சிகாகோ: இந்திய ஆன்மீக
முதல் முழக்கம்
இந்திய ஆன்மீகத்தின் முதல் முழக்கத்தை – புதிய விவே(காநந்தக்)கக் குரலை கேட்கும் – வாய்ப்புப் பெற்ற நகரம் சிகாகோ இந்திய நாட்டவரைப் பற்றிச் சென்ற நூற்றாண்டிலேயே கேள்விப்பட்டுப் பெருமை கொண்ட நகரம் அது.
சிகாகோ தமிழ் அன்பர்கள் (டெய்டனிலிருந்து 300 மைல் தூரம்) கூட்டிச் செல்ல வந்திருந்தனர். டெய்டன் விழா முடிந்த கையோடு சிக்காகோவுக்குக் காரில் போக திரு.பி.சி.எம்.ஜி. நாராயணனும் வேங்கட ராமானுஜமும் ஏற்பாடு செய்திருந்தனர். வேங்கடராமானுஜம் ஏற்றுமதித் துறையில் பொறுப்பான பதவி வகிப்பவர்; மதுரையில் புகழோச்சி வரும் மகாத்மா மாண்டிசேரிப் பள்ளித்தாளாளாரும் யாதவர் கல்லூரிச் செயலருமான திரு.பன்னீர்செல்வம் அவர்களின் சகலர். இவ்வன்பர்களின் குடும்பத்தாருடன் சிகாகோவுக்கு சாலை வழிப்பயணமாய்ப் புறப்பட்டோம்.
தாயக்கட்டமா? தார்ச்சாலைகளா?
சாலைகள் நாட்டின் நரம்பு மண்டலங்கள் பொருளாதார நலத்திற்கும் சமூக வாழ்வுக்கும் இன்றியமையாத இணைப்புக் கோடுகள். மிக விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட அமெரிக்க நாட்டின் திசைகளை எல்லாம் – அந்நாட்டின் நெடுஞ்சாலைகளே இணைக்கின்றன. ஊருக்கு ஊர் சொந்த / பொது விமானப்பயண வசதிகள் மிகுதியாக இருந்தாலும், ரயில் பயணத்தை விட, சாலைப் பயணத்தையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கேற்ப மோடல் (விளிஜிணிலி) எனப்படும் தங்குவிடுதிகளையும் செய்தித்தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
அங்கே நெடுஞ்சாலைகளின் அழகுக்கும் பராமரிப்புக்கும் இணை ஏதுமில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை – நேர்கோடு போல – நீண்டு விரியும் இச்சாலைகளில் எல்லாம் – வாகனங்கள் ஊர்ந்து போவதில்லை! விரைந்து பறக்கின்றன! 60 மைல் வேகம் குறையாமல் ஓட்ட வேண்டும் என்பது விதி; ஆனால் சர்வசாதாரணமாக 80, 100 மைல் வேகத்தில்தான் ஓட்டுகிறார்கள். வாகனங்களைக் கண்காணிக்கப் போலீசார் ராடார் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். என்றாலும் கார் ஓட்டுநர்கள் தம் வண்டியில் உள்ள மின்னணுச் சாதனங்கள் வழியே ராடார் இயக்கத்தைத் தெரிந்து கொண்டு அப்போதைக்கு மட்டும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு அப்புறம் சிறகுகட்டிப் பறக்கிறார்கள்.
வேகம் – வேகம் – வேகம். இதுதான் அமெரிக்க வாழ்க்கை! என்றாலும் கூட அந்த வேகத்திலும் – ஒருவகை ஒழுங்கும் கட்டுப்பாடும் மேவி நிற்பதைக் காணமுடியும். பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்வதை உரைகல்லாக வைத்தே ஒரு நாட்டின் ஒழுக்கத்தை அளந்தறிய வேண்டும் என்பார்கள். அங்கே ‘பொதுஇடம்’ எதுவாயினும் – அது புனிதமாகப் போற்றப்படுகிறது. ‘பொது என்றாலே, யாருக்கும் சம்பந்தமில்லாத அனாதை போன்றது; பொதுஇடத்தையோ, பொதுப்பொருளையோ, முறைகேடாக உபயோகிக்கலாம்’ என்ற நம்நாட்டின் பெரும்பாலானோரின் மனப்போக்கு இந்த அமெரிக்கப் பாடத்தால் மாற்றம் காணவேண்டும்.
