நாலடிப் பயணம்*

நாலடிப் பயணம்*

சுற்றம் தழால்

 

Image result for naladiyar

திருக்குறளுக்கு அடுத்தபடி புகழுடன். பெருமையுடன் இருப்பது நாலடியார். ‘பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்று பாராட்டப்படுவது; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார் முதலாவதாகும்.

இது சமண முனிவர்களால் தனித்தனியாகப் பாடப்பட்டுப் பின்னர் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டது. உவமைகள், கதைகள், பழமொழிகள் நிறைந்து நிற்கும். உலக நடைமுறை கூறி உறுதிப்பொருள் உணர்த்தும். அத்தகைய நயம் மிகுந்த நாலடியாரில் இன்று ஒரு பாடலின் நெறியினைக் காண்போம்.

வீட்டில் தொடங்கி நாட்டில் நிகழும் விழாக்களில் எல்லாம் நட்பும், சுற்றமும் துணைபுரியும் சிறப்பைக் காணலாம் நமது திருமண அழைப்பிதழ்களில் ‘தங்கள் நல்வரவினை நாடும் சுற்றமும் நட்பும்’ எனவும், பொதுவிழா அமைப்புக்களில் புரவலர்கள், பண்பு பாராட்டும் விழாக் குழுவினர் எனவும் நண்பர்கள், உறவினர் இடம்பெறுவதைக் காணலாம்.

சுற்றமும் நட்பும் சமுதாய வாழ்வுக்கு இரு கால்களைப் போல, இரு கரங்களைப்போல உதவ வல்லவை. சுற்றமும் நட்பும் உடையவர் சோதனைக் காலத்திலும் வேதனை நீக்கிச் சாதனையாளராகத் திகழ்வர்.

தந்தை, தாய், மனைவி இவர்களைச் சார்ந்த நெருங்கிய உறவினர் மட்டும் உறவினர் அல்லர். நம்மைச் சுற்றிச் சூழ்ந்து அன்போடு உறவாடுபவரும் உறவினர்தாம்; நம்மை நாடி வந்து அன்பு செய்பவரும், நாம் நாடிச் சென்று அன்பு கொள்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.

நமது நீதி இலக்கியமான நாலடியார் திருக்குறளைப் பின்பற்றிக் கனியும், நிழலும் நல்கும் பெரிய கனிமரத்தைப் போல சுற்றமும் நட்பும் சூழ வாழ வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

கோடை வெய்யிலின் கடுமையான வெப்பம். நடைப் பயணத்தில் சூடு தாங்காமல் வாடி வருந்தி நிழல் தேடி ஒதுங்கி நிற்க இடம் தேடி அலைகின்றன கால்கள். கண்ணில் தெரிகின்றது பெரிய கனிமரம். ‘கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே, தருநிழலே, நிழல் கனிந்த கனியே’ என மனம் மகிழ்ந்து விரைந்து தேடி அடைக்கலம் அடைகின்றன கால்கள். வெப்பம் மிகுந்த அக்கோடைக் காலத்திலே, தன்னை நாடி வந்தவருக்கு எல்லாம் வேறுபாடு இல்லாமல், குளுமையும், இனிமையுமாய் நிழல் தந்து, கனிதந்து காக்கின்றது அம்மரம். முதற்பயன் நிழல் கொடுப்பது. முழுப்பயன் கனிதருவது. பழுமரம் கனி தந்தும், நிழல் தந்தும் ஒருசேரப் பயன்தந்து வாழ்வது போல் வாழ்வது ‘சுற்றமும் நட்பும் சூழும் வாழ்க்கையாகும்’

பழுமரத்தில் உள்ள பழுத்த பழங்களை எல்லாம் மரமே உண்ணுவதில்லை. பிற உயிர்கள் உண்ணவே அக்கனிகள் பயன்படுகின்றன. நிழலும் கனியும் தந்து உள்ளூரில் பழுத்து மரம் செழித்து இருப்பது போல, செல்வச் செழிப்பு உடையவரும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நிழல் தந்து, அடைக்கலம் அளித்துக் காத்து நெடிய பயன் நல்கும் நல்ல மனமுடைய நல்லவர்களாக விளங்க வேண்டும்.

மரம், தான் உருவாக்கிய பழங்களைப் பல்லுயிர்க்கும் பயன்படச் செய்வதுபோல, துன்பம் கொண்டு, கடுமையாக உழைத்து வருந்தி முயன்று ஈட்டிய செல்வத்தைச் சுற்றமும் சூழ்ந்திருக்கும் நட்பும் நலமும் பயனும் பெறும்படி அன்போடு வழங்க வேண்டும். ‘செல்வருக்கு அழகு செழுங்கிளை தாங்குதல்’ எனும் ஒப்புரவுக் கொடையே வாழ்க்கையின் கடமை என நாலடியார் வலியுறுத்துகிறது.

செல்வத்தைப் பெற்றதன் நோக்கம், அச்செல்வத்தைச் சுற்றத்தார் எப்போதும் சூழ்ந்திருக்கப் பயன் தந்து வாழ்வதே.

“சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்

     பெற்றத்தால் பெற்ற பயன்”          (524)

என்ற வள்ளுவத்தில் வாழ்வியல் நெறிக்குத் தக்க விளக்கமாய் விளங்குவது நாலடிப் பாடல்

“அழல்மண்டு போழ்தில் அடைந்தவர்கட்கு எல்லாம்

     நிழல்மரம்போல் நேர்ஒப்பத் தாங்கிப் & பழுமரம்போல்

     பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

     நல்ஆண் மகற்குக் கடன்”.      (202)

என்பது நாலடியார்

பிறர் வருத்தமும், வறுமையும் நீங்கிட தான் வருந்தி வாழும் நிலைவரை சென்று வாழ்வு அளிப்பதே நல்லாண்மை எனச் செல்வமுடையாரின் கடமையைச் செப்பமுடன் சொல்லும் நாலடியார், நிழலும் கனியும் நல்கும் பழுத்த பழமரம் போல், நட்பும் சுற்றமும் போற்றி நலம் பெற்று வாழ்வோம்.

நட்பு

வள்ளுவத்தைப் பின்பற்றி அறநெறி உணர்த்தும் அறிவுக் களஞ்சியம் நாலடியார். கற்பனை நயத்தோடும், கலை அழகோடும் வாழ்வியல் உண்மைகளை உணர்த்துபவை நாலடிப் பாடல்கள். இன்று ‘நட்பு’ பற்றிக் கூறும் நாலடியார் பாடல் நயம் காண்போம்.

நாலடியார் நட்பின் பல்வேறு கூறுகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. நட்பாராய்தல், நட்பிற்பிழை பொறுத்தல், கூடாநட்பு என நட்பின் பல்வேறு நிலைகளை எடுத்துக் கூறுகின்றது. உண்மையான நட்புச் செய்வது என்பது அரிய காரியங்களில் எல்லாம் அரிய காரியமாகும். துன்பத்தின் போது துணையாக நிற்பதும், காப்பதும், காத்து அரணாக நிற்பதும் நலம் செய்யும் நட்பே ஆகும்.

நட்பு செய்வதில், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமும் ஆராய்ச்சியும் வேண்டும். நிறைநீர நீரவர்கேண்மை என்ற நிறைமதி நட்பையும், பிறைமதிப் பின்னீர என்ற பேதையர் நட்பையும் குறள் விளக்குவது போல ‘பெரியோர் கேண்மை பிறை போல் நாளும் வளரும் வரிசை’ என ஒளி தரும், ஆனால் சிறியோர் தொடர்பு வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே என்பது நாலடிச் செய்தி.

கற்றறிந்த பெரியோர் நட்பு கரும்பை நுனிப்பகுதியில் இருந்து கடித்துத் தின்று சுவை காண்பது போல் போகப் போகச் சுவை தருவதாக இருக்கும். பேதையர் நட்பு கரும்பை அடிப்பகுதியில் இருந்து நுனிநோக்கிக் கடித்துத் தின்பது போன்றதாகும். இனிய குணமில்லாத பேதையர் நட்பு ஆரம்பத்தில் இனிதாகத் தோன்றி போகப் போகக் கசக்கும்.

மரத்தின் உச்சியில் பூத்த கோட்டுப்பூ ஒரு முறை மலர்ந்தால் பின் ஓயாது. என்றும் இனிமைதரும் மணம் நல்கிக் கொண்டிருக்கும். உயர்குடிப்பிறப்பும், நடுவு நிலைமையும் உள்ள சான்றோர் நட்பு நாளும் வளரும். ஆனால் குளத்தில் பூத்த சிறுமலர்கள், பூத்த சமயம் பார்த்தால் கண்ணுக்கு அழகாக இருக்கும். போகப்போக அழகிழந்து, பொலிவிழந்து காட்சியளிக்கும். இவ்வாறு உள்ள, சுயநலம் மட்டும் கருதும், இலாபம் கருதிப் பழகும் சிற்றினத்தோர் நட்பை ஏற்றுக் கொள்ளாது நீக்கிவிட வேண்டும்.

பல காலம்  நெருக்கமாக இருந்தாலும் உள்ளன்பு இல்லாதவர் நட்பு ஒட்டாத நட்பாகும். உள்ளன்போடு ஒத்த இயல்புடையவர் நட்பு பிரிந்து இருந்தாலும் என்றும் பெரும் பயன் நல்கும்.

ஆகவே குறைகளையும் நிறைகளையும் ஆராய்ந்து அறிந்த பின்பே ஒருவரிடம் நட்பு கொள்ள வேண்டும். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்’ (504) என்பார் வள்ளுவர். அவ்வாறு தேர்ந்தெடுத்த பின் குணத்தோடு சில குற்றங்கள் இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்கள் சில சமயங்களில் அளவு கடந்த உரிமையாலும், பழமையான நட்பாலும், அறியாமையாலும் தவறு செய்தால் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நல்லவர், நண்பர் என்று நம்பியவர்களிடம் சில தவறுகள் காணப்பட்டாலும் அன்புணர்வால் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

உணவாகப் பயன்படும் நெல்லுக்கும் ஒரு குறை உண்டு. நெல்லுக்குத் தவிடு இருப்பது தவிர்க்க முடியாதது போல், நல்லவர்களுக்கும் குறை இருக்கும். தூய்மையான நீருக்கு நுரை என்ற களங்கம் உண்டு. மணம் வீசும் பூவிற்குப் புற இதழ்கள் உண்டு. ரோஜா மலருக்கு முள் உண்டு. குறையில்லாத நிறைவே உடைய இடம் குறைவு. இதுவே நடைமுறை உண்மை. இதனை உணர்ந்து நண்பர்களிடம் நன்மையைப் பெறுவது போல, அன்புணர்வுடன் அவர்கள் குறை தாங்குதல் நிறைவுடைமை ஆகும்.

“நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

     அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

     நெல்லுக்கு உமிஉண்டு, நீர்க்கு நுரைஉண்டு

     புல்லிதழ் பூவிற்கும் உண்டு”          (221)

கரையை உடைத்துக்கொண்டு கரைபுரண்டு விரைந்து வேகமாகப் பாய்ந்து வருகிறது வெள்ளம்; அவ்வாறு பாய்ந்து வரும் வெள்ளத்தைக் கண்டு கலங்காது, கோபிக்காது நீரைத் தேக்கி, வயலில் பாய்ச்சிப் பயனடைவர் உழவர். அதுபோல விரும்பி நட்புக் கொண்டவர் வெறுக்கும் தகைமை செய்திடும்போதும், பெரியோர்கள் பிழை பொறுத்து அவர்கள் செய்த குறைகளையெல்லாம் நிறைகளாக்கிப் பயன்பெறுவர்.

“செறுத்தோறு உடைப்பினுஞ் செம்புனலோடு ஊடார்,

     மறுத்தும் சிறை செய்வர் நீர்நசைஇ வாழ்நர்

     வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே

     தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு” (222)

நல்ல நட்பு நயனும், பயனும், பாதுகாப்பும் நிறைந்தது. கொடுத்தும், கொண்டும் இயல்பாக வளர்வது நட்பு. உதவி செய்தலும், உதவி பெறுவதலும் நட்பில் இயல்பாக நிகழ்பவை. ஆனால் கணக்குப் பார்த்துச் செய்யும் வணிகம் அல்ல நட்பு. உறுவது சீர் தூக்கும் நட்பும், பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர் என்பது வள்ளுவம். ஆதலின் நட்பு இரட்டை வழிப்பாதை என்றாலும் இயல்பாக நிகழ்வது.

