தீரா இடும்பை தரும் & எது?

மனித வாழ்வு அமைதியும் இன்பமுமாக அமைய வேண்டுமானால் வாழ்வு அற வாழ்வாக மலர வேண்டும். அறத்தால் வருவதுதான் இன்பம். மற்றவை யாவும் இன்பம் என ஒருவகை மயக்கம் தருவதன்றிப் புகழ் தருவதில்லை; இனிமை தருவதில்லை.

மனம் மாசற்று இருப்பதுதான் அறம். உள்ளம் தூய்மையுடையதாய் உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது தான் அறம். வெறும் புகழ் மயக்கத்தால், பயன்கருதிச் செய்யப் பெறும் செயல்கள் தொடக்கத்தில் தவிர்க்க இயலாதவை யாகவே இருக்கும். ஆனால் மனம் பக்குவப்படத் தொடங்கியதும் நல்ல பயிற்சியால் இச்சிறு மாசுகள் நீங்கும். பொதுவாக, பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் என்பன அறியாமையால், மயக்கத்தால் உருவாகும் குணங்கள்! இக்குற்றங்கள் நீங்கப் பெற்றால் மனம் மாசு நீங்கி ஒளிபெறும்; வாழ்வும் ஒளிபெறும்.

‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்.’ செய்யும் செயலிலெல்லாம் இருளும் மயக்கமும் நீங்கி அறஒளி நிறையும்.

வாழ்க்கை நிலையாமை உடையது. நில்லாத இவ்வாழ்க்கையை என்றும் நிலையானது என மயங்கி யிருத்தல் புல்லறிவு ஆகும்.

 

‘நேற்றிருந்தார் இன்றில்லை. இன்றிருப்பவர் நாளை இல்லை’ என்ற வியப்பான உலகில், காலம் தாழ்த்தாது, வாழும் ஒவ்வொரு நாளும் அறம் செய்ய வேண்டும்.

‘நாள் என ஒன்றுபோல் காட்டி உயிரறுக்கும் வாள்’ என்பதை நன்கு உணர்ந்து நாளும் அறம் செய்ய வேண்டும். நம் வாழ்விற்கு எப்போது இறுதி நேரிடும் என்று தெரியாத நிலையில் உறுதியான, நன்மையான காரியங்களை அறுதியிட்டு நாடிச் செய்ய வேண்டும்.

குறுகிய வாழ்நாளை நீண்ட பயன் மிகுந்த வாழ்நாளாக்க வேண்டுமானால், நாள் என்பது ஒரு கூர்மையான வாளாக மாறி வாழ்நாளை அறுக்காமல் இருக்க வேண்டுமானால், தடையில்லாமல் வீழ்நாள் இல்லாமல் அமைய வேண்டுமானால், விரைந்து நாள்தோறும் நாடி நல்லறச் செயல்கள் செய்ய வேண்டும். அப்போது துன்பத்தை, துயரத்தை வரவிடாமல் வழியடைக்கும் கல்லாக அறம் விளங்கும்.

சிறப்பாக நாம் ஆளும் அரசைத் தேர்ந்தெடுக்கும் போது அவ்வரசு நாட்டின் நலம் கருதிச் செயல்படும்; அறவழியில் நிற்கும்; மக்களின் அச்சம் நீங்கிப் பாதுகாப்புத் தரும்; பொருளாதாரத்தை மேம்படுத்தும். எனவே இன்பம் நல்கும் ஏற்றமிகு அரசையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அறத்தை அறிந்து, மனச்சான்றுள்ள, தியாகம் நிறைந்த, தூய வீரம் நிறைந்த, ஊக்கமும் துணிவும் மிகுந்த விரைந்து செயலாற்றும் நேர்மையாளர்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், நன்கு ஆராயாமல் – குறுகிய நோக்கோடு, தன்னலத்தோடு முடிவு செய்தால் தீமை விளைந்துவிடும். ஆட்சியில் தீயவர் களையும் தீயவைகளையும் ஏற்றுக்கொள்ளும் துன்பம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து துயரமே தந்துவிடும்.

நன்றாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்து பொறுப்பேற்குமாறு தேர்ந்தெடுத்தவுடன் அவர்கள் மீது முழு நம்பிக்கை கொள்ளவேண்டும். அடிக்கடி தலையிடுவது, குறுக்கிடுவது, அவதூறு செய்வது என்பன மிகப்பெரிய  துன்பத்தைத் தரும். ஆராய்ந்து தெளிந்து நம்ப வேண்டும். நம்பித் தெளிந்தவுடன் வீணான ஐயம் கூடாது. எத்துறையாயினும் ஒரு முடிவுக்குப் பின்னர் இடையில் வரும் குழப்பம். சந்தேகம் ஆகியவற்றை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். அவர்களுக்கு ஆதரவாய் இருந்து நன்கு செயல்பட உரிமை அளிக்க வேண்டும்.

தீரா இடும்பை தரும் எது என்று கேட்டு, அதற்கு வள்ளுவர் விடையும் அளிக்கின்றார்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 

 தீரா இடும்பை தரும்”              (510)

ஒருவனைத் தெளிவில்லாமல், ஆராயாமல் தேர்ந்தெடுத்தாலும் துன்பம். ஆராய்ந்து தெளிந்த ஒருவரிடம் ஐயப்படுதலும் நீங்காத துன்பம். இத்துன்பம் நீக்கி இன்பம் பெற்று வாழ்வோமாக.

புகழ் வாழ்வு

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

     பொன்றாது நிற்பதுஒன்று இல்.”      (233)

மனிதர் அனைவரும் வாழ்வில் அவரவருக்கு உரிய தகுதிக்கேற்பப் புகழோடு வாழ விரும்புகின்றனர். தேடிச்சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கையல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.

அறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள்தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.

‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்று குறுந்தொகை கூறுவது போல் உண்மையான முயற்சியும் உழைப்புமே ஒருவனை உயர்த்தும்; பெருமையும் புகழும் சேர்க்கும். பயனுள்ளவனாக, பிறர்க்கு உதவுபவனாக, பிறர் துன்பங் களைத் தீர்ப்பவனாக இருந்தால்தான் புகழ் நிலைத்து நிற்கும். புகழ் அறத்தின் ஒளிவடிவம். நல்லவர்களால் போற்றப்படுவதே புகழ். மனச்சான்றைப் போற்றி, குற்ற மில்லாமல் குணங்கொண்டு செம்மையோடு வாழ்பவர் களுக்குப் புகழ் உயிர்மூச்சு போன்றது. புகழின்றி உயர்ந்தவருக்கு வாழ்வு இல்லை. நற்செயல்கள் செய்பவரின் பெருமையும் சிறப்பும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக இருப்பதில்லை. அவர்களது அருமை தொடக்கத்தில் தெரியாவிட்டாலும் நாளடைவில் மிகவும் சிறப்பாக நன்றாகவே உணரப்படும். அறம் இல்லாத இடத்தில் புகழ் நிலைத்து நிற்காது. அறத்தோடு, கடின உழைப்போடு, மனச்சாட்சியைப் போற்றி இடைவிடாது தனக்குத்தானே தன்னை குற்றங்களிலிருந்து நீங்கி காத்துக் கொள்பவர்களுக்கே புகழ் என்றும் நிலைத்து நிற்கும். இல்லாவிட்டால் புகழ்வேட்கை கொண்டவர் களுக்கு வாழ்க்கை கானல் நீர் ஆகிவிடும். உண்மையான புகழ் ஆழமாக வேரோடி நிற்கும் ஆலமரம் போன்றது. நல்ல அடித்தளத்தில் கட்டப்பட்ட கோபுரம் போன்றது; தனக்குரிய உண்மையான தகுதியுடனும், நேர்மையுடனும், மனச்சான்றைப் போற்றி வாழ்பவர் என்றும்  இன்பத்துடன், புகழுடன் வாழ்வர்.

போலித் தகுதியால், குறுக்கு வழியில் புகழ்பெற முயல்பவன் வேகமாக உயர்வான். ஒரு புயல்காற்றில் காகிதமும், சருகுகளும், குப்பைகளும் கோபுரத்திற்கு மேல் உயர்வது போல போலிப்புகழ், தற்புகழ்ச்சி போலி நாணயம் போன்றது. புழக்கத்தில் தண்டனையைத் தருவது. வீண் புகழ்ச்சியால் ஆணவம் அதிகம் தலைகாட்டும். வீண்புகழ்ச்சி அளிப்பவரையும் அழிக்கும். பெறுபவரையும் சீரழிக்கும். வெற்று உபச்சாரம், போலிப்புகழ்ச்சிகளைக் கண்டு மயங்காமல் வாழவேண்டும். சிலர் சிலகாலத்திற்கு நன்றாகப் புகழப்படுகின்றனர்; கொண்டாடப்படுகின்றனர். கால மாறுதலால் புகழின் உச்சியில் நின்றவர்கள், பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்; போற்றப்பட்டவர்கள் பழித்துப் புறக்கணிக்கப்படுகின்றனர். மக்கள் புகழும்போது புகழ் பெற்றவர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்; வாழ்த்துக்களை வழங்கியவர்கள், வசவுகளையும் வழங்கிடுவர்.

நம் தகுதிக்கேற்ற புகழ்ச்சிகளே நிலைத்து நிற்கும். ஆகவே என்றும் உழைத்து, முயற்சி செய்து, செம்மையாக வாழ்ந்து, தனக்கு உரிய பொருளுடைமை, கல்வியுடைமை, அறிவுடைமை, உழைப்பு இவைகளைப் பிறர்க்கும் வழங்கிப் பிறர்க்கு பயன்பட வாழ்ந்தால்தான் ஊரும் நாடும் உலகமும் போற்றும். வசையும், பழிச்சொல்லும் இல்லாமல் புகழுடன் வாழ்பவர்களே வாழ்பவர்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் வாழ்ந்தாலும் உடல் சுமந்து உயிரோடு இருந்தாலும் வாழாதவர்களே. உலகம் மாறிவருவது. இங்கு நிலையாமை தான் நிலைத்தது இத்தகைய மாறிவரும் உலகில், நிலை யாமை உள்ள உலகில் நிலைத்து நிற்பது, எதுவென்றால், அது அழிவற்ற புகழ் அன்றி வேறு ஒன்று இல்லை.

“வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய

     வாழ்வாரே வாழா தவர்.”      (240)

 

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

     தம்புகழ் நிறுவி தாம்மாய்ந் தனரே” – (புறநானூறு)

செய்க சிந்தனை

 

செய்க சிந்தனை

Image result for thiruvalluvar

 

வாழ்வில் இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல இயற்கையானவை. வாழ்வெல்லாம் இன்பமாகவே வாழ்ந்தாரும் இல்லை; முழுதும் துன்பத்தால் துவண்டாரும் இல்லை என்பது பழமொழி. எனவே இன்பம் கண்டு மகிழ்வது போல, சிந்தனையாலும், செயலாலும் துன்பம் கண்டு கலங்காமலும் வாழப் பயில வேண்டும்.

இன்பம், பிறரை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது; ஆனால் துன்பம், நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தித் தருகிறது. நம்மை, நமது மனஆற்றலை, நமது செயல்திறனை, நமக்கு அமைந்த சூழலை, நாளடைவில் எதிர்கொள்ளும் சிக்கலை இவற்றிற்கெல்லாம் தீர்வுகாணும் கலையைத் துன்பம் தெளிவாகப் புலப்படுத்திக் காட்டுகிறது.

பட்டை போடப் போட வைரம் ஒளிவிடுவதைப் போல, துன்பம் அடுக்கடுக்காய் வரவர மனிதன் சோதிக்கப்பட்டுத் தன் மதிப்பை அடைகின்றான். துன்பங்கள் அவனுடைய உண்மையான குண இயல்புகளை வெளிக்கொணர்கின்றன. அவன் பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்க்கிறபோது தன்னுடைய துன்பங்களைச் சகித்துக் கொள்ளக் கற்று விடுகிறான்.

‘உடல் உள்ளவரை, கடல் கொள்ளாத கவலை’ என்பார்கள். கவலைகளே, துன்பத்தைப் பிடித்து நம்மிடம் கொணரும் வலைகள்! நம்மில் பலர் அளவுக்கு மீறிக் கவலைப்பட்டு வருகிறோம்; நூறாண்டுகள் கவலைப்பட்டாலும் அக்கவலை ஒரு காசுக்கடனைக்கூடத் தீர்க்க உதவாது என்பதை அறிந்திருந்தும்கூட, நாளும் கவலைப்படுகிறோம்.

மனத்தூடே நுட்பமாய் ஓடும் சிற்றோடை போன்ற கவலையை, நாமே ஊட்டம் கொடுத்து, அதைப் பெரிய கால்வாயாக ஆக்கிக்கொண்டு விடுகிறோம்.

இந்தக் கவலையே துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். இந்தக் கவலைதான் எத்தனை வகை! தன்னைப் பற்றி, தன் குடும்பம், உறவு முதலியன பற்றி, செய்யும் தொழில், சேர்ந்திடும் நண்பர் ஆகியோர் பற்றி, உட்பகை புறப்பகை பற்றி, ஊரும் நாடும் பற்றி, நோயும் சாவும் பற்றி – நமது கவலைத் தரு நாளும் ஒரு கிளை பரப்பி, துன்பங்கள் எனும் விழுதுகள் ஊன்றி நம் வாழ்வெல்லாம் நிழல் பரப்பிக் கொள்கிறது.

உலகில் சிக்கல்களும் சிரமங்களும் இல்லாத மனிதர் யார்? அமைப்பு எது? நாடு தான் எது? இத்துன்ப மேகங்கள் சூழக்கண்டு, கவலைப்பட்டு வாடுவதால், துன்பம் ஓடிடுமா? கவலைக்கான காரணங்களை ஆராய்ந்து, சிந்தனை செய்து ‘நோய் நாடி, நோய் முதல்நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ (948) என்றபடி செயலுக்குத் துணிய வேண்டும். கடந்த காலக் கவலைகளை மறந்துவிட்டு, ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ எனும் உற்சாகத்துடன், இன்றைக்கு உரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி, வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பங்கள், சோதனைகள் என்பன வேதனையைத் தந்தாலும் தமது ஆழ்ந்த சிந்தனையால் உருவாகும் செயல்திறத்தால் அவற்றைச் சாதனைகளாக மாற்றிக் கொள்ள முனைய வேண்டும். கடமையுறுதியோடு வேலையில் ஈடுபடுவதே கவலைக்குக் கைகண்ட மருந்து என்பது போல, செயலீடுபாடு மிகமிக சுடச்சுடரும் பொன் போல, வாழ்வும் ஒளி பெற்றுத் துலங்கும்.

“துன்பப் பறவைகள் தலையில் கூடுகட்டுவதை வேண்டுமானால் தடுக்கலாமே தவிர, அவை நம் தலைக்கு மேலே வட்டமிடுவதை ஒருபோதும் தவிர்க்க முடியாது” என்பார் மேலைநாட்டு அறிஞர் ஒருவர். உலகம் நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ளதோ இல்லையோ, ஆனால், அந்த உலகத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு, நமக்கு வரும் துன்பமே சாளரமாக அமைகிறது. இன்ப வேளையில் ஒருவன் கற்றுக்கொள்வதைவிட, துன்பம் வரும் நாளில்தான் அவன் அதிகம் கற்றறிந்து கொள்ளுகிறான்; நட்புரிமை, சுற்றுச்சூழல், உலகியல் உண்மை எனும் இவற்றை எல்லாம் சீர்தூக்கி அறியும் வாய்ப்பினைப் பெறுகிறான்.

ஆதலின் கவலையை, துன்பத்தை ஒரு சிக்கலாகக் கருதித் தீர்வுகாண முற்படவேண்டுமே தவிர, குனிந்து குமைந்து சிதிலமாகிப் போய்விடக்கூடாது. நம் சிந்தனைக்கு உட்படாத, தீர்க்கவியலாத சிக்கலாக அமையின், அதனையும் எதிர்நோக்கி, அதனையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்று, எப்படியும் வாழ்ந்துகாட்டத் துணிய வேண்டும். ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’  ஆதலால் உலக நடையினை அறிந்து, உயிருக்கு உரிய அறிவையும் ஆற்றலையும் பிறரிடத்துப் போலத் தானும் வளர்த்துக்கொண்டு, துன்பத்தை ஒரு சுவையாகப் பழகி, மாற்றி ஏற்றுக்கொண்டு உயர முற்படவேண்டும்.

“இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்

     கையாறாக் கொள்ளாதாம் மேல்”      (627)

என்பார் வள்ளுவர்.

இதனை உணர்ந்து, எதையும் தாங்கும் இதயம் கொண்டு, சிறு துன்பங்களைப் பழக்கமான ஒன்றாக ஏற்று, பெருந்துன்பங்களை எதிர்கொள்ளவேண்டிய ஒன்றாகக் கருதித் துணிந்து, ஆற்றலும் வன்மையும் பெற்று வாழவேண்டும். இவ்வாற்றலைப் பெறும் போது – நம்பிக்கை, மனத்திண்மை, சமநிலைப் பாங்கு என்பன நம்மோடு கை கோத்து உடன்வரும். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ (621) அப்படி அணுகும்போது – துன்பமும் இன்பமாக மாற முற்படும். பகைவரும் மதிக்கும் சிறப்புப் பெறவேண்டும் எனில், துன்பத்தையே இன்பமாக மாற்றும் ஆற்றல் பெற வேண்டும்.

துன்பத்தைப் பொறுத்துக் கொள்வது வேறு; அதனை இன்பமாக மாற்றிக் கொள்ளுதல் வேறு. எனவே துன்பத்தை இன்பமாக மாற்றிக் கொள்ளுதல் எல்லோருக்கும் இயலுமா எனக் கேட்கலாம். சான்றோர் வாழ்வில் அவர்கள் மேற்கொண்ட சாதனைகளைச் சாமானியர்களாகிய நாம் கைக்கொள்ள இயலுமா எனச் சந்தேகப்படலாம். சான்றோர்கள் நமக்காகவே வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களது வழியைப் பின்பற்றி ஓரளவு செல்ல முற்படும்போது அவர்கள் கண்ட சாதனைச் சுடர்கள் நமக்கு வழிகாட்டிக் கைகொடுக்க வந்துவிடும். துன்பம் வாழ்வின் கொடை. அதன் சுவை தெரிந்தால்தான் இன்பத்தின் சுவையும் புரியும். வெயிலருமை நிழலில் தெரிவது போல ஒன்றன் சிறப்பு மற்றொன்றில் புலனாகும். துன்பத்தை வாழ்விற்கு உதவும் சாதனையாக்கும் எளியது முடிந்தால் அரிய சோதனைகளைச் செய்து பார்க்க முனைகையில் – நாணயத்தின் இரு பக்கங்களைப் போல – இன்பமும் துன்பமும் தக்க சமன்பாட்டைக் காணும்.

