குறள் நிலா முற்றம்
பாகம் : 1
ஒருங்கிணைப்பாளர்:
‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன்
ஏற்பாடு : மதுரை வானொலி நிலையம்
‘வழிபாட்டு நூலா? வழிகாட்டும் நூலா?
திருக்குறள் நாம் வாழும் காலச் சூழ்நிலைக்கெல்லாம் பொருந்தும் வகையில் நம் முன்னர் எழும் சமூகச் சிக்கல்களுக்குத் தக்க தீர்வைத் தருமா? படித்துச் சுவைத்து நுகர்வதற்கு உரிய இலக்கியமாக மட்டுமே நீடிக்குமா? அல்லது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் சமுதாயத்திற்கும் தனி நபர்களுக்கும் பொருந்தும் வகையில் வழிகாட்டுமா? அது கைகூப்பித் தொழும் வழிபாட்டு நூலாகப் போற்றப்படுகிறதா? அல்லது நம்மைக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் வழிகாட்டு நூலாக ஏற்கப்படுகிறதா? மனிதர்களிடையே இயல்பாக உள்ள முரண்களைப் போலத் திருக்குறள் கூறும் வாழ்வியல் சிந்தனைகளிலும் முரண்கள் இருப்பது போலத் தெரிகிறது. அவையெல்லாம் உண்மையிலேயே முரண்பாடுகளா? அல்லது தெளிவுறு மனத்தோடு சிந்தித்தால் அம்முரண்களினூடேயும் வலுவான அரண் போன்ற கோட்பாடுகள் அமைந்திருப்பதைத் தெளிந்து கொள்ள முடியுமா?… எனப் பல்வேறு சிந்தனைக் கீற்றுகளுடன் நிலா முற்றத்தில் அறிஞர் அவை கூடியிருந்தது.
நீலவான் ஆடைக்குள் முகம் மறைத்திருந்த நிலவு, மேகத்திரள் தாண்டி மேலெழுந்து தன் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுவது போல, மெல்லென அதிர்ந்த மின்னல் போலத் தொடங்கிய நிலா முற்ற அரங்கு, நேரம் ஆக ஆகக் கூடியிருந்த அறிஞர் பெருமக்களின் கலந்துரையாடலாலும் கருத்து மோதல்களாலும் விளக்கம் பெறத் தொடங்கிவிட்டது. தனிப்பேச்சு, கருத்தரங்கம், பட்டிமன்றம் எனும் முப்பரிமாணம் கொண்ட முற்றமாக அது பயன் நல்கலாயிற்று.
திருக்குறள் தமிழ்மொழியில் தோன்றியமை நம் தமிழ் பெற்றதொரு வரலாற்றுப்பெருமை. பாரதியாரைப் போற்றிப் பாடிய பாவேந்தர் பாரதிதாசன்,
“என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்,
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்…!”
என வியந்து முடிவுரை கூறியதைப் போல…
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
எனப் பாரதிப் புலவரே வள்ளுவத்தால் தமிழ் மொழியும் நாடும் பெற்ற உலகப் பெருமைக்கு முத்தாய்ப்பிட்டுப் பாடிவிட்டார்.
‘தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி, வழிவழியாக வாழ்வு பெற்று இன்றும் வழக்கில் உள்ளது எனப் போற்றிப் பாராட்டப் பெறும் பெருமைக்குரிய ஒரே நூல் திருக்குறள்’ எனப் பழங்கதை போலப் பேசி வருகிறோம்; நமக்குள்ளே மகிழ்கிறோம். இந்தச் சிறப்பு திருக்குறளுக்கு உண்மையிலேயே பொருந்துமா? அல்லது ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என நமக்கு நாமே கூடிப் பேசிக் கலைகிறோமா? எனச் சிலர் வினாத் தொடுத்திட, நிலா முற்றம் களைகட்டியது.
