கனடா நாட்டுப் பயணம்

கனடா நாட்டுப் பயணம்

Image result for canada

விழுமிய திருக்குறள் பிறந்த நம்நாடு, நழுவவிட்ட அந்த நல்லுணர்வை ஏக்கத்துடன் கனடா நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை எண்ணத் தொடங்கினேன். அமெரிக்காவில் இத்தனை நாட்களும் எப்படியோ ஓடிவிட்டன!

தமிழில் ‘நல்வரவு’ கூறும் திருநாடு

உலக நாடுகளுள் சோவியத் யூனியனுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய நாடு நோக்கிப் பயணமாக வேண்டும். அதுதான் கண்ணாரக் காணவேண்டிய கனடா!

வட அமெரிக்கக் கண்டத்தின் வடபாதி முழுதும் வியாபித்துள்ள இயற்கைக் கொலுமண்டபம் இந்த நாடு. கிழக்கே அட்லாண்டிக் சமுத்திரம்; மேற்கே பசிபிக் சமுத்திரம்; தெற்கே அமெரிக்கா; வடக்கே ஆர்க்டிக்.

எவ்வளவு பெரிய நாடு! ஆனால் மக்கள்தொகை மிகக்குறைவு. சுமார் 3கோடி மக்கள்; மூன்று நூற்றாண்டுக் குடியேற்ற வம்சா வழியினர்.

வடதுருவத்தை ஒட்டியுள்ள கனடாவின் குளிர்காலப் பருவம் மிக நீண்டது; கோடைப் பருவம் மிகச்சுருங்கியது.

நம் நாட்டில் மூன்றே பருவங்கள்தான் உண்டு கோடைக் காலம், மிகுகோடைக் காலம், சுடும்கோடைக் காலம்!

ஆனால் கனடாவைப் போன்ற நாடுகளில் மட்டும் இயற்கை மிகுந்த கருணை காட்டுகிறது! இங்கு உள்ள காடுகளின் அடர்த்தியை, நீரோடைகளின் பாய்ச்சலை, பயிர்களின் பசுமையை, மக்களின் வளமையைப் பார்த்தாலே… இயற்கையின் பாரபட்சம் புரிகிறது.

இங்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்து முதன்முதலில் குடியேறியவர்கள் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும். அவர்களுக்குள் மூண்ட ஆதிக்கச் சண்டை ‘ஏழாண்டுப் போர்’ என வருணிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கை ஓங்கியதால் – மாட்சிமை தங்கிய மன்னர் ஆட்சியின் கீழ் . டொமினியன் ஆகி, ஆஸ்திரேலியாவைப் போல் காமன்வெல்த் அங்க நாடாகச் செல்வம் கொழிக்கிறது. ஆங்கிலமும் பிரெஞ்சும் அரசு மொழிகள். அங்கும் மொழி- இனச் சிக்கல் உண்டு. எனினும் பொதுவளர்ச்சிக்கு ஊறு செய்யாமல் ஒத்துப் போகிறார்கள். சமீப ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்கு சரணாலயமாகவும் இந்நாடு ஒருவகையில் தமிழ் மானம் காக்கிறது!

இயன்றவரை ஈழத் தமிழர் மானம் காக்கக் கைகொடுக்கும் கனடாவில் இனிய தமிழ் மணமும் கமழுவதை நுகர அரிய வாய்ப்பு இப்பயணத்தில் கிட்டியது.

சமச்சீரான வெப்பதட்பமுடைய வாழ்க்கைக்கு உகந்த நாடுகள் என உலகில் ஆஸ்திரேலியாவையும், கனடாவையும் சொல்லுவார்கள். அமெரிக்காவில் பொதுவான, ஆங்கிலக் கலாச்சாரப் பின்னணி புலப்படுவதுபோல் அதையடுத்துள்ள கனடாவில் பிரெஞ்சக் கலாச்சாரச் சூழல் வெளிப்படை யாகத் தெரியும் என்றும் சொல்லுவார்கள். அதுவும் உண்மை எனக் கண்டறிய அதிவேகமாக அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூயார்க்கிலிருந்து கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும் இடங்களில் எல்லாம், நம்மை வரவேற்று உபசரிக்க நண்பர்கள் இருந்துவிட்டால் எந்த நாட்டிற்கும் போய்வரலாம். நற்பயனாக எங்களுக்கு இந்தப்பேறு எங்கும் கிட்டியது. சென்னையில் உள்ள பிரபல டாக்டர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் புதல்வி திருமதி. ரீத்தா, திரு.பார்த்திபன் அவர்களின் துணைவியார். இவர் அவர் சகோதரி சத்யா, மதுரையைச் சேர்ந்த திரு.அசோகன், கானடியன் ஆப் செட் ஸ்கிரீனிங் எனும் நிறுவனத்தை நடத்தும் ரோட்டரி கழக உறுப்பினர் திரு.ஸ்டூவர்ட் ஜெரோம், திரு.விஜயநாதன் மற்றும் பலர் எங்களுக்கு இனிய வரவேற்பு அளித்தனர்.

நாங்கள் கனடா போய்ச் சேர்ந்ததும் அமெரிக்கா விலிருந்து திரு.நாராயணன் குடும்பத்தினரும் எங்களுக்குத் துணையிருக்க வழிகாட்ட வந்து (அங்கிருந்து சுமார் 400 மைல்தான்) சேர்ந்து கொண்டனர். கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம். நீர் அருவி, ஆலயக் கோபுரம்! அதிலும் நாங்கள் பார்த்த நயாகரா அருவி (நீர்வீழ்ச்சி) உலகிலே மிகப்பெரிது, அதன் பிரமாண்ட தோற்றமும், இடையறாது கொட்டும் நீர்ப் பெருக்கும், வண்ண வண்ணக்கோலமும் நெஞ்சைப் பின்னிப் பிணைத்தன.

நம் பாண்டிய நாட்டுச் சங்கப்புலவன் கணியன் பூங்குன்றனார் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பாட்டில் தொடரும் வரிகளான ‘கல்பொருது இரங்கும் மல்லல்பேர்யாற்று நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப்படூஉம்’ என்ற வரிகள் இப்பெரும் நீர்வீழ்ச்சியைக் கண்டவுடன் தோன்றின.

தேக்கிவைக்கப்பட்ட செல்வம், தேக்கிவைக்கப்பட்டு பயன்படுத்தாத நீர் போல அலையாமல், நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல, பரந்து விரிந்து பாலை நிலத்தை எல்லாம் செழிப்பாக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலும் கனடாவிலும் உற்பத்தியாகும் பொருட்களை நுகர்வோர் அதிகமாக இருப்பதனால், அங்கு பணப்புழக்கத்தின் வேகம் காரணமாகப் பொருளாதார நிலையும் மேம்பட்டு இருக்கிறது. நமது நாட்டிலும் பணப் புழக்கம் தேங்கி இருக்காமல் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் நம் வளர்ச்சியும் மேம்படும்.

உலகிலேயே மிகப் பெரிய சியென் கோபுரத்தைப் பார்க்கச் சென்றோம். சிகாகோவில் நாங்கள் பார்த்த சியொ டவர் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு இதைப்பார்க்க வந்தபோது மலைப்புத் தோன்றவில்லை. ஆனால் மனதைத் தொடும் ஒரு காட்சி என்னை மெய்சிலிர்க்கவைத்தது. அந்த மாபெரும் டவரின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு வாசகத்தில் ‘நல்வரவு’ எனத் தமிழில் மின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு உலகில் உள்ள பலமொழிகளில் எழுதியிருப்பினும் இந்தியா விலிருந்து தேர்ந்தெழுதிய நான்கு மொழிகளில் நமது தமிழ் மொழியும் ஒன்று என்றவுடன் என் எண்ணமெல்லாம், இதயமெல்லாம் பூத்தன; வான் முட்ட உயர்ந்திருந்த கோபுரத்தின் படிக்கட்டுக்குச் செல்லக் கால்கள் தயங்கின. “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும், வண்மொழி வாழியவே!” என மகாகவி பாரதி அன்று பாடினானே… அந்த வானத்துக்கே இந்தத் தமிழ் வாசகம் என்னைத் தூக்கிப் போவது போலப் பிரமையுற்றேன். அந்த வாசகத்தின் முன்னர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

‘நல்வரவு’ எனத் தமிழ் வரவேற்பு அளித்த தமிழன்பர்கள் உள்ளமும், இல்லமும் எங்களுக்குச் சென்றவிடமெல்லாம் நல்வரவு கூறின.

கனடாவிலிருந்து, ஏற்கெனவே திட்டமிட்ட எங்கள் ஐரோப்பியப் பயணத்தில் விடுபட்டுப் போயிருந்த பிரெஞ்சு நாட்டுக்குப் போக விசா எடுக்க முடியும் என்றார்கள். அந்த முயற்சியில் நண்பர்கள் ஓடி ஓடி அலைந்தார்கள். ஆனால் 45 நாள் அவகாசம் வேண்டும் என அதிகாரிகள் உதட்டைப் பிதுக்கி விட்டார்கள். நான்கு நாட்கள் இதில் வீணாகிவிட்டன.

