதற்காக நம்மைப் பிற்பட்ட குலத்தவர் ஆக்கிக்கொள்ள வேண்டுமா எனச் சர்ச்சை செய்து வந்தோம். ‘நம் பிள்ளை படித்துவிட்டு உத்தி யோகத்திற்கா போகப்போகிறான்? நமக்கு உள்ள சொந்தத் தொழிலைப் பார்த்தால் போதாதா?’ எனும் அசாத்திய நம்பிக்கையும் வறட்டு ஜம்பமும் காலத்தால் நேரிட்டு வரும் மாற்றங்களையும், தேவைகளையும் கணிக்கவிடாமல் செய்துவிட்டன. இன்று அரசு அலுவலில் பொதுவாகவும், உயர்பதவிகளில் சிறப்பாகவும் இடம்பெற்றுள்ள நம் மரபினர் யார் என்று தேடிப் பார்க்க வேண்டியுள்ளது.
காலம் கருதிச் செயல்
“ஒவ்வொரு சமூகமும், கலாச்சாரமும், நாடும் அவ்வப்பொழுது காலம் அளிக்கின்ற சில சவால்களைச் சந்திக்க நேரிடுவதே வரலாறு” என்பர் அறிஞர் பெருமக்கள். இந்தச் சவாலை எதிர்கொண்டு ஏற்கத் தயாராக இருக்கும் சமூகமும், பண்பாடும், நாடும் வளர்ச்சியுறும்; சவாலைச் சமாளிக்க முடியாதவை பின்தங்கிப் போகும்.
‘குடி செய்து வாழ்வார்…’
நாடு தந்த இந்தச் சவாலை நாம் தனி நபராகவும், சமூகமாகவும் ஏற்றோமோ என்பதைக் கருதிப் பார்க்க வேண்டும். தனி நபருக்கும் சமூகத்திற்கும் இடையில் இணைப்புப் பாலமாக உள்ள ஒவ்வொரு குடியும், குடும்பமும் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டதா என்பதையும் சிந்திக்க வேண்டும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல கூட்டுக் குடும்பப் பாதுகாப்பும், நமது பொது அணுகுமுறையும் சவாலை ஏற்கும் சாதுரியத்தினை அளிக்கவில்லை. இருப்பது போதும் என்ற மனம், இழப்பீடு ஏற்படினும் துணிச்சலுடன் (ஸிவீsளீ) புதுத்துறைகளை நாட முன் வராமை, சமூகத்தில் ஓரளவு உயர்நிலையில் இருந்தவர்கள் பிற நலிவுற்ற குடும்பங்களைக் கைதூக்கிவிட முற்படாமை, அனைத்துக் குடும்பங்களையும் ஒருங்கிணைத்துக் கூட்டுறவாகத் தீர்வுகாண இயக்கம் இன்மை – இவையெல்லாம் காரணங்கள் ஆகும். ‘குடி செயல் வகை’ (103) எனும் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ள குறள் நெறிகள் எல்லாம், வளர்ச்சியையும் நிலைபேற்றையும் நாடி நிற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், சமூகப் பிரிவிற்கும் பொருந்தும் என்பது துணிபு.
“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும்.” (1023)
தளம் தோறும் தக்க தலைவர்கள்
ஒருவர் அல்லது ஒரு சிலர் முன் வந்து உழைக்க முற்பட்டாலே குடும்பமும் சமூகமும் உயர்வுறும் என்பதே வள்ளுவர் வகுத்த பாதை. இவ்வாறு உழைப்பதற்கு உரிய விசாலமான இருதயமும், உறுதியான உள்ளமும், உண்மையான நாட்டமும் கொண்ட நல்ல தலைவர்களை எல்லாத் தளத்திலும் நாம் உருவாக்க வேண்டும். இத்தகைய சமுதாயத் தலைவர்கள் சவாலை ஏற்கத் தாமும் சித்தமாக இருப்பார்கள்: தம்மைப் பின்பற்றும் சமூகத்தவரையும் தயார்ப்படுத்தி வைப்பார்கள்.
