விழாக்களே வாழ்வாக நிறைந்த நமது பண்பாட்டில் நவராத்திரி விழாவுக்குச் சிறப்பான இடம் தருகிறோம். மகளிர்க்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கும் வகையில் ஒன்பது நாள் விழாவினைக் கலைநயத்தோடு அமைக்கிறோம்; அத்துடன், சமுதாய உறவு கூட்டும் ஒரு தொடர் விழாவாகவும் இதனைக் கொண்டாடுகிறோம்.
நவராத்திரி என்றால், ஒன்பது இரவுகளில் செய்யப்பெறும் நோன்பு அல்லது விழா. புரட்டாசி மாதம் வளர்பிறையில் முதல் நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் தெய்வத் தேவியர் மூவரையும் வழிபடுகிறோம்.
என அன்னை சக்தியின் வடிவங்களாக அவனி முழுவதையும் கண்ட மகாகவி பாரதி ‘நவராத்திரிப் பாட்டு’ எனும் இருபாடல்களில் பராசக்தியின் பன்முக நலங்களைப் புனைந்துள்ளான்.
என மூன்று தேவியருள் ஒன்றான அன்னை பராசக்தியின் அருளை வேண்டுகிறான். பாவக் குவியலைப் போக்கவும் தீ நிமித்தங்களைப் பொசுக்கவும் மனக்கோணலை நிமிர்த்தவும் தனக்கென முயல்வதைத் தவிர்க்கவும் அன்னையினை நாட வழி சொல்லுகிறான். மதுரை மீனாட்சியாய், மாநகர் காஞ்சி காமாட்சியாய், காசியில் விசாலாட்சியாய், கடவூரில் அபிராமியாய் எனக் கண்டும், தலந்தோறும் அன்னையின் மறுவடிவாய் நலம்புரியும் தாய்த் தெய்வத்தை இல்லத்திலும் நம் உள்ளத்திலும் கொலுவேற்றிக் கொள்ள அமைந்ததே நவராத்திரி விழா.
இவ்விழாவில் வாணி (சரஸ்வதி), இலக்குமி, துர்க்கை எனும் மூவருக்கும் வழிபாடு நடக்கிறது. தேவியர் மூவரையும் நம் மனம் கொள அலங்கரித்து கொலுவமைத்து மகிழ்கிறோம். அறிவு, செல்வம், ஆற்றல் மூன்றினையும் பெற விழைகின்றோம்.
அறிவு வாழ்வின் அடிப்படைக் கருவி; ஒருவனை இறுதிவரை காத்து உதவும் படைக்கலம்; பகைவராலும் அழிக்கவியலாத அரண்; தீமையை விடுத்து நன்மையை நாடத் தூண்டும் நற்பேறு; தூயது. இத்தகைய அறிவினைத் தருபவளாகக் கருதும் சரசுவதி – வாணி – தூயவளாக, வெண்தாமரையில் வீற்றிருப்பவளாக, நம் உள்ளக் கமலத்தில் அமர்பவளாக உருவகித்து வணங்கப்படுகிறாள். அவள் கையில் வீணை நாதம் போன்றது அறிவின்பம்; அவளருகே சலசலத்து ஓடும் நீருற்றுப் போன்று என்றும் சுரப்பது அறிவோடை இந்த ஞான ஓடையை நல்கும்படி,
“வாணி கலைத்தெய்வம், மணிவாக்கு உதவிடுவாள்
ஆணி முத்தைப் போலே அறிவுமுத்து
மாலையினளான அவளை
ஒன்பதாம் நாளில் சரஸ்வதி பூஜை”
செய்து சிறப்பாகப் பூசிக்கிறோம். பயிலும் நூல்களை எல்லாம் அவள் திருமுன்னர் படைக்கின்றோம். அறிவின் முயற்சியால் செல்வத்தை ஈட்டி, அதனை உரியவாறு பயன்கொள்ள அருள்பாலிக்குமாறு இலக்குமித் தாயை வணங்குகிறோம். வையமெல்லாம் ஆதரிக்கும் அன்னை எனத் திருமகளைப் பணிகின்றோம்.
அறிவாலும் செல்வத்தாலும் அடைய விழைவது ஆற்றலை. சக்தியே உலகை ஆட்டுவிக்கிறது; ஆள்கிறது. சக்தியின் வடிவமாகத் திகழ்பவள் பராசக்தி. தீமையை அழித்து நன்மையை வழங்கும் துர்க்கை வடிவினள். வில்லையசைப்பவள்; வேலை அனைத்தும் செய்து முடிப்பவள்; தமிழ்நாட்டில் காளியாகவும் வங்கத்தில் துர்க்கையாகவும் பூசிக்கப்படுபவள்.