கனடாவிலும்  விரிவான பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தரவும் முடியவில்லை. அதற்கேற்ப எங்கள் பயணத்தை நீட்டிக்கவும் இயலவில்லை. நண்பர்கள் வீடுகளில் பலரும் வந்து கூடி கலந்துரையாடி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சிகளுக்காகவே ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திரு.பார்த்திபன் – ரீத்தா தம்பதியினரின் உபசாரத்தை மறக்கவே முடியாது. அவர்கள் இல்லத்தில் நிகழ்ந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்துத் தமிழன்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர். ஈழத்தின் கண்ணீர்க் கதையும் அங்கு விரைவில் தமிழர் நல்வாழ்வுக்கு உரிய சுமுக நிலை ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் கவலையும், எல்லாப் பிரிவினரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய அவசியம் பற்றியும் கருத்துக்கள் தங்குதடையின்றி வந்தன. யாழ்ப்பாணத் தமிழன்பர்கள் கூறியவற்றைக் கேட்ட போது எங்கள் கண்கள் கண்ணீர்க் குளமாயின.

பின்னர் ‘திருக்குறள் பெருமைகளும் நமது பண்பாட்டுச் சிறப்புகளும்’ பேசப்பட்டன. இவற்றைக் கேட்பதில் அங்கு உள்ளோருக்கு உள்ள ஆர்வத்தை, அக்கறையை நாம் இங்கெல்லாம் காணமுடிவதில்லை. தன்னிடம் பூத்த தாமரையின் அழகு குளத்துக்குத் தெரியவில்லை என்றால் எங்கே போய் முறையிடுவது?

உலகத் திருக்குறள் பேரவையின் நோக்கங்கள் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதன் கிளை ஒன்றைக் கனடாவிலும் நிறுவத் தாம் எல்லா வகையிலும் ஒத்துழைப்பதாக உற்சாகம் அளித்தனர்.

கனடாவில் சீக்கியர்களும் தமிழர்களும் கணிசமாக உள்ளனர். சீக்கியர்களின் பற்றுறுதிக்கும் உழைப்புக்கும் நிகராக நம் தமிழர்களும் விளங்கக்கண்டு பெருமிதமும் பேருவகையும் கொண்டேன்.

கலந்துரையாடல்களில் உற்சாகமாகக் கலந்து கொண்ட திரு.பார்த்திபன் ஒவ்வொரு வேளை விருந்தின்போதும் புதிது புதிதாக நண்பர்களைக் கூட்டி வருவார். நீண்ட உரையாடல்கள் தொடரும். சமயம், தத்துவம், கலை, இலக்கியம், தொழில், வாணிபம் என்றெல்லாம் கலந்துரையாடல் வலம் வரும். இவ்வுரையாடல்களில் எனக்கு ஏற்பட்ட பயனும் அனுபவமும் மிக அதிகம். அவற்றையெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டு இலண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அருமை நண்பர் திரு.பார்த்திபன், “உங்கள் பேச்சால் வசீகரிக்கப் பட்டேன்” என்றார். ஆனால் உண்மையில் வசீகரிக்கப் பட்டது நாங்கள்தான். கனடாவில் வாழும் நம் சகோதரர்களின் அன்பும் உபசாரமும் திருக்குறள் வாழ்வும் வாக்குறுதியும் எங்களை என்றென்றும் வசீகரித்துக் கொண்டன….!

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

     அனைத்தே அன்பர் தொழில்”        (394)

எனப் புதுக்குறள் புனையும் ஆசை வளர்ந்தது!

கென்னடி புகழ் பேசும் வாஷிங்டன் !

Image result for john f kennedyகென்னடி புகழ் பேசும்

வாஷிங்டன் டி.சி. நகருக்குச் சென்றோம். அங்கே உள்ள கென்னடி விமான நிலையத்தின் அழகும் வெள்ளை மாளிகை வனப்பும் என் நெஞ்சில் நிறைந்தன. ஜனாதிபதி அமரர் கென்னடி நினைவுச் சின்னம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தோரை நினைவுகூரும் நடுகல்லாக விளங்குகிறது.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்பலர் என்ஐ

     முன்நின்று கல்நின் றவர்”       (771)

எனும் திருக்குறள் வரிகளே அங்கு என் நினைவில் படர்ந்தன.

புகழ் வளர்ந்து நடுகல் ஆனோர்க்கும் அது பொருந்தும் சிறப்பினை உணர்ந்தேன். அங்கு உள்ள அணையாச் சுடர் காண்போர் உணர்விலும் தியாகப் பேரொளியைப் பரவச் செய்வதை அனுபவித்தேன். நினைவுச் சின்னங்களை நிறுவுவது போல அங்கே அவற்றை நேர்த்தியாகப் பராமரித்து மரியாதையும் செய்கின்றனர். இதையும் நம் நாட்டு நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இங்கே வைக்கப்படும் நினைவுச் சின்னங்கள் நாளடைவில் மறக்கப்பட்டுப் பறவைகளாலும் விளம்பரங் களாலும் அசிங்கப்படுத்தப்படும் கொடுமை மாறும் நாள் எந்த நாளோ எனப் பொருமினேன்.

எதிர்காலத்தை உணர்த்தும் விஞ்ஞானக் கூடம்

“பொறிஇன்மை யார்க்கும் பழியன்று; அறிவுஅறிந்து

     ஆள்வினை இன்மை பழி”      (618)

எனும் வள்ளுவம் அமெரிக்க நாட்டினர்க்கு எப்படியோ தெரிந்திருக்க வேண்டும். அனைத்துத் துறையிலும் அவர்கள் ஆக்கிவரும் ஆள்வினையுடைமை அறிவியலில் கொடிகட்டிப் பறக்கிறது. நிலா உலகில் முதல் மனிதனை நிறுத்திடும் அளவுக்கு விண்முட்டும் புகழாகியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள அறிவியல் கலைக்கூடத்தை அற்புதம் என்றே சொல்ல வேண்டும். ராக்கெட்டுப் பயண வளர்ச்சி, விண்வெளி ஓடச் சாதனைகள், இது வரை சாதித்தவை, இனி அண்டவெளிக் கிரகங்களை ஊடுருவிப் போகும் முயற்சிகள் என இவற்றையெல்லாம் பார்த்தபோது விஞ்ஞான முன்னேற்றத்தையும் எதிர்காலப் போக்கையும் எப்படி வருணிப்பது என்றே எனக்குப் புரியவில்லை.

வாஷிங்டனை இரண்டே நாளில் முடித்துக் கொண்டு ஆர்லாண்டோ புறப்பட்டு வந்தோம். உலகப் புகழ்பெற்ற டிஸ்னி உலகம்  இங்கே தான் உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்திழுக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் அங்கு வருடம் முழுவதும் திருவிழாக் கோலம் பூணச் செய்கின்றன. இதற்கு இணையானதோர் அமைப்பு உலகில் வேறெங்கிலும் இல்லை எனச் சொல்ல வைக்கின்றன.

அமெரிக்கா முழுவதையும் பார்த்து விட்டதொரு பிரமை ஏற்படும் வண்ணம் 360 டிகிரி கோணத் திரையரங்கில் அமெரிக்கா முழுவதையும் காட்ட நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள்.

சறுக்கு ரயில் விளையாட்டு

ரோலர்கோஸ்டர் எனும் பயங்கர ராட்சதச் சறுக்கு ரயில் விளையாட்டு அங்கே மிகவும் பிரபலம். ஒரு நொடியில் விர் என்று கோபுர உச்சிக்கு அந்த ரயில் விரைவதும் பின்னர் அது சரேலென மரணப் பள்ளத்தை நோக்கிக் கீழிறங்குவதும் மயிர்க்கூச்செரிக்கும் அனுபவங்கள்! அதில் ஒரு முறை ஏறிவிட்டுக் கீழே இறங்கி மிகத் துணிச்சலுடைய முரட்டு ஆசாமி என்ன சொன்னார் தெரியுமா? “இனி செத்தாலும் இதில் ஏற மாட்டேன்” என்றார். என்றாலும் துணிச்சலோடு அதில் ஏறினோம். ஓடத்தொடங்கியதும் உடம்பின் குருதி உறைந்து போவது போல, எலும்பு களெல்லாம் நொறுங்கிவிடுவது போலப் பய உணர்வு கவ்வியது. கீழே இறங்கியபின் தான் ‘அப்பாடா’ என்று அமைதி பெற்றோம்.