‘பேணுநற் குடிப் பெண்டிர்…’
இந்தத் தலைவர்களை உருவாக்குவதும், உருவாகி வந்தோரை உபயோகப்படுத்திக் கொள்வதும் அவசியம். நம் பிள்ளைகள் கல்வி பயிலும் காலத்திலேயே நம் சமூகப் பிரச்சினைகளில் அவர்களுக்கும் ஓரளவு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். பந்தயக் குதிரையைப் பழக்குவது போல அறிவுத் துறையிலும் உலகியலிலும் அவர்களுக்கு ஆன்ற பழக்கங்களை அளிக்க வேண்டும். அவர்கள் பெறும் கல்வி வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் இருக்கக் கூடாது. “பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்” என்ற பாரதி வாக்குப் போல, அனுபவக் கல்வியாகவும் தொழில்நுட்பக் கல்வியாகவும் இருத்தல் வேண்டும். எப்பாடு பட்டேனும் தரமான, தகுதியான கல்வியை நம் பிள்ளைகளுக்கு அளித்தல் வேண்டும். பெண் கல்வியை இதுகாறும் நாம் மிகவும் புறக்கணித்து விட்டோம்.
“ஒரு ஆண் மகனுக்குக் கற்பித்தால்
அவனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்கிறோம்.
ஒரு பெண் மகளுக்குக் கற்பித்தால்
ஒரு சமுதாயத்திற்கே சொல்லிக் கொடுக்கிறோம்”
என்றார் காந்தியடிகள். நமது பெண்களுக்கு எல்லா நிலையிலும் கல்வியளிக்க முற்பட்டால் – நம் மாதர்களில் பலர் டாக்டர்களாக, எஞ்சினீயர்களாக, வல்லுநர்களாக உயர்ந்திருப்பர்; நம் சமூகத்தையும் உயர்த்தியிருப்பர்.
இன்று கல்வியளிப்பது என்பது சமூகக் கடமையாகவும் அரசின் பொறுப்பாகவும் மாறியுள்ளது. எனவே தனிக் குடும்பத்தவர் தம்மால் இயலவில்லை என்று சோர்ந்து விடாது சமூகமும், அரசும் நல்கும் உதவிக் கரங்களை இயன்றவரை பற்றிக் கொள்ள முற்பட வேண்டும்.
‘நிதி மிகுந்தவர் தாரீர்…’
சமூகத்தவர் கூட்டுறவாலும் தனி நபர் கொடைநலத்தாலும் ஆங்காங்கு சில கல்வித் தொண்டுகள் நடைபெற்று வந்தாலும் அவை பிறருக்கெல்லாம் வழிகாட்டும் எடுத்துக்காட்டான நிறுவனங்களாக அமையவில்லை. தமிழ்நாட்டில் நம் சமூகப் பெயரால் முதல் தரமான கலை மற்றும் விஞ்ஞானக் கல்லூரியும், பொறியியற் கல்லூரியும் நிறுவ வேண்டும் என நாம் மேற்கொண்ட முயற்சிகள் அப்படியே நின்றுவிட்டன. எனவேதான் இந்த மாநாட்டில் நிலைநிதி ஒன்றை உருவாக்கி கல்விப் பணிக்குக் கணிசமாக உதவி செய்வது எனத் திட்டமிட்டுள்ளோம். எளிமையினால் படிக்க முடியவில்லை என எவரும் ஏங்கிவிடாமல், தகுதியான பிள்ளைகளுக்கு உதவித் தொகை நல்க வேண்டுவது சமூகப் பொறுப்பு என உணர்ந்துள்ளோம். பொறியியல், மருத்துவம், சட்டம், வணிக ஆய்வு, நிர்வாகம், விரிவாக்கம் ஆகிய துறைகளில் எல்லாம் வாய்ப்புத் தேடி வரும் ஆற்றலுள்ள இளைஞர்களுக்கு உதவிட வழிவகை கண்டு வருகிறோம்.
களம் தோறும் காளையர்
“நூறு நல்ல இளைஞர்களை எனக்குத் தாருங்கள்; நான் இந்த நாட்டினை உயர்த்திக் காட்டுகிறேன்” என்றார் சுவாமி விவேகானந்தர். நம்மிடையே நல்ல இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த இளைஞர்களை ஓர் இயக்கம் ஆக்கி, வல்லவர்களாக்கிட நாம் வழியமைக்க வேண்டும். சென்னை, சேலம், பரமக்குடி, மதுரை ஆகிய நகரங்களிலும் சிற்றூர்களிலும் நம் இளைஞர்கள் அவ்வப்போது ஆற்றி வரும் செயல்கள் பாராட்டத்தக்கன என்றாலும் இத்தொண்டுகள் தொடர்ந்து வர வேண்டும். இளைஞர்களுக்குப் போதிய உற்சாகம் தர வேண்டும். பெரியவர்கள் புறக்கணிக்கிறார்கள், பொறாமைப் படுகிறார்கள் எனும் புகைச்சல் ஏற்பட இடம் தரக்கூடாது.
