திருக்குறள் செம்மல்’ திரு. ந.மணிமொழியன் அவர்களின் 60 ஆம் ஆண்டு மணிவிழாவினை வரும் 25 ஆம் நாளன்று சட்டப் பேரவை முன்னாள் தலைவர் திரு. பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைத்துக் கொண்டாடவிருப்பதை அறிந்தும், சிறப்பு மலர் ஒன்று வெளியிடவிருப்பதை அறிந்தும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அய்யன் வள்ளுவரின் திருக்குறள் நெறி போற்றி, மாணவர்களிடையே திருக்குறள் குறித்த தேர்வுகளை நடத்திப் பரிசளித்து ஊக்குவிக்கும் மணிமொழியன் அவர்களின் பணி பாராட்டத்தக்க ஒன்றாகும். அவர் தொண்டினைத் தொடர்ந்து செய்திடவும், மேலும் பல்லாண்டு நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்திடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருக்குறள் செம்மலாகத் திகழ்மணி மொழியன் செல்வம்
மருவியகமலா என்னும் வளரறச் செல்வி வாழ்வால்
பெருகுநற்புகழ் படைத்து பெரியோர்தம் உறவால் நாளும்
அருள்நெறித் தந்தை தொண்டர் அறுபத்தாண்டிமேல் வாழி
மணிமொழியனுக்கு நல்லமணி விழா திருக்குறட்கு
அணிசெயும் பணியால்நாட்டில் அறநெறி பேணித்தீமைப்
பிணியகன்று அழுக்காறின்றிப் பெரியாரைத்துணையாகக் கொண்டு
துணிவுடையவர்கள் நட்பால் தொடர்ந்து பல்லாண்டு வாழி
வள்ளுவர் தென்றல் நல்லகுறள் வேளாய் வளமை சேர்த்து
தெள்ளியராகித் தெய்வப்பணி பல செய்து பண்பால்
உள்ளியதனைத்தும் எய்தும் கலைபயில் உயர்வுதந்த
வள்ளலாய் பணிசெய்கின்ற மணிமொழியன் சீர்வாழி
அன்பகத்தில்லா வாழ்வால் அழிபொருள் பண்பில் செல்வம்
துன்பமே பெருக்கி நாட்டில் தொல்லைகள் தருவார் கூட்டம்
தன்னில் சேராமல் நாளும் சான்றோர்கள் துணையே நாடி
நன்மைசெய் மணிமொழியார் நலம் பல பெற்று வாழி
தமிழ்நாட்டில் மும்மணிகளாக விளங்கியவர்கள் மூவர். ரசிகமணி சிந்தம்பர முதலியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை. நமது மணிமொழியன் அவர்கள் நான்காவது மணி. திருக்குறள் மணி. காலை முதல் மாலை வரை தினமும் திருக்குறளைப் பயன்படுத்தி வருகிறார். இவர் ஒரு திருக்குறள் களஞ்சியம், கொடுப்பது இன்பமா ? வாங்குவது இன்பமா ? திருக்குறளை மணி மொழியன் சொல்வது இன்பம் அதை விட இன்பம் அதனை கேட்பவர்களுக்கு பெரிதாக இருக்கும்.
மணிமொழியன் என்ன ஒரு அருமையான பொருல். எவ்வளவு பொருள் பொதிந்த பெயர். இப்படிப்பட்ட பெயரை ஒரு இளைஞர் தனக்குத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார். இந்த இளைஞருக்கு படிப்பார்வம் தமிழார்வம் மட்டும் இருக்கவில்லை. வரும் பொருள் உரைக்கும் தன்மையும், வரும் பொருள் உணரும் வல்லமையும் இருக்கிறதென்பதை நாம் உணர்கிறோம். எந்தப் பேச்சை எடுத்தாலும் அது சம்பந்தமான ஒரு அழகான விளக்கத்தை திருக்குறளிலிருந்து எடுத்துச் சொல்லுவார்.