எதிர்காலக் கதை

அங்குள்ள எப்காட் சென்டர் விஞ்ஞான, தொழில் நுட்ப அற்புதங்களைக் காட்டுகிறது. 21-ஆம் நூற்றாண்டை நோக்கி உலகம் முன்னேறும் எதிர்காலக்கதை ஒரு வரலாறு போல அங்கே பல நிலைகளில் பல அரங்குகளில் கோடிகோடிச் செலவில் காட்டப்படுகிறது. இப்படி நம்நாட்டிலும் ஆங்காங்கு அறிவியல் நகரங்களை உருவாக்கக் கூடாதா எனும் ஏக்கமே மேலிட்டது.

அங்குள்ள கடல் உலகம்  உலகில் உள்ள அத்தனை மீன் வகைகளையும் காட்டுகிறது. இத்தனையும் பார்க்க ஒரு வாரமாவது வேண்டும்; நாங்கள் அவசரக் கோலத்தில் கிளம்பினோம்.

இந்த எப்காட் உணவுப் பிரிவில் காரைக்குடி நண்பர் ஒருவரைக் கண்டேன். என்னை நலம் விசாரித்துக் கொண்டே அவர் ஓடிஓடிப் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைவில் செல்லச்செல்ல ஏற்படும் அன்பின் நெருக்கத்தை உணர்ந்திட முடிந்தது.

‘மியாமி’ நகரம்

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இப்போது எங்கள் பயணம் எல்லாம் விமானத்தில்தான், 3000 மைல் தாண்டி உலகிலேயே அழகிய கடற்கரை நகரான மியாமி போய்ச் சேர்ந்தோம்.

வாழ்க்கையை, பொழுதுபோக்கை, எப்படி ரசிப்பது என்பதை அங்கே காணமுடிந்தது. ‘சிலருக்கென ஒதுக்கப்பட்ட’ இடங்களுக்கெல்லாம் நாங்கள் போகவில்லை! நாலுபேர் கூசாமல் பார்க்கக்கூடிய கொள்ளை அழகுகளை ரசித்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினோம்.

அடுத்து நாங்கள் தரை இறங்கிய இடம், லெஸ்வேகாஸ் (லிணீsஸ்மீரீணீs). உலகிலேயே மிகப்பெரிய சூதாட்ட நகரம் இது என்பார்கள். எங்கு பார்த்தாலும் காசினோ என்னும் பொழுதுபோக்கும் உல்லாசப் பணவிரயக் கூடங்கள்! பணம் அங்கே தண்ணீராக ஓடுகிறது; தடம் புரண்டு பாய்கிறது!

‘ஒன்றெய்தி நூறிழக்கும்’ சூதர்களும் கெட்டிக் காரர்களும் அங்கே ஏராளம், ஏராளம்! விமானத்தளத்தில் இருந்து ஊரில் எங்கே திரும்பிப் பார்த்தாலும் பந்தயச் சூதாட்டம்… பல்வகைச் சூதாட்டம். தம் பணம் பறிபோவதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படுவதில்லை. சம்பாதித்த காசைச் செலவழிக்க ஒரு வகையான மகிழ்ச்சியோடு ஷிறிலிகிஷிபி எனும் கண்கவர் காட்சிகளுக்குப் போய் விடுகிறார்கள். இவற்றைத் தொலைவில் இருந்து பார்த்த திருப்தியோடு நாங்கள் ஓட்டலுக்குத் திரும்பி விடுவோம்.

“வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்

     தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று”        (931)

எனும் சூது அதிகாரக் குறளைத் தெரிந்திருந்தாலும் அவர்கள் அதைப் பின்பற்றமாட்டார்கள் என உணர முடிந்தது! அவ்வளவு மயக்க உலகம் அது.

அற்புத உலகம்

அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ) நகரம் பறந்தோம். அங்கேதான் டிஸ்னியின் மற்றும் ஒரு அற்புத உலகம் உள்ளது. அதை மீண்டும் விவரிப்பதைவிட நேஷனல் தியேட்டர் உள்ள மற்றொரு ஹாலிவுட் ‘நகரத்தைப்’பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விவரிக்கலாம். திருக்குறளைப் பற்றிப் பேசவே போதிய அவகாசம் கிட்டாத சூழலில் ஹாலிவுட் போக நேரம் எங்கே கிட்டும் என யோசித்தோம். எனினும் அன்பர்கள் விடவில்லை. ஏதோ போனோம்! வந்தோம்!

பின்னர் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் பறந்தோம். அங்குள்ள சீன டவுனைக் (சிலீவீஸீணீ ஜிஷீஷ்ஸீ) கண்டு வியந்தோம். “எவ்வது உறைவது உலகம்” எனும் திருக்குறள் என் நினைவில் படர்ந்தது. சீனர்கள் உலகத் தலைமை பெற்று வரக் காரணம் எது என்பது புரிந்தது.

சாப்பாடும் சங்கடமும்

Image result for food america

 

“உங்களுக்கு வேண்டியது கில்லிங் பவரா?  அல்லது புல்லிங் பவரா?”  எனும் கேள்வியுடன் முடிந்த கட்டுரையை எப்பொழுதோ நான் படித்த நினைவு.

பலபேர் சைவ உணவில் சத்தே இல்லை என்பார்கள். கீரை, காய்கறிகளைவிட மீன், முட்டை, மாமிசம் முதலிய அசைவ வகைகளில்தான் ஆற்றல் நிறையக் கிடைக்கும் என நம்புவார்கள்.

ஆனால் யானை? எவ்வளவு பெரிது! உருவத்தால் மட்டும் இன்றி, வலிமையிலும் பிறவற்றைவிட மேம்பட்டது இல்லையா? குதிரைக்கு எவ்வளவு ஆற்றல்! கொள்ளும் புல்லும் தின்னும் அதன் ஆற்றல் அளவீட்டைக் கொண்டுதானே ‘குதிரை பவர்’ (பிஷீக்ஷீsமீ றிஷீஷ்மீக்ஷீ) இத்தனை என்று மின்அலகு கணக்கிடப் படுகிறது. ஆகவே சைவ உணவே சிறந்தது எனச் சைவ உணவினர் சாதிப்பர்.

இவையெல்லாம் என்னைப் போன்ற சைவ உணவுக் காரர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய செய்திகள் என்றாலும், மேலை நாடுகளுக்குப் பயணம்போகும் போதுதான் சைவச் சாப்பாட்டாளர்களுக்கு சங்கடங்கள் நேருகின்றன. அசைவர்களுக்குச் சிக்கல் இல்லை. எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள். சுத்த சைவர்கள் சிறுசிறு தியாகங்களுக்குத் தயாராக வேண்டும். எனினும் அமெரிக்காவில் அத்தகைய சங்கடங்கள் இராது என அன்பர்கள் எழுதியது நம்பிக்கை தந்தது.

அமெரிக்க நாட்டில் தண்ணீரையும் உணவையும் வீணாக்குகிறார்கள். அதைப் பார்த்தபோதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதே சமயம் தண்ணீர் மற்றும் உணவு வகைகளை மிகத் தூய்மையாகப் பாதுகாத்து வழங்குகின்றார்கள்; பயன்படுத்துகின்றார்கள்.

வெளியூர்ப் பயணத்தின்போது ஓட்டலில் தங்கிப் பலவகை உணவுகளை வயிறு புடைக்கச் சாப்பிடும் நம் ஊர்ப்பழக்கமெல்லாம் அங்கே காண முடியாது. பயணவழியில் சாலையோரங்களில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் சூடாகத் தயாரிக்கப்பட்ட  உணவுகளை விற்கிறார்கள். அவற்றைக் காரில் இருந்தபடியே வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடரு கிறார்கள் அல்லது அங்கேயே சாப்பிட்டுச் செல்லவும் வசதிகள் உள்ளன. காலப்போக்கில் நம் ஊர்களிலும் அப்படி வரக்கூடும்.

பாக்கெட்டுகளில் உணவு வகைகள்

பாக்கெட்டுகளில் அடைத்தும் சுத்தமான முறையில் பார்சல் செய்தும் தருகிறார்கள். நேரத்தை வீணாக்காமல்  சாப்பாட்டை முடித்துக் கொள்கிறார்கள். எல்லாவித மாமிச உணவுகளும் பாக்கெட்டில் வைத்து விற்கப்படுகின்றன. சைவச் சாப்பாட்டாளர்களுக்கான இத்தாலி நாட்டில் பிரபலமான பீசா (றிமிஞீஞீகி), மாக்டோனால்ட் ஆகிய சைவ உணவுகள் கிடைக்கும். ஆனால் என்ன வெஜிடேரியன் என முதலிலேயே சொல்லிவிட வேண்டும்.

