நிறைவுப் பகுதி
குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
எளிய அன்பர்
ஆடி அசைந்தபடி – பின்னால் இருப்போரை மறைத்திருப்பவரிடம் – “ஐயா… உங்களைத் தானே? கொஞ்சம் அசையாமல் ஒரே நிலையில் உட்கார முடியாதா? உங்க முதுகுதான் தெரியுது…”
(அவர் சற்று சினத்தோடு திரும்பியபடி)
அவர்
“இப்ப என்னய்யா கெட்டுப்போச்சு? திரைப்படமா ஓடுது? நான் ஆடி அசைந்தால் உனக்கு என்னய்யா? நீயும் அதுக்கேற்றபடி நகர்ந்து கொண்டு, கேட்க வேண்டியது தானே?”
இன்னொருவர்
“புலவர் ஐயாதான் இப்படிப் பேசுறீங்களா? பெரியவங்களுக்குக் கோபம் இப்படி வரலாமா? அவர் ஏதும் தவறாகப் பேசிவிடவில்லையே? தனக்கு மறைக்கிறது என்று தானே சொன்னார்?”
புலவர்
“புலவர்னா – கோபமே படக்கூடாதா? நாங்க என்ன உணர்ச்சியில்லாத மரக்கட்டைகளா? நான் ஆடி அசைகிறேங்கிறாரு… என்னை யானைங்கிறாரா?”
முதலாமவர்
“நான் யானைன்னு சொல்லவில்லை ஐயா! நந்தி போல் மறைக்கிறீர்கள் எனச் சொல்ல நினைத்தேன். அதற்குமுன் இவ்வளவு கோபப்பட்டு விட்டீர்களே! இவ்வளவு சினமும் சீற்றமும்… சாதாரணக் காரியத்திற்கு வரலாமா?”
புலவர்
“நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடக்கும் போது – உன்னைப் போல ஆள் இடையே புகுந்து, விதண்டாவாதம் செய்தால் வெகுளி வராதா – ஐயா நீங்களே சொல்லுங்க.”
ஒருங்கிணைப்பாளர்
“அங்கே என்ன… வெகுளாமையைப் பற்றிய விவாதமா?”
முதலாமவர்
“ஆமாம் செம்மல் ஐயா! கொஞ்சம் அசையாமல் அமர்ந்து இருங்கள் என்றேன் – புலவருக்குக் கோபம் பொத்துக் கொண்டது. இதையே அந்த சப் கலெக்டர் ஐயா சொல்லி யிருந்தால், புலவர் பேசாமல் இருந்திருப்பார்; நான் எளிமையானவன் என்று ஏறி மேயப் பார்க்கிறார்…”
செம்மல்
“செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல்இடத்துக் காக்கின் என், காவாக்கால் என்?” என சினத்தைத்தான் வள்ளுவர் கேட்டார். உயர் காவல்துறை அதிகாரியிடமோ பெரிய பதவி வகிப்போரிடமோ கோபத்தைக் காட்ட முடியுமா? நம் வீட்டில் மனைவி, மக்கள், ஏவலரிடம் காட்ட முடியும். அதைத்தான் ‘சினம் செல்லும் இடம்’ என்கிறார் வள்ளுவர். அத்தகையோரிடம் சினம் கொள்ளாமல் இருப்பதுதான் உண்மையிலேயே வெகுளாமை என்கிறார்.”
அரசு அதிகாரி
“செல்ல இயலாத இடத்தைவிட, செல்லும் இடத்தில் சினம் கொள்ளுவது தீது என்றார் வள்ளுவர்.”
புலவர்
“‘சுருக்குக; செல்லா இடத்தும் சினம்’ – என நான்மணிக்கடிகையும் சொல்லியிருக்கிறதே?”
செம்மல்
“‘வெகுளியை யார்மாட்டும் மறத்தல் வேண்டும்’ என்கிறார் வள்ளுவர். ஏனெனில் – தீய பிறத்தல் அதனால் வருமாம்!”
அரசு அதிகாரி
“அதாவது – நாமெல்லாம் ஜிமீனீஜீமீக்ஷீ-ஐ அதாவது வெகுளியை விட்டுவிட வேண்டும். அது சாத்தியமா? ஜிமீனீஜீமீக்ஷீ உடைய முறுக்குக் கம்பிக்குத்தான் கட்டிடத்தைத் தாங்கும் வலிமை அதிகம். அதுபோல, நமக்கும் அவ்வப் போது ஜிமீனீஜீமீக்ஷீ என்கிற கோபம் வர வேண்டும்.”
