இசைபட வாழ்தல்

 

வளர்ச்சியுடையதாய், விரிவுடையதாய் அன்பும் அருளும் கொண்டு பிறர்நலம் போற்றும் போதுதான் வாழ்வு சிறக்கின்றது, பெருமையுறுகின்றது. குறுகிய தன்னலம் இழிவுடையது, பழித்தற்குரியது. தன்னை, பிறரை அன்பால் விரும்பாதவர்கள் வாழ்வு வெறுக்கத்தக்கது. அன்பு பாராட்டி ஈகை உணர்வு கொண்டு வாழாதவர் யாரும் வாழ்ந்தும் வாழ்ந்ததாகக் கருதப்பட மாட்டார்கள். வள்ளுவர் இதனை,

“ஈதல்; இசைபட வாழ்தல்; அதுஅல்லது

     ஊதியம் இல்லை உயிர்க்கு”          (231)

எனக் கூறுவார். ஈதலால் புகழுடன் வாழ்வதே வாழ்வாகும். அப்புகழ் இல்லாது வாழும் வாழ்க்கை பயன் ஒன்றுமே இல்லாத உயிர் வாழ்க்கை எனத் தெளிவுடன் கூறுவார் அவர்.

மேலும், தனக்கு இணையாகத் தனிப் பெருமையுடைய தாய் விளங்கி நிற்பது யாதென்றால் ஓங்கிய பெருமையுடைய புகழோடு கூடிய வாழ்க்கையன்றி சிறப்புடையது வேறொன்றும் இல்லை. உலகத்து இறப்புடைய நிலையில்லா வாழ்வில் இறவாது நிற்கும் புகழ் போல் சிறப்புடையதும் வேறொன்றும் இல்லை.

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

     பொன்றாது நிற்பதுஒன்று இல்”  (233)

என வள்ளுவர் புகழின் பெருமையை நயம்பட எடுத்துக்காட்டுவார்.

Image result for thiruvalluvarபுகழ் இல்லாத வாழ்வு வாழ்கின்றவன் வாழ்வு எத்தகையது? செந்நாப்போதார் கூறுகின்றார்: வளமுடைய நிலம், பழிப்பில்லாத வளமுடைய நிலம் புகழுடன் வாழாத ஒருவனைச் சுமக்கும்போது, தன் வளத்தை இழந்து, விளையும் பயனும் குன்றும் என்று பழித்துரைக்கின்றார்.

“வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா

     யாக்கை பொறுத்த நிலம்”      (239)

எனவே தம்மிடத்துப் பழியின்றி வாழ்பவரே உயிர் வாழ்வார். புகழின்றி வாழ்பவர் வாழ்ந்தும் இறந்தவர் ஆவார். இதனை வள்ளுவர்,

“வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய

     வாழ்வாரே வாழா தவர்”       (240)

என்பார். ஆதலின், புகழ் வாழ்வு பொது நோக்கை, பிறர் நலத்தை அடிப்படையாகக் கொண்டது. இவ்வுணர்வு, எண்ணம் சொல்லளவுடன் நில்லாது செயலாக முழுமை யடையும் போதுதான் சமுதாயம் பயன்பெறுகிறது.

செல்வம் பல சிறப்புகளைத் தரும் பெருமையுடையது என்று எடுத்துக்கூறி, அச்செல்வம் தனக்கென மட்டும் பயன்படாது பிறர்க்கும் பயன்படும் பெருமையுடையதாக இருக்க வேண்டும் என்பதனை,

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

     பேரறி வாளன் திரு.”               (215)

“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

     நயன்உடை யான்கண் படின்”        (216)

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

     பெருந்தகை யான்கண் படின்”   (217)

என்ற குறள்களால் சிறந்த உவமைகளைக் கொண்டு விளக்கிக் காட்டுவார் வள்ளுவர்.

தகுதி மிக உடையவர் முயற்சியால் பெருஞ்செல்வம் ஈட்டினால் அப்பொருளைத் தமக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் நலம் பயக்கும்படி பயன்படுத்துவர். ஓர் ஊரில் அமைந்திருக்கும் தண்ணீர் உண்ணும் குளம் நீரால் நிறைந்திருந்தால் அது எவ்வாறு ஊர் மக்களுக்கும் பறவையினங்களுக்கும் விலங்கினங்களுக்கும் நெடிது நின்று பாழாகாமல் தப்பாது பயன்மிகத் தருமோ அதுபோல், பேரறிவாளன் திரட்டிய பெருஞ்செல்வம் உலக நடைக் கேற்பப் பேரளவில் பெருஞ்சிறப்புடையதாகப் பயன் தரும்.

