ஒருங்கிணைப்பாளர்
“போராட்ட காலத் தலைமை வேறு, சுதந்திரம் பெற்றபின் அமையும் உரிமைக் காலத் தலைமை வேறு. அங்கே தியாகம் அடிப்படை, இங்கே ஒழுக்கம் அடிப்படை.”
பேராசிரியர்
“இதைக் கிரேக்கச் சிந்தனையாளரான சாக்ரடீசும், ‘அரசியல்’ எனும் உன்னதமான சித்தாந்த நூலை அளித்த பிளேட்டோவும் அன்றே சொல்லியிருந்தார்கள்.”
ஒருவர்
“நினைவில் இருந்தால் அதை நிலா முற்றத்திலும் உலவ விடுங்களேன்.”
ஆட்சி பீடத்திற்கு வர அருகதை என்ன?
பேராசிரியர்
“மிகச் சாதாரணமான தொழிலுக்குக் கூட அதற்கான ஒரு பயிற்சி இல்லாமல் எவரும் மேற்கொள்ளுவது இல்லை. ஆனால், மிகக் கடினமான ஆட்சித் தொழிலுக்கு மட்டும் எவர் வேண்டுமானாலும் தகுதியுடையவர்கள் என்று முன் வந்து விடுகிறார்கள்..”
ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கா.கருப்பையா
“சாக்ரடீஸ் அரசியலைத் ‘தொண்டு’ என்று சொல்லாமல் ‘ஆட்சித் தொழில்’ என்று அன்று சொன்னது இன்றைக்கும் எவ்வளவு பொருத்தம் என்பதை நினைவுகூர்ந்து சொன்ன பேராசிரியர்க்கு உளமார்ந்த நன்றி. அதற்காகவாவது கைதட்டு வோமே!” (கர ஒலி)
புலவர்
“இன்று அரசியல் என்பது முழுக்க முழுக்க ஒரு மோசடியான தொழில் போலத் தானே ஆகி வருகிறது? ‘தேர்தல்களில் தில்லுமுல்லு; தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் வாக்குறுதிகள் காற்றில் பறப்பு…” என்று மிக மட்டமான நிலைக்கு அரசியல் சரியாமல் தடுப்பது அனைவரின் பொறுப்பு அல்லவா..?”
ஒருங்கிணைப்பாளர்
“மொழிப் போர்க்காலத்தில் பேரறிஞர் அண்ணா எழுதியதை அவையோர்க்கு நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும்.”
சில குரல்கள்
“சொல்லுங்கள், அண்ணாவை மறந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நீங்களாவது நினைவில் வைத்திருக்கிறீர்களே!”
ஒருங்கிணைப்பாளர்
“ ‘சுதந்திரம், விடுதலை என்றால் சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல; வாலிபன் எண்ணுவது புதிய நிலை, புது அழகு, புது உருவம், புதிய மகிழ்ச்சி! நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான். உண்மையும் அதுதான்!’ என்றார் அண்ணா.”
இடைமறிக்கும் ஒரு குரல்
“ஆனால், அநியாயமாக உண்மை நிலை அப்படி மாறவில்லையே..! (எல்லோரும் சிவப்புத் துண்டு அணிந்திருந்த அவர் பக்கம் திரும்பிப் பார்த்தல்)
ஒருங்கிணைப்பாளர்
“பொதுவுடைமைப் பேராளர் தோழர் ஐயா சொல்வதையும் கேட்போமே..”
தோழர்
“‘நாம் மக்களுக்காக வாழ்பவர்கள்; மக்களைக் காட்டிலும் அதிகாரச் சலுகைகளையும் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள் மட்டும் வாழ முற்படக்கூடாது என்று ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்ற தோழர் லெனின் வழிக்கோட்டில் வழுவாது நின்று பணியாற்றுகின்றன நாங்கள் பொறுப் பேற்றுள்ள மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா முதலிய மாநிலங்கள்.”
ஒருங்கிணைப்பாளர்
“நம் திருக்குறள் பேரவையும் அது வானொலியுடன் இணைந்து நடத்தும் நிலாமுற்ற அரங்கும் அரசியல் பிரச்சாரங்களுக்கு அப்பாற் பட்டவை.”
தோழர்
“நான் நடைமுறையைத்தான் யதார்த்த எடுத்துக் காட்டாகச் சொன்னேன். அரசியல் பேசவில்லை.”