 சைவ விருப்பத்தை விவரமாகச் சொன்னதும் பீசா  கோதுமை ரொட்டியில் வெண்ணெய் வெஜிடேபிள் வெங்காயம் போட்டுத் தந்தார்கள். ஆலை இல்லாத ஊரில் இந்த  இலுப்பைப்பூ கிடைத்தால் விடலாமா? பசி நேரத்தில் இதுவும் ருசியாகத்தான் இருந்தது. நாளடைவில் பழக்கம் காரணமாக இந்த உணவும் பிடித்துவிட்டது.

இந்த நேரத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் இத்தாலிக்குச் சென்றிருந்தபோது இந்தச் சைவ ரொட்டியும் கிடைக்காமல் அவதிப்பட்டுப் போனேன். சைவ ரொட்டி என ஆங்கிலத்தில் சொல்லிக் கேட்டேன். அவர்களுக்கு அது புரியாமல், ‘என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். நான் ஆங்கிலத்தில் விவரமாக ஆனியன் கலந்த விஜிடபிள் பிரட் என்றேன். அவர்கள் தோளைத் தூக்கிக் கொண்டு தெரியவில்லை என்றார்கள். கடைசியில்தான் தெரிந்து கொண்டேன். ஆங்கிலம் இவர்களுக்கும் தெரியாது என்பதை! இவர்களிடம் ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான அவரவர் தாய்மொழியில் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆங்கிலம் பேசும் நாட்டை ஒட்டி வாழ்ந்தாலும் இவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் தமது தாய்மொழியறிவோடு மற்றொரு ஐரோப்பிய மொழியையும் கற்று விஞ்ஞான வளர்ச்சியில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இதைப் போலவே நாமும் தாய்மொழியாம் தமிழைக் கற்று தமிழ்மொழியில் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காணவேண்டும் எனக் கருதினேன்.

ஒரு கை பார்த்தோம்!

அமெரிக்காவில் வெங்காயம் (கண்ணீர் விடாமலே) கிடைத்தது. பீசா ரொட்டி, பழச்சாறு முதலியன தாரளமாகக் கிடைக்கின்றன. சுவையான தண்ணீர் கலக்காத பால், யோகார்ட் எனும் கெட்டித் தயிர், சாக்லேட், ஐஸ்கிரீம்… போதாதா …? இந்த அருமையான சைவச் சாப்பாட்டை ஒரு கை பார்த்தபடி நாங்கள் பயணத்தைச் சமாளித்தோம் என்றாலும் நம் ஊர்ச் சாப்பாட்டு ஏக்கம் தீரவில்லை! மதுரை திரும்பியதும் எங்களைப் பார்த்த நண்பர்கள், மிகவும் மெலிந்து  போனோம் என அங்கலாய்த்தார்கள்.

நாம் உணவுக்கு நம் வருமானத்தில் எத்தனைப் பங்கு செலவிடுகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்க்கை முறையையும் தரத்தையும் அளவிட முடியும் என்பார்கள். அமெரிக்க நாட்டில் உணவுப் பொருள் விலையைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டாலும் அந்த நாட்டுச் செலாவணிச் சமன்பாட்டில் உணவுவிலை அமெரிக்கர்களுக்கு மலிவுதான். அதனால்தான் விருந்து களிலும் கேளிக்கைகளிலும் உணவை அதிகமாகவே வீணாக்குகிறார்கள்.

அங்கே விருந்துகளில் அமர்ந்து சாப்பிடுவது மிக முக்கியமான நிகழ்வின் போதுதான். பெரும்பாலும் பபே (ஙிuயீயீமீt) எனப்படும் சுய பரிமாறு முறைதான். பொதுவில் வைக்கப்பட்ட உணவில் அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, ஓரிடத்திலேயே நிலையாய் இராமல் வந்திருக்கும் பலரோடும் அளவளாவிச் சாப்பிடுவது மிக வசதியான ஒன்று. நம் நாட்டிலும் இந்த விருந்துமுறை வேகமாக அறிமுகமாகி வருகிறது. அமெரிக்கர்கள் இந்த பபே முறையிலேயே வீணாக்கிக் கொட்டும் உணவு அதிகம்தான்.

மதிக்கப்படும் தனி நபர் உரிமை

எங்கும் தூய்மையாக உணவைப் பாதுகாத்துப் பயன்படுத்துகிறார்கள் என்றேன். கடையிலும், விருந்திலும் மிகக் கவனமாக உணவு வழங்கப்படுகிறது. சுகாதார முறைகளை நாம் அங்குதான் கற்கவேண்டும். ஒரு ஓட்டலின் சாப்பாடு சரியில்லை என்று யாராவது புகார் செய்தால் போதும், உடனே அது கவனிக்கப்படும், அல்லது அந்த ஓட்டல் மூடப்படும் அளவுக்குப் பொதுமக்கள் புறக்கணிப்பும், நடவடிக்கையும் தொடரும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் உணவுப் பொருள்களில் மிக விழிப்பாக இருக்கிறார்கள். தனி நபர் பாதுகாப்பும் உரிமையும் அந்த அளவுக்கு அங்கே மதிக்கப்படுகின்றன.

கலிபோர்னியா திராட்சைப் பழங்களுக்குப் புகழ்பெற்ற இடம் அவற்றில் பூசான நோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டவுடன், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை திராட்சைக் கூடைகளையும் அப்புறப்படுத்திக் குப்பையில் கொட்டி விட்டார்கள். நம் ஊரைப் போல தடையை மீறி எவராவது தரக்குறைவான பண்டத்தை விற்பனை செய்தால் லைசன்சை ரத்து செய்து விடுவார்களாம். தண்டனையும் அதிகம்.

சிக்கனம்

அமெரிக்காவில் உணவை வீணாக்குவதைப் போல நான் ஐரோப்பிய நாடுகளில் பார்க்கவில்லை. இந்த வகையில் அவர்களிடம் அதிகச் சிக்கனம் கண்டேன்.

அமெரிக்காவில் இத்தனை மைல்கள் காரில் வந்தோமே எங்காவது குப்பைகூளம் கண்ணில் பட வேண்டுமே? ஊஹும்! கழிப்பறை, குளியலறை எல்லாம் மிகவும் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கும். அனைத்தும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருக்கும். அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்ட நவீன வசதிகள் நிறைந்திருக்கும்.

சுற்றுப்புறத் தூய்மை, பொது வாழ்வில் தூய்மை, ஒழுங்குக் கட்டுப்பாடு பேணும் உணர்வு இவை அங்கு நன்கு புலப்பட்டன. நம் நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை இவற்றை விழாக் கொண்டாடிவிட்டுத் தொடர்ந்து பேணிப் பாதுகாக்காமல் அனைத்தையும் குப்பையில் போட்டுவிடுகிறோம். மதுரையில் சுற்றுப்புறத் தூய்மை காக்க நாமும் இயக்கம் நடத்தினோம். என்ன ஆயிற்று? போன ஆண்டு ஓரிடத்தில் கொட்டிய குப்பையெல்லாம் வேறு இடத்துக்கு வந்துவிட்டது. வெளிநாடுகளில் எப்போதும் செயல் இயக்கம்… நம் நாட்டில் எப்போதும் பேச்சு இயக்கம். என்று இந்த நிலை மாறுமோ என்ற ஏக்கம்!

சிக்காகோவில் – அன்பர்களின் வீடுகளில் – இருவகை விருந்துகள் உண்டு! வயிற்றுக்கும் செவிக்கும்! அங்கே உணவுப் பரிமாற்றத்தைவிடத் திருக்குறள் கருத்துப் பரிமாற்றமே மிகவும் ருசித்தது. நம் நாட்டில் – திருக்குறளைப் பற்றிப் பெரும்பாலும் தமிழறிந்த புலவர்களே மேடை கட்டிப் பேசக் கேட்கிறோம். ஆனால் இங்கு பிறதுறை அலுவல்களில் உள்ளவர்களில் பலர், திருக்குறளில் வாழ்க்கைத் தேவைக்கு ஏற்ற அளவு நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு குறள் இன்ன அதிகாரத்தில் உள்ளது என எடுத்துச் சொல்லும் அளவுக்கு ஈடுபாட்டை வளர்த்து வாழ்கின்றனர். அவர்களோடு அமர்ந்து அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் திருக்குறளை ஆராய்ந்தோம்.

சிக்காகோவில் ஒரு சொற்பொழிவுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதென்றால் சனிக்கிழமை வரை தங்குவதை நீடிக்க வேண்டியிருக்கும். எனவே கலந்துரையாடல் கூட்டங்களை வைத்துக் கொண்டோம். பேசுவோர், கேட்போர் ஆகிய இரு தரப்பாரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சுவையான கருத்தரங்குகளாக இவை நடந்தன.

