சிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்களின் ஆட்சி

 

Image result for thirukkural

உலக மக்களின் ஒப்பற்ற வழிபாட்டு நூலாகவும், வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலாகவும் பொதுமை நூலான திருக்குறள் போற்றப்பட்டு வருகிறது.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

எனப் பாரதியார் பாடியது வெறும் புனைந்துரை அல்ல. வள்ளுவரது நெஞ்சமும் உலகோர் வாழ்வியல்பும் ஒரு தராசில் சம எடையாக நிறுத்தளந்தது போல் ஒரு சீராக நிற்பதைக் கண்டறிந்து கூறிய மெய்யுரை இது.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால்

     இல்லாத எப்பொருளும் இல்லையால்”

எனும் திருவள்ளுவமாலையின் கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் வள்ளுவர் கூறிய திருக்குறள் கருத்துக்களைப் பின்னர் வந்த தமிழ்ப்புலவர் அனைவரும் தத்தம் நூல்களில் எடுத்தாண்டுள்ளனர். அந்நூல்களுக்கெல்லாம் வழிகாட்டிய முதல் நூலாகத் தோன்றிய நூல் திருக்குறள். திருவள்ளுவர் வகுத்துத் தந்த வழியினைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள், இலக்கியங்கள், காப்பியங்கள் தோன்றின என்பது தமிழ் ஆய்வாளர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழியில் தோன்றிய முதல் தமிழ்க் காப்பியம் என்றும், இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் முத்தமிழ்க் காப்பியம் என்றும், குடிமக்கள் காப்பியம் என்றும் போற்றப்படும் நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தமது காப்பியத்தின் போக்கில் ஆங்காங்கே திருவள்ளுவரின் கருத்துக்களை விதைத்து அவற்றைக் கற்பக மரமாக வளர்த்துள்ளமை நன்கு புலனாகின்றது.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்

     உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

     ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

     சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்

     சிலப்பதி காரம் என்னும் பெயரால்

     நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்.” (பதிகம்:55&60)

பாண்டிய மன்னன் தான் செய்த தவறுக்காக வருந்தி இறப்பது ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதைக் காட்டுகிறது. அரசியல் நெறி தவறி ஆட்சி புரிபவர்களைத் தரும தேவதையே தண்டிக்கும்.

மங்கல வாழ்த்து முதல் வரந்தரு காதை வரை கண்ணகியை பத்தினித் தெய்வமாக்கிக் காட்டுகிறார் இளங்கோவடிகள் கற்பரசிகளைச் சான்றோர் போற்றிப் பரவுவர், கோயிலும் எழுப்புவர் என்பது ‘உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்’ என்பதால் பெறப்படுகிறது.

Image result for kovalan madhaviகோவலன் மாதவியைப் பிரியும் போதும், கோவலனும் கண்ணகியும் புகார் நகரை விட்டுப் பிரியும் போதும், கொலைக் களத்தில் கோவலன் உயிர் பிரியும் போதும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது மெய்யாகிறது. மதிக்கும், விதிக்கும் நடக்கும் போரில் விதியே இறுதியில் வெல்கிறது.

சிலப்பதிகாரத்தின் நோக்கங்களும், இளங்கோவடிகளின் அடிப்படைக் கொள்கைகளும் இம்மூன்று உண்மைகளே! காப்பியத்தின் நோக்கமாகவும், குறிக்கோளாகவும் சுட்டப்படும் மூன்று உண்மைகளிலும், அறம், கற்பு நெறி, ஊழ்வினை எனும் கருத்துக்களே வலியுறுத்தப்படுகின்றன. இந்த மூன்று உண்மைகளை நிறுவுவதற்கு இளங்கோவடிகள் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் கருத்துக்களையே தோன்றாத் துணையாகக் கொண்டு தமது காப்பியப் பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

திருவள்ளுவரின் கருத்துக்கள் இந்த மூன்று நிலைப் பாடுகளில் எவ்வகைகளில் எல்லாம் துணை நிற்கின்றன என்பதை அறிய முயல்வோம்.