நம் நாட்டில் பொதுப் பேருந்துகள் படும் பாடு நமக்குத் தெரியும். பயணிக்கும் ஓட்டுநர் / நடத்துநருக்கும் சிறு வாய்த்தகராறு மூண்டால் போதும். அது கைகலப்பாகி, ரத்தக் களரியாகி, சாலை மறியலாகி, சட்டஒழுங்குப் பிரச்சினையாகி, குழு மோதலாகி, துப்பாக்கிச்சூடு ஆகி, நீதி விசாரணை ஆகி, அப்புறம் புஸ்வாணம் ஆகிவிடும். அதே சமயத்தில் பேருந்து – சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாலையின் குறுக்கே படுத்துக் கிடக்கும். அமெரிக்கச் சாலைப் பயணத்தின்போது என்னால் இந்த ஒப்பீட்டை நினைக்காமல் இருக்க முடியவில்லை. “இது மாறும் நாள் எந்த நாளோ! யார் இதைப் பகர்வார் இங்கே?” எனும் பாரதிதாசன் வரிகளே நினைவுக்கு வருகின்றன.
அமெரிக்க நாடு எங்கும் தாயக்கட்டம் போல அமைந்திருக்கும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு விளக்கமான கைகாட்டிகளும் குறிப்புத் தூண்களும் உள்ளன. நெடுஞ்சாலை வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டால் போதும்; எங்கே திரும்ப வேண்டும். எங்கே பாதை மாறிச் செல்லவேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
சாலையை இருபிரிவாக நடுவே பிரித்து – போகும் வழித்தடங்கள் ஒருபுறமும், எதிர்வரும் வண்டித்தடங்கள் மறுபுறமும் எனப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புறத்திலும் நான்கு (ஜிக்ஷீணீநீளீs) தடங்களுக்கு குறையாமல் ஓடுகின்றன. இத்தடங்கள்தான் ஓடுகின்றனவா அல்லது இவற்றின் மீது வாகனங்கள் ஓடுகின்றனவா எனக் கணிக்க இயலாத வகையில் அங்கே எல்லாம் அசுர வேகம்தான்! லைஃப் லைன் எனும் உயிர்க்கோடு தாண்டாத ஒழுங்கு வேகம்தான்!
“நீறில்லா நெற்றி பாழ்”
என்பது நம் நாட்டுப் பழமொழி
“காரில்லா வாழ்வு வீண்”
என்பது அவர்களின் நடைமொழி!
அங்கேதான் எத்தனை வகைக் கார்கள்! சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களுக்குத் தனியே நான்கைந்து கார்கள் உள்ளன. டிரைவர் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே கட்டுப்படியாகாது. டிரைவர் சம்பளமே 1500 டாலர் தேவைப்படும். எனவே பிள்ளைகள், பெரியவர்கள் எல்லோருமே கார் ஓட்டப் பழகிக் கொள்கிறார்கள். அங்கு பயணம் போகிறவருக்குக் காரோட்டத் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. நம் ஊரில் வாடகைச் சைக்கிள் எடுப்பது போல, ஓரிடத்தில் வாடகைக் கார் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றப் போய் விடலாம். வரைபடம் கையில் இருந்தால் போதும் ஊரை வலம் வந்துவிடலாம்.
அன்றாட வாழ்வில் சாதாரணத் தேவைகளுக் கெல்லாம் பிறர் கையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மனோபாவம் மிக மிகக்குறைவு. நம் ஊரில், எங்கேனும் வெளியிடப் பயணம் புறப்படுகையில் நம் மூட்டை முடிச்சுகளை லக்கேஜுகளை தூக்கி வரச் சுமையாள் தேடுகிறோமே, அப்படியெல்லாம் அங்கே ஆள் கிடையாது; கிடைத்தாலும் கூலி கொடுக்க முடியாது.