திரு.இளங்கோவன் திருக்குறட்பா வடிவில் அதே நடையில் நெஞ்சு தொடும் வரவேற்புப் பாமாலையை யாத்தளித்தார். நம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேரறிஞர் தெ.பொ.மீ. அவர்களின் மருகர் பேராசிரியர் டாக்டர் ஆர்.சண்முகம் அவர்கள் வாங்கித் தந்திருந்த, நம் துணைவேந்தர் அறிமுகக் கடிதத்துடன், நம் அஞ்சல் வழிக்கல்வித் துறையினர் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்த ஆத்திசூடி – கொன்றைவேந்தன் முதலிய தமிழிலக்கிய ஒலி நாடாக்களைப் பல்கலைக்கழகத் தூதனாக அங்கு நல்கினேன்.

சிக்காகோவில் நண்பர்கள் இவற்றைப் பொன்னே போல் போற்றி வாங்கிக்கொண்டனர். தம் பிள்ளைகளுக்குப் பயன்தரும் இத்தகைய நன்கொடைகளைத் தொடர்ந்து அனுப்புமாறும் கேட்டுக் கொண்டனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையமும் இத்துறையில் இனி மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை நினைத்து மலைத்தேன்.

நண்பர்கள் எனது மேற்பயணத்திற்கான விசாவினைப் பெறும் முயற்சிகளில் ஓடி அலைந்தனர். சிலர் ஆரம்ப ஏற்பாடுகளைச் சரியாக செய்து கொள்ளாததால் அங்கே போய் அவதிப்பட நேர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியின் 200-ஆவது ஆண்டு விழாக் கொண்டாடப்பட்டமையால் அந்த நாட்டுக்கு உடனே விசா பெறுவது சிரமமாய் இருந்தது. விசா முன் ஏற்பாடு செய்யாததாலே அவ்விழாவில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பும் கைநழுவியது. எனவே, புறப்படும் சமயத்தில் சரியான டிராவல் ஏஜண்ட் மூலம் விசாப் பெற்று உரிய ஏற்பாட்டுடன் புறப்பட வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். இப்போதெல்லாம் 140 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்றார்கள்!

சிக்காகோ தமிழன்பர்களான நாராயணன், வெங்கடராமானுஜம் ஆகியோரை விட்டுப் பிரிய மனம் இல்லாமலேயே அமெரிக்காவை அவசரக் கோலத்தில் சுற்றிப் பார்த்து விட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று!

 

 

சிகாகோ: இந்திய ஆன்மீக முதல் முழக்கம்

சிகாகோ: இந்திய ஆன்மீக

முதல் முழக்கம்

Image result for vivekananda

இந்திய ஆன்மீகத்தின் முதல் முழக்கத்தை – புதிய விவே(காநந்தக்)கக் குரலை கேட்கும் – வாய்ப்புப் பெற்ற நகரம் சிகாகோ இந்திய நாட்டவரைப் பற்றிச் சென்ற நூற்றாண்டிலேயே கேள்விப்பட்டுப் பெருமை கொண்ட நகரம் அது.

சிகாகோ தமிழ் அன்பர்கள் (டெய்டனிலிருந்து 300 மைல் தூரம்) கூட்டிச் செல்ல வந்திருந்தனர். டெய்டன் விழா முடிந்த கையோடு சிக்காகோவுக்குக் காரில் போக திரு.பி.சி.எம்.ஜி. நாராயணனும் வேங்கட ராமானுஜமும் ஏற்பாடு செய்திருந்தனர். வேங்கடராமானுஜம் ஏற்றுமதித் துறையில் பொறுப்பான பதவி வகிப்பவர்; மதுரையில் புகழோச்சி வரும் மகாத்மா மாண்டிசேரிப் பள்ளித்தாளாளாரும் யாதவர் கல்லூரிச் செயலருமான திரு.பன்னீர்செல்வம் அவர்களின் சகலர். இவ்வன்பர்களின் குடும்பத்தாருடன் சிகாகோவுக்கு சாலை வழிப்பயணமாய்ப் புறப்பட்டோம்.

தாயக்கட்டமா? தார்ச்சாலைகளா?

சாலைகள் நாட்டின் நரம்பு மண்டலங்கள் பொருளாதார நலத்திற்கும் சமூக வாழ்வுக்கும் இன்றியமையாத இணைப்புக் கோடுகள். மிக விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட அமெரிக்க நாட்டின் திசைகளை எல்லாம் – அந்நாட்டின் நெடுஞ்சாலைகளே இணைக்கின்றன. ஊருக்கு ஊர் சொந்த / பொது விமானப்பயண வசதிகள் மிகுதியாக இருந்தாலும், ரயில் பயணத்தை விட, சாலைப் பயணத்தையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கேற்ப மோடல் (விளிஜிணிலி) எனப்படும் தங்குவிடுதிகளையும் செய்தித்தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

அங்கே நெடுஞ்சாலைகளின் அழகுக்கும் பராமரிப்புக்கும் இணை ஏதுமில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை – நேர்கோடு போல – நீண்டு விரியும் இச்சாலைகளில் எல்லாம் – வாகனங்கள் ஊர்ந்து போவதில்லை! விரைந்து பறக்கின்றன! 60 மைல் வேகம் குறையாமல் ஓட்ட வேண்டும் என்பது விதி; ஆனால் சர்வசாதாரணமாக 80, 100 மைல் வேகத்தில்தான் ஓட்டுகிறார்கள். வாகனங்களைக் கண்காணிக்கப் போலீசார் ராடார் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். என்றாலும் கார் ஓட்டுநர்கள் தம் வண்டியில் உள்ள மின்னணுச் சாதனங்கள் வழியே ராடார் இயக்கத்தைத் தெரிந்து கொண்டு அப்போதைக்கு மட்டும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு அப்புறம் சிறகுகட்டிப் பறக்கிறார்கள்.

வேகம் – வேகம் – வேகம். இதுதான் அமெரிக்க வாழ்க்கை! என்றாலும் கூட அந்த வேகத்திலும் – ஒருவகை ஒழுங்கும் கட்டுப்பாடும் மேவி நிற்பதைக் காணமுடியும். பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்வதை உரைகல்லாக வைத்தே ஒரு நாட்டின் ஒழுக்கத்தை அளந்தறிய வேண்டும் என்பார்கள். அங்கே ‘பொதுஇடம்’ எதுவாயினும் – அது புனிதமாகப் போற்றப்படுகிறது. ‘பொது என்றாலே, யாருக்கும் சம்பந்தமில்லாத அனாதை போன்றது; பொதுஇடத்தையோ, பொதுப்பொருளையோ, முறைகேடாக உபயோகிக்கலாம்’ என்ற நம்நாட்டின் பெரும்பாலானோரின் மனப்போக்கு இந்த அமெரிக்கப் பாடத்தால் மாற்றம் காணவேண்டும்.

நம் நாட்டில் பொதுப் பேருந்துகள் படும் பாடு நமக்குத் தெரியும். பயணிக்கும் ஓட்டுநர் / நடத்துநருக்கும் சிறு வாய்த்தகராறு மூண்டால் போதும். அது கைகலப்பாகி, ரத்தக் களரியாகி, சாலை மறியலாகி, சட்டஒழுங்குப் பிரச்சினையாகி, குழு மோதலாகி, துப்பாக்கிச்சூடு ஆகி, நீதி விசாரணை ஆகி, அப்புறம் புஸ்வாணம் ஆகிவிடும். அதே சமயத்தில் பேருந்து – சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாலையின் குறுக்கே படுத்துக் கிடக்கும். அமெரிக்கச் சாலைப் பயணத்தின்போது என்னால் இந்த ஒப்பீட்டை நினைக்காமல் இருக்க முடியவில்லை. “இது மாறும் நாள் எந்த நாளோ! யார் இதைப் பகர்வார் இங்கே?” எனும் பாரதிதாசன் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

அமெரிக்க நாடு எங்கும் தாயக்கட்டம் போல அமைந்திருக்கும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு விளக்கமான கைகாட்டிகளும் குறிப்புத் தூண்களும் உள்ளன. நெடுஞ்சாலை வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டால் போதும்; எங்கே திரும்ப வேண்டும். எங்கே பாதை மாறிச் செல்லவேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சாலையை இருபிரிவாக நடுவே பிரித்து – போகும் வழித்தடங்கள் ஒருபுறமும், எதிர்வரும் வண்டித்தடங்கள் மறுபுறமும் எனப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புறத்திலும் நான்கு (ஜிக்ஷீணீநீளீs) தடங்களுக்கு குறையாமல் ஓடுகின்றன. இத்தடங்கள்தான் ஓடுகின்றனவா அல்லது இவற்றின் மீது வாகனங்கள் ஓடுகின்றனவா எனக் கணிக்க இயலாத வகையில் அங்கே எல்லாம் அசுர வேகம்தான்! லைஃப் லைன் எனும் உயிர்க்கோடு தாண்டாத ஒழுங்கு வேகம்தான்!

“நீறில்லா நெற்றி பாழ்”

என்பது நம் நாட்டுப் பழமொழி

“காரில்லா வாழ்வு வீண்”

என்பது அவர்களின் நடைமொழி!