துன்பச் சூளையில் அதிகம் வேகும்போது பொன்னார்ந்த மனம் புலப்பட்டு உதவுகிறது. துன்பம் ஒரு வகையில் பலருக்கும் கசப்புத்தான். என்றாலும் கசப்பே நாளடைவில் நாம் விரும்பும் சுவையாகிவிட முடியும். வேப்பங்கொழுந்தைச் சிறிது சிறிதாகத் தின்னப் பழகிக் கொண்டால் – அது சுவையான மருந்தாகி நலம் செய்வதைப் போல துன்பச் சுவையும் நலம் தரும் மருந்தாகிவிடும். வாழ்வில் துன்பமும் சில சமயங்களில் நமக்குத் தேவைதான். அழுக்குத் துணியை அடித்துத் தோய்த்து மாசு நீக்குதல் போல, நம்மைப் பீடிக்கும் பல்வேறு மனமாசுகளையும் நீக்கிக்கொள்ள, அத்துன்பத் தோய்வே தக்க பயன் தரும்.

சில சமயங்களில் துன்பம் வாழ்வின் மையமாக நின்று ஆட்டி வைக்கும் போது, அதிலும் ஒரு சுகம் காணலாம்; ஒருவகை லயம் இழைந்தோடுவதை உணரலாம். உண்மையில், எந்த ஒன்றும் முற்றிலும் துன்பம் தருவதில்லை. அத் துன்பத்தின் ஊடேயும் – புகை நடுவினில் தீ இருப்பதைப் போல – அத்துயரத்தின் நடுவிலும் வாழ்க்கை எனும் நம்பிக்கைத் தீ கனன்று கொண்டே இருக்கும். பக்குவமாக அதைச் சற்று ஊதிவிட்டு அணையாமல் அரவணைத்துக் கொண்டால், அது மறுபடியும் கொழுந்து விட்டெரியத் தொடங்கிவிடும். இந்த மனப்பக்குவத்தை எவரும் முயன்று ஆக்கிக் கொள்ள முடியும். அப்பக்குவம் கைவந்துவிட்டால், எதிரியும் பணிந்து நிற்கும் ஏற்றம் நமக்கு ஏற்பட்டுவிடும். காந்தியடிகள், பண்டித நேரு முதலியோரின் போராட்ட வாழ்வில் ஏற்பட்ட மனப்பக்குவங்கள் அவரவர் வாழ்வுப் போராட்ட முனைகளிலும் ஏற்பட்டே தீரும். இந்தப் பக்குவத்திற்கு உதவும் முதல்படி நமக்கு சிந்தனையில் செயலில் – ஒருவகைச் சமநிலைப் பாங்கு ஏற்படுதல் ஆகும்.

“துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

     இன்பம் பயக்கும் வினை”      (669)

எனும் வள்ளுவர் அறிவுரைப்படி, இன்பம் பயக்கும்  காரியங்களை, துணிவாற்றி – அதாவது கலங்காது – செய்ய வேண்டும். துன்பத்தைப் புறங்காணவும் வேண்டும். இன்பத்தை மேலும் மிகுவித்துக் கொள்ளவும் வேண்டும். இந்த ஆற்றலே பக்குவம். இப்பக்குவத்தின் அடுத்த படி- ‘நகுக’. நம்மை ஒரு மூன்றாம் நபர் போலக் கருதிக் கொண்டு, நமக்கு வரும் பிரச்சினைகளை அணுகவும் சமாளிக்கவும் முனையும் போது நகும் மனப்பாங்கும், நடுவுநிலைத் திறனும் நமக்கு ஏற்பட்டுவிடும்.

இன்று பழியும் பழிப்பும் அற்ற வாழ்க்கை அருகி வருகிறது. நமது அரசு முறைகளும், சமுதாய நடைமுறைகளும் பழிபடர்ந்த வாழ்வுக்கே முலாம் பூசுகின்றன. போட்டியும் பொறாமையும் அடர்ந்த வாழ்வில், எப்படியும் நிலைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் நண்பரே பகைவராகும் துன்பமும், சுற்றமே எதிராகும் துயரமும் வளர்ந்து வருகின்றன. ஊரெல்லாம் இவ்வாறு காற்று கெட்டுப் போயிருக்கையில், நமது நுரையீரலில் மட்டும் நல்ல காற்று வந்துவிடும் என எதிர்பார்க்கலாமா?

உலகப் போக்கோடு – அந்த வெள்ளத்தோடு அடித்துச் செல்லப் படுவதைவிட, அதற்கு எதிர் நீச்சலிடும் போதுதான்- வாழ்வில் ஒருவகைச் சுகம் தெரிகிறது. இந்தச் சுக அனுபவம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் உரியது; சற்று முயலும் எவர்க்கும் எளியது; நாளடைவில் எல்லோர்க்கும் இனியது.

பகைவரே போற்றும் இச்சிறப்பினை அடைய துன்பத்தையே இன்பமாக மாற்றிக் காட்டும் ரசவாத உணர்வு அவரவர் மனதில் – செயலில் – அரும்ப வேண்டும்; மலர வேண்டும்; மணம் பரப்ப வேண்டும்; அந்த மணம் பரவப் பரவ – சூழ்நிலைக் காற்றும் சுத்தமாகும். ஒருவர் பூசிக்கொள்ளும் வாசனை – சூழ்ந்திருப்போருக்கு எல்லாம் மணம் பரப்புகிறதல்லவா, அதைப் போல! வள்ளுவர் இதனையே,

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

எனப் பக்குவமாகச் சொன்னார்.

“துன்பமே இயற்கை எனும்

           சொல்லை மறந்திடுவோம்

     இன்பமே வேண்டி நிற்போம்

           யாவும் அவள் தருவாள்”

எனப் பரவசமுற்றுப் பாடினான் பாரதி.

மறக்கத் துணிவதும் – நாடி நிற்க முயல்வதும் – வாழ்க்கை நடைக்கு உதவும் இரு கால்களைப் போன்றவை. இந்த நடைப்பயிற்சியினையே நமது இலக்கியங்கள் எல்லாம் பேசுகின்றன.

திருக்குறளும் கீதையும்*

Image result for thirukkural

இந்திய நாட்டுப் பொதுநூல்களின் வரிசையில் முன்னிடம் பெறுபவை இராமாயணமும் மகாபாரதமும் திருக்குறளும் ஆகும். இராமாயணம் இனியதொரு நீதி நூல்; மகாபாரதம் விரிந்ததொரு சமூகச் சாத்திரம்; திருக்குறள் ஓர் உலகப் பொதுமறை. மகாபாரதத்தை அருளிய வியாசர், ஏறத்தாழ இலட்சம் சுலோகங்களில் எண்ணிலாச் சித்திரங்களையும் வரலாற்று நடப்புகளையும் பேராற்றலுடன் வருணித்துள்ளார்.

மாபெரும் தங்கச் சுரங்கம் போலவும். பரந்து பட்டதொரு கானகம் போலவும் அமைந்துள்ள மகாபாரதத்தின் உயிர்நிலையாக இருப்பது கீதை. பல்வேறு தத்துவச் சுடர்களும் உபதேச மணிகளும் இக்கீதையிலிருந்து பிரவகித்துள்ளன. தரும ஞானக் கருவூலமான இக்கீதை, மகாபாரதத்தில் ஒரு சிறு அங்கமே ஆயினும், இந்து சமய சாத்திரத்தின் மணிமுடியாகவே அது திகழுகிறது. கீதையை கிருஷ்ண பகவான் குருசேத்திரப் போர் நடுவே அர்ச்சுனனுக்கு அருளினார். போரில் தன் தாயாதிகளுடன் மோதி நிற்க வேண்டியதொரு இடர்ப்பாட்டிற்கு உள்ளான அர்ச்சுனனின் கலக்கத்தை அகற்றி அவனைப் போரில் மன உறுதியோடு ஊன்றி நிற்கச் செய்வதற்காகக் கீதை அருளப்பட்டது எனக் கருதப்படுகிறது. என்றாலும், கீதை அருளப்பட்டதன் முழுநோக்கமும் இது இல்லை என்பதை அதனை ஆழ்ந்து கற்கும் எவரும் எளிதில் அறிய முடியும். கோழைத்தனத்தை அகற்றுதல் எனும் எளியதொரு நோக்கத்தை விட, வாழ்வுப் பேருண்மைகளை உணர்த்தி, மக்களின் உள்ளத்தை மூடும் மேகப் படலங்களை அகற்றி, மன உறுதியோடும், கடமைப் பற்றோடும் வாழ்ந்திட வழிகாட்டுவதே அதன் விழுமிய நோக்கமாகும்.

“அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

     எண்ணி இடத்தான் செயின்          (497)

“கடன்என்ப நல்லவை எல்லாம்” (981)

இந்திய ஞான வாழ்வின் கலைக்களஞ்சியமான கீதைக்கு நிகராக, தமிழ் மண்ணில் மலர்ந்த வாழ்க்கை நூல் திருக்குறள். வாழ்க்கைப் போரில் அவரவர் சந்திக்கும் சிக்கல்களுக்கெல்லாம் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் தீர்வு நல்கிக் காலத்தை வென்று நிற்பது திருக்குறளின் பெருஞ்சிறப்பாகும். கீதை, திருக்குறள் எனும் இரண்டிலும் பொதிந்துள்ள சில பொதுக்கூறுகளை மட்டும் சுருக்கமாக நம் நினைவுப் படலத்திற்குக் கொணர்வோம்.

திருக்குறள் நடுநிலைப் பண்போடு உலகிற்கே அறம் உணர்த்திய திருமறையாகவும் பொதுமறையாகவும் திகழ்வது; உலக மக்கள் அனைவரின் நல்வாழ்விற்கும் பெருவாழ்விற்கும் ஒப்பில்லாப் பொதுமை நலம் தருவது; உயர் நாகரிகமுடையதாய் இனம், நாடு, மொழி, சமயம், காலம் இவையெல்லாம் கடந்த தனக்கு உவமையில்லா முதல் நூலாக விளங்குவது; வேறுபடும் சமயங்கள்கூடத் தமதென உரிமை கொண்டாடிப் போற்றிப் பாராட்டிடும் புகழுடன் திகழ்வது.

மகாபாரதத்திற்கு ஒரு பக்கம் ஆறு பருவங்களும், மறுபக்கம் பன்னிரண்டு பருவங்களும் அமைந்திருக்க அவற்றினிடையே நந்தா விளக்கெனக் கீதை இலங்குகிறது.

கீதையின் முதல் அதிகாரம் அர்ச்சுனனின் மனப் போராட்டத்தைக் குறிக்கின்றது. அவனது பரிவுணர்ச்சி இதில் மேலோங்கி நிற்கிறது. இரண்டாம் அதிகாரம் உடலெடுத்த ஆன்மா அழிவில்லாதது எனும் சாங்கிய யோக அடிப்படையை எடுத்துரைக்கிறது; சுயதர்மப்படி இதில் மிகுதியும் வலியுறுத்தப்படுகிறது. மூன்றாம் அதிகாரம் கர்ம யோகத்தைக் கற்பிக்கிறது. நான்காம் அதிகாரம் நேர்மையான சிந்தையின் அவசியத்தைப் போற்றுகிறது. அதர்மம் ஓங்கித் தர்மம் குன்றும் போதெல்லாம் கடவுள் அவதாரம் எடுப்பார் எனும் ‘சம்பவாமி யுகே யுகே’ என்னும் வாசகம் இந்த அதிகாரத்தின் மணிமுடியாக நிற்கிறது. “எந்த வழியில் அணுகினும் அந்த வழியில் நான் அன்பு காட்டுகிறேன்.” எனும் தத்துவ தரிசனங்கள் இப்பகுதியின் சிறப்பு அம்சங்கள். ஐந்தாம் அதிகாரம், ஒருவன் ஞானத்தை உணர்ந்து, தன் கர்மங்களைக் கடந்து நிலைபெற வேண்டும் என்ற கர்ம சந்நியாச யோகத்தைக் கற்பிக்கிறது.

ஆறாம் அதிகாரம் யோகத்தின் குறிக்கோள் பரம்பொருள் அனுபவம் என்பதை எடுத்துரைக்கிறது. எல்லா உயிர்களையும் ஆத்மாவினுள் காணும் சம தரிசனத்தை, “காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன், கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா” எனப் பாரதிக் கவிஞன் கண்டுணர்ந்த மெய் அனுபவத்தை நமக்குப் புலப்படுத்துகிறது.

ஏழாம் அதிகாரம் ஞான யோகத்தையும், எட்டாம் அதிகாரம் பிரம்ம யோகத்தையும் விளக்கி நிற்க, ஒன்பதாம் அதிகாரம் ‘அனைத்தும் என்னுள் உயிர் பிழைத்திருப்பன’- எது செய்தாலும் எனக்காக நல்கி விடு – எனும் ராஜ யோகத்தை விளம்புகிறது.

பத்தாம் அதிகாரம் பரம்பொருளின் புகழையும் மாட்சியையும் விண்டுரைக்கிறது. பதினொன்றாம் அதிகாரம் விசுவ தரிசன யோகமாக, அகிலத்துக்கும் நீயே தந்தை எனத் தன்னையே அர்ப்பணித்து வணங்கும் தொழுநிலையைக் காட்டுகிறது.

பன்னிரண்டாம் அதிகாரம் பக்தி யோகத்தையும், பதின்மூன்றாம் அதிகாரம் அறியப்படும் உண்மைப் பொருள் பற்றியும் பேசுகின்றன. பதினான்காம் அதிகாரம்  குணத்ரய விபாக யோகம் பற்றியும், பதினைந்தாம் அதிகாரம் புருஷோத்தம யோகம் பற்றியும் உரைக்கின்றன. ‘மேலே வேரும் கீழே கிளைகளும் உள்ள நித்திய அரசமரம்’ இதில் சுட்டப்படுகிறது. பதினாறாம் அதிகாரம் தெய்வாசுர சம்பத் விபாக யோகத்தையும் பதினேழாம் அதிகாரம் ‘ஓம் தத் சத்’ (ஓம் – அது உனது) எனும் பிரம்மனைச் சுட்டும் அடையாள மந்திரத்தைக் காட்டுகிறது. பதினெட்டாம் இறுதி அதிகாரம் ஒருவன் பிரம நிலைக்கு உயரும் அமர நிலையைச் சுட்டுகிறது.

அமரநிலை சுட்டிப் பேசும் கீதையைப் போலவே, திருக்குறளும் வானகம் இங்குத் தென்படச் செய்யும் வழிகளை விதந்தோதுகிறது. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” (50) என வையத்து மனிதரெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்திட வரம்பு கோலித் தருகிறது. எனவே தான் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டதாகத் தமிழ் நாட்டைப் பாரதிப் புலவன் பாடிப் பரவினான். தாம் யாத்த நூலுக்குச் சிறப்பீட்டித் தந்துள்ளார் வள்ளுவர். கீதை போல, உலகிற்கென ஒரு நூலை அளித்த பெருமையை இந்தத் தமிழ் மண்ணுக்கு அவர் அளித்துள்ளார்.

திருவள்ளுவரின்  நூல் அறம், பொருள், இன்பம் எனப் பகுக்கப்பட்டுள்ளது அறமும் பொருளும் காதலும் ஓர் இனத்தாருக்கே உரியன அல்ல. அவை எல்லா மனிதர்க்கும், இந்த உலகிற்கும் பொதுவானவை. ‘உலகம் ஒரு குலம்’ என்பதே திருக்குறளின் உயிரோட்டம். உலகம் ஒரு குலமாக விளங்க வேண்டுமெனில், அந்த உயிரோட்டத்திற்கு, அன்பு எனும் குருதியோட்டம் நிலையாக இயங்குதல் வேண்டும். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ (80) என்பதே வள்ளுவத்தின் நிலையான குருதியோட்டம். அன்பினை வளர்த்து வாழ்வதே மக்கட் பிறவியின் நோக்கம்; வாழ்க்கைக் கலையின் ஆக்கம் பண்பும் பயனும் உடைய இல்வாழ்க்கை யினைத் தேர்ந்து தெளிந்து நடந்திட வலியுறுத்துவதே வள்ளுவர் நெறி. வள்ளுவர் நெறிக்கு அடிப்படை அறம். மனத்துக்கண் மாசிலனாக வாழ்வதே அனைத்து அறன்; அகிலத்து அறன். இன்று உலகில் மண்டியுள்ள அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்பன எல்லாம் இழுக்கானவை; அற ஒழுக்கத்திற்குப் புறம்பானவை.

Image result for thirukkural

திருவள்ளுவர் ஆட்சி நெறியிலும் பொருளாதார முறையிலும் பொதுமை அறமே பேசுகிறார். மன்னராட்சி விளங்கிய காலத்தே எழுதப்பட்டாலும் மக்களாட்சி துலங்கும் காலங்களுக்கும் பொருந்தும் வகையிலேயே அவர் ஆழ்ந்த தொலைநோக்கோடு எழுதியுள்ளார். பொதுமையும் மனத்தூய்மையும் இரு கண்களாக அமைய வாழ்வரங்கு முழுமைக்கும் அவர் வழிகாட்டியுள்ளார். ஒப்புரவு, ஈகை, புகழ், இன்னா செய்யாமை, நட்பு, குடிமை முதலிய எண்ணற்ற சிந்தனைத் தருக்களை நிறுவி அவ்வரங்கு முழுமைக்கும் நிழல் பரப்பியுள்ளார்.

பலர்க்கும் பல வகையாகப் பயன்படும் சிறப்புடைய திருக்குறளை, இலக்கிய நூலாகவும் அறவழிச் சுரங்கமாகவும் இலங்கும் திருக்குறளை, பகவத்கீதையோடு ஒப்பிட்டுச் சில கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன்.

“இந்த நூலை, மூளை கொண்டு கற்காமல் இதயம் கொண்டு உணர வேண்டும்” எனக் காந்தியடிகள் பகவத் கீதையைப் பற்றி எழுதினார். இது திருக்குறளுக்கும் பொருந்தும். இன்னும் ஒரு படி மேலே சென்று மதிப்பிடுவதென்றால், திருக்குறளை மூளை கொண்டும் கற்கலாம்; இதயம் கொண்டும் உணரலாம். அறியவும் உணரவும் காலமெல்லாம் வழிகாட்டும் கற்பக விருட்சங்களாக விளங்கும் கீதையையும் திருக்குறளையும் ஒரு சில நிலைகளில் நின்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.