‘உடன்பட்டும், ஊடுருவியும்…’
சர்வ தேச இளைஞர் நலம் போற்றப்படுவதன் பின்னணியைப் புரிந்து கொண்டு நம் இளைஞர்களை 21-ஆம் நூற்றாண்டின் தலைவர்களாக இப்போதே நாம் உருவாக்கி வர வேண்டும். நம் சமூக அமைப்பின் எல்லாத் தளங்களிலும் அவர்களுக்கும் பொறுப்பளிக்க வேண்டும்; பிற சமூகங்களோடு ஒத்துழைத்தும் உடன்பட்டும், தேவையானால் ஊடுருவியும் போட்டியிட்டும் நம் இளைஞர் உயர நல்லாக்கம் தர வேண்டும். மதுரை மாநாட்டில் இளைஞர், மகளிர் பங்கேற்கும் தனித்தனிக் கருத்தரங்குகளும், கல்வி, தொழில் எனும் செயலரங்குகளும் ஏற்படுத்தி இருப்பதன் நோக்கமே இவற்றைப் பாத்திகட்டி வளர்க்கத் தான் எனக் குறிப்பிட விழைகின்றேன்.
‘பதவியும் உதவியும்…’
நம் இளைஞர்களும் அன்பர்களும் சமூக அளவில் உழைப்பதோடு நின்றுவிடாது பிற சமூகத்தொண்டிலும் ஈடுபட்டு பெருமையும், புகழும் பெறுதற்கு முற்பட வேண்டும். பிறருக்கென வாழ்பவர் சிலராவது தோன்றினால் தான் பொதுச் சமுதாய வாழ்வில் மலர்ச்சியும், உயர்ச்சியும் தோன்றும். ‘அரசியல்’, ‘கட்சி அமைப்பு’ என்பன சனநாயகத்தின் இன்றியமையாத தூண்கள். நம்மில் பலர் அரசியல் கட்சிகளிலும் அமைப்புக்களிலும் தூண்களாகத் தலைமையிடம் பெற்றிட வேண்டும். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் நம்மவர் பல அரசியல் பதவிகளில் உள்ளனர் என்றாலும் அவர்களை இனம் கண்டு. சமூக அளவில் நாம் பாராட்டிக் கை கொடுக்க வேண்டும். பதவி வகிக்கும் பிரமுகர்களையும் நம் அமைப்புக்களுக்கு அழைத்து அறிமுகம் செய்து கொள்வது பயன் தரும். சுழற்கழகம், அரிமா சங்கம், ஜேசீஸ் முதலிய சமூகத் தொண்டு நிறுவனங்கள், வணிகக் கழகங்கள், தொழில் கூட்டுறவுகள் முதலியவற்றிலும் நாம் தீவிரப் பங்கேற்க வேண்டும். இந்த ஈடுபாடும் உறவும் (மீஜ்ஜீஷீsவீtவீஷீஸீ) நம் இளைஞர்களுக்குப் பேருதவி புரியும்.