அங்கேதான் எத்தனை வகைக் கார்கள்! சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களுக்குத் தனியே நான்கைந்து கார்கள் உள்ளன. டிரைவர் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே கட்டுப்படியாகாது. டிரைவர் சம்பளமே 1500 டாலர் தேவைப்படும். எனவே பிள்ளைகள், பெரியவர்கள் எல்லோருமே கார் ஓட்டப் பழகிக் கொள்கிறார்கள். அங்கு பயணம் போகிறவருக்குக் காரோட்டத் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. நம் ஊரில் வாடகைச் சைக்கிள் எடுப்பது போல, ஓரிடத்தில் வாடகைக் கார் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றப் போய் விடலாம். வரைபடம் கையில் இருந்தால் போதும் ஊரை வலம் வந்துவிடலாம்.

அன்றாட வாழ்வில் சாதாரணத் தேவைகளுக் கெல்லாம் பிறர் கையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மனோபாவம் மிக மிகக்குறைவு. நம் ஊரில், எங்கேனும் வெளியிடப் பயணம் புறப்படுகையில் நம் மூட்டை முடிச்சுகளை லக்கேஜுகளை தூக்கி வரச் சுமையாள் தேடுகிறோமே, அப்படியெல்லாம் அங்கே ஆள் கிடையாது; கிடைத்தாலும் கூலி கொடுக்க முடியாது.

ஆள் தேட வேண்டாம்!

கூடுமானவரை அவரவர் காரியத்தை அவர்களே செய்துகொள்ள வேண்டும். தன் கையே தனக்கு உதவி என்பதே அங்கு தாரக மந்திரம். ‘வலிமையுடையோர் பிழைத்துக் கொள்வர்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ஷீயீ tலீமீ திவீttமீst) என்பதே அங்கு வாழ்க்கை நெறி.

ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். நெடுஞ் சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் காருக்குப் பெட்ரோல் போட்டுக்கொள்ள வேண்டுமானால், நாமே உரிய இடத்தில் காரை நிறுத்திவிட்டுப் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் எந்திரம் கணக்கிட்டுக் காட்டும். உரிய தொகையைச் செலுத்திவிட்டுப் புறப்படலாம். பெட்ரோல் நிரப்பிவிட ஆளைக் கூப்பிட்டுவிட்டால் அந்தப் பணிக்காக அதிக கட்டணம் கட்டியாக வேண்டும். கார்களை நன்கு பராமரித்து வைத்துக் கொள்ளுகிறார்கள். ரிப்பேருக்காக அதிகம் செலவிடுவதில்லை. சரியாக ஓடாத காரைக் குப்பையில் தள்ளிவிட்டுப் புதுக்காரை வாங்கிக் கொள்ளுகிறார்கள்.

ரிப்பேரா? ஓரம்போ!

காரைப் பராமரித்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்த நாட்டில் சாலையை, இவ்வளவு நீண்ட, பெரிய நெடுஞ்சாலையைப் பராமரித்து வரும் அழகை எளிதில் வருணித்துவிட முடியாது. அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் அங்கே நெடுஞ்சாலைகளையும் சுற்றுப்புறத்தையும் பராமரிக்கின்றனர்; பாதுகாக்கின்றனர். சாலையில் கார் பழுதாகி நின்றுவிட்டால் பிற வாகனங்களுக்கு எவ்வித இடையூறும்  இல்லாமல் அதை நான்காவது (ஓரமாயுள்ள) வழித்தடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். அதில் சமிக்ஞையை மாட்டிவிடுகிறார்கள். அப்படி நிறுத்திய பத்து நிமிடங்களுக்குள் (எப்படித்தான் விவரம் அறிந்து வருவார்களோ) அங்கு போலீஸ் வந்து விடுகிறது. உரிய உதவிகளுடன் காரை அப்புறப்படுத்தி விடுகிறார்கள். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றிக் கண்காணிக்கிறார்கள். ஒருவரால் 5 நிமிடம் தடை ஏற்பட்டாலும் அது பலருக்குப் பல வகையில் பல மடங்கு தாமதத்தையும் நட்டத்தையும் ஏற்படுத்திவிடும் என்று கவனமாக இருக்கிறார்கள்.

இங்கும் அங்கும்

தனிநபர் சுதந்திரமும், சௌகரியமும் எந்த வகையிலும் பொதுநலனுக்காக ஊறாக அமையக் கூடாது. தனிநபர் சுதந்திரத்தை வெகுவாகப் போற்றி மதிக்கும் அமெரிக்கர்கள்- மிகை உணர்வுகளுக்கு முதலிடம் தந்துவரும் அமெரிக்க மக்கள் – பொது நலக் காப்பிலும் எவ்வளவு அக்கறையுடன் விழிப்புடன் உள்ளார்கள் என்பதை அங்குள்ள நெடுஞ்சாலைப் பயணங்களில் கண்டேன்.

தனது சுதந்திரத்தால் தன்னலத்தால் அடுத்தவருக்கு எந்த வகையிலும் சிறுஇடையூறுகூடச் செய்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறார்கள். நம் ஊர்த் தெருக்களில் கார்களின் ஆரன் சத்தம் செவிப்பறைகளைக் கிழித்தெடுக்குமே, அப்படியெல்லாம் அங்கில்லை. என் காதில் ஆரன் சப்தமே கேட்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் சாலை விதிகளை மதித்து நடப்பதால் எல்லார்க்கும் வாழ்க்கை சுகமாக அமைகிறது.

வியப்பில் ஆழ்த்தியது

நான் சிங்கப்பூர் செல்லுகையில் அங்கும் சாலை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். சிங்கப்பூரில் பொது நலத்திற்கு ஊறு செய்யும் வகையில் சாலையில் குப்பையைப்  போட்டாலோ வண்டிகளைத் தடம் மாறி ஓட்டினாலோ கடுமையாகத் தண்டிக்கிறார்கள். அச்சமே அங்கு ஆசாரம். அந்த அச்சத்தால் அங்கே ஒழுங்குமுறை நிலை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்காவில் அச்சத்திற்கு ஆட்பட்டு அடங்குவதை விட, பொறுப்பை உணர்ந்து அவரவர் ஒழுங்கை மதித்து நடக்கும் ஆக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் உயர்வுக்கு இந்த உயர்பண்பும் காரணம் எனக் கருதினேன்.

விவேகானந்தர் பாதச் சுவட்டில்

Image result

மதுரையிலிருந்து புறப்படுமுன் – வழியனுப்பு விழாவில் விவேகானந்தர் விஜயம் பற்றிக் கேட்ட உரைகளின் நினைவுகள் – சிகாகோ நெருங்கும்போது என்னை வலம் வந்தன… சிகாகோ போய்ச் சேர்ந்தோம். நண்பர்கள் வீட்டு நல்லுபச்சாரங்களில் திக்கு முக்காடிப் போனோம்… என் நெஞ்சமெல்லாம் சிக்காகோ நகருக்கு. நம் விவேகானந்த சுவாமிகள் வந்து இந்து சமயம் பற்றிப் பேருரையாற்றிய அந்த வரலாறே வலம் வந்தது. அவர் எழுந்தருளிய, சொற்பொழிவு செய்த, பெருமைமிகு அரங்கிற்குக் கூட்டிச் சென்றார்கள். அவருடைய நினைவை மிகச்சிறப்பாக அங்கே போற்றி வரக் கேள்விப்பட்டு உவகை அடைந்தேன். விவேகானந்தர் பாதம் பட்ட இடத்தை வணங்கித் தொழுதேன். நானும் ஒரு நிமிடம் கண் மூடித் தியானித்தேன். நெஞ்சம் நெகிழ்ந்தது.

சுவாமி விவேகானந்தர் இந்து சமயப் பெருமையைப் பரப்ப இங்கே 1893-இல் வந்தார். அவர் அடிபற்றி இப்போது, திருக்குறளின் பெருமையைப் பரப்ப நானும் ஓர் எளிய வாய்ப்புப் பெற்று சிகாகோ வந்திருப்பதை நினைத்தும் என் நெஞ்சம் மகிழ்ந்தது.