அறம் – பொருள் – இன்பம் எனும் மூன்றும் வாழ்க்கையின் இவ்வுலகப் பயன்நிலைகள். ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் என்பன உய்வுக்கு உரிய வழிமுறைகள். நவராத்திரி வழிபாடு இம்மூன்று பயன் நிலைகளையும் வழிமுறைகளையும் நமக்கு வழங்குகிறது. சரஸ்வதி பூசையை ஆயுதப் பூசையாகக் கொண்டாடிச் செய்யும் தொழிலெல்லாம் தெய்வம் எனத் தெளிவதும், வீட்டில் கொலுவமைத்துக் கலை நயம் காட்டி, மகளிரை வீடு வீடாக அழைத்து விருந்தயர்வதும் உயரிய சமுதாய நோக்கை நமக்கு அளிக்கின்றது. நவராத்திரியின் முடிவாக அமையும் தசரா – அரச விழா அணிவகுப்பாக, மகார் (கல்வி) நோன்பாக நிறைவு தருகிறது. இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் ஆக்கம் தரும் நவராத்திரி, நமது விழாக்களில் எல்லாம் பண்பும் பயனும் உடையதாக விளங்குகிறது.
சத்தியமாவது சரவண பவனே!
நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளை வருணித்துள்ளார். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, மலைக்குன்று எனும் ஆறு படைவீடுகளுள் முருகப் பெருமானின் முதல் படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம்.
‘புகழ்பூத்த கடம்பம் அமர்ந்த தரண்பரங்குன்றம்’ எனப் புனையும் திருமுருகாற்றுப் படை, கடம்ப மரத்தடியில் கந்தவேல் வீற்றிருந்தார் எனக் காட்டுகிறது. மாட மதுரைக்குத் தெற்கே புகழுடன் விளங்கிய இத்திருப்பரங் குன்றத்தை இதர சங்க நூல்களாகிய கலித்தொகை, அகநானூறு, பரிபாடல் ஆகியவையும் சிலப்பதிகாரமும் வரலாறாக்கி உள்ளன.
காலந்தோறும் கோலக்காட்சி நல்கும் திருப்பரங் குன்றத்தருகே முருகனுக்கு மற்றும் ஒரு திருத்தலம் கண்டவர் அண்மைக் காலத்தே வாழ்ந்த பாம்பன் சுவாமிகள் அவர்களின் சீடர் தவத்திரு இராமச்சந்திர சுவாமிகள். இவர்கள் பாம்பன் சுவாமிகளிடம் அளவற்ற அன்பு பூண்டவர்கள். நிறைந்த பக்தியுள்ளவர். திருக்கோவில் பணி சிறப்புற நடத்திவருபவர். மாண்புமிகு அமைச்சர் டத்தோ சாமிவேல் (மலேசியா) அவர்கள், துணைவியர் மதிப்புமிகு டத்தின் இந்திராணி சாமிவேல் அவர்களின் துணையுடன் மற்றும் பல உதவியுடன் திருப்பணி செய்பவர். பாம்பன் திருக்கோவிலுக்கு மிகச் சிறப்பாக ஆகம முறைப்படி தியான மண்டபம் அமைத்து குடமுழுக்கு விழா 27-3-94 அன்று சீரும் சிறப்புடன் நடக்கிறது.
இத்தகு சீரிய அறப்பணியும் அருட்பணியும் ஆற்றி வரும் தவத்திரு. இராமச்சந்திர சுவாமிகள் பெரிதும் போற்றுதலுக் குரியவர்; மதுரையும் தமிழ்ச் சமுதாயமும் சைவ உலகும் இப்பெரியவருக்கு நன்றி பாராட்டும் கடப்பாடுடையன.
“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு”
குமரகுருதாச சுவாமிகள் எனும் பாம்பன் சுவாமிகள் மிகப் புகழ்வாய்ந்த சண்முகக் கவசம் பாடியருளியுள்ளார்.
அருள்மிகு குமரகுருதாச சுவாமிகள் குமாரஸ்தவம், தகராலய ரகசியம், பஞ்சாமிர்த வண்ணம், பரிபூரணானந்த போதம், திருப்பா முதலிய நூல்களை அருளியவர்.
