“உடல் மண்ணுக்கும் உயிர் நாட்டுக்கும்”
வ.உ.சி.
“தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்” (குறள் 267)
எனும் வள்ளுவ நெறிக்கு ஏற்ப, ‘என்பும் உரியர் பிறர்க்கு’ என்ற அன்பு நெறிக்கு ஏற்ப உடலை மண்ணுக்கும் உயிரை நாட்டுக்கும் நல்கிய பேராண்மைச் சான்றோர்கள் நம்மால் எஞ்ஞான்றும் போற்றப்படுகின்றனர். பிறந்தவர் இறத்தல் பேருலகின் இயற்கை என்றாலும், தியாகத்தால், தொண்டால் புகழ் பெற்று வாழ்வோர் புகழ் உடம்பும் பூத உடம்பும் ஆகிய ஈருடம்பும் பெற்று வாழ்பவர் ஆவர். சாதாரண மக்கள் போல் அல்லாமல் இச்சான்றோர் பூத உடம்பு அழிந்தாலும், புகழ் உடம்பால் நிலைபெற்றுப் புகழோடும், பெருமையோடும் என்றும் நிலைபெற்று வாழ்வர். அத்தகைய தியாகச் செம்மல்களுள் தலைசிறந்து நிற்பவர், நம் தமிழகம் தந்த ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார்.
“மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவும் காண்கிலையோ?”
என இவரது தியாக வாழ்வுபற்றி மகாகவி பாரதி மனம் கசிந்து பாடினார்; ஆங்கில அரசால் வ.உ.சி. சிறைப் படுத்தப்பட்ட கொடுமையையும் செக்கிழுத்துச் சோர்ந்த போதும் தணியாத, அயராத அவரது சுதந்திர வேட்கையையும் பாடிப் பரவினார்.
“இதம்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதம்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்திரு கோடி யின்னல்
விளைந்தென்னை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே…”
எனப் பாடிய பாரதியார் நெஞ்சம், வ.உ.சி.யின் வரலாற்றையே நமக்கு நினைவூட்டுகிறது.
இந்திய விடுதலைப் போர்ச் சகாப்தத்தில் – கட்டபொம்மன் காலம் தொடங்கி, காந்தியடிகள் காலம் வரை பல்லாயிரவர் பங்கேற்றனர். இந்த உரிமைப் போரிலே தமிழினத்தார் செய்த புரட்சிகளும், ஆற்றிய தியாகங்களும் வரலாற்றுச் சிறப்புடையவை. வ.உ.சி.யின் தியாகங்கள் மணிமுடியாக இலங்குபவை.
நமது உரிமைப் போரில் ‘திலகர் சகாப்தம்’ என்பது ஒரு திருப்பு முனை. காங்கிரஸ் மகாசபை ஆரம்பிக்கப்பட்ட நாள் தொட்டு, மாட்சிமை தங்கிய மன்னர் பிரானுக்கு மனுப்போடும் சம்பிரதாயத்தையே அது பின்பற்றி வந்தது. “சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்” என வீரமுழக்கம் செய்த திலகர், கொந்தளித்துக் கொண்டிருந்த தேசிய உணர்ச்சி வெள்ளத்திற்கு வடிகால் அமைத்தார். இத்திலகர் சகாப்தத்திலே, தமிழகத்தின் தலைவராக, தென்னாட்டுத் திலகராகக் கப்பலோட்டிய தமிழர் விளங்கினார்.
