தீரா இடும்பை தரும் & எது?

மனித வாழ்வு அமைதியும் இன்பமுமாக அமைய வேண்டுமானால் வாழ்வு அற வாழ்வாக மலர வேண்டும். அறத்தால் வருவதுதான் இன்பம். மற்றவை யாவும் இன்பம் என ஒருவகை மயக்கம் தருவதன்றிப் புகழ் தருவதில்லை; இனிமை தருவதில்லை.

மனம் மாசற்று இருப்பதுதான் அறம். உள்ளம் தூய்மையுடையதாய் உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது தான் அறம். வெறும் புகழ் மயக்கத்தால், பயன்கருதிச் செய்யப் பெறும் செயல்கள் தொடக்கத்தில் தவிர்க்க இயலாதவை யாகவே இருக்கும். ஆனால் மனம் பக்குவப்படத் தொடங்கியதும் நல்ல பயிற்சியால் இச்சிறு மாசுகள் நீங்கும். பொதுவாக, பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் என்பன அறியாமையால், மயக்கத்தால் உருவாகும் குணங்கள்! இக்குற்றங்கள் நீங்கப் பெற்றால் மனம் மாசு நீங்கி ஒளிபெறும்; வாழ்வும் ஒளிபெறும்.

‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்.’ செய்யும் செயலிலெல்லாம் இருளும் மயக்கமும் நீங்கி அறஒளி நிறையும்.

வாழ்க்கை நிலையாமை உடையது. நில்லாத இவ்வாழ்க்கையை என்றும் நிலையானது என மயங்கி யிருத்தல் புல்லறிவு ஆகும்.

 

‘நேற்றிருந்தார் இன்றில்லை. இன்றிருப்பவர் நாளை இல்லை’ என்ற வியப்பான உலகில், காலம் தாழ்த்தாது, வாழும் ஒவ்வொரு நாளும் அறம் செய்ய வேண்டும்.

‘நாள் என ஒன்றுபோல் காட்டி உயிரறுக்கும் வாள்’ என்பதை நன்கு உணர்ந்து நாளும் அறம் செய்ய வேண்டும். நம் வாழ்விற்கு எப்போது இறுதி நேரிடும் என்று தெரியாத நிலையில் உறுதியான, நன்மையான காரியங்களை அறுதியிட்டு நாடிச் செய்ய வேண்டும்.

குறுகிய வாழ்நாளை நீண்ட பயன் மிகுந்த வாழ்நாளாக்க வேண்டுமானால், நாள் என்பது ஒரு கூர்மையான வாளாக மாறி வாழ்நாளை அறுக்காமல் இருக்க வேண்டுமானால், தடையில்லாமல் வீழ்நாள் இல்லாமல் அமைய வேண்டுமானால், விரைந்து நாள்தோறும் நாடி நல்லறச் செயல்கள் செய்ய வேண்டும். அப்போது துன்பத்தை, துயரத்தை வரவிடாமல் வழியடைக்கும் கல்லாக அறம் விளங்கும்.

சிறப்பாக நாம் ஆளும் அரசைத் தேர்ந்தெடுக்கும் போது அவ்வரசு நாட்டின் நலம் கருதிச் செயல்படும்; அறவழியில் நிற்கும்; மக்களின் அச்சம் நீங்கிப் பாதுகாப்புத் தரும்; பொருளாதாரத்தை மேம்படுத்தும். எனவே இன்பம் நல்கும் ஏற்றமிகு அரசையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அறத்தை அறிந்து, மனச்சான்றுள்ள, தியாகம் நிறைந்த, தூய வீரம் நிறைந்த, ஊக்கமும் துணிவும் மிகுந்த விரைந்து செயலாற்றும் நேர்மையாளர்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், நன்கு ஆராயாமல் – குறுகிய நோக்கோடு, தன்னலத்தோடு முடிவு செய்தால் தீமை விளைந்துவிடும். ஆட்சியில் தீயவர் களையும் தீயவைகளையும் ஏற்றுக்கொள்ளும் துன்பம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து துயரமே தந்துவிடும்.

நன்றாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்து பொறுப்பேற்குமாறு தேர்ந்தெடுத்தவுடன் அவர்கள் மீது முழு நம்பிக்கை கொள்ளவேண்டும். அடிக்கடி தலையிடுவது, குறுக்கிடுவது, அவதூறு செய்வது என்பன மிகப்பெரிய  துன்பத்தைத் தரும். ஆராய்ந்து தெளிந்து நம்ப வேண்டும். நம்பித் தெளிந்தவுடன் வீணான ஐயம் கூடாது. எத்துறையாயினும் ஒரு முடிவுக்குப் பின்னர் இடையில் வரும் குழப்பம். சந்தேகம் ஆகியவற்றை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். அவர்களுக்கு ஆதரவாய் இருந்து நன்கு செயல்பட உரிமை அளிக்க வேண்டும்.

தீரா இடும்பை தரும் எது என்று கேட்டு, அதற்கு வள்ளுவர் விடையும் அளிக்கின்றார்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 

 தீரா இடும்பை தரும்”              (510)

ஒருவனைத் தெளிவில்லாமல், ஆராயாமல் தேர்ந்தெடுத்தாலும் துன்பம். ஆராய்ந்து தெளிந்த ஒருவரிடம் ஐயப்படுதலும் நீங்காத துன்பம். இத்துன்பம் நீக்கி இன்பம் பெற்று வாழ்வோமாக.

புகழ் வாழ்வு

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

     பொன்றாது நிற்பதுஒன்று இல்.”      (233)

மனிதர் அனைவரும் வாழ்வில் அவரவருக்கு உரிய தகுதிக்கேற்பப் புகழோடு வாழ விரும்புகின்றனர். தேடிச்சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கையல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.

அறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள்தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.

‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்று குறுந்தொகை கூறுவது போல் உண்மையான முயற்சியும் உழைப்புமே ஒருவனை உயர்த்தும்; பெருமையும் புகழும் சேர்க்கும். பயனுள்ளவனாக, பிறர்க்கு உதவுபவனாக, பிறர் துன்பங் களைத் தீர்ப்பவனாக இருந்தால்தான் புகழ் நிலைத்து நிற்கும். புகழ் அறத்தின் ஒளிவடிவம். நல்லவர்களால் போற்றப்படுவதே புகழ். மனச்சான்றைப் போற்றி, குற்ற மில்லாமல் குணங்கொண்டு செம்மையோடு வாழ்பவர் களுக்குப் புகழ் உயிர்மூச்சு போன்றது. புகழின்றி உயர்ந்தவருக்கு வாழ்வு இல்லை. நற்செயல்கள் செய்பவரின் பெருமையும் சிறப்பும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக இருப்பதில்லை. அவர்களது அருமை தொடக்கத்தில் தெரியாவிட்டாலும் நாளடைவில் மிகவும் சிறப்பாக நன்றாகவே உணரப்படும். அறம் இல்லாத இடத்தில் புகழ் நிலைத்து நிற்காது. அறத்தோடு, கடின உழைப்போடு, மனச்சாட்சியைப் போற்றி இடைவிடாது தனக்குத்தானே தன்னை குற்றங்களிலிருந்து நீங்கி காத்துக் கொள்பவர்களுக்கே புகழ் என்றும் நிலைத்து நிற்கும். இல்லாவிட்டால் புகழ்வேட்கை கொண்டவர் களுக்கு வாழ்க்கை கானல் நீர் ஆகிவிடும். உண்மையான புகழ் ஆழமாக வேரோடி நிற்கும் ஆலமரம் போன்றது. நல்ல அடித்தளத்தில் கட்டப்பட்ட கோபுரம் போன்றது; தனக்குரிய உண்மையான தகுதியுடனும், நேர்மையுடனும், மனச்சான்றைப் போற்றி வாழ்பவர் என்றும்  இன்பத்துடன், புகழுடன் வாழ்வர்.

போலித் தகுதியால், குறுக்கு வழியில் புகழ்பெற முயல்பவன் வேகமாக உயர்வான். ஒரு புயல்காற்றில் காகிதமும், சருகுகளும், குப்பைகளும் கோபுரத்திற்கு மேல் உயர்வது போல போலிப்புகழ், தற்புகழ்ச்சி போலி நாணயம் போன்றது. புழக்கத்தில் தண்டனையைத் தருவது. வீண் புகழ்ச்சியால் ஆணவம் அதிகம் தலைகாட்டும். வீண்புகழ்ச்சி அளிப்பவரையும் அழிக்கும். பெறுபவரையும் சீரழிக்கும். வெற்று உபச்சாரம், போலிப்புகழ்ச்சிகளைக் கண்டு மயங்காமல் வாழவேண்டும். சிலர் சிலகாலத்திற்கு நன்றாகப் புகழப்படுகின்றனர்; கொண்டாடப்படுகின்றனர். கால மாறுதலால் புகழின் உச்சியில் நின்றவர்கள், பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்; போற்றப்பட்டவர்கள் பழித்துப் புறக்கணிக்கப்படுகின்றனர். மக்கள் புகழும்போது புகழ் பெற்றவர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்; வாழ்த்துக்களை வழங்கியவர்கள், வசவுகளையும் வழங்கிடுவர்.

நம் தகுதிக்கேற்ற புகழ்ச்சிகளே நிலைத்து நிற்கும். ஆகவே என்றும் உழைத்து, முயற்சி செய்து, செம்மையாக வாழ்ந்து, தனக்கு உரிய பொருளுடைமை, கல்வியுடைமை, அறிவுடைமை, உழைப்பு இவைகளைப் பிறர்க்கும் வழங்கிப் பிறர்க்கு பயன்பட வாழ்ந்தால்தான் ஊரும் நாடும் உலகமும் போற்றும். வசையும், பழிச்சொல்லும் இல்லாமல் புகழுடன் வாழ்பவர்களே வாழ்பவர்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் வாழ்ந்தாலும் உடல் சுமந்து உயிரோடு இருந்தாலும் வாழாதவர்களே. உலகம் மாறிவருவது. இங்கு நிலையாமை தான் நிலைத்தது இத்தகைய மாறிவரும் உலகில், நிலை யாமை உள்ள உலகில் நிலைத்து நிற்பது, எதுவென்றால், அது அழிவற்ற புகழ் அன்றி வேறு ஒன்று இல்லை.

“வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய

     வாழ்வாரே வாழா தவர்.”      (240)

 

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

     தம்புகழ் நிறுவி தாம்மாய்ந் தனரே” – (புறநானூறு)

அறம் பிழைத்தால்…?

அறம் பிழைத்தால்…?

 

Image result for valluvarஉலகு உயிர்கட்குச் சிறப்பீனும் செல்வமுமீனும் அறத்தின் ஆக்கம் பெரிது. உலகு உயிர்களுக்கு உயிரன்ன அறம் தனித்தும் நிற்பது; பொருள் இன்பத்துடன் விரவிக் கலந்தும் நிற்பது. இயற்கையுடலின் உயிர் மாசற்ற இறையானால், மாசற்ற அறமே இறையாகும். இறையாகிய அறவாழி உவமையற்றது, எல்லையற்றது, மறத்தலியலாச் சிறப்புடையது, பேரருள் சான்றது.

“அருள் குடையாக அறம் கோலாக

     இருநிழல் படாமை மூவேழ் உலகமும்”   (பரிபாடல்)

அறம் விழையும் நெஞ்சம் ஆக்கத்தில் நிலைக்கும் என்றால், அறம் விழையா நெஞ்சின் நிலை என்ன? அறம் பேணா அந்நெஞ்சம் ஆக்கம் தேட முயலுமா? ஆக்கம் தேட முயலாவிட்டாலும் அமைதியாக அடங்கிக் கிடக்குமா? அன்றி, அறம் பிழைக்குமா? அறம் பிழைத்தால்…. அறமே பிழைக்குமா…?

அறம்:- எண்ணம், சொல், செயல் மூன்றனுள்ளும் எண்ணம் சொல்லுக்கும் செயலுக்கும் அடிப்படையாய் அமைந்தது, அதனால் மாசற்ற, தூய்மையான அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயல்புடைய எண்ணம் முதன்மையான சிறப்புடையது. எனவே,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;

     ஆகுல நீர பிற”              (34)

என நுண்மாண் நுழைபுலத்துடன் வள்ளுவம் காட்டும்.

“மனத்துள் மாறாது உறைந்து கிடக்கும்

     சட்டத்திற்கு அறம் என்று பெயர்”

என்று பைபிள் காட்டும். தனி மனிதனுக்கு மட்டுமன்றி உலக சமுதாயத்திற்கும். இவ்விளக்கம் பொருந்தும்.

அறம் பிழைப்பதேன்…?

Image result for manimozhian kuralஇயற்கையின் ஆற்றல்மிகு அமைப்பில் நல்லன எல்லாம் விரைந்து உடனே பயன் தரும் நிலை குறைவு, ஆனால் தீமை செய்வன எல்லாம் உடன் விரைந்து தீய பயன் தரும் நிலை மிகுதி. இது இயற்கையின் வியத்தகு அமைப்பு முறை. நஞ்சுண்டவன் விரைந்து மடிகின்றான். உடன் விளைவு காண இயலுகின்றது. நனிசுவை நலந்தரு உணவு உண்டவன் நலம் பெறுவான் ஆனால் உடன் பயன் காண முடிவதில்லை. இவ்வடிப்படை உண்மையே அறம் பிழைக்க அடிப்படையாய் அமைந்த சூழல்.

அரம்போலும் கூர்மையரேனும், மக்கட் பண்பில்லா மரம்போன்ற குறுகிய எண்ணமுடைய தனிமனிதனோ சமுதாயமோ அவ்வியற்கை அமைப்பை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றார்கள். உலகம் அறம் பிழைக்கும் சூழலில் சிக்கித் தவிக்கிறது.

“கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்

     கோடாமை சான்றோர்க்கு அணி”     (115)

“நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை

     அன்றே ஒழிய விடல்.”        (113)

என்ற நெறிகளை ஞாலம் வாழ்க்கை நடைமுறையமைப்பில் ஏற்றுக்கொள்வதில்லை. ‘புதரில் உள்ள இரு பறவைகளை விட கையில் உள்ள ஒரு பறவையே மேலானது’ என்ற எண்ணமே மக்களிடையே நிலைத்து நிற்கின்றது.

தனிமனிதன் குறைந்த முயற்சியில் தான் வாழ வேண்டும். தன் குடும்பம் வாழ வேண்டும் என்று குறுக்கு வழியில் வாழ்க்கை வழிதேட விழைகின்றான். இன்று இடுக்கண் உற்றாலும் நாளை நல்லற நெறியில் நற்பொருன் ஈட்டுவோம் என்ற அறநெறியை அவன் மனம் நாடுவதில்லை, இதனால் அவன் அழுக்காறு உடையவனாய், புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவனாய், பேரவா உடையவனாய் ஆகின்றான். இத்தகு தனித்தனி குறுகிய நோக்குடையவர் களால் மன்பதை பாழ்படுகின்றது. அதனால்தான் சமுதாய அமைப்பில் இன்னா செய்தார்க்கும் இனியவை செய்து அவ்வொன்னாரை நல்லவராக ஆக்கும் முயற்சியைக் காண இயலுவதில்லை. ‘அளவிறந்து ஆவது போலக் களவினால் ஆகிய ஆக்கம் கெடும்’ என்ற உண்மை உணர்ந்தவர்களைக் காண இயலுவதில்லை. ‘தன்னெஞ்சத்து அழுக்காறில்லாத இயல்பை ஒருவன் ஒழுக்காறாகக் கொள்க’ என்ற கொள்கை உணர்ந்தவர்களைக் காண இயலுவதில்லை ‘மற்றின்பம் வேண்டுபவர் சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யார்’ என்ற ஆன்ற பொருளுணர்ந்த வர்களைக் காண இயலுவதில்லை. ஆனால் குறுகிய நோக்கத்தால் பொறுமையற்றவர்களாய், கயவராய், பெரும் பொய்யராய், கொடிய கொலைஞராய் வாழ்வோரைக் காண முடிகின்றது. இத்தகையோர் குற்றமிழைத்தால் உலகம் எளிதில் இக்குற்றத்தைக் கண்டு இவர்களைப் பழிக்கிறது; ஒறுக்கவும் செய்கின்றது, ஆனால் தனிமனிதன் தனக்கென்று ஓர் அமைப்புப் பெற்றிருப்பானானால், ஆற்றல் நிறைந்தவனானால் இக்குற்றம் மறைக்கப்படுகின்றது. மற்றும் குறுகிய நோக்குக் கொண்ட திறன் மிக்க வல்லவர்களான இத்தகைய தனிமனிதர்கள் தலைவர்களாக அமைந்து விட்டாலோ உலகம் அவர்கள் குற்றத்தை மறைப்பது மட்டுமின்றி, ஏற்றிப்போற்றி இறைஞ்சி ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. இதுவும் உலகின் வியப்புமிகு போக்கு.

யார் குற்றம்?