இன்னொருவர்
“அது வந்தவுடன் போயும் விட வேண்டும்… (சிரிப்பு) புலவர் ஐயாவின் ஜிமீனீஜீமீக்ஷீ கொஞ்சம் குறைந்து விட்டது!”
கல்லூரி மாணவி
“ஐயா… புலவர் போலக் குணம் ஏறி நின்றார்க்குக் கோபம் வரலாமா? விசுவாமித்திரர் போலப் புராணகால முனிவர்கள் எல்லாம் கோபத்தால் சாபம் இட்டுப் பட்ட துயர்களை எல்லாம் படித்திருக்கிறோம்.”
செம்மல்
“குணம் எனும் குன்றேறி நின்றார் வெகுளி கொள்வது எல்லாக் காலத்தும் தீமை தருவது எனக் கருதக் கூடாது. அவர்களுக்கும் தகாதன நடக்கக் கண்டால் சினம் வரும். ஆனால் அந்த வெகுளி எனும் வெஞ்சினம் ஒரு கணமே நீடிக்கும்; அந்த நேர அளவே நீடிக்கவும் வேண்டும். இல்லாவிடில் அதுவே சேர்ந்தாரையெல்லாம் கொன்று விடும்.”
அரசு அதிகாரி
“திருக்குறள் செம்மலின் விளக்கம் குழப்பமாய் இருக்கிறதே?”
செம்மல்
“குணம் எனும் குன்றேறியோர் இயல்பான சூழலில் நியாயமாகச் சினம் கொள்ளக்கூடாது. ஆயினும், தவிர்க்க முடியாத சூழலில் அவர்களுக்கும் வெகுளி ஏற்படுவது மனித இயல்பு. அத்தகைய சான்றோர் தன்னலம் காரணமாகச் சினம் கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் சினம் கொள்வதும் பொதுநலன் கருதியதாகவே, சமுதாயச் சீர்கேட்டிற்கு எதிரானதாகவே இருக்கும். இராமபிரான் சினந்தார்; இயேசு பிரான் சினந்தார்.”
வருவாய்த் துறை உயர் அதிகாரி
“அண்ணல் காந்தி, பிரதமர் நேரு, வின்ஸ்டன் சர்ச்சில், ராஜாஜி, தந்தை பெரியார், மகாகவி பாரதி போன்றோர் வெளிப்படுத்திய வெகுளிக்கெல்லாம் சமுதாய நலனே காரணம்.”
வளனரசு
“அருமையான பட்டியலைத் தந்தார்கள்… ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது…’ என்ற நாட்டு வழக்கும் நம் நினைவுக்கு வருகிறதே…”
ஓரன்பர்
“சாதுக்கள் மிரளுவதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம்.”
செம்மல்
“வள்ளுவர் சாதுக்கள் எனச் சொல்ல வில்லை. அவர் குணம் எனும் குன்றேறி நிற்கவல்ல சான்றோரையே குறிப்பிடுகிறார். அத்தகைய ஏந்திய கொள்கையார் சீற்றம் கொண்டால், ‘இடைமுறிந்து வேந்தனும் வெந்து கெடும்’ என்றல்லவா எச்சரிக்கிறார். எனவே, வீட்டில் பெரியவர்கள், சமுதாயத்தில் சான்றோர் ஆகியோர் சினம் கொண்டால், அது ஒரு சறுக்கலையோ, வழுக்கலையோ சீராக்கிடவே எனக் கருத வேண்டும்.
நம் பாஞ்சாலி சபதத்திலேயே ஒரு காட்சி. பாஞ்சாலியைத் தாயமுருட்டிச் சூதில் தோற்றுப் பாண்டவர்கள் பரிதாபமாக நின்ற கோலத்தை ‘நெட்டை மரங்கள் போல’ நின்றார்கள் எனப் பாரதியார் ஆத்திரப்படுவதை நினைவூட்டுகிறார். அப்போது பாஞ்சாலி கொண்ட சினத்தால்தான் – அவர் போட்ட சபதத்தால்தான் பாரதப் போரே மூண்டது.”