ஆள் தேட வேண்டாம்!
கூடுமானவரை அவரவர் காரியத்தை அவர்களே செய்துகொள்ள வேண்டும். தன் கையே தனக்கு உதவி என்பதே அங்கு தாரக மந்திரம். ‘வலிமையுடையோர் பிழைத்துக் கொள்வர்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ஷீயீ tலீமீ திவீttமீst) என்பதே அங்கு வாழ்க்கை நெறி.
ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். நெடுஞ் சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் காருக்குப் பெட்ரோல் போட்டுக்கொள்ள வேண்டுமானால், நாமே உரிய இடத்தில் காரை நிறுத்திவிட்டுப் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் எந்திரம் கணக்கிட்டுக் காட்டும். உரிய தொகையைச் செலுத்திவிட்டுப் புறப்படலாம். பெட்ரோல் நிரப்பிவிட ஆளைக் கூப்பிட்டுவிட்டால் அந்தப் பணிக்காக அதிக கட்டணம் கட்டியாக வேண்டும். கார்களை நன்கு பராமரித்து வைத்துக் கொள்ளுகிறார்கள். ரிப்பேருக்காக அதிகம் செலவிடுவதில்லை. சரியாக ஓடாத காரைக் குப்பையில் தள்ளிவிட்டுப் புதுக்காரை வாங்கிக் கொள்ளுகிறார்கள்.
ரிப்பேரா? ஓரம்போ!
காரைப் பராமரித்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்த நாட்டில் சாலையை, இவ்வளவு நீண்ட, பெரிய நெடுஞ்சாலையைப் பராமரித்து வரும் அழகை எளிதில் வருணித்துவிட முடியாது. அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் அங்கே நெடுஞ்சாலைகளையும் சுற்றுப்புறத்தையும் பராமரிக்கின்றனர்; பாதுகாக்கின்றனர். சாலையில் கார் பழுதாகி நின்றுவிட்டால் பிற வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் அதை நான்காவது (ஓரமாயுள்ள) வழித்தடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். அதில் சமிக்ஞையை மாட்டிவிடுகிறார்கள். அப்படி நிறுத்திய பத்து நிமிடங்களுக்குள் (எப்படித்தான் விவரம் அறிந்து வருவார்களோ) அங்கு போலீஸ் வந்து விடுகிறது. உரிய உதவிகளுடன் காரை அப்புறப்படுத்தி விடுகிறார்கள். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றிக் கண்காணிக்கிறார்கள். ஒருவரால் 5 நிமிடம் தடை ஏற்பட்டாலும் அது பலருக்குப் பல வகையில் பல மடங்கு தாமதத்தையும் நட்டத்தையும் ஏற்படுத்திவிடும் என்று கவனமாக இருக்கிறார்கள்.
இங்கும் அங்கும்
தனிநபர் சுதந்திரமும், சௌகரியமும் எந்த வகையிலும் பொதுநலனுக்காக ஊறாக அமையக் கூடாது. தனிநபர் சுதந்திரத்தை வெகுவாகப் போற்றி மதிக்கும் அமெரிக்கர்கள்- மிகை உணர்வுகளுக்கு முதலிடம் தந்துவரும் அமெரிக்க மக்கள் – பொது நலக் காப்பிலும் எவ்வளவு அக்கறையுடன் விழிப்புடன் உள்ளார்கள் என்பதை அங்குள்ள நெடுஞ்சாலைப் பயணங்களில் கண்டேன்.
தனது சுதந்திரத்தால் தன்னலத்தால் அடுத்தவருக்கு எந்த வகையிலும் சிறுஇடையூறுகூடச் செய்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறார்கள். நம் ஊர்த் தெருக்களில் கார்களின் ஆரன் சத்தம் செவிப்பறைகளைக் கிழித்தெடுக்குமே, அப்படியெல்லாம் அங்கில்லை. என் காதில் ஆரன் சப்தமே கேட்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் சாலை விதிகளை மதித்து நடப்பதால் எல்லார்க்கும் வாழ்க்கை சுகமாக அமைகிறது.
