அறமே ஆக்கம் தரும்

அறமே ஆக்கம் தரும்

 

உலகின் நலன்கள் அனைத்தும் – நேர்மை, தூய்மை, உண்மை, வாய்மை, மெய்ம்மை, சான்றாண்மை முதலான அனைத்துப் பண்புகளும் – அறம் எனப்படும். அறம் என்பதன் பொருள் ‘அற்றது’ என்பது ஆகும். உள்ளம் மாசு அற்றதாக இருத்தல், தன்னலம் அற்றதாக இருத்தல், பற்றற்றதாக இருத்தல் அனைத்தும் அறத்துள் அடங்கும். அறத்தில் அன்பும் அருளும் அடங்கும்.

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என்ற வள்ளுவர் இலக்கணம் மிகவும் நுட்பம் மிகுந்தது. அறத்திற்குச் செயல் திறம் வேண்டும் என்பதை வலியுறுத்தும் வரிகள் இவை. உள்ளொன்றும் புறமொன்றுமாகவும் இல்லாமல் அகமும் புறமும் தூய்மையுடன் ஒத்திருக்க வேண்டும். மனம் அழுக்கற்று, அவாவற்று, வெகுளியற்று, இன்னாச் சொல் அற்று இருக்க வேண்டும்.

தூய்மையான செயல் வேண்டும் என்றால் துணையாக நிற்பவை தூய்மையான மனமும், தூய்மையான சொல்லும் ஆகும். அறத்தின் செயல்நோக்கம் கருதி ‘அறவினை’ என்று குறிப்பிடுவார் வள்ளுவர். ஔவையும் ‘அறஞ்செயவிரும்பு’ என வள்ளுவர் வழிநின்று பேசுவார். இவைகளே, மெய்ம்மை, வாய்மை, உண்மை என வழங்கப்படுபவை. வாய்மை என்றால் கண்ணால் கண்டதைக் கண்டபடியே சொல்வதா? உள்ளத்தால் உணர்ந்ததை அப்படியே உரைப்பதா? அவ்வாறு கூறும் போது சில சமயம் பிறருக்குத் தீங்கு நேருமாயின் அது வாய்மையால் வந்த தீமை என்று கருதப்படும் அல்லவா? அப்படியாயின் வாய்மைக்கு இலக்கணம் என்ன?

வாய்மைக்கு அரியதோர் இலக்கணம் கூறுகிறார் வள்ளுவர். மற்ற மனிதர்களுக்கோ, உயிர்களுக்கோ தீங்கு செய்யாத சொற்களைச் சொல்வதெல்லாம் வாய்மை என்று சொல்லப்படும். நடந்ததைச் சொல்வது மட்டு மன்றிப் பிறருக்குத் தீங்கு நிகழாமல் நினைப்பதும் சொல்வதும் செய்வதும் வாய்மையாகும்.

“வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்

     தீமை இலாத சொலல்”        (291)

சில சமயங்களில் ஒரு பொய்யால் நன்மை விளைவதைப் பார்க்கிறோம். பொய் ஒன்று பேசி, அதனால் நன்மை விளைகிறதா? ஆராய்ந்து பார்க்கிறார் வள்ளுவர். முடிவாகச் சொல்கிறார், அப்பொய்யும் மெய்யைச் சார்ந்தது என்று. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அப்பொய் விளைவிக்கும் நன்மை களங்கமற்றதாய், கறையற்றதாய், குற்றமற்ற நன்மையைப் பிறருக்குத் தருமாயின் அப்பொய்யும் மெய்தான் எனப் பேசுகிறார், பொய்யாமொழிப் புலவரின் ‘பொய்ம்மையும்’ என்ற சொல் இங்கு நயமுடையது.

“பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

     நன்மை பயக்கும் எனின்”      (292)

நம் சான்றோர்கள் உண்மையை வணங்கி அதன் ஒளிச் சுடரினைப் பின்பற்றியவர்கள்; வாய்மையின் ஆற்றல் இறையாற்றல் என உணர்ந்தவர்கள். உலகங்கள் அனைத்திலும் அறிவாய், அனுபவங்களாய், உள்ளுணர்வுகளாய் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கும் மெய்ம்மையே இறை எனக் கண்டவர்கள். உலக வாய்மையை உணர்ந்தவர்கள் உணர்வுடையவர்களாய் மகான்களாக, மகாத்மாக்களாக உயர்கின்றனர். அவர்கள் பெருமையை உணர்ந்து போற்றுகிறார் வள்ளுவர்.