அறம் பற்றி விளக்க விழைந்த வள்ளுவர் மக்களின் வாழ்க்கையமைப்பைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்து மக்கள் அறம் பிழைக்கக் காரணமான உண்மையைக் கண்டு துயருற்றவராய்,

“நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

     வான்இன்று அமையாது ஒழுக்கு”           (20)

என்று கூறுகிறார். ‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம்’ ஆகிய மழைநீர் இல்லாமல் உலக வாழ்க்கை அமையாது என்று வாழ்க்கைப் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி அத்தகைய போராட்டத்தில் சிக்கித் துயருழந்து ஒழுக்கத்தைக் கைவிட்டவர்களைப் பழிக்காமல் இரக்கம் காட்ட வேண்டும் என்ற உண்மையை இலைமறை காயாக எடுத்துக் காட்டுகின்றார்.

இன்றைய அமைப்பு முறையிலும் இதே நிலைதான். மழை இருந்த இடத்தைப் பொருளும் பதவியும் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. இதுதான் வேறுபாடு. ஆதலால் மக்கள் மேல் மட்டும் குற்றம் காண்பதில் பயனில்லை. மக்கள் வாழும் அமைப்பு முறையில் தவறு நிகழ்ந்திருக்கிறது. மக்கள் எண்ணித் துணியும் இயல்பு பெறாதவர்கள். ஆனால் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு குறுகிய நோக்கமுடைய தன்னலம் மிக்கோர் வளர்ந்து விடுகிறார்கள். உலக அமைப்புப் பாழ்படுகின்றது.

அறம் பிழைத்தால்….? அறமே பிழைக்குமா…? அறம் விழையும் நெஞ்சமானது ஆக்கத்தில் நாட்டம்கொள்வது போல் அறம் விழையா நெஞ்சம் கேட்டை விளைவிக்கும்.

“வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்

     நடுவணது எய்த இருதலையும் எய்தும்” (114)

என்று நாலடியார் பொருள் செயல் வகையின் சிறப்புக்கூறும். அறவழியில் ஈட்டிய அருஞ்செல்வம் அல்லது தலைமைப் பேறு போராட்டத்தை எழுப்பாது, உலகில் போராட்டம் குறைய வேண்டுமானால் பொருள் பொதுவில் பயன்படும் முறை ஓங்கி வளர்தல் வேண்டும். குறுகிய எண்ணம் குறைந்து அருள் சான்ற நெஞ்சம் வளர்தல் வேண்டும். அறத்தில் ஈடுபடா உள்ளம் பெரும் போராட்டங்களை எழுப்பும். தனி மனிதனின் அகப்போராட்டமாய்த் தொடங்கி புறப்போராட்டமாயும் வளர்ந்து உலகப் போராட்டமாய் முடியும். போராட்டத்தின் இறுதி விளைவு கேடே, ஆதலால் வள்ளுவம்.

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு”      (32)

என்று கூறும். அறமுறை நிலவா நாடு ஆக்கம் பெறுவதில்லை. இதைக் கலித்தொகை,

“சிறுகுடியீரே, சிறுகுடியீரே!

     வள்ளிகீழ் விழா, வரைமிசைத் தேன்தொடா

     கொல்லைகுரல் வாங்குஈனா, மலைவாழ்நர்

     அல்ல புரிந்தொழுகலான்”

என்று கவினுடன் காட்டும்.

தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் உலகில் கேடு சூழ்வன செல்வமும் பதவியும். உலகச் சூழலானும் அமைப்பு முறையானும் நேர்ந்த குறையால் தன்னலம் மிகுந்தவரும் குறுகிய நோக்கமுடையவரும் தமது ஆற்றலால் ஞாலத்தை அடக்கித் தம் வழியில் ஆள இயலுகின்றது. இந்நிலை வளர்ந்தால் உலகம் நிலைக்குமா? அறம் பிழைக்குமா?

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்ற பேருண்மையை ‘தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர்கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன்’ மெய்ப்பித்தான் அன்று. அவன் அறஞ்சான்ற நெஞ்சத்தான். ஆனால் இன்று நிலை என்ன? அறம் குறைந்து, அன்பு தேய்ந்து, அமைதி மங்கி தன்னலம் உயர்ந்திருக்கின்றது. குறுகிய நோக்கம், குறுகாது வளர்ந்திருக்கின்றது. மக்களில் ஒருவருக்கொருவர், குடும்பத்திற்குக் குடும்பம், இனத்திற்கு இனம், நாட்டுக்கு நாடு பகையும் பொறாமையும் பரந்து நிறைந்து வளர்ந்து வருகின்றது. இதுவே இயற்கை என்று கூறும் அச்சநிலைக்கு உயர்ந்துவிட்டது. இந்நிலையில், அறம் வாழுமா?

தனிமனித வாழ்க்கையையும், அவனைச் சார்ந்த குடும்பத்தினரையும், நலம் நாடும் நட்புடையாரையும் பிணக்குக் கொள்ளச் செய்து அவர்களை ஆட்டி ஆட்சி புரிவதும், பொருளாட்சி, பொருளல்லாதவரையும் பொருளாகச் செய்யும் பொருள் ஒரு கூட்டத்தின்பால் குவிந்து கிடக்க, நெருப்பினுள் துஞ்சலினும் கொடிய நிரப்பினுள் வாடுகின்றது ஒரு கூட்டம். இவ்வாறு இங்கும் இனத்தின் பெயரால் செல்வர் – வறியவர் எனப் பிரித்து இவர்களை ஆட்சி புரிவதும் பொருளாட்சி, மற்றும் நிறத்துக்கு நிறம், வகுப்புக்கு வகுப்பு, சமயத்துக்கு சமயம் போராட்டத்தை எழுப்பியதும் பணமே. உலகப்போரின் அடிப்படையே பொருளால் அமைந்ததாகும். நாடுகளுக்கு இடையே வலிமையுடைய நாடாய் இலங்க வேண்டும் என்ற பேரவாவால், பொருள் வலிமையால் படைவலிமையை வளர்த்து, சில வல்லரசுகள் உலகத்தை அச்சத்துக்கு உள்ளாக்குகின்றன. இவ்வாறு இங்கு கொடுங்கோல் ஓச்சுவதும் பொருளாட்சியே! அமைதியை நிலைநாட்டு வதற்கென அமைக்கப்பட்ட உலக அமைதிக் காப்பு அறநிலையமான ஐக்கிய நாட்டு அவையும் பொருள் வளமும் படைபலமும் மிகுந்த நாடுகளைச் சார்ந்திருக்கின்றது. இவ்வாறு தனிமனிதன் முதல் உலகம் வரை நிலவி நிறைந்து நிற்கும் குறை உலகுக்குப் புலப்படுமா? அறம் பிழைக்குமா?

ஆயினும், அறம் எவ்வாறேனும் வாழும், தீமை தோற்கும், அறம் வெல்லும் இது உண்மை. கருவி குறிக்கோளாக மாறியிருப்பதே இன்றைய அச்சத்திற்குக் காரணம். அமைதியான பண்புமிகு அறவாழ்வே குறிக்கோள் ஆகும். செல்வம் ஒரு கருவி. அமைப்பு முறை மாறி யிருக்கிறது. இதுவே குறை, இக்குறை நீக்கமுடியாத குறையன்று. இன்றைய சூழலில் தனிமனித வாழ்க்கையைச் சீர்திருத்துவதினும் உலகச் சமுதாய அமைப்பை மாற்றி நெறிப்படுத்தினால் இக்குறை நீங்கும்.

தன்னலங் கருதாது அறத்தின் வழிநின்று கடனாற்றும் சான்றோர் ஒருசிலராவது என்றும் வாழ்வர். அத்தகையோரால் உலகம் என்றும் உயிர்கொண்டு வாழும்.

“உண்டால் அம்ம இவ்வுலகம்…

     தமக்கென முயலா நோன்தாள்

     பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”  (புறநானூறு.182)

“பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அஃதுஇன்றேல்

     மண்புக்கு மாய்வது மன்.”           (996)

சான்றாண்மைக்கு ஆழி எனப்படும், ஊழி பெயரினும் தாம் பெயராச் சான்றோர் வாழும் வரை, மனிதப் பண்புகள், உணர்வுகள் மனிதனிடம் நிலைத்துநிற்கும் வரை, அறம் அழியாது. அறத்தை அழிக்க முடியாது. தீமை அளவிறந்து ஆவது போலக் கெடும். “இறைச் சட்டங்கள் மனித மனத்துள் அமைந்திருக்கின்றன. அதனுடைய சுவடுகள் அழியாதவை”

திருக்குறளும் கீதையும்*

Image result for thirukkural

இந்திய நாட்டுப் பொதுநூல்களின் வரிசையில் முன்னிடம் பெறுபவை இராமாயணமும் மகாபாரதமும் திருக்குறளும் ஆகும். இராமாயணம் இனியதொரு நீதி நூல்; மகாபாரதம் விரிந்ததொரு சமூகச் சாத்திரம்; திருக்குறள் ஓர் உலகப் பொதுமறை. மகாபாரதத்தை அருளிய வியாசர், ஏறத்தாழ இலட்சம் சுலோகங்களில் எண்ணிலாச் சித்திரங்களையும் வரலாற்று நடப்புகளையும் பேராற்றலுடன் வருணித்துள்ளார்.

மாபெரும் தங்கச் சுரங்கம் போலவும். பரந்து பட்டதொரு கானகம் போலவும் அமைந்துள்ள மகாபாரதத்தின் உயிர்நிலையாக இருப்பது கீதை. பல்வேறு தத்துவச் சுடர்களும் உபதேச மணிகளும் இக்கீதையிலிருந்து பிரவகித்துள்ளன. தரும ஞானக் கருவூலமான இக்கீதை, மகாபாரதத்தில் ஒரு சிறு அங்கமே ஆயினும், இந்து சமய சாத்திரத்தின் மணிமுடியாகவே அது திகழுகிறது. கீதையை கிருஷ்ண பகவான் குருசேத்திரப் போர் நடுவே அர்ச்சுனனுக்கு அருளினார். போரில் தன் தாயாதிகளுடன் மோதி நிற்க வேண்டியதொரு இடர்ப்பாட்டிற்கு உள்ளான அர்ச்சுனனின் கலக்கத்தை அகற்றி அவனைப் போரில் மன உறுதியோடு ஊன்றி நிற்கச் செய்வதற்காகக் கீதை அருளப்பட்டது எனக் கருதப்படுகிறது. என்றாலும், கீதை அருளப்பட்டதன் முழுநோக்கமும் இது இல்லை என்பதை அதனை ஆழ்ந்து கற்கும் எவரும் எளிதில் அறிய முடியும். கோழைத்தனத்தை அகற்றுதல் எனும் எளியதொரு நோக்கத்தை விட, வாழ்வுப் பேருண்மைகளை உணர்த்தி, மக்களின் உள்ளத்தை மூடும் மேகப் படலங்களை அகற்றி, மன உறுதியோடும், கடமைப் பற்றோடும் வாழ்ந்திட வழிகாட்டுவதே அதன் விழுமிய நோக்கமாகும்.

“அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

     எண்ணி இடத்தான் செயின்          (497)

“கடன்என்ப நல்லவை எல்லாம்” (981)

இந்திய ஞான வாழ்வின் கலைக்களஞ்சியமான கீதைக்கு நிகராக, தமிழ் மண்ணில் மலர்ந்த வாழ்க்கை நூல் திருக்குறள். வாழ்க்கைப் போரில் அவரவர் சந்திக்கும் சிக்கல்களுக்கெல்லாம் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் தீர்வு நல்கிக் காலத்தை வென்று நிற்பது திருக்குறளின் பெருஞ்சிறப்பாகும். கீதை, திருக்குறள் எனும் இரண்டிலும் பொதிந்துள்ள சில பொதுக்கூறுகளை மட்டும் சுருக்கமாக நம் நினைவுப் படலத்திற்குக் கொணர்வோம்.

திருக்குறள் நடுநிலைப் பண்போடு உலகிற்கே அறம் உணர்த்திய திருமறையாகவும் பொதுமறையாகவும் திகழ்வது; உலக மக்கள் அனைவரின் நல்வாழ்விற்கும் பெருவாழ்விற்கும் ஒப்பில்லாப் பொதுமை நலம் தருவது; உயர் நாகரிகமுடையதாய் இனம், நாடு, மொழி, சமயம், காலம் இவையெல்லாம் கடந்த தனக்கு உவமையில்லா முதல் நூலாக விளங்குவது; வேறுபடும் சமயங்கள்கூடத் தமதென உரிமை கொண்டாடிப் போற்றிப் பாராட்டிடும் புகழுடன் திகழ்வது.

மகாபாரதத்திற்கு ஒரு பக்கம் ஆறு பருவங்களும், மறுபக்கம் பன்னிரண்டு பருவங்களும் அமைந்திருக்க அவற்றினிடையே நந்தா விளக்கெனக் கீதை இலங்குகிறது.

கீதையின் முதல் அதிகாரம் அர்ச்சுனனின் மனப் போராட்டத்தைக் குறிக்கின்றது. அவனது பரிவுணர்ச்சி இதில் மேலோங்கி நிற்கிறது. இரண்டாம் அதிகாரம் உடலெடுத்த ஆன்மா அழிவில்லாதது எனும் சாங்கிய யோக அடிப்படையை எடுத்துரைக்கிறது; சுயதர்மப்படி இதில் மிகுதியும் வலியுறுத்தப்படுகிறது. மூன்றாம் அதிகாரம் கர்ம யோகத்தைக் கற்பிக்கிறது. நான்காம் அதிகாரம் நேர்மையான சிந்தையின் அவசியத்தைப் போற்றுகிறது. அதர்மம் ஓங்கித் தர்மம் குன்றும் போதெல்லாம் கடவுள் அவதாரம் எடுப்பார் எனும் ‘சம்பவாமி யுகே யுகே’ என்னும் வாசகம் இந்த அதிகாரத்தின் மணிமுடியாக நிற்கிறது. “எந்த வழியில் அணுகினும் அந்த வழியில் நான் அன்பு காட்டுகிறேன்.” எனும் தத்துவ தரிசனங்கள் இப்பகுதியின் சிறப்பு அம்சங்கள். ஐந்தாம் அதிகாரம், ஒருவன் ஞானத்தை உணர்ந்து, தன் கர்மங்களைக் கடந்து நிலைபெற வேண்டும் என்ற கர்ம சந்நியாச யோகத்தைக் கற்பிக்கிறது.

ஆறாம் அதிகாரம் யோகத்தின் குறிக்கோள் பரம்பொருள் அனுபவம் என்பதை எடுத்துரைக்கிறது. எல்லா உயிர்களையும் ஆத்மாவினுள் காணும் சம தரிசனத்தை, “காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன், கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா” எனப் பாரதிக் கவிஞன் கண்டுணர்ந்த மெய் அனுபவத்தை நமக்குப் புலப்படுத்துகிறது.

ஏழாம் அதிகாரம் ஞான யோகத்தையும், எட்டாம் அதிகாரம் பிரம்ம யோகத்தையும் விளக்கி நிற்க, ஒன்பதாம் அதிகாரம் ‘அனைத்தும் என்னுள் உயிர் பிழைத்திருப்பன’- எது செய்தாலும் எனக்காக நல்கி விடு – எனும் ராஜ யோகத்தை விளம்புகிறது.

பத்தாம் அதிகாரம் பரம்பொருளின் புகழையும் மாட்சியையும் விண்டுரைக்கிறது. பதினொன்றாம் அதிகாரம் விசுவ தரிசன யோகமாக, அகிலத்துக்கும் நீயே தந்தை எனத் தன்னையே அர்ப்பணித்து வணங்கும் தொழுநிலையைக் காட்டுகிறது.

பன்னிரண்டாம் அதிகாரம் பக்தி யோகத்தையும், பதின்மூன்றாம் அதிகாரம் அறியப்படும் உண்மைப் பொருள் பற்றியும் பேசுகின்றன. பதினான்காம் அதிகாரம்  குணத்ரய விபாக யோகம் பற்றியும், பதினைந்தாம் அதிகாரம் புருஷோத்தம யோகம் பற்றியும் உரைக்கின்றன. ‘மேலே வேரும் கீழே கிளைகளும் உள்ள நித்திய அரசமரம்’ இதில் சுட்டப்படுகிறது. பதினாறாம் அதிகாரம் தெய்வாசுர சம்பத் விபாக யோகத்தையும் பதினேழாம் அதிகாரம் ‘ஓம் தத் சத்’ (ஓம் – அது உனது) எனும் பிரம்மனைச் சுட்டும் அடையாள மந்திரத்தைக் காட்டுகிறது. பதினெட்டாம் இறுதி அதிகாரம் ஒருவன் பிரம நிலைக்கு உயரும் அமர நிலையைச் சுட்டுகிறது.