செங்கோன்மை என்பது நல்ல முறையில் ஆட்சி செய்தல். ஒரு வழக்கை நன்கு ஆராய்ந்து ஒரு பக்கமே அன்பு செலுத்தி சார்ந்து விடாமல் நடுவுநிலைமையுடன் இருந்து சாட்சிகளைத் தீர விசாரித்த பிறகு தீர்ப்பு வழங்குவது செங்கோன்மை ஆகும். அது நல்ல ஆட்சி முறைக்குச் சிறந்ததும் ஆகும்.

“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

     தேர்ந்துசெய் வஃதே முறை”          (குறள்:541)

எனும் வள்ளுவரின் கருத்து சிலம்பில்,

“சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி,

     ஊர்காப் பாளரைக் கூவி ஈங்குஎன்

     தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு

     கன்றிய கள்வன் கையது ஆகில்

     கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கு”

(சிலப்பதிகாரம்:16:149&153)

என வேறு சொற்களில் கூறப்பட்டுள்ளது.

வேம்பு சூடிய பாண்டிய மன்னன் சிறிதும் ஆராய்ந்து பாராதவனாகி காவலரைக் கூவி அழைத்து ‘அக்கள்வனைக் கொன்று அச்சிலம்பை இங்குக் கொணர்க!’ என்றான். இங்கு ஒரு மன்னன் தீர விசாரிக்காமல் கூறிய வார்த்தைகளால் நீதி தவறி விட்டான் என்பது புலனாகிறது.

ஆடல் மகளிரின் ஆடல் பாடல் கண்டு சுவைத்துக் கொண்டிருந்த பாண்டியனின் நிலை கண்டு கோப்பெருந்தேவி தலைநோவு எனக் காரணம் காட்டி ஊடலினை வெளிப்படுத்தாது அவையை விட்டு அகன்றாள். அரசியை அவையில் காணாது பாண்டியன் அரசியின் ஊடல் தணிக்க அந்தப்புரம் சென்று கொண்டிருந்த வேளையில் பொற்கொல்லன் தனது சாமர்த்தியத்தால் சாதுரியமாகக் கோவலன் மீது குற்றம் சாட்டி நிற்க, அந்த நேரத்தில் தான் செல்லும் அவசரத்தில் ஆராயாது பாண்டியன் கூறிய வாய்மொழி நீதி தவறச் செய்தது.

Image result for pandian kannaki

“எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

     தண்பதத்தான் தானே கெடும்”  (குறள்: 548)

அரச தர்மம் என்று கருதப்பட்ட தன்மையுடன் ஆராய்ந்து நீதிநெறி செலுத்தாத மன்னன் தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான் என்பது வள்ளுவம் வகுத்துள்ள நீதிநெறி. இதே கருத்தினை வலியுறுத்தும் வகையில் சிலம்பில் வழக்குரை காதைப் பகுதியில் பாண்டியனின் சால்பை விளக்குகின்ற நோக்கில் கூறப் பட்டுள்ள வெண்பா இது:

“அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம்ஆம் என்னும்

     பல்லவையோர் சொல்லும் பழுதன்றே!” (1)

என இங்கே வள்ளுவம் எடுத்தாளப்பட்டுள்ளது.

அறம் அல்லாதவைகளைச் செய்தவர்களுக்கு அறமே கூற்றாக அமையும், அறமே எமனாக இருந்து தண்டிக்கும் என்று ஆன்றோர்கள் கூறும் சொற்கள் பொய்யல்ல.

“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

     செல்வத்தைத் தேய்க்கும் படை”   (குறள்: 555)

மன்னனின் ஆட்சிக் கொடுமையைத் தாங்க முடியாது குடிமக்கள் அழுது வடிக்கும் கண்ணீரே அந்த ஆட்சியை (அரசனை) அழிக்கும் கருவியாகும்.

“அல்லல்உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டுஏங்கி

     மல்லல் மதுரையார் எல்லாரும் தாம்மயங்கிக்

     களையாத துன்பம்இக் காரிகைக்குக் காட்டி

     வளையாத செங்கோல் வளைந்தது இதுஎன்கொல்?”

(சிலப்பதிகாரம்:19:15&18)

துன்புற்று ஆற்றாது அழுது புலம்பும் கண்ணகியைக் கண்டு ஏங்கி மதுரை நகர் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். நீக்க முடியாத துன்பத்தினை இக்காரிகைக்குச் செய்து எக்காலத்தும் வளையாத மன்னவனின் செங்கோல் வளைந்ததே என எண்ணித் துன்புற்றனர்.