திருக்குறளும், கீதையும் வாழ்வில் முழு நிறைவு நூல்களாகும். மனிதனை நிறைமனிதனாக்குவது இரு நூல்களின் அடிப்படையாகும்.

வாழ்விற்கு வழிகாட்டியும், எக்காலத்திலும், எல்லோருக்கும் முரணின்றி அறிவொளி பரப்பியும் நன்மையும் பயனும் நல்கியும் பெருமையுற்று நிலைத்து நிற்பவை. உண்மை நிறைந்து, அறிவுக்கு ஏற்புடையனவாய் மறைமொழிகளாக மனிதனை நிறைவுபடுத்தும் நிறை மொழிகளாகக் காலத்தையும் வென்று வாழ்பவை.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

     மறைமொழி காட்டி விடும்” –             (28)

‘தூய, அன்பையும், ஞாயிறு போன்ற, அறியாமை இருளகற்றி நலம் செய்யும் தெளிந்த செயல் அறிவையும், உறுதியான ஆற்றலையும் ஒருங்கே அமையப்பெற்றவன் நிறை மனிதன் ஆகின்றான்’ என்று கீதை இயம்புகிறது.

கண்ணன் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருடைய கூற்றுக்கு இலக்கணமாகியது. ‘மனத்திலுள்ள மாசு நீக்குக’ என்றார் கண்ண பெருமான்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;

     ஆகுல நீர பிற”              (34)

என்றார் வள்ளுவர்.

‘நலத்தை நிலைநாட்டுபவர்க்கு நல்லவை எல்லாம் தம் கடமை’ என்றார் கண்ணபெருமான்.

“கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

     சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு”        (981)

என்றார் வள்ளுவர்.

“உயிர்களிடத்து அன்பு கொண்டு வாழ்க” என்று அன்புருவாகவே வாழ்ந்தார் கண்ணன்.

“அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

     என்போடு இயைந்த தொடர்பு”       (73)

“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

     இன்புற்றார் எய்தும் சிறப்பு”               (75)

என அன்பின் பெருமை பேசினார் வள்ளுவர்.

கருணையுடன் பிறர் துன்பம் கண்டு இரங்கி துன்பம் நீக்கி இன்பம் நல்க வேண்டும். அருள் கொண்டு தொண்டு செய்து வாழும் போது தான் நிறை நிலை, முழுநிலை, தெய்வநிலை பெற இயலும். பல வகையால் ஆராய்ந்தாலும், அன்பும் கருணையும் தான் துணை. ஆகவே “நல்லாற்றின் நாடி அருள் ஆள்க. பல்லாற்றான் தேரினும் அஃதே துணை” என்பார் வள்ளுவர். அறிவு பெற்றதன் பயனே பிற உயிர்கள் துன்பம் கண்டு இரங்கி அன்பு கொண்டு நலம் செய்வது தான். அதுவன்றி பெற்ற அறிவால் பயனுண்டோ? என்று வினவுவார் வள்ளுவர்.

“அறிவினால் ஆகுவதுஉண்டோ பிறிதின்நோய்

     தம்நோய்போல் போற்றாக் கடை”          (315)

“வலிவு படைத்தோன் வாழ்வுக்கு உரியவன்”

Image result for bhagavad gitaஎன்று கூறுகிறது கீதை. “உள்ளம் உடைமை உடைமை” “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்; எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்” என்று உள்ள வலிவையும், பேராற்றலையும் வியந்து பேசுவார் வள்ளுவர். “எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத் திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு” என்பார் வள்ளுவர். பேராற்றல் படைத்த மனிதன் தன் ஆற்றலை உணர வேண்டும் “அரிய என்று ஆகாதது இல்லை. ஆதலின் சிறியவராய், புன்மையராய் சீர் குன்றாமல், பெரியோராய் செயற்கரிய செயல் செய்ய வேண்டும்”.

மனித உயிர்களை அன்போடு நேசித்து,‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ (71) என்று உணர்ந்து, என்பும் பிறர்க்கு உரியதாக்கி அன்புற்று வாழ்க! கொத்தாக மலர்ந்து மணம் வீசும் மலர்கள் போல, ஒளி வீசும் பகலவன் போல, அறிவு மணம் மலர்க; அறிவாற்றல் நிறைக – நல்லவை யெல்லாம் கடனாகக் கொண்டு கடனறிந்து சான்றாண்மை மேற்கொள்க!

இத்தகு செயல்களாலே உலகம் இன்புற்று வாழும் எனக் குறளும் கீதையும் உலகப் பொது நூல்களாய் வழிகாட்டி நிற்கின்றன.

காமம், கோபம், மயக்கம், யான் எனது என்னும் செருக்கு நீங்கித் தெளிந்த மனமுடைய மெய்யறிவு பெற்றவர் துயருறுவதில்லை. ‘எல்லா உயிர்களிடமும் தூய சம அன்பு செலுத்துபவன் என்னுடன் ஒன்றறக் கலக்கின்றான்’ என்று கூறும் கீதை.

“காமம் வெகுளி -மயக்கம் இவைமூன்றன்

     நாமம் கெடக்கெடும் நோய்”         (360)

 

“யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

     உயர்ந்த உலகம் புகும்”        (346)

 

     காமமும் மோகமும் – பேராசையும்,

     கோபமும் – மயக்கமும் நீங்கி

     நான் – எனது என்ற அகந்தைகளும்

     நீங்கி வாழ்ந்தால் துன்பங்கள் மறையும்.

இன்பங்கள் பெருகும். வேண்டுதல் வேண்டாமை இல்லாது கடமையாற்றும்போது எண்ணியவை, சொல்லியவை மாறுபடாது. உறுதியான, இடைவிடாப் பயிற்சியால் செயல் ஆற்றும்போது மனம் மகிழ்வுறும், உலகம் அமைதியுறும். உலகம் வாழும்.

கீதையும் திருக்குறளும் வாழ்விற்கு நம்பிக்கை அளிப்பவை, வாழ்க்கையில் நேரிடும் இடர்கள், துன்பங்கள் நீக்குபவை. அச்சம் தவிர்த்து, மோகம் நீக்கி, மயக்கம் தவிர்த்து, மும்மலம் நீக்கி, கடமையை உணர்த்தி, செயலினைப் போற்றி, மனித குலத்தை மாண்புறச் செய்து வானுறையும் தெய்வத்திற்கு இணையாய் அமரர்களாக வாழ வழி வகுப்பவை.

கீதை காட்டும் பாதையும், வள்ளுவர் காட்டும் வழியும் ஒன்றோடு ஒன்று இசைந்தவை; இணைந்தவை; கீதையில் குறளையும் குறளில் கீதையும் காண்கின்றோம்.

 

 

சிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்களின் ஆட்சி

 

Image result for thirukkural

உலக மக்களின் ஒப்பற்ற வழிபாட்டு நூலாகவும், வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலாகவும் பொதுமை நூலான திருக்குறள் போற்றப்பட்டு வருகிறது.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

எனப் பாரதியார் பாடியது வெறும் புனைந்துரை அல்ல. வள்ளுவரது நெஞ்சமும் உலகோர் வாழ்வியல்பும் ஒரு தராசில் சம எடையாக நிறுத்தளந்தது போல் ஒரு சீராக நிற்பதைக் கண்டறிந்து கூறிய மெய்யுரை இது.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால்

     இல்லாத எப்பொருளும் இல்லையால்”

எனும் திருவள்ளுவமாலையின் கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் வள்ளுவர் கூறிய திருக்குறள் கருத்துக்களைப் பின்னர் வந்த தமிழ்ப்புலவர் அனைவரும் தத்தம் நூல்களில் எடுத்தாண்டுள்ளனர். அந்நூல்களுக்கெல்லாம் வழிகாட்டிய முதல் நூலாகத் தோன்றிய நூல் திருக்குறள். திருவள்ளுவர் வகுத்துத் தந்த வழியினைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள், இலக்கியங்கள், காப்பியங்கள் தோன்றின என்பது தமிழ் ஆய்வாளர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழியில் தோன்றிய முதல் தமிழ்க் காப்பியம் என்றும், இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் முத்தமிழ்க் காப்பியம் என்றும், குடிமக்கள் காப்பியம் என்றும் போற்றப்படும் நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தமது காப்பியத்தின் போக்கில் ஆங்காங்கே திருவள்ளுவரின் கருத்துக்களை விதைத்து அவற்றைக் கற்பக மரமாக வளர்த்துள்ளமை நன்கு புலனாகின்றது.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்

     உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

     ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

     சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்

     சிலப்பதி காரம் என்னும் பெயரால்

     நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்.” (பதிகம்:55&60)

பாண்டிய மன்னன் தான் செய்த தவறுக்காக வருந்தி இறப்பது ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதைக் காட்டுகிறது. அரசியல் நெறி தவறி ஆட்சி புரிபவர்களைத் தரும தேவதையே தண்டிக்கும்.

மங்கல வாழ்த்து முதல் வரந்தரு காதை வரை கண்ணகியை பத்தினித் தெய்வமாக்கிக் காட்டுகிறார் இளங்கோவடிகள் கற்பரசிகளைச் சான்றோர் போற்றிப் பரவுவர், கோயிலும் எழுப்புவர் என்பது ‘உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்’ என்பதால் பெறப்படுகிறது.

Image result for kovalan madhaviகோவலன் மாதவியைப் பிரியும் போதும், கோவலனும் கண்ணகியும் புகார் நகரை விட்டுப் பிரியும் போதும், கொலைக் களத்தில் கோவலன் உயிர் பிரியும் போதும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது மெய்யாகிறது. மதிக்கும், விதிக்கும் நடக்கும் போரில் விதியே இறுதியில் வெல்கிறது.

சிலப்பதிகாரத்தின் நோக்கங்களும், இளங்கோவடிகளின் அடிப்படைக் கொள்கைகளும் இம்மூன்று உண்மைகளே! காப்பியத்தின் நோக்கமாகவும், குறிக்கோளாகவும் சுட்டப்படும் மூன்று உண்மைகளிலும், அறம், கற்பு நெறி, ஊழ்வினை எனும் கருத்துக்களே வலியுறுத்தப்படுகின்றன. இந்த மூன்று உண்மைகளை நிறுவுவதற்கு இளங்கோவடிகள் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் கருத்துக்களையே தோன்றாத் துணையாகக் கொண்டு தமது காப்பியப் பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

திருவள்ளுவரின் கருத்துக்கள் இந்த மூன்று நிலைப் பாடுகளில் எவ்வகைகளில் எல்லாம் துணை நிற்கின்றன என்பதை அறிய முயல்வோம்.

செங்கோன்மை என்பது நல்ல முறையில் ஆட்சி செய்தல். ஒரு வழக்கை நன்கு ஆராய்ந்து ஒரு பக்கமே அன்பு செலுத்தி சார்ந்து விடாமல் நடுவுநிலைமையுடன் இருந்து சாட்சிகளைத் தீர விசாரித்த பிறகு தீர்ப்பு வழங்குவது செங்கோன்மை ஆகும். அது நல்ல ஆட்சி முறைக்குச் சிறந்ததும் ஆகும்.

“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

     தேர்ந்துசெய் வஃதே முறை”          (குறள்:541)

எனும் வள்ளுவரின் கருத்து சிலம்பில்,

“சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி,

     ஊர்காப் பாளரைக் கூவி ஈங்குஎன்

     தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு

     கன்றிய கள்வன் கையது ஆகில்

     கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கு”

(சிலப்பதிகாரம்:16:149&153)

என வேறு சொற்களில் கூறப்பட்டுள்ளது.

வேம்பு சூடிய பாண்டிய மன்னன் சிறிதும் ஆராய்ந்து பாராதவனாகி காவலரைக் கூவி அழைத்து ‘அக்கள்வனைக் கொன்று அச்சிலம்பை இங்குக் கொணர்க!’ என்றான். இங்கு ஒரு மன்னன் தீர விசாரிக்காமல் கூறிய வார்த்தைகளால் நீதி தவறி விட்டான் என்பது புலனாகிறது.

ஆடல் மகளிரின் ஆடல் பாடல் கண்டு சுவைத்துக் கொண்டிருந்த பாண்டியனின் நிலை கண்டு கோப்பெருந்தேவி தலைநோவு எனக் காரணம் காட்டி ஊடலினை வெளிப்படுத்தாது அவையை விட்டு அகன்றாள். அரசியை அவையில் காணாது பாண்டியன் அரசியின் ஊடல் தணிக்க அந்தப்புரம் சென்று கொண்டிருந்த வேளையில் பொற்கொல்லன் தனது சாமர்த்தியத்தால் சாதுரியமாகக் கோவலன் மீது குற்றம் சாட்டி நிற்க, அந்த நேரத்தில் தான் செல்லும் அவசரத்தில் ஆராயாது பாண்டியன் கூறிய வாய்மொழி நீதி தவறச் செய்தது.

Image result for pandian kannaki

“எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

     தண்பதத்தான் தானே கெடும்”  (குறள்: 548)

அரச தர்மம் என்று கருதப்பட்ட தன்மையுடன் ஆராய்ந்து நீதிநெறி செலுத்தாத மன்னன் தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான் என்பது வள்ளுவம் வகுத்துள்ள நீதிநெறி. இதே கருத்தினை வலியுறுத்தும் வகையில் சிலம்பில் வழக்குரை காதைப் பகுதியில் பாண்டியனின் சால்பை விளக்குகின்ற நோக்கில் கூறப் பட்டுள்ள வெண்பா இது:

“அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம்ஆம் என்னும்

     பல்லவையோர் சொல்லும் பழுதன்றே!” (1)

என இங்கே வள்ளுவம் எடுத்தாளப்பட்டுள்ளது.

அறம் அல்லாதவைகளைச் செய்தவர்களுக்கு அறமே கூற்றாக அமையும், அறமே எமனாக இருந்து தண்டிக்கும் என்று ஆன்றோர்கள் கூறும் சொற்கள் பொய்யல்ல.

“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

     செல்வத்தைத் தேய்க்கும் படை”   (குறள்: 555)

மன்னனின் ஆட்சிக் கொடுமையைத் தாங்க முடியாது குடிமக்கள் அழுது வடிக்கும் கண்ணீரே அந்த ஆட்சியை (அரசனை) அழிக்கும் கருவியாகும்.

“அல்லல்உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டுஏங்கி

     மல்லல் மதுரையார் எல்லாரும் தாம்மயங்கிக்

     களையாத துன்பம்இக் காரிகைக்குக் காட்டி

     வளையாத செங்கோல் வளைந்தது இதுஎன்கொல்?”

(சிலப்பதிகாரம்:19:15&18)

துன்புற்று ஆற்றாது அழுது புலம்பும் கண்ணகியைக் கண்டு ஏங்கி மதுரை நகர் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். நீக்க முடியாத துன்பத்தினை இக்காரிகைக்குச் செய்து எக்காலத்தும் வளையாத மன்னவனின் செங்கோல் வளைந்ததே என எண்ணித் துன்புற்றனர்.

இங்கு, ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரின்’ பதிவே சிலம்பில் ‘அல்லல் உற்று ஆற்றாது அழுவாளே’ என்பது.

“இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

 உறைகடுகி ஓல்லைக் கெடும்”  (குறள்: 564)

மக்கள் கூறும் தீச்சொல்லுக்கு ஆளாகும் வேந்தனுடைய வாழ்நாளும் குறையும். செல்வமும் விரைந்து கெடும்.

வழக்குரை காதையில் பாண்டிய மன்னனைப் பார்த்து கண்ணகி ‘தேரா மன்னனே!’ என்று விளிப்பாள். ‘ஆராய்ச்சி இல்லாத மன்னவனே’ என்பது இதன்பொருள். இறைகடியன் என்னும் இன்னாச்சொல். அச்சொல் வலிமைபெற்று பாண்டிய மன்னனைத் தன் ஆட்சிக்கு ‘என்னால் தவறு நேர்ந்து விட்டதே’ எனக் கதற வைத்து,

“யானோ அரசன்? யானே கள்வன்!

     மன்பதை காக்கும் தென்புலம் காவல்

     என்முதல் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள்!”

(சிலப்பதிகாரம்:20:75&77)

எனத் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு உயிர் துறக்கச் செய்தது. ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் (அறம்) நின்று கொல்லும்’ எனும் பழமொழியும் நோக்கத்தக்கது.

அறம் வலிமையுடையது. அதனால் தான் வள்ளுவர் அறனை வலியுறுத்திப் பேசுவார். மனிதராகப் பிறந்திட்ட அனைவரும் அற வாழ்க்கையினை மேற்கொண்டால் துன்பம் இல்லை. மனதில் குற்றமில்லாதவனாக இருத்தலே சிறந்த அறம் என்பார் வள்ளுவர். பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு குற்றங்களையும் நீக்கிச் செய்யப்படும் செயல்களே அறமாகும். இத்தகைய அறம் நாட்டினை ஆளுகின்ற மன்னனுக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. மக்கள் தவறு செய்தால் மன்னனிடம் முறையிடலாம். மன்னனே தவறு செய்தால் யாரிடம் முறையிடுவது? என்ற வினாவிற்கு விடையாக அமைவது அறம் அவ்வேலையை செய்யும் என்பதே. மன்னவன் தவறு செய்தால் அறமே கூற்றாக மாறித் தண்டித்து விடும். இக்கருத்துக்களை வலியுறுத்தியே இளங்கோவடிகள் ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதனை வள்ளுவரின் துணை கொண்டு நிறுவுகிறார்.

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு”      (குறள்:32)

“உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்”

என்பது சிலம்பின் இரண்டாவது நோக்கம்.

போக நீள் புகழ் மன்னும் புகார் நகரில் வான்நிகர் வண்கை மாநாய்கனின் குலக்கொம்பாகத் தோன்றியவள் கண்ணகி. திருமகளைப் போன்ற வடிவமும், அருந்ததியின் கற்பை ஒத்த திறனும் உடையவள் என அறிமுகப்படுத்து கிறார் இளங்கோவடிகள். கணவனையே தெய்வமாகத் தொழக்கூடியவள் அவள்.