செய்வதற்கு இயலாத கடினமான செயல்களைச் செய்வேன் என வீராப்புப் பேசுவதும், செய்யக்கூடிய எளிய செயல்களை நண்பர்களுக்குச் செய்யாமல் காலம் தாழ்த்துவதும், நாட்களை வீணே பயனில்லாமல் கடத்திக் கொண்டிருப்பதும் வாழ்நாட்களை வீணான நாட்களாக ஆக்கும் செயல்கள் ஆகும். இத்தகு நட்பு துன்பம் தரும். ஆதலால் வாக்குக் கொடுக்கும்போது நன்றாக ஆராய்ந்து வாக்குக் கொடுக்க வேண்டும். செய்யக்கூடிய செயல்கள் என்றால் உரிய நேரத்தில் விரைந்து அந்த நன்மையைச் செய்து நண்பர்கள் துயர் போக்க வேண்டும். இயலாதாயின் வீராப்புப்  பேசாது, தந்திரமாக ஏமாற்றாமல் உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். தவறான வாக்குறுதி களைத் தவிர்த்துவிட வேண்டும்.

“செய்யாது செய்தும்நாம் என்றாலும், செய்வதனைச்

     செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் & மெய்யாக

     இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே

     துன்புறூஉம் பெற்றி தரும்.”          (235)

என்று நாலடி பேசும். ஆதலின் நாலடி இகழ்வது துன்பம் தரும் தீ நட்பு; கூடா நட்பு. நாலடி போற்றுவது இன்பந் தரும் சான்றோர் நட்பு; பெரியோர் நட்பு.

நிலைத்த செயல்கள் செய்க!

“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

     நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”

என்பது திருக்குறளுக்கும் நாலடியாருக்கும் புகழ்கூறும் நாட்டு வழக்கு. திருக்குறளைப் பின்பற்றி நாலடியார் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பாலையும் வாழ்க்கை நெறிகளாகத் தொகுத்தும் விரித்தும் கூறுகிறது.

நிலைத்தது எது? நிலையாதது எது? என்று கேட்டால், நிலையாமைதான் நிலைத்தது. இளமை நிலையாதது, அழகு நிலையாதது, செல்வம் நிலையாதது. பதவி, அதிகாரம் இவையனைத்தும் நிலையாதவை. இவையெல்லாம் நிலையில்லாதவை என்பதால், அழகு, இளமை, செல்வம், பதவி, உடல்நலம், புகழ் இவையனைத்தையும் துறந்து விடுவதா? நிலையில்லாத இச்செல்வங்களை நிலைத்த, நிலைபேறுடைய செயல்களாக நிலைநிறுத்துவதே தமிழ் நியதி.

இளமை ஆற்றல் இருக்கும்போதே தனக்குப் பயன்படுவது போல பிறர்க்கும் பயன்பட்டு உதவி வாழ்ந்து உயர்ந்திருக்க; அழகு நீடிக்கும் வரை இளமையோடு, இனிமையும், வளமையும், இன்பமும், காட்சியும், மாட்சியும் பெற்றுக் கொள்க; செல்வம் இருக்கும்போது பழுத்த பயன்தரும் கனிமரங்களாக, ஊருணியாக, நோய் தீர்க்கும் சஞ்சீவியாய், மருந்து மரமாய் வாழ்க; உடல் இருக்கும்போதே உன்னதமான தொண்டும், அறச்செயல்களும் ஆற்றுக. பதவி, அதிகாரம் இருக்கும் போதே, பதவி உதவுதற்கே என உணர்ந்து பிறர்க்கு உதவி, பிறர்துன்பம் தீர்த்துப் புகழும் போற்றுதலும் பெற்றிடுக என்பதே வாழ்வியல்,

சிறிது சிறிதாகச் சேர்ந்த பெருஞ்செல்வம் ஆனாலும் அப்பெருஞ்செல்வம் இருக்கும்போதே நட்போடும் சுற்றத்தோடும் பகிர்ந்துண்டு பாசத்தோடு வாழ்க. இல்லையேல் அச்செல்வம் ஒரு நாள் ஓடிவிடும். வண்டிச் சக்கரம்போல் சுழலும் நிலையாமையை எண்ணி செல்வம் இருக்கும் போதே அதனை அனுபவித்துப் பயன்பெற்று மகிழ்க.

“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்

     பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க;

     அகடுஉற யார்மாட்டும் நில்லாது செல்வம்

     சகடக்கால் போல வரும்.”      (2)

என்பது நாலடியார்.

சூரியனால் தோன்றியும் மறைந்தும் உண்டாகும் பகலும் இரவும் ஆகிய ஒவ்வொரு நாளும் வாளாகக் கொண்டு எமன் வாழ்நாள் ஒவ்வொன்றையும் உண்டு தீர்த்து வருகின்றான். எனவே உயிருடன் இருக்கும்போதே அடுத்தவர்க்கு உதவி வாழும்  அன்புடையவர் ஆகுங்கள். இல்லையென்றால் மனிதனாகப் பிறந்தும் பயனில்லாது போய்விடும். மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமே பிறர்க்கு உதவி வாழ்தலே ஆகும்.

“தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்

     கூற்றம் அளந்துநும் நாள்உண்ணும் & ஆற்ற

     அறஞ்செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்

     பிறந்தும் பிறவாதார் இல்.”           (7)

ஆதலால் நில்லாதவற்றை நிலையென்று உணர்ந்து மயங்காமல் நிலைத்த செயல்களைத் தன்னம்பிக்கையோடு ஆற்றவேண்டும்; தனிமனித உழைப்பும், சமுதாயத்தின் கூட்டு முயற்சியும் ஒன்றிணையும்போது நாடு நலம் பெறும்.

ஒரு செயலை இன்று எளிமையாகத் தொடங்கினாலும், தொடங்கிய முயற்சியை இடைவிடாது பேணிவந்தால், தளர்ச்சியடையாமல் ஊக்கத்துடன், துணிவுடன் பணியாற்றினால் அச்செயல் நாளடைவில் சாதனைக்கு உரிய பெரிய அரிய செயலாகிவிடும்.

ஓர் இளஞ்செடி தடைகளைக் கடந்து வளர்ந்திருக்கின்றது. ஆடு கடிக்கும் அளவு உயரத்திற்கு வளர்ந்திருக்கிறது. அவ்விளஞ் செடியானது பாதுகாக்கப்பட்டு உரம் பெற்று வளர்ந்து விடுகிறது. படிப்படியாக வளர்ந்து வைரம் பாய்ந்த பெருமரமாகின்றது. ஆடு கடித்தாலே அழிந்திருக்கும் அச்செடி வளர்ந்தவுடன், வளர்ந்து உரமும் வலிமையும் பெற்று நிற்கும்போது வலிமை மிகுந்த யானையையே கட்டிவைக்கும் கட்டுத்தறியாகி விடுகின்றது. அதுபோல இன்று தொடங்கும் சிறிய செடி போன்ற சிறிய முயற்சி, ஈடுபாட்டுடன் இடைவிடாமல், பேணிப் பாதுகாத்து, இகழ்ச்சிக்கும் எள்ளலுக்கும் இடம்தராமல், மனத்தளர்ச்சி யின்றி ஊக்கத்துடன், உறுதியுடன், ஒருமையுடன், தன்னம்பிக்கை யுடன் செயல்பட்டால் செடி செழித்து வளர்ந்து உரமிகுந்த வைரம் பாய்ந்த மரம்போல, நமது செயலும் அரிய பெரிய செயலாக வளர்ந்து ஆக்கம் தரும்.

“ஆடுகோடு ஆகி அதர்இடை நின்றதூஉம்

     காழ்கொண்ட கண்ணே களிறுஅணைக்குங் கந்துஆகும்

     வாழ்தலும் அன்ன தகைத்தே; ஒருவன்தான்

     தாழ்வின்றி தன்னைச் செயின்.”       (192)

“இசையாது எனினும் இயற்றிஓர் ஆற்றால்

     அசையாது நிற்பதாம் ஆண்மை & இசையுங்கால்

     கண்டல் திரைஅலைக்கும் கானலந் தண்சேர்ப்ப

     பெண்டிரும் வாழாரோ மற்று”             (194)

எனச் செயலாண்மையைப் போற்றிப் பேசுகிறது நாலடியார்.

உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்பது பிறப்பால் அமைவதல்ல; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.’ (குறள்: 972) உயர்வும் தாழ்வும் அவனவன் செயல்களைப் பொறுத்ததே.

கல்வி, அறிவு, செல்வம், பண்பு, செல்வாக்கு, புகழ் பெற முயன்று உழைப்பவனே உயர்ந்தவன்; அவ்வாறு முயலாது சோம்பி, உண்டு, உறங்கி, களித்துத் திரிபவன் நிந்தனைக்கு உரியவன்; சமுதாயத்தைப் பாழ்படுத்துபவன். முயற்சியும், உழைப்பும், ஊக்கமும், தொண்டும் உடையவன் தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்துவான். தன்னை உயர்த்துவதும் தாழ்த்துவதும் அவனவன் கைகளிலே அமைந்திருக்கிறது.

“நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

     நிலைகலக்கிக் கீழிடு வானும் & நிலையினும்

     மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்

     தலையாகச் செய்வானும் தான்.”      (248)

 

 

தமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*

தமிழ் இலக்கியம் கற்பித்திடப்

புதிய சிந்தனைகள்*

 

‘கற்க கசடறக் கற்பவை’ என வாழ்க்கைக் கல்வி கூறும் வள்ளுவர், ‘நிற்க அதற்குத் தக’, ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ என வேண்டுவதும் ‘எழுமையும் ஏமாப்பு’, ‘தாமின்புறுவது உலகின்புற’, ‘செவிச்செல்வம்’ என விளக்குவதும் இலக்கியக் கல்விக்கே மிகவும் பொருந்தும். எல்லாக் கல்வி முறைக்கும் இன்றியமையாத எண்ணும் எழுத்தும் இலக்கியக் கல்விக்கே கண்களாக நின்றிலங்கும் என்பது குறள் நெறிப் பார்வை.

மனித இனம் பேசத் தொடங்கிய நாளிலிருந்தே எல்லையற்ற தொடர்புகளுக்கு வழிகோலும் அமைப்புகளான மொழிகள் பரவத் தொடங்கின. இம்மொழிகள் என்பன பக்கவரையற்ற பேரகராதியில் திரட்டப்பெறும் வெறும் வார்த்தைக் கூட்டங்களைப் போன்றன இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் சொந்தமான எண்ணத் தொகுப்புக்கள் ஆகும். இவ்வெண்ணத் தொகுப்புகள் கலைவடிவம் பெற்றபோது ‘இலக்கியங்கள்’ என்று அழைக்கப்பட்டன. மக்கள் எவ்வாறெல்லாம் தம் கருத்துக்களைப் புலப்படுத்தவும், தமக்குள் தொடர்பு பூணவும் முற்பட்டார்களோ, அவ்வாறெல்லாம் வகைவகையான இலக்கிய முறைகள் அந்தந்த மொழிகளில் வளர்ந்துள்ளன.

இலக்கியம் மனித உணர்வின் புலப்பாடு; அவன் படைத்த கலைகளில் எல்லாம் சிறந்து நிற்கும் சாதனை; தன்னை உருவாக்கிய நல்லுணர்வுகளை மேலும் விழுமிய நலங்களாக்கித் தரும் விந்தைமிகு கருவி; ஒரு மொழியில் தோன்றிய சிந்தனையை உலகச் சிந்தனையாக்கும் பொது உடைமை; மனித குலப் பண்பாட்டைப் பேணிக் காத்துவரும் களஞ்சியம்; கற்பனைச் சிறகுகளை விரிக்கப் புதுப்புது வானங்களைத் தேடும் முடிவற்ற பயணம்; ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்’ எனும் வளர்ச்சிக்கு உரிய வள்ளுவம்.

உணர்வுகளின் புலப்பாடே இலக்கியம் ஆனமையால், இந்த உணர்வுகளின் வேறுபாடுகள் இலக்கிய வகைகளையும் வேறுபடுத்தித் தந்துள்ளன. ஒவ்வொரு புலப்பாட்டிற்கும் உரியதொரு தனி வடிவம் இருப்பது போல, இலக்கிய வெளிப்பாட்டிலும் தனித்தனிப் போக்குகள் ஏற்பட்டுள்ளன. படைப்பாளியின் அனுபவத்திற்கும் உணர்ச்சிக்கும் ஏற்ப, சமுதாய விழைவிற்கும் காலத்தேவைக்கும் தக, இவ்விலக்கியங்களும் பலப்பலவாய் அமைந்து வந்துள்ளன. அச்சுக் கலை பரவிய பின்னர், இலக்கிய ஆக்கங்கள், உலகச் சிந்தனை அரங்கில் மிகப்பெரிய தாக்கங்களை உருவாக்கித் தந்துள்ளன.