அரசு அதிகாரி
“எங்கள் வீட்டில் எனக்கும் மனைவிக்கும் இடையே தினமும் பாரதப் போர்தான் போங்கள்!” (சிரிப்பு)
இன்னொருவர்
“அது நாங்கள் பார்க்க முடியாத போராக அல்லவா இருக்கும். அதை விடுங்கள்…”
மாணவி
“வள்ளுவர் ஓரிடத்தில் சினமே கொள்ளாதே எனச் சொல்லிவிட்டு – ஏந்திய கொள்கை யராயிருந்தால் அவர்கள் கோபப் படலாம் என்பது ஒரு முரணாகத் தோன்றவில்லையா?”
செம்மல்
“இதில் முரண் ஏதும் இல்லை.
‘சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழை யாதற்று..’ (307)
வீணாகச் சினமே கொண்டால் – தரையிலே தானே அடித்துக் கொண்டு, கை வலிக்கிறதே என்ற கதை போன்றது, அது வீண் சினம்; வெற்றுப் புலம்பல்.
வள்ளுவர் கூறுவது – அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரையும் பொறுக்க வல்ல- சான்றோரும் கூடச்சில சமயங்களில் கோபம் கொண்டே ஆக வேண்டும். அப்போது தான், சமுதாயத்திலும், குடும்பத்திலும் மக்கள் திருந்துவார்கள். அத்தகைய சினம் – ஆக்கச் சினம்.”
ஒருவர்
“எங்கள் வீட்டில் என் துணைவியார்தான் அடிக்கடி கோபப்படுகிறார்.”
இன்னொருவர்
“மனைவியை இங்கு வந்தும் விடமாட்டார் போலிருக்கிறதே! (சிரிப்பு)
அதற்குக் காரணம் – நீராகவும் இருக்கக்கூடும். நீவிர் சரிதான் என்றால் – வீட்டு அம்மாவை – ஒரு மனோதத்துவ டாக்டரிடம் கூட்டிச் செல்லும். உங்கள் உறவில் புதிய தத்துவம் பிறக்கும்.” (சிரிப்பு)
வருவாய்த் துறை அதிகாரி
“தம்பதியரிடையே உருவாகும் சினம். ஒரே நாளில் சமரசம் ஆகிவிட வேண்டும். இல்லை என்றால்… விரசம்தான்…”
செம்மல்
“நாம் அந்த விரசத்திற்கெல்லாம் போக வேண்டாம்… நம் மதுரையிலே அன்று நடந்ததை நினைப்போம். சிலப்பதிகாரக் காட்சி இது. மறுவாழ்வு தேடி மதுரைக்கு வந்த கண்ணகி, கணவன் கொலையுண்டு இறந்திடக் கையறு நிலையள் ஆனாள்… அப்போது…
புலவர்
“‘சான்றோரும் உண்டு கொல், சான்றோரும் உண்டு கொல்’ எனக் கேட்டாள்.”
செம்மல்
“அதைத்தான் நானும் குறள் செய்தியாகக் குறிப்பிட விரும்புகிறேன். தக்க சான்றோர்கள் தலையிட்டிருந்தால் தனக்கு இந்த அவலம் நேரிட்டிருக்க மாட்டாதே எனக் கதறுகிறாள். கண்ணகி அன்று கேட்டதைப் போல, இன்றும் கேட்கக்கூடிய நிலையில், வாழ்க்கைப் பாதையில் ஓரம் கட்டப்பட்டவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களது துயர் தீர்க்க – சினம் கொள்ளக்கூடிய அளவு- செல்லக் கூடிய – பொதுநல நாட்டமுடைய – சான்றோர்கள் நம்மிடையே வேண்டும்.”
பேராசிரியர்
“சமுதாயத் தொண்டர்களுக்கு – போர்க்குணம் வேண்டும். பிரெஞ்சுப் புரட்சியை அன்று தூண்டிடச் சினங்கொண்ட வால்டேர், ரூசோ போன்றவர்கள் – இக்காலத்தில் வேண்டும் என்கிறார் செம்மல்… ஆனால் அவர் மட்டும் சினம் கொண்டதை நாம் யாரும் கண்டதில்லை…” (சிரிப்பு)
செம்மல்
“சினம் என்பதிலும் இருகூறு உண்டு. சான்றோராயினும் ஆட்சித் தலைவராயினும் – சமூக எதிரிகளைச் சினத்தோடுதான் அணுக வேண்டும்; அகற்றவும் வேண்டும்.