அமரநிலை சுட்டிப் பேசும் கீதையைப் போலவே, திருக்குறளும் வானகம் இங்குத் தென்படச் செய்யும் வழிகளை விதந்தோதுகிறது. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” (50) என வையத்து மனிதரெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்திட வரம்பு கோலித் தருகிறது. எனவே தான் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டதாகத் தமிழ் நாட்டைப் பாரதிப் புலவன் பாடிப் பரவினான். தாம் யாத்த நூலுக்குச் சிறப்பீட்டித் தந்துள்ளார் வள்ளுவர். கீதை போல, உலகிற்கென ஒரு நூலை அளித்த பெருமையை இந்தத் தமிழ் மண்ணுக்கு அவர் அளித்துள்ளார்.

திருவள்ளுவரின்  நூல் அறம், பொருள், இன்பம் எனப் பகுக்கப்பட்டுள்ளது அறமும் பொருளும் காதலும் ஓர் இனத்தாருக்கே உரியன அல்ல. அவை எல்லா மனிதர்க்கும், இந்த உலகிற்கும் பொதுவானவை. ‘உலகம் ஒரு குலம்’ என்பதே திருக்குறளின் உயிரோட்டம். உலகம் ஒரு குலமாக விளங்க வேண்டுமெனில், அந்த உயிரோட்டத்திற்கு, அன்பு எனும் குருதியோட்டம் நிலையாக இயங்குதல் வேண்டும். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ (80) என்பதே வள்ளுவத்தின் நிலையான குருதியோட்டம். அன்பினை வளர்த்து வாழ்வதே மக்கட் பிறவியின் நோக்கம்; வாழ்க்கைக் கலையின் ஆக்கம் பண்பும் பயனும் உடைய இல்வாழ்க்கை யினைத் தேர்ந்து தெளிந்து நடந்திட வலியுறுத்துவதே வள்ளுவர் நெறி. வள்ளுவர் நெறிக்கு அடிப்படை அறம். மனத்துக்கண் மாசிலனாக வாழ்வதே அனைத்து அறன்; அகிலத்து அறன். இன்று உலகில் மண்டியுள்ள அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்பன எல்லாம் இழுக்கானவை; அற ஒழுக்கத்திற்குப் புறம்பானவை.

Image result for thirukkural

திருவள்ளுவர் ஆட்சி நெறியிலும் பொருளாதார முறையிலும் பொதுமை அறமே பேசுகிறார். மன்னராட்சி விளங்கிய காலத்தே எழுதப்பட்டாலும் மக்களாட்சி துலங்கும் காலங்களுக்கும் பொருந்தும் வகையிலேயே அவர் ஆழ்ந்த தொலைநோக்கோடு எழுதியுள்ளார். பொதுமையும் மனத்தூய்மையும் இரு கண்களாக அமைய வாழ்வரங்கு முழுமைக்கும் அவர் வழிகாட்டியுள்ளார். ஒப்புரவு, ஈகை, புகழ், இன்னா செய்யாமை, நட்பு, குடிமை முதலிய எண்ணற்ற சிந்தனைத் தருக்களை நிறுவி அவ்வரங்கு முழுமைக்கும் நிழல் பரப்பியுள்ளார்.

பலர்க்கும் பல வகையாகப் பயன்படும் சிறப்புடைய திருக்குறளை, இலக்கிய நூலாகவும் அறவழிச் சுரங்கமாகவும் இலங்கும் திருக்குறளை, பகவத்கீதையோடு ஒப்பிட்டுச் சில கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன்.

“இந்த நூலை, மூளை கொண்டு கற்காமல் இதயம் கொண்டு உணர வேண்டும்” எனக் காந்தியடிகள் பகவத் கீதையைப் பற்றி எழுதினார். இது திருக்குறளுக்கும் பொருந்தும். இன்னும் ஒரு படி மேலே சென்று மதிப்பிடுவதென்றால், திருக்குறளை மூளை கொண்டும் கற்கலாம்; இதயம் கொண்டும் உணரலாம். அறியவும் உணரவும் காலமெல்லாம் வழிகாட்டும் கற்பக விருட்சங்களாக விளங்கும் கீதையையும் திருக்குறளையும் ஒரு சில நிலைகளில் நின்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.

திருக்குறளும், கீதையும் வாழ்வில் முழு நிறைவு நூல்களாகும். மனிதனை நிறைமனிதனாக்குவது இரு நூல்களின் அடிப்படையாகும்.

வாழ்விற்கு வழிகாட்டியும், எக்காலத்திலும், எல்லோருக்கும் முரணின்றி அறிவொளி பரப்பியும் நன்மையும் பயனும் நல்கியும் பெருமையுற்று நிலைத்து நிற்பவை. உண்மை நிறைந்து, அறிவுக்கு ஏற்புடையனவாய் மறைமொழிகளாக மனிதனை நிறைவுபடுத்தும் நிறை மொழிகளாகக் காலத்தையும் வென்று வாழ்பவை.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

     மறைமொழி காட்டி விடும்” –             (28)

‘தூய, அன்பையும், ஞாயிறு போன்ற, அறியாமை இருளகற்றி நலம் செய்யும் தெளிந்த செயல் அறிவையும், உறுதியான ஆற்றலையும் ஒருங்கே அமையப்பெற்றவன் நிறை மனிதன் ஆகின்றான்’ என்று கீதை இயம்புகிறது.

கண்ணன் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருடைய கூற்றுக்கு இலக்கணமாகியது. ‘மனத்திலுள்ள மாசு நீக்குக’ என்றார் கண்ண பெருமான்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;

     ஆகுல நீர பிற”              (34)

என்றார் வள்ளுவர்.

‘நலத்தை நிலைநாட்டுபவர்க்கு நல்லவை எல்லாம் தம் கடமை’ என்றார் கண்ணபெருமான்.

“கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

     சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு”        (981)

என்றார் வள்ளுவர்.

“உயிர்களிடத்து அன்பு கொண்டு வாழ்க” என்று அன்புருவாகவே வாழ்ந்தார் கண்ணன்.

“அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

     என்போடு இயைந்த தொடர்பு”       (73)

“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

     இன்புற்றார் எய்தும் சிறப்பு”               (75)

என அன்பின் பெருமை பேசினார் வள்ளுவர்.

கருணையுடன் பிறர் துன்பம் கண்டு இரங்கி துன்பம் நீக்கி இன்பம் நல்க வேண்டும். அருள் கொண்டு தொண்டு செய்து வாழும் போது தான் நிறை நிலை, முழுநிலை, தெய்வநிலை பெற இயலும். பல வகையால் ஆராய்ந்தாலும், அன்பும் கருணையும் தான் துணை. ஆகவே “நல்லாற்றின் நாடி அருள் ஆள்க. பல்லாற்றான் தேரினும் அஃதே துணை” என்பார் வள்ளுவர். அறிவு பெற்றதன் பயனே பிற உயிர்கள் துன்பம் கண்டு இரங்கி அன்பு கொண்டு நலம் செய்வது தான். அதுவன்றி பெற்ற அறிவால் பயனுண்டோ? என்று வினவுவார் வள்ளுவர்.

“அறிவினால் ஆகுவதுஉண்டோ பிறிதின்நோய்

     தம்நோய்போல் போற்றாக் கடை”          (315)

“வலிவு படைத்தோன் வாழ்வுக்கு உரியவன்”

Image result for bhagavad gitaஎன்று கூறுகிறது கீதை. “உள்ளம் உடைமை உடைமை” “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்; எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்” என்று உள்ள வலிவையும், பேராற்றலையும் வியந்து பேசுவார் வள்ளுவர். “எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத் திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு” என்பார் வள்ளுவர். பேராற்றல் படைத்த மனிதன் தன் ஆற்றலை உணர வேண்டும் “அரிய என்று ஆகாதது இல்லை. ஆதலின் சிறியவராய், புன்மையராய் சீர் குன்றாமல், பெரியோராய் செயற்கரிய செயல் செய்ய வேண்டும்”.

மனித உயிர்களை அன்போடு நேசித்து,‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ (71) என்று உணர்ந்து, என்பும் பிறர்க்கு உரியதாக்கி அன்புற்று வாழ்க! கொத்தாக மலர்ந்து மணம் வீசும் மலர்கள் போல, ஒளி வீசும் பகலவன் போல, அறிவு மணம் மலர்க; அறிவாற்றல் நிறைக – நல்லவை யெல்லாம் கடனாகக் கொண்டு கடனறிந்து சான்றாண்மை மேற்கொள்க!

இத்தகு செயல்களாலே உலகம் இன்புற்று வாழும் எனக் குறளும் கீதையும் உலகப் பொது நூல்களாய் வழிகாட்டி நிற்கின்றன.

காமம், கோபம், மயக்கம், யான் எனது என்னும் செருக்கு நீங்கித் தெளிந்த மனமுடைய மெய்யறிவு பெற்றவர் துயருறுவதில்லை. ‘எல்லா உயிர்களிடமும் தூய சம அன்பு செலுத்துபவன் என்னுடன் ஒன்றறக் கலக்கின்றான்’ என்று கூறும் கீதை.

“காமம் வெகுளி -மயக்கம் இவைமூன்றன்

     நாமம் கெடக்கெடும் நோய்”         (360)

 

“யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

     உயர்ந்த உலகம் புகும்”        (346)

 

     காமமும் மோகமும் – பேராசையும்,

     கோபமும் – மயக்கமும் நீங்கி

     நான் – எனது என்ற அகந்தைகளும்

     நீங்கி வாழ்ந்தால் துன்பங்கள் மறையும்.

இன்பங்கள் பெருகும். வேண்டுதல் வேண்டாமை இல்லாது கடமையாற்றும்போது எண்ணியவை, சொல்லியவை மாறுபடாது. உறுதியான, இடைவிடாப் பயிற்சியால் செயல் ஆற்றும்போது மனம் மகிழ்வுறும், உலகம் அமைதியுறும். உலகம் வாழும்.

கீதையும் திருக்குறளும் வாழ்விற்கு நம்பிக்கை அளிப்பவை, வாழ்க்கையில் நேரிடும் இடர்கள், துன்பங்கள் நீக்குபவை. அச்சம் தவிர்த்து, மோகம் நீக்கி, மயக்கம் தவிர்த்து, மும்மலம் நீக்கி, கடமையை உணர்த்தி, செயலினைப் போற்றி, மனித குலத்தை மாண்புறச் செய்து வானுறையும் தெய்வத்திற்கு இணையாய் அமரர்களாக வாழ வழி வகுப்பவை.

கீதை காட்டும் பாதையும், வள்ளுவர் காட்டும் வழியும் ஒன்றோடு ஒன்று இசைந்தவை; இணைந்தவை; கீதையில் குறளையும் குறளில் கீதையும் காண்கின்றோம்.

 

 

முப்பால் ஒளியை மிளிரச் செய்வோம்!

Image result for thirukkural

உலகத்திற்குத் தமிழர்களை அடையாளம் காட்டி வான்புகழ் கொள்ள வைத்தது திருக்குறள். தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைக்கும் ஆக்கத்திற்கும் நிலை பேற்றுக்கும் வழிகாட்டுவது திருக்குறள். அந்தந்தக் கால, தேசச் சூழலுக்கேற்ப, தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, புதுமைச் சிந்தனைகளை வழங்கி, அன்பு நெறியாலும், அறிவு நெறியாலும் வாழ்வை நல்வழிப்படுத்தும் ஆற்றல் பெற்றது திருக்குறள்.

தனக்கு உவமை தானாகவே விளங்கி, ஒப்பு உவமையற்று, காலத்தை வென்று நின்று, இன்றைய அறிவியல் யுகத்திற்கும் ஏற்ற புதிய சிந்தனைகளை வழங்குவது திருக்குறள்.

அறியாமையாகிய இருளிலிருந்து உண்மைப் பேரொளிக்கு அழைத்துச் செல்வது திருக்குறள். மனிதன் மனத்துக்கண் மாசில்லாதவனாக மனத்தூய்மை பெற்று அறவாழ்வு வாழ, தெய்விக உணர்வு பெற்று உயர வழிகாட்டுவது திருக்குறள்.

நம் மனத்தின் அசுர உணர்வுகளை, மிருக உணர்வுகளை- காமம், வெகுளி, மயக்கம், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியவைகளை அடக்கி, நீக்கி, தெய்வ இயல்புகளை – அன்பு, நாண், கண்ணோட்டம், ஒப்புரவு, வாய்மை, மனிதநேயம் இவைகளை மலரச் செய்வது திருக்குறள்.

பேரலைகள் சுழன்று அடிக்கும் பெருங்கடலில் பயணம் செய்யும் படகோட்டிகள் கை சலித்து, உடல் சலித்து, மனம் உழன்று வருந்தும்போது, இருளில் ஒளி காட்டும் கலங்கரை விளக்குக் கண்டு கரையேறுவது போல, போராட்ட உலகில் மனம் சலித்து, துன்புற்று வாழும் மனிதர்களைக் கரைசேர்ப்பது, கலங்கரை விளக்கமாய் விளங்குவது முப்பாலாகிய திருக்குறள்.

நாம் வாழும் காலம் அறிவியல் யுகம், கணினி யுகம், இண்டர்நெட் யுகம், அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவுடையார் ஆவது அறிவார் என்பது மெய்ப்பிக்கப்பட்ட யுகம். எது நிலைத்தது என்றால், நிலையாமை தான் நிலைத்தது. எது மாறாதது என்றால், மாற்றம் தான் மாறாதது. ஆதலால், நில்லாத உலகின் மாற்றத்திற்கு ஏற்ப, போராட்ட உலகத்திற்கு ஏற்ப நம்மை நாம் தகுந்தபடி மாற்றிக் கொண்டால் தான் நிலைத்து நின்று வெற்றி பெற முடியும்.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

     அவ்வது உறைவது அறிவு”                (426)

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

     கல்லார் அறிவிலா தார்”             (140)

காலத்திற்கு ஏற்றபடி அறிவியல் உலகின் போக்கை ஆராய்ந்து, காலத்திற்கு ஏற்ற கல்வியும், அறிவும் பெற்று கடும்உழைப்பாலும் முயற்சியாலும், உன்னத நிலை பெற்று உயர வேண்டும். குடியரசுத் தலைவர் கனவு 2020-ஆம் ஆண்டில் நாம் வல்லரசு ஆவோம் என்பது. இக்கனவு, தமிழர் வாழ்வில் நனவாக வேண்டும்.

“உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்” (596)

“உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

     உள்ளியது உள்ளப் பெறின்”               (540)

என்ற குறள்நெறி தமிழகத்தில் நிலைபெற வேண்டும்.

பல நூலறிவும், உலகியல் அறிவும், நடைமுறை அறிவும் நிறைந்து, பல சொல்லக் காமுறாமல், பயனில்சொல் பாராட்டாமல், சில சொற்களாலே தெளிவாகவும் மிகச் சுருக்கமாகவும் எழுதப்பட்ட நூல் திருக்குறள்.

விதித்தன செய்தலும், விலக்கியவை ஒழித்தலும் மக்களை நல்வழிப்படுத்தும் என்று உணர்ந்து இலக்கிய நயத்துடன், நுண்மாண் நுழைபுலத்துடன் பல துறையினர்க்கும் ஏற்றாற் போல் நிறைமொழி மாந்தராய் வள்ளுவர் உலகிற்குப் பொதுமறை தந்தவர்.

“செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

     செய்யாமை யானும் கெடும்”         (466)

வள்ளுவர் தம்மை முன்னிலைப்படுத்திக் கூறியது மூன்று இடங்களில்தான். அவற்றுள் முதன்மையாக ‘யாம் கண்ட உண்மை’ என்று வலியுறுத்தியது ‘வாய்மை’யைத் தான்.

“யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

     வாய்மையின் நல்ல பிற”       (300)

இக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் திருவள்ளுவர் திருக்குறளாய் வாழ்ந்து, பின்னர் திருக்குறளைப் படைத்துள்ளார் என்று உணரலாம். உள்ளத்தின் தூய்மை உண்மை, சொல்லின் தூய்மை வாய்மை, செயலின் தூய்மை மெய்ம்மை என்பர், ஆகவே எண்ணம், சொல், செயல் இவைகளில் முழு நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர் திருவள்ளுவர்.

அதனால்தான் அவரால்,

“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

     சொல் வேறுபட்டார் தொடர்பு” (819)

என்று பாட முடிந்தது. திருவள்ளுவருக்கு இவர்கள் கனவில் கூட கொடியவர்களாகக் காட்சியளிக்கின்றனர், கனவும் கொடியதாகின்றது.

திருவள்ளுவரின் திருக்குறள் அறவுரைகளைப் புகழ்ந்து போற்றிப் பாராட்டி விட்டு அவர் வாக்குப்படி வாழாவிட்டால் நமக்கும் பெருமையில்லை, நாம் போற்றும் வள்ளுவருக்கும் பெருமை சேர்க்க மாட்டோம்.

“புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

     இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்”      (538)

திருக்குறளை உணர்ந்து படிப்பதும், கொத்தாக மலர்ந்து மணம் வீசும் மலர்கள் போல் அறிவு மணம் பரப்பப் பேசுவதும் வாழ்ந்து காட்டி வளம் பெறவேயாகும். அவ்வாறு முயலாதவர்கள் பேதையர்களில் எல்லாம் கடையான பேதையர்கள் தான். கற்றபடி, பேசியபடி வாழாதவன் போல அறிவில்லாதன் இல்லை.

“ஓதி உணர்ந்தும், பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்

     பேதையின் பேதையார் இல்”         (834)

இவ்வுலகில் சிக்கல்களும் துன்பங்களும் மிகுந்துள்ளன. இன்னா உலகில் இனிமை காணப் பழகிக் கொள்ள வேண்டும். உலகம் அன்பு தழுவிய வாழ்க்கையால் துன்பம் தவிர்த்து இன்புற வேண்டும். துன்பங்கள், துயரங்கள், எதிர்பாராத ஆபத்துக்கள், சுனாமி போன்ற அதிர்ச்சி தந்த இயற்கைப் பேரழிவுகள் நிகழும் போது, அன்பும் கருணையுமே அருமருந்தாகின்றன. சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவால், இப்பெருங்கேட்டிலும் ஒரு நன்மை ஏற்பட்டது.

“கேட்டினும் உண்டுஓர் உறுதி” (796)

மக்கள் மனித நேயங் கொண்டு சாதி, சமயங்களால் வேறுபடாது ஒற்றுமை கொண்டு அறப்பணி, அருந்தொண்டு ஆற்றினார்கள். இயற்கைப் பேரழிவு மக்களின் அன்பையும் கருணையையும் பொங்கச் செய்தது.

“அறிவினான் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய்

     தம்நோய் போல் போற்றாக்கடை?”    (315)

என அன்பும் கருணையும் கொண்டவர் துன்புற்றவரின் துயர் கண்டவுடன் மனமுருகி, துயருற்றவர்களின் இன்னல் களைத் தமக்கு ஏற்பட்டனவாகக் கருதித் துன்பங்களைத் தம் தலைமேல் சுமந்து அரும்பணியாற்றினர். அறிவினால் ஆகுவது உண்டு என்பது மெய்ப்பிக்கப்பட்டது.

பிறரின் துன்பம் கண்டவுடனே, அன்புடையவர்களின் கண்களில் உடனே கண்ணீர் பெருகுகின்றது. கருணையுடை யோரின் அன்பை மறைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ?

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

     புன்கண்நீர் பூசல் தரும்”             (71)

நம் ‘உலகத் திருக்குறள் பேரவை’ மூலம் அறம் பொருள்  இன்பம் எனும் முப்பால் நெறிகளை அறங்களைச் செவ்வனே எடுத்துத் தொகுத்து உலகிற்கு வழங்குவோம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

“பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்”          (972)

என்ற உயர்நெறிகளைக் கொண்ட அன்புலகை, ஒப்பற்ற அருள் உலகை அறிவொளியால் மிளிரச் செய்வோம்.

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

 பெருமை முயற்சி தரும்”           (611)

 

உலகத் தமிழ்ச் செம்மொழி

Image result for thiruvalluvar

 

மாநாடும் திருக்குறளும்

“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே -& அதைத்

     தொழுது படித்திடடி பாப்பா!”

என்பார் பாரதியார்.

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

     பரவும் வகை செய்தல் வேண்டும்”

என்பதும் மகாகவியின் விருப்பம்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய நம் தாய்மொழியாம் தமிழ், பழமையும், இலக்கிய வளமும், இலக்கணச் செறிவும் கொண்டு சிறந்தோங்கி நிற்பது. நம் தமிழ், செம்மொழித் தகுதி பெற்றமையினை உலகமெல்லாம் பறைசாற்றும் வண்ணம் முத்தமிழ் அறிஞர் மாண்புமிகு கலைஞர் அவர்கள், தமிழுக்கும், தமிழர்க்கும் உலக அரங்கில் மேன்மேலும் உயர்வு கிடைத்திட வேண்டும் என்ற உயரிய எண்ணங்கொண்டு கோவை மாநகரில் கூடிடும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி வாகை சூடிட அல்லும் பகலும் சிந்தித்துச் செயலாற்றி வருகிறார்.

“நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்

     பண்புபா ராட்டும் உலகு”      (994)

என்ற நெறியின் படி உலகத் திருக்குறள் பேரவை சார்பாக முத்தமிழ் அறிஞர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக மக்களுக்குத் தமிழகத்தை அடையாளம் காட்டியது திருக்குறள்! தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் முகமாகவும், முகவரியாகவும் அமைந்து முழுமை தந்தது திருக்குறள்!

பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் தனி ஒரு மனிதனுக்கோ, ஒரு நாட்டிற்கோ சொந்தமானதல்ல. எல்லா நாட்டினர்க்கும், எல்லாச் சமுதாயத்திற்கும், எல்லா மொழியினர்க்கும் பொருந்தும் வகையில் காலத்தை வென்று நிற்கும் நூல் அது.

‘உலகச் சிந்தனையாளர்களில் தலைசிறந்தவர்’ திருவள்ளுவர் என திரு.ஆல்பர்ட் சுவைட்சர் எனும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் பாராட்டுகிறார்.

‘உலகப் பெருங்கவிஞர் திருவள்ளுவர்’ என்று கிறித்தவத் தமிழறிஞர் திரு.ஜி.யு.போப் அவர்கள் திருவள்ளுவரைப் பெருமைப் படுத்தியுள்ளார். இத்தகைய பெருமை மிகு திருக்குறளுக்கு இதுவரை 250-க்கு மேல் உரை நூல்கள் வந்துள்ளன.

உலக மொழிகளில் கிறித்தவர்களின் புனித நூலான பைபிளுக்கு அடுத்து, திருக்குறள் 70 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது போன்று பல நிலைகளில் உயர்ந்து நிற்கும் திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அமையும்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்ற புகழினை இம்மாநாடு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எழுகிறது. அதற்குக் கட்டியம் கூறும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் அடையாளச் சின்னமாகத் திருவள்ளுவரின் உருவமும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் அமுத வரிகளும் ஒளிர்வதைக் காண முடிகிறது. இத்திருக்குறள் சொற்றொடரைத் தேர்ந்தெடுத்தமைக்கான விளக்கத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் 10.01.2010ஆம் நாளன்று நடைபெற்ற தமிழ்ச் சங்கமம் தொடக்க விழாவில் தம் உள்ளக்கிடக்கையை வெளியிட்டுள்ளார்.

“‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தந்தை பெரியார் உருவாக்கிய யுகப்புரட்சியை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்மொழி, தமிழர் என்ற உணர்வை எடுத்துக் காட்டும் வகையில் மாநாடு அமைய வேண்டும். நாம் பிரிந்து கிடக்கக் கூடாது. ஒற்றுமையாக வாழ வேண்டும். நம் தமிழ்மொழியால் ஒன்று சேர வேண்டும். நம் தமிழைக் காப்பாற்ற வேண்டும்” என்பது கலைஞர் அவர்களின் விளக்கம்.

“ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

     ஏங்கொலி ஞாலத்து இருள்அகற்றும் & ஆங்கவற்றுள்

     மின்னோ தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது

     தன்னே ரிலாத தமிழ்.”

உயர்ந்த மலைகளிலே தோன்றுகின்ற எழுஞாயிறு புற இருளை நீக்குவது போல மனங்களின் அறியாமை இருளை அகற்றுவது உயர்தனிச்செம்மொழியாம் தமிழ் மொழி சிறந்தொளிரப் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் திருவள்ளுவரின் அமுத மொழியினைக் கொள்கை முழக்கமாகக் கொண்டு நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பொற்குடத்திற்குப் பொட்டு வைப்பது போல் இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகளின் தொடர்ச்சியாகத் திருக்குறளுக்குச் செய்ய வேண்டிய இன்னும் சில சிறப்புக்களைக் குறித்து உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச் செயலாளர் என்ற முறையில் (வானொலி நேயர்களுடன்) என் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிகழவிருக்கும் இத்தருணத்தில் அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோரது தலைமையில் அமைந்த தமிழக அரசு திருக்குறளுக்குச் செய்துள்ள சிறப்புக்களை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னின்று நடத்திய உலகத் தமிழ் மாநாடு சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் திருக்குறளின் பெயரால் இருக்கைகள் (சிலீணீவீக்ஷீs) ஏற்படுவதற்கு வழிவகுத்துத் தந்தது; பேருந்துகளில் திருக்குறள்களை எழுதி வைத்துத் திருவள்ளுவம் பரவ வழி வகை செய்தது. முத்தமிழ் அறிஞர் முதல்வர் அவர்கள் ‘குறளோவியம்’ தீட்டி திருக்குறளுக்குப் பகுத்தறிவின் வழி நின்று புத்துரை வழங்கியுள்ளார். மேலும் சிறப்பு மிக்க ‘வள்ளுவர் கோட்டம்’ நிறுவியும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் வானளாவிய சிலை எழுப்பியும் திருக்குறளுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இது திருவள்ளுவருக்கு உலகப் புகழ் ஏற்படுத்தியது.

முத்தமிழ் அறிஞர், முதல்வர், டாக்டர் கலைஞர் பெங்களூரில் பல்லாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து ஒற்றுமைக்கு வழிகாட்டினார்.

மாணவர்களுக்குத் திருக்குறளினை முற்றோதல் செய்யும் பயிற்சிக்குப் பொற்கிழி வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். இதுபோன்ற எண்ணற்ற செயல்பாடுகள் நிகழ்ந்திருந்தாலும், வள்ளுவம் வாழ்வியல் நெறியாக அனைவரும் கடைப்பிடித்திட, வள்ளுவம் வான்புகழ் கொண்டு சிறந்திட, சில கருத்துக்களைச் சொல்லிட விரும்புகிறேன்.

திருக்குறளினைத் தேசிய நூலாக்க வேண்டும் என்று மறைந்த மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அவர் வழியில் உலகத் திருக்குறள் பேரவையும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நிகழ விருக்கும் பிரம்மாண்டமான, பயன்மிக்க உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் திருக்குறள் ‘பாரத மணித்  திருநாட்டின் தேசிய நூல்’ ஆக்குவதற்கு உரிய முயற்சி வெற்றி பெறுமானால் உலகெங்கிலும் உள்ள கோடானு கோடித் தமிழர்களின் நெஞ்சங்களிலே இன்பத் தேன் பாய்ச்சுவதாக அமையும்.

நடுவண் அரசின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்படுமானால் பெருமகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.

“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

     செய்தற்கு அரிய செயல்”            (489)

இந்தியத் திருநாட்டின்கண் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள முதன்மையான பல்கலைக்கழகங் களிலே திருவள்ளுவரின் பெயரால் இருக்கைகள் (சிலீணீவீக்ஷீs) நிறுவுவதற்குத் தமிழக அரசு மைய அரசிடம் வேண்டுகோள் விடுக்கும் செயற்பாட்டுக் களமாக இம்மாநாடு அமைவது சிறப்பைத் தரும்.

திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயமும், அஞ்சல் தலையும் வெளியிடுவதற்கான முறைப்படியான கோரிக்கையை மாநாட்டின் மூலம் முன் வைக்கலாம்.

திருக்குறளுக்குப் பழங்காலத்தில் பரிமேலழகர், மணக்குடவர் உள்ளிட்ட பதின்மர் உரை எழுதியுள்ளார்கள். இம்முயற்சி இந்நூற்றாண்டு வரை தொடர்ந்து வருகிறது.

தெளிவுரை, மரபுரை, புத்துரை, நயவுரை, மெய்யுரை என்று நூற்றுக்கணக்கான உரை நூல்கள் திருக்குறளுக்கு அண்மைக் காலம் வரை வந்த வண்ணம் உள்ளன. திருக்குறள் குறித்து இதுநாள் வரை வந்துள்ள அனைத்து உரைகளும் ஓரிடத்தில் தொகுத்து வைக்கப்பட்டால் அது பலருக்கும் பயனாய் அமையும்.

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் வந்த போது பெரும் எதிர்ப்பார்ப்பைத் தந்து, பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அது போல் திருக்குறள் இன்றைய கணினி யுகத்திற்கு ஏற்ற வகையில் ஓவியங்களாக, குறும்படங்களாக, குறுந்தட்டுகளாக, திரைப்படங்களாக, இயலாக, இசை வடிவமாக, நாடகமாக வெளிவருவதற்குத் தமிழக அரசின் செய்தி ஒளிபரப்புத் துறையின் மூலம் ஆவன செய்யலாம்.

மகாத்மா காந்தி அவர்களுக்கு அமைந்துள்ள அருங் காட்சியகம் போல திருவள்ளுவருக்கு ஓர் அருங்காட்சி யகத்தினை நிறுவி திருக்குறள் தொடர்பான அனைத்துச் செய்திகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு செய்வதிலும், வல்லுநர் குழு ஒன்றினைத் தமிழக அரசு நியமனம் செய்யலாம்.

உலகத் திருக்குறள் பேரவை போன்று திருக்குறள் பெயரால் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகளாவிய நிலையிலும் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கிய அமைப்புகளை ஒன்றுபடுத்தி அவ்வமைப்புகள் இதுவரை செய்துள்ள பணிகளை ஆவணப்படுத்துதல் மூலம் குறள்நெறி உலகளாவிய வளர்ச்சி பெற வழி வகை செய்யலாம்.

ஆண்டுதோறும் தமிழக அரசு சான்றோர் ஒருவர்க்கு நல்கி வரும் திருவள்ளுவர் விருதினை சற்றே விரிவுபடுத்தி திருக்குறள் பணியில் சிறந்து விளங்கும் சான்றோர், மகளிர், இளைஞர் மற்றும் இலக்கிய அமைப்பினர் என அனைவரும் பயன்பெறும் வண்ணம் பல விருதுகளை வழங்குமாறு மாநாட்டின் மூலம் பரிந்துரை செய்யலாம்.

ஆண்டுதோறும் தமிழக அரசே 365 திருக்குறள் சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்ட திருவள்ளுவர் நாட்காட்டியினை வெளியிடுமாறு மாநாட்டின் மூலம் அரசுக்குப் பரிந்துரை செய்யலாம்.

‘அறம் பொருள் இன்பம்’ உரைக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகமெங்கும் பரப்பக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாக இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அமைந்துள்ளது.

“பெருமை உடையார் ஆற்றுவார் ஆற்றின்

     அருமை உடைய செயல்”      (975)

என்ற குறள் நெறிக்கு ஏற்ப இம்மாநாடு திருக்குறள் நெறி உலகெங்கும் பரவிட வழிவகுக்கும் என்பதை உறுதியோடு நம்புகிறோம்.

தமிழின் செழுமையும், வளமையும், இளமையும், இனிமையும், புதுமையும், உண்மையும் மிக்க திருக்குறள் நெறியினை வாழ்வியல் சிந்தனைகளாக நடைமுறைப் படுத்திட இம்மாநாடு தொடர்ந்து அரிய பல திட்டங்களை வகுத்துச் செயல்படும் என நம்புகிறோம்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

     திண்ணியர் ஆகப் பெறின்.”          (666)

என்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2

Image result for thirukkural“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

     உணர விரித்துஉரையா தார்”               (650)

படித்ததை சிரமப்பட்டு விளக்கிச் சொல்லி அதைப் பரப்புவதும் சிரமமானது. கொத்தாக மலர் மலர்ந்திருக்கிறது. அந்த மலர்கள் மணம் வீசாத காகிதப் பூக்களாக இருந்தால் பயனில்லை இவைகளையெல்லாம் தெரிந்தும், பிறர்க்கு உணர்த்தியும், சிரமப்பட்டு தாம் படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழாமல் போய்விட்டால் அவன் பேதையிலும் பேதை என்கிறார் வள்ளுவர். ஆகவே திருக்குறளைப் படிக்கின்ற நோக்கமே அதை வாழ்வியல் நூலாக, வருகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருப்பதுதான் என்பதைக் கண்டேன்.

சான்றாக சில உதாரணங்களைக் கூறுவேன். திருக்குறள் எப்படி எல்லாம் என் வாழ்க்கையில் பயன்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு மனிதன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். எனது திருமணம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

ஒரு குடும்பம் வெற்றி பெற வேண்டும் எனச் சொன்னால், நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல நண்பர்கள், நல்ல சான்றோர்கள், நல்ல எண்ணம் இவையெல்லாம் அமைந்திருந்தால் தான் அந்த குடும்பமும் அவனும் சிறப்பாக இருக்க முடியும்.