இத்தகைய ஆக்கக் கருவியான இலக்கியம் ஒரு கலை (கிக்ஷீt) எனக் கருதப்படினும் அதைப் படைப்பது அரியதொரு கைவினைப் பொருள் (சிக்ஷீணீயீt) செய்தலைப் போன்றது. படைப்பது மட்டுமன்றி, இலக்கியத்தைப் பயில்வதும், பயிற்று விப்பதும் கலை உணர்வோடு, கைவினைத் திறத்தோடு கைக்கொள்ளுதற்கு உரிய களங்கள் ஆகும்.

நமது மொழி எண்ணற்ற இலக்கியங்களை இயம்பி இசைகொண்ட செம்மொழி. இவ்விலக்கியங்கள், பருகுவனன்ன ஆர்வத்தோடு வந்தார்க்கு இருவென இருந்து, சொல்லெனச் சொல்லி, செவி வாயாக, நெஞ்சு களனாகக் கொண்டு, காலமெல்லாம் கற்பிக்கப்பட்டு வந்தன. இலக்கியங் களும், சமயத் தத்துவங்களும், வாழ்க்கை நியதிகளுமே கல்விப் பொருளாக இருந்த காலம் மாறிவிட்டது. வாழ்க்கைப் போராட்டங்களும் பொருளாதாரத் தேவைகளும் அறிவியல் கல்விக்கு முதலிடம் தந்து, இலக்கியம் முதலிய கலையியல் துறைகளைப் பின்னிடத்தில் வைத்துள்ளன. என்றாலும், இலக்கியக் கல்விக்கு உரிய இன்றியமையாமையும் அவ்வப்போது வற்புறுத்தப்பட்டே வருகிறது. “நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” எனப் பாரதியார் கேட்டதைப் போல, நமக்குக் கிட்டிய வாழ்வினைக் கேட்டுக்கு உள்ளாக்கிவிடாமல், மனித நேயத்தோடு நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்விப்பதற்கு இலக்கியம் முதலிய கலை நலத் தொடர்புகள் தேவை என்பது உணரப்பட்டு வருகிறது.

புதிய விழைவுகளுக்கு ஈடுதரும் இலக்கியப் படைப்பைப் புதுப்பித்தலைப் போல, அவ்விலக்கியங் களைப் பயிற்றுவிப்பதிலும் மறுமலர்ச்சிச் சிந்தனைகள், உலக மொழி அரங்குகளில் ஏற்பட்டு வருகின்றன. விஞ்ஞான அடிப்படையில் மொழி, இலக்கியப் பாடங்களையும் திருத்தியமைத்துப் பயன்கொள்ளும் தமிழ் இலக்கியங்களைக் கற்பிப்பதிலும் தொடக்கப் பள்ளி தொட்டு, பல்கலைப் படிப்புவரை படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் எண்ணங்கள் மேலோங்கி வருகின்றன.

சென்ற நூற்றாண்டுத் தொடக்கம் வரை, ஏட்டையும், எழுத்தாணியையும் ஊடகமாகக் கொண்டு, ஆசானிடம் மாணாக்கர் அமைவுறப் பயிலும் குருகுலப் பாங்கே தமிழ்க் (இலக்கியக்)கல்வி முறையாக இருந்து வந்தது. அச்சுக் கலையும் ஆங்கிலக் கல்வி முறையும் அறிமுகமான பின்னரும்கூட, புலமைமிகு ஆசானை அண்டி நின்று, இலக்கியங்களைப் பாடம் கேட்கும் பாங்கே நீடித்தது.

தம் ஆசான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றி, டாக்டர் உ.வே.சா. ‘என் சரித்திர’த்தில் எழுதியமையும், டாக்டர். உ.வே.சாவின் மாணவர்களாக அமைந்தோர் மரபுவழி இலக்கியப் பயில்வுமுறையினைப் போற்றியதும் இதற்குச் சான்றாகும். ஒரு புலவரிடம் பாடம் கேட்பதுடன் மட்டும் நின்றுவிடாது. எந்த இலக்கியத்தில் எவர் மிகுபுலமை பெற்றிருந்தாரோ அவரைச் சார்ந்து அந்நூலைப் பாடம் கேட்கும் ஆழமான அணுக்கப் பயிற்சிமுறை பேணப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளுக்கு முன், பல்கலைக்கழகக் கல்வித் திட்டம் தொடங்கப் பெற்ற நாட்களில், தமிழ்க் கல்விக்குத் தக்க இடம் அளிக்கப்படவில்லை பிராந்திய மொழியாகத் தாய்மொழிக் கல்வி மாற்றாந் தாய்ப்பிள்ளையாகவே நடத்தப்பட்டு வந்தது. ‘ஆங்கிலம் ஒன்றையே கற்று அதற்கு ஆவியொடு ஆக்கையும் விற்ற’ அவல நிலைகளையும் பண்பாட்டுக் குலைவுகளையும் கண்ட வள்ளல் பாண்டித்துரைத் தேவர், மதுரையில், பெரும்புலவர்களைக் கூட்டி, நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி, தமிழ்ப்புலமைப் பயிற்சியை வரன்முறையானதொரு பாடத் திட்டமாக்கிட வழிகோலினார். மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், சென்னைக் கல்விச் சங்கம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை முதலியன புலவர் தேர்வுகளை நடத்தி, புதிய தலைமுறைத் ‘தமிழ் வித்துவான்களை’ உருவாக்கித் தரத் தொடங்கின.

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் தமிழ்த்துறைகள் மொழிநலம் பேணத் தொடங்கிய பின்னர், தமிழைக் கற்றலிலும் கற்பித்தலிலும் புதுமெருகுகள் ஏற்பட்டன. பிற பாடங்களைப் போல, மொழிப் பயிற்சியும் பட்டம் பெறும் பாடத்திட்டம் ஆயிற்று. நாளடைவில் புலவர் சான்றிதழ்த் தேர்வும் புதிய பட்டப் பாடத்திட்டமும் இணைந்ததொரு மொழிக்கல்விமுறை தமிழாசிரியர்களை உருவாக்கும் களமாயிற்று. பெரும்புலவர்களைச் சார்ந்து பயில்வதும், திருமடங்களில் சேர்ந்து படிப்பதும் குறையலாயிற்று.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், காலனி ஆதிக்கப் பிடிப்புக்கள் தளர்ந்து, நாட்டு விடுதலைப் போர்கள் கிளர்ந்து, இன, மொழி, பண்பாட்டு இயக்கங்கள் உலகெல்லாம் எழுந்தமை, புதிய பார்வைகளுக்கு வழிகோலியது. இந்திய விடுதலையோடு இணைந்தெழுந்த தமிழியக்கம், தமிழின் பண்டைப் பெருமைகளை எல்லாம் புதிய ஒளியில் புலப்படுத்த முற்பட்டது. ஆராய்ச்சிப் பேரறிஞர்கள் பழஞ்சுவடிகளை ஆய்ந்து, புதையுண்டு கிடந்த தமிழ்ச் செல்வங்களைப் புதுப் படைப்பாக்கித் தந்தனர். நமது மொழிப் பயிற்சி முறையும் இக்கால கட்டத்திலே பழம்பெருமை தேடிப் பரவசமுறும் பாதையிலே போய்க்கொண்டு இருந்தது.

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழாமல், சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்ய வேண்டும் என்று முழங்கிய பாரதிப் புலவன், “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என அறைகூவினான். இந்த அறைகூவலை நாளடைவில் நடைமுறையாக்கும் எண்ணங்கள் மேவின. ‘பன்மொழிக் கட்டமைப்புடைய நாடு’ எனும் ஆட்சி வரையறைக்குள் நின்று மொழிநலம் பேணி வளர்க்கும் வகையில் துறைகள் ஆக்கப்பட்டன. பல்கலைக்கழகங்கள் விரிந்தன. உலகத் தமிழ் மாநாடுகள் கூடின. தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலிய மொழியாக்க மூலப் பட்டறைகள் நிலை கொண்டன.

மேலைநாட்டவர் ஆட்சிக்காலத்தே தமிழ்மொழியின் காலப்பழமையினையும் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையினையும் தேடித் தொகுக்கும் முயற்சிகள் அரும்பின. சிந்துவெளி நாகரிகம் தொட்டு, குமரிக்கண்ட அமிழ்வு வரை, மறைந்து, மறந்து போனவற்றை ஆய்ந்தறியும் வரலாற்றுச் சுவடுகள் வளர்ந்தன. புதையுண்ட கல்வெட்டுக் களையும், தூசுபடிந்த ஓலைச் சுவடிகளையும் கருத்தோடு கண்டறியும் பயணங்கள் நீண்டன. இந் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் பண்டைப் பெருமைகளை, வாழ்ந்த கதைகளை, வீர வரலாறுகளை எல்லாம் நினைவூட்டும் நறுஞ்சுனைகளாக, சோலைகளாக அம்முயற்சிகள் ஆங்காங்கே நிலைகொண்டன. உரிமை பெற்ற பின்னர் இந்நாட்டின் பல்வேறு தேசிய மரபுகள் தம்மை இனம்காட்டிக் கொள்ள முற்பட்டபோது தமிழ்நாடும் தனது பழமைச் செல்வங் களுக்குப் புது மெருகேற்றிக் கொள்ளத் தலைப்பட்டது.

மனோன்மணீயம் சுந்தரனாரின் ‘தமிழ்த்தாய்’ வாழ்த்தும், மகாகவி பாரதியின் ‘வாழிய செந்தமிழ்ப் பாட்டும்’ பாவேந்தரின் ‘தமிழியக்கமும்’, சுத்தானந்தரின் ‘தமிழ் உணர்ச்சியும்’ மறுமலர்ச்சி வித்துக்களைத் தூவின. சங்க இலக்கியங்கள் எல்லாம் புதுப்பதிப்புப் பெற்றன. முத்தமிழ்க் காப்பியங்கள் மாநாட்டு அரங்கேறின; பக்தி பனுவல்கள் பட்டிமன்றப் பொருளாயின; தமிழ்ப் பேரரசுகளின் வரலாறுகள் ‘பார்த்திபன் கனவாக’, ‘சிவகாமி சபதமாக’, ‘கல்கி’ முதலியோரால், புதினப் புத்தாடை அணிவிக்கப் பட்டன; அகத்திணை, புறத்துறைப் பாடல்கள், உரைநடை யிட்ட நாடகச் சித்திரங்களாக மு.வ., புலியூர்க்கேசிகன், கி.வா.ஜ. முதலிய புலமைச் செல்வர்களால் வளமுறுத்தப் பட்டன. இவ்வளங்கள் எல்லாம், தமிழ்ப்பாடத் திட்டப் பாத்திகளிலும் கரைந்தோடி வந்தன. அவற்றைக் கற்பதில் ஈடுபாடும், கற்பிப்பதில் பெருமையும் கைகோத்து நடம் பயிலத் தொடங்கின.

மொழியியல் இலக்கியக் கல்வியில் ஆர்வமும், நூலாக்கப் பணிகளில் ஈடுபாடும் இவ்வாறு பெருகத் தொடங்கின. என்றாலும், அண்மைக் காலமாகத் தாய்மொழிக் கல்வியில் தளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியில் தேக்கமும் ஏற்பட்டிருப்பது பலராலும் உணரப்படுகிறது. புலரும் நூற்றாண்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு, தமிழ்மொழி இலக்கியங்களைப் பயிற்றுவிப்பதில் சில மாற்றங்களைக் கொணர வேண்டும் என்பதும் வலியுறுத்தப் படுகிறது.

தமிழ் இலக்கியங்கள் தொன்மையில் வேரூன்றியவை; தொடர்ந்து நூல் வளத்தினைப் பரப்பியவை; மரபுகள் எனும் விழுதூன்றிக் கொண்டவை: புதுமையையும் கொண்டு கலைமணம் பரப்ப உணர்வூட்டி வருபவை; “தூய்மை, தொன்மை, புதுமை, அகலம், ஆழம் என்ற அனைத்துத் திறன்களும் இயல்பாக ஒருங்குபெற்று, இடையூறு, எதிர்ப்பெல்லாம் கடந்து வாழ்ந்தியங்குவது நம் தமிழ் மொழி” (பேராசிரியர் வ.சுப.மாணிக்கம்). இலக்கியங்களைப் பாட வகைப்படுத்தும்போது, இத்தனை சிறப்புக்களும் போற்றப்படும் வகையில் திட்டமிடுதல் வேண்டும். ‘தமிழை முறையாகக் கற்பிக்கவில்லை, தமிழிலக்கியச் செல்வத்தை அறிவிக்கவில்லை, தமிழைக் காலமொழியாக வளர்க்கவில்லை’ எனும் குறைகளுக்கு இடம் கொடாமல், தமிழ்ப் பாடத்திட்டத்தை வகுத்திட வேண்டும். தமிழ் நிலத்து ஐந்திணை வளமும் மரபு நலமும் பழந்தமிழ் இலக்கியத்திற்குக் களங்கள் ஆயினமையும், சமய எழுச்சியும் அரசு ஏற்ற இறக்கங்களும் இடைக்கால இலக்கியங்களுக்குப் பின்னணி தந்தமையும், உரிமை வேட்கையும் அறிவியல் பெருக்கமும் இக்கால உணர்வுகளுக்கு ஊக்கமளித்து வருவதும் நமது இலக்கியப் பாடத்திட்ட வரன்முறைகளில் பிரதிபலிக்க வேண்டும்.