பேராசிரியர்
“நல்ல அரசியல்வாதிகள் எல்லாக் கட்சி களிலும் இருக்கிறார்கள். எல்லோருமே மோசமாகி விட்டார்கள் என்றோ, இந்தக் கட்சிதான் ஒழுக்கக்கோட்டில் நிற்கிறது என்றோ வெளிப்படையான விமர்சனம் வேண்டாம். நாம் பொதுவான நடைமுறைகளையே தொடர்ந்து சிந்திப்போம். தனி நிலா முற்றம் கூட்டி ஆராய்வோம்.”
(அவையில் சற்று அமைதி)
புலவர்
“அப்படியானால் மாதந்தோறும் பௌர்ணமி வரும்; நிலாமுற்றமும் சுவையான விருந்தும் தொடரும் என நம்பலாமா?”
மாதந்தோறும் பௌர்ணமி! முரணா – அரணா?
மற்றொருவர்
“எங்கள் புலவர் ஐயா.. எதை மறந்தாலும் சுவையான சாப்பாட்டை மட்டும் மறக்கவே மாட்டார்.”
புலவர்
“அட… நான் சொன்னது செவிக்கு உணவை ஐயா! நீர்தான் வயிற்றுப் பெருச்சாளி” (சிரிப்பு)
மற்றோர் அன்பர்
“‘செவிக்குச் சுவையா? வயிற்றுக்குச் சுவையா?’ எனும் முரண்பாட்டுச் சர்ச்சை போதும். நிலா முற்றம் கூடத் தொடங்கியவுடன் ‘திருக்குறளில் முரண்கள்’ பற்றியும் கருதுவோம் எனச் சொன்னது என்ன ஆயிற்று? தூக்கம் வரும் முன்னர் முரண்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாமா?”
பேராசிரியர்
“‘வள்ளுவ முரண்கள்’ என்றதும் என் நினைவு, நான் பயின்று, பணியாற்றிய அழகப்பர் கல்லூரிக்கு ஓடுகிறது. அங்கே தமிழ்த்துறைத் தலைவராகவும் முதல்வராகவும் துலங்கிய பேராசான் வ.சுப.மாணிக்கனார் முதுகலை, தமிழ் மாணவர் வகுப்பை மாற்றி அமைத்திருந்தார். இங்கு வந்துள்ள பேராசிரியர் வளனரசு அப்போது அங்கே பயின்ற முதல்நிலை எம்.ஏ.மாணவர். அவருக்கும் அந்த வகுப்பறை அமைப்பு நினைவில் இருக்கக்கூடும்.”
பேராசிரியர் வளனரசு
“ஆம். அந்த வகுப்பில் இருபாலருமாக இருபது பேர் எம்.ஏ. தமிழ் பயின்றோம். வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருப்போம் – பின்புறத்தில் ஒரு வரிசை நாற்காலிகள் போடப் பட்டிருக்கும். தனிக் கதவும் இருக்கும். பாடம் நடக்கும் போது வேறு வகுப்புக்களில் பாட வேளை இல்லாது, ஓய்வில் இருக்கும் பேராசிரி யர்கள், தாம் விரும்பினால் அந்த வரிசையில், ஓசையின்றி வந்தமர்ந்து, வேறு ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்கும் பாடத்தைத் தாமும் கேட்கும் பயன் பெறவே இந்த ஏற்பாடு.”
பேராசிரியர்
“அது மட்டுமல்ல. எம்.ஏ. முதுகலை வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்க்கு அது ஒரு அக்கினிப் பிரவேசம் போலவே அறிஞர் வ.சுப.மா. வைத்தார். அதாவது, பாடம் நடத்தும் பேராசிரியர், மாணவர்க்கு ஏற்றாற்போலப் புரியும் படி. இன்னும் சொல்லப் போனால், தம் புலமையை மட்டும் அருவியாகக் கொட்டாமல் பாடம் நடத்த வேண்டும். அதே சமயம், பின்னால் அமர்ந்திருக்கும் பேராசிரியர்கள் ஏற்கும் வகையிலும் செய்தாக வேண்டும்.”
புலவர்
“இப்படியெல்லாம் வகுப்புக்களில் யாரும் நடத்தவும் மாட்டார்கள்; அமர்ந்து கேட்க இசையவும் மாட்டார்கள். அது வ.சுப.மா.வின் வசந்த காலம்.”
