‘பாண்டிய’னில் வழி அனுப்புகை
தமிழ்நாடு அறக்கட்டளையினர் தாய்த்தமிழகத்துடன் உறவுபூணும் வகையில் ஆண்டுதோறும் அங்கு விழா எடுக்கின்றனர். இங்குள்ள நண்பர்களை வரவழைத்து தாம் மகிழ்ந்து, மகிழ்விக்கின்றனர். அறக்கட்டளையின் 14-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, ‘வான்புகழ் வள்ளுவம்’ பற்றி உரையாற்றுமாறு நான் அழைக்கப் பட்டிருந்தேன்.
தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், புதுப்பொறுப்பேற்ற சமயத்தில் இந்த அழைப்பும் வந்தது. எனவே எப்படி இதை மறுக்க முடியும்? மேலும் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ எனும் ஓர் அமைப்பினை மதுரையில் நிறுவி அதனைப் பதிவு செய்யும் விரிவாக்கப் பணிகளுக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் இந்த அழைப்பு வந்துள்ளது. எப்படி இதனைத் தவிர்க்க இயலும்?
மறுக்கவோ, தவிர்க்கவோ முடியாத வண்ணம் அமெரிக்க நண்பர்களின் கடிதங்கள் அணிவகுத்து வந்தன. சிகாகோவிலிருந்து போற்றுதற்கு உரிய நண்பர்கள் திரு.பி.சி.எம்.ஜி. நாராயணன், திரு.வெங்கடராமானுஜம், தொழிலதிபர் பழனிபெரியசாமி, தலைவர் பி.மோகனன், செயலாளர் தி.ராஜேந்திரன் ஆகியோர் எழுதிய மடல்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தின. அமெரிக்கப் பயணத்தோடு, கனடா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் ஆகியவற்றுக்கும் பயணம் செய்வதற்காக விரிவாகத் திட்டமிடும் பொறுப்பினை என் மனைவி கமலா ஏற்றுக்கொண்டாள்.
என் துணைவி கமலாவிற்கு நிறையப் பயண அனுபவங்கள் உண்டு. ரோட்டரி மாதர் கழகத் தலைமை ஏற்பு, மேனிலைப்பள்ளி நிர்வாகப் பொறுப்பு, சேவை அமைப்புகளின் தொடர்பு ஆகியவற்றில் பெற்ற பயிற்சிகள் எல்லாம், கமலா கை தொடும் எதனையும் கலையாக்கித் தந்துவிடும்.
விசா வந்துவிட்டது, டிக்கட்டுகள் ஏற்படாகிவிட்டன. 25.5.89-ஆம் நாள் மதுரையிலிருந்து பாண்டியன் ரயிலில் புறப்பட வேண்டும். அன்று அதிகாலையில் குன்றக்குடி பிரசாதம் வீட்டு வாயிலுக்கு மங்கலம் சேர்க்க வந்து பொலிந்தது. திருக்குறள் பேரவைத் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் பயணத்தை ஆசீர்வதித்து அருட்பிரசாதத்தை அன்பர் மூலம் அனுப்பியிருந்தார்.
வடலூர் வள்ளலாருக்குப் பின்னர் தமிழகம் கண்ட பேரருள் பெருந்தகை ஆகிய குன்றக்குடி அடிகளார் மனித நேயச் சிந்தனையால் ஏற்படுத்திய அமைப்புகள் இரண்டுள. ஒன்று திருவருள் பேரவை; மற்றொன்று திருக்குறள் பேரவை.
அரசியல், பொருளாதாரச் சமுதாயப் பிரச்சினைகளுக்கு திருக்குறள் நெறியில் தீர்வுகாண முயன்றுவரும் இயக்கம் திருக்குறள் பேரவை. உயர்ந்த சிந்தனைகளும் சீரிய கோட்பாடுகளும் செறிந்து கிடக்கும் இந்த நாட்டில் அவை முறையே செயலுக்கு வராமல் போனதால், வறுமையும் அறியாமையும் இங்கு குடியேறிக் கொண்டன. இந்த அவலத்தை அகற்றிப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சமத்துவ சமுதாய வழி பேணிட அமைந்ததே திருக்குறள் பேரவை.
உலகெல்லாம் உவந்தேற்றும் தமிழ் மாமுனிவரின் வாழ்த்து எங்கள் தமிழ்ப் பயணத்தின் ஆதார சுருதியாக அந்த வினாடியே இசை மீட்டியது. மதுரை ஆலயங்களில் இருந்து பிரசாதங்களை அன்புச் சகோதரர்கள் கொணர்ந்தனர்; மதுரை திருவள்ளுவர் கழகப் பெரியவர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.