இங்கு, ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரின்’ பதிவே சிலம்பில் ‘அல்லல் உற்று ஆற்றாது அழுவாளே’ என்பது.

“இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

 உறைகடுகி ஓல்லைக் கெடும்”  (குறள்: 564)

மக்கள் கூறும் தீச்சொல்லுக்கு ஆளாகும் வேந்தனுடைய வாழ்நாளும் குறையும். செல்வமும் விரைந்து கெடும்.

வழக்குரை காதையில் பாண்டிய மன்னனைப் பார்த்து கண்ணகி ‘தேரா மன்னனே!’ என்று விளிப்பாள். ‘ஆராய்ச்சி இல்லாத மன்னவனே’ என்பது இதன்பொருள். இறைகடியன் என்னும் இன்னாச்சொல். அச்சொல் வலிமைபெற்று பாண்டிய மன்னனைத் தன் ஆட்சிக்கு ‘என்னால் தவறு நேர்ந்து விட்டதே’ எனக் கதற வைத்து,

“யானோ அரசன்? யானே கள்வன்!

     மன்பதை காக்கும் தென்புலம் காவல்

     என்முதல் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள்!”

(சிலப்பதிகாரம்:20:75&77)

எனத் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு உயிர் துறக்கச் செய்தது. ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் (அறம்) நின்று கொல்லும்’ எனும் பழமொழியும் நோக்கத்தக்கது.

அறம் வலிமையுடையது. அதனால் தான் வள்ளுவர் அறனை வலியுறுத்திப் பேசுவார். மனிதராகப் பிறந்திட்ட அனைவரும் அற வாழ்க்கையினை மேற்கொண்டால் துன்பம் இல்லை. மனதில் குற்றமில்லாதவனாக இருத்தலே சிறந்த அறம் என்பார் வள்ளுவர். பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு குற்றங்களையும் நீக்கிச் செய்யப்படும் செயல்களே அறமாகும். இத்தகைய அறம் நாட்டினை ஆளுகின்ற மன்னனுக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. மக்கள் தவறு செய்தால் மன்னனிடம் முறையிடலாம். மன்னனே தவறு செய்தால் யாரிடம் முறையிடுவது? என்ற வினாவிற்கு விடையாக அமைவது அறம் அவ்வேலையை செய்யும் என்பதே. மன்னவன் தவறு செய்தால் அறமே கூற்றாக மாறித் தண்டித்து விடும். இக்கருத்துக்களை வலியுறுத்தியே இளங்கோவடிகள் ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதனை வள்ளுவரின் துணை கொண்டு நிறுவுகிறார்.

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு”      (குறள்:32)

“உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்”

என்பது சிலம்பின் இரண்டாவது நோக்கம்.

போக நீள் புகழ் மன்னும் புகார் நகரில் வான்நிகர் வண்கை மாநாய்கனின் குலக்கொம்பாகத் தோன்றியவள் கண்ணகி. திருமகளைப் போன்ற வடிவமும், அருந்ததியின் கற்பை ஒத்த திறனும் உடையவள் என அறிமுகப்படுத்து கிறார் இளங்கோவடிகள். கணவனையே தெய்வமாகத் தொழக்கூடியவள் அவள்.

கனாத்திறம் உரைத்த காதையில் தேவந்தி கண்ணகியை நோக்கி ‘தாழை மலர் மணம் பரப்பும் நெய்தல் நிலத்துச் சோலையில் சோமகுண்டம், சூரியகுண்டம் எனும் இரு பொய்கைகள் உள்ளன. அப்புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி காமவேள் கோட்டம் சென்று காமதேவனைத் தொழும் மகளிர் இம்மையில் தம் கணவருடன் கூடிப் பிரியா வாழ்வு வாழ்ந்து இன்புறுவர். எனவே நாமும் ஒரு நாள் அவற்றில் நீராடுவோம்’ என்றாள். அதுகேட்ட கண்ணகி, அங்ஙனம் துறைமூழ்கித் தெய்வம் தொழுதல்.