வருமான வரித் துறை ஆணையர்
“அந்த வசந்த காலங்கள் மீண்டும் வலம்வர வாழ்த்துவோம்.. வ.சுப.மா. கூறிய வள்ளுவ முரண் களைத் தாண்டி விட்டாரே பேராசிரியர் குழந்தைநாதன்?”
குறளிலும் முரண்களா?
பேராசிரியர்
“தாண்டிவிடவில்லை; நினைவைக் கொஞ்சம் தோண்டுகிறேன். சொல்கிறேன். ஒரு நாள் எம்.ஏ.வகுப்புப் பாடம். பேராசிரியர் இரா.சாரங்க பாணியின் ‘திருக்குறள் உரை வேற்றுமை முதல் தொகுதி’ வெளிவந்த சமயம் என நினைக்கிறேன். அது திருக்குறள் திறனாய்வு வகுப்பு.. ஒரு மாணவர் அவர் பெயரும் மாணிக்கம் என்றே நினைவு. ‘ஐயா குறளில் முரண்கள் பல உள்ளனவே. அவற்றிற்கு எப்படி அமைதி கூறுவது?’ எனக் கேட்டார். அதற்கு அறிஞர் வ.சுப.மா.. இடை மறித்துக் கேட்ட வினா விடை என்ன தெரியுமா?”
கூட்டத்தில் ஒருவர்
“சுவையாய் இருந்தால் சொல்லுங்கள்..”
பேராசிரியர்
“நீதிமன்றத்தில் திருடியதற்காகக் குற்றம் சுமத்தப்பட்டுக் கூண்டில் நிற்கும் விசாரணைக் கைதியிடம் குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர், முதல் கேள்வியாக, ‘நீ களவாடிய பொருளை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறாய்’ என்று மடக்கி வினவுவார். அதாவது, அவன்தான் திருடினான் என்பதை உறுதி செய்து கொண்டவர் போல, அவனே ஒப்புக் கொள்ளத் தூண்டும் வகையில் கேள்வி தொடுப்பார் அல்லவா? அதைப் போல, மாணவர் மாணிக்கமும், ‘திருக்குறளில் உள்ள முரண்களுக்கு அமைதி என்ன?’ எனக் கேட்கும் போதே, திருக்குறளில் முரண்கள் நிறைய உள்ளன என்று என்னை ஒப்புக் கொள்ளச் செய்யும் கட்டாயம் அதில் தொனிக்கிறது. குறளின் முரண்களுக்கு அமைதி தேடும் முன்னர், குறட்பாக்களில் குழப்பம் உண்டா என்பதை முதலில் சற்றே சிந்திக்கச் செய்தது இன்றும் மறக்க முடியாத காட்சி. பேராசிரியர் வளனரசால் சில குறட்பாக்களை நினைவுகூர முடியும் என நினைக்கிறேன்.”
பேராசிரியர் வளனரசு
“நன்றி பேராசிரியர் ஐயா அவர்களே! ஒரு சில குறள்கள் நினைவில் படருகின்றன.”
ஒருங்கிணைப்பாளர்
“நீங்கள் அன்றைய நினைவேட்டைப் புரட்டுங்கள்; நானும் இன்றைய குழப்பங்களைச் சொல்ல முற்படுகின்றேன்.”
பேராசிரியர் வளனரசு
“சான்றாக, ஓரிரு குறட்பாக்கள் நினைவிற்கு வருகின்றன.”
“நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி” (324)
எனும் அறத்துப்பால் குறளும்,
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” (550)
எனும் பொருட்பால் குறளும் தம்முள் முரண்படுவதாகத் தோன்றுகின்றன.”
பேராசிரியர் சு.குழந்தைநாதன்
“இதற்குப் பேரறிஞர் வ.சுப.மா. அவர்களே தம் ‘வள்ளுவம்’ எனும் புகழேட்டில் பொருத்தமான விளக்கங்களை அப்போதே தந்துள்ளார். இக்குறட் பாக்களைப் போலவே, ஒறாமை, ஒறுப்பு; நெஞ்சத் துறவு, வஞ்சத் துறவு பற்றி மேலோட்டமாகத் தோன்றும் முரண்பாடுகளுக்கும் சரியான வள்ளுவப் பார்வையோடு அரண்கோலியுள்ளதை இந்த நிலாமுற்ற அவைக்கு நினைவூட்டுவது அவசியம்.