6666 பாடல்களும், 32 வியாச நூல்களும் எழுதியவர். பகை நீக்கும் ‘பகை கடிதல்’ பாசுரம் ஆற்றல் மிக்க மந்திர நூல்.
“அண்டமாய் அவனியாகி
அறியொணாப் பொருளது ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித்
துகள்அறு தெய்வமாகி”
என்று தொடங்கும் பாம்பன் முருகன் கவசப் பாடல் நமது அரிய உடலை, ஆன்மாவைக் காக்கும் வல்லமை படைத்தது.
“முத்தி தந்து அநுதினமும் முழுபலம் நல்க
சத்தியமாவது சரவண பவனே…”
என அனுதினம் முருகனின் ஆறெழுத்து மந்திரத்தை ஓதிக் கவசம் பூண வழிகாட்டினார் பாம்பன் சுவாமிகள்.
பாம்பன் சுவாமிகள் இசைப் பாடலால் முருகன் புகழைப் பாடியமை ஒரு பாரம்பரிய நெறி. இப்பாரம்பரியம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இந்தத் தமிழ் நிலம் என்று தோன்றியதோ அன்றே அந்த அநாதி காலத்திலேயே இயற்கையிலே கருத்தாங்கி, இனிமையிலே வடிவெடுத்து அமைந்து கொண்டது.
குமரிக்கண்டம் கொடுங்கடலால் விழுங்கப்பட்ட காலம் தொட்டு முழுமுதற் கடவுளாகிய முருகனை வழிபடும் வழக்கம் தமிழகத்தில் நிலைபெற்றுக் கொண்டது. இந்த நாட்டின் தொன்மைச் சமயமாகிய இந்துமத வழிபாட்டு முறையில் பல தெய்வங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் குமரக் கடவுள் மட்டும் தமிழக மக்களின் நெஞ்சக்கோவிலில் என்றும் நிலையாகக் கொலுவீற்றுவரத் தொடங்கினார். இந்து சமயத்தின் ஆறுவகைப் பிரிவுகளுள் ‘கௌமாரம்’ என்பதும் உறுதியாக இடம்பெற்றுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்தே ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானை வணங்குபவர்கள் எத்தேசத்தவரானாலும், எந்த மொழி பேசுபவராயினும் அனைவரும் மகாதேஜோ மண்டல சபையைச் சார்ந்தவர் என்று ஒரே மண்டலத்தின் கீழ் கூறுகிறார். எனவே முருகனே ஏகப் பரம்பொருள் என்பது தெளிவு.
தமிழ்நாட்டுப் பழனியில் ‘பழம் நீ’ எனக் கொண்டாடப் பெறும் முருகனின் வழிபாடு தமிழர்கள் குடியேறச் சென்ற நாடுகளில் எல்லாம் பரவ ஆரம்பித்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகளில் தண்டாயுதபாணியாக அவனை வழிபடும் இயக்கம் வலுப்பெற்றது.
நக்கீரர் பாடிய ஆறாம் படை வீடு எது எனக் கேட்டால் திருத்தணி மலை எனச் சொல்வதை விட, திக்கெல்லாம் வாழும் தமிழர்கள் அங்குள்ள குன்றுதோறும் கொண்டாடும் ஆலயங்களே எனச் சொல்லும் அளவுக்கு முருகப் புகழ் வளர்ந்துள்ளது.
“அரும்பெறல் மரபின்
பெரும் பெயர் முருக”
எனத் திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் முருகனைத் தமிழ்க் கடவுளாக, தமிழ்த் தெய்வமாக, அழகின் வடிவமாக ஆராதிக்கிறார்; என்றும் இளமை குன்றா உணர்வுடன் அவனை வழிபடும் பாங்கினையும் மரபுரிமையாக நமக்குத் தருகிறார். இந்த மரபுரிமையால் தமிழ் இலக்கியம் முருக மணம் பெற்றுப் பொலியத் தொடங்கியது. காலந்தோறும் கந்தவேலை இலக்கியமாக்கும் இயக்கம் செழிக்க ஆரம்பித்தது.