பொய்ம்மை நீங்கிய உள்ளத்துச் சான்றோர்களை உலக மக்கள் தங்கள் உள்ளங்களை எல்லாம் காணிக்கை ஆக்கிப் போற்றிப் பாராட்டுவார்கள். என்றும் தம் உள்ளங்களில் நிலைநிறுத்திப் புகழ்வர் என்று பொய்யாமையின் சிறப்பைக் கூறுவார் வள்ளுவர்.

‘சத்யமேவ ஜயதே’ என்ற இந்தியக் குடியரசின் இலச்சினையும் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தமிழக அரசின் இலச்சினையும் வாய்மையின் சிறப்புக் கருதியே பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வுண்மைகள் நம் இதயத்தில் இடம் பெறவேண்டும்.

உடலின் புறத்தே படிந்த அழுக்குகள் தண்ணீரால் நீங்கிவிடும். சோப்புப் போன்ற வாசனைப் பொருள்களால் உடலை வாசமுறச் செய்யலாம். ஆனால் உள்ளத்தில் உள்ள அழுக்குகளை நீக்கிட உள்ளம் அறவொளியால் நிறைந்திட உதவும் ஆற்றலுடையது உண்மையே. உண்மை உள்ளழுக்கு களை நீக்கி, இருள் நீக்கும் ஒளி விளக்குப் போல் நெஞ்சின் இருள் போக்கி என்றும் உள்ளத்தை ஒளியுடையதாய் ஆக்கும்.

“புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை

     வாய்மையாற் காணப் படும்.”        (298)

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

     வாய்மையின் நல்ல பிற”       (300)

தாம் அறிந்த பேருண்மைகளில் தலையானது எனத் தம்மை முன்னிலைப்படுத்தி வாய்மையைப் போன்று பெருநன்மையும் நலமும் தரும் செயல் வேறொன்றும் இல்லை என அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார் வள்ளுவர்.

மனத்தோடு வாய்மை மொழிந்து, சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபடாமல் உண்மையாளர்களாய், நல்ல அரிய செயல் செய்பவர்களால்தான் உலகம் வாழ்கிறது.

அறவாழ்வால் விளையும் நன்மைகள் என்ன? வாழ்வு துன்பம் இல்லாமல், சுமையாக இல்லாமல் மகிழ்வும் இனிமையும் மிக்கதாய் விளங்க வேண்டுமானால் வாழ்வு அறம் நிறைந்து இருக்க வேண்டும். செம்மையாகத் திருத்தப்பட்ட சிறந்த பாதையிலே பாதுகாப்புடன் செல்லும் துன்பமில்லாப் பயணம் போல் வாழ்வுப் பயணமும் பயமில்லாததாய்ப் பயன்மிகுந்ததாய்ப் பிறருக்கும் இவ்வறவாழ்வின் பயன் தந்து நலம் நல்கும். தீவினை வந்து தாக்கும் வாழ்வையும், பிறவியையும் தாண்டலாம். நீண்ட நிலைத்த புகழும், அமைதியும், அன்பும், இன்பமும் கொலுவீற்றிருக்கும்.

“சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்கு

     ஆக்கம் எவனோ உயிர்க்கு?”         (31)

“வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்

     வாழ்நாள் வழியடைக்கும் கல்”       (38)

அறத்திற்கு இணையானது அறமே. ஆகையால் அறத்தை மேற்கொள்வதே பாதுகாப்பானது. இயன்ற வழியெல்லாம் அறச்செயல் செய்து வரவேண்டும். ஆரவாரம் ஒழிந்து தூய்மை மிகுந்து உள்ளத்தில் ஒளி மிகுந்து வாழ்வில் இன்பமும், நிறைவும் மிகுதல் வேண்டும். உலகில் மக்கள் கள்ளால், மதுவால், காமத்தால், சூதால், ஆபாசத் திரைப்படங் களால் இன்பம் பெறுவதாக மயங்கித் திரிகின்றார்கள். இவையனைத்தும் நிலையில்லாத சிறுமை இன்பங்கள்; இறுதியில் துன்பத்தில் ஆழ்த்தி மனிதனை அழித்துவிடும் ஆகா இன்பங்கள்.