அவருக்கும் திலகருக்கும் இருந்த தொடர்பை,
“திலக மகரிஷியின் கதை பாடும் போது
சிதம்பரம் பிள்ளை வந்து சுதி போடும்”
என நாமக்கல் கவிஞர் வருணித்தார். சிதம்பரனார், தமிழ்ப்பற்று மிக்க குடும்பத்திலே பிறந்தார். தம் தந்தை யாரையும், தமையனாரையும் போல, இவரும் உயர்தரக் கல்வி கற்று, சட்டம் பயின்று, வழக்கறிஞர் ஆனார். ஆங்கில மொழியில் ஆக்கம் பெற்றது போல, அருந்தமிழ் மொழியிலும் பெரும்புலமை பெற்றார். நாட்டிலே வீறிட்டெழுந்த சுதந்திர இயக்கம் சிதம்பரனாரின் உள்ளத்தையும் ஈர்த்தது. அவரும் அதில் தீவிரப் பங்கு கொள்ளத் தொடங்கினார்.
“கப்பலேறுவாயோ அடிமை
கடலைத் தாண்டுவாயோ?”
எனக் கேட்ட ஆங்கிலேயனுக்கு,
“சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்”
எனத் தேச பக்தன் மறுமொழி பகர்ந்ததாகப் பாரதி பாடினார். அந்தத் தேச பக்தன் வ.உ.சி. தான்! வெள்ளையர் களுடைய கொள்ளை லாபத்திற்கு உதவுவது கப்பல் வாணிபம் என்பதை உணர்ந்து அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தத் திட்டமிட்டார். இந்தியரின் மூலதன இரத்தத்தால் உருவாக்கப்பட்ட ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’யில் இந்தியர்களே புறக்கணிக்கப்பட்ட போக்கிற்கு எதிராகச் ‘சுதேசிக் கப்பல் கம்பெனி’யை முழுவதும் இந்திய மூலதனத்துடன் 1906-இல் நிறுவினார். இப்போட்டிக் கப்பல் நிறுவனத்தைக் குலைக்க, ஆங்கில அரசு கப்பல் கட்டணத்தைக் குறைத்து மேற்கொண்ட சூழ்ச்சிகள் பலிக்கவில்லை. எனவே சிதம்பரனாரை ஒடுக்க வேறு கடுமையான, கொடுமையான முறைகளை மேற்கொண்டது.
வீர ஆவேசக் கனலாக வ.உ.சி. மேடைகளில் முழங்கினார்.
“சுதந்திரம் நமது குறிக்கோள்,
வீறு கொண்டு பாரதம் பூரண
விடுதலை எய்தும் வரை ஓயமாட்டோம்!
உறுதியில் தளர மாட்டோம்.
விடுதலை பெறாது உயிர் வாழமாட்டோம்.”
எனச் சூளுரைத்தார். “அடிமைத் தனத்தை விடவா சாவு அஞ்சுதற்கு உரியது? மரணத்தைக் கண்டு அஞ்சுபவன்தான் கோழை! ஆன்மா அழிவற்றது! நாட்டு விடுதலைக்காக, நாட்டு நன்மைக்காக எவனொருவன் உயிர் துறக்கின்றானோ அவனே துறக்க உலகமாகிய இன்ப உலகிற்குச் செல்கின்றான்” என முழங்கினார். இவ்வாறு புரட்சி இயக்கத்தை வளர்த்ததுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கு உதவி செய்தார் எனப் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டுச் சிதம்பரனார் கொடுமை மிக்க ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டார்.
30-ஆம் வயதிலே அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. இருபது, இருபது வருடமாக மொத்தம் 40 ஆண்டுத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்த அப்பீலில் இது 6 வருடக் கடுங்காவல் தண்டனை யாகக் குறைக்கப்பட்டது. கோயமுத்தூர், கண்ணனூர்ச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுச் சொல்லொணாக் கொடுமைகட்கு உள்ளானார். ‘வந்தே மாதரம்’ எனச் சொல்லிக் கொண்டே கல்லுடைத்தார், செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார்.
“‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீயே
வருந்தலை என் கேண்மைக் கோவே..”
எனப் பாடிய பாரதியார், சிதம்பரனார் சிறைப்பட்டதால் நாடெங்கும் பரவிய அவல உணர்வைத் தம் கவிதையில் வடித்துக் கண்ணீர் சிந்தினார்.