தொடக்கப் பள்ளி முதல் தாய்மொழி இலக்கியக் கல்வி இருநிலைகளை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படுகிறது:

  1. பொதுநிலை

  2. சிறப்பு நிலை

பிழையின்றி எழுதப் படிக்கக் கற்றல், தம் கருத்தைப் புலப்படுத்த ஆற்றல் பெறுதல், மொழியின் இலக்கியப் பயன்பாட்டைப் புரிந்துகொள்வதோடு, தனியொரு கலைவடிவமாக இலக்கியத்தையும் போற்றுதல் – இது எல்லோர்க்கும் உரிய பொது நிலைப் பயிற்சி.

மொழி இலக்கியக் கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள முற்படுதல்:

திறனாய்வுத் திறமும் தேர்ந்த புலமையும் பெறுதல்.

– இது சிலர்க்கு மட்டுமே அமைய வேண்டிய சிறப்பு நிலைப் பயிற்சி.

இவ்விரு நிலைகளுக்கு ஏற்ப – தமிழ் இலக்கியப் பயிற்சியும் – பொதுத்தமிழ் – சிறப்புத்தமிழ் என இருகூறாக மேனிலைப் பள்ளிக் கல்வியிலிருந்து பகுக்கப்பட்டுள்ளது. பொதுத் தமிழாகவும், சிறப்புத் தமிழாகவும் கற்பிப்பதில் இப்போது கருதவேண்டிய சிந்தனைகள் இவை.

(அ). நர்சரிப் பள்ளி தொட்டு, தாய்மொழி வாயிலாகக் கல்வி தருவதே செவ்விய இயற்கை நெறி. அண்மைக் காலமாக, ஆங்கில வழிக் கல்வி மோகம் ஆங்கில ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, நர்சரிப் பள்ளிகளிலேயே வேரூன்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிக் கல்வி அறிஞர்கள் கவலை தெரிவித்த பின்னர், இப்போக்கைத் தடுத்தாட் கொண்டு, தாய்மொழிக் கல்விக்கு அங்கு முன்னுரிமை தரும் முயற்சிகள் தலைதூக்கி வருகின்றன.

(ஆ). நர்சரிப் பள்ளி முதல் தொடக்கப் பள்ளியின் எட்டாம் வகுப்பு வரை தமிழைக் கற்பிக்கும்போது நல்ல பாடல்களைத் தேர்ந்து, மனப்பாடப் பகுதிகளாக வைத்து, மாணவரின் நினைவுத் திறனை ஊக்கி வளர்க்க வேண்டும். அப்பகுதிகளைத் தேர்வுத்தாளில் விடையாக எழுதுவதோடு அமையாது, அறிவியல் பாடச் செய்முறைபோல் ஒலிப்பிழையின்றி ஒப்புவிக்கவும் செய்திட வேண்டும். நர்சரி தொடக்க வகுப்புப் பருவப் பாடல்கள், குறுகுறு நடையுடையனவாக, ஓசை நயமுடையனவாக, எளிய கருத்தை இயம்பும் கதைப்பாங்கினவாகத் தெரிவு செய்யப்படுதல் வேண்டும்.

(இ). ஐந்தாம் வகுப்பு வரை நீதி நூல்களுக்குச் சிறப்பிடம் தரலாம். உணர்வுக்கும் கற்பனைக்கும் முதலிடம் தந்து அமைவன இலக்கியங்கள் எனில், அறிவுக்கும் சிந்தனைக்கும் தலைமையிடம் தருவன நீதி நூல்கள் ஆகும். வளரும் பிள்ளைகள் சமுதாய நியதிகளையும் தனிமனித ஒழுகலாறுகளையும் கற்றறிய உதவும் படிகளாக நீதிநூல் கல்வி அமையும். ஆத்திசூடி முதலிய நீதிநூல்களை ஒவ்வொரு வகுப்பிலும், மாணவரின் திறனுக்கு உகந்தவாறு அறிமுகப்படுத்த வேண்டும். ஐந்தாம் வகுப்பில் திருக்குறளைத் தொடங்குவதோடு இடைக்கால, இக்கால இலக்கியங்களையும், கட்டுரை, உரைநடை, நாடகம், கடிதம் முதலியவற்றையும் பாடமாகத் தொகுக்க வேண்டும். இப்போதுள்ள பாடநூல் களில் இம்முறை பொதுவாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்றாலும் ‘நல்ல தமிழ் எழுதத் தெரியாத’ மாணவர்களாகவே பெரும்பாலோர் இருப்பதால், பயிற்று முறையில் ஏதோ குறையுள்ளது எனத் தெரிகிறது. தொடக்கப் பள்ளி வகுப்புகளில், மாணவர் எண்ணிக்கை ஓராசானின் போதனை வரம்பிற்கும் அதிகமாக இருப்பது ஒரு காரணம் என்றாலும், உணர்வுத் திறத்தோடு மொழிக்கல்வி புகட்ட மாட்டாதவர்கள் ஆசான்களாக அமையும் குறையே முக்கியமான காரணமாகும்.

திருக்குறளைப் பயிற்றுவிப்பது பற்றிய ஒரு கருத்தை இங்கே வலியுறுத்துதல் பொருந்தும். தமிழ்மொழியில் முதன்மையானதும், முழுமையானதும், தொன்மையானதும், தொடர்ந்து புதுமை நலம் பேணுவதுமான திருக்குறளைக் கற்பிப்பதில் பிற நூல் போதனையை விடச் சற்று அதிகமான அக்கறை வேண்டும். வாழ்க்கைக் கூறுகளாம் அறம், பொருள், இன்பம் எனும் மூன்று முதற்பொருள் களையும் தனித்தனியாகவும், முழுமையாகவும் வள்ளுவர் உணர்த்தியுள்ளார். இப்பயனை இளமை முதலே மாணவர் தெரிந்து தெளியும் வகையில் குறட்பாக்களைப் பாடமாக வைக்க வேண்டும். முதல் வகுப்புகளில் படித்த திருக்குறள் அதிகாரங்களே மேல் வகுப்புகளிலும் பாடமாகத் திருப்பித் திருப்பி வராவண்ணம், இந்த வகுப்புக்கு இந்த அதிகாரப் பகுதி என வரையறுத்துக் கொள்ள வேண்டும். காப்பியங்கள், பக்திப் பனுவல்களுக்கும் இத்தெரிவு முறை முழுப் பயன் தரும்.

(ஈ). மொழி இலக்கியப் பயிற்சி இரு வகைப்படும்.

  1. மொழிப் பயிற்சி வழியாக இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் ஒருமுறை.

  2. இலக்கியங்கள் மூலமாக மொழியின் கூறுகளை அறிதலும் ஆளுதலும் மற்றொரு முறை.

ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மொழிப்பயிற்சி வழியாக இலக்கியங்களை அறிமுகப் படுத்தும் வகையில், இப்போதுள்ள பாட முறையில், செய்யுள் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்கள், பாட நூலுக்கு அப்பாலும் சென்று மொழித்திறம் பெறுவதற்கு உதவும் உரைநடை (சிறுகதை, புதினம், பயண நூல், அருஞ்சாகசக் கற்பனைகள் என்பன) நூல்களும் சேர்க்கப்பட வேண்டும்.

(உ). மேனிலைப் பள்ளியோடு படிப்பை முடித்துக் கொள்ளுவோருக்கும், பிற தொழிற் படிப்புக்களில் சேருவோருக்கும் அதுவரை தாம் கற்ற தாய்மொழியும் இலக்கியப் பயிற்சியும் தற்சார்புடையனவாக அமைந்திருத்தல் வேண்டும். தாமே முயன்று மொழித்திறத்தையும் கருத்துப் புலப்பாடுகளையும் வளர்த்துக் கொள்ள வழிகாட்டுவதாக இலக்கியக் கல்வி ஆக்கம் தந்திட வேண்டும். ஒருவரிடம் இயல்பாகக் குடிகொண்டுள்ள சிந்தனை வளத்தை வெளிக் கொணர உதவும் வாயில்களில் ஒன்றாகச் செய்தித்தாள்களும் இதழ்களும் வளர்ந்துள்ளன. படிப்போரை எல்லாம் படைப்பாளிகளாக்கிக் கொண்டு வரும் இதழியல் முதலிய தொடர்புச் சாதனங்களில் எல்லாம் இலக்கியம் படிப்போர் நாட்டம் கொள்ளத் தூண்டுவனவாகப் பயிற்சி முறைகள் அமைய வேண்டும்.

(ஊ). பள்ளிக் கல்வி – கல்லூரிக் கல்வி எனும் தெளிவான வரையறை – மரத்தின் முன்னிலை வளர்ச்சியோடும் அது நல்கும் பின்னிலைப் பயனோடும் ஒப்புநோக்கக் கூடியது. மரம் – பலன் தருவதற்கு முன்னர் தக்க வளர்ச்சி பெறும் தனி நிலையினையும், தக்க வளர்ச்சி பெற்ற பின்னர் பயன்தந்து நிற்கும் முழுநிலையினையும் பெற்றுள்ளமை போல, வாழும் சூழலிலிருந்து கிடைக்கும் இயற்கைச் சத்துக்களையும் ஆசான் நல்கும் ஊக்க உரத்தினையும் பெற்று மாணவர் தனிநிலை வளர்ச்சி காண வேண்டும். மேனிலைப் பள்ளிப் படிப்புவரை இத் தனிநிலை வளர்ச்சி நீடிக்கலாம். கல்லூரிக் கல்வியிலிருந்து விரிந்த நிழலும் விழுமிய நலனும் நல்கிடும் முழுநிலை இலக்கியப் பயிற்சி, முயற்சிகளுக்கு முற்பட வேண்டும்.

(எ). கல்லூரிகள் தமிழ் இலக்கியப் பாசறைகளாக விளங்க வேண்டியவை. அங்குள்ள உலைக் களங்களில், அறிவியல், கலைத்துறைகளோடு, மொழித்துறையும் சிந்தனைத் தீயில் புடமிடப்பட்டுச் செம்மை வடிவம் பெற வேண்டும். இந்த உலைக்களத்தில் காலத்திற்கு ஏற்ற புதிய கருவிகளை மொழித்துறை படைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்கு ஏற்ற புதுப்புது இலக்கியப் படைக்கலங்களை உருவாக்கித் தர வேண்டும்.

(ஏ). வாழ்வு என்பதும் வாழ்க்கை என்பதும் வெவ்வேறு ஆகும். வாழ்வு என்பது தோற்றம், நிலை, மறைவு எனும் பிரபஞ்ச இயல்பு பற்றியது. வாழ்க்கை என்பது தனிப்பட்ட உயிர்களின் உயிர்ப்பாசத்தினால் ஏற்படும் உணர்வுகள் மற்றும் விளைவுகளைச் சார்ந்து அமைவது. வாழ்வு, வாழ்க்கை எனும் இவற்றிடையே உள்ள தொடர்பையோ, தொடர்பற்ற தன்மையையோ விளக்குவதே மனிதச் சிந்தனையின் சாரம். இச்சிந்தனைகள், கலைவடிவம் பெறும்போது இலக்கியங்கள் ஆகின்றன. மன உணர்வுகளைச் சித்திரங்களாகத் தீட்டும் இலக்கியக் கலையின் இயல்புகளை அறிவதும், இயன்றவாறு எல்லாம் புதியவர்களை ஆக்க வழிகாட்டுவதும் கல்லூரி இலக்கியக் கல்வியின் நோக்கம் எனலாம்.