பேரறிஞர் வ.சுப.மா. அகநிலையறங்கள், புறநிலையறங்கள் என இரண்டாகப் பகுத்து, ஒரு மனிதன் அகநிலையிலும் புறநிலைப் பொறுப்பிலும் ஆற்ற வேண்டிய கடமைகளை முரண் எனக் கருத வேண்டாம் என விளக்க ஓர் உவமை சொன்னார், தந்தை ஒருவன், தன் மகன் சொந்த வீட்டிலேயே திருடிவிட்டால், அதைக் குடிமானம் கருதி வெளியில் சொல்லாமல், தன் மகனைத் திருத்தவோ, கண்டிக்கவோ முனைகிறான். அவனே நீதிபதி பொறுப்பேற்றிருக்கும் போது, அதே மகன் பிற இடத்தில் திருடியமைக்காகக் குற்றவாளிக் கூண்டில் எதிர்நிற்கும் போது, தன் மகன் எனவும் பாராது, உரிய நியாயமோ, தண்டனையோ அளிக்க வேண்டிய இக்கட்டான பொறுப்பிற்கு உள்ளாகிறான். இவ்விரு நிலைகளையும் ‘முரண்’ என்பதா? அல்லது ‘அரண்’ என்பதா?”
பேராசிரியர் வளனரசு
“பேராசிரியர் எடுத்துக்காட்டிய உவமைக்குப் பொருத்தமான குறட்பாக்களாக..
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் என்பதோடு, களை கட்ட தனொடு நேர்”
“குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்” (549)
என்னும் குறளை மாணிக்கனார் எடுத்துக் காட்டுவார். நாட்டுத் தலைவன், தனி மனிதன், வேந்தன் அல்லது அமைச்சன் எனும் இரண்டு நிலைப்பாடுகள் உடையவன். குடிமக்களுக்குப் பெரிதும் இடையூறு செய்பவரைத் தண்டித்துக் கொல்லுதல் பொதுநலம் காக்கும் அவனது (வேந்தன்) தொழில்; அதே சமயம், குடிநலம் பேணாது, தன் பதவியைக் காத்துக் கொள்ளு வதற்காகச் சட்டத்தை வளைத்துப் பிறரைத் தண்டிக்க முற்பட்டால் அதனை ‘நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும்நெறி’ (324) எனும் ‘கொல்லாமை’ அதிகாரப் பாடலோடு முரணுவதாகக் கருதக்கூடாது. ‘அதிகார துஷ்பிரயோகம்’ எனும் மகாப்பழியாகவே அது பிந்திய வரலாற்றில் இடம்பெறும்.”
புலவர் ஒருவர் இடைமறித்து
“‘பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’ (292)
என எல்லோர்க்கும் நன்மை பயக்குமானால் ஒருவன், தன்னலம் நோக்காது, பொய் கூற நேர்ந்தாலும், அது வாய்மையின் இடத்தில் வைத்து மதிக்கப்படும் என வள்ளுவர் மனவியல் புரட்சியை அன்றே செய்துவிட்டார்.”
மற்றொரு பெரும்புலவர்
“வள்ளுவர் அப்படிப் பொதுநலம் நோக்கிச் சொல்லும் பொய்யினை, வாய்மை என்று முழுமையாக ஏற்கவே இல்லை. அதனை வாய்மை எனும் இடத்தில் கொள்ளலாம்; அப்போதைக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்று தான் கருதியிருக்க வேண்டும் என நான் அடித்துச் சொல்லுகிறேன்.”
கூட்டத்திலிருந்து ஒரு குரல்
“புலவரய்யா யாரையும் அடித்துவிட வேண்டாம். நாங்களே தங்கள் கருத்தை வள்ளுவர் கருத்தாக ஏற்றுக் கைதட்டி விடுகிறோம்” (கரவொலிகள் – சிரிப்பலைகள்)
பேராசிரியர்
“பொய்யோ வாய்மை எனும் இடமோ இவை இரண்டுமே ஒருவரின் மனத்தைக் களமாகக் கொண்டவை என்பது உளவியலாரின் தீர்ப்பு. மனிதன் என்பவன் மனதால் வாழ்கிறான். மன எழுச்சியும் வளர்ச்சியுமே ஒரு தனி மனிதனின் மலர்ச்சியும் தளர்ச்சியும் என்பது அறிவியல் துணிபு.”