சிதம்பரனார் சிறையில் தவம் இருந்தார்; சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக, அறிவுக் கோட்டமாக மாற்றினார்.
கண்ணனூர்ச் சிறையில், கொடிய குற்றவாளிகளுடன் அவரும் அடைக்கப்பட்டிருந்தாலும், உடனிருந்தவர்களை உளமார நேசித்தார்; அவர்களுக்கு அறநெறி காட்டுவதற்கென, எளிய நடையில் ‘மெய்யறிவு’ எனும் நூலை 100 வெண்பாக்களில் இயற்றினார். ‘மெய்யறம்’ எனும் மற்றொரு நூலையும் கண்ணனூர்ச் சிறையில் பாடினார். சமுதாயத்தை ஒழுக்கப் பாதையில் இட்டுச் செல்லும் தமது கடமையை மறவாது சிறையிலும் ஞான வேள்வி செய்தார் வ.உ.சி. ‘சுயசரிதை’ எனும் நூல் – அவரது சொந்தச் சரிதை மட்டுமன்று, தமிழகச் சுதந்திரப் போரின் திலகர் சகாப்த வரலாற்றில் ஓர் அங்கமாக விளங்கும் அரசியல் பொன்னேடும் ஆகும். ‘தனிப்பாடல் திரட்டு’, தமது முதல் மனைவிக்கு அஞ்சலியாக யாத்த ‘வள்ளியம்மை சரித்திரம்’ ஆகியன வ.உ.சி.யின் சிறை வாழ்வு தந்த தமிழ்க் கொடைகள்.
தண்டனைக் காலம் முடிந்து 1919-இல் சிதம்பரனார் விடுதலையானார். நெல்லை மாவட்டத்திற்குள் நுழையக் கூடாதென ஆங்கில அரசு தடை விதித்தது. இராஜத் துரோகக் குற்றம் சாட்டி, வக்கீல் சின்னத்தையும் பறித்துக் கொண்டது. நீதிமன்றத்திலே தொழில் புரிய முடியாது போயினும், சுதேசிக் கப்பல் கம்பெனி செயல்பட இயலாது போயினும் சிதம்பரனார் சிந்தை தளரவில்லை. அவர் தீவிர அரசியலை விட்டு ஒதுங்க நேரிட்டபோதும், தமிழ்ப் பணியை உயிர்ப்பணியாகக் கொண்டார்.
தமிழ்ப்புலவர்களும், அறிஞர்களும் தேசியப் போர்ப்பாசறைக்கு வர வழி காட்டியவர் வ.உ.சி. அவரைத் தொடர்ந்து பின்னாளில் திரு.வி.க. முதலான தமிழறிஞர்கள் போர்ப்பரணி அமைத்தனர்; தாய்மொழிப் பற்றோடு தாய்நாட்டுப் பற்றையும் பேணி வளர்க்கும் பேரணி கண்டனர்.
சிதம்பரனார் மரபு வழியாலும் மாண்பார் முயற்சியாலும் தமிழ் மொழியில் பெரும்புலமை பெற்றார்; சோழவந்தான் அரசஞ்சண்முகனார் போன்ற புலவரைச் சார்ந்து தொல்காப்பியத்தைக் கசடறக் கற்றார்; மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்து, பல நூல்களைக் கற்றுச் ‘சங்கப் புலவர்’ எனும் சிறப்பையும் அடைந்தார். சிறையில் அடைபட்டபோதும் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்து கற்றார் என்பதைச் ‘சுயசரிதை’யில்…
“வள்ளுவர் மறையும் மாண்புயர் நல்லாப்
பிள்ளை பாரதமும் பெரும்பொருள் நிரம்பிய
பகவத் கீதையும் படித்தேம்…”
எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறள் எனும் நமது தேசிய நூல் தோன்றிய காலந்தொட்டே, அதற்குக் காலந்தோறும் அறிஞர் பெருமக்கள் உரைவளம் சேர்த்துள்ளனர். உணர உணரப் புத்துரம் நல்கும் இவ்வாழ்க்கை நூலுக்கு இந்நூற்றாண்டில் உரைமாலை சூட்டிய அறிஞர் வரிசையில் வ.உ.சி. முதலிடம் பெறுகிறார். திருக்குறளுக்கு விருத்தியுரை எழுதி, திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயில் மண்டபத்தில் புலவர் அவையில் அதனை அரங்கேற்றினார். திருக்குறளின் முப்பாலுக்கும் அவர் உரை வரைந்தாலும், 1935-இல் வெளியிடப்பட்ட அறத்துப் பால் உரை மட்டுமே நமக்குக் கிட்டியது.