“நூல் இருவகை: தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று; நம் காலத்திற்குத் தான் வந்து உதவுவது மற்றொன்று. நூலைக் கற்கும் முறையும் இருவகை: வாழும் காலத்தை மறந்து நூலெழுதிய காலத்திற்குக் கற்பனைச் சிறகுகொண்டு பறந்து சென்று நூற்பொருளைக் கற்பது ஒருவகை; நூலெழுதிய காலம் எதுவாயினும் அதைவிட்டு, வாழும் காலத்திற்கே வந்து வழிகாட்டும்படியாக நூலைப் போற்றிக் கற்பது மற்றொரு வகை;” என்பார் அறிஞர் மு.வ. புலவருலகில் நின்று இலக்கியமாக மட்டும் மதிக்கும் முதல்வகை நூல்களையும், மக்கள் உள்ளங்களையே கோயில்களாகக் கொண்டு வாழும் இரண்டாம் வகை இலக்கியங்களையும் முறையறிந்து கற்பிக்கும் அணுகுமுறை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் புதுப்புது உத்திகளோடு இணைந்து ஏற்பட வேண்டும்.

கல்லூரியில் முதற்பாகமாக மட்டும் தமிழைப் பயில்வோரின் தொகையே மிகுதி. பல்வேறு துறைகளைப் பாடமாகத் தேர்ந்து பயிலும் இவர்களது வளர்ச்சி நோக்கம் சிதையா வகையிலும், அதை மேலும் சிறப்புறுத்தும் முறையிலும் இலக்கியப் பயிற்சி தரப்படுதல் வேண்டும். இலக்கியப் பாடங்களை ஒரு சுமையாகக் கருதாமல், அருஞ்சுவையாக ஏற்றுப் படிக்கும் வகையில் பாடத்தொகுப்பு அமைய வேண்டும். தேர்வெழுதியதோடு இலக்கியப் படைப்பையும் மூடிவைத்து விடாமல், வாழ்க்கை முழுவதும் நல்லிலக்கியங்கள் மீது நாட்டம் கொள்ளும் வகையில் உணர்வூட்ட வேண்டும். பிறதுறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களில் சிலர், சிறந்த இலக்கிய மேதைகளாகவும் விளங்குவதற்கு அவர்கள் பெற்றுக்கொண்ட இந்த இலக்கிய ஊட்டமே காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்லூரிநிலை முதல் பாகத் தமிழ்ப்பாடத் திட்டத்தில் சங்க கால, இடைக்கால இலக்கியங்கள் ஓராண்டும், இக்கால இலக்கிய வகைகள் மறு ஆண்டிலும் அமையலாம். இக்கால இலக்கிய வகைகளில் சிறுகதை, புதினம், இதழியல் முதலியவற்றிற்குக் கூடுதலான வாய்ப்பு அளிக்கலாம்.

ஐ. பட்ட வகுப்புச் சிறப்புப் பாடமாகவும், முதுகலை வகுப்புப் புலமைப் பாடமாகவும் அமையும் தமிழ் இலக்கியத் தொகுப்பில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அவ்வப்போது செய்து கொள்ளப் பல்கலைக்கழகங்கள் துணிய வேண்டும். அறிவியல் பாடத்திட்டங்களைத் தயக்கமின்றி மேம்படுத்தி (ஹிஜீபீணீtவீஸீரீ) வருவதைப் போல, இலக்கியப் பாடத்திட்டங்களையும் புதுநெறிப்படுத்திடத் தமிழறிஞர்கள் இசைய வேண்டும்; புதுமரபுகளுக்கு இடம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்திற்கு அன்று தொட்டு அமைந்த பல்வகை மரபுத் தூண்களையே எப்போதும் பற்றி நிற்காமல், புது மரபுப் பந்தல்களையே தேட வேண்டும், போட வேண்டும்.

ஒ. திறனாய்வும் ஒப்பீட்டாய்வும் உலக இலக்கியச் சோலைகளில் இவ்வாறு புதுப்பந்தல்களைப் போட்டு வருவது நம் கண்களில் பட வேண்டும். தமிழில் திறனாய்வும் ஒப்பீடும் அண்மையில் ஓரளவு வளர்ந்துள்ள போதிலும், இவ்விரண்டையும் விரிவுரையாளராக மட்டும் சொல்லித் தராமல், விமரிசனத்தைப் படைப்பு நிலைக்கு உயர்த்திட வேண்டும். இலக்கிய வளர்ச்சிக்கு உரமூட்டும் வண்ணம் கற்பிக்க வேண்டும்.

முதுகலை மாணவர்க்கு இவற்றை இன்னும் ஆழமாகக் கற்பிக்கலாம். கற்பிக்கும் பேராசிரியர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் நுண்மாண் நுழைபுலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்கள் சில பாடத் துறைகளால் தனிப்புகழ் அடைவது போல, பேராசிரியர்களும் தனி இலக்கியப் புலமையில் சிகரங்களாகத் திகழ வேண்டும். ‘நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்’ (திருமூலர் – திருமந்திரம்) எனும் குறை நம் இலக்கியப் பேராசிரியர் களுக்கு நேரிடக் கூடாது. ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ (குறள்: 595) போல, பேராசிரியர்கள் உயர்வுக்கு ஒப்பவே அவர்தம் மாணவரின் மலர்ச்சியும் அமையும் அன்றோ?

‘கம்பனொடு கவி போயிற்று’ என்ற முந்தைய நூற்றாண்டு ஏக்கமும், ‘பாரதி, பாரதிதாசனுக்குப்பின் யாவர்?’ எனும் இந்த நூற்றாண்டுக் கேள்வியும் தமிழ் உலகில் எதிரொலித்துக் கொண்டே உள்ளன. வெளிநாட்டார் வணக்கம் செய்யும் திறமான படைப்புக்கள் ‘ஞானபீடம்’ ஏந்திடும் தரத்திற்கு உயரும் நாள் எந்நாளோ? எனும் பெருமூச்சுக்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. மறைமலை யடிகள், திரு.வி.க. போல, புதுமைப்பித்தன், கல்கி போல, மு.வ., தெ.பொ.மீ. போல, தனிநாயக அடிகள், கைலாசபதி போல இந்தத் தலைமுறையிலும் இலக்கியச் செல்வர்களைத் தேடும் பார்வைகள் அலைகின்றன.

பத்திரிகைகளும் பல்கலைக்கழகங்களுமே இன்று, தமிழ் இலக்கியப் பயிர் புரக்கும் பண்ணைகளாக உள்ளன. இலக்கிய வேள்வியில் முனைந்த ஒரு சில ஏடுகள், சாண்ஏறி, முழம் வழுக்கிக் கொண்டிருக்கின்றன. விளம்பர வேட்டையாடும் பத்திரிகைகளில் பெரும்பாலானவை பாதியாடைச் சித்திரங்களோடு பச்சைப் பயிர் வளர்த்துக் கொழிக்கின்றன. களையாக வளரும் இந்த நச்சு எழுத்துக்களை எளிதில் இனம் பிரித்தறிய முடியாத அளவு அவை ஊடு பயிர்களாக வளர்க்கப்படுகின்றன. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவை இவை ‘நசிவு இலக்கியங்கள்’ என ஆய்ந்து சொல்வதோடு நின்றுவிடாமல், நல்ல இலக்கியங்களைப் படிக்கவும், படைக்கவும் வாய்ப்பளிக்கும் நிலங்கள் ஆகும் பொறுப்பையும் இன்று ஏற்க வேண்டியுள்ளது. எங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள், எங்களது வாழ்க்கை முயற்சிகளினூடே ‘திருக்குறள் பேரவை’ போலும் இலக்கிய மன்றங்களை நடத்தி, இயன்றவாறெல்லாம் தமிழ் மணம் பரப்பி வருகின்றோம். கல்லூரிகளில் அன்று எங்களுக்கு புகட்டப்பட்ட ‘தமிழ்ப்பால்’ போன்ற ஞான நீரோடைகள் இன்றும் வாழ்க்கை வயல்களில் பாய்ந்தோடி வரவேண்டும் என விழைகின்றோம். இலக்கிய விழாக்களை அரிதின் முயன்று ஏற்பாடு செய்யும்போது மொழியைத் தொழிலாகக் கொண்டு அதை வளர்க்கும் பொறுப்புடையோரே இவ்விழாக்களை ஒதுக்குவதும் அவற்றிலிருந்து ஒதுங்குவதும் கவலை தருகிறது.

தமிழ் அறிஞர் பெருமக்கள், இலக்கிய நீரோடை களைப் பெருக்கெடுத்து ஓடச் செய்யும் உயிரூற்றுகளாகத் தமிழ்த்துறைகளை ஆக்கித்தர வேண்டும். தமிழ் ஆசிரியப் பெருமக்கள் கூடி நடத்தும் இதுபோன்ற உலகளாவிய மாநாட்டு அரங்குகள், திருவிழாக்களாக மட்டும் போய் விடாது புதிய செயல்திட்டங்களை வடிவமைக்கும் வாய்க்கால்களாகவும் பயன்தரவேண்டும்.

 

சுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*

சுதந்திரப் பொன் விழாவில்

சுடர்விடும் எண்ணங்கள்*

Image result for india freedom

சுதந்திர சூரியன் உதிப்பதைப் பற்றிப் பாடிய மகாகவி பாரதி ‘பொழுது புலர்ந்தது – யாம் செய்த தவத்தால், புன்மைஇருள் கணம் போயின யாவும்’ என முன்னரே பாடிப் பரவசம் கொண்டார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பொன்னான பொழுதும் விடிந்தது. புதிய விடியலுக்குப் பூபாளம் பாடும் தலைவர்கள் இருந்தனர். உதய ஒளிக்கீற்றுகளாக ஊரெங்கும் தேச பக்தித் தொண்டர்கள் அணி வகுத்திருந்தனர்.

நாட்டுப் பிரிவினையோடு நமக்கு கிட்டிய உரிமை நாளன்று, வன்முறைகளும் வலம் வரமுற்பட்டபோதிலும் நம்மைத் தடுத்தாண்டு வழிநடத்தத் தன்னலமற்ற தலைவர்கள் இருந்தார்கள். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் எனும் நம்பிக்கையை நம் முன் வளர்த்தார்கள்…

மதவாத வன்முறைக்கு மகாத்மாவைப் பறிகொடுத்தோம். சுதேச சமஸ்தானங்களை ஒரு நாட்டமைப்பில் எப்படி இணைக்கப் போகிறோமா எனத் திகைத்தோம். எடுத்த எடுப்பில் ஏவப்பட்ட படை எடுப்புக்களை எப்படியோ சமாளித்தோம். பண்டித நேருவும், படேலும் உறுதி மலைகளாக நின்று நமக்கு உற்சாகம் தந்தார்கள்.

‘மதச்சார்பற்ற நாடு’ எனும் தெளிவான அரசியல் சட்ட வரையறையுடன், திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியைக் கருவாகக் கொண்டு, திசை எங்கும் புதிய பாரத தரிசனங்களுக்கு ஆலை, அணை எனும் கோவில் களைக் கட்ட முற்பட்டோம். மொழி, மாநிலத்தவர்களைச் சகோதர வாஞ்சை கோடாமல் சரிக்கட்டி வந்தோம். சர்வதேச உறவுகளில் அணிசேராதொரு பேரணியை உருவாக்கி வல்லரசு நாடுகளும் நம்மை வலம் வரச் செய்து வலுப்பெற்று வந்தோம்.

ஆண்டு இறுதியில் தொழில் நடத்துபவர் இலாப நட்டக்கணக்கு பார்க்கப் பேரேடு புரட்டி, ஐந்தொகையை மதிப்பிட்டது போல நாமும் இந்தப் பொன்விழா ஆண்டில் நமது நாட்டுப் பேரேட்டைப் புரட்டுகிறோம்.

வரவுப் பகுதியில் எத்தனையோ வரப்பிரசாதங்கள். சமூக பொருளாதாரத் தளங்களில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சிகள், விஞ்ஞானத் துறையில் விளைவித்துள்ள  அதிசய மாற்றங்கள் (சர்வதேச அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அரங்கில் உரத்துப் பேசும் அளவுக்கு சுய ஆக்கங்கள்), வேளாண்துறை தொட்டுப் பல வாழ்க்கைக் களங்களில் சுய தேவைப் புரட்சிகள், வியக்கத்தக்க நிறுவனங்கள் என வளரும் பட்டியல்கள் நமக்குத் தெம்பூட்டுகின்றன. நமக்கு முன்னரும் பின்னரும் சுதந்திரம் பெற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஓரளவு மகிழ்ச்சியும் தருகின்றன.

அந்த மகிழ்ச்சி ஓரளவாக மட்டுமே இருப்பதும் அது பேரளவினதாக வளராததும் நமக்கு வருத்தம் தருகிறது. அதற்கான காரணத்தைப் பேரேட்டின் பற்றுப் பகுதியில் பார்க்க வருமாறு நம்மைப்பற்றி இழுக்கின்றன.

பார்க்கிறோம் – பெருமூச்சு வரும் அளவுக்குப் பார்க்கிறோம்.