“இல்லதென் இல்லவள் மாண்பானால்?”     (53)

என்ற வகையிலே எனது துணைவியார் அமைந்திருந்தார். எனது வாழ்க்கையின் அனுபவத்தைச் சொல்வதானால் அடக்கமாகச் சொல்கிறேன். குழந்தைகளெல்லாம் அன்பு மிகுந்தவர்களாக இருந்தார்கள். மாலையில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஆதித்தனார் ஒரு சிறந்த செய்தி சொன்னார்; ஆண்குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள் என்றார். அந்த அன்பைப் படித்திருக்கிறோம். திருக்குறளில் படித்ததை வாழ்வில் அனுபவிக்கும் பொழுதுதான் அதன் பெருமையை உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் அப்பல்லோ மருத்துவமனையில் நலிவுற்று இருந்த பொழுது பிள்ளைகளும் துணையாக இருந்தார்கள். நான் ஒரு சிறு அசைவு அசைந்தாலும் உதவிக்கு வந்து விடுவார்கள். பத்து நாட்கள் அவர்கள் இருந்து உதவிகள் செய்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. கடைசியில் தான் தெரிந்தது. அவர்கள் தூங்கவே இல்லை என்பது, அந்த அன்பினது பெருக்கை அப்பொழுது தான் உணர்ந்தேன் என்னை அறியாமலே கண்களில் நீர் வடிந்தது.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

     புன்கண்நீர் பூசல் தரும்”        (71)

துன்பம் வந்த சமயத்திலேதான் என் குடும்பத்தினர் உறுதுணையாகவும், நெகிழ்ந்தும் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். துன்பம் வரும் பொழுது நெருக்கமான வர்கள் அன்பு காட்டும் சமயத்தில்தான் அன்பின் உண்மைப் பொருளை, அன்பின் உயிர்ப்பை நன்றாக உணரமுடிகிறது.

இதுபோன்று பிரச்சினைகள் வருவது இயற்கை எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரி மிகப்பெரிய அரசனாக இருந்தாலும் சரி, பெரிய செல்வந்தனாக இருந்தாலும் சரி. துன்பங்கள் வரும். இன்பம் போல துன்பமும் இயற்கையானது. அந்தத் துன்பத்தை வெல்லுவதற்கு வழி சொல்கிறார் வள்ளுவர்.

“இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்

     கையாறாக் கொள்ளாதாம் மேல்.”     (627)

எவ்வாறு இன்பம் இயற்கையானதோ அவ்வாறு துன்பமும் இயற்கையானது. இன்பமும், துன்பமும் இரவு பகல் போல வரும். வாழ்க்கையிலே துன்பத்தைக் கண்டு அஞ்சாதே என்ற தைரியத்தைக் கொடுக்கிறார், அந்தத் துன்பத்தை வெல்லுவதற்கு வழி சொல்கிறார் வள்ளுவர்.

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

இன்னாமையையே இனிமையாக்கிக் கொண்டால், அதையே சுவையாக்கிக் கொண்டால் துன்பம் உங்களை விட்டு ஓடிவிடும். உயர்வுக்கு அடிப்படையாவது நல்ல பேச்சும், நல்ல எண்ணமும், நல்ல சொல்லும்தான் அத்தகைய தூய உள்ளம் இருந்தால் மிகப்பெரிய ஆற்றல் கிடைக்கும் அந்த ஆற்றலைக் கொண்டு எல்லாத் துன்பங்களையும் வென்றுவிடலாம்.

“வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்

 உள்ளத்தின் உள்ளக் கெடும்”   (622)

உள்ளத்தால் நினைத்தாலே துன்பங்கள் ஓடிவிடும் என்று சொல்கிறார் வள்ளுவர். அப்படியானால் இந்த வாழ்க்கையில் வெற்றியடைய வள்ளுவர் என்ன சொல்கிறார்?

நம்மைக் காட்டிலும் ஒரு பேராற்றல் இருக்கிறது அது நமக்கு வழிகாட்டுகிறது என்பதை உணர்ந்தேன் முதலில் நான் இறைமறுப்புக் கொள்கையைத்தான் பேசிக் கொண்டிருந்தேன்; அனுபவமின்மையால் அறிவுப் பூர்வமாக ஒரு தருக்கம் என்ற முறையில் நான் பேசிக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் துன்பங்களும் சோதனைகளும் வரும் சமயத்திலேதான் நன்றாகக் கண்டு கொண்டேன். நம்மைக் காட்டிலும் மிகப்பெரிய ஓர் அற்புதமான சக்தி நம்மை வழி நடத்துகிறது. என்பதை உணர்ந்தேன். துன்பத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் நீங்க வேண்டும் என்று சொன்னால், ஒரு பெரிய சக்தியை, பரம்பொருளை அது எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். அதைத் தான் திருவள்ளுவர் சொல்கிறார்.

‘நீ உவமை உள்ளவன், சிற்றறிவு உள்ளவன். இறைவன் பேரறிவாளன், நீ பேரறிவாளனாகிய இறைவன்தாளைப் பற்றிக் கொண்டால்தான் அந்தத் துன்பத்திலிருந்து நீங்க முடியும்.’

“தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

 மனக்கவலை மாற்றல் அரிது”        (7)

இடும்பைக்கு இடும்பை படுத்த வேண்டும் என்று சொன்னால் இறைவன் தாளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

 யாண்டும் இடும்பை இல”          (4)

‘விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் தாளைப் பிடித்தால் தான் உனது துன்பத்தை நீக்க முடியும்’ என்று வள்ளுவர் சொல்கிறார்.

ஆகவே இறைவன் எங்கு இருக்கிறான்? வேறு எங்கும் இல்லை. நம் உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனைக் கண்டுபிடித்து அவன் தாளினைச் சரணடைந்தால்தான் வெற்றிபெற முடியும் என்று சொல்கிறார் வள்ளுவர்.

திருவாசகத்தில் மனம் உருகும்படி மாணிக்கவாசகர் சொல்கிறார்:

யான்உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

     எங்குஎழுந்து அருளுவது இனியே?”

தெய்வத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டோம் என்று சொன்னால் உள்ளொளியைப் பெருக்கலாம், உலப்பிலா ஆனந்தம் பெறலாம்.

இறைவன் பிரபஞ்சத்தில் உள்ள ‘மேக்ரோ’. அதை ‘மைக்ரோ’வாக உள்ளத்தில் பிடித்துக் கொண்டோமானால் அவன் நமக்கு அருள்புரிவான்.

குடும்பமும் தெய்வமும் ஒன்றுதான். தெய்வத்தைப் போற்றினோமானால் குடும்பம் வெற்றி பெறும். குடும்பம் வெற்றி பெற்றதானால் நாம் வெற்றி பெற்றவர் ஆவோம்.

அன்புநெறியைப் பார்க்கிற சமயத்திலே,

“அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

     இன்புற்றார் எய்தும் சிறப்பு”         (75)

என்பதனை என் வாழ்வில் நேரிடையாகக் கண்டேன். என்னுடைய பிள்ளைகளையும் குடும்பத்திலே அன்பு கொண்டிருக்கிற தாய் தந்தையரையும் பார்க்கின்ற சமயத்திலே, அவர்கள் காட்டும் அன்பைப் பார்க்கின்ற சமயத்திலே திருவாசகம்தான் நினைவுக்கு வருகிறது.

நாம் தெய்வத்தை வணங்குகின்ற சமயத்திலும் குடும்பத்தைப் போற்றுகின்ற சமயத்திலும் ஒரு சதுரப்பாடு உடையவர்கள் ஆகிறோம் என்பதைத் திருவாசகமும் காட்டுகிறது; திருவள்ளுவரும் காட்டுகிறார்.

இலக்கியங்களைப் படிக்கும் போது அதனைச் சுவைக்கு மட்டும் படிக்கவில்லை என்பதை நேரிடையாகக் கண்டு உணர்ந்தேன்.

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

     மழலைச்சொல் கேளா தவர்”         (66)

என்பதையும்,

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

     சிறுகை அளாவிய கூழ்”        (64)

என்பதையும் திருமணமான பிறகு நன்கு உணர்ந்து கொண்டேன். நம்முடைய குழந்தைகள், பேரக் குழந்தைகள் வந்தபோது அவர்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று சொன்னாலே அது அமிழ்தினும் பெரிதாக இருப்பதை உணர்ந்தேன் அதை எல்லாம் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருப்பீர்கள். கல்கண்டு இனிப்பு அது இனிக்கும் என்பது தெரியும் எப்படி இனிக்கும் என்பது சாப்பிட்டு அனுபவித்தால் தான் தெரியும். திருக்குறளில் வள்ளுவர் நெகிழும்படி சொன்னவைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன்.

நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம் கணினி யுகத்தில் வாழ்கிறோம். ‘இண்டர்நெட்’ உலகத்தில் வாழ்கிறோம். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இப்போது இருக்கும் ‘கம்யுனிகேசன்’, இப்போது பேசப்படுகின்ற ‘ஃபியூச்சாரலஜி’, ‘டெலிகாம் பவர்’ எல்லாம் இருந்ததா? நிறைய நேரம் மட்டும் கிடைத்தது.

திருவள்ளுவர் தொழில் செய்யக்கூடிய உத்திகளை யெல்லாம் சொல்லித் தருகிறார். ‘மேனேஜ்மென்ட் கான்சப்ட்’ என்று சொல்லக் கூடியவைகளை எல்லாம் சொல்கிறார். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் உலகநாடுகளெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அருமையான உண்மையைச் சொன்னார். அவர் திருக்குறளின் மீது அதிகமான ஈடுபாடு கொண்டவர். “என் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்தது குர்ஆனும் திருக்குறளும் தான். என்னை உயர்த்தியதும் இவைகள் தான்” என்று கூறிவிட்டு, அதற்கான காரணங் களையும் சொல்லி இருக்கிறார்.

ஒரு நாடு சிறப்பாக இருப்பதற்கு அடிப்படையான உண்மைகள் ஐந்து வேண்டும் என்று கூறினார் வள்ளுவர்.

“பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

     அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து”         (738)

இது உலக நாடுகளில் எல்லாம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது ஒரு மனிதனுக்கும் பொருந்தும், ஒரு நாட்டுக்கும் பொருந்தும். ஒரு மனிதனை வாழ்த்தும்போது, ஆகியன வாய்க்க வேண்டும் என்பார்கள். உடல் பிணியும் உள்ளப் பிணியும் இல்லாமல் இருக்க வேண்டும். சொத்து இருக்க வேண்டும். சொத்திருந்தால் மட்டும் போதாது அதற்கு லாபம் இருக்க வேண்டும். பிரொடக்டிவிட்டி இருக்க வேண்டும். பொது மகிழ்ச்சி (சோசியல் ஹேப்பினஸ்) இருக்க வேண்டும். அக மகிழ்ச்சி இருக்க வேண்டும். மக்களுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும் நாட்டுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். இது நாட்டுக்கும் பொருந்தும். ஒரு தனி மனிதனுக்கும் பொருந்தும். இந்த அருமையான குறளை அப்துல் கலாம் மேற்கோள் காட்டிப் பேசினார். இன்று ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ என்று சொல்கிறோம். ‘செலக்சன் ஆஃப் பர்சன்’, ‘ஃபியூச்சரலாஜி’ என்று சொல்லுகிறோம். இவைகளையெல்லாம் திருவள்ளுவர் சொல்லுகிறார் என்பதைப் பார்க்கிற சமயத்திலே நான் அதிசயித்துப் போனேன்.

ஒரு தொழில் நடத்துவது எப்படி? எவ்வாறு திட்டமிடுவது? எவ்வாறு நபர்களைத் தேர்ந்தெடுப்பது? மிகச்சிறப்பாக வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ என்பது அமெரிக்காவில் உள்ள திட்டம். அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். மிகப்பெரிய புரஃபொசனலிஸ்ட்-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும் அந்த புரஃபொசனலிஸ்ட்டிடம் முழுமையாகப் பொறுப்பை ஒப்படைத்து விடவேண்டும். அப்போதுதான் அந்த தொழில் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். இதனைத் திருவள்ளுவர் அப்பொழுதே சொல்லியிருக்கிறார். பொதுவாக ஙி.ஙி.கி., வி.ஙி.கி., படிக்கிற பொழுது 5 றிs சொல்லுவார்கள்: பாலிஸி, பிளானிங், பெர்சனல் புரகிராம், ப்ரொசீஜர்ஸ், ஃபெர்பார்மன்ஸ்.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

     அதனை அவன்கண் விடல்”          (517)

என்னும் வள்ளுவம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

ஒரு காரியத்தை முடிப்பதற்கு ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ ஒருவனைத் தேர்ந்தெடுத்தபிறகு அதனை அவனிடம் விட்டுவிடு என்கிறார். சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் முன்னரே அவரை நம்பிவிடாதே என்கிறார்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

     தீரா இடும்பை தரும்”               (510)

“தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின்

     தேறுக தேறும் பொருள்”       (509)

ஒருவரை ஆராய்ந்து எடுத்தபிறகு அவரைக் கண்காணிக்க வேண்டுமே தவிர தலையிடக்கூடாது. ஒருசெடி வளரும் போது அதனைத் தோண்டி வேர் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பார்ப்பது போல் ஆகிவிடும்.

“வினைக்குஉரிமை நாடியபின்றை அவனை

     அதற்குஉரிய னாகச் செயல்”         (518)

முருகனுக்குப் புதியதொரு படைவீடு

முருகனுக்குப் புதியதொரு படைவீடு

Image result for London

கனடா நாட்டில் நான்கு நாள் பயணத்தோடு இலண்டன் வந்த எங்களைப் பத்து நாட்களாவது தங்கவைத்து விருந்து உபசாரம் செய்ய விழைந்த அன்பர்கள் விமான நிலையத்திற்கே வந்துவிட்டனர்.

இலண்டனில் அந்தப் பத்து நாட்களும் மூன்று முக்கிய நிறுவனத் தொடர்பைத் தந்தன. உலகப் புகழ் பெற்ற ஒய்.எம்.சி.ஏ. விடுதி, பி.பி.சி தமிழோசை, லண்டன் முருகன் திருக்கோவில்…

உலகில் மிகப்பிரபலமான மிகப்பெரிய நகரங்களில் ஒன்று லண்டன்; மிகமிக அழகிய நகரமும் அதுதான் என்றாலும், தேம்ஸ் நதி தீரத்தில் வீற்றிருக்கும் அந்த நகரின் அழகை விட, ஆங்கில அரசியல் நாகரிகப் பண்புகள், இலக்கியச் சிறப்புகள் ஆகியனவே என் நினைவில் நின்றன. அங்கில மொழிக்குச் செழுமை சேர்த்த சேக்ஸ்பியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், பைரன், கீட்ஸ், ஷெல்லி, டென்னிசன், டிக்கன்ஸ், பெர்னாட் ஷா, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரை மறக்க முடியுமா? நம்நாட்டுப் பள்ளிக்கூடப் பாட நூல்களை எல்லாம் நெடிது காலம் ஆட்சி செய்தவர்கள் அல்லவா இவர்கள்! அவர்களை ஆட்சி செய்ய வைத்த ஆங்கில மொழியின் இயல்பும், ஆட்சியால் அம்மொழியை உலகறியச் செய்த ஆங்கிலேயரின் இடைக்கால வெற்றி வரலாறும் நினைக்கத்தக்கவை. நம்மவர்களும் உலகத் தலைமைக்கு அடி எடுத்து வைத்த அந்த ஆதி நாட்களில் அப்படி முயன்றிருந்தால் – திருக்குறளும் அப்போதே உலக இலக்கியமாகி இருக்கும் என்பதும் கருதத்தக்கது.

உலகளாவிய தொண்டு நிறுவனமான ஒய்.எம்.சி.ஏ.- இல் சகோதரர் முத்தையா அன்பான வரவேற்பளித்தார். மதுரை மத்திய ஒய்.எம்.சி.ஏ-இன் பொதுச் செயலராக அவரும் அதன் செயற்குழு இயக்குநர்களில் ஒருவனாக நானும் பங்கேற்றிருந்த ஆண்டுகள், லண்டனில் இந்த உறவுப் பிணிப்பை ஏற்படுத்தித் தந்தன…..

உறவுப் பிணிப்பிற்கே உரிய பெரியவர், லண்டன் மெய்யப்பச் செட்டியார்! நம் செட்டிநாட்டுக் கோட்டையூர்  ஜவகர் ஆலை நிறுவனரான இப்பெருந்தகை – கலைத் தந்தை கருமுத்து தியாகராசர் குடும்பத்துச் சம்பந்தி முறையினர். எனினும் ‘லண்டன் மெய்யப்பர்’ என்பதே அவரது பிரபல விலாசமாகிவிட்டது!

அவர் ஆற்றி வரும் அரும் பணிகளில் முதன்மையானது- முருகப் பெருமானுக்கு லண்டனில் ஆலயம் அமைத்து, முருகனின் புதியதொரு படைவீடு போல அதைப் பேணி வருவது!