‘ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தால் வரும்’ என்பார் வள்ளுவர். சமுதாயத்திற்குக் கேடு செய்வோரை அழித்தலும், சமுதாய நலனால் மகிழ்வோரை உருவாக்குதலும் எண்ணினால், தவத்தால் வரும் என்கிறார்.”
ஒருவர்
“ஐயா! புராண காலத்திலே – தவம் செய்த முனிவர்கள் கோபம் கொண்டதிலே ஒரு நியாயம் -நிவாரணம் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம், தவசிகளே தடுமாறு கிறார்களே… போலித் தவசிகள் புகுந்து விட்டார்களே…”
செம்மல்
“அதனால் தான் வள்ளுவர்,
‘தவமும் தவம்உடையார்க்கு ஆகும்; அவம்அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது’ (262)
எனச் சட்டம் போட்டுத் தடுத்துவிட்டார். சமுதாய ஒழுக்க நெறியைப் பழிப்பது போல, தம் வாழ்வில் சீர்கேடாக நடந்து கொள்வது தவம் இல்லை; அது ‘அவம்’ – சமுதாயக் கேடான பாவம் என்கிறார்.”
புலவர்
“தவம் செய்வார் தம் கருமம் செய்வார்..”
பேராசிரியர்
“உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை..”
செம்மல்
“தவத்தின் ஆற்றலாலும், ஒழுக்கத்தாலும் ஓங்கி நிற்கும் சான்றோர் தரும் வரமே… வாழ்வு… அத்தகையோரை வாழ்த்தி வணங்குவதே வாழ்க்கைப் பேறு.”
ஒருவர்
“இதுதாங்க.. இன்றைக்கு அவசியமான அறிவுரை; அறிவுடைமை!”
செம்மல்
“‘அறிவுடைமை’ என்ற அருமையான சொல்லை அன்பர் இப்போது குறிப்பிட்டுள்ளார். நம் நான்காம் அமர்வு நிலா முற்றம் நிறைவு பெற்று, உதய வேளை காணும் சமயத்தே இந்த அறிவொளிக் கேள்வி எழுந்துள்ளது.”
அரசியல் அன்பர்
“எங்கள் பொதுவுடைமை போன்ற சித்தாந்தங் களுக்கெல்லாம் அடித்தளமானது அறிவுடைமைத் தத்துவங்கள். வள்ளுவர் அறிவைத் தனிமனித சாதனையாகவும் சொல்கிறார்; சமுதாய வளர்ச்சியில் பாதையாகவும் விளக்குகிறார். எனவே இந்த அறிவுடைமைச் சிந்தனை யோடு குறள் நிலா முற்றம் விடியலைக் காணட்டுமே என்பது இங்குள்ள அன்பர்கள் கருத்து.”
பேராசிரியர்
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”- என்பதற்கே ஒரு தனி ஆய்வரங்கம் நடத்தலாமே!
உதவி ஆணையர்
“அந்த மெய்ப்பொருளையும் நம் திருக்குறள் செம்மல் வழியாக, இப்போதைக்குக் கேட்போமே…!”
செம்மல்
“கல்வி, கேள்வி, அறிவுடைமை பற்றியெல்லாம் வள்ளுவர் அன்றே வரையறுத்த செய்திகள், இன்றுள்ள உலகப் பல்கலைக்கழகக் கல்வித் துறையாளர்களாலும் வியந்து பாராட்டத் தக்கவை.”
இடைமறிக்கும் அன்பர்
“‘கற்க கசடறக் கற்பவை…’ எனத் தொடங்கும் குறள் ஒன்று போதுமே…”
செம்மல்
“பல குறள்கள் உள்ளன. நான் கோடிட்டுக் காட்ட விரும்பும் நிலைகள் இரண்டே இரண்டு:
ஒன்று: குழந்தைப் பருவம் தொட்டுக் கற்க மேற்கொள்ளும் முயற்சி. இம்முயற்சி பலவகைப் படும்; வெவ்வேறு நிலைப்படும். பிள்ளைகள் கற்கக்கற்க – புதிய வற்றை அறிய, அறிய, அறிதொறும் அறியாமை புலப்படும்.”
புலவர்
“‘கல்வி கரையில, கற்பவர் நாள்சில, மெல்ல நினைக்கின் பிணிபல’ – என்ற பாடமே உள்ளது.”
ஒருவர்
“செம்மல் ஐயாவைப் பேசவிடுங்கள்.”