“விவேகானந்த சுவாமிகள் எங்கே? நாம் எங்கே?” என மலைப்பும் அச்சமும் தோன்றினாலும் பேரருளாளரான விவேகானந்தரின் வீர வாசகங்கள் இப்போதும் “ஆகுக, ஆக்குக!” எனவும் “எழுமின் – விழிமின் – செயலாற்றுமின்” எனவும் அன்று போல் இன்றும் அறைகூவி அழைப்பது போலவே உணர்ந்தேன்.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும்வா யெல்லாம் செயல்”      (33)

என்ற வள்ளுவர் வாசகம் உணர்ந்தேன். சிகாகோ நகரைச் சுற்றிப் பார்ப்பதை விட விவேகானந்தர் வருகை பற்றிய விவரங்கள் இங்கே எப்படிப் பேசப்படுகின்றன என்று அறிவதிலேயே ஆர்வம் கொண்டேன். கிடைத்த செய்திகள் சுவையானவை:

சிகாகோ சமயப் பேரவை 1893-இல் கூடியது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் திட்டத்தில் உலகக் கண்காட்சி, கொலம்பியன் பொருட்காட்சி என்றெல்லாம் அமைக்கப்பட்டன. மனித குலத்தின் செல்வப் பெருக்கை மட்டும் அல்லாமல், ‘மனித சிந்தனை’ எனும் நெடுவளத் துறையில் கண்டுள்ள முன்னேற்றமும் அப்பொருட்காட்சியில் எடுத்துக்காட்டப்பட்டன. அதன் ஒரு பகுதிதான் சமயப் பேரவை.

சமயப் பேரவைத் தலைவரான ஜான் ஹென்றி பர்ரோஸ் பாதிரியார் கிறித்தவ மதம்தான் உலகிலேயே உயரிய மதம் என்பதை நிரூபிக்கும் தோரணையில் ஆடம்பரமாகப் பேரவையைக் கூட்டினாராம். உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான சமய, தத்துவவாதிகள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டனராம். எல்லோரும் வந்து மேலைப் பெருமையைப் பார்த்து வாயடைத்துப் போக வேண்டும் என்பதுதான் அமைப்பாளர்களின் நோக்கமாம்.

உலகில் பரவியுள்ள யூதம், புத்தம், இஸ்லாம், இந்து, தாவோ, கன்பூசியம், ஷின்டோ, ஜராதுஷ்டிரம், கத்தோலிக்கம், புராட்டஸ்டண்ட் ஆகிய பத்து மதங்களின் பிரதிநிதிகளும் பேரவைக்கு வந்தனர்; உரையாற்றினர். பேரவை அரங்கிலேயே சிறப்பிடம் தந்து கௌரவிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் உரையாற்ற அழைக்கப்பட்டார். ‘சகோதரிகளே! சகோதரர்களே!’ எனும் அவரது தொடக்கத்தைக் கேட்ட பேரவை உற்சாகப் புயலால் தாக்கப்பட்டாற்போல ஒருவகைப் புத்துணர்ச்சிக்கு உள்ளாயிற்று. உலகிலேயே மிக இளைய அமெரிக்க நாட்டிற்கு, உலகின் மிகப்பழைய நாட்டுத் துறவி வந்து கூறும் கருத்தை விருப்போடு கேட்கத் தயாராயிற்று.

“வெவ்வேறு இடங்களில் தோன்றும் நதிகள் எல்லாம் ஒரே கடலில் சென்று சங்கமம் ஆகின்றன. அதைப் போலப் பல்வேறு குணப்பாங்குடைய மனிதர்கள் பின்பற்றும் சமய வழிபாடும் ஓர் இறைவனையே சென்று அடைகின்றன…”

விவேகானந்தர் ஆற்றிய உரை – திருக்குறள் போல மிகமிகச் சுருக்கமானது. ரொமெயின் ரோலோ என்னும் பேரறிஞர் “தீச்சுடரைப் போன்றது அந்த உரை. ஏட்டுச் சுரைக்காய் போலப் போய்க் கொண்டிருந்த சொற்பொழிவு- களூடே விவேகானந்தர் உரை மட்டும், கேட்பவர்களின் இதயக்கனலை மூட்டிவிட்டது!” எனப் பாராட்டி உள்ளார்.

“ஒரு மதம் வெற்றியடைந்து பிறமதங்கள் அழிந்து போய்விடுவதன் மூலம் உலகில் சமய ஒற்றுமை உண்டாகிவிடும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஒவ்வொருவரும் மற்றவர் உணர்வுகளை ஏற்றுச் சீரணிப்பதோடு, தத்தமது தனித்தன்மையைப் பேணி, வளர்ச்சிக்கான தன் சொந்த மரபுகளின்படி உயர வேண்டும்.” என முத்தாய்ப்பு வைத்த அவரது ஆக்க உரை சகிப்புத் தன்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றுத்தந்தது. பாரதப் பண்பாட்டின் ஆக்கபூர்வமான அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்தது. உலகக்குடிமை உணர்வு, ஓர் உலக அரசு ஆகிய சிந்தனைகள் மலர வழிகோலியது! விவேகானந்த உரைக்கும், திருக்குறள் நெறிக்கும் உள்ள நெருங்கிய உடன்பாட்டைச் சிந்திக்க அப்பிரசுரங்கள் மிகவும் உதவின.

ஒளிமயமான வாழ்க்கை

கடல் கடந்து நெடுந்தொலைவு வந்து வாழும் நீங்கள் உங்களுக்கு நேரிடும் துன்பங்களை எல்லாம் இன்பமாக ஏற்று வெற்றி கண்டு வருகிறீர்கள். வாழ்க்கையினை ஒரு வேள்வி எனக் கொண்டு, உழைப்பெனும் நெய்யூற்றி, அதனைச் சுடர் ஓங்கி எரியச் செய்து வருகிறீர்கள்; பிறர் வாழ்வையும் ஒளிமயமாக்குகிறீர்கள்.

அந்த ஒளி – தாயகத்திற்கும் வெளிச்சம் தரும் வகையில் பரவட்டும். இந்த நாட்டில் நீங்கள் வளமாக விழுதூன்றிச் செல்வம், செல்வாக்கு எனும் நலமான கிளைகளை விரித்துள்ளீர்கள். என்றாலும் வேர்கள் எல்லாம் நமது மண்ணின் மரபில், பண்பாட்டுத் தோட்டத்தில் என்றும் ஊன்றி நிற்கும் வகையில் மிகக் கவனமாக இருக்கிறீர்கள்.

அதற்காகவே இத்தகைய தமிழ் தழுவிய விழாக்களை நடத்துகிறீர்கள்; திருக்குறளுக்கு மேடையமைத்து மகிழ்கிறீர்கள். மதுரையில் நாங்கள் தொடங்கியுள்ள ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ உங்களோடு நேயம் நிறைந்த நட்புறவை நாடி நிற்கும்: நாடியவற்றை எல்லாம் நலம் பெற வைக்கும். உங்கள் அன்புறவால் எங்கள் பணி மேலும் உறுதி பெறும்…

இவையெல்லாம் அங்கு நான் உரையாற்றிய, அன்பர்களுடன் உறவாடிய சிந்தனைச் சிதறல்கள். அங்கு நான் உரையாற்றினேன் என்பதை விட விழாவுக்கு வந்த அன்பர்களின் கலந்துரையாடலில் இருந்தே மிகுதியும் கற்றேன் என்பதே பொருந்தும்.

அன்று விழா முடிந்ததும் அன்பர்கள் பலரும் என்னைச் சூழ்ந்துகொண்டனர். ஒருவர் மேடையில் ஆற்றிய உரை பயன் தந்ததா என அறிய முடிவில் அவரைச் சூழும் அன்பர்கள் கூட்டம்தான் சரியான சான்று. “வெகு நாட்களுக்குப் பின்னர், கருத்தாழம் மிக்க பேச்சைக் கேட்டோம்” என நண்பர் ஒருவர் என்னை மகிழ்விக்க, முகமனுரையாகச் சொல்லி வைத்தார், என்றாலும், பேச்சாளன் எவனுக்கும் இத்தகைய புகழுரையே முதல் ஆசார மரியாதை; நிறைவு அணிமாலை.

மதுரை – காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்வசம் கொடுத்து அனுப்பிய பரிசுகளையும் நூல்களையும் அங்கு வழங்கினேன். சிக்காகோ தமிழ்ச் சங்கம், நியூயார்க் தமிழ்ச் சங்கம், நியூஜெர்ஸி சங்கம் ஆகியவற்றிலிருந்து விழாவுக்கு வந்தவர்கள், நான் அங்கெல்லாம் பேச வரவேண்டும் என்றார்கள்.

விருந்துக்குக் கூட்டிச் செல்ல – நண்பர்கள் வெங்கடராமானுஜமும் நாராயணனும் நெடுநேரம் காத்திருந்த சுவடு – அவர்கள் முகபாவனையில் தெரிந்தது. செவிக்குணவு ஆனபின் வயிற்றுக்கு உரிய விருந்து வேண்டும் அல்லவா?