வியப்பில் ஆழ்த்தியது
நான் சிங்கப்பூர் செல்லுகையில் அங்கும் சாலை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். சிங்கப்பூரில் பொது நலத்திற்கு ஊறு செய்யும் வகையில் சாலையில் குப்பையைப் போட்டாலோ வண்டிகளைத் தடம் மாறி ஓட்டினாலோ கடுமையாகத் தண்டிக்கிறார்கள். அச்சமே அங்கு ஆசாரம். அந்த அச்சத்தால் அங்கே ஒழுங்குமுறை நிலை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்காவில் அச்சத்திற்கு ஆட்பட்டு அடங்குவதை விட, பொறுப்பை உணர்ந்து அவரவர் ஒழுங்கை மதித்து நடக்கும் ஆக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் உயர்வுக்கு இந்த உயர்பண்பும் காரணம் எனக் கருதினேன்.
விவேகானந்தர் பாதச் சுவட்டில்
மதுரையிலிருந்து புறப்படுமுன் – வழியனுப்பு விழாவில் விவேகானந்தர் விஜயம் பற்றிக் கேட்ட உரைகளின் நினைவுகள் – சிகாகோ நெருங்கும்போது என்னை வலம் வந்தன… சிகாகோ போய்ச் சேர்ந்தோம். நண்பர்கள் வீட்டு நல்லுபச்சாரங்களில் திக்கு முக்காடிப் போனோம்… என் நெஞ்சமெல்லாம் சிக்காகோ நகருக்கு. நம் விவேகானந்த சுவாமிகள் வந்து இந்து சமயம் பற்றிப் பேருரையாற்றிய அந்த வரலாறே வலம் வந்தது. அவர் எழுந்தருளிய, சொற்பொழிவு செய்த, பெருமைமிகு அரங்கிற்குக் கூட்டிச் சென்றார்கள். அவருடைய நினைவை மிகச்சிறப்பாக அங்கே போற்றி வரக் கேள்விப்பட்டு உவகை அடைந்தேன். விவேகானந்தர் பாதம் பட்ட இடத்தை வணங்கித் தொழுதேன். நானும் ஒரு நிமிடம் கண் மூடித் தியானித்தேன். நெஞ்சம் நெகிழ்ந்தது.
சுவாமி விவேகானந்தர் இந்து சமயப் பெருமையைப் பரப்ப இங்கே 1893-இல் வந்தார். அவர் அடிபற்றி இப்போது, திருக்குறளின் பெருமையைப் பரப்ப நானும் ஓர் எளிய வாய்ப்புப் பெற்று சிகாகோ வந்திருப்பதை நினைத்தும் என் நெஞ்சம் மகிழ்ந்தது.
“விவேகானந்த சுவாமிகள் எங்கே? நாம் எங்கே?” என மலைப்பும் அச்சமும் தோன்றினாலும் பேரருளாளரான விவேகானந்தரின் வீர வாசகங்கள் இப்போதும் “ஆகுக, ஆக்குக!” எனவும் “எழுமின் – விழிமின் – செயலாற்றுமின்” எனவும் அன்று போல் இன்றும் அறைகூவி அழைப்பது போலவே உணர்ந்தேன்.
“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்” (33)
என்ற வள்ளுவர் வாசகம் உணர்ந்தேன். சிகாகோ நகரைச் சுற்றிப் பார்ப்பதை விட விவேகானந்தர் வருகை பற்றிய விவரங்கள் இங்கே எப்படிப் பேசப்படுகின்றன என்று அறிவதிலேயே ஆர்வம் கொண்டேன். கிடைத்த செய்திகள் சுவையானவை:
சிகாகோ சமயப் பேரவை 1893-இல் கூடியது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் திட்டத்தில் உலகக் கண்காட்சி, கொலம்பியன் பொருட்காட்சி என்றெல்லாம் அமைக்கப்பட்டன. மனித குலத்தின் செல்வப் பெருக்கை மட்டும் அல்லாமல், ‘மனித சிந்தனை’ எனும் நெடுவளத் துறையில் கண்டுள்ள முன்னேற்றமும் அப்பொருட்காட்சியில் எடுத்துக்காட்டப்பட்டன. அதன் ஒரு பகுதிதான் சமயப் பேரவை.