செம்மல்
“குழந்தைப் பருவந்தொட்டு – புதிய, புதிய படிநிலை களில் பயிலும் பிள்ளைகள் – அத்தகைய புதியனவற்றை அறியும் போதெல்லாம் உவகை அடைகிறார்கள்; மேலும் அறிய ஆர்வம் கொள்ளுகிறார்கள். அந்தக் கல்வியின்- ஒரு சொல் விளக்கம் – வளர்ச்சி, அறிவு ஒழுக்கம், சிந்தனை ஆகியவை ஒருங்கிணைந்ததொரு வளர்ச்சி. ஆனால், ஓரளவு படித்து, உலகியல் அறிந்தவர்களில் பலர்- கற்றவற்றின் எல்லையை அறியாமல், வீண் அகந்தையுடன் செருக்கித் திரிவார்கள். தாமின்புறுவது உலகும் இன்புறக்கண்டு காமுற மாட்டார்கள்; காழ்ப்புணர்வே கொள்வார்கள்.”
செம்மல்
“குழந்தைப் பருவந்தொட்டு – புதிய, புதிய படிநிலை களில் பயிலும் பிள்ளைகள் – அத்தகைய புதியனவற்றை அறியும் போதெல்லாம் உவகை அடைகிறார்கள்; மேலும் அறிய ஆர்வம் கொள்ளுகிறார்கள். அந்தக் கல்வியின்- ஒரு சொல் விளக்கம் – வளர்ச்சி, அறிவு ஒழுக்கம், சிந்தனை ஆகியவை ஒருங்கிணைந்ததொரு வளர்ச்சி. ஆனால், ஓரளவு படித்து, உலகியல் அறிந்தவர்களில் பலர்- கற்றவற்றின் எல்லையை அறியாமல், வீண் அகந்தையுடன் செருக்கித் திரிவார்கள். தாமின்புறுவது உலகும் இன்புறக்கண்டு காமுற மாட்டார்கள்; காழ்ப்புணர்வே கொள்வார்கள்.”
புலவர்
“அது புலமைக் காய்ச்சல், பொறாமைத் தீ…”
அரசு அதிகாரி
“அது புலவர்களுக்கு மட்டும் தானா?”
இன்னொருவர்
“அடக்கமில்லாத, அகந்தையுடைய எல்லோருக்கும் அந்தக் காய்ச்சல் வந்துவிடும்.”
மற்றொருவர்
“ஐயா! கற்றிலன் ஆயினும் மணிமொழியன் சொல்வதைக் கேட்டிடுக…”
செம்மல்
“‘சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு’ என முத்தாய்ப்பு இட்டுவிட்டார். தனக்கும் சமுதாயத்திற்கும் நன்மை தராத அறிவு – விழலுக்கு இறைத்த நீர். அது எல்லோரும் அஞ்சவேண்டிய பேதைமை. கல்லாதவர் அறிவுக்கும் கற்றவருடைய அறிவுக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு.
சிற்றறிவு வெண்மை எனப்படும் முதிராத புல்லறிவு. அது தன்னைத்தான் மதிக்கும் போலிப் பெருமிதம். கல்லாததைக் கற்றது போலக் காட்டிக் கொள்ளுவதும் ஒருவகைச் சிற்றறிவுதான். அத்தகைய ஏவலும் செய்ய இயலாது, தாமும் செய்யாத புல்லறிவாளர்கள் சமுதாயத்திற்கே நோய் போன்றவர்கள்.”
புலவர்
“வள்ளுவரின் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களில் புகுந்துவிட்டால் பொழுது புலர்ந்துவிடும்.”
செம்மல்
“அதனால்தான் பொழுது புலரும் முன்னரே – இன்பத்துப்பாலில் (அவையில் சிரிப்பு) இருந்து ஓரிடத்தைச் சொல்லி நிறைவு செய்ய முற்படுகிறேன்.”
ஒருவர்
“இன்பத்துப்பால் என்றால்… எளிதில் நிறைவு கண்டுவிட முடியுமா?” (மீண்டும் சிரிப்பலை)
செம்மல்
“நான், அன்பர் நினைக்கும் அந்த உணர்ச்சி இன்பத்தை, கிளர்ச்சி இன்பத்தைச் சொல்ல வரவில்லை. எதற்கு இணையாக வள்ளுவர் அறிவெனும் இன்பச் சோலையை உவமிக்கிறார் என்பதையே நினைவூட்டுகிறேன்.