“பீடு என்று”           (சிலப்பதிகாரம்:9:64)

என்று கூறி தேவந்தியின் கருத்தினை ஏற்க மறுத்தாள். கணவனைத் தெய்வமாகத் தொழக்கூடியவர்கள் மற்றைய தெய்வங்களைத் தொழ வேண்டியதில்லை என்பதனைக் கண்ணகி வாயிலாக உணர்த்துவதைக் காண்கிறோம்.

“தெய்வம் தொழாஅள். கொழுநன் தொழுதுஎழுவாள்

 பெய்எனப் பெய்யும் மழை”         (குறள்: 55)

என்பது வள்ளுவம்.

‘வேறு தெய்வங்களைத் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கருதி தொழுது உறக்கத்திலிருந்து கண்விழிப்பவள் பெய் என்றால் மழை பெய்யும்’ எனும் கருத்தினை உணர்த்தும் வகையில் மதுரைக் காண்டத்தின் இறுதியில் வரும் வெண்பா வருமாறு;

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்

     தெய்வம் தொழும்தகைமை திண்ணிதால் & தெய்வமாய்

     மண்ணக மாதர்க்கு அணியாய் கண்ணகி

     விண்ணகமா தர்க்கு விருந்து”

மண்ணக மகளிர்க்கெல்லாம் அணி போன்றவளான கண்ணகி தெய்வமாகி விண்ணக மகளிர்க்கு விருந்தாயினள். வேறு தெய்வத்தைத் தொழாது தன் கணவனைத் தொழுவாளைத் தெய்வமும் தொழும்.

“வானம் பொய்யாது வளம்பிழைப்பு அறியாது

     நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது

     பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு”

Image result for kovalan kannagi

(சிலப்பதிகாரம்:15:145&147)

கணவனைத் தெய்வமாகத் தொழுது எழும் பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில் பருவமழை தவறாது, நிலவளமும் குன்றாது, பெரிய நிலப்பரப்பை ஆளும் வேந்தரின் வெற்றியும் சிதையாது என்ற சிலம்பின் பகுதிகளில் திருக்குறள் கருத்துக்கள் நிலைபெற்று பத்தினிப்பெண்டிரின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. கோவலன் கண்ணகியை ‘கற்பின் கொழுந்தே’ எனப் பாராட்டுகிறான். தோழி கண்ணகியைக் “கற்புக்கடம் பூண்ட காதலன் பின்வந்த பொற்றொடி நங்கை” எனப் போற்றுகின்றாள். சாலினி தெய்வமுற்ற போது, “இவளோர் கொங்கச்செல்வி குடமலையாட்டி, தென்தமிழ்ப்பாவை செய்தவக்கொழுந்து, ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி” எனப் பாராட்டுகின்றாள். கற்பில் சிறந்தோரைத் தெய்வநிலையில் வைத்துப் போற்றிய தன்மையும், தெய்வமாக வழிபட்ட தன்மையும் வழக்கத்தில் இருந்தமை தெரிகிறது. கவுந்தியடிகள் மாதரியிடம் கண்ணகியை அடைக்கல மாக்குகையில் “கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலம்” எனப் பாராட்டுகிறார். ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ என்பதைக் காண்கிறோம். அக் காலத்தில் போரில் வீரமரணம் அடைந்தோர்க்கு மட்டும் கல் எடுத்து வழிபட்டனர். கற்பின் சிறப்பால் கண்ணகிக்கும் கல் எடுத்து வழிபட்டமையைச் சிலம்பின் மூலம் அறிகிறோம்.

“என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்! பலர்என்ஐ

     முன்நின்று கல்நின்ற றவர்”           (குறள்:771)

“பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும்

     திண்மைஉண் டாகப் பெறின்”  (குறள்:54)

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

     தெய்வத்துள் வைக்கப் படும்”         (குறள்:50)

எனும் திருக்குறள் சிந்தனைகள் சிலம்பில் சித்திரங்களாய்த் தீட்டப்பெற்றுள்ளமை கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

‘உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்’ எனும் காப்பிய நோக்கம் திருக்குறள் கருத்துக்களைப் பதிய வைத்துப் படமாக்கியிருப்பது நினைந்து நினைந்து மகிழத்தக்கது.

“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!”