லண்டனில் வேறு சில இந்து சமய வழிபாட்டு இடங்களும் உள்ளன. ஸ்ரீ மகாலெட்சுமி கோவில், சிவன் கோவில் எனும் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. இவ்விரண்டை விட முருகன் கோவிலே பிரசித்தி பெற்று விளங்குகிறது.

1974-இல் ஹாரிங்டன் ஸ்குயர் எனுமிடத்தில் திருமெய்யப்பர் தொடங்கிய ஆலயத்திருப்பணி திரு.அழகர் ராஜாவால் ஆக்கம் பெற்று அற்புத ஆலயமாக எழுந்துள்ளது. புறத்தே எளிமையாகத் தோன்றினாலும் உள்ளே கலையம்சங்களும் தூய்மையும் ஆட்சி செய்கின்றன.

வள்ளி – தெய்வானை சமேதராக கந்தன் கருணை புரிகிறார். நம் நாட்டு முருகன் திருத்தலங்களில் நடக்கும் அத்தனை விழாக்களும் அங்கே நடக்கின்றன. சித்திரா பவுர்ணமியில் சுவாமி புறப்பாடு, வைகாசி விசாகப் பாலாபிசேகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை பத்து நாள் விழா, லண்டன் மக்களைக் கவரும் தேரோட்டம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஆங்கில வருடப் பிறப்பன்று (பால்குடம் உட்பட) பங்குனிப் பெருவிழா – என ஆண்டு முழுவதும் அங்கே முருகன் திருக்கோல வைபவம்தான் எனக் கேட்டறிந்து மகிழ்ந்தேன்.

இந்த ஆலயத்தில் – சுப்பிரமணியனான நான்! – (என் இயற்பெயர் அதுதான்!) ‘முருக வழிபாட்டுத் தொன்மை’ பற்றிப் பேசவேண்டும் என ஏற்பாடு செய்துவிட்டார் லண்டன் மெய்யப்பர்….

‘தமிழ்க் கடவுள்’ முருகனைப் பற்றிப் பேச, வந்த இடத்தில் திடீரென அழைக்கப்பட்டிருந்தேன். எனினும் சங்க காலந்தொட்டு முருகன் புகழ் பேசும் இலக்கிய நினைவுகள் கைகொடுக்கும் என நம்பியிருந்தேன்.

அகத்திய மாமுனிக்குத் தமிழைத் தந்த முருகன், ஔவைப் பிராட்டிக்கு ஞானம் புகட்டிய குமரன், குமர குருபரர் காசியில் தமிழ்ச் செல்வம் பரப்பிட அருளிய செந்தூரான், கிருபானந்த வாரியாரை – ‘திருமுருக’ எனும் முன்னிலைப் பெயரேற்று ஆன்ம நலம் பரப்ப அனுப்பிய குன்றுதோறும் கோலம் கொண்ட கடவுள்… காலம்தோறும் அன்பர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான் அன்றோ! அப்படியொரு பரவசநிலை அன்று என்னுள் பரவியது!

முருகனை வழிபட்டபின் முருக வழிபாடு பற்றியே உரையும் விரிந்தது. வாழ்வில் மனித நேயமும் தெய்வநலமும் கைகூடி நின்றிட, மனம் மொழி செயல்களை அர்ப்பணிப்பதே வழிபாடு செய்வதன் நோக்கம். ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே’ என வேண்டியிருந்தாலும் மனிதப் பிறவியின் இலட்சியம் மாசுபோல் அடர்ந்திடும் துன்ப நீக்கமே ஆகும். துன்பத்தை நீக்கும் எளிய இனிய வழி, இறைவனைச் சார்தலே என ஆன்றோர் அறிவுறுத்தினர்.

“தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

     மனக்கவலை மாற்றல் அரிது”   (7)

என வள்ளுவர் மனக்கவலைக்கு மருந்து சொன்னார்.

‘மனத்துக்கண் மாசிலன் ஆதலே’ அவர் கூறும் அனைத்து அறம். மனத்தில் அழுக்காறு, காமம், வெகுளி முதலிய ஆகாப் பற்றுக்களை, புற்றுகளாக வளர்த்துக் கொண்டு விட்டால், அந்த ஆகாப் பற்றுக்கள் நாளடைவில் அழிவுப் பற்றுக்களாகப் படர்ந்து விடுகின்றன.

வள்ளுவர் ‘பற்று’ என்றார். ‘ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்’ எனப் பின்வந்தோர் உபதேசம் செய்திருக்க, வள்ளுவர் ‘பற்றுகளே இல்லாதிருப்பவனான ஒருவனிடத்தில் கொள்ளுகின்ற பற்றினை நெகிழவிடாது பற்றுக!’ என்றார்.

அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் துறக்க வேண்டியன உண்டு; ஏற்கவேண்டியன உண்டு. குப்பையை அகற்றிய பிறகே வீட்டை அழகுபடுத்த முற்படுதல் போல்… மனத்திலும் வாழ்க்கையிலும் சேர்ந்துள்ள குப்பை போலும் தீய பற்றுக்களை அகற்றிய பின்னரே நன்மையை நாடும் மனச்சால்பு வளரும். நமது அறுசமயத் தொன்மை நெறிகளுள் ஒன்றான கௌமாரம் – இப்பற்றுறுதி வகைகளையே நமக்கு அருளுகிறது. திருமுருகாற்றுப்படையில் “தாமரை புரையும் காமர்சேவடி” என்று நக்கீரர் பரவியதும், “முருகா முருகா தருவாய் நலமும் திருவும்” என்று பாரதி பாடியதும் குன்றுதோறும் ஆடும் குமரனுக்குக் காலந்தொறும் நிகழ்ந்த பூசனைகள்… லண்டன் மாநகரிலும் அப்பூசனைகள் நிகழ்வது குமரனின் இளமைப் பொதுமையைச் சுட்டுகிறது… நம்மையும் இளமைக் கோலம் பெறச் செய்கிறது.

உரைகேட்ட அன்பர்களின் ஒருமித்த பாராட்டைப் போல லண்டன் மெய்யப்பர் அளித்த விருந்தும் மெய்மறக்கச் செய்தது! அந்த விருந்தில் கலந்து கொண்ட பேரன்பர் சங்கரண்ணாவின் தமிழ்ப்பணி லண்டன் செல்லும் தமிழர்களோடு உலகத் தமிழர்களிடையிலும் புகழோசையாகப் பரவியது.

பிக்பென் கடிகாரக் கோபுரம், பக்கிங்காம் அரண்மனை, நம்பர் டென் டவுனிங் ஸ்ட்ரீட் (பிரதமர் இல்லம்), பாராளுமன்றக் கட்டிடம், பல்கலைக்கழகம், பெரிய பொது நூலகம் (இந்தியா ஹவுஸ் லைப்ரரி இதில் ஓர் அங்கம்), பொருட்காட்சி, வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம் இவை எல்லாம் லண்டனை நினைவூட்டும் புகழ்ச் சாசனங்கள் இவற்றோடு உலகெல்லாம் தொடர்பு கூட்டி நிற்பது பி.பி.சி.!

உலகச் செய்தித் தொடர்புக் கலையில் முன்னிடம் பெறும் பி.பி.சியின் தமிழோசைப் பிரிவில் சங்கரண்ணா பணியாற்றுகிறார்.

சங்கரண்ணா – பி.பி.சி. தமிழோசையில் – இலக்கியப் பேட்டிக்கு ஏற்பாடு செய்தார். பேட்டி – திருக்குறள் பணிகளைப் பற்றியே அமைந்தது. “திருக்குறளில் இத்துணை ஈடுபாடு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?…. மேடைகளில்  உரையாற்றும் பேராசிரியர்கள் தம் கருத்துக்கு ஆக்கமாகத் திருக்குறளை அவ்வப்போது மேற்கோளாக எடுத்தாண்டு  பேசுவது இயல்பு. ஆனால் சாதாரண உரையாடலிலேயே பேசும் விஷயத்திற்குப் பொருத்தமான குறட்பாக்களைச் சடுதியில் நினைத்துச் சொல்லும் ஆற்றல் உங்களுக்கு எப்படி வந்தது?” எனும் கேள்விகளுடன் பேட்டி தொடங்கியது.

“எனது திருக்குறள் ஈடுபாட்டு வளர்ச்சிக்கு உதவியவை இரண்டு; ஒன்று, நான் பெற்ற பேறு; மற்றொன்று எனக்கு அமைந்த வாய்ப்பு. என் தந்தை வழிப்பாட்டனார் – பெரியணர் ஒரு ஆசுகவி. மதுரைத் தமிழ்ச்சங்கப் பெரும் புலவர்களின் சாற்றுக்கவிகளைப் பெற்றவர். என் தந்தையார் நடராசரும் புலமைத்திறம் மிக்கவர். இறைமையில் இசைந்த இந்த இருபெரியோர்களின் மரபுவழிச் செல்வமாக வந்த தமிழ் உணர்வு எனக்கு அமைந்த ஞானப்பேறு. தமிழ் விழாக்களில் (அரங்கேறும் உரைகளை மனம் ஒன்றிக்கேட்பது இளமை முதல் எனக்கு அமைந்ததொரு வழக்கம் அவ்வாறு பேசுவோர் – இலக்கியமாயினும் சரி, சமூகவியல் காட்டியே பேசியது, இந்நூல் பற்றிய ஆர்வத்தை என்னுள் தூண்டியது. “திருக்குறளில் அப்படி என்னதான் உள்ளது?” எனத் துருவித் தேடும் நாட்டத்தை இவ்வாய்ப்புக்கள் ஏராளமாக எனக்கு வழங்கின. ஈடுபாட்டிற்கு உரிய காரணங்கள் இவையேதான்.

“இன்றைய உலகச் சிக்கல்களுக்குத் திருக்குறளில் தீர்வு காண இயலுமா?” எனும் கேள்விக்கு திருக்குறளின் ஞாலப் பழமையையும் அதன் காலப் புதுமையையும் எடுத்துக்காட்டி விளக்கம் சொன்னேன். “திருக்குறளை நீங்கள் எப்படிப் பயன் கொள்ளுகிறீர்கள்? சொந்த அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்!” என்பது பேட்டியில் அடுத்த வினா.

“லண்டனுக்குப் பயணமாக வந்துள்ள நான் சுற்றுலா – இலக்கிய அறிமுகம் ஆகியவற்றோடு என் தொழில் முயற்சிகளுக்கும் உரிய நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளேன். இதற்கு நானறிந்த திருக்குறளே ஒரு சான்று:

பழகிய யானையின் துணையோடுதான் காட்டில் திரியும் புதிய யானையைப் பிடித்து வசக்கிக் கொணர முடியும். அதுபோல நமக்கு நன்கு தெரிந்த தொழில் அல்லது அன்பரின் உதவியோடுதான் மற்றொன்றையும் செய்து முடிக்க முடியும்.

“வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

     யானையால் யானையாத் தற்று”       (678)

என வினை செயல்வகையைக் கூறும் குறட்பா – எனக்கு- இலக்கியம் – தொழில் இரண்டிலும் இருமுகத் தொடர்பைக் கூட்டித் தந்துள்ளது. இப்படிப் பலருக்குப் பல குறட்பாக்கள் அனுபவ ஆக்கம் தரக்கூடும்.

தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள திருக்குறள் ஆராய்ச்சி மையத்தின் நோக்கும் போக்கும் பற்றிப் பேட்டி வலம் வந்தது. தமிழ் மாமுனிவர் தவத்திரு அடிகளார் திருக்குறள் நெறிபரப்பச் செய்துவரும் சீரிய தொண்டுகளைப் பட்டியலிட்டுச் சொன்னேன். அனைத்து தரப்பினரையும் உறவு கூட்டிப் பிணிக்கும் ஊடகமாகத் திருக்குறளை ஆக்கியவர் அடிகளார் என நினைவு கூர்ந்தேன்.

திறமான புலமையெனில் – வெளிநாட்டார் அதனை வணக்கம் செய்வார்கள் என்பதற்கு உரிய அரங்காக – பி.பி.சி. விளங்குவதையும் சங்கரண்ணா போன்றோரின் தொண்டினால் அதில் தமிழோசை ஓங்கி ஒலிப்பதையும் மனதாரப் பாராட்டி விடை பெற்றேன்.

மறுநாள் – தமிழகத்திலிருந்து தொலைச் செய்தி வந்திருப்பதாகச் சொன்னதும் ஓடிவந்து போனைக் கையிலெடுத்தேன் “நான்தான் குன்றக் குடியிலிருந்து தெய்வசிகாமணி பேசுகின்றேன்” என்ற குரல் என்னைத் திடுக்கிடச் செய்தது. பி.பி.சி. தமிழோசையை விடாமல் கேட்கும் வழக்கமுடைய தவத்திரு அடிகளார், எனது பி.பி.சி. பேட்டியைக் கேட்டு, மறுநாளே என்னைப் பாராட்ட போனில் அழைத்திருந்தார். இது எத்தகைய பேறு! திருக்குறளால் நான் பெற்ற பேறு அல்லவா?

பி.பி.சி. தமிழோசைப் பேட்டியே பயணத்தின் மணிமுடியாக அமைந்துவிட்டதால் அந்த முழுநிறைவோடு லண்டன் நகரைச் சுற்றிப் பார்க்க மனம் இடம் தந்தது.

திட்டமிட்டப்படி ஐரோப்பிய நாடுகளில் காஸ்மாஸ் எனும் சுற்றுலாக் குழுவோடு பத்துநாட்கள் சுற்றினோம். அந்நாடுகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பார்த்து வியந்தோம்.

அந்த வியப்புச்சுவடு மறைவதற்குள் துபாய், அபுதாபி எனும் சுவர்க்க பூமியில் நான்கு நாட்கள் சுற்றிப் பார்த்தோம். சகோதரர் அல்ஹாஜ் முகமது பாருக். தேவிபட்டினச் செம்மல் – தொழிலொடு அங்கு தமிழும் வளர்க்கும் தூய நெஞ்சராக விளங்குகிறார். அன்பர்களைக் கூட்டி அவர் அளித்த விருந்துகளில் திருக்குறளையும் பரிமாறி விட்டுத் தாயகம் திரும்பினோம்! மேற்குத் திசையில் மறையாத வாழ்வுச் சுடராகத் திருக்குறள் விளங்கும் என நம்பிக்கையோடு தமிழ் மண்ணில் கால் வைத்தோம்.

கற்கவும், நிற்கவும்

நாம் அவர்களிடம் கற்கவும், நிற்கவும்

பொதுவாக மேலை நாட்டவர் அனைவரும் தன்மானத்தோடு உழைத்து வாழ வேண்டும் என்னும் உறுதியான கொள்கை கொண்டவர்கள். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாகவே கடும் உழைப்பை மேற்கொள்கிறார்கள். உழைப்பு அவர்களிடம் இயற்கையான குணமாக அமைந்திருக்கிறது. எதையும் இனாமாகப் பெறுவதைக் கேவலமாகக் கருதுகின்றார்கள்.

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக உலகியற்றியான்” எனும் குறளில் உலகினை இயற்றிய இறைவனையே அழிந்து போகும்படி வள்ளுவர் சாபமிடுவாரா? மாட்டார். மக்கள் இரந்து வாழ நேர்ந்த சூழலை மாற்றிட ஆவன செய்யாது, அரசு நடத்து வோரையே – உலகை ஆள்வோரையே – அவ்வாறு குறிப்பிட்டார் எனக் கொண்டால் பொருத்தமாய் இருக்கும். மேலை நாட்டு மக்கள் அரசுத்தலைவர்களைக் கூடச் சார்ந்திராமல், தாமே இரவச்சம்” அவர்களிடமே உள்ளது.

“இன்மை இடும்பை இரந்து தீர்வாமென்னும் வன்மையின் வன்பாட்டத்தில்” வழியில்லாக் காரணத்தால் பிச்சை எடுத்துத்தான் துன்பத்தை நீக்க வேண்டும் என்பதைப் போன்ற அவமானம் வேறு ஒன்றும் இல்லை என்று வள்ளுவர் கடிந்து பேசிய நிலைமையை அமெரிக்காவிலே செயலாக்குகின்றார்கள்.

நம் நாட்டில் சலுகைகள் பெறுவதும் இனாம் பெறுவதும் இயற்கையானவையாக அமைந்துவிட்டன. தன்மானச் சிந்தனைகள் குறைந்துவிட்டன. காலப்போக்கில் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் சுயமுயற்சியை அறவே மறந்து அரசாங்கச் சலுகைகளையே முழுவதும் நம்பி வாழக்கூடிய அவலம் ஏற்பட்டு விடலாம். இதை மாற்றிட உழைப்பதற்கு மக்களுக்கு நல்ல வாய்ப்பினை நல்கியும் தொழில் துறைகள் பல ஏற்படுத்தியும் உற்பத்தியைப் பெருக்கிப் பொருளாதார வளம் பெறவேண்டும்.