ஓர் ஊரில் பயன் மிகத் தரும் பழ மரம் பழுத்து நிறைந்திருந்தால் அது அனைவருக்கும் எவ்வாறு எளிதில் பயன்பட்டு நலம் பயக்குமோ அதுபோல, நயனுடையான் கண் செல்வம் தங்கிப் பெருகியிருக்குமாயின், பழமரம் தரும் பழங்களே போல் அனைவருக்கும் நலம் தந்து எளிதில் பயன்படும்.

செல்வம் ஒப்புரவு செய்யும் பெருமையுடைய தகைமை யாளனிடம், பெருந்தகையாளனிடம் நிறைந்திருக்குமாயின் ஊறு செய்யும் பிணிக்கு மருந்தாக நிற்கும் மருந்துமரம் போல் பயன்பட்டுச் சமுதாயத்தின் வறுமை நோய் நீங்கிட உறுதுணை செய்யும். ஆனால் நச்சப்படாதவன் செல்வம் நடுவூரில் நச்சுமரம் பழுத்த கனிகள் நிரம்பப் பெற்றிருந்தாலும், அது ஊருக்கு எவ்வித பயனையும் தராது உண்பார்க்குத் தீது பயக்குமோ அது போலச் சமுதாயத்திற்கு மிகுந்த தீமை விளைவித்து விடும் என்பர்.

“நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

     நச்சு மரம்பழுத் தற்று”         (1008)

மாட மாளிகையின் அகமெல்லாம் நிறைப்பதற்கு ஏதுவான பெரும் பொருளைத் திரட்டியும், அதனை ஈயாத குணத்தால் கருமியாக இருப்பவன் வாழ்க்கை நலத்திற்குப் பயன்படுத்தாதவன் வாழ்கின்றவன் ஆயினும் செத்தவன் ஆவான், இதனை,

 

“வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃதுண்ணான்

     செத்தான் செயக்கிடந்தது இல்”       (1001)

என்ற குறளில் வள்ளுவப் பெருந்தகை கடுமையாய் அக்கருமியின் சிறுமையைச் சாடுவார்.

பொருள், வாழ்வை மகிழ்ச்சியாய் அமைப்பதற்கு உரிய ஒரு கருவி அல்லது துணை என்று அறியாமல், பணம் தான் எல்லாமே என்று அறிவு கெட்டு மயங்கி, ஈட்டிய பெருஞ்செல்வத்தைத் தானும் பயன்படுத்தாமல் பிறர்க்கு, தகுதியுடையார்க்கு மகிழ்ச்சியைத் தரும்படி கொடுக்காமல், தானும் துய்த்து அனுபவிக்காமல் பணம் சேர்ப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பேய் போல் அவாக்கொண்டு பொருளைப் பயன்படுத்தாது வாழ்பவனுக்கு நிறைவில்லாத பேய்ப்பிறப்பு ஒன்றே கிடைக்கும். இக்கருத்தினை,

“பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்

     மருளான்ஆம் மாணாப் பிறப்பு” (1002)

என்ற குறளில் வள்ளுவர் எடுத்துரைப்பார். இத்தகையோன் எதற்காகப் பொருள் சேர்க்கப் பாடுபட்டுத் துன்பமுறுகின்றான் என வியந்து காரணத்தையும் கண்டு எள்ளி நகையாடுகிறார் அவர். தான் பிறரைக் காட்டிலும் பொருள் ஈட்டுவதில் வல்லவன்; தனக்கு இணை வேறொருவர் இல்லை என்று பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்ற உணர்வால் உந்தி, பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு, உண்பதிலும் உடுப்பதிலும் கூடக் கருமியாக இருந்து, பிறர்க்கு முகமலர்ந்து கொடுத்து உபசரித்து அதனால் பெறும் மகிழ்ச்சியையும் புகழையும் அறியமாட்டான். இவன் எவ்வளவுதான் பெரிய செல்வன் ஆனாலும் செல்வத்தைத் தனக்கும் பிறர்க்கும் பயன்படுத்தாத் தன்மையினால் அவன் பிறப்பு, நிலைத்து நிற்கும் புகழை விரும்பா அந்தப் பிறப்பு நிலத்திற்குப் பாரமாகும்.

“ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்

     தோற்றம் நிலக்குப் பொறை”         (1003)

 

எனச் சாடுகிறார் வள்ளுவர். தான் நுகர்வதும் பிறர்க்கு ஈவதும் ஆகிய இரண்டு தன்மைகளும் செய்கைகளும் இல்லாத ஒருவனுக்குப் பலவாகிய, அடுக்கிய கோடிப் பொருள் உண்டாயினும் ஒன்றும் பயனில்லை. அடுக்கிய கோடிப் பொருள் உண்டாயினும் பிறர்க்குக் கொடுத்தலும் துய்த்தலும் இல்லாதவன் செல்வம் இருந்தும் பொருளில்லா வறியவனே.

“கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

     கோடிஉண் டாயினும் இல்”         (1005)

தானும் அனுபவிக்காது, துய்க்காது, தகுதி உடையார்க்கும் வழங்காது, ஈகை நெஞ்சம் இல்லாதவனின் பெருஞ்செல்வம் சமுதாயத்தின் கொடிய நோய் போன்றது. இதனை,

“ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று

     ஈதல் இயல்பில்லா தான்”      (1006)

என்ற குறளால் விளக்குவார் வள்ளுவர்.

மேலும் தன்னைச் சார்ந்தவர்களைக் கண்டால் மனத்தில் வெறுத்து, நெருக்கம் கொண்டால் பொருள் உதவியோ வேறு உதவியோ செய்திட வேண்டுமே என அன்பு காட்டாமை மட்டுமின்றி, அவர்களிடம் கடுமையாக நடந்து, பெரும் பொருள் இருந்தும் தானும் துய்க்கார். அதுமட்டுமின்றித் தன்னையும் துன்புறுத்திக் கொண்டு, வருத்திக்கொண்டு தகுதியுள்ளோர்க்கும், வறியோர்க்கும் ஈதலும் விருந்தோம்பும் தன்மையும் இல்லாது வாழ்பவரது செல்வத்தை, பாடுபட்டு ஈட்டிய செல்வத்தைப் பிறர் பறித்து, அபகரித்து, பறித்தவர் பயன்பெற்று வாழ்வர். பொருள் ஈட்டிய இக்கருமிக்குப் பெருந்துன்பமே கண்ட பயன் என்று இரங்குவார் என்கிறார் வள்ளுவர்.

“அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய

     ஒண்பொருள் கொள்வார் பிறர்”       (1009)

ஆதலின் செல்வத்தின் பயன் ஈதல் என்று உணர்ந்து ஈதலால் வசையின்றி இசைபட வாழ்ந்திட வேண்டும் என வள்ளுவர் மிகவும் வலியுறுத்துவார். ஒரு சிறந்த பொதுநல அமைப்பிற்கு ஒவ்வொரு தனி மனிதனின் உயர்ந்த உள்ளமும், பரந்த மனமும், தன்னலமற்ற அருள் உணர்வும், பொதுநலம் பயக்கும் பணி செய்திடும் விருப்பும் இன்றியமையாதன ஆகும்.

உயர்ந்த தன்மைகள், பண்புகள் அமையப் பெறுவது அருமையாகத்தான் இருக்கும். எப்போதுமே பெருமை யுள்ளவை அருமையுள்ளவைகளாக, சோதனைகளுக்கு உட்படுபவைகளாகத்தான் இருக்கும். இருப்பினும், அரியது என்று தளராது மக்கள் நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால், அதிலும் சிறப்பாகச் செல்வர்கள் உயர் பண்புகளை வளர்த்துத் தம்மைச் சான்றோர்களாக்கிக் கொண்டால் சமுதாயம் சீரும் சிறப்பும் நலனும் வளனும் பெற்றுத் திகழும்.

மக்கள் மலர்களைப் போல் மணம் வீசி மாண்பு பெற வேண்டும். தழைகளைப் போல் பயனின்றி வாழ்தல் இழிவுடையது என்பதை முதுகண்ணன் சாத்தனார் புறநானூற்றில் நயம்பட எடுத்துரைக்கின்றார்.

“சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்

     நூற்றிதழ் அலரி நிரைகண் டன்ன

     வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து

     வீற்றிருந் தோரை எண்ணுங் காலை

     உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

     மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே;

     புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

     வலவன் ஏவா வான வூர்தி

     எய்துப என்பதம் செய்வினை முடித்தெனக்

     கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி”

-& புறநானூறு 27

“தாமரை மலர்களைப் போல் எழிலுடைய மக்கள் பலர் உலகில் பிறக்கின்றனர். நூறிதழ்கள் நிறைந்த பெரிய மலர்களைப் போலவும் மக்கள் தோன்றுகின்றனர். ஒவ்வொன்றிற்கும் உயர்வும் தாழ்வும் இல்லாத ஒத்த பெருமலர்களின் வரிசை போல, நிரை போல சிறந்த அரச குலத்தினரும் தோன்றுகின்றனர்; தமது சிறப்பு விளங்கிடவும் வீற்றிருக்கின்றனர். எனினும் மலரன்ன அம்மக்களுள் பாட்டுடைச் சிறப்பும் புகழும் உடையவர் மிகச்சிலரே. உலகத்தில் மணக்கும் மலர்களைப் போல் சிறந்து விளங்காமல் மக்களில் தழைகளைப் போல் பயனின்றி மாய்ந்தோரே பலராவர். மணம்மிகு மலரைப்போல் விளங்குபவரிலும் புலவரால் பாடப்படும் புகழுடையோர் மிகமிகச் சிலர். அவர்தாம் நல்வினையை முடித்துக் கொண்டு புகழ்மிக்கு விளங்கும் விண்ணுலகு செல்லும் வானவூர்தியில் அமர்ந்து செல்வர்” எனப் பிறர்க்கு பயன்படும் வாழ்க்கையின் பெருமையை முதுகண்ணன் சாத்தனார் எடுத்துக் கூறியதுபோல் மலர்களைப் போல் பல செல்வர்கள் இருந்தாலும் மணக்கும் அரிய சில மலர்களைப் போல் புலவராலும் சான்றாண்மை மிக்கவராலும் போற்றப்படும் செட்டிநாட்டரசர் போல் ஒரு சிலராவது மணம் வீசும் மலராக விளங்கிச் சமுதாயம் மாண்புபெறப் பணி செய்திட வேண்டும்.

“உற்றவர் நாட்டவர் ஊரார் & இவருக்கு

     உண்மைகள் கூறி இனியன செய்தல்

     நற்றவம் ஆவது கண்டோம் & இதில்

     நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை!

     பக்கத்திருப்பவர் துன்பம் & தன்னைப்

     பார்க்கப் பெறாதவன் புண்ணியமூர்த்தி

     ஒக்கத்திருத்தி உலகோர் & நலம்

     உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி”

எனப் பாரதியார் ஊருக்கு உழைத்திடலே யோகம் என்று பிறர்நலம் போற்றும் பெருமையை உணர்வு பொங்க எடுத்துக் கூறுவார்.

பாரதிதாசன் இவர் வழியில்,

“தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்

     தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும்

     தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் & ஆங்கே

     சண்டை யில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே”

என உரைப்பார். ஆதலின் உயர்ந்த புகழ் பிறர்க்கு உதவுதலிலே உள்ளது. தன்னலம் இழந்து உதவுவது தலையாய புகழாகும்.

“ஒப்புரவி னால் வரும் கேடுஎனின் அஃதுஒருவன்

     விற்றுக்கோள் தக்கது உடைத்து”      (220)

என்ற வள்ளுவர் இலக்கணத்திற்கு இலக்கியமாக நிற்கும் உயர் புகழ்வாழ்வு அது. அவ்வுயர் வாழ்விற்கு ஈடில்லை, இணையில்லை. இத்தகைய சிறப்பு வாழ்க்கை வாழ்ந்திடு என வள்ளுவர், ‘ஈதல் செய், இசைபட வாழ்; அதுவே வாழ்வின் பயன்’ என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.

“ஈதல்; இசைபட வாழ்தல்; அதுஅல்லது

     ஊதியம் இல்லை உயிர்க்கு” –        (231)

 

 

4914total visits,4visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>