‘அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு’ (1110)
அறிவு வளர, வளர – பழைய அறியாமை காணப்படு வதைப் போல, என் காதலி அல்லது மனைவியுடன் மகிழ, மகிழக் காதல் இன்பம் காணப்படுகிறது என்று என்றும் இனிக்கும் அந்தக் காதல் உறவோடு, அறிவின் தாக்கத்தையும் வள்ளுவர் அழகாக உவமிக்கிறார். (கைதட்டல்)
குறள் அன்பர்களே… ‘அறிதொறும் அறியாமை…’ என்பதற்குத் தெளிவான விளக்கம் கண்டோம்…”
ஒருவர்
“இப்போதெல்லாம் மூளைச்சலவை (ஙிக்ஷீணீவீஸீ ஷ்ணீsலீ) எனும் அறிவுச்சலவை தான் நடக்கிறது. ‘அறிவுச்செம்மை’ பற்றி யாரும் பேசுவதில்லை, கேட்பதில்லை.”
செம்மல்
“அதற்காகத்தான் இந்தக் குறள் முற்றத்தில் கூடியுள்ளோம். இங்கே, நாம் பெற்றது கலந்துரைப் பயனால் கிட்டிய ‘கேள்விச் செல்வம்’, ‘அல்லவை தேய, அறம் பெருகும், நல்லவை நாடி இனிய சொலின்’ என்றதைப்போல நாமெல்லாம் நல்லன வற்றையே, நமக்குள் பகிர்ந்து கொண்டோம். இந்த நயம் தரும் ஆக்க உணர்வே நாட்டில் செயலாக வேண்டும். வேலிக்கருவை போலத் தீய சக்திகள் தாமாகப் படரும் இடமெல்லாம், வேப்ப மரம் போன்ற நல்ல உணர்வுகளைப் பராமரித்துப் பாதுகாப்போம். இத்தகைய உணர்வுப் பரிமாற்றமே மனிதநேயம். இன்றைய சமுதாயப் போக்கில் இது போன்ற நல்லிணக்கமே தழைக்க வேண்டும்.”
புலவர்
“செவிக்கு உணவோடு, வயிற்றுக்கும் நல்லுணவு தந்த நம் பேரவை வாழ்க; நிலா முற்றம் – வளர்பிறையாக வளர்ந்து – மாதம் தோறும் முழு நிலாப் பேரொளி ஆகுக.”
(கைதட்டல்)
செம்மல்
“திருக்குறள் சுற்றத்தார்களே… நம் அழிவிலாச் செல்வமாகிய திருக்குறளை – நிலா முற்ற அரங்காக – நான்கு முறை கூடி – மனம் கலந்து உரையாடினோம்; மிகுந்த பயனுற்றோம். இத்தகைய பயனும் நலமும் தரும்- குறள் நிலா முற்றம் எனும் புதிய இலக்கிய விளக்க உத்தியை வகுத்திட்ட மதுரை வானொலிக்கு – உங்கள் சார்பாகவும் உலகத் திருக்குறள் பேரவை சார்பாகவும் உளமார்ந்த நன்றியைப் புலப்படுத்துகிறேன்.
இக்குறள் நிலா முற்றத்தை நடத்தும் பொறுப்பை எனக்குத் தந்தார்கள். என்னிலும் குறளை ஆழ்ந்து கற்ற அறிஞர்களிடையே நான் இந்தப் பொறுப்பை ஒரு அக்கினிப் பிரவேசம் போல ஏற்றுக் கொண்டேன்.
புலவர்
“‘அக்கினிப் பிரவேசம் இல்லை – அர்ச்சனைப் பிரசாதம் போல குறளை அள்ளி அள்ளித் தெளித்தீர்கள்.
குறிதவறாமல் செலுத்தவல்ல கருவிகளைக் கண்டுவிட்டோம். நெறிபிறழாமல் நடக்கவல்ல மனிதநேயம் சமூகத்தை உருவாக்கத் திருக்குறளையே சாதனமாக்கிக் கொள்ளுவோம்.
‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ (430) எனும் குறள் நெறியை ஏற்க – மீண்டும் மீண்டும் குறளுக்குப் புதுவிளக்கம் காணவும், அதன் வழியிலே புதியதோர் உலகு சமைக்கவும் புறப்படுவோம். எல்லோர்க்கும் குறள் நெறி வணக்கம்.”
சமீபத்திய கருத்துகள்