சமயப் பேரவைத் தலைவரான ஜான் ஹென்றி பர்ரோஸ் பாதிரியார் கிறித்தவ மதம்தான் உலகிலேயே உயரிய மதம் என்பதை நிரூபிக்கும் தோரணையில் ஆடம்பரமாகப் பேரவையைக் கூட்டினாராம். உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான சமய, தத்துவவாதிகள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டனராம். எல்லோரும் வந்து மேலைப் பெருமையைப் பார்த்து வாயடைத்துப் போக வேண்டும் என்பதுதான் அமைப்பாளர்களின் நோக்கமாம்.
உலகில் பரவியுள்ள யூதம், புத்தம், இஸ்லாம், இந்து, தாவோ, கன்பூசியம், ஷின்டோ, ஜராதுஷ்டிரம், கத்தோலிக்கம், புராட்டஸ்டண்ட் ஆகிய பத்து மதங்களின் பிரதிநிதிகளும் பேரவைக்கு வந்தனர்; உரையாற்றினர். பேரவை அரங்கிலேயே சிறப்பிடம் தந்து கௌரவிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் உரையாற்ற அழைக்கப்பட்டார். ‘சகோதரிகளே! சகோதரர்களே!’ எனும் அவரது தொடக்கத்தைக் கேட்ட பேரவை உற்சாகப் புயலால் தாக்கப்பட்டாற்போல ஒருவகைப் புத்துணர்ச்சிக்கு உள்ளாயிற்று. உலகிலேயே மிக இளைய அமெரிக்க நாட்டிற்கு, உலகின் மிகப்பழைய நாட்டுத் துறவி வந்து கூறும் கருத்தை விருப்போடு கேட்கத் தயாராயிற்று.
“வெவ்வேறு இடங்களில் தோன்றும் நதிகள் எல்லாம் ஒரே கடலில் சென்று சங்கமம் ஆகின்றன. அதைப் போலப் பல்வேறு குணப்பாங்குடைய மனிதர்கள் பின்பற்றும் சமய வழிபாடும் ஓர் இறைவனையே சென்று அடைகின்றன…”
விவேகானந்தர் ஆற்றிய உரை – திருக்குறள் போல மிகமிகச் சுருக்கமானது. ரொமெயின் ரோலோ என்னும் பேரறிஞர் “தீச்சுடரைப் போன்றது அந்த உரை. ஏட்டுச் சுரைக்காய் போலப் போய்க் கொண்டிருந்த சொற்பொழிவு- களூடே விவேகானந்தர் உரை மட்டும், கேட்பவர்களின் இதயக்கனலை மூட்டிவிட்டது!” எனப் பாராட்டி உள்ளார்.
“ஒரு மதம் வெற்றியடைந்து பிறமதங்கள் அழிந்து போய்விடுவதன் மூலம் உலகில் சமய ஒற்றுமை உண்டாகிவிடும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஒவ்வொருவரும் மற்றவர் உணர்வுகளை ஏற்றுச் சீரணிப்பதோடு, தத்தமது தனித்தன்மையைப் பேணி, வளர்ச்சிக்கான தன் சொந்த மரபுகளின்படி உயர வேண்டும்.” என முத்தாய்ப்பு வைத்த அவரது ஆக்க உரை சகிப்புத் தன்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றுத்தந்தது. பாரதப் பண்பாட்டின் ஆக்கபூர்வமான அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்தது. உலகக்குடிமை உணர்வு, ஓர் உலக அரசு ஆகிய சிந்தனைகள் மலர வழிகோலியது! விவேகானந்த உரைக்கும், திருக்குறள் நெறிக்கும் உள்ள நெருங்கிய உடன்பாட்டைச் சிந்திக்க அப்பிரசுரங்கள் மிகவும் உதவின.
சமீபத்திய கருத்துகள்