இடைமறித்த பேராசிரியர்
“திருக்குறளின் கருத்து கால எல்லை க்கு உட்பட்டதல்ல. காலம் கடந்த தத்துவங்களையும் சமுதாயச் சிந்தனைகளையும் நடைமுறைப்படுத்த வல்ல செயல் நூல் அது. பகவத் கீதை, விவிலியம், திருக்குர்ஆன் போன்ற சமய நூல்களைப் போல உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்புச் செய்யப் பெற்றுள்ள ஒரே வாழ்விலக்கிய நூல் அது ஒன்றுதான். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு எனும் வரையறைகளைக் கடந்து உலக மெல்லாம் தழுவிக் கொள்ளத்தக்க தகுதியுடைய பொது நூல். அது மனித குலத்தின் நீதி நூல்; வாழும் நியதி நூல்.”
மற்றோர் அறிஞர்
“வள்ளுவத்தில் அதிசயங்களோ, அற்புதங்களோ, சூத்திரங்களோ, சூட்சுமங்களோ இல்லை; அன்று வள்ளுவர் வரைந்தளித்ததை இன்று நாம் அப்படியே கையாள முடியவில்லை என்றால், அது நூலின் பிழையில்லை; நம் இன்றைய சமூக வாழ்வின் பிழை. நாம் மனிதத் தன்மையிலிருந்தும் மனிதப் பண்பிலிருந்தும் நெடுந்தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே இந்தப் பிழைக்குக் காரணம்.
நமது பிள்ளைகளுக்கு அளிக்கப்பெறும் கல்விக்கும் அவர்களோடு நாம் வாழும் வாழ்க்கைக்கும் இன்று உள்ள உறவு ‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவு’ போலத்தான் உள்ளது! (சிரிப்பு)….
நம் வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் முழுமையாய்ப் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை, அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி.
சாதாரண மனிதன் கூட, நடை பயிலக் கூடிய எளிய அற நெறியையே வள்ளுவர் கூறினார்; அதையும் தனித்தனி அதிகார வரம்பிற்குள் நின்று, எளிய முறையில் கூறினார்.
திருக்குறள் ஒரு வாழ்க்கை அனுபவ விளக்கம். வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் கண்டறிந்த, உற்றறிந்த உணர்வோடு தொகுத்துச் சொல்லும் கையடக்க ஏடு. அதிகாலைப் பனிப்பொழிவால் தரையில் படர்ந்துள்ள புல்லின் இதழ் நுனியில் தூங்கும் அந்தப் பனித்திவலையைச் சற்று உற்றுப் பார்த்தால், அதில் வானத்து விளிம்பு முழுதுமே தெரியும். அதைப் போல ஒரு குறட்பாவைப் படித்தாலும் போதும்… அது தான் பேச வந்த ஒரு பொருள் பற்றிய விரிவெல்லை முழுவதையுமே நமக்குக் காட்டிவிடும்…”
கூட்டத்தில் ஒருவர்
“ஒவ்வொரு குறட்பாவும் பனித்துளி காட்டும் பளிங்கு மா மண்டபம் என்பது அழகான உவமை.”
ஒருங்கிணைப்பாளர்
“இப்போது வள்ளுவரைப் பற்றி எனக்கு வேறொரு உவமை சொல்லத் தோன்றுகிறது…! திருவள்ளுவர் சமுதாயத்தில் பல்வேறு துறைகளையும், நிலைகளையும் ஆய்ந்தறிந்து, நாட்டில் அதுவரை பரவியிருந்த அறிஞர் மற்றும் புலவர்தம் கருத்துக்களையும் கேட்டு, படித்து, அறிந்து, தெளிந்து, எல்லாவற்றையும் நினைவில் கொண்டு, வள்ளுவத்தைச் செய்திருக்கிறார். மிகச்சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றியிருக்கிறார். அவர் ஒரு கைத்திறமிக்க ‘சொல் தச்சராகவே’ – ‘கருத்துச் சிற்பியாகவே’ இன்றும் நமக்குத் தோன்றுகிறார்… மக்கள் அள்ளித்தெளித்த கோலம் போல இன்று வாழ்கிறார்கள்… வள்ளுவர் அன்றே எழுதிய குறட்பாக்களைப் புள்ளிகளாக்கிப் புதுக்கோலம் புனைந்துள்ளார்…. இல்லத்து முன்றிலில் விடிகாலை தோறும் கோலமிட்டு மனைவிளக்கம் தரும் மங்கையர் பணி போல, வாழ்வில் அன்றாடம் நாமும் நல்லாடை புனைதல் போல, புதுப்புதுக் கருத்துப் பொலிவால் புதுநலன்கள் பெறுவோம்; புத்துணர்ச்சி பெருகக் காண்போம். ஒவ்வொரு நாளையும் ஒரு திருநாள் போலக் கருதி, புதுமலர் போலச் சூடி அன்றாட வரலாற்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும் – அகம் – புறம் எனும் இரு நிலைகளிலும் – வளர்ச்சிக்கு உரிய மாற்றங்களை வழங்குவதே குறளின் நிலைபேற்றிற்கும் நீடு புகழுக்கும் காரணம்.