நக்கீரர் வகுத்த மரபில் வந்து நம் நெஞ்சத்தை ஆட்கொண்டு நிற்பவர் கந்தபுராணம் பாடிய கச்சியப்ப முனிவர். பேராற்றல் மிக்க முருகனைப் பாடும் கந்த புராணம் வாழ்க்கைப் போரில் வாகை சூடும் வழிகளை நமக்கு உபதேசிக்கிறது. சிவபெருமானிடம் பெருவரம் பெற்ற அசுரர்கள் நிர்மூலமானது போல அரசு அதிகாரத்தால் ஆட்சிச் செருக்கால் அக்கிரமம் செய்வோரை எதிர்த்து நிற்கும் ஆன்ம பலத்தை நமக்கு வழங்குகிறது; பகைவனையும் தொண்டனாகப் பாவிக்கும் மனத்திறத்தை அளிக்கிறது.
கச்சியப்பரை விட நம்மிடத்தில் இடம்பெறுபவர் அருணகிரியார்.
“கீத இசை கூட்டி வேத மொழி சூட்டி
கீரர் இயல் கேட்ட கிருபையோனை”
அருணகிரியார் திருப்புகழால் பாடினார். தாம் இளமையில் வாழ்ந்த கேடு கெட்ட போக்கை கிருபை வைத்து மாற்றிய குகனைப் பணிந்தார். முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகனை – வள்ளி மணாளனை – தமிழ்க் கோமகனை நமக்கும் புலப்படுத்தினார்.
வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகன் பெயரே பூண்டவர். குமரகுருபரர் திருச்செந்தூர் அருகில் அவதரித்தவர். இவ்விருவருள் குமரகுருபரரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் தமிழ் இலக்கியம் பெற்ற பிள்ளைத் தமிழ்ச்செல்வம்,
“விழியாக முன் நின்று
தண்ணளி சுரந்தவர்கள்
வேண்டிய வரம் கொடுப்பான்…”
என நம்மை வரங்களால் வாழ்விக்கும் ஞானக் களஞ்சியம்.
அருட்பிரகாச வள்ளலார் முருகனின் சீர் கொண்ட வதனங்கள் ஆறையும். கூர் கொண்ட வேல், மயில் ஆகியவற்றையும் வழிபட்டவர்; நம்மையும் வழிபடச் செய்தவர்.
“ஆறுமுகம் கொண்ட ஐயா & என்
துன்பம் அனைத்தும் இன்னும்
ஏறுமுகம் கொண்டதல்லால்
இறங்குமுகம் இன்மையால்”
என ஏங்கினார்; ஒருமையுடன் இறைவனது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டினார்.
அத்தகைய உத்தமர்கள் வரவும் – தமிழ் உறவும் – முருக வழிபாடு தமிழ் உலகிற்கு வழங்கிய அருட்கொடைகள் பாரதியார், சாது சுவாமிகள், வாரியார் சுவாமிகள், பித்துக்குளி முருகதாசர், தவத்திரு பாம்பன் இராமச் சந்திர சுவாமிகள் என இந்த அருளாளர்கள் பட்டியல் தொடர்கின்றது.
இப்பட்டியலுக்குப் புதிய திருப்பம் அருளியவர் தான் பாம்பன் சுவாமிகள் அவர் திருப்பரங்குன்றம் அருகே நிறுவியுள்ள ஆலயம் நமக்கு அருட்காட்சி அளிப்பது போல அவர் புனைந்தருளிய இசைப்பாடல்கள் நாம் இருக்கும் இடம் எல்லாம் முருகனின் புகழை ஏந்தி வந்து இன்பமூட்டுகின்றன!
கலையழகும் அருளும் நிறைந்த பாம்பன் சுவாமிகள் போற்றிய செட்டியப்பன் செந்தமிழ் முருகப் பெருமான் திருக்கோவில் தியான மண்டபத்தின் அருட்பொலிவுடன் குடமுழுக்குப் பெருவிழா இனிதே சீருடன் சிறப்புடன் நடைபெறவும் இப்பணியில் ஈடுபட்ட தவத்திரு இராமச்சந்திர சுவாமிகள் மற்றும் அன்பர்கள், உலக மக்கள் அனைவரும் எல்லா அருள் நலன்களும் வளங்களும் பெற்றுயரத் திருமுருகன் திருவடியைப் போற்றுகின்றேன்.
“‘ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே’.
உலகப்பழமையும் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க தலங்களில் தலைசிறந்து விளங்குவது, திராவிட நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் தாமரை மலரின் அமைப்புடைய அழகு மிகு மூதூர் மதுரையில் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் ஆகும்.