“வாழ்கின்றார் முப்பது முக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அத் தொகையிருக்கும்” என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகள் பொய்யாக வில்லையே எனும் ஏக்கத்துடன் பார்க்கிறோம். இந்த ஐம்பது ஆண்டுகளில் நமது வளர்ச்சியைச் சிதைக்கச் செய்த சீர்கேடுகள்தான் எத்தனை எத்தனை? குடியாட்சியின் பெயரால் எத்தனை குளறுபடிகள்? உட்கட்சி ஜனநாயக உணர்வைத் தீர்க்கத் தான் எத்தனை சர்வாதிபத்தியங்கள்? மதத்தின் பேரால், மொழியின் பேரால், சாதியின் பேரால்தான் எத்தனை எத்தனை மாச்சரியங்கள்? தொண்டு செய்வதன் பேரால் சுயலாப வேட்டைகள், ஊழல்கள், ஊதாரித்தனங்கள்…

இத்தனையையும் பற்றுக் களத்தில் புரட்டிய பின்னரும் நமக்குள்ளே ஒரு புது நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் மின்னல்கள், இடிமுழக்கங்கள் அண்மையில் நம் அரசியல் வானில் ஏற்பட்டுள்ளன.

ஒரு கட்சியே நாட்டை ஆளுவது எனும் பிடிமானம் தளர்ந்து வருகிறது. மற்றக் கட்சிகளையும் அவற்றின் கூட்டணிகளையும் பரிசோதனைக் களமாக்கலாம் எனும் நம்பிக்கை வாக்காளர்களிடையே உருவாகியுள்ளது. ஊழல் செய்தவர்கள், வரம்பு மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதிமன்றத்திற்கு – மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வர வேண்டும் எனும் உறுதியும் தளிர்த்து வருகிறது. குடியாட்சி என்பதை வெறும் கோபுர தரிசனம் போல உச்சி மட்டத்திலேயே நடத்தாமல், கிராமப் பஞ்சாயத்து கூட்டுறவு அமைப்பு முதலான அடித்தளங்கள் வரைமுறையாகக் கட்டியெழுப்பும் உண்மை ஜனநாயகம் மீண்டும் புலர்ந்து வருகிறது.

புலரும் பொன்விழா, அரசியல், சமுதாயப் பணித் தளங்களில் தொண்டாற்ற வருவோருக்கும் சில அரிய படிப்பினைகளையும் தந்துள்ளது. இவை புதிய படிப்பினைகள் இல்லை. வள்ளுவர் காலந்தொட்டே மதிக்கப்பட்டு வரும் பொது ஒழுக்கங்கள்தான் என்றாலும்கூட புதிய சூழலுக்கு ஏற்ப நாம் பொருள் கொள்ளுவது நல்லது. ஆட்சி செய்வோருக்கு வேண்டிய அடிப்படையான பண்புகளுள் மிக முக்கியமான இரண்டு: 1. தெரிந்து வினையாடல் 2. பெரியாரைத் துணைக்கோடல்.

தெரிந்து வினையாடல்

ஆட்சி செய்வோர் தம் நெறியில் கோணாது செயலாற்ற வேண்டும். அப்போதுதான் உலகும் கோணுதல் அற்று விளங்கும். உலக மக்களும் நேர்மையை மதித்து ஒழுகுவார்கள்; மரியாதை செய்வார்கள். ஆகவே ஆட்சி புரிவோர் மன்ன ராயினும், தலைமை அமைச்சர்கள் ஆயினும், கொள்கை வகுக்கும் அதிகாரிகள் ஆயினும், கோணாத குணத்திறம் கொண்டவர்களையே தேர்ந்து செய்கையில் ஈடுபடுத்த வேண்டும். இதனை நாள்தோறும் நாடிச் செய்ய வேண்டும்.

“நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

     கோடாமை கோடாது உலகு”        (520)

பெரியாரைத் துணைக்கோடல்

ஆட்சிக்கு அரணாக இருப்பது படை, பாதுகாப்பு, கோட்டை, அரண் ஆகியன மட்டுமா? இவை புறக்கருவிகள் மட்டுமே ஆகும். இவற்றிற்கு எல்லாம் மேற்பட்ட உள் அரணாகத் துலங்குவன பத்திரிகைகள், மாற்றுக் கட்சிகள், பொதுமக்கள் மனப்போக்கு, சான்றோர் ஆக்க நலம் என்பன.

‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ (குறள்:996) என வரையறுத்த வள்ளுவம் அத்தகைய பண்புடைய பெரியோரைத் துணை ஆக்கிக்கொளல் ஆட்சிக்கு ஆற்றல் தரும் அரண் என்கிறது. பெரியோரின் துணையினைத் துச்சமாகக் கருதி உதறிவிட்டு, தன்னிச்சைப் படியே நடப்பதானது ஒரே சமயத்தில் பலபேரின் பகையைத் தேடிக் கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை பயப்பது என்கிறது ‘பெரியோரைத் துணைக்கோடல்’ எனும் குறள் அதிகாரப் பாடல்.

“பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

 நல்லார் தொடர்கை விடல்”         (450)

நமது அரசுகள் அண்மைக் காலங்களில் பல நிலைகளில் சான்றோரைத் துணைக் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்பட்ட விபரீதங்களை நாம் அறிவோம். சட்ட மன்ற மேலவை எனும் மூத்தோர் அவையினை முடக்கியமையால் பலதுறைச் சான்றோர் வழி அமைப்பை ஆட்சி மன்றம் பெற முடியாமல் போன அவலத்தைக் கண்டோம்.

இப்போது புதிய வெளிச்சங்கள் தெரிகின்றன. மேலவை மீண்டும் வருவது மட்டுமில்லை. நமது தாயகத்துக்குப் பெருமைகள் எல்லாம் உதய ஞாயிற்று ஒளிக்கற்றைகளாக மீண்டும் பரவி வருவதும் நமக்கும் புலப்படுகின்றன. அத்தகைய பொன்விழாக் கீற்றுகள் உச்சிவானத்துப் பகலவனாக நிலவ, இச்சுதந்திர நன்னாளில் வாழ்த்துவோம். ஆட்சிக் கலை வித்தகங்களை ஆசான் வள்ளுவரிடம் கற்றறிவோம்.

 

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்!’

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்!’

Image result for shadow jump

உலகத்திற்குத் தமிழர்களை அடையாளம் காட்டி வான்புகழ் கொள்ள வைத்தவை, தமிழர்களின் நாகரிகமும், பண்பாடும், பழைமையான இலக்கியங்களும், குடும்பம் என்ற கட்டமைப்பும் ஆகும். தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைக்கும் ஆக்கத்துக்கும் நிலைபேற்றுக்கும் வழிகாட்டி வருவது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளும் விழாக்களும். அவ்விழாக் காலங்களில் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதன் மூலம் சகோதரத்துவத்தையும், நட்பையும், அன்பையும் விரிவாக்கிக் கொள்கின்றனர்; காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்துக் கொண்டு புதுமைச் சிந்தனை களை வழங்கி அன்பு நெறியாலும் அறிவு நெறியாலும் வாழ்வை நல்வழிப்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றனர்.

ஒவ்வொரு புத்தாண்டுப் பிறப்பின் போதும் தமிழர்கள் தங்களை மட்டுமல்லாது தாங்கள் பயன்படுத்தும் பொருட் களையும் தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர்; தங்களின் உயிர் வாழ்விற்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு நல்கி, வளர்த்து வரும் இயற்கைக்கும் அன்புடன் வளர்த்து வரும் விலங்குகளுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கின்றனர்.

புத்தாண்டு தொடங்கும் முதல் நாளே தமிழர்கள் பழைமைகளைக் கழிக்கின்ற விழாவாக எடுத்து வாழ்வினைப் புதுமையாக்கிக் கொள்கின்றனர்.

புறத்தூய்மையும், அகத்தூய்மையும் கொண்டு இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற இன்பநிலையை அடைகின்றனர்.

பேரலைகள் சுழன்றடிக்கும் பெருங்கடலில் பயணம் செய்யும் படகோட்டிகள் கை சலித்து மனம் உழன்று வருந்திய போது இருளில் ஒளி காட்டும் கலங்கரை விளக்கு கண்டு கரையேறுவர். அதுபோன்று போராட்ட உலகில் மனம் சலித்துத் துன்புற்று வாழும் மனிதர்களைக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கமாகத் திருக்குறள் விளங்குவது போல பண்டிகைகளும், விழாக்களும் மிளிர்கின்றன.

“புறம்தூய்மை நீரான் அமையும்; அகம்தூய்மை

 வாய்மையால் காணப் படும்”        (298)

எனும் வள்ளுவத்தின் வழியில் இந்தப் புத்தாண்டினைக் காமம், குரோதம், மன வேறுபாடு, மத வேறுபாடு போன்ற அறியாமையாகிய இருளிலிருந்து விடுபட்டு உண்மைப் பேரொளியைக் காணுகின்ற ஆண்டாகக் கொள்வோம்.

இப்புத்தாண்டு ஓர் அற்புத ஆண்டாகப் பிறக்கின்றது. 1.1.11 என்ற முறையில் எல்லாவற்றிலும் முதன்மை பெறப் போகிற ஆண்டாக மலர்கிறது.

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவ்வாறு நிகழும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இவ்வாண்டில் ஏழ்மை, பஞ்சம், பிணி இவைகளை நீக்கி வேளாண்மையிலும், தொழில்துறையிலும், அறிவியல் ஆற்றலிலும், ஆக்க சக்தி களிலும், பொருளாதாரத்திலும் முதன்மை பெற்று விளங்குவோம்.

நாம் வாழும் காலம் அறிவியல் உலகின் எழுச்சி, இணைய மலர்ச்சி, அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவுடையார் ஆவது அறிவார் என்பன மெய்ப்பிக்கப் பட்ட காலம். எது நிலைத்தது என்றால் நிலையாமை தான் நிலைத்தது, எது மாற்றம் இல்லாதது என்றால் மாற்றம் தான் மாற்றம் இல்லாதது. ஆதலால் நில்லாத உலகின் மாற்றத்திற்கு ஏற்ப, போராட்ட உலகத்திற்கு ஏற்ப நம்மை நாம் தகுந்தபடி மாற்றிக் கொண்டால் தான் நிலைத்து நின்று வெற்றி பெற முடியும்.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

     அவ்வது உறைவது அறிவு”           (426)

என்பது வள்ளுவம்.

காலத்திற்கு ஏற்றபடி அறிவியல் உலகின் போக்கை ஆராய்ந்து சூழலுக்கு ஏற்ப கல்வியும், அறிவும் பெற்று உடல் உழைப்பாலும் முயற்சியாலும் விழுமிய நிலைபெற்று உயர வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் கனவு 2020 ஆண்டில் நாம் வல்லரசு ஆவோம் என்பது.

அக்கனவு முதன்மை பெற்று மலரும் இப்புத்தாண்டில் தமிழர் வாழ்வில் நனவாக வேண்டும்.

“ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா!

     உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!

     ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்

     உதய ஞாயிறு ஒப்பவே வா வா வா!”

என்ற பாரதியின் கவிதை வரிகளைப் படிக்கும்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சியும், புதுத்தெம்பும், பழமை இருளில் இருந்து புதிய வெளிச்சத்திற்கு வந்தது போல ஓர் உணர்வும் எழுகிறது.

மொட்டவிழ்க்கும் மலர்களிலும், கொட்டுகின்ற அருவி யிலும், தீண்டிச்செல்லும் தென்றலிலும் மனத்திற்குப் பொலிவையும் புதிய அழகையும் அமைதியையும் காண் கிறோம். அதே நேரத்தில் கடல்களின் சீற்றமும், எரிமலை வெடிப்பும், சூறாவளிக் காற்றும் மனத்திற்கு துன்பத்தைத் தந்து அமைதியைக் கெடுக்கின்றன. இது இயற்கையின் நியதி. அதுபோல வாழ்க்கை என்பதும் போராட்டம் நிறைந்தது. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. அதில் வெற்றி களையும், தோல்விகளையும் மாறி மாறிச் சந்தித்துள்ளோம். இருவித அனுபவசாலிகள் நம்முள் வாழ்ந்து வருகிறார்கள். எப்படி இன்பத்தையும், வெற்றியையும் ஏற்றுக்கொள் கிறோமோ அதே போல் துன்பத்தையும் தோல்வியையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டால் மேலும் மேலும் வாழ்க்கையில் உற்சாகம் உண்டாகும்.