கனாத்திறம் உரைத்த காதையில் தேவந்தி கண்ணகியை நோக்கி ‘தாழை மலர் மணம் பரப்பும் நெய்தல் நிலத்துச் சோலையில் சோமகுண்டம், சூரியகுண்டம் எனும் இரு பொய்கைகள் உள்ளன. அப்புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி காமவேள் கோட்டம் சென்று காமதேவனைத் தொழும் மகளிர் இம்மையில் தம் கணவருடன் கூடிப் பிரியா வாழ்வு வாழ்ந்து இன்புறுவர். எனவே நாமும் ஒரு நாள் அவற்றில் நீராடுவோம்’ என்றாள். அதுகேட்ட கண்ணகி, அங்ஙனம் துறைமூழ்கித் தெய்வம் தொழுதல்.

“பீடு என்று”           (சிலப்பதிகாரம்:9:64)

என்று கூறி தேவந்தியின் கருத்தினை ஏற்க மறுத்தாள். கணவனைத் தெய்வமாகத் தொழக்கூடியவர்கள் மற்றைய தெய்வங்களைத் தொழ வேண்டியதில்லை என்பதனைக் கண்ணகி வாயிலாக உணர்த்துவதைக் காண்கிறோம்.

“தெய்வம் தொழாஅள். கொழுநன் தொழுதுஎழுவாள்

 பெய்எனப் பெய்யும் மழை”         (குறள்: 55)

என்பது வள்ளுவம்.

‘வேறு தெய்வங்களைத் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கருதி தொழுது உறக்கத்திலிருந்து கண்விழிப்பவள் பெய் என்றால் மழை பெய்யும்’ எனும் கருத்தினை உணர்த்தும் வகையில் மதுரைக் காண்டத்தின் இறுதியில் வரும் வெண்பா வருமாறு;

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்

     தெய்வம் தொழும்தகைமை திண்ணிதால் & தெய்வமாய்

     மண்ணக மாதர்க்கு அணியாய் கண்ணகி

     விண்ணகமா தர்க்கு விருந்து”

மண்ணக மகளிர்க்கெல்லாம் அணி போன்றவளான கண்ணகி தெய்வமாகி விண்ணக மகளிர்க்கு விருந்தாயினள். வேறு தெய்வத்தைத் தொழாது தன் கணவனைத் தொழுவாளைத் தெய்வமும் தொழும்.

“வானம் பொய்யாது வளம்பிழைப்பு அறியாது

     நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது

     பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு”

Image result for kovalan kannagi

(சிலப்பதிகாரம்:15:145&147)

கணவனைத் தெய்வமாகத் தொழுது எழும் பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில் பருவமழை தவறாது, நிலவளமும் குன்றாது, பெரிய நிலப்பரப்பை ஆளும் வேந்தரின் வெற்றியும் சிதையாது என்ற சிலம்பின் பகுதிகளில் திருக்குறள் கருத்துக்கள் நிலைபெற்று பத்தினிப்பெண்டிரின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. கோவலன் கண்ணகியை ‘கற்பின் கொழுந்தே’ எனப் பாராட்டுகிறான். தோழி கண்ணகியைக் “கற்புக்கடம் பூண்ட காதலன் பின்வந்த பொற்றொடி நங்கை” எனப் போற்றுகின்றாள். சாலினி தெய்வமுற்ற போது, “இவளோர் கொங்கச்செல்வி குடமலையாட்டி, தென்தமிழ்ப்பாவை செய்தவக்கொழுந்து, ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி” எனப் பாராட்டுகின்றாள். கற்பில் சிறந்தோரைத் தெய்வநிலையில் வைத்துப் போற்றிய தன்மையும், தெய்வமாக வழிபட்ட தன்மையும் வழக்கத்தில் இருந்தமை தெரிகிறது. கவுந்தியடிகள் மாதரியிடம் கண்ணகியை அடைக்கல மாக்குகையில் “கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலம்” எனப் பாராட்டுகிறார். ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ என்பதைக் காண்கிறோம். அக் காலத்தில் போரில் வீரமரணம் அடைந்தோர்க்கு மட்டும் கல் எடுத்து வழிபட்டனர். கற்பின் சிறப்பால் கண்ணகிக்கும் கல் எடுத்து வழிபட்டமையைச் சிலம்பின் மூலம் அறிகிறோம்.

“என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்! பலர்என்ஐ

     முன்நின்று கல்நின்ற றவர்”           (குறள்:771)

“பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும்

     திண்மைஉண் டாகப் பெறின்”  (குறள்:54)

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

     தெய்வத்துள் வைக்கப் படும்”         (குறள்:50)

எனும் திருக்குறள் சிந்தனைகள் சிலம்பில் சித்திரங்களாய்த் தீட்டப்பெற்றுள்ளமை கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

‘உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்’ எனும் காப்பிய நோக்கம் திருக்குறள் கருத்துக்களைப் பதிய வைத்துப் படமாக்கியிருப்பது நினைந்து நினைந்து மகிழத்தக்கது.

“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!”

“ஊழின் பெருவலி யாவுள? மற்றுஒன்று

 சூழினும் தான்முந் துறும்”          (குறள்:380)

தீய ஊழை நீக்குதற் பொருட்டு அதற்கு எதிரான வழியொன்றைச் சிந்திக்க எண்ணுவோம். ஆனால் அது நாம் நினைத்த அதே வழியாகவோ பிறிதொன்றன் வழியாகவோ அதனிலும் முற்பட்டு வந்து நிற்கும். வினைப்பயன் விடாது தொடரும். நம்மை வந்தடைய வேண்டிய துன்பம் எக்காரணம் கொண்டும் வராமல் போகாது.

ஊழ்வினை இருவகையாகப் பிரிந்து நிற்கக் கூடியது. அவை நல்ல வினை, தீய வினை என்பன. அதனை ஆகுஊழ், போகுஊழ் என்பர்.

“தன்வினை தன்னைச் சுடும்”

“தினை விதைத்தவன் தினை அறுப்பான்

     வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

“பரதன் என்னும் பெயரன்அக் கோவலன்

     விரதம் நீங்கிய வெறுப்பினை ஆதலின்”

(சிலப்பதிகாரம்:23:154&155)

என இளங்கோவடிகள் மதுராபுரித் தெய்வத்தின் வழியே கோவலனுக்கு எதிரி கோவலனே என்பதைச் சுட்டிக் காட்டி அவன் வினையே அவனை அழித்தது என்பார்.

ஒருவரின் மகிழ்ச்சியான அல்லது துன்பமான வாழ்க்கைக்குக் காரணம் அவரது முற்பிறவியின் பயன் என்று கூறுகிறது திருக்குறள்.

மனிதர் தம் வாழ்க்கையில் இன்பம் துன்பம் ஆகிய முன்வினையின் தொடர்ச்சியாக இப்பிறவி வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இந்தப் பிறவியில் ஒருவர் இன்பத்தை அனுபவிக்கப் போகிறாரா? துன்பத்தை அனுபவிக்கப் போகிறாரா? என்பது அவர் முற்பிறவியில் செய்த வினைப் பயனைப் பொறுத்து அமைகிறது. வினைப்பயன் தான் அதனை நிர்ணயிக்கிறது. ஒருவருடைய வினை மற்றவரைப் பற்றாது செய்தவரையே தொடர்ந்து செல்லும். ஒவ்வொரு வினையும் தனக்கு உரியவரையே சென்றடைகிறது.

“பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்

     ஆகழ்ஊழ் உற்றக் கடை”      (குறள்:372)

தீவினை தோன்றினால் அறிவைக் கெடுத்துவிடும் என்றும், நல்வினை தோன்றினால் அது அறிவை விரிவுபடுத்தும் என்றும், செல்வமும், வறுமையும் போல் அறிவீனமும், அறிவுடைமையும் கூட நம்முடைய தீவினை, நல்வினை மூலம் தான் ஏற்படும் என்றும் வற்புறுத்துகிறது வள்ளுவம்.

“எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை

     வீயாது பின்சென்று அடும்”          (குறள்: 207)

எத்தகைய கொடிய பகையை உடையவர்களும், அதிலிருந்து தப்பி வாழ முடியும். ஆனால் தீவினை என்னும் பகை விடாமல் பின்தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.

“தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

     வீயாது அடிஉறைந் தற்று”      (குறள்: 208)

ஒருவனுடைய நிழல் அவனை விட்டு நீங்காமல் அவன் அடியில் தங்கியிருத்தல் போல பிறர்க்குத் தீவினை செய்தால் அக்கேடு அவனை நிழல் போல் தொடர்ந்து வந்து துன்புறுத்தும். தீவினைக்கு மன்னிப்பே கிடையாது. தீவினை செய்தவர் இந்தப் பிறவியில் இல்லை என்றாலும், அடுத்த பிறவியிலாவது அனுபவித்தே தீர வேண்டும் என்பது வள்ளுவம் வகுத்துத் தந்த நெறி. இக்கருத்தினைச் சிலம்பில் வரும் கட்டுரைப் பகுதியில்,

“உம்மை வினைவந்து உருத்த காலைச்

     செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது”

(சிலப்பதிகாரம்:23:170&171)

எனக் கூறுவார் இளங்கோவடிகள்.

முற்பிறவியில் செய்த தீவினை பயன் தரும் காலம் வந்தால் செம்மையான உள்ளம் இல்லாதவர்க்கு அவர் செய்த தவமும் உதவாது. அது அவரைக் காக்கவும் செய்யாது. அத்தீவினைப் பயனை அவர் அனுபவித்தே ஆக வேண்டும்.

இந்திர விழாவின் போது கோவலனும் மாதவியும் மகிழ்ந்து பாடிய கானல்வரிப் பாட்டில் ஊழ் தன் விளையாட்டைத் தொடர்கிறது.

கோவலன் பாடிய பாடலில் தன் மனதில் வேறு மகளிர்பால் கோவலனுக்கு விருப்பம் சென்றுள்ளது என்பதனைக் குறிப்பால் பொருள் கண்ட மாதவி, கோவலனிடம் இருந்த யாழினைத் தான் வாங்கி, தானும் ஒரு குறிப்பினள் போல் பாடினாள்.

 

இவ்விடத்தில் ஊழ்வினையாவது உருத்து வந்து பயனைத் தரத் தொடங்கியது.

“கானல் வரியான் பாடத் தான்ஒன்றின்மேல் மனம் வைத்து

     மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என

     யாழ்இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது

ஆகலின்” (சிலப்பதிகாரம்:7:52)

கோவலன் மாதவியைப் பிரிந்ததற்குக் காரணம் ஊழ்வினை வந்து உருத்ததுதான் எனக் காண்கிறோம்.

கோவலன் திரும்பி வந்த பொழுது கண்ணகியை அழைத்துக் கொண்டு மதுரைக்குப் புறப்படும் எண்ணம் தோன்ற ஊழ்வினை தான் காரணம் என்கிறார் இளங்கோவடிகள். பண்டைத் தீவினையால் உள்ளம் துரத்தக் கோவலன் மதுரைக்குப் புறப்படலானான்.

“காரிருள் நின்ற அடைநாள் கங்குல்

     ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப”

(சிலப்பதிகாரம்:10:3&4)

முன்னைத் தீவினையானது வந்து உருத்தியதன் பயனாக உள்ளம் தன்னைச் செலுத்த கோவலனும் புகாரை விட்டு வெளியேறத் துணிந்தான்.

“வினைவிளை காலம் ஆதலின் யாவதும்”

(சிலப்பதிகாரம்:16:148)

முன்வினைப் பயனைத் தரும் காலம் ஆதலால் எதையும் ஆராயாமல் ‘கள்வனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க’ என்றான் பாண்டியன்.

“பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

     பிற்பகல் தாமே வரும்”        (குறள்: 319)

மதுரையை எரித்த கண்ணகியிடம் மதுராபதித் தெய்வம் “மாதே இப்பிறவியில் நீங்கள் உற்ற துயரத்திற்குக் காரணம் முன்பிறப்பில் உன் கணவன் செய்த தீவினையே. அப்பிறப்பில் பரதன் என்ற பெயருடன் உன் கணவன் வசு என்னும் மன்னன் கீழ் பணி செய்தான். அப்போது அவன் அயல்நாட்டு வணிகனும் நல்லவனுமான  சங்கமன் என்பவனை அயல்நாட்டு ஒற்றன் என மன்னனிடம் கூறி அவனது கொலைக்குக் காரணமானான். கொலைக் களப்பட்ட சங்கமன் மனைவி நீலி ஓரிடத்திலும் நில்லாது அலைந்து திரிந்தாள்.

“அரசர் முறையோ? பரதர் முறையோ?

     ஊரின் முறையோ? சேரியீர் முறையோ?”

Image result for kovalan kannagi

என அனைவரிடமும் நீதி கேட்டுக் கதறி அழுதாள். பிறகு மிக உயர்ந்த மலை உச்சியில் நின்று தன் கணவனை அடைய ஆயத்தமானாள். அந்நிலையில் ‘எமக்கு இங்ஙனம் மிகக்கொடிய துன்பத்தினைச் செய்தவர் எவ்வகையிலாவது தாமும் இத்தகைய துன்பத்தை அடைவாராக’ என்று சாபமிட்டு உயிர் துறந்தாள். குற்றமற்ற அவள் இட்ட சாபத்தின் பயனாக இப்பிறவியில் நீங்கள் இக்கொடுந் துன்பம் அடைந்தீர். முன்பிறவியில் செய்த வினை பயன் தரும். காலம் வந்தால் செய்த தவமும் உதவாது. அத்தீவினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும்” என ஊழ்வினைப் பயனைக் கூறி மறைந்தது. பிறர்க்கு முற்பிறவியில் தீவினை செய்தால் அது இப்பிறவியில் தானே வந்து சேரும் எனும் வள்ளுவரின் கருத்து இங்கே ஆழமாகவும், அழகாகவும் கூறப்பட்டுள்ளது.

கொலைக் களக் காதையில் கோவலன் குற்றம் சாட்டப்பட்டு பொற்கொல்லனின் சூழ்ச்சியாலும் அரசனின் தண்டனையாலும் கொலை செய்யப்படுகிறான். கள்வனைப் பற்றிய மெய்ப்பாடுகள் அறியாத களிமகன் தன் கையிலிருந்த வாளினாலே வீசினான். அவ்வாள் கோவலன் உடலிற் குறுக்காகப் பாய்ந்து உதிரம் கொப்பளிக்க கோவலன் வெட்டுப்பட்டு வீழ்ந்தான். இங்கே ஊழின் உச்சநிலை உணர்த்தப்படுகிறது.

“காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்

     கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்”

(சிலப்பதிகாரம்:16: 216&217)

“நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்அறமே

     கண்ணகி தன்கேள்வன் காரணத்தால் & மண்ணில்

     வளையாத செங்கோல் வளைந்ததே; பண்டை

     விளைவாகி வந்த வினை”      (வெண்பா)

 

பண்டை விளைவாகி வந்த வினையால் உலகிலே அதுவரை செவ்விய ஆட்சியினையுடைய பாண்டியனின் செங்கோலும், கண்ணகியின் கணவனான கோவலனைக் காரணமாகக் கொண்டு வளைவுற்றது. அதனால் அனைவரும் இருவினையும் தவறாது வந்து சேரும் என்பதனை அறிந்து என்றும் நல்லறமே செய்யுங்கள் என இளங்கோவடிகள் ஊழின் வலிமையைச் சிலப்பதிகாரத்தில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் வழி நின்று படைத்துள்ளார் என்பதை நன்கு உணரமுடிகிறது.

‘வளமிக்க இப்பெரிய உலகில் வாழும் மக்களே மனவளத்துடன் வாழுங்கள்!’ எனக் காப்பியத்தின் முடிவில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு தொடரும் திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்தின் சிந்தனைக் கருத்துக் கோர்வைகளே.

திருக்குறள் என்ற விதையிலிருந்து தான் பிற நூல்கள் முளைத்து வளர்ந்து வந்துள்ளன. தெய்வப்புலவரின் அருள் வெள்ளத்தால் தான் செந்தமிழ்ப்புலமை இன்றும் பசுமையோடு இருக்கிறது என்பதற்கு பிற இலக்கியங்களில் காணப்படும் திருக்குறளின் ஆளுமையே சாட்சியாக உள்ளது. இலக்கியப் படைப்புகளுக்கு திருக்குறள் இலக்கணம் என்றால் பொருந்தும். அந்த வகையில் திருக்குறள் நெறிகளை இலக்கணமாகக் கொண்டு இளங்கோவடிகள் சிலப்பதி காரத்தினைப் படைத்துள்ளார் என்பது காப்பியத்தின் போக்கில் திருக்குறள் சிந்தனைகள் பரவிக் கிடப்பதிலிருந்து தெரிய வருகிறது. வள்ளுவத்தின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு காப்பியத்தின் நோக்கமாக எடுத்துக் கொண்ட மூன்று நிலைப்பாடுகளில் அறத்தின் தன்மையினையும், கற்பு நெறியினையும், ஊழின் வலிமையினையும் வலியுறுத்தி சிலப்பதிகாரத்தினை வாழ்வியல் நெறிக்கு வழிகாட்டும் வெற்றிக் காப்பியமாக படைத்துத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்துள்ளார் இளங்கோவடிகள். ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ என நம்மையெல்லாம் பெருமையடையச் செய்துள்ளார் பாரதியார்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

     வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல்

     பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை

     உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை”

எனும் பாரதியின் வைர வரிகளுக்கு வணக்கம் செலுத்துவோம்.

முப்பால் ஒளியை மிளிரச் செய்வோம்!

Image result for thirukkural

உலகத்திற்குத் தமிழர்களை அடையாளம் காட்டி வான்புகழ் கொள்ள வைத்தது திருக்குறள். தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைக்கும் ஆக்கத்திற்கும் நிலை பேற்றுக்கும் வழிகாட்டுவது திருக்குறள். அந்தந்தக் கால, தேசச் சூழலுக்கேற்ப, தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, புதுமைச் சிந்தனைகளை வழங்கி, அன்பு நெறியாலும், அறிவு நெறியாலும் வாழ்வை நல்வழிப்படுத்தும் ஆற்றல் பெற்றது திருக்குறள்.

தனக்கு உவமை தானாகவே விளங்கி, ஒப்பு உவமையற்று, காலத்தை வென்று நின்று, இன்றைய அறிவியல் யுகத்திற்கும் ஏற்ற புதிய சிந்தனைகளை வழங்குவது திருக்குறள்.

அறியாமையாகிய இருளிலிருந்து உண்மைப் பேரொளிக்கு அழைத்துச் செல்வது திருக்குறள். மனிதன் மனத்துக்கண் மாசில்லாதவனாக மனத்தூய்மை பெற்று அறவாழ்வு வாழ, தெய்விக உணர்வு பெற்று உயர வழிகாட்டுவது திருக்குறள்.