சிவஞான போதத்தை ஆழ்ந்து படித்து அதற்கும் புதியதொரு உரை எழுதி அரங்கேற்றினார். தம் மதப் புகழ் கூறிப் பிறர் மதம் சாடும் பழைய மரபை விடுத்து, வேற்றுமையே பேசும் விகற்ப நிலை விடுத்து சமய ஒற்றுமையும், பொதுமையும் நாடும் புதுநெறிக்கு வித்திட்டார். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான ‘இன்னிலை’க்கு உரை எழுதியதோடு, தொல்காப்பிய இளம்பூரணர் உரைக்கும் புதுப்பதிப்புச் செய்வித்தார். இத்தமிழ்த் தொண்டுகளால் அவர் செந்தமிழ் வளர்த்த சிதம்பரனாராகத் திகழ்ந்தார்.
சிதம்பரனார் நெடிது காலம் வாழ்ந்து சுதந்திர உதயம் காணாதே மறைந்துவிட்டார். பாரதியார், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்ற புரட்சி வீரர்களைப் போல, அவர் சுதந்திரப் போர்க் கனலிலேயே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அத்தியாகச் செம்மல்களை நன்றியுடன் நினைவோம். சிதம்பரனார் வாழ்ந்த காலம் சிறிதளவே எனினும் வாழ்ந்த காலமெல்லாம் பிறர்க்கெனப் பயன் தந்து வாழ்ந்தார். தன்னை எரித்துக்கொண்டு, முழுவதும் மணக்கும் கற்பூரம் போல, முழுமையும் எரிந்து ஒளி நல்கும் மெழுகுவர்த்தி போல, நினைப்பாலும் செயலாலும் தம் தியாகத்தால் இம்மண்ணின் புகழ் மணக்கச் செய்தார்; நாட்டை ஒளிரச் செய்தார். அன்னிய அரசு அவரைச் சிறையில் போட்டு ஒடுக்க முயன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் மக்களின் மனக் கோயிலில் சான்றோராக மதித்துப் போற்றப்பட்டார். அன்னை நாட்டின் அடிமை விலங்கை ஓடித்தெறியத் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உவந்தளித்த தியாக சீலராகக் வணங்கப் பெற்றார்.
இன்னுயிரை நாட்டுக்கு நல்கி, தியாகத்தால் சுதந்திரம் பெற்றுத் தந்தமைக்காக காந்தி மகான், வ.உ.சி. போன்ற சான்றோரை நாம் மதிப்பது உண்மை என்றால், அச் சான்றோர் நம் வாழ்வுக்குக் காட்டிய நன்னெறியின் வழி தொடர்வதே அப்பெருமக்களுக்கு நாம் செய்யும் அன்றாட வழிபாடாக அமையும். ‘உடலை மண்ணுக்கும் உயிரை நாட்டுக்கும் நல்கிய வ.உ.சி.யைப் போன்ற சான்றோர் இச்சுதந்திர மண்ணில் மறுபடியும் பிறக்க மாட்டார்களா?’ என்னும் ஏக்கம் நம்மிடையே பரவலாகத் தெரிகிறது.