மற்றொருவர்
“ஐயா… ஓர் இடைமறிப்புக்கு மன்னிக்கவும்.”
ஒருங்கிணைப்பாளர்
“பேராசிரியர் சொல்லுங்கள். நீங்கள் முடித்ததும் வள்ளுவ முரண்களாக என் மனதில் எழுந்த ஐயங்களை இந்த அவை முன்னர் வைக்க விரும்புகிறேன்.”
பேராசிரியர்
“நான் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். மக்களிடம் வள்ளுவர் காலத்தில் இருந்த மனம் தானே இன்றும் இருக்கிறது? அதே அகவுணர்வு தானே இப்போதும் இருத்தல் வேண்டும்? மனச்சான்று, காலத்திற்குக் காலம் மாறுபடுமா?”
ஒருங்கிணைப்பாளர்
“இது சிந்திக்க வேண்டிய கேள்விதான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக வள்ளுவத்தின் மூலமே நமக்குப் புலனாகிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலே கூட சமுதாய மக்களில் பலருக்கு நல்ல மனம் இல்லை என்பதை அவரே இயற்றியுள்ள ‘கயமை’ எனும் தனி அதிகாரம் அழுத்தமாகச் சொல்கிறது.”
இடையில் ஒருவர்
“கயவராய் இருப்பதற்கு மன அழுத்தம் அவசியம் தான்” (அவையில் சிறு புன்முறுவல் பிரதிபலிப்பு)
ஒருங்கிணைப்பாளர்
“அது மட்டும் அல்ல; மனம் மாறுபடும் இயல்புடையது என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் ‘மகளிர் மனம் போல மாறுபடும்’ எனவும் வள்ளுவம் கூறுவதாக நினைவு! ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்” எனக் கவியரசு கண்ணதாசனும் பாடியுள்ளார்.”
பெரும்புலவர் இடைமறித்து
“மகளிர் மனப் போக்குப் பற்றிய ஆய்வில் இறங்கினால் எளிதில் மீள முடியாது; முரண்கள் முட்டி மோத ஆரம்பித்துவிடும். எனவே ஒருங்கிணைப்பாளர் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் சற்று முன்னர் கூற நினைத்த வள்ளுவ முரண்களைக் கோடிட்டுக் காட்டட்டும். நாமும் உடன் சிந்திப்போம்.”
ஒருங்கிணைப்பாளர்
“நான் வள்ளுவத்தில் முரண்பாடுகளை விட உடன்பாடுகளையே பெரிதும் காண்கிறேன். சிறு முரண்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவற்றைக் காலச் சூழலோடும் பாட வேறுபாட்டோடும் பொருத்தி அமைதி காண முற்படுவேன். மனம் பற்றி நிறையச் சொன்னார்கள். இந்த இடத்தில் டாக்டர் மு.வ. அவர்கள் கூறிய கருத்தை முதலில் முன்வைக்க விரும்புகிறேன். அவர் சொன்னார்:
‘பிற உயிர்களை விட மக்கள் வாழ்வு சிறந்திருக்கக் காரணம் அவர்கள் பெற்றுள்ள மனம் எனும் கருவிதான். அதைப் பயன்படுத்தவும் பண்படுத்தவும் வல்லவர்களாக அவர்கள் துலங்க வேண்டும். மக்கள் வாழ்வு என்பது ஐம்புல நிலைக்கும் அப்பாற்பட்ட உற்றுணர்ந்து ஒப்புரவோடு வாழ வேண்டிய மனத்தால் வாழும் வாழ்க்கை ஆகும். இந்த மனம் பண்படும் இடம், காதல் வாழ்க்கை; மனம் பயன்படும் இடம், பொது வாழ்க்கை; மனம் வாழும் இடம், தனி வாழ்க்கை.’”
அரசு அதிகாரி
“அறிஞர் மு.வ.வைச் சரியான இடத்தில் பொருத்தமாக நினைவூட்டி, எங்கள் மனங்களையும் நிறைத்து விட்டீர்களே?” (கைதட்டல்)
ஒருங்கிணைப்பாளர்
“‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என வள்ளுவரே முத்தாய்ப்பு இட்ட பின்னர், நாம் மனத்தைப் போட்டு இதற்கு மேலும் குழப்பிக் கொள்ள வேண்டுமா?