முதல்நாள் பட்டாபிஷேகம், மறுநாள் கானகம் செல்ல வேண்டிய நிலை. அப்பொழுது இராம பிரானின் மனநிலை எப்படி இருந்தது என்பதைச் சொல்ல வந்த கம்பர் “அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா” என்பார். அதுபோல் இன்பம் வரும் போதும், துன்பம் வரும் போதும் ஒரே நிலையில் முகமலர்ச்சியோடு இருக்கும் தன்மையினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் எண்ணங்கள் செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன. நாம் எண்ணாத எந்தச் செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. எண்ணம் தான் நம்பிக்கையை வளர்க்கிறது. நம்பிக்கையே வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

 திண்ணியர் ஆகப் பெறின்”          (666)

என்பார் திருவள்ளுவர்.

‘நீ உன்னை எவ்வாறு எண்ணுகிறாயோ அவ்வாறே மாற்றம் பெறுகிறாய். நீ உன்னை வலிமை படைத்தவனாக எண்ணினால் வலிமை பெற்றவனாக மாறுகிறாய்.’

நம் மனதில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையில் நேர்முகச் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டோம் என்றால் நமது பழைய எதிர்மறைச் சிந்தனைகள் மறைந்து  இன்று புதிதாய்ப் பிறந்தது போன்ற மாபெரும் புதிய சக்தி பிறக்கும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவு இருக்கும். அது நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொள்ளும் முயற்சியின் முடிவே வெற்றி. அதுவே இலக்கு. அதுவே குறிக்கோள். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத தோணி போல திசைமாறிப் போய்விடும். சென்றடைய வேண்டிய இலக்கினை அடைய முடியாது.

“பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதையர்தம்

     மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவோடு மூப்புவந்து

     கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்”

என வருந்துவார் அப்பர் சுவாமிகள்.

நமக்குள் நிறைவேறாத ஆசைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது. ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகம் இருந்தால் ஏமாற்றங்களும் அதிகம் இருக்கும். எந்த ஒன்றையும் எளிதில் அடைந்து விட முடியாது. அப்படி எளிதில் அடைந்து விட்டால் அதில் மகிழ்ச்சி இருக்காது. கடின உழைப்பில் கிடைக்கும் வெற்றியில் தான் மகிழ்ச்சியும் இன்பமும் இருக்கும்.

ஒரு கல்லில் தேவையில்லாத பகுதிகளை நீக்கி விட்டால் புதிய சிற்பம் கிடைக்கும். அதுபோல் நம்மில் உள்ள தேவையில்லாத குணங்களை நீக்கி விட்டால் அழகிய புதிய மனிதம் தோன்றி விடும். மனிதனுக்கு அரக்க குணம், தெய்வ குணம் என இரண்டு வித குணங்கள் உண்டு. கோபம், பொறுமை, நல்லவை, தீயவை என குணங்கள் இருப்பது இயற்கை. அதில் நல்லவைகளை ஏற்றுக் கொண்டு தீயவைகளை நீக்கி விட்டால் மனிதன் மனிதனாகி விடுகிறான். ஒவ்வொரு மனிதனும் பொறுப்புணர்வுடன் தேவையில்லாத பழமைகளை மறந்து, புதுப்பொலிவுடன் தன்னைத் தானே சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். நடந்தவைகளை எண்ணி வருத்தப்படாமல், நடக்கப் போவதை நினைத்துக் கவலைப்படாமல் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புதுப்பொலிவுடன் வாழ்க்கையைத் தொடங்குவோம்: பொய்ம்மைகளைப் புறந்தள்ளி வாய்மையின் வழி நடப்போம்,

மனதில் உறுதி வேண்டும்,

வாக்கினிலே இனிமை வேண்டும்,

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்,

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்,

காரியத்தில் உறுதி வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்.

 

பெற்றோர்களின் விழைவுகள்- & விருப்பங்கள்

பெற்றோர்களின் விழைவுகள்- & விருப்பங்கள்

 

Image result for family

மதுரையின் முன்னணிக் கல்வி நிலையங்களுள் ஒன்றாக வளர்ந்து வரும் மகாத்மா பாண்டிச்சேரி உயர்கல்வி நிலைய முதல்வரும், புகழார்ந்த குழந்தை நோய் மருத்துவ நிபுணரும், சமூகச் சிந்தையருமான டாக்டர் ரிகிரி அவர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்க வந்திருக்கின்றார்.

‘பெற்றோர்களின் விழைவுகள் – விருப்பங்கள்’ எனும் தலைப்பில் நான் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். மதுரை  க்ஷி.ரி.ரி. மெட்ரிகுலேசன் பள்ளி, பம்மல் மீனாட்சி பாலிடெக்னிக் முதலிய கல்வி நிலையங்களின் தாளாளர் எனும் நிலையில் நான் கண்டுணர்ந்த அனுபவங்களை இங்கே சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

மகாத்மா காந்தியடிகள் நமது நாட்டிற்கு உகந்த கல்வி முறையைத் தமது நிர்மாணத் திட்டங்களில் ஒன்றாக வகுத்துத் தந்தவர்; ‘கல்வி என்றால் வளர்ச்சி’ என ஒரு தொடரில் விளக்கியவர்.

ஆம்… கல்வி என்றால் வளர்ச்சி! எதன் வளர்ச்சி? மனம், உடல், ஆன்மா எனும் மூன்றின் ஒருங்கிணைந்த, ஒத்த, பரிபூரணமான வளர்ச்சியே கல்வி. கல்வி என்றால் செலவு என மட்டும் பொருள் இல்லை. கல்வி என்பது இன்று கைவிட்டுச் செலவிடுவது போலத் தோன்றும் நாளைய முதலீடு. தமது பிள்ளைகளின் கல்விக்குச் செலவிடுவதன் மூலம், அவர்களை நாளையது சமுதாயத்திற்குப் பயன்தரும் நிறுவனங்களாக, நிலைக்களன்களாக ஆக்கிடப் பெற்றோர் வழியமைக்கின்றனர்.

பிள்ளைகளுக்கு உரிய கல்வி வளர்ச்சியைத் தருவதில் பலருக்குக் கூட்டுப்பொறுப்பு உண்டு. பெற்றோர் – ஆசிரியர்- சமூகம் எனும் இந்த முக்கோணத்தின் அடித்தளமாக இருக்க வேண்டிய பொறுப்புடையோர் பிள்ளைகளைப் பெற்றவர்களே ஆவர்.

‘பிள்ளைகளின் முதல் ஆசான்கள் பெற்றோர்களே’ எனக் காந்தியடிகள் ஆணித்தரமாகக் கூறினார். நம் நாட்டில் பெற்றோர் அண்மைக் காலங்களில் இந்தப் பொறுப்பை அதிகம் உணர்ந்தே வருகின்றனர். சாதாரணத் தொழிலாளி, விவசாயி கூடத் தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி தரவேண்டும் என்று வரிந்து கட்டி வருவது பரவலாகத் தெரிகிறது. நம் நாட்டின் வளர்ச்சி நிலையிலும், சமூக நல மாற்றங் களிலும் உருவாகி வரும் போட்டிகளிலும் நிலை கொள்ள வேண்டுமானால் எதிர்காலச் சந்ததியாக இன்று வளரும் தமது மக்களுக்குத் தரமான கல்வி தர வேண்டும் என்று தலைப்பட்டு நிற்பது அதிகரித்து வருகிறது.

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

     மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.”      (68)

என்றபடி தம்மைவிடத் தம் மக்கள் அறிவில் மேம்படுவதைப் பெற்றோர் பெருமையாக நினைப்பர். தம்மை விட உழைப்பிலோ, வருமானத்திலோ, அறிவாக்கத்திலோ, சமூகத்தளத்திலோ உயர்ந்து நிற்பதைக் காணும் எந்த ஒரு மனிதனுக்கும் மனத்தில் பொறாமை ஏற்படுவது இயல்பு; தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் அவர்களே தம் பிள்ளைகள் உயர்வதையும் மேம்படுவதையும் காணும் போது பூரித்து மகிழ்வார்கள்.

எனவே தம்மை விட தம் பிள்ளைகள் மேம்பட்டு நிற்கவேண்டும் எனப் பெற்றோர் ஆசைப்படுகின்றனர். வளர்முக நிலையில் உள்ள நம் நாட்டில் வாய்ப்புக்களைப் பெறுவதில் போட்டிகள் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் பெற்றோர் தம் பிள்ளைகளைச் சின்ன வயதிலிருந்தே பந்தயக் குதிரைகளைப் போலத் தகுதிப்படுத்தி வளர்க்கத் துடிக்கின்றனர்.

இன்று +2 படிக்கும் பிள்ளைகளையும் அவர்கள் பெற்றோர்களையும் பாருங்கள். அந்த ஆண்டு முழுவதும், தொழிற்கல்வித் தேர்வு முடிவுகள் வரும் வரை – இருவர் மனத்திலும் இடையறாத கவலையும் போராட்டமுமே நிலவக் காணுகிறோம் இல்லையா? ஏனென்றால் +2 வகுப்பில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் எல்லாம் தமது பிள்ளைகள் டாக்டராக, எஞ்ஜினீயராக, ஐ.ஏ.எஸ்.ஸாக, விஞ்ஞானியாக எப்படியாவது வந்தாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்; அவதிப்படுகிறார்கள்; அலைகிறார்கள்; தம் பிள்ளைகளையும் அலைக்கழிக்கிறார்கள். சிறிய வகுப்பிலேயே வீட்டுப் பாடச் சுமைகள், ‘கிssவீரீஸீனீமீஸீt’ எனும் பெயரில் பிள்ளைகள் மீது சுமத்தப்படுகின்றன. துள்ளித் திரிகின்ற பிராயத்திலே அவர்கள் பொதிமாடு போல ஆகிறார்கள். பெற்றோர் 15 வருடங்களாகப் படித்தறிய முடியாதவற்றை எல்லாம், பிள்ளைகள் 5 ஆண்டிற்குள் கற்றாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இளமையிலேயே சோர்வுக்கு உள்ளாகும் பிள்ளைகள் வாழ்க்கையில் தோல்விக்கே தம்மைத் தயாரித்துக் கொள்கிறார்கள்.

ஆசைப்படுவதில் தவறில்லை. உள்ளுவதெல்லாம் உயர்வாக உள்ளுவதில் எல்லோர்க்கும் உரிமை உண்டு. ஆனால் என்ன நடக்கிறது என்றால்… எல்லாப் பிள்ளைகளாலும் பெற்றோர்களின் இந்த ஆசையை நிறைவேற்றி வைத்துவிட இயலுவதில்லை. ஏனென்றால், எல்லோரும் விரும்பியபடி பாடமும் படிப்பும் பெற நம் நாட்டில் வாய்ப்பில்லை. இதனால் பெற்றோர்க்கு ஏமாற்றமும் பிள்ளைகளுக்குத் தோல்வி வேதனையும் ஏற்பட்டு, இயல்பான வளர்ச்சியை ஊடறுத்து விடுகிறது.

எனவே தம் பிள்ளைகள் டாக்டராக, எஞ்ஜினீயராக வேண்டும் என ஆசைப்படும் பெற்றோர் தம் ஆசைக் கனவுகள், விழைவு விருப்பங்கள் ஆகியவற்றை எல்லாம் தமது பிள்ளைகள் மீது குருவி தலையில் பனங்காய் வைப்பது போலச் சுமத்தாமல் – கூந்தலுக்குப் பூ முடிப்பது போல இதமாக, பதமாக, இயல்பாக, பொருத்தமாக, உருவாக, உருவாக்க முற்பட வேண்டும். இயல்பான திறமை, முறையாக வளர்வதற்கும் வளம் பெறுவதற்குமே வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும். பிள்ளைகளை எல்லாம் டாக்டர்களாக்கி, மதுரை எங்கும் ளிக்ஷீவீமீஸீtணீறீ  மருத்துவமனைகளைக் கட்டி விட்டால், மதுரை மக்களின் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைத்துவிடுமா…?

அதுபோலத்தான் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உண்டு. வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு ஏற்கவும், எதிர்நீச்சலிட்டுக் கரையேறவும் வழியமைப்பதே சரியான கல்விமுறை; சீரான கல்வி நெறி; சிறப்பான கல்வித் திட்டம். காந்தியடிகள் இதனை ‘வாழ்க்கைக் கல்வி’ என்றார். அதாவது வாழ்க்கையிலிருந்து கல்வி, வாழ்க்கை மூலம் கல்வி, வாழ்க்கைக்காகக் கல்வி என்றார். பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் நாட்டம் கொள்ளும் நடைமுறைக் கல்வியே தேவை என்றார்.

கல்வியின் தலையாய நோக்கம் அறிவைத் தருவது மட்டுமில்லை. நல்ல மக்களாக வளர்ந்திட உதவும் பண்பாக்கமே கல்வியின் இலட்சியம். ஒரு நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக, சமுதாயப் பொறுப்பு உடையவனாக, தானும், தன் துறையும் வளர்ந்து, தான் வாழும் சமுதாயத்தையும் உயர்த்த, உழைக்க, உதவக்கூடியவனாக உருவாக்க முற்படுவதே கல்வியின் செயல் முறை.