“ஊழின் பெருவலி யாவுள? மற்றுஒன்று

 சூழினும் தான்முந் துறும்”          (குறள்:380)

தீய ஊழை நீக்குதற் பொருட்டு அதற்கு எதிரான வழியொன்றைச் சிந்திக்க எண்ணுவோம். ஆனால் அது நாம் நினைத்த அதே வழியாகவோ பிறிதொன்றன் வழியாகவோ அதனிலும் முற்பட்டு வந்து நிற்கும். வினைப்பயன் விடாது தொடரும். நம்மை வந்தடைய வேண்டிய துன்பம் எக்காரணம் கொண்டும் வராமல் போகாது.

ஊழ்வினை இருவகையாகப் பிரிந்து நிற்கக் கூடியது. அவை நல்ல வினை, தீய வினை என்பன. அதனை ஆகுஊழ், போகுஊழ் என்பர்.

“தன்வினை தன்னைச் சுடும்”

“தினை விதைத்தவன் தினை அறுப்பான்

     வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

“பரதன் என்னும் பெயரன்அக் கோவலன்

     விரதம் நீங்கிய வெறுப்பினை ஆதலின்”

(சிலப்பதிகாரம்:23:154&155)

என இளங்கோவடிகள் மதுராபுரித் தெய்வத்தின் வழியே கோவலனுக்கு எதிரி கோவலனே என்பதைச் சுட்டிக் காட்டி அவன் வினையே அவனை அழித்தது என்பார்.

ஒருவரின் மகிழ்ச்சியான அல்லது துன்பமான வாழ்க்கைக்குக் காரணம் அவரது முற்பிறவியின் பயன் என்று கூறுகிறது திருக்குறள்.

மனிதர் தம் வாழ்க்கையில் இன்பம் துன்பம் ஆகிய முன்வினையின் தொடர்ச்சியாக இப்பிறவி வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இந்தப் பிறவியில் ஒருவர் இன்பத்தை அனுபவிக்கப் போகிறாரா? துன்பத்தை அனுபவிக்கப் போகிறாரா? என்பது அவர் முற்பிறவியில் செய்த வினைப் பயனைப் பொறுத்து அமைகிறது. வினைப்பயன் தான் அதனை நிர்ணயிக்கிறது. ஒருவருடைய வினை மற்றவரைப் பற்றாது செய்தவரையே தொடர்ந்து செல்லும். ஒவ்வொரு வினையும் தனக்கு உரியவரையே சென்றடைகிறது.

“பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்

     ஆகழ்ஊழ் உற்றக் கடை”      (குறள்:372)

தீவினை தோன்றினால் அறிவைக் கெடுத்துவிடும் என்றும், நல்வினை தோன்றினால் அது அறிவை விரிவுபடுத்தும் என்றும், செல்வமும், வறுமையும் போல் அறிவீனமும், அறிவுடைமையும் கூட நம்முடைய தீவினை, நல்வினை மூலம் தான் ஏற்படும் என்றும் வற்புறுத்துகிறது வள்ளுவம்.

“எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை

     வீயாது பின்சென்று அடும்”          (குறள்: 207)

எத்தகைய கொடிய பகையை உடையவர்களும், அதிலிருந்து தப்பி வாழ முடியும். ஆனால் தீவினை என்னும் பகை விடாமல் பின்தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.

“தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

     வீயாது அடிஉறைந் தற்று”      (குறள்: 208)

ஒருவனுடைய நிழல் அவனை விட்டு நீங்காமல் அவன் அடியில் தங்கியிருத்தல் போல பிறர்க்குத் தீவினை செய்தால் அக்கேடு அவனை நிழல் போல் தொடர்ந்து வந்து துன்புறுத்தும். தீவினைக்கு மன்னிப்பே கிடையாது. தீவினை செய்தவர் இந்தப் பிறவியில் இல்லை என்றாலும், அடுத்த பிறவியிலாவது அனுபவித்தே தீர வேண்டும் என்பது வள்ளுவம் வகுத்துத் தந்த நெறி. இக்கருத்தினைச் சிலம்பில் வரும் கட்டுரைப் பகுதியில்,

“உம்மை வினைவந்து உருத்த காலைச்

     செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது”

(சிலப்பதிகாரம்:23:170&171)

எனக் கூறுவார் இளங்கோவடிகள்.