நம் மனத்தின் அசுர உணர்வுகளை, மிருக உணர்வுகளை- காமம், வெகுளி, மயக்கம், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியவைகளை அடக்கி, நீக்கி, தெய்வ இயல்புகளை – அன்பு, நாண், கண்ணோட்டம், ஒப்புரவு, வாய்மை, மனிதநேயம் இவைகளை மலரச் செய்வது திருக்குறள்.

பேரலைகள் சுழன்று அடிக்கும் பெருங்கடலில் பயணம் செய்யும் படகோட்டிகள் கை சலித்து, உடல் சலித்து, மனம் உழன்று வருந்தும்போது, இருளில் ஒளி காட்டும் கலங்கரை விளக்குக் கண்டு கரையேறுவது போல, போராட்ட உலகில் மனம் சலித்து, துன்புற்று வாழும் மனிதர்களைக் கரைசேர்ப்பது, கலங்கரை விளக்கமாய் விளங்குவது முப்பாலாகிய திருக்குறள்.

நாம் வாழும் காலம் அறிவியல் யுகம், கணினி யுகம், இண்டர்நெட் யுகம், அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவுடையார் ஆவது அறிவார் என்பது மெய்ப்பிக்கப்பட்ட யுகம். எது நிலைத்தது என்றால், நிலையாமை தான் நிலைத்தது. எது மாறாதது என்றால், மாற்றம் தான் மாறாதது. ஆதலால், நில்லாத உலகின் மாற்றத்திற்கு ஏற்ப, போராட்ட உலகத்திற்கு ஏற்ப நம்மை நாம் தகுந்தபடி மாற்றிக் கொண்டால் தான் நிலைத்து நின்று வெற்றி பெற முடியும்.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

     அவ்வது உறைவது அறிவு”                (426)

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

     கல்லார் அறிவிலா தார்”             (140)

காலத்திற்கு ஏற்றபடி அறிவியல் உலகின் போக்கை ஆராய்ந்து, காலத்திற்கு ஏற்ற கல்வியும், அறிவும் பெற்று கடும்உழைப்பாலும் முயற்சியாலும், உன்னத நிலை பெற்று உயர வேண்டும். குடியரசுத் தலைவர் கனவு 2020-ஆம் ஆண்டில் நாம் வல்லரசு ஆவோம் என்பது. இக்கனவு, தமிழர் வாழ்வில் நனவாக வேண்டும்.

“உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்” (596)

“உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

     உள்ளியது உள்ளப் பெறின்”               (540)

என்ற குறள்நெறி தமிழகத்தில் நிலைபெற வேண்டும்.

பல நூலறிவும், உலகியல் அறிவும், நடைமுறை அறிவும் நிறைந்து, பல சொல்லக் காமுறாமல், பயனில்சொல் பாராட்டாமல், சில சொற்களாலே தெளிவாகவும் மிகச் சுருக்கமாகவும் எழுதப்பட்ட நூல் திருக்குறள்.

விதித்தன செய்தலும், விலக்கியவை ஒழித்தலும் மக்களை நல்வழிப்படுத்தும் என்று உணர்ந்து இலக்கிய நயத்துடன், நுண்மாண் நுழைபுலத்துடன் பல துறையினர்க்கும் ஏற்றாற் போல் நிறைமொழி மாந்தராய் வள்ளுவர் உலகிற்குப் பொதுமறை தந்தவர்.

“செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

     செய்யாமை யானும் கெடும்”         (466)

வள்ளுவர் தம்மை முன்னிலைப்படுத்திக் கூறியது மூன்று இடங்களில்தான். அவற்றுள் முதன்மையாக ‘யாம் கண்ட உண்மை’ என்று வலியுறுத்தியது ‘வாய்மை’யைத் தான்.

“யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

     வாய்மையின் நல்ல பிற”       (300)

இக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் திருவள்ளுவர் திருக்குறளாய் வாழ்ந்து, பின்னர் திருக்குறளைப் படைத்துள்ளார் என்று உணரலாம். உள்ளத்தின் தூய்மை உண்மை, சொல்லின் தூய்மை வாய்மை, செயலின் தூய்மை மெய்ம்மை என்பர், ஆகவே எண்ணம், சொல், செயல் இவைகளில் முழு நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர் திருவள்ளுவர்.

அதனால்தான் அவரால்,

“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

     சொல் வேறுபட்டார் தொடர்பு” (819)

என்று பாட முடிந்தது. திருவள்ளுவருக்கு இவர்கள் கனவில் கூட கொடியவர்களாகக் காட்சியளிக்கின்றனர், கனவும் கொடியதாகின்றது.

திருவள்ளுவரின் திருக்குறள் அறவுரைகளைப் புகழ்ந்து போற்றிப் பாராட்டி விட்டு அவர் வாக்குப்படி வாழாவிட்டால் நமக்கும் பெருமையில்லை, நாம் போற்றும் வள்ளுவருக்கும் பெருமை சேர்க்க மாட்டோம்.

“புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

     இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்”      (538)

திருக்குறளை உணர்ந்து படிப்பதும், கொத்தாக மலர்ந்து மணம் வீசும் மலர்கள் போல் அறிவு மணம் பரப்பப் பேசுவதும் வாழ்ந்து காட்டி வளம் பெறவேயாகும். அவ்வாறு முயலாதவர்கள் பேதையர்களில் எல்லாம் கடையான பேதையர்கள் தான். கற்றபடி, பேசியபடி வாழாதவன் போல அறிவில்லாதன் இல்லை.

“ஓதி உணர்ந்தும், பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்

     பேதையின் பேதையார் இல்”         (834)

இவ்வுலகில் சிக்கல்களும் துன்பங்களும் மிகுந்துள்ளன. இன்னா உலகில் இனிமை காணப் பழகிக் கொள்ள வேண்டும். உலகம் அன்பு தழுவிய வாழ்க்கையால் துன்பம் தவிர்த்து இன்புற வேண்டும். துன்பங்கள், துயரங்கள், எதிர்பாராத ஆபத்துக்கள், சுனாமி போன்ற அதிர்ச்சி தந்த இயற்கைப் பேரழிவுகள் நிகழும் போது, அன்பும் கருணையுமே அருமருந்தாகின்றன. சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவால், இப்பெருங்கேட்டிலும் ஒரு நன்மை ஏற்பட்டது.

“கேட்டினும் உண்டுஓர் உறுதி” (796)

மக்கள் மனித நேயங் கொண்டு சாதி, சமயங்களால் வேறுபடாது ஒற்றுமை கொண்டு அறப்பணி, அருந்தொண்டு ஆற்றினார்கள். இயற்கைப் பேரழிவு மக்களின் அன்பையும் கருணையையும் பொங்கச் செய்தது.

“அறிவினான் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய்

     தம்நோய் போல் போற்றாக்கடை?”    (315)

என அன்பும் கருணையும் கொண்டவர் துன்புற்றவரின் துயர் கண்டவுடன் மனமுருகி, துயருற்றவர்களின் இன்னல் களைத் தமக்கு ஏற்பட்டனவாகக் கருதித் துன்பங்களைத் தம் தலைமேல் சுமந்து அரும்பணியாற்றினர். அறிவினால் ஆகுவது உண்டு என்பது மெய்ப்பிக்கப்பட்டது.

பிறரின் துன்பம் கண்டவுடனே, அன்புடையவர்களின் கண்களில் உடனே கண்ணீர் பெருகுகின்றது. கருணையுடை யோரின் அன்பை மறைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ?

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

     புன்கண்நீர் பூசல் தரும்”             (71)

நம் ‘உலகத் திருக்குறள் பேரவை’ மூலம் அறம் பொருள்  இன்பம் எனும் முப்பால் நெறிகளை அறங்களைச் செவ்வனே எடுத்துத் தொகுத்து உலகிற்கு வழங்குவோம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

“பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்”          (972)

என்ற உயர்நெறிகளைக் கொண்ட அன்புலகை, ஒப்பற்ற அருள் உலகை அறிவொளியால் மிளிரச் செய்வோம்.

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

 பெருமை முயற்சி தரும்”           (611)

 

திருவள்ளுவரின் இறைக் கொள்கை

Image result for thiruvalluvar painting

திருவள்ளுவரின் இறைக் கொள்கை

திருவள்ளுவரின் திருக்குறள் சாதி, சமயம், இனம், மொழி கடந்து காலத்தை வென்று நிற்கும் நூல். பல சமயத்தினரும் தம்தம் மறைநூல் என மதித்துப் போற்றும் ஒப்பற்ற அறநூல். உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இறைமைக் கோட்பாடுகளைக் கூறிப் பிணக்கில்லாப் பெரும்பயன் விளைவிக்கும் சிறந்த நூல். திருக்குறள் உலகப் பொதுமறையாய், உயர்வேதமாய்க் கருதப்படுகின்றது.

வள்ளுவரின் இறைக் கொள்கை யாது? கடவுள் வாழ்த்து இடைச் செருகலா? பிற்காலச் சமய நம்பிக்கையினர் புனைந்துரைத்ததா? கடவுள் வாழ்த்து இடைச் செருகலன்று. வள்ளுவர் இறைமையில் நம்பிக்கையுடையவர். திருவள்ளுவரின் இறைவன், உருவ மற்றவன். திருவடிகளாகக் காணப்பட வேண்டியவன்.

“அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி

     பகவன் முதற்றே உலகு”       (1)

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன. அது போல உலகமும் கடவுளை முதலாக உடையது. அகரம் எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் முதற்காரணம். அகரமின்றி ஒலி பிறக்காது. பிறவொலி பிறப்பதற்கு அகரம் துணையாகின்றது. அகரம் ஒவ்வோர் எழுத்திற்கும் உடன் துணையாக நின்று உதவுவது. எல்லாப் பேச்சு ஒலிகளுக்கும் அகரம், முதலும், துணையும், முடிவும் ஆக நிற்பது. அதுபோல, வையகமும் எல்லா உலகங்களும் நிறைந்த வானகமும் இறைவனடியாகத் தோன்றி, இறைவன் துணையால் காக்கப் பெற்று, இறைவனால் ஒடுங்கும் என்ற உண்மையையும் இவ்வுவமையால் அறிய முடிகின்றது. இறைவனே மூலமும், முதலுமாய் இருக்கின்றான் என்ற உண்மையை அறிவியல் கண்ணோட்டத்தோடு அகரம் என்ற உவமையால் அழகுற எடுத்துக்காட்டுகின்றார் வள்ளுவர். எழுத்துக்கெல்லாம் அகரமே முதலாகும். அதுபோல, உலகனைத்துக்கும், ஐம்பூதங்களுக்கும் முதலாகும் ஆதி பகவன் தனக்குத் தானே முதலாகும்.

வாழ்வு இனிமை மிக்கதாய், இன்பம் நிறைந்ததாய், உடல் நலமும், உள்ள நலமும் பெற்று, உள்ளம் மகிழ்வும் அமைதியும் நிறைந்ததாய் நிறைவாழ்வு வாழ அனைவரும் விரும்புகின்றோம். நடைமுறை வாழ்வில் நாம் விரும்பியபடி வாழ முடிகின்றதா?

வாழ்வில் இன்பம் எவ்வளவு இயற்கையோ அதுபோலத் துன்பமும் துயரும் இயற்கை. இன்பமும், துன்பமும் இரவும் பகலும் போல் மாறி மாறி வரும். யாரும் துன்பத்திலிருந்து, கவலையிலிருந்து தப்பிக்க முடியாது. தோல்வியும், ஏமாற்றமும், சோர்வும், அச்சமும் நேரும்போது, ‘வாழ முடியுமா?’ என்று கலங்கும்போது, உயராற்றலுடைய இடையூறுகளை, இடுக்கண்களை அழிக்கும் மேலான, எல்லா வல்லமையும் நிறைந்த, ஆற்றல் மிக்க உயர்துணையை, உயிர்த்துணையை நம்பிக்கையோடு நாடுகின்றோம். “இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்” (627) என்ற நம்பிக்கை, இறைவனைத் துணைக் கொண்டால்தான் முடியும். தொடர் நினைவின் வலிமை தரும் நம்பிக்கை நமக்கு ஆற்றலைத் தருகின்றது; ஆறுதல் தருகின்றது; கவலையைப் போக்குகின்றது. எவ்வகையாலும் தனக்கு நிகரில்லாத அருளாளன் தாளைச் சேர்ந்தார்க்கு அல்லாது மனத்தின்கண் நிகழும் எல்லாத் துன்பங்களையும், துயரங்களையும் நீக்கவியலாது.

ஏழை, எளியவர், துன்பமும், துயரும் உடையவர் மட்டுமன்றி, ஆற்றலும், பெருமையும் மிக்க அரசாள்பவர் களும், முற்றும் துறந்த துறவியர், பெருஞ்செல்வர்கள், அறிஞர்கள், ஞானிகள், விஞ்ஞானிகள், வலிமை மிக்கவர் என அனைவரும் தங்கள் நிலையிலிருந்து தாழாது வாழவும், மேலும் மேலும் உயரவும், எதிர்பாராத விபத்து, ஆபத்துக்கள், மனத்தில் தோன்றும் அச்சங்கள் இவை களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், எல்லா மனக்கவலைகளை மாற்றிடவும் இறைவன் துணையை நாடுகின்றனர். கடவுளை மறுப்பவர்களும் உயிரச்சம் ஏற்படும்போதும், பதவியிழக்க நேரிடும்போதும் தங்களைக் காத்துக் கொள்ளப் பெரும் நம்பிக்கையோடு இறைவனை இரகசியமாகப் பற்றிக் கொள்கின்றார்கள்.

முதலில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள், காலம் மாறும் போது, துன்பங்கள், துயரங்கள் அடுக்கடுக்காய் நேரிடும்போது, நோய்களால் பாதிக்கப்படும்போது, தாழ்வு நேரும்போது, நண்பர்களால், உறவினர்களால் கைவிடப் படும்போது, தனக்கு நிகரில்லாதவன் தாளைப் பற்றிக் கொள்கின்றார்கள். அறிவின் துணை மட்டும் கொண்டு நாத்திகம் பேசுகின்றவர்களும், துன்பங்கள் பேரிடியாகத் தாக்கிப் பேரிடர் ஏற்படும் போது, இதயத்தால் உணர்ந்து உண்மை அனுபவத்தால் தெளிவுபெற்றுத் தங்கள் சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட வாலறிவனின் அற்புத ஆற்றலை உணர்ந்து மாற்றம் பெறுகின்றார்கள். மனக்கவலையை மாற்ற வல்லவன் எல்லா வல்லமையும் நிறைந்த இறைவனே என்று உணர்கின்றனர்; இயற்கையின் பேராற்றலை உணர்கின்றனர்.

“தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

     மனக்கவலை மாற்றல் அரிது”   (7)

இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் வீற்றிருக்கின்றான். இறைவன் தூயவர் உள்ளத்தில் மாட்சியுடன் ஆட்சி செய்கின்றான். இறைவன் என்றால் எங்கும், எதிலும் நிறைந்து தங்கியிருப்பவன் என்று பொருள். கடவுள் என்றால் எல்லா எல்லைகளையும் கடந்து நிற்பவன் என்று பொருள். எங்கும் நிறைந்தும் கடந்தும், எல்லா உயிர்களிலும் பொருள்களிலும் நீக்கமறத் தங்கியிருக்கும் இறைவன் பெரும் கொடைஞன்; பேரருள் மிக்கவன். வேண்டத்தக்கது அறிந்து வேண்டுவன எல்லாம் நல்குபவன்; வேண்டிய வேண்டியாங்கு செய்தலால் செய்தவம், ஈண்டு முயலப்படும். இறைவனை நோக்கி முயன்று தவம் செய்தால், இடைவிடாது உழைத்தால் வேண்டியதை வேண்டியபடி பெறலாம் என்று வள்ளுவர் உறுதியளிக்கின்றார்.

‘மலர்மிசை ஏகினான்’ என்பது பரிமேலழகர் கருத்துப்படி அன்பால் நினைப்பவரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைத்த வடிவோடு சேறலே ஆகும். அன்பாய் நினைப்பவர் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளிய இறைவனை வழிபடுவோர் இம்மையிலும் நீடுவாழ்ந்து, மேலுலகிலும் நலம்பெற்று வாழ்வர். நிலமிசை, மிசைநிலம் என்று மாற்றிப் பொருள் கண்டால் நிலமிசை என்பது இம்மை உலகில் என்றும், மிசைநிலம் என்பது மேலுலகில் எனவும் பொருள் தரும்.

இறைவன் எல்லாவற்றுள்ளும் நிறைவுள்ளவன். அதனால் தனக்கு எதிலும் வேண்டுதல், வேண்டாமை, விருப்பு, வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்கு என்றும் துன்பங்கள், துயர்கள் தோன்றா.

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

     யாண்டும் இடும்பை இல”      (4)

இறைவன் ஐந்து அவாக்களும் நீங்கப்பெற்றவன்; ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவன்; இறைவன் தன்னை வழிபடுவோரின் ஐந்து புலன்களின் வழியாகத் தோன்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்துபவன் அத்தூயவனது உண்மையான ஒழுக்க நெறியைப் பின்பற்றி நடந்திடுவார் நீடிய புகழுடன் வாழ்வர்.

இறைவனின் நல்லியல்புகளைப் பின்பற்றி ஒல்லும் வகையால் அறவினை செய்வோரிடம், புகழ்மிக்க நற்பணி ஆற்றுபவர்களிடம் அறிவை மயங்கச் செய்யும், செருக்கை ஏற்படுத்தும் நல்வினையும் தீவினையும் சேரா.

“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

     பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”        (5)

இறைவன் பொறிவாயில் ஐந்தவித்தான்; மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் இல்லாதவன்.

ஒழுக்கமே கடவுள் தன்மையை வளர்ப்பது

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

     உயிரினும் ஓம்பப் படும்”            (131)

ஒழுக்கமே உயிர். பொய்தீர் ஒழுக்க நெறியே வள்ளுவர் போற்றும் உயர்வாழ்வு. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை, இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. நல்லொழுக்கம் நல்லறமாகிய விளைச்சலுக்கு விதைக்கப் படும் விதை. தீய ஒழுக்கம் அப்பொழுது மட்டுமன்றி எப்பொழுதும் தீராத துன்பம் தரும். ஒழுக்க நெறி வாழ்தலே தெய்வ வாழ்வு; இன்ப வாழ்வு; இனிய வாழ்வு.