அன்னை மீனாட்சி அருளாட்சி நடத்தி தெய்வ அருள் வழங்கும் சக்திபீடம்:
இத்தலத்து அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் பல சிறந்த திருப்பணிகளால் சிறந்து விளங்குகின்றது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோவில்களைப் புதுப்பிக்க வேண்டும் என்பது ஆகம விதி.
எனினும் இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு, நடக்க இருக்கும் ‘திருக்குட நன்னீராட்டு விழா’ வரலாற்றுச் சிறப்புடையதாக அமையும்.
ஏன் திருக்குட நன்னீராட்டு விழா?
பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வெளி இவையன்றி உலகில்லை. இவைகளில் நீரைச் சிறப்பிக்கும் தலையாய சடங்கு திருக்குட நன்னீராட்டு விழா.
புனிதமான ஆறுகளில் இருந்து உற்பத்தியாகும் தூய்மையான தெளிவான நீரை, உள்ளத்தூய்மை வாய்ந்த பக்தி நிறைந்தவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கும்பங்களில் ஊற்றி யாகசாலைகளில் வரிசையாக ஆகம முறைப்படி அமைப்பர்.
ஒழுக்கமும் வேதப் புலமையும் மிக்கவர்கள் பக்தியோடு மறைகளை ஓதி, யாகசாலைகளில் ஓம குண்டங்கள் வளர்த்து வேள்வி செய்த கும்பங்களில் உள்ள நீருக்கு உரிய தெய்வங்களை எழுந்தருளச் செய்து புனிதமும் சக்தியும் சேர்ப்பர்.
புதிய கோவில்கள் கட்டப்பெறும் போதும், பழைய பெருமை மிக்க கோவில்கள் புதுப்பிக்கப்படும் போதும் குறிப்பிட்ட நன்னாளில், மங்கல நேரத்தில் ராஜகோபுரம், விமானம், மற்றும் உள்ள கோபுரங்களுக்கு, அங்கு உள்ள பிரதான கலசங்கள், மூலஸ்தான கலசங்களுக்கு இப்புனித நீர் தெளித்துப் புத்துயிர் ஊட்டுவதே குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஆகும்.
குடமுழுக்கு என்ற சடங்கு முறையால் நன்னீர் ஊற்றும்போது நம் மனதில் இறைவன் வீற்றிருக்கின்றான் என்பதை உணர்ந்து மனம், மொழி, மெய்களால் நம்மைத் தூய்மை செய்து, இறைவனை நம் உள்ளத்தில் எழுந்தருளச் செய்து, ஆன்மீக பக்தி உணர்வு பெறுவதே குடமுழுக்கு விழாவின் தத்துவமாகும்.
குடமுழுக்கு நன்னீராட்டு விழாவைக் காணும் மக்கள் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருவருளைச் சிந்தித்து நினைத்தாலே இடையறாத இன்பமும், அமைதியும், நிறைவும் மனதில் நிறைகின்றன. மதுரை மீனாட்சி என்ற திருப்பெயரை திருஞானசம்பந்தர்,
‘அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த’
என்று பாடிச் சிறப்பிப்பார். அங்கயற்கண்ணி என்றால் அழகிய மீன் போன்ற கண்ணை உடையவள் என்று பொருள். மீன் தன் முட்டைகளைப் பார்வையாலே ஈர்ப்பது போல அன்னை மீனாட்சி தம் அருட்கண்களால் வழிபடுவோரை ஆட்சி செய்து தன்வயமாக்கி வழிப்படுத்துவாள்.
அன்பர்கள் அன்னை அருள்விழிகள் கண்டு அகம் மகிழ்கின்றனர். இமைக்காத மீன்கள் போல, கண் இமைக்காமல் கயற்கண்குமரி, கற்பூரவல்லி, குமரித் துறையவள், கோமகள், சுந்தரவள்ளி, பாண்டிபிராட்டி, மதுராபுரித்தலைவி உலகு உயிர்களை எல்லாம் அன்போடு காத்து அருள் பாலிக்கின்றாள்.
‘திருவாலவாய்க்கு இணையாய் ஒரு தலமும் தெய்வ மணம் செய்யப் பூத்த மருவார் பொற்கமலநிகர் தீர்த்தமும் அத்தீர்த்தத்தின் மருங்கே ஞான உருவாகி உறை சோமசுந்தரன் போல் இக பரந் தந்துலவா வீடு தருவானும் முப்புவனத்திலும் இல்லை உண்மை இது சாற்றின் மன்னே’ என்பது மணிமொழியாகும்.
“ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னுலக
ஆயிரம் பைந்தலய அனந்த சயனன் ஆகும் மலை
ஆயிரமாறுகளும் சுனைகள் பலவாயிரமும்
ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே”
என்று பெரியாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய அழகர் மலை, இயற்கை அன்னையின் எழில்மிகு கைத்திறனால் காண்போர் கண்ணுக்கும் கருத்துக்கும் பெருவிருந்தாகக் காலம் காலமாக நின்று நிலவி வருகிறது. இந்த மலைச் சாரலின் அடிவாரத்தில் பச்சை மாமலை போல் மேனியும் பவளச் செவ்வாயும் கொண்ட அழகரின் திருக்கோயில் கோட்டைச் சுவர்களால் சூழப்பட்டு அமைந்துள்ளது. ‘அழகர்மலையே எம்பெருமாள் திருமேனி’ என்று எண்ணி மெய் மறந்து ஆடிப் பாடுவோர் இன்றும் உண்டு.
மலைவளம், சோலைவளம், நீர்வளம், நிலவளம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக எம்பெருமாளின் அருள்வளம் நிரம்பி வழியும் அழகுத்தலம் அழகர்மலை.
“குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை,
நிலமலை, நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே”
என்று பெரியாழ்வார் இறுமாந்து ஆனந்தக் கூத்தாடுகிறார். “மதிற்சூழ் சோலைமலைக்கு அரசே” என்று பெரியாழ்வார் (கி.மு. 300-இல்) இக்கோயிலைப் பற்றிப் பாடியுள்ளார்.
ஆண்டாள் நாச்சியார், அழகர்மலையின் ஒவ்வொரு சிறப்பிலும் பெருமாளின் திருவுருவத்தையே கண்டு உள்ளம் பறிகொடுத்து அழகுத் தமிழில் அழகர் பெருமாளுக்குத் தமிழ்ப் பாமாலை சாற்றி மகிழ்கின்றார்.
சங்க காலம் முதல் இத்திருக்கோயில் புகழுடன் விளங்கி வந்துள்ளது. பாண்டிய மன்னர்களாலும், விஜயநகர அரசர்களாலும், மதுரை நாயக்க மன்னர்களாலும் பல நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு இக்கோயில் பராமரிக்கப் பட்டுள்ளது. கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் அவர்களது நேரடிப் பொறுப்பில் இத்திருக்கோயிலை நிர்வாகம் செய்து வந்திருக்கின்றனர்.
துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு மண்டூக உருவ நிலையினை அடைந்த சுதபஸ் என்ற முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க இம்மலையில் அருள்மிகு சுந்தரராசர் தோன்றியதாகவும், தர்மராஜா மற்றும் மலையத்துவஜ பாண்டியனுக்கு அழகர் அனுக்கிரகம் செய்ததாகவும் கூறப் படுகிறது. மலையத்துவஜ பாண்டிய மன்னனால், சோதிர் விருட்சத்தின் அருகில் சோமசந்த விமானத்தில் அடியில் எழுந்தருளியிருந்த அருள்மிகு சுந்தரராஜப் பெருமாளுக்கு மண்டபங்கள், பிரகாரங்கள் கூடிய கோயில் கட்டப்பட்டு பற்பல சுவர்ண விக்ரகங்களும் செய்து வைத்து, விழாக்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் இத்திருமலையைத் திருமாலின் திருமேனியாகவே கருதி, அம்மலை நோக்கி மக்கள் தொழுகின்றனர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. பரிபாடலுக்குப் பின் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தில் இங்கு கோவில் கொண்டுள்ள திருமாலைப் பற்றியும் தீர்த்தங்கள் பற்றியும் பெருமையாகக் கூறப்பட்டுள்ளன.
இத்தலத்தில் உள்ள 18-ஆம் படி கருப்பணசாமி தென்மாவட்டங்களில் பிரபலமானவர். அழகர்மலையின் பிரதான காவல் தெய்வத்தினை வணங்கி, வழிபட்டுச் செல்ல தினந்தோறும் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர் மலையின் மேல் உள்ள நூபுரகங்கை என்னும் சுனையருவி ஸ்ரீ வாமனாவதாரத்தில் விண்ணை அளக்கத் தூக்கிய திருவடியின் சிலம்பில் இருந்து வரும் சுனை என்று கூறப்படுகிறது.
2072total visits,1visits today