இன்று நம் குழந்தைகளைப் புத்தகப் புழுக்களாகவே ஆக்கும் முயற்சியில் தலைப்பட்டு, அவர்களைச் சமுதாய, குடும்ப நடைமுறைகள் தெரியாத தனித்தீவுகளாக வளர்த்து வருகிறோம். நம் குழந்தைகளிடம்  இயல்பாக வளரும் மன உணர்வுகளையும், சிந்தனைக் கூறுகளையும் அதனதன் போக்கில் வளர விட மாட்டோம் என்கிறோம். கலைத் துறையில், விளையாட்டில், சமுதாயத் தொண்டில், நல்ல நட்புறவில் எல்லாம் நம் பிள்ளைகள் நாட்டம் கொள்ளும் போதெல்லாம் தடுத்து அணைபோடுகிறோம். நடைமுறை உலகும், யதார்த்தமான பழக்க வழக்கங்களும் அவர்களுக்கு அன்னியமாகப் போகும் அளவுக்குக் கூண்டுக்குள், ஆசைக் கோட்டைக்குள் வைத்தே வளர்க்கிறோம். படித்து முடித்த பின்னர் நம் பிள்ளைகள், வாழ்க்கை நீச்சல் தெரியாதவர்களாக, தரையில் போடப்பட்ட மீன்களாக, சிறகிழந்த பறவை களாக, தொட்டியில் ஆசைக்கு வளர்க்கப்படும் குரோட்டன் செடிகளாக, அலமாரியில் உள்ள அலங்காரப் பொம்மைகளாக இருப்பதைக் காணும் போது, நாம் செய்த நடைமுறைப் பிழைகளை மறந்துவிட்டு ஆத்திரப்படுகிறோம், அவசரப் படுகிறோம்; சபிக்கிறோம், சபித்துக் கொள்கிறோம்.

ஓர் உதாரணம்: நம் வீட்டிற்கு வரும் பெரியவரை நாம் வீட்டில் இல்லாதபோது வரவேற்று உபசரிக்க, இங்கிதமாக அவரிடம் நடந்து கொள்ள நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறோமா? வெளியில், வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் பெரிய மனிதர்களிடம் தக்கவாறு அறிமுகம் செய்து வைத்து, இந்த அறிமுகக் கலையைத் தங்களின் அனுபவக் கலையாக்கிக் கொள்ள வித்திட்டிருக் கிறோமா?

‘பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் முதல் ஆசிரியர்’ எனக் காந்தியடிகள் உபதேசமாகவா சொல்லியுள்ளார்? முதன்மை ஆசிரியர்களாக எப்போதும் வழிகாட்ட வேண்டியவர்கள், வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள் என்றுதானே வலியுறுத்தியுள்ளார்? பிள்ளைகளைச் சினிமா பார்க்கப் போகக்கூடாது என்று கண்டித்து வீட்டில் கண்விழித்துப் பாடம் படிக்கக் கட்டாயப் படுத்திவிட்டு இரவு இரண்டாம் காட்சி திரைப்படம் பார்க்கப் போகும் பெற்றோர்; பையனைக் கடைக்கு அனுப்பி மதுபானம் வாங்கிவரச்சொல்லி வீட்டில் பிள்ளைகளின் முன் அமர்ந்து போதை ஏற்றிக்கொண்டு, பையனை மட்டும் சரியான பாதையில் நடக்குமாறு புத்திசொல்லும் அப்பன்மார்; தீமைகளையும் ஒழுக்கக்கேட்டையும் தமது சொந்தமாக்கிக் கொண்டு, பையனை மட்டும் ஒழுங்காய் இருக்குமாறு உபதேசிக்கும் குருமார்…. இப்படி எத்தனை விதமான முரண்பாடுகளின் இடையே நம் பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம். ‘ஆற்றுப்படுத்துதல்’ என்பது தமிழில் உள்ள பழமையான இலக்கிய உத்தி மட்டுமல்ல; இனிய வாழ்க்கை முறையும்கூட. ஆற்றைக் கரைகோலி, அணைமேவி நடத்துதலைப் போல, தம் பிள்ளைகளையும் அறிவுகோலி, அன்பு மேவி நடத்துவதே, தானே முன்னோடியாக வாழ்ந்து காட்டுவதே ஆற்றுப்படுத்துதல்.

அறிவு என்பது நினைத்தவுடன் வாங்கிச் சேர்க்கும் பொருள் இல்லை. அவரவர் இயல்பிலே தோன்றி, முறையாக, வளர்ந்திட, வளர்க்கப்பட வேண்டிய ஒரு தரு. சிறு வித்து வளர்ந்த மரம் ஆவது போல, பிள்ளைகளிடம் உள்ள இயல்பே அறிவாக, ஆக்கமாக பரிணமிக்கிறது. இந்த இயல்பை இனம் கண்டு ஊக்குவதே பெற்றோர் பொறுப்பு. அறிவோடு வாழ்க்கை அனுபவமும், கல்வியோடு ஒழுக்கமும் ஊடும் பாவும் போல அமைந்திட அறிவும் அனுபவ ஆக்கமும் சமநிலையில் ஒருவரிடம் உருவாகிப் பெற்றோர் ஆற்ற வேண்டிய பங்கு, ஆசிரியனுடைய பொறுப்பை விட அதிகம், மிக அதிகம்.

பிள்ளைகளைப் பள்ளியில் பணம் கட்டிச் சேர்ப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டது, பையன் தானாக வளர்ந்து விடுவான் என நினைக்கக் கூடாது. வேம்புச்செடியை நட்டுவிட்டுத் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதுமா? செடி வளர்கையில் ஆடுமாடு கடிக்காமல் சுற்றி அதற்கு வேலி போடுவதும், அது நன்கு உயரும்வரை காப்பதும் கடமையல்லவா? பெற்றோர்கள் வேலி போடவும் வேண்டும், விருப்பம்போல வளர்ந்து உயர்ந்திட உதவவும் வேண்டும்.

தம் பிள்ளைகள் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, வாழ்க்கை எனும் போராட்டச் சரிவுகளுக்கு உதவி தேடுவதற் காகவும் நல்ல புத்தகங்களை வாங்கித் தருவது பெற்றோர் பொறுப்பே ஆகும். அறிவு, பண்பாடு, சமுதாய ஒழுக்கம், தார்மிகப் பண்பு முதலியன. காலப்போக்கில் கனிந்திட நூலறிவும் நுண்மாண் நுழைபுலமும் உதவும்.

மேலைநாடுகளில் கல்வி இன்றும் முன்னிடம் பெற்றுள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டு மேலை ஆதிக்கத்திற்குக் கல்விமுறை தளம் அமைத்தது. மனிதனை நிலாவுலகில் கொண்டு சேர்த்த அதே கல்வி முறை – அங்கு இன்றும் புதிய யுகத்திற்குப் பாதை அமைத்து வருகிறது. பிள்ளைகளின் விருப்பங்களையும் வளர்ச்சி முறைகளையும் சீர்தூக்கும் கல்வி முறையைப் பெற்றோர்அளிப்பதால் முதிர்ச்சியிலும் தன்னம்பிக்கையிலும் பிறந்தவர்களாக இளந்தலை முறையினர் அங்கே வருகிறார்கள், வளர்கிறார்கள். பெற்றோரையே, குடும்பத்தையே, அரசாங்கத்தையே முற்றிலும் நம் பிள்ளை களைப் போலச் சார்ந்திராமல், தமது சுய உழைப்பிலும் தொழில் முனைப்பிலும் ஆர்வம் உள்ளவர்களாக உயர்கிறார்கள்; வரலாறு படைக்கிறார்கள்.

நம் நாட்டில், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, ‘உன்னால் முடியும் தம்பி!’ என நம் இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டும் இயக்கத்தினை, விடாமல் நம்பிக்கையுடன் நடத்திவருகிறார். நம் பிள்ளைகள் அத்தகைய நம்பிக்கை யூட்டும் நல்ல தலைவர்களைப் பின்பற்றுமாறு பெற்றோர் வழியமைக்க வேண்டும். தக்கவழியமைப்பு இன்மையால், நம் பிள்ளைகள் யார் யாரை எல்லாமோ தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, திசைமாறிப் போகிறார்கள். தம்மைப் பெற்ற, பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்கத் தயங்கும் இவர்கள், யார் யார் இருக்கும் திசை எல்லாமோ திரும்பி, அங்கப் பிரதட்சணம் செய்யவும் தயாராக உள்ளார்கள். நம் பிள்ளைகளிடையே தவறான மதிப்பீடுகள்  (கீக்ஷீஷீஸீரீ க்ஷிணீறீuமீs) ஏற்பட யார் காரணம்? பெற்றோராகிய நாமும் ஒருவகையில், பலவகையில் காரணம் அல்லவா?

பிள்ளைகளுக்கு உரிய முதல் தலைவர் பெற்றோர். அடுத்த நிலைத்தலைவர் ஆசிரியர், மூன்றாம் நிலை சமூகப் பெரியோர். இந்தப் படிமுறையை உருவாக்குவது பெற்றோர் பொறுப்பே ஆகும்.

‘அவையத்து முந்தியிருப்பச் செயல்’ (குறள்:67) மட்டுமின்றி ‘இவன் தந்தை என்நோற்றான் கொல்!’ (குறள்:70) எனப் பெற்றோர் புகழ் பெற வேண்டுமானால், அந்தப் புகழுக்குத் தம்மை இலக்காக்கிக் கொள்வது பெற்றோரையே சார்ந்தது. அதை விடுத்து தம் எல்லையற்ற ஆசைகளை ஏற்றும் சுமைதாங்கிகளாக மட்டும் பிள்ளைகளை ஆக்குவது நியாயமா? அது எக்காலத்தும் நிலை பெறுமா?

இந்தக் கல்வி யுகத்தில் நம் நாட்டில் கல்விப் பொறுப்பைப் பெற்றோரே ஏற்க வேண்டியுள்ளது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என வாய்ப்புக்களை வாரி வழங்க முடியாத நம் நாட்டில்- இட ஒதுக்கீடும்  இடையறாத போராட்டமும் மண்டி வரும் நம் நாட்டில், நம் விழைவுகளை மட்டும் பிள்ளைகள் மீது சுமத்தாமல், அவர்களது விருப்பங்களையும் புரிந்து செயல்படப் பெற்றோர் முனைய வேண்டும். வசதி உள்ளவர்கள் செல்வச் செழிப்பால் தம் பிள்ளைகள் போக்கில் போகவிட்டு விட்டு அவர்கள் சீரழிவது கண்டு, சிந்தை நோகின்றனர். பெற்றோர் தரும் பண வசதியால், அரிய பொருள்களை எல்லாம் எளிதில் அடையப்பெறும் பிள்ளைகள், சுலபமாக அடைய முடியும் எனக் கனவு காணும் பிள்ளைகள் சொகுசு வாழ்க்கைக்கே, முயற்சியற்ற போலி வாழ்க்கைக்கே தம்மைத் தயார்ப் படுத்திக் கொள்கிறார்கள். இதனைப் போல, படியாத, பாமர, நடுத்தர நிலைப் பெற்றோரால் செய்ய முடியுமா? தாம் தேடி வைத்த செல்வம், தம் பிள்ளைகளைக் காப்பாற்றி விடும், படிப்பு இல்லாவிட்டால் பரவாயில்லை என நினைத்து விடுகிறார்கள். தொழிலாயினும் வணிகமாயினும் இக்காலத்தில் கல்வி, நுட்ப உணர்வு ஆகியன உடையார்க்கே வளர்ச்சிநிலைகளைத் தருகின்றன. நம் பணக்காரப் பெற்றோர் இதனை நினைவிற்கொண்டு, தம் வசதியை நன்கு பயன் படுத்தித் தரமான கல்வி தர முற்படவேண்டும். வளர்ந்துள்ள பல பெரிய தொழில் நிறுவனங்கள், தமது அடுத்த தலை முறையினர் மீது காட்டும் பரிவும், பயனுள்ள முயற்சியும் நமக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும்.

“பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?

     பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?”

என்பது பழையதொரு திரைப்பாடல். ‘பேணி வளர்க்க வேண்டும்’ எனும் தொடரிலேயே பெற்றோர்கள், தம் பிள்ளைகளைப் பொறுத்தவரை பேண வேண்டிய விருப்பங் களும் விழைவுகளும் பொதிந்துள்ளன. அத்தகைய பொறுப் பறிந்த உள்ளமுடைய பெற்றோர் வாழ்க! வள்ளுவர் கூறிய நோன்புப் பயனை அடைந்திடுக.