‘அறன் வலியுறுத்தல்’ அதிகாரத்தில் வள்ளுவர் அறத்தின் ஆற்றலையும், பெருமையையும் விரிவாகக் கூறுகின்றார். சிறப்பாகிய வீடுபேற்றையும், செல்வச் செழிப்பையும் வழங்குவது அறநெறியாகும். இவ்வறத்தைக் காட்டிலும் மேன்மையானது எதுவும் இல்லை.

“சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊஉங்கு

     ஆக்கம் எவனோ உயிர்க்கு?”         (31)

“அறத்தான் வருவதே இன்பம்;மற்று எல்லாம்

 புறத்த புகழும் இல”               (39)

அறச்செயலால் வருவதே இன்பம். அறச்செயலே புகழ் தரும். அறத்திற்கு மாறானது இன்பம் தந்தாலும், துன்பம் ஆகும்; புகழையும் பெருமையையும் கெடுக்கும்.

அறக்கடவுள் நன்மை செய்பவருக்கு நன்மையையும், புகழையும், இன்பத்தையும் நல்குவார். தீமை செய்பவரை, அறவாழியாகிய படைக்கலம் அழிக்கும்; தீயோரை ஒடுக்கும்; ஒறுக்கும்.

“என்பு இலதனை வெயில்போலக் காயுமே

     அன்பு இலதனை அறம்”       (77)

“மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்

     அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு” (204)

அறக்கடவுளாகிய இறைவன் மறத்தை, தீமையை அழித்து, நன்மையாகிய அறத்தைக் காப்பான். அறக் கடவுளாக விளங்கும் அந்தணனாகிய இறைவன் அடி போற்றி நடப்பவர், மற்றைப் பொருளும் இன்பமுமாகிய கடல்களை இறைவன் துணைகொண்டு எளிதாகக் கடந்து செல்வர். மற்றவர் பிற துன்பக் கடலில் இருந்து மீளமுடியாது துன்புறுவர்.

‘எண்குணத்தான்’ என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் பல்வேறு பொருள் கூறுகின்றார்கள். பரிமேலழகர், பரிதியார், மணக்குடவர் ஆகியோர் எட்டுக் குணங்களை யுடையவன் என்று பொருள் கொள்கின்றனர்.

தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை எட்டுக் குணங்களாம்.

எட்டுக்குணங்களையும் ஏற்றுக்கொண்டு திரு.வி.க. அவர்கள் அடியாரால் எண்ணப்படும் குணங்களை உடையவன் என்ற சிறப்புப் பொருளும் கண்டார்.

‘எண்குணத்தான்’ என்பதற்கு எளிமை வாய்ந்த குணமுடையான், அன்பருக்கு எளியன் என்ற பொருளும் உண்டு. எண் என்னும் அடி திருக்குறளில் எளிமை என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது.

“எண்பொருள வாகச் செலச் சொல்லி” (424)

“எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப”         (991)

“எண்பதத்தான் ஓராமுறை செய்யா மன்னவன்”  (548)

இக்குறள்களில் வரும் ‘எண்’ என்ற சொல் எளிமை என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. இறைவன் அடிகள், யான், எனது என்னும் செருக்கறுத்து அருளும். அவ்வடிகளை வணங்குவதே செருக்கு அறுக்க உதவும் குணமாகும்.

தலைநிமிர்வு முனைப்பிற்கு அறிகுறி

தலை, தாளை வணங்குவது தாழ்மைக்கு அறிகுறி

மேலேயுள்ள தலை, இறைவனின் கீழேயுள்ள திருவடிகளில் விழுவது செருக்கும், முனைப்பும் சாய்ந்து விழுந்து ஒடுங்குதலைத் தெரிவிப்பது என்கிறார் திரு.வி.க.

எண்குணத்தான் : ஆதிபகவன் மூலம் அருளப்பட்ட வேதம்.

மனிதன் தலை உயிரின் அறிவையே குறிக்கும். தலையாகிய சிற்றறிவு, தாளாகிய வேதமுடன் பொருந்த வேண்டும். இன்றேல், கற்றதனால் பெற்ற அறிவில் பயனில்லை என்பார் கா.அப்பாத்துரையார்.

இயங்காத உடல், பேசாத வாய், மோவாத மூக்கு, காணாத கண், கேளாத செவி ஆகியவற்றால் பயன் ஏதும் விளையாது. அதுபோல எண்ணரிய பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் இறைவனின் திருவடியை வணங்கி நடவாதவரின் தலைகளின் நிலையும் பயனற்றது ஆகும்.

“கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

     தாளை வணங்காத் தலை”           (9)

திருவள்ளுவர் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்; ஓருயிர் பல பிறப்பு எடுக்கும் என்று கருதுபவர். இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்கள், இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்கள், பிறவியாகிய பெருங் கடலைக் கடக்க முடியும்; மற்றவர் அப்பிறவிக் கடலைக் கடக்கமுடியாது.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

     இறைவன்அடி சேரா தார்”           (10)

திருவள்ளுவர் அறக்கடலாய் விளங்கும் இறைவனைச் சார்ந்து பேரா இயற்கை பெற்று இனிது வாழ, பிறவாநிலை பெற்றுப் பேரின்பம் காணக் காட்டும் வழிமுறைகள் யாவை?

இறைவன் ஒருவன் உண்டு என்று உணர்ந்து வாழ வேண்டும். துன்பங்கள், துயரங்கள் நீங்கி இன்புற்று வாழ, நிலமிசை புகழோடு நீடு வாழ, அச்சம், ஆபத்து நீங்கி வாழ, இறைவனின் துணை வேண்டும். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, வாழ்வில் பயனடைய, பிறப்பு முதல் இறப்பு வரை தெய்வநிலை பெற இறைவன் திருவடிகளின் துணை வேண்டும்.

கடவுள் பெயரால் நடைபெறும் சடங்குகள், சரியை, கிரியை வழிபாடு ஆகியவற்றைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி யாதொரு செய்தியும் திருவள்ளுவர் கூறவில்லை.

வாழ்க்கை, அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். அறத்தோடு பொருந்தி நற்செயல்கள் செய்தால் எல்லா நன்மைகளும் ஆக்கமும், உணர்வும் நாடி வந்து சேரும். அறச்செயல் செய்யாது மறந்துவிட்டால் தீமையும், கேடும் நாடாமலே தேடி வந்து சேரும்.

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

 மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.”    (32)

மனம் மாசற்றதாக இருந்தால்தான், – பொறாமை, நியாயம் இல்லாத பேராசை, தன்னையே அழிக்கும் கடுங்கோபம், கடுமையான இன்னாச்சொற்கள் ஆகியவை களிலிருந்து நீங்கியிருந்தால்தான் – உண்மையால் நிறைந்திருந்தால்தான் – இறைவன் நம் மனத்தகத்தே வீற்றிருப்பான்.

திருவள்ளுவர் வலியுறுத்தும் அடிப்படை நெறிகள் யாவை? பொய்யாமை (வாய்மை), கொல்லாமை, பிறர் உயிர்களைத் துன்பம் செய்யாது போற்றி வாழ்தல், அன்பும் அருளும் கொண்டு வாழ்தல், குடும்பத்திற்கும், உலகிற்கும் உரிய கடமைகள் செய்து பற்றற்றான் பற்றினைப் பற்றிப் பற்றற்று வாழ்தல், விதித்த நற்கடமைகள் ஆற்றல், விலக்கியன ஒழித்தல், அன்பு, நாண், ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையுடைய சான்றோர்களாய், இயன்ற வகையெல்லாம் அறப்பணிகள் செய்து வாழ்தல், அச்சமே கீழ் மக்கள் ஆசாரம் ஆதலால் மேன்மக்களாய் அஞ்சாமை அல்லால் துணைவேண்டா என அச்சமற்று வாழ்தல், அஞ்ச வேண்டிய பழிக்கு அஞ்சி மானத்தோடு வாழ்தல், நிலையாமை உணர்ந்து நிலைத்த செயல்கள் ஆற்றி, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை தெரிந்து வாழ்ந்து மெய்யுணர்வு பெற்று இம்மையில் புகழோடு வாழ்ந்து, பிறவா நிலை பெற்று, என்றும் பேரின்பம், பேரானந்தம் பெற்று வாழ்தலே வாழ்வில் புகழோடு பயனுற வாழ்ந்திட திருவள்ளுவர் காட்டும் நெறி ஆகும்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்

     பின்சாரப் பொய்யாமை நன்று.” (323)

முதல்நிலையில் சிறந்த நல்லறம் கொல்லாமையே. அதனை அடுத்த நல்லறம் பொய்யாமை போற்றி வாய்மையை மேற்கொள்ளுதல்.

“கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

     மற்றுஈண்டு வாரா நெறி.”      (356)

இவ்வுலகில் உண்மை உணர்த்தும் நூல்களைக் கற்று மெய்ப்பொருளைக் கண்டவர்கள் பிறவா நெறிக்கு முயல்வர்.

“பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்

     செம்பொருள் காண்பது அறிவு.” (358)

மனத்தைச் செம்மைப்படுத்துவது செம்பொருள். செம்பொருள்தான் கடவுள். பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும் இறைவன் திருவருளை நாட வேண்டும்.

“இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்

     துன்பத்துள் துன்பம் கெடின்.”        (369)

ஆசை என்று சொல்லப்படுகின்ற துன்பத்தின் துன்பம் கெடின், இன்பம் இடையறாது வந்து சேரும்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

     பேரா இயற்கை தரும்.”        (370)

ஒருகாலும் நிறைவு பெறாத இயல்பினையுடைய ஆசையினை ஒருவன் நீக்கிவிடின், அவ்வாறு ஆசையை நீக்கிய நிலையே பிறவா நிலையைத் தரும். ஆசைகள் அற்ற நிலையிலே வீடுபேறு அடையலாம்.

 

 

வழிகாட்டும் வாழ்வியல் நூல்

Thirukkural in Tamil - HD

 

வள்ளுவர் வழி உலக மக்கள் அனைவரும் ஏற்றிப் போற்றும் பொது நெறி. மனித குலம் வாழும் வரை, எக்காலத்தும், எந்நாட்டினராலும், என்றும் போற்றப்படும் அறநூல், மறைநூல் திருக்குறள். ஒவ்வொரு மனிதனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வகுக்கப்பட்டது வள்ளுவர் வழி.

மனிதன் குறிக்கோளுடன், நல்ல இலட்சியத்துடன் வாழ வேண்டும் என்று நடைமுறைத் திட்டங்களை வகுத்து வாழ வழிகாட்டுவது வள்ளுவம். பல்வேறு துறைகளில் வாழ்பவர்களுக்கும் அந்தந்தத் துறைக்கு ஏற்றாற்போல் அறவழி காட்டிடும் ஆன்றோர் திருவள்ளுவர். மன இருள் நீக்கி இன்பம் பயப்பது; மருள் நீக்கி மாசறு காட்சி நல்குவது வள்ளுவர் வழி. வள்ளுவத்திற்கு இணையாக ஒரு நூல் இவ்வுலகில் இல்லை என்று மேலைநாட்டு அறிஞர்கள் எல்லாம் வியக்கின்றனர்; வள்ளுவர் வழி வாழ வலியுறுத்து கின்றனர்.

மக்கள் அனைவரும் நாள்தோறும் நாடி வள்ளுவர் வழியைப் பின்பற்றினால், உலகில் நிலவும் பல்வகைக் கொடுமைகளும், தீமைகளும் நீங்கி நன்மையும் இன்பமும் பெருகும்; அல்லவை தேய அறம் பெருகும். தற்போது நாம் வாழும் காலத்தில் அமைதி குறைந்து பகைமையும் தீவிரவாதமும் பெருகி வன்முறைச் சம்பவங்கள் நம்மை அச்சுறுத்தும் வகையில் பெருகியிருக்கின்றன. வள்ளுவத்தைப் பயின்றால், பகை நீங்கி மனித நேயம் மலரும். ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான், செத்தாருள் வைக்கப் படும்’ (214) என்பது உணர்ந்து, உலகம் தழுவிய ஒட்பம் மிகுந்திருக்கும் நன்மையும் தீமையும் நாடி நலம் புரியும் தன்மையால் ஆளப்படும் நிலை உருவாகும்.

திருக்குறள் மனித குலத்திற்கு நல்வழி காட்டும்; தடுமாறி நிற்கும் கப்பலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போல், தடுமாறி நிற்கும் மனித குலத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் முழுமையான அறநூலாய் நல்வழி காட்டும்.

வள்ளுவர் வழி நடந்தால் மனித மனத்தில் மிருக உணர்வுகள் குறைந்து, அரக்க குணம் அழியும்; தெய்வத் தன்மை மிகுந்து நல்ல மாந்தர் பண்புகளைப் பெற்று, அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை மிக்கவர்களாக, நல்லுணர்வு மிகுந்தவர்களாக, அறிவுடைமை யுடன் எல்லா நலமும் இன்பமும் பெற்று தமக்கென மட்டும் வாழாது, மனித நேயத்துடன் பிறர்க்கென வாழும் பெருமை பெற்று புகழுடன் வாழ்வர்.

வள்ளுவர் வழி நடந்தால் தனிமனிதர்கள் மனத்தில் மாசு நீங்கி, பொறாமை, கடுங்கோபம், பேராசை, கடுஞ்சொல் நீங்கி ஆக்கம் தரும் அற வாழ்வு வாழலாம்.

அரிய தத்துவங்களையும், ஆழமான சிந்தனைகளையும் உலகத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அனுபவக் கடலாக விளங்கும் வள்ளுவர் வழிநின்றால், வையத்துள் துன்பம் நீங்கி அமைதியுடன் வாழலாம்.

சமுதாயத்தில் உடற்பிணி, உள்ளப்பிணி, வறுமை, பசிப்பிணி, செறுபகை, பல்குழுக்கள், பாழ் செய்யும் உட்பகை, கொல் குறும்பு இல்லாததாக, தேடாமலே பெறும் செல்வ நாடாக, செல்வம், விளைவு, மகிழ்ச்சி, உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டுப் பாதுகாப்பு மிக்கதாய் நாடு விளங்க வேண்டும் என வள்ளுவர் ஆட்சி செய்வோர்க்கு வழிகாட்டுவார்; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என ஏற்றத்தாழ்வில்லாத, உயர்வு, தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க வழிகாட்டுவார்.

உலகில் வாழும் மக்கள் பல்வேறு துறைகளில், பல்வேறு நிலைகளில் வாழ்பவர்கள். அவர்களுக்கு ஏற்றவாறு அறநெறிகளை, அறவழிகளைப் போதித்தவர் வள்ளுவர். வள்ளுவர் வழி வாழ்பவர்கள், தெய்வநிலையில், உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளி, எண்ணியதெல்லாம் எண்ணியாங்கு பெற்று வாழ்வர். பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என உணர்ந்து, புகழ்ந்தவை போற்றி, செயல் செய்து, வள்ளுவர் வழி நிற்பவர்கள் உயர்வடைவார்கள்.

வள்ளுவம் ஒரு வாழ்வு நூல், பயன்பாட்டு நூல், செயல் நூல், வள்ளுவர் வழியில் வாழ்பவர் வாழுங் காலத்திலே தெய்வநிலை பெறுவர். தன்னுயிர் தானறப் பெற்று வாழும் இவர்களை, மன்னுயிர்கள் எல்லாம் தொழும்; வணங்கும்; இவர்கள் என்றும் இறவாப் புகழ் பெற்று வாழ்வர்.

தேராமல், ஆராயாமல் எப்பணியையும், பொறுப்பையும் யாருக்கும் அவசரப்பட்டோ, அன்பாலோ, மயக்கத்தாலோ கொடுத்துவிடக் கூடாது. தேரான் தெளிவு தீராத இடும்பையை, துன்பத்தைத் தரும் என்று எச்சரிப்பார் வள்ளுவர்.

தொழில், வாணிகம், அரசுத்துறை, நாடாளுமன்றம், சட்டமன்றம், எத்துறையாயினும் அத்துறைக்கு ஏற்ற தகுதியும், நேர்மையும், ஒழுக்கமும், பொறுப்புணர்வும் உழைப்பும் உள்ளவரா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தகுதியில்லாத ஒருவரை அன்பின் காரணமாக அல்லது உறவின் காரணமாக, விருப்பத்தின் காரணமாக, பரிந்துரையின் காரணமாகப் பணியில் அமர்த்தினால் துன்பமும் கேடும் நிகழும். தகுதியும் ஆற்றலும் பொறுப்பும் இல்லாதவன். செயல் ஆற்றும் வல்லமை இல்லாததால், எடுத்த காரியத்தில் தோல்வியும், நட்டமும், தீமையும் ஏற்பட்டுவிடும். அவனைத் தேர்ந்தெடுத்தவர்களும் பேதைமை உடையவர், விவரம் இல்லாதவர் என்ற அவப் பெயரையும் பெற நேரிடும்.

“காதன்மை கந்ததா அறிவுஅறியார்த் தேறுதல்

     பேதைமை எல்லாம் தரும்”           (507)

என்பார் வள்ளுவர்.

உறவினர், நண்பர், வேண்டியவர், செல்வாக்கு உள்ளவர், பரிந்துரை பெற்று வந்த நபர், இவர்கள் தகுதியற்றவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவர் களாய் அமைந்துவிட்டால் பெருந்தீமை விளையும், நட்டம் ஏற்படும். பாசத்தின் காரணமாக, அன்பின் காரணமாக இவர்களை நியமித்தால், பணியில் அமர்த்தியவர்களை மற்றோர் அறிவில்லாத மடையர் எனத் தூற்றுவர்.

இதுபோல, முன்பின் தொடர்பில்லாத அயலாரை, வெளிநாட்டினரை வெறும் கவர்ச்சியான பட்டங்களையும், தோற்றத்தையும் கொண்டு அவசரமாக, ஆராயாமல் நம்பிப் பொறுப்பை, பணியை ஒப்படைத்தால், அவ்வாறு ஒப்படைத்தவனுக்கு மட்டுமன்றி அவன் வழிவழி வரும் பரம்பரையினர்க்கும் துன்பம் வரும்.

“தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

     தீரா இடும்பை தரும்”         (508)

தன்னலம் மிக்கவர்கள், கொடியவர்கள், அறத்திற்கு, நல்ல நெறிகளுக்கு எதிராக வாழும் கயவர்கள், தொழிலுக்கு, வணிகத்திற்கு, நாட்டின் பொறுப்புள்ள பதவிகளுக்கு நியமிக்கப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்டால், தொழிற்சாலைகள், வணிக நிலையங்கள், அரசுத்துறை அனைத்தும் நிர்வாகச் சீர்கேட்டால் பாழ்பட்டு அழிந்துவிடும். இருட்டில் மறைந்திருப்பவர்களைக் கண்டுபிடிக்க ஒளிவிளக்கு வேண்டும். ஆகவே, இருள் சூழ்ந்த தன்மை மிக்கவர்களை, தகுதியில்லாத போலிகளை அடையாளங்காண வேண்டும். முறையாகத் தேர்வு ஆகிய ஒளிவிளக்கு ஏந்தி, தகுதியற்றவரை நீக்கி, தகுதியுடைய தக்கவரை அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தகுதியுள்ளவர் என எப்படி ஆராய்ந்து தேர்ந்து எடுப்பது? குறிப்பிட்ட காலத்திற்குத் தற்காலிகமாக, கல்வித் தகுதியும் முன் அனுபவமும் உழைப்பும் உள்ளவனை பதவியில் அமர்த்த வேண்டும். அந்த குறிப்பிட்ட காலத்தில் அவன் எவ்வாறு வேலை செய்கிறான், எவ்விதமான வழிமுறைகளைப் பின்பற்றுகிறான், வரும் இடையூறுகளை, தடைகளை எவ்வாறு எதிர் கொள்கிறான், வெற்றி பெறுகின்றான், லாபம் ஈட்டுகிறான் என்பது அறிந்து அவன் செயலாற்றும் தகுதிக்கு உரிய பதவியில் அமர்த்தலாம். அதுபோல் தலைவர்களைத் தேர்வு செய்ய மக்கள் வாக்களிக்கும்போது தலைமைப் பொறுப்பு ஏற்பவன், அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் உடையவனா? விழிப்புணர்வு, விரைந்து செயலாற்றும் தன்மை, தியாகம், பொறுப்புணர்வு உள்ளவனா? என்று ஆராய்ந்து தேர்ந் தெடுக்க வேண்டும். இவ்வாறு ஆராய்ந்து தேர்ந்தெடுத்தால் தொழில், வாணிகம், அரசுத்துறை எதுவாயினும் அத்துறை செழிக்கும், சிறப்புப் பெறும்.

ஆகவே யாரையும் ஆராய்ந்து தேர்வு செய்க. தேர்வு செய்த பின் சந்தேகம் கொள்ளற்க. தேர்வு செய்து தேர்ந்தெடுக்கப் பட்டவருக்கு முழுப் பொறுப்பும் வழங்குக. இறுதியில் இலாபமும் வெற்றியும் கிடைக்கும் என்றெல்லாம் அன்றாட வாழ்க்கைக்கு – அரசுக்கு – நிருவாகத் துறைக்கு வழிகாட்டும் வாழ்வியல் நூலாக வள்ளுவம் விளங்குகின்றது.

உலகத் தமிழ்ச் செம்மொழி

Image result for thiruvalluvar

 

மாநாடும் திருக்குறளும்

“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே -& அதைத்

     தொழுது படித்திடடி பாப்பா!”

என்பார் பாரதியார்.

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

     பரவும் வகை செய்தல் வேண்டும்”

என்பதும் மகாகவியின் விருப்பம்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய நம் தாய்மொழியாம் தமிழ், பழமையும், இலக்கிய வளமும், இலக்கணச் செறிவும் கொண்டு சிறந்தோங்கி நிற்பது. நம் தமிழ், செம்மொழித் தகுதி பெற்றமையினை உலகமெல்லாம் பறைசாற்றும் வண்ணம் முத்தமிழ் அறிஞர் மாண்புமிகு கலைஞர் அவர்கள், தமிழுக்கும், தமிழர்க்கும் உலக அரங்கில் மேன்மேலும் உயர்வு கிடைத்திட வேண்டும் என்ற உயரிய எண்ணங்கொண்டு கோவை மாநகரில் கூடிடும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி வாகை சூடிட அல்லும் பகலும் சிந்தித்துச் செயலாற்றி வருகிறார்.

“நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்

     பண்புபா ராட்டும் உலகு”      (994)

என்ற நெறியின் படி உலகத் திருக்குறள் பேரவை சார்பாக முத்தமிழ் அறிஞர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக மக்களுக்குத் தமிழகத்தை அடையாளம் காட்டியது திருக்குறள்! தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் முகமாகவும், முகவரியாகவும் அமைந்து முழுமை தந்தது திருக்குறள்!

பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் தனி ஒரு மனிதனுக்கோ, ஒரு நாட்டிற்கோ சொந்தமானதல்ல. எல்லா நாட்டினர்க்கும், எல்லாச் சமுதாயத்திற்கும், எல்லா மொழியினர்க்கும் பொருந்தும் வகையில் காலத்தை வென்று நிற்கும் நூல் அது.

‘உலகச் சிந்தனையாளர்களில் தலைசிறந்தவர்’ திருவள்ளுவர் என திரு.ஆல்பர்ட் சுவைட்சர் எனும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் பாராட்டுகிறார்.

‘உலகப் பெருங்கவிஞர் திருவள்ளுவர்’ என்று கிறித்தவத் தமிழறிஞர் திரு.ஜி.யு.போப் அவர்கள் திருவள்ளுவரைப் பெருமைப் படுத்தியுள்ளார். இத்தகைய பெருமை மிகு திருக்குறளுக்கு இதுவரை 250-க்கு மேல் உரை நூல்கள் வந்துள்ளன.

உலக மொழிகளில் கிறித்தவர்களின் புனித நூலான பைபிளுக்கு அடுத்து, திருக்குறள் 70 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது போன்று பல நிலைகளில் உயர்ந்து நிற்கும் திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அமையும்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்ற புகழினை இம்மாநாடு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எழுகிறது. அதற்குக் கட்டியம் கூறும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் அடையாளச் சின்னமாகத் திருவள்ளுவரின் உருவமும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் அமுத வரிகளும் ஒளிர்வதைக் காண முடிகிறது. இத்திருக்குறள் சொற்றொடரைத் தேர்ந்தெடுத்தமைக்கான விளக்கத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் 10.01.2010ஆம் நாளன்று நடைபெற்ற தமிழ்ச் சங்கமம் தொடக்க விழாவில் தம் உள்ளக்கிடக்கையை வெளியிட்டுள்ளார்.

“‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தந்தை பெரியார் உருவாக்கிய யுகப்புரட்சியை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்மொழி, தமிழர் என்ற உணர்வை எடுத்துக் காட்டும் வகையில் மாநாடு அமைய வேண்டும். நாம் பிரிந்து கிடக்கக் கூடாது. ஒற்றுமையாக வாழ வேண்டும். நம் தமிழ்மொழியால் ஒன்று சேர வேண்டும். நம் தமிழைக் காப்பாற்ற வேண்டும்” என்பது கலைஞர் அவர்களின் விளக்கம்.

“ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

     ஏங்கொலி ஞாலத்து இருள்அகற்றும் & ஆங்கவற்றுள்

     மின்னோ தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது

     தன்னே ரிலாத தமிழ்.”

உயர்ந்த மலைகளிலே தோன்றுகின்ற எழுஞாயிறு புற இருளை நீக்குவது போல மனங்களின் அறியாமை இருளை அகற்றுவது உயர்தனிச்செம்மொழியாம் தமிழ் மொழி சிறந்தொளிரப் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் திருவள்ளுவரின் அமுத மொழியினைக் கொள்கை முழக்கமாகக் கொண்டு நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பொற்குடத்திற்குப் பொட்டு வைப்பது போல் இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகளின் தொடர்ச்சியாகத் திருக்குறளுக்குச் செய்ய வேண்டிய இன்னும் சில சிறப்புக்களைக் குறித்து உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச் செயலாளர் என்ற முறையில் (வானொலி நேயர்களுடன்) என் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிகழவிருக்கும் இத்தருணத்தில் அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோரது தலைமையில் அமைந்த தமிழக அரசு திருக்குறளுக்குச் செய்துள்ள சிறப்புக்களை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னின்று நடத்திய உலகத் தமிழ் மாநாடு சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் திருக்குறளின் பெயரால் இருக்கைகள் (சிலீணீவீக்ஷீs) ஏற்படுவதற்கு வழிவகுத்துத் தந்தது; பேருந்துகளில் திருக்குறள்களை எழுதி வைத்துத் திருவள்ளுவம் பரவ வழி வகை செய்தது. முத்தமிழ் அறிஞர் முதல்வர் அவர்கள் ‘குறளோவியம்’ தீட்டி திருக்குறளுக்குப் பகுத்தறிவின் வழி நின்று புத்துரை வழங்கியுள்ளார். மேலும் சிறப்பு மிக்க ‘வள்ளுவர் கோட்டம்’ நிறுவியும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் வானளாவிய சிலை எழுப்பியும் திருக்குறளுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இது திருவள்ளுவருக்கு உலகப் புகழ் ஏற்படுத்தியது.

முத்தமிழ் அறிஞர், முதல்வர், டாக்டர் கலைஞர் பெங்களூரில் பல்லாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து ஒற்றுமைக்கு வழிகாட்டினார்.

மாணவர்களுக்குத் திருக்குறளினை முற்றோதல் செய்யும் பயிற்சிக்குப் பொற்கிழி வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். இதுபோன்ற எண்ணற்ற செயல்பாடுகள் நிகழ்ந்திருந்தாலும், வள்ளுவம் வாழ்வியல் நெறியாக அனைவரும் கடைப்பிடித்திட, வள்ளுவம் வான்புகழ் கொண்டு சிறந்திட, சில கருத்துக்களைச் சொல்லிட விரும்புகிறேன்.

திருக்குறளினைத் தேசிய நூலாக்க வேண்டும் என்று மறைந்த மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அவர் வழியில் உலகத் திருக்குறள் பேரவையும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நிகழ விருக்கும் பிரம்மாண்டமான, பயன்மிக்க உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் திருக்குறள் ‘பாரத மணித்  திருநாட்டின் தேசிய நூல்’ ஆக்குவதற்கு உரிய முயற்சி வெற்றி பெறுமானால் உலகெங்கிலும் உள்ள கோடானு கோடித் தமிழர்களின் நெஞ்சங்களிலே இன்பத் தேன் பாய்ச்சுவதாக அமையும்.

நடுவண் அரசின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்படுமானால் பெருமகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.

“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

     செய்தற்கு அரிய செயல்”            (489)

இந்தியத் திருநாட்டின்கண் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள முதன்மையான பல்கலைக்கழகங் களிலே திருவள்ளுவரின் பெயரால் இருக்கைகள் (சிலீணீவீக்ஷீs) நிறுவுவதற்குத் தமிழக அரசு மைய அரசிடம் வேண்டுகோள் விடுக்கும் செயற்பாட்டுக் களமாக இம்மாநாடு அமைவது சிறப்பைத் தரும்.

திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயமும், அஞ்சல் தலையும் வெளியிடுவதற்கான முறைப்படியான கோரிக்கையை மாநாட்டின் மூலம் முன் வைக்கலாம்.

திருக்குறளுக்குப் பழங்காலத்தில் பரிமேலழகர், மணக்குடவர் உள்ளிட்ட பதின்மர் உரை எழுதியுள்ளார்கள். இம்முயற்சி இந்நூற்றாண்டு வரை தொடர்ந்து வருகிறது.

தெளிவுரை, மரபுரை, புத்துரை, நயவுரை, மெய்யுரை என்று நூற்றுக்கணக்கான உரை நூல்கள் திருக்குறளுக்கு அண்மைக் காலம் வரை வந்த வண்ணம் உள்ளன. திருக்குறள் குறித்து இதுநாள் வரை வந்துள்ள அனைத்து உரைகளும் ஓரிடத்தில் தொகுத்து வைக்கப்பட்டால் அது பலருக்கும் பயனாய் அமையும்.

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் வந்த போது பெரும் எதிர்ப்பார்ப்பைத் தந்து, பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அது போல் திருக்குறள் இன்றைய கணினி யுகத்திற்கு ஏற்ற வகையில் ஓவியங்களாக, குறும்படங்களாக, குறுந்தட்டுகளாக, திரைப்படங்களாக, இயலாக, இசை வடிவமாக, நாடகமாக வெளிவருவதற்குத் தமிழக அரசின் செய்தி ஒளிபரப்புத் துறையின் மூலம் ஆவன செய்யலாம்.

மகாத்மா காந்தி அவர்களுக்கு அமைந்துள்ள அருங் காட்சியகம் போல திருவள்ளுவருக்கு ஓர் அருங்காட்சி யகத்தினை நிறுவி திருக்குறள் தொடர்பான அனைத்துச் செய்திகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு செய்வதிலும், வல்லுநர் குழு ஒன்றினைத் தமிழக அரசு நியமனம் செய்யலாம்.

உலகத் திருக்குறள் பேரவை போன்று திருக்குறள் பெயரால் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகளாவிய நிலையிலும் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கிய அமைப்புகளை ஒன்றுபடுத்தி அவ்வமைப்புகள் இதுவரை செய்துள்ள பணிகளை ஆவணப்படுத்துதல் மூலம் குறள்நெறி உலகளாவிய வளர்ச்சி பெற வழி வகை செய்யலாம்.

ஆண்டுதோறும் தமிழக அரசு சான்றோர் ஒருவர்க்கு நல்கி வரும் திருவள்ளுவர் விருதினை சற்றே விரிவுபடுத்தி திருக்குறள் பணியில் சிறந்து விளங்கும் சான்றோர், மகளிர், இளைஞர் மற்றும் இலக்கிய அமைப்பினர் என அனைவரும் பயன்பெறும் வண்ணம் பல விருதுகளை வழங்குமாறு மாநாட்டின் மூலம் பரிந்துரை செய்யலாம்.

ஆண்டுதோறும் தமிழக அரசே 365 திருக்குறள் சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்ட திருவள்ளுவர் நாட்காட்டியினை வெளியிடுமாறு மாநாட்டின் மூலம் அரசுக்குப் பரிந்துரை செய்யலாம்.

‘அறம் பொருள் இன்பம்’ உரைக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகமெங்கும் பரப்பக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாக இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அமைந்துள்ளது.

“பெருமை உடையார் ஆற்றுவார் ஆற்றின்

     அருமை உடைய செயல்”      (975)

என்ற குறள் நெறிக்கு ஏற்ப இம்மாநாடு திருக்குறள் நெறி உலகெங்கும் பரவிட வழிவகுக்கும் என்பதை உறுதியோடு நம்புகிறோம்.

தமிழின் செழுமையும், வளமையும், இளமையும், இனிமையும், புதுமையும், உண்மையும் மிக்க திருக்குறள் நெறியினை வாழ்வியல் சிந்தனைகளாக நடைமுறைப் படுத்திட இம்மாநாடு தொடர்ந்து அரிய பல திட்டங்களை வகுத்துச் செயல்படும் என நம்புகிறோம்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

     திண்ணியர் ஆகப் பெறின்.”          (666)

திருக்குறளின் சீரிளமைத் திறம்

“நாடுஎன்ப நாடா வளத்தன; நாடுஅல்ல

     நாட வளம்தரு நாடு”               (739)

என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் வண்ணம் வானுயர்ந்த கட்டடங்களும், கலைநுட்பமும் அழகும் நிறைந்த மாளிகைகளும், கண்கவர் வண்ணச் சோலைகளும், ஆறெனக் கிடக்கும் வீதிகளும், ஆல்ப்ஸ் மலை ஓரத்தில் அமைதிக்கு இடமாய் ஆரவாரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் தேம்ஸ் நதியின் எழில்மிகு காட்சியும், தொழில் வளமும், செல்வ வளமும், இயற்கைச் செழிப்பும், வாட்டமில்லாத மக்களின் முகமலர்ச்சியும் கொண்ட இலண்டன் மாநகரிலும், அழகுக்கு ஓர் அடையாளமாய் விளங்கும் பாரீஸ் நகரில் வாழும் தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் கம்பன் கழகம், சைவநெறிக் கழகம், நாட்டியப்பள்ளி போன்ற அமைப்புகளை உருவாக்கி தமிழ்க் கலை மற்றும் இலக்கியப் பணியாற்றி வருகின்றனர். அவ்வமைப்புகளின் அன்பழைப்பினை ஏற்று இருநாடுகளிலும் உலகத் திருக்குறள் பேரவையின் கிளைகளைத் தொடங்கி வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ நன்னெறிகளை வகுத்தளித்துள்ள திருக்குறளினை உலகம் முழுதும் பரப்பிடும் உயர்ந்த நல்நோக்கம் கொண்டு தவத்திரு. குன்றக்குடி அடிகளார் சுவாமிகள் கட்டமைப்புடன் கூடிய ஒரு கூட்டமைப்பாக உருவாக்கியது ‘உலகத் திருக்குறள் பேரவை.’ அடிகளாரின் வழித்தடத்தினைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்று இலண்டன் நகரத்திற்கும், பாரீஸ் நகரத்திற்கும் 21.09.2012 அன்று வான்மழை வாழ்த்திட, பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இலக்கிய அமைப்புகளின் நல்ல உள்ளங்கள் பாராட்டி மகிழ்ந்திடப் பயணமானேன்.

இலண்டன் மாநகரில் நமது தமிழ்ப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் நிலைநிறுத்தும் வண்ணம் விளங்கும் உயர்கலையான பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் 22.09.2012 அன்று சிறப்பு விருந்தினராக எனது மருமகன் டாக்டர் கி.ஷி.கணேசன் (வேந்தர், விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழகம்) அவர்களுடனும், எனது குடும்பத்துடனும் கலந்து கொண்டேன். இலண்டன் குரொய்ங்டன் பிலீட் அரங்கத்தில் நாட்டியாலயா கலை மன்றத்தினர் பிரமாண்ட நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களும், நாட்டிய ஆர்வலர் களும், நாட்டிய விற்பன்னர்களும், நாட்டியக் கலைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பாகக் கலைப்பணியாற்றி வரும் நாட்டியப்பள்ளி அமைப்பாளர்களையும், கலைஞர்களையும் வாழ்த்திடும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் வரவேற்பிலும், உபசரிப்பிலும் பிரமிப்பூட்டும் வகையில் நடைபெற்ற நடனங்களிலும் மகிழ்ந்த என் மனம் ஒரு மகிழ்ச்சியுரை ஆற்றிட உந்தியது.

“பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

     அருமை உடைய செயல்”      (975)

என்பது போல நாடு விட்டு நாடு வந்து நல்லதொரு கலைப்பணியைத் திறம்படச் செய்து தனக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்து வரும் நாட்டியப் பள்ளி நிர்வாக அன்பர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வணக்கம்.