75 சதமும், 25 சதமும்
சிறுசிறு வெற்றிகளில் திருப்தியடையாமல் பெரும் வெற்றி நோக்கில் பீடு நடை போட வேண்டும். சங்க இலக்கியம் சுட்டும் குறும்பூழ் வேட்டுவன் போலாது, யானை வேட்டுவன் போல முயலும் செம்மாப்பு வேண்டும். ‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்’ (குறள்:596) என்ற படி நாம் சமூக உயர்வுக்குத் திட்டமிடுகையில் பெரிதாகத் திட்டமிட்டுச் செயல்புரிய முற்படவேண்டும். இதுகாறும் குறுகிய அளவில் செயல்பட்டோம்; இனிப்பரந்து விரிந்த தளத்திற்கு வந்தாக வேண்டியுள்ளது. சிறுதொழிலாக, நடுத்தரத் தொழிலாக நடத்துவதால் பெரிய சாதனை ஏதும் ஏற்பட்டுவிடாது. அரசும், வங்கிகளும் அளிக்கும் சலுகைகளுடனும் தனிநபர், கூட்டு முயற்சிகளுடனும் பெரிய தொழில்களை நிறுவும் சாத்தியக் கூறுகளைச் சிந்திக்க வேண்டும். றி.ஷி.நி., ஜி.க்ஷி.ஷி. போன்ற நிறுவனங்களை நம்மாலும் உருவாக்க முடியுமா என ஆலோசிக்க வேண்டும். தொழில் துறையில் முன்னேற 75 சதவீதம் பாதுகாப்பும் 25 சதவீதம் துணிச்சலும் வேண்டும். அந்த 25 சதவீத அருஞ்செயல் முனைப்பே அனைத்து ஆக்கங்களையும் தரும் என்பதை நம்மவர் உணர வேண்டும். அத்தகைய அருஞ்செயலால் பெரியதொரு நிறுவனமோ தொழிற் சாலையோ ஏற்பட்டுவிட்டால், அதன் ஒளியை நாடித் தொழில்நுட்பக் கல்வியினரும் ஆர்வலரும் வர முற்படுவர். பல குடை நிழலையும் தன் குடைக் கீழ்க் கொணரும் ஆலமர அமைப்பு ஒன்று அவசியம் நம்மவரால் உருவாக்கப்பட வேண்டும். அதன் விழுதுகள் ஆயிரங்கால் மண்டபம் போல கால வெளியில் நிற்கவேண்டும் என்பதே நம் செயல்திட்டம். நீண்ட காலப் பயன் தரும் இத்தகைய தொழிலாக்கங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உருவாக்கித் தர மதுரை மாநாடு வழிகாட்டும் எனத் துணிகிறேன். கீரைப் பாத்தி போட நிலத்தைக் கிளறாமல், தென்னந்தோப்பு வைக்கப் பெருங்குழி போடும் பெரு நினைப்பும், எதிரதாக் காக்கும் அரணும் இம்மாநாட்டில் வலுப் பெற்றிடும் என எதிர்பார்க்கின்றேன்.
‘பரவியும் சிதறியும்…’
‘வெள்ளத்து அனைய மலர் நீட்டம்’ (குறள்:595): நம் உள்ளமெல்லாம் ஓங்கி வளரும் வெள்ளமாக விளங்குவது நம் சமூகம். நாம் தமிழகம் எங்கணும் பரவியும் சிதறியும் ஆங்காங்கு வாழ்கிறோம். எனவே நம் நிலையை உணரவும் வலிமையை உயர்த்தவும் முற்பட வேண்டும். அவ்வாறு செய்வதற்குச் சமூகச் சங்கங்கள் பெரும் துணை புரிய வேண்டும். இப்போது சிறுசிறு அளவில் நடக்கும் முயற்சிகள் பேரளவில் வடிவெடுக்க வேண்டும் என்பதற்காகவே மாநாடுகளைக் கூட்டுகிறோம். இத்தகைய மாநாடுகள் நமக்குப் போலியான, பொய்யான பிரமைகளையும் நம்பிக்கைகளையும் தோற்றுவித்து விட்டு நம் குறைகளை மூடி மறைத்துவிடக் கூடாது. ஏதோ ஒரு கடமைக்குச் செய்வதற்கோ கூடிக் கலைவதற்கோ ஏற்பட்டதல்ல இம்மாநாடு. ஒரு வலுவான சமுதாயமாக உருவாகி வருகையில் நம்மைப் பின்னுக்கு இழுக்கும் பழமைப் போக்கையும் பத்தாம் பசலித்தனத்தையும் கைவிடத் துணிய வேண்டும்.
நோய் நாடி…
வரதட்சணை எனும் சமூக நோய் பிற சமூகங்களைப் போல நம் சமூகத்தையும் விடாப் பிடியாகப் பற்றிக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவுகள் பற்றி நாம் விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. இது நோய் என்பதை அறிவோம்; இதன் தீமைகளையும் அறிவோம். ஆனால் அதைக் கைவிட மட்டும் துணியோம். இப்பேதைமையில் இருந்து நாம் விடுபட வேண்டும். நாம் விடுபடுவதோடு நம் பெண்களையும் இவ்விலங்கிலிருந்து விடுதலை செய்யவேண்டும். படிப்பு, தொழில் பங்கேற்றல், சமூகத் தொண்டு, அரசியல் பணி ஆகியவற்றில் பெண்களுக்கும் சம உரிமையும் சமூக அந்தஸ்தும் அளிக்க வேண்டும்.