அன்று மாலை – டவுன்ஹால் ரோடு வள்ளுவர் அரங்கில் – வழியனுப்பு விழா ஒன்றினை அன்புப் பெரியவர்கள் பாரதி ஆ.ரத்தினம், அய்யணன் அம்பலம், பேராசிரியர் குழந்தைநாதன், பெரும்புலவர் செல்வக் கணபதி, திரு.நாகராஜன் ஆகியோர் விரைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது உரையாற்றிய பெருமக்கள் விவேகானந்த சுவாமியின் ஆன்மிகப் பயணம் வழிகாட்டிட எனது திருக்குறள் பயணம் பயனுற அமைய வேண்டும் என வாழ்த்தினர்.
அன்று மாலை மதுரை ரயில் நிலையத்தில் வழி அனுப்ப வந்த அன்பர்கள் எங்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர். மலைபோல் மாலைகள் குவிந்தன. பிளாட்பாரத்தை விழா மேடையாக்கிக் கவிமாலைகள் சாற்றத் தொடங்கிவிட்டனர். இவை எல்லாம் திருக்குறளுக்குச் செய்யும் பெருமை எனவே கருதிப் பணிவுணர்வுடன் ஏற்றுக்கொண்டேன். வண்டி புறப்படுகையில் பெட்டியின் வாயிலில் நின்றபடி கண்ணீர் மல்கக் கையசைத்து விடைபெற்ற என் காதில் விழுந்த அன்பர், நண்பர் திரு.ஆ.ரத்தினம் அவர்கள் வாழ்த்துரை… “பாண்டியனில் வழியனுப்புகிறோம். அன்று பாண்டிய நாட்டு சேதுபதி மன்னரால் வழி அனுப்பப்பட்ட விவேகானந்தரைப் போல- திருக்குறள் தூதுவராகச் சென்று வருக! வென்று வருக!” என அவர் எழுப்பிய வீர முழக்கம் பிளாட்பார எல்லை முடியும் வரை எதிரொலித்தது. வண்டியில் அமர்ந்ததும் வழியனுப்பு விழாவில் ஆற்றிய உரைகள் என் நினைவில் படர்ந்தன.
“1893-இல் அமெரிக்கா நாட்டு சிக்காகோவில் கூடிய உலக சமயப் பேரவைக்கு இந்தியத் தூதுவராக இளம் துறவி சுவாமி விவேகானந்தர் சென்றிடக் கணிசமாக நிதியுதவி செய்தவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி… பாண்டி நாட்டுச் சேதுபதி மன்னர் அவரை அன்று அனுப்பினார்; இன்று இந்தப் பாண்டியன் வண்டியில் உங்களைப் பயணமாக்கி வழியனுப்பி உள்ளார்கள்; நீங்களும் சிகாகோ போகிறீர்கள். அதுதான் இதில் உள்ள பாண்டியப் பொருத்தம்” என்றார் அருகில் இருந்த நண்பர். இந்த 1893- நம் வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. காந்தியடிகள் தென்னாப்பிரிக்கப் பணிக்குப் புறப்பட்ட ஆண்டு, விவேகானந்தர் சுவாமிகள் ஆன்மிகப் பயணமாக வழியனுப்பப்பட்ட ஆண்டு, சிறந்த ஆன்மிகச் செல்வர் அரவிந்தர் தாயகம் வந்து சேர்ந்த ஆண்டு எல்லாம் இந்த 1893 தான்.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தொண்டு புரிந்த ஆண்டுகளில் அமெரிக்க நாட்டுச் சமகாலச் சிந்தனை யாளரான ஹென்றி டேவிட் தோரோவின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார். காந்தி அடிகள் ஒருமுறையாவது அமெரிக்காவிற்கு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அடியெடுத்து வைக்கும் பாக்கியம் அமெரிக்க மண்ணுக்குக் கடைசிவரை கிடைக்காமலே போய்விட்டது. என்றாலும் அதற்கு முன்னரே விவேகானந்தர் அங்கு நிகழ்த்திய வீர முழக்கம் இன்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
இதனை நினைவூட்டி சிக்காகோ நண்பர்கள் எழுதிய கடிதங்கள் பசுமை நினைவுகளாக என்னை ஆட்கொண்டிருந்தன.
அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பாரதத்தில் கனன்று வந்த புரட்சித் தீக்கங்குகள் வங்காளத்தில்தான் அடிக்கடி சுவாலையாக எரிந்து உயர்ந்தன. அரசியல், ஆன்மிகம், கலை ஆகிய முத்துறையிலும் அங்கே மறுமலர்ச்சி ஓடைகள் சங்கமித்து வந்தன. அந்தச் சங்கமச் சூழலில் அவதரித்தார் நரேந்திரன் (1863). காலனி ஆதிக்கத்தோடு கைகோத்து வந்த மேலை கலாச்சாரக் காட்டாறு வங்கத்தில் ஓடிச் சுரந்த தொன்மைப் பண்புகளை அடியோடு அடித்துச் செல்ல முற்படுவதைக் கண்டு இளமையிலேயே அவர் பொங்கி எழுந்தார். கல்கத்தா கல்லூரியில் சட்டம் பயிலச் சேர்ந்து கலைக் களஞ்சிய ஞானம் பெற்றுவந்த இளைஞரை – புனிதர் பரமஹம்சரின் புன்னகை எப்படியோ ஆட்கொண்டு விட்டது. 1881-இல் பரமஹம்சரின் பாதம் பணிந்து பரம சீடராக ஆகிவிட்ட நரேந்திரன் தவயோகியாகவும், வேதவிற்பன்னராகவும் மாறியது பாரதம் கண்ட ஆன்மிக இரசவாதம். விவேகானந்தர் என இளமையிலேயே ஏற்கப்பட்ட இந்த ஞானசீலர், பரமஹம்சரின் சமாதிக்குப் பின் இராம கிருஷ்ண இயக்கத்தை நிலைநிறுத்தி பாரதம் முழுவதும் பாத யாத்திரை செய்தார். உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து மானிட ஒற்றுமையையும் சகிப்புத்தன்மை யையும், இந்தத் திருநாட்டின் செய்தியாகத் தூதுரைக்க முற்பட்டார். இச்சமயத்தில்தான் – அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் கூட இருந்த உலக சமயப் பேரவையில் () உரையாற்றிட அழைக்கப்பட்டார்.
1893-முப்பதே வயதான சுவாமி விவேகானந்தர் பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். மைலாப்பூர் கடற்கரை அருகே தங்கி, அற்புதமான ஆங்கிலப் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். முற்போக்கு இளைஞர்கள் அவரை மொய்த்துச் சூழ்ந்தனர். முதன்முதலாக தமக்கென ஒரு சீடர்குழுவை உருவாக்கும் பெருமையைச் சென்னைக்குப் பெற்றுத்தந்தார்.
சிக்காகோ சமயப் பேரவைக்குத் தம்மை அழைத்துள்ளார்கள் என சுவாமி விவேகானந்தர் இச்சீடர் குழுவிடம் தெரிவித்துள்ளார். அடுத்த வினாடியே அதற்கான நிதியைத் திரட்டிவிட இளைஞர்கள் புறப்பட்டுவிட்டனர். ஏழை-எளியவர்கள் நல்கிய காணிக்கைகள் எல்லாம் சேர்ந்து மொத்தம் ரூபாய் மூவாயிரம் வரை திரண்டன. இராமநாத புரம் சேதுபதி மன்னர் ரூ.500 நல்கினார். பாண்டிய நாட்டுப் பயண முடிவில் குமரிக் கடலில் தீர்த்தமாடிவிட்டு விவேகானந்தர் சிக்காகோ பயணத்தை மேற்கொண்டார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தொடங்கிய அறப்போரின் முதல் தொண்டர்களாக விளங்கிய பெருமை தில்லையாடி வள்ளியம்மை போன்ற தமிழர்களுக்கே கிட்டியது. விவேகானந்தர் ஞான விளக்கேந்திப் புறப்பட்ட பயணத்திற்கு முத்தாய்ப்பு வைக்கும் பெருமையும் தமிழகத்துக்கே கிட்டியது.
இந்தப் பெருமை தமிழ் மண்ணோடு கலந்துவரும் பாரம்பரியம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பூங்குன்றச் சங்கநாதம், உலகுக்கென ஒரு நூலை – திருக்குறளை – அளித்த அழியாத மரபுவழிக் கொடைத் திறம், பாரதி ஆ.ரத்தினம், பேராசிரியர் குழந்தைநாதன் ஆகியோர் கூறிய இக்கருத்துக்கள் மீண்டும் மீண்டும் என்னை வலம் வந்தன.
விவேகானந்தர் இந்தியத் திருநாட்டின் வேதாந்த வித்தகத்தை மேலைச் சீமைக்கு ஏந்திச் சென்றார். ‘சகோதர, சகோதரிகளே’ எனும் முதல் தொடக்கத்தினாலேயே அவையோரைக் கவர்ந்தார். மிக மிக எளியவனான எனக்கு இப்போது விவேகானந்தரைத் தடம் பற்றிச் செல்லும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. “உலகம் ஒரு குலம்” என ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதுவும் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டாமலேயே இத்தரணியின் உறவு எல்லையை வரையறுத்துக் கண்ட வள்ளுவச் செல்வத்தை அக்கரைச் சீமையில் மறுபடி நினைவூட்டிச் சொல்ல நான் புறப்பட்டிருக்கிறேன்.
விவேகானந்தர் எங்கே! நான் எங்கே!
எனினும் எனக்குள்ளே இனம்புரியாத அச்சம் கலந்த ஓர் உற்சாகம்! அந்த உற்சாகத்தைத் தந்தது யார்?
வள்ளுவர் தான்.
‘அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்” (611)
எனும் ‘ஆள்வினை உடைமை’ முதல் குறள் என்னைப் பாண்டியனில் ஏற்றிவிட்டது. பயணம் தொடர்ந்தது.
சமீபத்திய கருத்துகள்