நம் பாரத தேசத்தில் தோன்றியது இந்தப் பரதக் கலை; பரத முனிவரால் முதன்முதலாக உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது என்பது வரலாறு. இந்த நாட்டியக் கலை தென்னிந்தியாவிற்கு உரியது. சிறப்பாக நம் தமிழ் நாட்டிற்கு உரியது. பாவமாகிய உணர்ச்சியுடனும், ராகமாகிய இசையுடனும், தாளம் சேர்த்து ஆடும் நடனம் பரத நாட்டியம் என்பர். அத்தகைய நாட்டியக் கலை மூலம் இளம்கலைஞர்கள் புராணக் கதைகளையும், இலக்கியக் காட்சிகளையும் படம்பிடித்துக் காட்டுவது போல் நவரசம் ததும்ப நடனமாடி மகிழ்வித்தனர். காண்பவர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டது. உங்களிடம் ஒரு வேண்டுகோளாக எனது விருப்பத்தைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இச்சிறந்த நாட்டிய நடனத்தில் திருக்குறளையும், அதன் கருத்துக்களையும் அமைத்து ஆடல்கலை மூலம் திருக்குறளை அனைவரும் அறியச் செய்தல் வேண்டும். திருக்குறளில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் பரந்து உள்ளன. அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும், இன்பத்துப்பாலிலும் மனத்தைத் தொட்டு நெகிழ வைக்கும் காட்சிகள் வாழ்வியலுடன் தொடர்புடைய நல்ல கருத்துக்களைத் தெரிவிக்கும் கருவூலமாக உள்ளன. அவைகளை வடிவமைத்து வளம் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இத்தகு சிறப்புப் பெற்ற நடனக்கலையின் மூலம் நமது பாரத நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பொன்னெனப் போற்றிப் பாதுகாத்து வரும் நாட்டியாலயா கலைமன்ற நிர்வாகி திருமதி.ராகினி ராஜகோபால் அவர்களுக்கும், திரு.புதினம் இராஜ கோபால் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். தமிழ்மொழியையும், தமிழ்க் கலைகளையும், தமிழ்ப் பண்பாட்டையும் தமிழர்கள் எங்கிருந்தாலும் போற்றிப் பரவுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.”

இலண்டன் மாநகரில் நான் கலந்து கொண்ட இரண்டாவது நிகழ்ச்சி, ஈடு இணையற்ற எழில்மிகு நிகழ்ச்சி, உலகத் திருக்குறள் பேரவை மேலை நாடுகளில் வலம் வரத் தன்னைப் பதிவு செய்து கொண்ட நிகழ்ச்சி. மாபெரும் விழா இது என்றால் பொருந்தும்.

“துணைநலம் ஆக்கம்Image result for thiruvalluvar தரூஉம்; வினைநலம்

     வேண்டிய எல்லாம் தரும்”           (651)

துணை நலமும், வினைநலமும் பெற்று இலண்டன் மாநகரச் சான்றோர் பெருமக்கள் தாய்மொழித் தமிழையும், தமிழ் தந்த வள்ளுவத்தையும் அதன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து போற்றும் வண்ணம் இலண்டன் சைவ நெறிக் கழகத்தினர் திருக்குறள் திருவிழாவாக ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்வினைப் பயனும், பெற்றோர்தம் நற்செயலும், அறிவிற்சிறந்த மூத்த அறிவுடையோர் வாழ்த்தும், தவமுடையார் தம் அருளும், என் வழியில் நிகழ்ந்திட்ட சிற்சில கொடைப் பயனும் என்னை இப்பெருவிழாவில் பங்கேற்க வைத்துள்ளன. இப்பெரும் புகழும், பெருமையும் உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளினை வழங்கிட்ட உலகப்பெருங் கவிஞர் திருவள்ளுவருக்குக் கிடைத்திட்ட பெருமையாகக் கருதுகிறேன்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்ற மகாகவி பாரதியின் மந்திரச் சொல்லுக்கு இங்குள்ள தமிழர்களாகிய நீங்கள் மகிமை தந்துள்ளீர்கள்.

திருக்குறளை அறியாதவர் யாருமில்லை. திருக்குறளில் இல்லாத கருத்துக்கள் ஏதுமில்லை. மேலும் மேலும் நுணுகி நுணுகி ஆராய்ந்தால் புரியாதவைகள் அனைத்தும் புரியும். நீதியோடும், நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும், சால்பு தவறாது வாழ்கின்ற தனிமனிதனைத் தெய்வ நிலைக்கு உயர்த்திட வழி காட்டுவது திருக்குறள்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

     தெய்வத்துள் வைக்கப் படும்”         (50)

என்பார் திருவள்ளுவர். ஆதிமறையாக ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பாக, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை யளிக்கும் வகையில் தமிழர்களை அடையாளம் காட்டிய நூல் திருக்குறள். சாதி, மதம், இனம், நிறம், நாடு, மொழி என்ற வேறுபாடு இல்லாத வாழ்வுக்கு வழி காட்டும் ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள். உலக மக்கள் அனைவரும் பொது மறை எனப் போற்றுகின்ற நூல் திருக்குறள். இது ஞானச்செறிவு கொண்டது, பழமைச் சிறப்புப் பெற்றது, கற்க கற்கப் புதுமை தர வல்லது என்பதை இலண்டன் மாநகர்த் தமிழர்கள் உணர வல்லவர்கள்.

ஆகையினால் தான் ஞானமளந்த மேன்மைத் தெய்வத் தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்குக் கழகம் என்றும், சைவ நெறிக்கழகம் என்றும் உருவாக்கி தமிழையும், தமிழ் புராண இதிகாசங்களையும், இலக்கியங்களையும் போற்றிப் பாதுகாத்து வருகின்றீர்கள். அந்த வரிசையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கும், அவர் வடித்துத் தந்த ஓங்கு ஒலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் திருக்குறளுக்கும் ஒரு பேரவை அமைத்துச் செயல்படத் தொடங்கியிருப்பது பாராட்டுக்கு உரியது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

தமிழுக்குக் கதி ‘கம்பனும் திருவள்ளுவரும்’ என்று சொல்வது போல் கம்பருக்குச் செய்யும் நன்றியினைப் போல் திருவள்ளுவருக்கும் நன்றி செய்தல் வேண்டும் என்பது எனது பேரவா.

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

     வானகமும் ஆற்றல் அரிது”          (101)

உலக மக்கள் செம்மையுற்று, இன்பமுற்று வாழ நமக்கு முன் இருந்த சான்றோர்கள் தமிழுக்குச் செய்து தந்த இலக்கியக் கொடைகளுக்குத் தமிழர்களாகிய நாம் செய்யும் நன்றிக் கடன் இதுவே.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

     நன்மை கடலிற் பெரிது”       (103)

தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு என்ற வகையில் அது சிறப்புப் பெறும்.

“முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையதாய்

     பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியதாய்”

விளங்கக்கூடியது நமது தமிழ்.

தொன்மைச் சிறப்பும், இலக்கண வளமும், இலக்கிய நயமும் கொண்ட நமது தமிழ் மொழி செம்மொழி என்ற சிறப்புப் பெற்றது. உலகத்திற்கு முதன்முதலில் முழுமையான நாகரிகத்தையும், பண்பாட்டையும், வாழ்க்கை முறைகளையும் வகுத்துக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஒன்றுபட்டு உலகம் வாழ்ந்திட

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

என்ற ஒரு மந்திரச் சொல்லுக்குள் உலகை மயங்க வைத்தவர்கள்.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா

     நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன”

உலகில் எல்லோரும் ஒன்று தான். ஒருவருக்கொருவர் உறவுடையோர். மக்களிடயே வேறுபாடில்லை. தீமையும், நன்மையும், வருந்துதலும், மகிழ்தலும் பிறர் உண்டாக்கி நம்மை அடைவன அல்ல, நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்வன என்பதை எடுத்துக் காட்டி வாழ்க்கை என்பது நம்பிக்கையில் தான் இருக்கிறது, அதுவும் உன் கையில் தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்திக் காட்டியவன் தமிழன். வேறுபாடு இல்லாமல் எல்லோரும் சமம் என்பதை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளின் மூலம் உலகில் தோன்றும் எல்லா உயிர்களும் ஒன்று என்பதை உணர்த்திக் காட்டியவர் திருவள்ளுவர். இது போன்ற வரலாற்றுத் தடங்களும், இலக்கியப் பெருமைகளும் நமக்கு இருந்தாலும், அவைகளைக் கட்டிக்காக்கும் பண்புடையவர் களாகப் போற்றிப் பாதுகாத்து, பயன் கருதாது பாடுபடக் கூடியவர்களாக உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர் களாகிய நீங்கள் இருப்பதால்தான் இன்னும் தமிழ் காக்கப்பட்டு வருகிறது.

“பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அதுஇன்றேல்

     மண்புக்கு மாய்வது மன்”      (996)

தமிழகத்தில் ஆலமரமாய் வளர்ந்து வரும் தமிழ்த் தருவிற்கு அதன் கிளைகளாகச் செழித்து உலகம் முழுவதும் பரந்து பரவியிருக்கும் தமிழர்களாகிய நீங்கள் தான் அதன் வேருக்கு நீரூற்றி வளர்க்கக் கூடியவர்களாக இருக்கின்றீர்கள். பல சூழ்நிலைகளில் நாடு, நகரம் இழந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக, இலண்டன், பாரீஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் கண்ணெனப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.

‘கேட்டினும் உண்டு ஓர் உறுதி’ போல் அமைதியான வாழ்வில் காலக் கொடுமையினால் கேடுகள் பல சூழ்ந்த போதும் அதில் ஒரு நன்மையாக உலகம் முழுவதும் தமிழர்கள் சென்று வாழும் சூழல் உருவாகிவிட்டது. வெங்கொடுமைச் சாக்காட்டில் போராடி தாங்கொண்ணாத் துயரத்துள்ளும் தமிழர்கள் தங்களின் கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உயர்ந்து வருகின்றனர். அந்தச் சூழ்நிலையிலும் தமிழ்ப் பண்பாட்டையும், மொழி உணர்வையும் விட்டு விடாது போற்றிப் பாதுகாத்து வருகின்றீர்கள். வேறு பல மொழிகளைக் கற்றிருந்தாலும், தாய்மொழியாம் தமிழைப் புறக்கணித்துவிடாது மதித்து தாய்ப்பால் போல் அதனை அனுபவித்தும், பேசியும், எழுதியும், தம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தும், பயிற்றுவித்தும் வருகின்றீர்கள் என்பதைக் காணும் போது எனது உள்ளம் உவகையுடன் பெருமிதமும் கொள்கிறது. உங்கள் உள்ள உறுதியும் உயர்வான வாழ்க்கை முறையும், நீங்கள் காட்டும் அன்பும், பாசமும், பயன்கருதாப் பணிவிடையும், தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் கொண்டுள்ள பற்றும் தான் எங்களைப் போன்றவர்கள் மேலை நாடுகளுக்கு வருகை தந்து சிறப்புப் பெறுகின்ற வாய்ப்புகளை உருவாக்கி யுள்ளன. உங்களைச் சந்தித்த பின்பு தமிழ் மொழியும், பண்பாடும் தமிழர் நாகரிகமும் நிலைத்து நின்று புகழ் மணக்கும் என்ற நம்பிக்கை என் மனதில் சிம்மாசனம் போட்டுக் கொண்டது. உங்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும், உலகத் திருக்குறள் பேரவை சார்பாகவும் நன்றியினையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இலண்டனிலும், பாரீஸிலும் நான் கலந்து கொண்ட முத்தாய்ப்பான மூன்று நிகழ்ச்சிகளில் மூன்றாவது நிகழ்ச்சி பாரீஸ் நகரில் உலகத் திருக்குறள் பேரவையைத் தொடங்கி வைத்த நிகழ்ச்சி. தமிழன்னை அணிந்திருக்கும் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கம் போல் பாரீஸ் நகரில் திருக்குறள் ஒளிர்ந்து மிளிர்ந்தது எனச் சொல்லலாம்.

பிரான்சு கம்பன் கழகம் ஏற்பாடு செய்திருந்த உலகத் திருக்குறள் பேரவை தொடக்க விழாவிற்குக் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் தலைமை ஏற்றார். அவர் தமது தலைமை உரையில், “உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச் செயலாளரும், மதுரைக் கம்பன் கழகத்தின் துணைத் தலைவருமான திருக்குறள் செம்மல் திருமிகு.ந.மணிமொழியனார் அவர்கள் தமது அருமைத் துணைவியாருடனும், அன்பிற்கினிய மகள்களோடும் (டாக்டர் அனுராதா கணேசன், கவிதா ரெங்கநாதன்), சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பிரான்சு உலகத் திருக்குறள் பேரவை பலகையைத் தம் பொற்கரங்களால் திறந்து வைத்து எனக்கும், செயலாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்களுக்கும், பொருளாளர் திருமிகு.தணிகாசலம் அவர்களுக்கும், மகளிரணித் தலைவி கவிஞர் சிமோன் இராசேசுவரி அவர்களுக்கும், இளையோர் அணிச் செயலாளர் செல்வின் கி.தணிகைவேல் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்ததைப் பெருமையாகக் கொள்கிறோம்.

திரு.மணிமொழியனார் அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர், நூலாசிரியர், தொழிலதிபர். எல்லாவற்றுக்கும் மேலாக திருவள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகளின் படி தமது வாழ்க்கையை நடத்திச் செல்லும் தூய்மையான, உயரிய பண்பாளர். உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் செய்து திருக்குறளின் பெருமைகளையும், சிறப்புக்களையும் மக்களிடையே பரப்புவதற்குப் பாடுபட்டு வருபவர். காட்சிக்கு எளியராகித் தம் இயல்பான உரையாடலில் கூட குறட்பாக்களையே எடுத்துக் காட்டிப் பேசும் தகைமையாளர். யார் தம்மிடம் எந்த சந்தேகங்களை எழுப்பினாலும், வள்ளுவரின் வழி நின்றே சரியான பதிலைக் கனிவாகக் கூறுபவர். இத்தகைய பெரும்பேறுடைய பெருமகனார் பிரான்சு கம்பன் கழகம் ஏற்பாடு செய்த விழாவில் கலந்து கொண்டு குறளரங்க நிகழ்வுக்குத் தலைமையேற்று சிறப்பித்த பெருந்தன்மைக்குப் பெரிதும் கடப்பாடுடையோம். அவர்களுக்கு பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பாகவும், குறளரங்கம் அமைத்துத் தந்த மகளிரணி சார்பாகவும் இனிய நல்வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருக்குறள் செம்மல் அவர்களின் வருகையினாலும், அவரோடு கலந்துரையாடி மகிழ்ந்த அனுபவத்தினாலும் ஒரு நல்ல பயனாக பிரான்சு நாட்டில் பன்னாட்டுத் தமிழறிஞர்களை அழைத்து உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்திட வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. திருக்குறள் செம்மல் திரு.ந.மணிமொழியனார் அவர்களின் மேற்பார்வையில் அவரது ஆலோசனைகளைப் பெற்று, மாநாடு வரும் 2013 ஜூன், ஜூலை மாதங்களில் நடத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம் என்பதைத் தெரியப்படுத்திக் கெண்டு திருக்குறள் செம்மல் திரு.ந.மணிமொழியனார் அவர்களைப் பேருரையாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

பிரான்சு கம்பன் கழகத்தின் உலகத் திருக்குறள் பேரவைக் கிளையைத் தொடங்கி வைக்கின்ற இத்தகு எழுச்சி மிகு விழாவில் உரையாற்றுகின்ற வாய்ப்பினை வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி எனது உரையினைத் தொடங்கினேன். “வேற்று மொழியில் பேசும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு நம் தாய்மொழியாகிய தமிழை மறவாமல் பாரீஸ் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து தமது வேலை, காலநிலை போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் ஆண்களும், பெண்களும், குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளீர்கள். இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது என்னை அறியாமலே எனக்குள் ஒரு வியப்பும், பெருமிதமும் உண்டாகின்றன. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இலக்கணத்தோடு மரபு கவிதை புனையும் ஆற்றலைப் பெற்றிருக்கும் அறிவார்ந்த இந்த பிரான்சு கம்பன் கழகத்தினர் உலகத் திருக்குறள் பேரவையையும் உருவாக்கி இருப்பது முற்றிலும் பொருத்தமுடையதே. இந்த விழாவில் கலந்து கொண்டு உலகத் திருக்குறள் பேரவையின் பெயர்ப் பலகையினைத் திறந்து வைத்தது உள்ளபடியே எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்கு மேலாக மாநகர்க்குக் கோபுரம் போல் இந்த விழாவிற்கு முத்தாய்ப்பாக அமைந்த திருக்குறள் அரங்கத்தில் உங்களுடன் பங்கேற்று குறள் நுட்பங்களைப் பரிமாறிக் கொண்டதை மறக்க முடியாத நிகழ்வாகக் கருதுகிறேன்.

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எல்லாக் காலங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லா விதங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை உணர்த்திடும் வழிகாட்டியாகத் திகழ்வது திருக்குறள்.

Image result for thiruvalluvar

“கற்க கசடறக் கற்பவை; கற்றபின்

     நிற்க அதற்குத் தக”      (391)

என்பதற்கு ஏற்ப திருக்குறளை நன்கு கற்று, கற்றதற்குத் தகுந்தாற் போல நடந்தாலே போதும், நம் வாழ்க்கை இன்னல்கள் இன்றிச் செம்மையடையும். அதனால் தமிழர் களாகிய நாம் உலகப் பொதுமறையாக விளங்கக்கூடிய திருக்குறளை நன்கு கற்பதோடு ஓதி உணர்ந்து பிறர்க்கு உரைத்து உலகமெங்கும் பரப்பி உலக மாந்தர் அனைவரும் பயனுறப் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏற்றமிகு செயலை எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டும் வண்ணம் செயல்படுத்திக் காட்டிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது உரையினை நிறைவு செய்த பின் நடைபெற்ற பாராட்டும், புகழுரையும், பரிசளிப்பும் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றின. கூடியிருந்தோர் ஆனந்தக் களிப்பு எய்தினர். கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது. இத்தனை பெருமையும், புகழும் திருவள்ளுவருக்கே!”

*     இலண்டன் மற்றும் பாரீஸ் நாடுகளில் உலகத் திருக்குறள் பேரவையின் கிளைகளைத் தொடங்கி வைத்துத் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன் ஆற்றிய சிறப்புரை.