முற்பிறவியில் செய்த தீவினை பயன் தரும் காலம் வந்தால் செம்மையான உள்ளம் இல்லாதவர்க்கு அவர் செய்த தவமும் உதவாது. அது அவரைக் காக்கவும் செய்யாது. அத்தீவினைப் பயனை அவர் அனுபவித்தே ஆக வேண்டும்.

இந்திர விழாவின் போது கோவலனும் மாதவியும் மகிழ்ந்து பாடிய கானல்வரிப் பாட்டில் ஊழ் தன் விளையாட்டைத் தொடர்கிறது.

கோவலன் பாடிய பாடலில் தன் மனதில் வேறு மகளிர்பால் கோவலனுக்கு விருப்பம் சென்றுள்ளது என்பதனைக் குறிப்பால் பொருள் கண்ட மாதவி, கோவலனிடம் இருந்த யாழினைத் தான் வாங்கி, தானும் ஒரு குறிப்பினள் போல் பாடினாள்.

 

இவ்விடத்தில் ஊழ்வினையாவது உருத்து வந்து பயனைத் தரத் தொடங்கியது.

“கானல் வரியான் பாடத் தான்ஒன்றின்மேல் மனம் வைத்து

     மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என

     யாழ்இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது

ஆகலின்” (சிலப்பதிகாரம்:7:52)

கோவலன் மாதவியைப் பிரிந்ததற்குக் காரணம் ஊழ்வினை வந்து உருத்ததுதான் எனக் காண்கிறோம்.

கோவலன் திரும்பி வந்த பொழுது கண்ணகியை அழைத்துக் கொண்டு மதுரைக்குப் புறப்படும் எண்ணம் தோன்ற ஊழ்வினை தான் காரணம் என்கிறார் இளங்கோவடிகள். பண்டைத் தீவினையால் உள்ளம் துரத்தக் கோவலன் மதுரைக்குப் புறப்படலானான்.

“காரிருள் நின்ற அடைநாள் கங்குல்

     ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப”

(சிலப்பதிகாரம்:10:3&4)

முன்னைத் தீவினையானது வந்து உருத்தியதன் பயனாக உள்ளம் தன்னைச் செலுத்த கோவலனும் புகாரை விட்டு வெளியேறத் துணிந்தான்.

“வினைவிளை காலம் ஆதலின் யாவதும்”

(சிலப்பதிகாரம்:16:148)

முன்வினைப் பயனைத் தரும் காலம் ஆதலால் எதையும் ஆராயாமல் ‘கள்வனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க’ என்றான் பாண்டியன்.

“பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

     பிற்பகல் தாமே வரும்”        (குறள்: 319)

மதுரையை எரித்த கண்ணகியிடம் மதுராபதித் தெய்வம் “மாதே இப்பிறவியில் நீங்கள் உற்ற துயரத்திற்குக் காரணம் முன்பிறப்பில் உன் கணவன் செய்த தீவினையே. அப்பிறப்பில் பரதன் என்ற பெயருடன் உன் கணவன் வசு என்னும் மன்னன் கீழ் பணி செய்தான். அப்போது அவன் அயல்நாட்டு வணிகனும் நல்லவனுமான  சங்கமன் என்பவனை அயல்நாட்டு ஒற்றன் என மன்னனிடம் கூறி அவனது கொலைக்குக் காரணமானான். கொலைக் களப்பட்ட சங்கமன் மனைவி நீலி ஓரிடத்திலும் நில்லாது அலைந்து திரிந்தாள்.

“அரசர் முறையோ? பரதர் முறையோ?

     ஊரின் முறையோ? சேரியீர் முறையோ?”

Image result for kovalan kannagi

என அனைவரிடமும் நீதி கேட்டுக் கதறி அழுதாள். பிறகு மிக உயர்ந்த மலை உச்சியில் நின்று தன் கணவனை அடைய ஆயத்தமானாள். அந்நிலையில் ‘எமக்கு இங்ஙனம் மிகக்கொடிய துன்பத்தினைச் செய்தவர் எவ்வகையிலாவது தாமும் இத்தகைய துன்பத்தை அடைவாராக’ என்று சாபமிட்டு உயிர் துறந்தாள். குற்றமற்ற அவள் இட்ட சாபத்தின் பயனாக இப்பிறவியில் நீங்கள் இக்கொடுந் துன்பம் அடைந்தீர். முன்பிறவியில் செய்த வினை பயன் தரும். காலம் வந்தால் செய்த தவமும் உதவாது. அத்தீவினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும்” என ஊழ்வினைப் பயனைக் கூறி மறைந்தது. பிறர்க்கு முற்பிறவியில் தீவினை செய்தால் அது இப்பிறவியில் தானே வந்து சேரும் எனும் வள்ளுவரின் கருத்து இங்கே ஆழமாகவும், அழகாகவும் கூறப்பட்டுள்ளது.