மாமனிதர்கள் மணிமொழியன் வாழ்க
அன்பிற்கோர் முகவரியாய் மதுரை மண்ணில்
அணி செய்தார் மணி மொழியன் அண்ணன் ! நல்ல
பண்பிற்கோர் முகவரியாய்ப் பாண்டி நாட்டில்
பவனிவந்தார் வேள்பாரி மன்னன் ! இன்றோ
என்புருக இதயமெல்லாம் உருக எங்கள்
இயற்றமிழும் இசைத்தமிழும் உருகக் காணும்
கண்ணுருகக் கண்ணீரும் உருகத் தீட்டும்
கவி உருகக் காலமாய் இன்(று) உறைந்து விட்டார்.
பேச்செல்லாம் திருக்குறளை அழைக்கும்;மூன்றாம்
பிறை முகத்தில் புன்னகையாய் வீற்றிருக்கும் !
மூச்செல்லாம் தமிழ் மணக்கும்; தமிழ்த் தொண்டர்க்கு
முன்னோடி உதவ, அவர் மனம் துடிக்கும் !
கூச்சல்களால் தமிழ்வளர்க்க முடியா தென்று
கொள்கை வழி நடைபயின்று தமிழ் வளர்த்தார் !
ஆச்சரிய மாய் இங்கோர் மனிதர் வாழ்ந்தார் !
அவர்புகழைப் போற்றிடுவோம் இன்றும் என்றும்.
மணிமொழியனின் மயக்கும் மந்திரங்கள் தான் எது என்றால் அது நான்காக இருக்கிறது.
1.கொடுக்கும் குணம் 2. திருக்குறள் புலமை 3. நடுவு நிலமை வகிப்பவர் 4. அரவணைக்கும் பண்பு இவை நான்கும் நாம் அவரிடம் கற்றுப் பரப்ப வேண்டிய மந்திரங்கள். திருக்குறளை உலக நடப்போடு பொருந்திச் சொல்வதில் வல்லவர். எதிலும் சாராமல் நடுவு நிலைமையோடு வாழ்ந்தவர்.
பண்டிதர்கள் மத்தியிலிருந்த திருக்குறள் புத்தகத்தை பாமரர்களிடத்துக்கு இழுத்து வந்து, திருக்குறள் மாநாட்டை தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக நடத்தியவர் தந்தை பெரியார். பெரியார் அவர்கள் தொடங்கி வைத்த திருக்குறள் பணியை உலகெலாம் தொடர்ந்து செய்திட மணிமொழியன் அவர்கள் தன்னையே அற்பணித்துக் கொண்டவர்.
அன்புள்ள திருமதி மணிமொழியார் அவர்களுக்கு
கிடைத்தற்கரிய தங்கள் கணவர் மணிமொழியார் இயற்கை எய்தினார் என அறிந்து அதிர்ந்து போனேன். எங்களுக்கு அவர் தண்ணீர் தடாகம், அமுதசுரபி, வேடந்தாங்கல். நாங்கள் கையற்ற நிலையில் இனி மதுரைக்கு வந்தால் தவிப்போம். கவிஞர் வைரமுத்து சொன்னது போல, தமிழ்க் கோபுரம் சாய்ந்தது. பொருள் நிறைந்த வாழ்வு வாழ்ந்த அவர் பொருளோடு வாழ்ந்து காட்டினார்.
திருக்குறள் முற்றிலும் அழிந்தாலும் தம் நெஞ்சில் திருக்குறளைப் பதிவு செய்து வைத்திருந்தார். அருவி போல பல திருக்குறள் சிறப்புகளைக் கூறுவார்
திருக்குறளுக்கு மெய்யுறு ஒன்று எழுதுங்கள் என இரண்டு ஆண்டுகளாக வற்புறுத்தி வந்தேன். செய்கிறேன் என்றார். தமிழன்னைக்கு அந்த அணிகலன் கிடைக்கவில்லை என வருந்துகிறேன்.
அன்புக்குரிய நண்பர் உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் மணிமொழியனார் அவர்கள் இறந்தார் என்பது ஏற்புடையது அல்ல. அன்னாரின் ஈகை உள்ளமும், தமிழ்த் தொண்டும், திருக்குறளுக்கு அவர் ஆற்றிய ஈடில்லா செயல் தொண்டும், தமிழ் ஆய்ந்த தோய்ந்த அறிஞர் பெருமக்கள் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்று நிலைத்து நிற்கும். அவர் புகழ் வையகமும், வானகமும், உள்ளளவும் தொடரும்.