குறள் பட்டிமன்றங்களில் எல்லாம் வினாவாக எழுப்பப்படும் குறளை இந்த நிலா முற்ற அவையில் என் மனதைத் தாக்கிய முதல் முரணாக வைக்கிறேன்.
அந்தக் குறட்பா:
“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை’ (37)
அறத்தாறு என்றால் அறத்தின் பயன். ஆனால் இங்கு ஊழ்வினையையும் சுட்டுவது போலப் படுகிறது. அதாவது பல்லக்கைத் தாங்குவோர் தீவினை செய்தோர், அதில் ஏறி அமர்ந்து செல்வோர் நல்வினை செய்தோர் எனப் பன்னெடுங் காலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது.”
அறத்தாறு – இதுதானா?
ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா
“இன்றைய குடியாட்சிக்கு வந்து பொன்விழாக் கொண்டாடி விட்ட நம் நாட்டு நிலை என்ன? வாக்களித்தோர் தீவினை செய்தோராகவும், எப்படியோ வெற்றி பெற்றோர் நல்வினையாளராகவும் நாடகங்கள் அரங்கேறு கின்றனவே? வேட்பாளராக விழைவோர் தம் பூர்வ கதையை எல்லாம் தெரிவித்தாக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் அளவுக்கு ஆட்சிக் கட்டி லேறுவோர் மீது அவநம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே? அவர்கள் எல்லாம் நல்வினைப் பயனால் ஆட்சிக்கு வருகிறார்கள்; ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுகிறது’ என்பது தானே நடைமுறை?”
ஒருங்கிணைப்பாளர்
“அரசுப் பொறுப்பில் இருக்கும் அன்பர் அடுக்கிய ஐயங்கள் இன்றைய நம் குடியாட்சி முறையைச் சீர்குலைத்து வரும் கயமைகள் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை; ஆனால், குறட்பாவின் உண்மைப் பொருள் எதுவாயிருக்கும் என நாம் மனம் விட்டுச் சிந்திக்கலாமே?”
பேராசிரியர் வளனரசு
“இந்தக் குறளுக்கு ஊழைக் கருத்தில் கொண்டு பொருள் காண முற்பட்டால் ஏற்றத்தாழ்வு எண்ணமே நம்முன் நந்தி போல் நிற்கும்.”
ஒருவர்
“அப்படியானால் வள்ளுவர் ‘ஊழ்’ பற்றித் தனி அதிகாரமே செய்துள்ளமைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”
பேராசிரியர் சு.குழந்தைநாதன்
“ஊழுக்கு அவர் தனி அதிகாரம் செய்திருப்பினும் அங்கு அவர் கருதிய பொருளமைதி இந்தக் குறளுக்குப் பொருந்தாது என்பது பல அறிஞர் முடிபு. அப்படிக் கருதினால் சமுதாயத்தில் உயர்வு தாழ்வுப் போராட்டத்திற்கு, சமூக நியதிக்கு, சட்டத்திற்கு எல்லாம் அப்பால் போய், ஏதோ ஒரு சமாதானம் தேடிக் கொள்ளுவதாகவே அமையும். வள்ளுவர் ஊழில் உறுதி இல்லாதவர் அல்லர். அது இக்குறளுக்குப் பொருந்துமா என மட்டுமே நாம் கருத வேண்டும்.”
ஒருங்கிணைப்பாளர்
அறநெறி என்பது இரு சாராருக்கும் பொதுமையானது தான். பல்லக்கைத் தாங்குவோரும் மனிதரே. அதில் அமர்ந்து செல்வோரும் மனிதரே. பல்லக்கைச் சுமப்போராயினும் அவர்கள் அற நெறியில் நின்றால் அறவோர் ஆகலாம். அதில் அமர்ந்து செல்வோராயினும் அவர்கள் அறநெறி பற்றி நின்றாலே அறவோர் ஆகலாம். அறவோர் ஆகும் வாய்ப்பு இருசாரார்க்குமே உண்டு. அது அவரவர் செயல் விளைவே அன்றி – அறத்தின் பயன் எனக்கொண்டு, ஏதோ முற்பிறவிப் பயன் என ஊழை மாசுபடுத்தக் கூடாது, காரணம் காட்டக் கூடாது.
‘அறத்தான் வருவதே இன்பம்’ என்பதுதான் வள்ளுவத்தின் உண்மைப் பொருள்.”
( தொடரும் )
சமீபத்திய கருத்துகள்