இணக்கமாக…
நம் பிரிவுகளிடையே இன்னும் பொலிவு தரும் இணக்கம் காணாதிருப்பது மற்றும் ஒரு குறை, ஆயிர வைசியரில் உள்ள 18 பிரிவினரும் ஒரே வழியினர், வகையினர் எனும் உணர்வோடு திருமண உறவுகள் பூண வேண்டும். இவ்வகையில் வழிகாட்டி வரும் குடும்பங்களுக்குப் போதிய ஆக்கம் அளிக்க வேண்டும். இதனால் நாடு தழுவிய பெரும் மரபினர் எனும் பெருமை வந்து சேரும்.
பெருமை நல்கும் பேரமைப்புக்களான நிதி நிறுவனங்கள், வங்கிகள் முதலியவற்றை அப்போதே நிறுவாமல் இருந்து விட்டோம் எனும் குறைகளைப் போலவே ஏற்படுத்தியுள்ள தொடர்பு அமைப்புக்களைச் சரிவரப் பயன்படுத்தாமையும் குறையே ஆகும்.
தொடர்பு காண்போம்
அவற்றுள் ஒன்று – நம் சமூக இதழான ‘ஆயிர வைசியன்’ – மற்றொன்று ‘ஆயிர வைசிய சங்கம்.’ ‘ஆயிர வைசியன்’ இதழை – நம் இல்லந்தோறும் வாங்க வேண்டும். நம் எண்ணங்களை அதில் எழுத வேண்டும். ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவும் உறவுப் பாலமான அந்த இதழை எல்லா வகையாலும் பலப்படுத்தவேண்டும்.
இது ஆலமரம்!
இணக்கமும் ஏற்றமும் நம்மிடையே ஏற்பட்டால் மட்டும் போதுமா? அது நம் நாட்டில் உள்ள பிற சமுகத்தவரோடு நாம் காணும் தொடர்பிலும் மணக்க வேண்டும். கலை, பொருளாதார, சமூக வளர்ச்சி கருதி நாட்டில் தீட்டப்பெறும் திட்டங்களில் எல்லாம் நாம் ஈடுபடவேண்டும். நமக்கும் அதில் பொறுப்பும், பங்கும் உண்டு என்பதை மெய்ப்பிக்க வேண்டும். இதனால் பிற சமூகத்தவரின் போற்றுதலுக்கும் அரவணைப்புக்கும் இடம் தரும் இங்கிதம் இயல்பாக ஏற்படும்.
நாம் உயர நாடு உயரும்!
வாணிகப் பெருமக்கள் ஒரு நாட்டின் நாடி நரம்புகள், வளர்ச்சி பெறும் பெரியதொரு வல்லரசான நம் நாட்டின் நலத்திற்கெல்லாம் ஆக்கம் தர அயராது செயல்படும் குருதியோட்டங்கள். வரப்புயர எனப் பாடிய ஔவைப் பெருமாட்டி போல, ‘நாமுயர நாடுயரும் – நாடு உயர நாமும் உயர்வோம்’ எனும் பெருநினைப்புடன், பெரு மகிழ்வுடன் ஆயிர வைசிய சமூக அமைப்புக்களுக்குப் பல்லாண்டு இசைக்கின்றேன். இச் சமூகத்தவரின் வருங்கால வளர்ச்சியை, வளமான பொற்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.
நிறைவுப் பகுதி
அன்பர்களே! நாம் அனைவரும் இம்மாநாட்டுப் பயனாக நம் சமுதாயத்தின் பெருவளர்ச்சிக்குப் பாடுபடுவோம். அறப்பயிர் வளர்ப்போம். நாள்தோறும் நல்லவைகளை ஆராய்ந்து செயல்படுவோம். நல்லோர் துணையோடும் வல்லார் பரிவோடும் நன்மைகளை நாடிச் செய்வோம். அதனால் நம் சமுதாயம் நலம்பெறும்; முன்னேற்றப் பாதையில் ஒளிமிக்க சமுதாயமாகவும் திகழும்!
சமீபத்திய கருத்துகள்