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்தது இவ்வுலகு வித்தகு மணிமொழியாரின் உடல் மண்ணுக்குச் சொந்தம், உயிர் விண்ணுக்குச் சொந்தம், புகழ் கற்றோருக்குச் சொந்தம்.
திருக்குறள் ஓர் அறிவுச் சுரங்கம். அஹைத் தோண்டித் துருவி நினைத்ததும் அந்தச் சூழலுக்கு பொருந்திய குறள் பொன் தகடுகளை எடுத்தளிக்க வல்லவராய் திகழ்கிறார் திருக்குறள் செம்மல் ந. மணிமொழியனார்.
மணிமொழியன் வாய் திறந்தால் குறள் ஒலிக்கும். மற்றவர்கள் வாய் திறந்தால் குரல் ஒலிக்கும்.
இருமினால் தும்மினால்
எல்லாம் குறளாய்
வரும் இவர்க்கு
சொல்கிறேன் வாழ்த்து !
அதிகாரத்துக்கு ஒரு ஆண்டு வீதம் குறள் போல 133 ஆண்டுகள் நலமோடு வாழ்க.
மணி மொழியே கனி மொழியே
மண்புமிகு தமிழ் மொழியே
மங்காத புகழ்பெற்ற
செம்மொழியே எம்மொழியே
குறள் நெறியே அருள் நெறியே
குளிர் நிலவே அரும் சுவையே
குன்றாத வளம் பெற்ற
குணக் குன்றே மணிமொழியே
இருள் நீக்கும் இன்மொழியே
இகம் போன்றும் தொன்மொழியே
மருள் போக்கும் மணிமொழியே
மங்காத இளம் பிறையே
குறள் வழியில் வாழ்ந்தவரே
குலம் தளைக்கச் செய்தவரே
பிறர் போற்றும் நற்பண்பை
பிறவியிலே பெற்றவரே
இலக்கியமே வாழ்க்கை என்ற
இலக்கணத்தில் வாழ்ந்தவரே
இன்முகத்தால் அனைவரையும்
பன்முகத்தில் கவர்ந்தவரே
இயற்கை என்ற விதிமுறைக்கு
இலக்காகி விட்டவரே
இறப்பொன்று இருப்பதையே
மறந்துவிடச் செய்தவரே
காலத்தால் அழியாத
கடமைகளைச் செய்தவரே
ஞாலத்தில் நீங்காத
புகழ் அனைத்தும் பெற்றவரே
ஏமாற்றி எங்களுக்கு
இறுதிவிட கொடுத்தவரே
எங்களுள்ளம் மறக்காத
அன்புவிதை விதைத்தவரே
குறளமுதம் கண்டவரே
குறள் காவியம் தந்தவரே
நிலாமுற்ற நிகழ்ச்சியிலே
நிலைபெற்று நிற்பவரே
காண்பவரைக் கவர்ந்திழுக்கும்
கருணையுள்ளம் கொண்டவரே
காலமெல்லாம் உன்நினைவில்
கண்ணீர் சிந்த வைத்தவரே
மாண்பு மிக்க மணிமொழியே
மனதில் நிற்கும் மணிமொழியே
காண்பதற்கு ஏங்க வைத்து
காலனுடன் சென்றாயே
மங்கல நாணோ மதிகமலா தாயுளத்தில் !