தன்னலம் பேணி இழிதொழில் புரிதலும்,
தாய்த்திரு நாடெனில் தன்னுழைப்பைச் சுருக்கலும்
நம் உரிமை வாழ்வை மங்கச் செய்வது புலப்படுகிறது. ‘நாடு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது?’ எனக் கவலைப்படுவதும், ‘நலமெல்லாம், வளமெல்லாம், தீயோர் திசை நோக்கியே செல்கிறது’ எனக் குமைவதும் எங்கும் ஒலிக்கின்றது. நாம் என்ன செய்யப் போகிறோம்? நெட்டை மரங்கள் போல நின்று புலம்பப் போகிறோமா? கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றப் போகிறோமா? நம்மை நாமே ஆண்டு கொள்ளும் இந்த உரிமைச் சூழலிலே நாம் நடை தடுமாறுகிறோம். நாடு முழுவதும் அடிமைப்பட்டுக் கிடந்த துயரச் சூழலில் மக்கள் எவ்வாறு சுதந்திரப் பயிர் வளர்த்தார்கள் என்று மறுபடியும் சிந்திப்பது நம் தடுமாற்றத்தைச் சீராக்கும்; தலை நிமிர்ந்து நடக்க வைக்கும். சிதம்பரனார் ஆங்கில அரசின் அடக்கு முறைகளுக்கு எல்லாம் அஞ்சாது வாழ்ந்தார். அடிமை நாட்டில், உரிமை உணர்வு பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு இறந்தார்.
“புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்து கோள் தக்கதுடைத்து” (780) எனும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப அவரது இறப்பு இன்றும் நம் கண்களைப் பனிக்க வைக்கிறது; உள்ளத்தை உருக்குகின்றது; நெஞ்சை நெகிழ வைக்கிறது.
நாட்டுக்காகச் சாவது ஒரு தேவை;
நாட்டுக்காக வாழ்வது மற்றும் ஒரு சேவை.
வ.உ.சி.யின் வீர வாழ்வை, தியாக வாழ்வைக் கருதும் நாம் அவரது நாட்டுப் பற்று, மொழிப் பற்று, தன்னலமற்ற தியாகம், அயரா உழைப்பு, காரிய உறுதி ஆகியவற்றையும் கருதிச் செயலாற்ற வேண்டும். நம் மனம் உள்ளேயும் புறத்திலும் நேர்மையின்மை, அச்சம், தன்னலம், பொறாமை, சூது, வஞ்சகம் போன்ற தளைகளால் பிணிக்கப் பட்டுள்ளது. மனத்தைப் பிணித்துள்ள இத்தளைகளை நீக்கினால் தான் நம் நாட்டிற்கு உண்மையான விடுதலை கிடைக்கும். மனம், மனச்சாட்சியைச் சுற்றியுள்ள தளைகளிலிருந்து கட்டுக்களிலிருந்து விடுதலை பெற வேண்டும். அப்போது தான் நாம் உண்மையாகச் சுதந்திரம் அடைந்தவர்கள் ஆவோம். நாமும் வாழ்ந்து நம் நாட்டையும் வாழ்விக்கும் நற்பணியில் ஒன்றுபட வேண்டும். சிறுசிறு பூசல்களையும் பிணக்குகளையும் வளர்த்து பெற்ற சுதந்திரத்தைச் சின்னாபின்னமாக்கும் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும். உடலை மண்ணுக்கும், உயிரை நாட்டுக்கும் நல்கச் செக்கிழுத்த செம்மலுக்கு, செந்தமிழ் வளர்த்த சீலர்க்கு, கப்பலோட்டிய தமிழர்க்கு, நாட்டுக்கு உயிராகிய தியாகச் செம்மல் வ.உ.சிதம்பரனார்க்கு நாம் தந்திடும் அன்புக் காணிக்கையும் அதுவே ஆகும்.
சமீபத்திய கருத்துகள்