கொலைக் களக் காதையில் கோவலன் குற்றம் சாட்டப்பட்டு பொற்கொல்லனின் சூழ்ச்சியாலும் அரசனின் தண்டனையாலும் கொலை செய்யப்படுகிறான். கள்வனைப் பற்றிய மெய்ப்பாடுகள் அறியாத களிமகன் தன் கையிலிருந்த வாளினாலே வீசினான். அவ்வாள் கோவலன் உடலிற் குறுக்காகப் பாய்ந்து உதிரம் கொப்பளிக்க கோவலன் வெட்டுப்பட்டு வீழ்ந்தான். இங்கே ஊழின் உச்சநிலை உணர்த்தப்படுகிறது.

“காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்

     கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்”

(சிலப்பதிகாரம்:16: 216&217)

“நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்அறமே

     கண்ணகி தன்கேள்வன் காரணத்தால் & மண்ணில்

     வளையாத செங்கோல் வளைந்ததே; பண்டை

     விளைவாகி வந்த வினை”      (வெண்பா)

 

பண்டை விளைவாகி வந்த வினையால் உலகிலே அதுவரை செவ்விய ஆட்சியினையுடைய பாண்டியனின் செங்கோலும், கண்ணகியின் கணவனான கோவலனைக் காரணமாகக் கொண்டு வளைவுற்றது. அதனால் அனைவரும் இருவினையும் தவறாது வந்து சேரும் என்பதனை அறிந்து என்றும் நல்லறமே செய்யுங்கள் என இளங்கோவடிகள் ஊழின் வலிமையைச் சிலப்பதிகாரத்தில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் வழி நின்று படைத்துள்ளார் என்பதை நன்கு உணரமுடிகிறது.

‘வளமிக்க இப்பெரிய உலகில் வாழும் மக்களே மனவளத்துடன் வாழுங்கள்!’ எனக் காப்பியத்தின் முடிவில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு தொடரும் திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்தின் சிந்தனைக் கருத்துக் கோர்வைகளே.

திருக்குறள் என்ற விதையிலிருந்து தான் பிற நூல்கள் முளைத்து வளர்ந்து வந்துள்ளன. தெய்வப்புலவரின் அருள் வெள்ளத்தால் தான் செந்தமிழ்ப்புலமை இன்றும் பசுமையோடு இருக்கிறது என்பதற்கு பிற இலக்கியங்களில் காணப்படும் திருக்குறளின் ஆளுமையே சாட்சியாக உள்ளது. இலக்கியப் படைப்புகளுக்கு திருக்குறள் இலக்கணம் என்றால் பொருந்தும். அந்த வகையில் திருக்குறள் நெறிகளை இலக்கணமாகக் கொண்டு இளங்கோவடிகள் சிலப்பதி காரத்தினைப் படைத்துள்ளார் என்பது காப்பியத்தின் போக்கில் திருக்குறள் சிந்தனைகள் பரவிக் கிடப்பதிலிருந்து தெரிய வருகிறது. வள்ளுவத்தின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு காப்பியத்தின் நோக்கமாக எடுத்துக் கொண்ட மூன்று நிலைப்பாடுகளில் அறத்தின் தன்மையினையும், கற்பு நெறியினையும், ஊழின் வலிமையினையும் வலியுறுத்தி சிலப்பதிகாரத்தினை வாழ்வியல் நெறிக்கு வழிகாட்டும் வெற்றிக் காப்பியமாக படைத்துத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்துள்ளார் இளங்கோவடிகள். ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ என நம்மையெல்லாம் பெருமையடையச் செய்துள்ளார் பாரதியார்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

     வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல்

     பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை

     உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை”

எனும் பாரதியின் வைர வரிகளுக்கு வணக்கம் செலுத்துவோம்.

11827total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>