பொங்கரம் பெற்றோரும் கற்றோரும் தங்கத்தமிழ்
சான்றோரும் தமிழந்தார் தக்கரர் மணிமொழியர்
சான்றுகுறள் நூல்வாழ் தமிழ்
அய்யா மணிமொழியை அறிந்தால் அமுதூறும்
மெய்யாய் அவர்பணியைப் புகழ்ந்தே தமிழ்கூறும்
மணிமொழியார் மனத்தினிலே மாண்பொன்றே குடியிருக்கும்
பிணிக்கின்ற சொல்லேதான் பேச்சினிலே நிறைந்திருக்கும்
பனிப்பொழிவாய் பழகுதமிழ் தனித்தொழிலாய் சுவை கூடும்
இனிக்கின்ற திருக்குறளே எப்போதும் நடைபோடும்
இரக்கத்தை விசுவாசம் கொள்கின்ற கிறிஸ்தவராய்
சிறக்கும் ஈகைமிகு ஈமானுள் இஸ்லாமியராய்
எவரிடமும் பகைகொள்ளா இயல்பான புத்தநெறி
புவியாளும் ஈசனிடம் சரணடையும் பக்திநெறி
இத்தனையும் சங்கமிக்க வாழுகின்றார் குறள்நெறியார்
வித்தகராய் வீற்றிருக்கும் உயர்வுமிகு மணிமொழியார்க்கோ
நல்லவர் விருது தந்தார் பெருந்தகையார் பிடிஆர்
வல்லவர் எனப் புகழ்ந்தார் அறிவாலர் அறவாணர்
எல்லா நிலைகளிலும் ஏந்தலானார் மணிமொழியன்
வல்லான் சொலல்வல்லான் சோர்விலான் என்றே தான்
திருக்குறள் செம்மலென்று சீர்தந்தார் அடிகளார்
பேரறிவ வாளனெனப் புகந்தார் சண்முகனார்
எல்லோரும் நல்லோராய் ஏற்றம் பெறுவதற்கு
நல்லோன் பின்செல்வோம் என மகிழ்ந்தார் மகாசபையார்
ஊருணிநீர் போன்றிங்கு உதவுகின்ற மணிமொழியார்
பேர்விளங்க நடப்பதுவே மணிமொழியார் வழியேயாகும்
அவர்வழி நடப்பதுவே அவர்வழி சிறப்பேயாகும்
தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்கும் மாமனிதர்கள் சிலர் இருக்கிறார்கள். அதில் சிறப்பிடம் பெறுபவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார். மனிதன் இந்த உலகத்துக்கு வரும்போது வெறும் வெள்ளைத் தாளாகத் தான் வருகிறான்.அவன் தான் தன்னைப்பற்றி அதில் எழுதிக் கொள்ள வேண்டும். சிலபேர் கிறுக்கி விடுகிறார்கள். சில பேர் கிழித்து விடுகிறார்கள். சிலபேர் தான் அதில் காவியம் படைக்கிறார்கள். அப்படித் தன் வாழ்க்கையை காவியமாக்கிக் கொண்டவர் மணிமொழியனார்
ந.மணிமொழியன் அவர்கள் தனது 71 வது வயதில் நவம்பர் 13ம், 2016ல் சென்னையில் காலமானார். மதுரை சொக்கி குளம் புலபாய் தேசாய் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதிச் சடங்கு 2016, நவம்பர் 14ல் நடந்தது.
” உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச்செயலர் ந.மணிமொழியனார் மறைவு திருக்குறள் அறிஞர்களுக்கும், தொண்டர்களுக்கும், மாணவர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். நடமாடும் திருக்குறள் பேரவையாக விளங்கிய அந்த பெருந்தகையின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் ” என குன்னக்குடி பொன்னம்பல தேசிகர் இரங்கல் செய்தி வெளியிட்டார்.
“திருக்குறள் மணிமொழியன் காலமானார் என்ற செய்தி அறிந்து கலங்கிப் போனேன். மதுரை மாநகரின் மாமனிதர் மறைந்து போனார். புலவர்க்குப் புலவராகவும், புரவலர்க்குப் புரவலராகவும் திகழ்ந்த ஒரு தமிழ்க் கொடையாளரை இழந்துவிட்டோமே என இலக்கிய இதயம் சிதறி நிற்கிறது. குறளுக்கு பொருள் தந்தார், தான் ஈட்டிய பொருள் தந்தும் குறள் வளர்த்தார். அவர் குறளைக் கற்றவர் மட்டும் அல்லர். கற்றபின் அதற்குத் தக நின்றவரும் அவரேதான். எங்கள் தமிழ் உலகம் தோள்கொடுக்கும் ஒரு தோழமையை இழந்துவிட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான்கு கோபுரங்கள். ஆனால், மதுரையில் திருக்குறளுக்கு ஒரே ஒரு கோபுரம்தான். அது மணிமொழியன் தான். அதுவும் சாய்ந்து விட்டதே என்று ஓய்ந்து நிற்கிறோம். அவரை இழந்து வாடும் பண்பாடுமிக்க அவர்தம் குடும்பத்தார்க்கும், நிறுவன ஊழியர்களுக்கும், தமிழ் அன்பர்களுக்கும், இலக்கிய அமைப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கவிப்பேரரசு வைரமுத்து தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.
1756total visits,1visits today