உலக சமுதாயங்களில் புறத்துறை வாழ்வில் புரட்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பது வரலாறு. ஆனால் அகம் – புறம் எனும் இரு துறைகளிலும் சமச்சீரான மாற்றங்களைச் செய்து, பிறருடன் இணங்கி, ஏற்றமுற வாழ வழிகாட்டிய சான்றோர் மட்டுமே உலக நாகரிகத்தை உருவாக்கியவர்கள். அத்தகையோர் எண்ணிக் கையில் மிகச்சிலரே ஆயினும் அவர்களால் தான் இன்றளவும் உலகம் புதுப்புதுச் சிந்தனை மலர்களால் தன்னைச் சிங்காரித்துக் கொள்கிறது.”
இடைமறித்த ஒரு பேராசிரியர்
“உலக நாகரிகத்தை, சிந்தனைச் செல்வத்தை உருவாக்கிய சான்றோருள் திருவள்ளுவர் தலையாயவர் என இங்கே எதிரொலித்த செய்தி கேட்டு என் செவிகள் எல்லாம் இனித்தன… உங்கள் செவிகளும் இத்தேனினு மினிய கனிகளை நுகர்ந்திருக்கும்…”
புலவர்
ஐயா அவர்கள் ‘செவிநுகர் கனிகள்’ எனும் கம்பன் வாக்கைத் தான் நினைவூட்டுகிறார்.
கம்பன் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளுக்கு விளக்கவுரை போலச் செய்துள்ளதைத் தான் நினைவூட்டினேன்; குறளின் சூத்திரங்களைக் கம்பன் தன் பாத்திரங்கள் வாயிலாகப் பேசினான்!
தமிழுக்குக் ‘கதி’ எனக் கம்பரையும் திருவள்ளு வரையும் சொல்வது அதனால்தான் வந்தது…”
இன்னொருவர்
“சரி… சரி… குறள் முற்றத்துக்கு வருவோம்… கம்பரும் வள்ளுவரும் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் என்றென்றும் நிலைபெறச் செய்தார்கள். தமிழர்களாகிய நாம் செய்த தவம் அது ஒன்று போதும்.
தமிழ் முனிவர் திரு.வி.க. அன்று சொன்னதை இந்த நிலா முற்ற அரங்கில் நினைவூட்ட விரும்புகிறேன்.”
பேராசிரியர்
“சொல்லுங்கள் சுருக்கமாக.”
“திருவள்ளுவரின் பிறப்பு வளர்ப்பு பற்றிய உண்மை வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. அவரது வரலாறு சொல்லப்படுகிறது. அவற்றுள் பெரும்பாலானவை வெறும் புனைந்துரைகள், கற்பனைகள் என விட்டுவிடலாம். வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இல்வாழ்க்கையில் நின்று ஒழுகியவர் என்பதும், மக்களை ஈன்று புறந்தந்தவர் என்பதும், அறவோர் என்பதும், தெய்வப் புலவராகப் போற்றப்பட்டவர் என்பதும் அவர் அருளிய நூலால் இனிது விளங்குகின்றன” என்கிறார் திரு.வி.க.
மற்றொரு பேராசிரியர்
“அதனால்தான் திரு.வி.க. அவர்களின் மாணவராகத் தம்மை வரித்துக் கொண்டு வாழ்ந்த அறிஞர் மு.வரதராசனார் தாம் எழுதிய நூலுக்குத் ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ எனப் பொருத்தமாகப் பெயரிட்டார்…
ஒருங்கிணைப்பாளர்
“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா?”
( தொடரும் )
சமீபத்திய கருத்துகள்