உழைப்பால்தான் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உறுதியாக ஏற்பட்டாக வேண்டும். மேலை நாடுகளைப் போலப் பொருளாதார வளர்ச்சி பெற்றால்தான் நாம் வலிமை மிகுந்தவர்களாக, நல்ல வல்லரசாக உயர முடியும். பலரது உழைப்பே அந்த வலிமையைத் தர முடியும்.

சாலைகள்

அங்குள்ள சாலை வசதிகளைப் போல இங்கும் தொலைநோக்கோடு நீண்ட சாலை வசதிகள் அமைக்கப் பட வேண்டும். அவற்றை மக்கள் அனைவரும் தூய்மையாகப் பேணிப் பாதுகாக்கவும் வேண்டும். மேலை நாடுகளைப் போல விஞ்ஞான அடிப்படையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டால் நன்றாகப் பராமரிக்கப் பட்ட சாலை வசதிகள் செய்யப்பட்டால் ஒரு நாட்டினுடைய பொருளாதார வளத்திற்கு அஃது ஒன்றே பயனுடையதாக அமையும்.

தொலைபேசி

மேலை நாடுகளில் தொலைபேசிகளைக் கொண்டே மிகக்குறுகிய காலத்தில் குறைந்த செலவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் விரைந்து தொடர்பு கொள்ள முடியும். விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே உலக நாடுகளுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இங்கு நாம் பக்கத்தில் உள்ள ஊர்களுக்குத் தொலை பேசியில் தொடர்பு கொள்வதுகூட மிகவும் இடர்ப்பாடாக உள்ளது. அநியாயமாக நேரம் வீணாகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான வேகத்திலே, விண்வெளி யுகத்திலே, இந்தக் குறையைக்கூட நாம் நீக்கவில்லையென்றால் அது மிகவும் வருந்துவதற்கு உரியதாகும்.

நாம் பல கருத்துக்களை விரிவாக ஆழமாக விவாதம் செய்கின்றோம். நல்ல கருத்துக்களை உணர்ச்சிவசமாகப் பேசி மகிழ்வதோடு அமைதி அடைந்து விடுகின்றோம். அப்பிரச்சினைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்துத் தீர்வு காண்பதில்லை. மேலை நாடுகளிலே ஒரு நல்ல கருத்து உருவாகும் எனில் அதை அறிவுபூர்வமாகச் சிந்தித்து, நுணுக்கமாக ஆராய்ந்து அறிவியல் ரீதியாகத் தீர்வுகாண முயலுகின்றார்கள்.

எதையுமே நன்றாகச் சிந்தித்துப் பார்த்து விஞ்ஞானபூர்வமாக முடிவெடுத்துச் செயல்பட்டு உயர்ந்து விடுகிறார்கள்; வளம் சேர்க்கின்றார்கள். எனவே நாமும் விஞ்ஞான பூர்வமாகச் செயல்பட்டு உயர வேண்டும். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுகின்ற சமயத்திலே பொறுமையாகவும் முழுமையாகவும் மற்றவர் பேச்சைக் கவனிக்கின்றார்கள். ஒரு செய்தியைச் சொல்லும்போது இடையில் யாரும் குறுக்கிடுவது இல்லை. மென்மையாகப் பேசுகின்றார்கள். பேசி முடிந்தவுடன் தங்களுடைய உடன்பாட்டையோ மறுப்பையோ இதமாக நயம்படக் கூறுகிறார்கள். சில சமயம் உடன்படாக் கருத்துக்களுக்கு மௌனமாக ஒரு புன்னகை செய்து விட்டுவிடுகின்றனர். இவையெல்லாம் எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தன. இது போன்ற பல அரிய கருத்துக்களையும் காரியங்களையும் நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

நாம் கொள்வதும் கொடுப்பதும்

புதிய உலகம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளுக்குக் குடியேறும் வெளிநாட்டவர் தொகை, காலப்போக்கில் அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக, அமெரிக்க நாடு தனது குடியேற்றச் சட்டத்தை 1965-இல் திருத்தியமைத்த பின்னர், வெள்ளையரல்லாத இனத்தவரும் குடியேற அனுமதிக்கப்பட்டனர். முன்னர் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய இத்தாலிய, அயர்லாந்து நாட்டவர்கள், ஏழைகளாக, போதிய கல்வி அறிவு அற்றவர்களாக, விவசாயத் தொழிற்சாலையில் உடல் உழைப்பினை மட்டும் அளிக்கக் கூடியவர்களாக இருந்தனர். எனவே தங்களுக்கு அவ்வப்போது நேரிட்ட சமூக, பொருளாதார இடையூறுகளை நீக்க வழிவகை காணுவதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தனர்.

தாங்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் முடிந்த வரை அரசியல் முக்கியத்துவம் பெறுவதில் விழிப்பாய் இருந்து கொண்டனர். 1965-ஆம் ஆண்டு குடியேற்றத் திருத்தச் சட்டத்தின் பின்னர் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் அதிகமாகக் குடியேறச் சென்றனர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு மொழி, இன, கலாச்சாரப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவும், மிகமிகச் சிறுபான்மை யினராகவும் இருந்தனர்.

கல்வியறிவும் மூளை உழைப்பும் கொண்ட இவர்களில் பெரும்பான்மையோர் டாக்டர்களாக, எஞ்சினியர்களாக, பலதுறைப்பட்டம் பெற்றவர்களாக, வங்கி – சிற்றுண்டிச் சாலை முதலிய சேவை நிறுவனங்களைத் திறம்பட நடத்துவவோராக இருந்தனர். அதிக வருமானத்தையும் தொழிலில் மனநிறைவையும் நாடியே பெரும்பாலும் சென்றனர். மிகக் குறுகிய காலத்திற்குள் செல்வாக்கு, செல்வச் செழிப்பு, சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பெற்றனர். பாகிஸ்தானியர், தாய்வானியர், கொரியர் முதலிய பிற தேசத்தவரின் போட்டி இவர்களுக்கு ஒரு புறம் இருந்தாலும், இந்திய வம்சாவளியினர் தமது திறமை, தைரியம், உழைப்பு, ஆகிய பண்புகளால் அமெரிக்க சமூகத்தின் உற்பத்தி ஆற்றலை அதிகரித்தே வந்துள்ளனர் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றனவாம்!

இந்திய வம்சாவளியினர் பல மாநிலங்களில் சிதறுண்டு வாழ்கின்றனர். தத்தம் கலாசார, மொழி, சமய உணர்வுகளுக்கு ஏற்றபடி அவ்வப்போது ஒன்று கூடியும் மகிழ்கின்றனர்.

குஜராத்தியர், சீக்கியர், மலையாளிகள், தமிழர்கள் இவ்வகையில் பல சங்கங்களை நிறுவியுள்ளனர். சிக்காகோவை அடுத்த டெய்டனில் உள்ள இத்தகையதொரு தமிழ்ப் பேரவையின் அழைப்பின் பேரில்தான் நான் திருக்குறள் பயணத்தை மேற்கொண்டேன். அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ள தமிழர்களில் ஈழத் தமிழர்களே கணிசமாகக் கண்ணில் பட்டனர்.

அமெரிக்காவிலும் நாம் அரசியலில் செல்வாக்குப் பெறும் வகையில் கட்சி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டாக வேண்டும் என்று இவர்கள் தீவிரமாகச் சிந்திக்கின்றனர். தங்களது பொருளாதார சுபீட்சத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், குடியேறிய பிற ஐரோப்பிய (ஸ்பெயின்) நாட்டவரின் பொறாமைத் தாக்குதலில் இருந்து வேலி கோலவும் இந்த அரசியல் ஈடுபாடு பயன்தரும் என்று கருதுகின்றனர். சென்ற ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு டெமாக்கிரடிக் (குடியரசு) கட்சியின் சார்பாக கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த டுகாசில் போட்டியிட்டது போல இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கட்சித் தேர்தல்களில் போட்டியிடும் காலம் கைகூடிவருவதாகக் கூறினர். நம்மவர்கள் நடத்தும் மாநாடுகள் இத்தகைய தொலைநோக்குச் சிந்தனையுடையன போலவே எனக்குத் தோன்றின.

அமெரிக்க நாட்டவரும் அங்குக் குடியேறியவரும் அங்கு உள்ள நம் நாட்டவரும் புற வாழ்க்கை நலன்களை அதிகமாக, இன்னும் சொல்லப் போனால், முழுமையாகப் பெற்று அனுபவிக்கின்றனர் என்றே சொல்லலாம். செயல்திறம் பற்றித் திருவள்ளுவர் அன்றே கூறிய அறிவுரைகளை இன்றும் அப்படியே போற்றி வாழ்கின்றனர். பிறநாடுகளில் உழைத்துப் பொருளீட்டச் சென்றாலும், அங்கு வெறுமனே கையேந்தி நிற்காமல் உழைத்தே, முயற்சியைக் கைவிடாமலே முன்னேறி வருகின்றனர். திருவள்ளுவர் ‘இரவச்சம்’ அதிகாரத்தில் கூறிய “இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் வன்பாட்டது இல்” (1063) எனும் வாழ்வுண்மையை மறவாது வாழ்கின்றனர். “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்” (33) எனும் உறுதியோடு இல்லாமை எனும் துன்பத்தினை இடைவிடாத உழைப்பால் தீர்த்துக் கொள்வோம் எனும் மனவன்மையுடன் வாழ்கின்றனர். திருக்குறள் நமது சொந்த மண்ணில் வேரூன்றினாலும் அதன் கிளைகள் எல்லாம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலேயே வாழ்க்கை நிழல் பரப்பும் நடைமுறையை நமக்கும் அறிவுறுத்தி வாழ்கின்றனர்.

ஆனால் ஒன்று: ஓடி ஓடி உழைத்துச் செல்வம் தேடும் இந்த ஓயாத வாழ்க்கைப் போட்டியில், புறவாழ்க்கை வசதிகளையே முதன்மையாக நாடும் போராட்டத்தில் ஒன்றை மட்டும் அவர்கள் மறந்துவிட்டனர். அதுதான் அகநலம் ஆக்கும் மன அமைதி! புறவாழ்வில் பிறர்கருத்தை மதிக்கும் மாண்பு, தன் கருத்தையே வலியுறுத்திச் சண்டை போடாத மதிநலம், ஓர் உடன்பாட்டுக்கு வந்த பின்னர் ஒன்றுபட்டுப் பணிபுரியும் உறவாக்கம், தனது தேசத்தையும் பிறரது நேரத்தையும் மதித்து நடக்கும் மரியாதை, இன்முகத்தோடு எப்போதும் உழைக்கும் முன்னணியில் நிற்கும் இவர்களுக்கு அகவாழ்வில் மட்டும் ஏனோ அமைதி இல்லை. அமைதி தேடியே அவ்வப்போது தாயகம் வருகின்றனர். தாயகத்தில் இருந்து தம்மை நாடி அங்கு வருவோரிடமும் இந்த அமைதி நல்கும் சிந்தனை மருந்துகளையே கேட்கின்றனர். திருக்குறள் எக்காலத்துக்கும் ஏற்ற மாமருந்தாக இருத்தல் கண்டு அதில் பேருவகை கொண்டதைக் கண்ணாரக் கண்டுவந்தேன்.

நம்மிடம் ஒரு சிறப்பு உண்டு. வாழ்வில் எவ்வளவு தான் வறுமை, துயரம் என்பன வந்தாலும் அதை ஏற்றுப்பொறுக்கும் வன்மையை, பற்களைக் கடித்துத் தாங்கிக் கொள்ளும் தன்மையை ஒருவகை நம்பிக்கையாகப் பெற்றுள்ளோம். ‘எல்லாம் விதிப்பயன்’ எனும் இந்தத் தலைஎழுத்தையே நொந்து சோம்பி நிற்கும் சோம்பல் வேதாந்த வாழ்க்கையை வள்ளுவர் வெறுத்தாலும், ஊழையும் உப்பக்கம் காணுமாறு அவர் சொல்லி யிருந்தாலும், இந்தக் ‘கர்மாக் கொள்கை’ எப்படியோ இன்று வேர் பிடித்துக் கொண்டு வாழ்க்கைப் போராட்டங் களில் ஒருவகை அதிர்ச்சித் தாங்கியைப் போல விளங்கி வருகிறது.

“நன்றாங்கால் நல்லவாகக் காண்பவராக” நாம் இருப்பதால், “அன்றாங்கால் அல்லல்படாமலே” வாழப் பழகிக் கொண்டு விட்டோம். இந்தக் கலையை வெளிநாடுகளில் குடியேறிவாழும் நம்மவர்கள் சற்று மறந்துவிட்டார்கள் போலும்! அவ்வாறு மறந்து விட்டதை நினைத்துப் பார்க்கச் சந்தர்ப்பங்களைத் தேடுகின்றனர். அதாவது செழிப்பினூடேயும் மனநலமும் அமைதியும் பெறும் பண்பாட்டு நெறிகளைப் பற்றிக் கொள்ளத் துடிக்கின்றனர். நமது கலாச்சாரப் பாரம்பரியத்தை அறியாது வாழும் புதிய தலைமுறையினர்க்கு நம்பிக்கையூட்டுவதற்கு நமது சிறப்பு வாய்ந்த இலக்கியச் சிந்தனைகளும் மரபுகளுமே கை கொடுக்கும் என உறுதியாக நம்புகின்றனர். “பிணீஜீஜீவீஸீமீss வீs tலீமீ நீஷீஸீtமீஸீtனீமீஸீt ஷீயீ னீவீஸீபீ” என உணர்ந்து வறுமையிலும் செம்மையாக வாழ்தல் போல, கூட்டுக் குடும்ப வாழ்விலும் அமைதி காணுதல் போல செழிப்பு மிக்க தமது வாழ்விலும் செம்மையோடு அமைதி காண அவாவுறுகின்றனர். இதனை, இந்த மன நிறைவை, மாண்பார்ந்த அமைதியை நாம் அவர்களுக்கு என்றென்றும் அளிக்க முடியும்! முயற்சிக் கொல்லியாக வாழாது, தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கும் அறஉணர்வுகளின் வழியாக நாம் எஞ்ஞான்றும் வழிகாட்ட முடியும். திருக்குறள் செய்திகளை ஏந்திச் சென்ற எனது சிறிய, எளிய பயணத்தில் இந்த அளவுக்குத் திருக்குறளின் மீது பற்றும் நமது பாரம்பரிய நம்பிக்கைகளின் மீது பரிவும் ஏற்படுத்த முடிந்ததே எனும் மனநிறைவே எனக்குத் தேனாக இனித்தது!

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும்வா யெல்லாம் செயல்” (33)

எனும் உறுதியோடு கனடா நாட்டு அன்பர்களிடம் விடைபெற்று இலண்டனுக்குப் புறப்பட்டோம்.

தனிநபர் ஒழுக்க நெறிகள் திருக்குறளில் போதுமான அளவுக்குச் சொல்லப்பட்டுள்ளன. காலங்கள் மாறினாலும் கூட, என்றைக்கும் ஏற்புடையனவாக அக்கருத்துகள் உள்ளன. மக்கள் தத்தம் நிலைக்கேற்ப அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுதப் பட்டமையால் அவை எப்போதும் பொருந்துவனவாக இருக்கின்றன. தனிநபர் வாழ்வுக் குறள்களைப் போல, அரசியல் குறட்பாக்களும் காலந்தோறும், நாடுதோறும் பொருந்தும் எனச் சொல்ல முடியுமா எனும் சர்ச்சை கனடா அன்பர்களோடு உரையாடியபோது எழுந்தது. அது நெடிய சிந்தனைக்கும் இனிய கருத்துக் கோவைக்கும் ஆக்கமாய் அமைந்தது.

நாம் வாழ்வது குடியாட்சிக் காலம்; வள்ளுவர் வாழ்ந்தது முடியாட்சிக் காலம். தாம் வாழ்ந்த காலத்தே அவர் உணர்ந்து எழுதியவை இன்றைய நம் தேவைகளுக்கு உதவுமா?

குடியாட்சி என்றதும் அதன் பெயரால் பல நாடுகளில் அரங்கேறும் அலங்கோலங்களே நம் கண்ணில் வலம் வருகின்றன. ஆட்சி அதிகாரத்திற்காகச் செய்யப்படும் முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. கொள்கை அடிப்படையில் கட்சிகளை நிறுவி, மக்கள் வாக்குகளைப் பெறும் பெரும்பான்மையர் ஆட்சி அமைப்பதுதான் குடியாட்சி நெறிமுறை. ஆனால், இந்தப் பெரும்பான்மையைப் பெறுவதற்காகவும், அப்படியே அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பல தவறுகள் செய்யப்படுகின்றன. மக்கள் உணர்ச்சியைத் தூண்டும் பொய்ப் பிரச்சாரங்கள், பிற கட்சித் தூற்றல்கள், ஆட்களைச் சேர்க்கும் வன்முறைகள், பணம் பதவிகளைக் கொண்டு நடத்தும் ஏவுதல்கள் ஆகிய போலிக்குணங்கள் அரசியல் ஒழுக்கமாகி உள்ளன!