அறத்தால் வரும் இன்பம் தான் நிலையானது. செய்யத்தக்கது அறனே என்றும், நீக்கத்தக்கது பழியே என்றும் அறம் பாடினார் வள்ளுவர். அறத்தால் புகழும், அறமில்லாச் செயலால் பழியும் பாவமும் நிறையும். அறவொழுக்கம் உடையவர்களுக்கும் அற இயக்கங்களுக்கும் இன்று மதிப்புக் குறைந்து வருகிறது. அறனறிந்து மூத்த அறிவுடையோர் கேண்மை போற்றும் பண்பு தேய்ந்து வருகிறது. ஆரவாரம் மிக்கவர்கள் தீயவர்கள். காமம், வெகுளி, மயக்கங்கள் உடையவர்கள் பெருகி வருகிறார்கள். மக்களின் உணர்வுகளை மயக்கி ஆரவாரத்தால் போலிச் செல்வாக்கைப் பெருக்கி அவற்றை ஓர் ஆற்றலாக்கி, தகுதியற்றோர் எல்லாம் பெருமதிப்புப் பெற்றும், சான்றோர்கள் ஒதுக்கப்பட்டும் வரும் அவல நிலையும் மலிந்து வருகிறது.

“வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா

     யாக்கை பொறுத்த நிலம்”      (229)

என்கிறார் திருவள்ளுவர்.

ஆதலால் அறிஞர்களும் சான்றோர்களும் போற்றப்பட வேண்டும். தீது விரைந்து வளர்ந்தாலும் வளர்ந்த விரைவுக்கு ஏற்ப விரைந்து அழிந்து மறைந்துவிடும் என்பது உலக நியதி. ஆதலால் மக்கள் ஆரவாரங்களுக்கும் மயக்க உணர்வுகளுக்கும் ஆட்படாமல் துணிவோடும் நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் அறநெறி போற்றி வாழ வேண்டும். வறுமையில் மிகப்பெரிய வறுமை சிந்தனை வறுமையும் நற்செயல் செய்யாத வறுமையும் ஆகும். அறவோர்கள் துணிவு மிக்கோராய், வலிமையான அமைப்புகளின் துணைகொண்டு அறநெறிகள் தழைத்தோங்கப் பாடுபட வேண்டும். அறமே ஆக்கம் தரும், நீண்ட நிலைத்த இன்பத்தையும் புகழையும் அமைதியையும் தரும் என்ற உண்மைகளை உணர்த்த வேண்டும்.

“திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்

     பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்

     வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின்

     கரும்பெனத் திரண்ட தோள்கால வேல்கணீர்”

(சீவக சிந்தாமணி)

“திருவும் இன்பும் சிறப்பும் புகழுமற்று

     ஒருவர் ஆக்கலும் நீக்கலும் உள்ளவோ?

     மருவும் புண்ணிய மாந்தர்க்கு அவைஎலாம்

     தருமம் இன்றெனில் தாமே சிதையுமால்”

என்ற இவ்வுண்மைகள் அனைத்தும் உணர்த்தி, துன்பம் உறவரினும் இன்பம் பயக்கும் வினைகளைத் துணிவுடன் ஆற்ற வேண்டும், ஊக்கமுடன் நல்லறச் செயல்கள் செய்ய வேண்டும் என்னும் உறுதி மக்களிடையே பரவ வேண்டும். மதுரை மாநகரில் முத்தமிழ் வளர்க்கும் இத்தமிழ் இசைச் சங்கமும் இயன்ற வகையெல்லாம் முத்தமிழால் அறநெறிகள் செழித்தோங்கிட அறமே ஆக்கம் தரும் என்ற உண்மையை உலகெலாம் பரப்பிட உறுதுணை நல்க வேண்டும்.

“இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்? என்னாது

     பின்றையே நின்றது கூற்றமென்று எண்ணி

     ஒருவுமின் தீயவை; ஒல்லும் வகையால்

     மருவுமின் மாண்டார் அறம்”        (நாலடியார்.136)

“அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க; மற்றுஅது

     பொன்றுங்கால் பொன்றாத் துணை”         (36)

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

     பெருமை முயற்சி தரும்”            (611)