உலகம் ஒன்று, உலக மக்கள் ஒருகுலத்தவர், ஓருலக அரசு, பொது நலப் பொருளாதாரக் கட்டமைவும் குறிக்கோள்கள். நாட்டுச் சிக்கல்களைக் கூட்டுப்பேச்சால் தீர்த்தல் வேண்டும் என்பதும், நிலையான தீர்வுக்கு உரிய வழி போரில்லை என்பதும், கூட்டு நாட்டுக் கொள்கைகள் – இவை எல்லாம் இந்த நூற்றாண்டில் வலியுறுத்தப்பட்டு வரும் வருங்கால இலட்சியங்கள்.

இந்த இலட்சியங்களுக்கு உதவும் வகையில் குறளின் அரசுச் சிந்தனைகள் இருப்பதுதான் வள்ளுவப் பெருமை.

“உலகம் எல்லாம் ஒன்று” எனும் மேலோட்டமான ஆரவாரம் இன்றி ‘ஒவ்வோர் இடமும், நாடும், உலகின் ஓர் அங்கம்’ என்னும் நடைமுறை உணர்வோடு குறட்பா நடக்கிறது. உலகம் நாடு நாடாகப் பிரித்து ஆளப்படுகிறது, எந்த மனிதனும் உலக மகனாகப் பிறப்பதில்லை; ஒரு நாட்டின் குடிமகனாகவே எற்கப்படுகிறான். எனவே வள்ளுவம்… ‘நாடு’ என்பதனை இடவரம்பாகக் கொண்டு, பொதுவான அரசியல் செய்திகளையும் நடைமுறை களையுமே தருகிறது.

மக்கள் இனம் ஒத்துவாழ ‘அரசமைப்பு’ என்பது இன்றியமையாதது என்கிறது…

“ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே

     வேந்துஅமைவு இல்லாத நாடு”  (740)

எனும் குறட்பா நாடு என்றால் அதற்கு அரசு வேண்டும் அரசு என்றால் அதற்கென ஓர் ஆட்சித் தலைவன் வேண்டும்; அத்தலைவன், அரசனாயினும் அமைச்சன் ஆயினும்… மூன்று முக்கிய இயல்புகள் உடையோனாய் இருந்தாக வேண்டும்.

“தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும்

     நீங்கா நிலன்ஆள் பவர்க்கு”          (383)

எனும் குறள் அந்த மூன்றையும் சொல்லுகிறது. சட்டமன்றங்களில் தூங்காமையைத்தான் அன்றே இக்குறள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றார் அன்பர் ஒருவர் இடைமறித்து!

‘குடிதழுவிக் கோலோச்சுதல்’, ‘முறை செய்து காப்பாற்றுதல்’ என்பன அரசின் முதன்மைக் கடமைகள். ஆட்சித் தலைவனோடு அரசுப் பொறுப்பேற்கும் அமைச்சர் முதலானோர் பின்பற்ற வேண்டிய கடமைகளும் குறளில் அரசியல் நிர்ணயச் சட்டம் போலத் தொகுக்கப் பட்டுள்ளன.

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதே அவர்க்கு உரிய ஒரே நோக்காய் இருத்தல் வேண்டும்; ‘உயர்வு’ என்றால் தனது சொந்த நிலை உயர்வு இல்லை; சமுதாயப் பொது உயர்வு.

“உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

     சேராது…”             (734)

நாட்டுக்கு உழைக்கும் மனநல மாண்பு

“வேல்அன்று வென்றி தருவது; மன்னவன்

     கோல்அதூஉம் கோடாது எனின்”     (546)

எனும் கொள்கைப் பிடிப்பு!

இவ்வாறெல்லாம் அனைத்து நாடுகளும் ஒப்பக்கூடிய அரசியல் வகைமைகளை வகுத்துள்ள வள்ளுவம், தனிநபர் ஒழுகலாறு போல, அரசியல் தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. நாம் தான் காரியக் குருடர்களாகவே இருக்க விரும்புகிறோம்! இவையெல்லாம் அப்பயணத்தில் பரிமாறப்பட்ட அரசியல் விருந்துகள்.

“நாடுஎன்ப நாடா வளத்தன; நாடுஅல்ல

     நாட வளம்தரும் நாடு”   (739)

எனும் குறளுக்கு எடுத்துக்காட்டாக இலங்கும் அமெரிக்க, கனடா நாடுகளில் நான் கண்ணாரக் கண்டுணர்ந்த ஆக்க நலன்கள்!

கனடா நாட்டுப் பயணம்

கனடா நாட்டுப் பயணம்

Image result for canada

விழுமிய திருக்குறள் பிறந்த நம்நாடு, நழுவவிட்ட அந்த நல்லுணர்வை ஏக்கத்துடன் கனடா நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை எண்ணத் தொடங்கினேன். அமெரிக்காவில் இத்தனை நாட்களும் எப்படியோ ஓடிவிட்டன!

தமிழில் ‘நல்வரவு’ கூறும் திருநாடு

உலக நாடுகளுள் சோவியத் யூனியனுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய நாடு நோக்கிப் பயணமாக வேண்டும். அதுதான் கண்ணாரக் காணவேண்டிய கனடா!

வட அமெரிக்கக் கண்டத்தின் வடபாதி முழுதும் வியாபித்துள்ள இயற்கைக் கொலுமண்டபம் இந்த நாடு. கிழக்கே அட்லாண்டிக் சமுத்திரம்; மேற்கே பசிபிக் சமுத்திரம்; தெற்கே அமெரிக்கா; வடக்கே ஆர்க்டிக்.

எவ்வளவு பெரிய நாடு! ஆனால் மக்கள்தொகை மிகக்குறைவு. சுமார் 3கோடி மக்கள்; மூன்று நூற்றாண்டுக் குடியேற்ற வம்சா வழியினர்.

வடதுருவத்தை ஒட்டியுள்ள கனடாவின் குளிர்காலப் பருவம் மிக நீண்டது; கோடைப் பருவம் மிகச்சுருங்கியது.

நம் நாட்டில் மூன்றே பருவங்கள்தான் உண்டு கோடைக் காலம், மிகுகோடைக் காலம், சுடும்கோடைக் காலம்!

ஆனால் கனடாவைப் போன்ற நாடுகளில் மட்டும் இயற்கை மிகுந்த கருணை காட்டுகிறது! இங்கு உள்ள காடுகளின் அடர்த்தியை, நீரோடைகளின் பாய்ச்சலை, பயிர்களின் பசுமையை, மக்களின் வளமையைப் பார்த்தாலே… இயற்கையின் பாரபட்சம் புரிகிறது.

இங்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்து முதன்முதலில் குடியேறியவர்கள் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும். அவர்களுக்குள் மூண்ட ஆதிக்கச் சண்டை ‘ஏழாண்டுப் போர்’ என வருணிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கை ஓங்கியதால் – மாட்சிமை தங்கிய மன்னர் ஆட்சியின் கீழ் . டொமினியன் ஆகி, ஆஸ்திரேலியாவைப் போல் காமன்வெல்த் அங்க நாடாகச் செல்வம் கொழிக்கிறது. ஆங்கிலமும் பிரெஞ்சும் அரசு மொழிகள். அங்கும் மொழி- இனச் சிக்கல் உண்டு. எனினும் பொதுவளர்ச்சிக்கு ஊறு செய்யாமல் ஒத்துப் போகிறார்கள். சமீப ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்கு சரணாலயமாகவும் இந்நாடு ஒருவகையில் தமிழ் மானம் காக்கிறது!

இயன்றவரை ஈழத் தமிழர் மானம் காக்கக் கைகொடுக்கும் கனடாவில் இனிய தமிழ் மணமும் கமழுவதை நுகர அரிய வாய்ப்பு இப்பயணத்தில் கிட்டியது.

சமச்சீரான வெப்பதட்பமுடைய வாழ்க்கைக்கு உகந்த நாடுகள் என உலகில் ஆஸ்திரேலியாவையும், கனடாவையும் சொல்லுவார்கள். அமெரிக்காவில் பொதுவான, ஆங்கிலக் கலாச்சாரப் பின்னணி புலப்படுவதுபோல் அதையடுத்துள்ள கனடாவில் பிரெஞ்சக் கலாச்சாரச் சூழல் வெளிப்படை யாகத் தெரியும் என்றும் சொல்லுவார்கள். அதுவும் உண்மை எனக் கண்டறிய அதிவேகமாக அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூயார்க்கிலிருந்து கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும் இடங்களில் எல்லாம், நம்மை வரவேற்று உபசரிக்க நண்பர்கள் இருந்துவிட்டால் எந்த நாட்டிற்கும் போய்வரலாம். நற்பயனாக எங்களுக்கு இந்தப்பேறு எங்கும் கிட்டியது. சென்னையில் உள்ள பிரபல டாக்டர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் புதல்வி திருமதி. ரீத்தா, திரு.பார்த்திபன் அவர்களின் துணைவியார். இவர் அவர் சகோதரி சத்யா, மதுரையைச் சேர்ந்த திரு.அசோகன், கானடியன் ஆப் செட் ஸ்கிரீனிங் எனும் நிறுவனத்தை நடத்தும் ரோட்டரி கழக உறுப்பினர் திரு.ஸ்டூவர்ட் ஜெரோம், திரு.விஜயநாதன் மற்றும் பலர் எங்களுக்கு இனிய வரவேற்பு அளித்தனர்.

நாங்கள் கனடா போய்ச் சேர்ந்ததும் அமெரிக்கா விலிருந்து திரு.நாராயணன் குடும்பத்தினரும் எங்களுக்குத் துணையிருக்க வழிகாட்ட வந்து (அங்கிருந்து சுமார் 400 மைல்தான்) சேர்ந்து கொண்டனர். கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம். நீர் அருவி, ஆலயக் கோபுரம்! அதிலும் நாங்கள் பார்த்த நயாகரா அருவி (நீர்வீழ்ச்சி) உலகிலே மிகப்பெரிது, அதன் பிரமாண்ட தோற்றமும், இடையறாது கொட்டும் நீர்ப் பெருக்கும், வண்ண வண்ணக்கோலமும் நெஞ்சைப் பின்னிப் பிணைத்தன.

நம் பாண்டிய நாட்டுச் சங்கப்புலவன் கணியன் பூங்குன்றனார் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பாட்டில் தொடரும் வரிகளான ‘கல்பொருது இரங்கும் மல்லல்பேர்யாற்று நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப்படூஉம்’ என்ற வரிகள் இப்பெரும் நீர்வீழ்ச்சியைக் கண்டவுடன் தோன்றின.

தேக்கிவைக்கப்பட்ட செல்வம், தேக்கிவைக்கப்பட்டு பயன்படுத்தாத நீர் போல அலையாமல், நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல, பரந்து விரிந்து பாலை நிலத்தை எல்லாம் செழிப்பாக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலும் கனடாவிலும் உற்பத்தியாகும் பொருட்களை நுகர்வோர் அதிகமாக இருப்பதனால், அங்கு பணப்புழக்கத்தின் வேகம் காரணமாகப் பொருளாதார நிலையும் மேம்பட்டு இருக்கிறது. நமது நாட்டிலும் பணப் புழக்கம் தேங்கி இருக்காமல் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் நம் வளர்ச்சியும் மேம்படும்.

உலகிலேயே மிகப் பெரிய சியென் கோபுரத்தைப் பார்க்கச் சென்றோம். சிகாகோவில் நாங்கள் பார்த்த சியொ டவர் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு இதைப்பார்க்க வந்தபோது மலைப்புத் தோன்றவில்லை. ஆனால் மனதைத் தொடும் ஒரு காட்சி என்னை மெய்சிலிர்க்கவைத்தது. அந்த மாபெரும் டவரின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு வாசகத்தில் ‘நல்வரவு’ எனத் தமிழில் மின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு உலகில் உள்ள பலமொழிகளில் எழுதியிருப்பினும் இந்தியா விலிருந்து தேர்ந்தெழுதிய நான்கு மொழிகளில் நமது தமிழ் மொழியும் ஒன்று என்றவுடன் என் எண்ணமெல்லாம், இதயமெல்லாம் பூத்தன; வான் முட்ட உயர்ந்திருந்த கோபுரத்தின் படிக்கட்டுக்குச் செல்லக் கால்கள் தயங்கின. “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும், வண்மொழி வாழியவே!” என மகாகவி பாரதி அன்று பாடினானே… அந்த வானத்துக்கே இந்தத் தமிழ் வாசகம் என்னைத் தூக்கிப் போவது போலப் பிரமையுற்றேன். அந்த வாசகத்தின் முன்னர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

‘நல்வரவு’ எனத் தமிழ் வரவேற்பு அளித்த தமிழன்பர்கள் உள்ளமும், இல்லமும் எங்களுக்குச் சென்றவிடமெல்லாம் நல்வரவு கூறின.

கனடாவிலிருந்து, ஏற்கெனவே திட்டமிட்ட எங்கள் ஐரோப்பியப் பயணத்தில் விடுபட்டுப் போயிருந்த பிரெஞ்சு நாட்டுக்குப் போக விசா எடுக்க முடியும் என்றார்கள். அந்த முயற்சியில் நண்பர்கள் ஓடி ஓடி அலைந்தார்கள். ஆனால் 45 நாள் அவகாசம் வேண்டும் என அதிகாரிகள் உதட்டைப் பிதுக்கி விட்டார்கள். நான்கு நாட்கள் இதில் வீணாகிவிட்டன.

கனடாவிலும்  விரிவான பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தரவும் முடியவில்லை. அதற்கேற்ப எங்கள் பயணத்தை நீட்டிக்கவும் இயலவில்லை. நண்பர்கள் வீடுகளில் பலரும் வந்து கூடி கலந்துரையாடி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சிகளுக்காகவே ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திரு.பார்த்திபன் – ரீத்தா தம்பதியினரின் உபசாரத்தை மறக்கவே முடியாது. அவர்கள் இல்லத்தில் நிகழ்ந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்துத் தமிழன்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர். ஈழத்தின் கண்ணீர்க் கதையும் அங்கு விரைவில் தமிழர் நல்வாழ்வுக்கு உரிய சுமுக நிலை ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் கவலையும், எல்லாப் பிரிவினரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய அவசியம் பற்றியும் கருத்துக்கள் தங்குதடையின்றி வந்தன. யாழ்ப்பாணத் தமிழன்பர்கள் கூறியவற்றைக் கேட்ட போது எங்கள் கண்கள் கண்ணீர்க் குளமாயின.

பின்னர் ‘திருக்குறள் பெருமைகளும் நமது பண்பாட்டுச் சிறப்புகளும்’ பேசப்பட்டன. இவற்றைக் கேட்பதில் அங்கு உள்ளோருக்கு உள்ள ஆர்வத்தை, அக்கறையை நாம் இங்கெல்லாம் காணமுடிவதில்லை. தன்னிடம் பூத்த தாமரையின் அழகு குளத்துக்குத் தெரியவில்லை என்றால் எங்கே போய் முறையிடுவது?

உலகத் திருக்குறள் பேரவையின் நோக்கங்கள் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதன் கிளை ஒன்றைக் கனடாவிலும் நிறுவத் தாம் எல்லா வகையிலும் ஒத்துழைப்பதாக உற்சாகம் அளித்தனர்.

கனடாவில் சீக்கியர்களும் தமிழர்களும் கணிசமாக உள்ளனர். சீக்கியர்களின் பற்றுறுதிக்கும் உழைப்புக்கும் நிகராக நம் தமிழர்களும் விளங்கக்கண்டு பெருமிதமும் பேருவகையும் கொண்டேன்.

கலந்துரையாடல்களில் உற்சாகமாகக் கலந்து கொண்ட திரு.பார்த்திபன் ஒவ்வொரு வேளை விருந்தின்போதும் புதிது புதிதாக நண்பர்களைக் கூட்டி வருவார். நீண்ட உரையாடல்கள் தொடரும். சமயம், தத்துவம், கலை, இலக்கியம், தொழில், வாணிபம் என்றெல்லாம் கலந்துரையாடல் வலம் வரும். இவ்வுரையாடல்களில் எனக்கு ஏற்பட்ட பயனும் அனுபவமும் மிக அதிகம். அவற்றையெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டு இலண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அருமை நண்பர் திரு.பார்த்திபன், “உங்கள் பேச்சால் வசீகரிக்கப் பட்டேன்” என்றார். ஆனால் உண்மையில் வசீகரிக்கப் பட்டது நாங்கள்தான். கனடாவில் வாழும் நம் சகோதரர்களின் அன்பும் உபசாரமும் திருக்குறள் வாழ்வும் வாக்குறுதியும் எங்களை என்றென்றும் வசீகரித்துக் கொண்டன….!

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

     அனைத்தே அன்பர் தொழில்”        (394)

எனப் புதுக்குறள் புனையும் ஆசை வளர்ந்தது!