மாநாட்டு மலர்

ஒரு மாநாட்டை நடத்துவோர், அது தொடர்பான மலர் ஒன்றை வெளியிடுவது வழக்கமாகியுள்ளது. மாநாட்டு உரைகள் எல்லாம் காற்றோடு போய்விடாமல் அவற்றைச் சரமாகத் தொகுத்து அச்சிடுவதால், அவ்வுரைகள் நிலைபெற்றுப் பயன்படுகின்றன. இந்த 14-ஆம் ஆண்டுவிழாவை ஒட்டி அழகான மலர்த்தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். வழக்கமாக சமூக சேவை தொடர்பான கருத்தரங்கங்களையே நடத்தியமைக்குப் பதிலாக இம்முறை ‘தமிழ்ப் பாரம்பரியத்திற்கு நமது வணக்கம்’  எனும் பொதுத்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். மலரில் பல்வகை மணங்கள். தமிழ்க்கவிதைகள் பல தலைப்புக்களில்…. பயன்தரும் சிந்தனை விருந்துகள்… அமெரிக்காவில் வளரும் தமது குழந்தைகளுக்கு நினைவூட்டுவதற்காக, தமிழ் எழுத்து அகரவரிசை முழுவதையும் மலர் அட்டையின் பின்புறத்தில் எடுப்பாக அச்சேற்றியிருந்தார்கள். ஆங்கிலச் சூழலில் வளரும் பிள்ளைகளிடம் அருந்தமிழ் மொழியை அறிமுகப்படுத்த அவர்கள் கொண்டுள்ள அக்கறை புலப்பட்டது. அதே சமயம், என் மனம், செந்தமிழ் நாட்டுத் ‘தீது சேர்’ பள்ளிகளுக்குத் தாவியது. ஆங்கிலக் கல்வி பயிலச் சென்ற பாரதி அன்று மனம் நொந்து பாடிய வரிகள் இன்றும் பொருந்திட என் நினைவில் ஊசலாடின.

“நலமோர் எட்டுணையும் கண்டிலேன் & இதை

     நாற்பதினாயிரம் கோயிலில் சொல்லுவேன்”

எனச் சத்தியம் செய்தான். அந்த அவல நிலை….. இப்போது நச்சுக்காய்ச்சலாக, போலி நாகரிகமாகத் தமிழ்நாட்டு, மழலைப் பள்ளிகளில் தலை எடுத்து வருவதை எண்ணிப் பார்த்தேன். மிக விரிந்து வரும் கல்வித் தேவைகளை எல்லாம் ஈடு செய்ய அரசினால் மட்டும் இயலாதபோது – தனியார் முயற்சிகள் – கல்விக் கூடங்களைத் தொடங்கி நடத்த முற்படுவது காலம் கருதிய சமுதாயப்பணிதான். இப்பள்ளிகளில் தாய்மொழிக்கல்விக்கு இடம் தராமல், ஆரம்பம் முதலே குழந்தைகளை – பெற்றோர்க்கும் பிறந்த மண்ணுக்கும் அந்நியராக்கும் ஆகா முயற்சி தமிழ்நாட்டில் குடிசைத் தொழில் போல வளர்ந்து வருகிறது. தொண்டு நோக்கம் இன்றி – தொழில் நாட்டத்தோடு மட்டும் நடத்தப்படும் பெரும்பாலான மழலைப் பள்ளிகள், தமிழ்மொழியையும் தாயகப் பண்பாட்டையும் அறவே மறக்கச் செய்யும் அழிவுக்கே துணைபுரிகின்றன.

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்பது தமிழர் போற்றும் தொடக்கக் கல்விக் கொள்கை. மொழியின் அகரம் முதலிய எழுத்து முறைகளைக் குழந்தையின் மனதில் பதியும் வகையில் முயன்று கற்பிப்பவனே இறைவனுக்கு நிகராவான். மேல் வகுப்புக்களில் பாடம் புகட்டுபவன் கருத்தைக் கற்பிப்பவன்; எழுத்தை போதிப்பவன் போல இறைவன் நிலையில் வைத்து அவன் எண்ணப்பட மாட்டான். ஆசானைப் போலவே கல்விக்கூடங்களும் இறைமை நிலைக்குத் தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். மதுரையில் நான் நிர்வகிக்கும் பள்ளி, ஆங்கில வழி மேனிலைக் கல்வி நிலையம்; எனினும் தமிழ் மொழிக் கல்விக்கும் திருக்குறள் பயிற்சிக்கும் ஆரம்ப நிலை தொட்டே உரிய ஆக்கம் தந்துவருகிறேன்.

இவ்வகையில் உங்களிடமிருந்து புதிய தகவல்களையும் புதிய அணுகுமுறைகளையும் இங்கு வந்து அறிந்து கொண்டேன். அயல்நாடுகளுக்கு வரும்போது தான், தாய்மொழியான நம் தமிழின் அருமை பெருமை தெரிகிறது; அதுவும் உங்களிடம் வந்தபோது இன்னும் விரிவாக, தெளிவாகப் புலப்படுகிறது.

ஆண்டு மலரில் திருவள்ளுவர் உருவத்தை அட்டைப் படமாகப் போட்டிருந்தார்கள். அந்த அழகிய கையேட்டில் தமிழ்நாட்டு வரைபடத்தை மாவட்டப் பெயர்களுடன் அச்சிட்டிருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. “தமிழ்நாட்டில் இப்போது எத்தனை மாவட்டம்?” எனக் கேட்டால் தமிழ்நாட்டவர்களுக்குச் சரியாகச் சொல்லத் தெரியாது என்பது உறுதி. அதைச் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று நம்மில் பலர் கவலைப்படவும் மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் வாழும் அன்பர்கள், ஆங்கில மொழியில் தமிழ்நாட்டு வரைபடத்தை அச்சிட்டு எங்கெங்கு நம் உதவிகள் தேவைப்படும் என விளக்கியும் இருந்தமை என் மனதை எப்படியெல்லாமோ நெருடியது.

மாநாடு நடந்த டெய்டன் நகரைப் பற்றிய விவரங்களையும் மலரில் தந்திருந்தார்கள். பொட்டல் காடாய் இருந்த இந்தப் பிரதேசத்தில், சின்சினாட்டி எனும் பகுதியிலிருந்து – பூர்வ குடியினரும் புதுக்காலனியரும் குடியேறி – தம் தளபதி டெய்டன் பெயரில் இந்த நகரை உருவாக்கினார்கள். ஊருக்கு – நகருக்குப் பெயரிடும்போது அதோடு அதன் வளர்ச்சியோடு தொடர்புடையவர்களையே நினைத்துப் போற்றும் மரபை, மாண்பைப் பின்பற்றுகிறார்கள்.

நகரங்களுக்கெல்லாம் வைரம் போல், பன்முகப் பட்டை தீட்டப்பட்ட வைர நகராகத்  திகழும் இங்கேதான், ஆகாய விமானத்தை முதன்முதலில் இயக்கிக் காட்டிய – அந்த ரைட் சகோதரர்கள்  பிறந்தார்களாம்.

அந்தப் பெருமைக்கேற்ப, உலகப்புகழ் பெற்ற ஜெனரல் மேட்டார்ஸ் நிறுவனம், விமானப் படைத்தளம், விமானத்தொழில் நுட்பக்கூடம் – எனும் பிரபல தொழில் அமைப்புக்கள் உள்ளன. ஆண்டுதோறும் இங்கு நிகழும் சர்வதேச விமானக் கண்காட்சிகளை (கிமிஸி ஷிபிளிகீ) கண்டுகளிக்க, புது நுட்பங்களை அறிய நம் ஊர்ச் சித்திரைத் திருவிழாப் போலக் கூட்டம் வருமாம். புதுரகப் போர் விமானங்கள், ஆகாயத்தில் அசுரச் சாதனைகள் புரிந்து பறப்பதைக் காணச் சென்ற ஆண்டு, இந்த விமானங்கள் காட்சிக்கு இரண்டு லட்சம் பேர் வந்தார்களாம்.

இங்கு நடக்கும் தமிழ் விழாக்களுக்கு அமெரிக்காவின் பிற பகுதிகளில், நெடுந்தொலைவில் பணிபுரியும் அன்பர்கள் எல்லாம் திரண்டு வந்து கூடி விடுகிறார்கள். நமது பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பரிவர்த்தனை செய்து கொள்வதுடன், அமெரிக்க அறிஞர்களையும் கூட்டி வந்து உறவினை வலுப்படுத்திக் கொள்கின்றனர். திருக்குறள் முதலிய இலக்கியங்களின் வழிவரும் பண்பாட்டுக் கோலங்களை அறிய அமெரிக்கர்கள் அதிகம் விரும்புவதாக அறிந்தேன்.

மனிதர் வாழும் வாழ்க்கை நெறியே பண்பாடு, திருக்குறளின் வாழ்க்கை நெறி, அக்காலச் சூழலில் அமைந்த சமூக, சமய, அரசியல் வாழ்வு, பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றை விளக்குகிறது. ஆனால் எக்காலத்திற்கும் பொருந்தும் அறங்களை உண்மைகளின் அடிப்படையில் விளக்குவதால் முக்காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதோடு பண்பாட்டுத் தொடர்ச்சியை இணைக்கும் இனிய சரடாகவும் இருக்கிறது.

திருவள்ளுவர் ‘பண்பு’ எனும் சொல்லைப் பல நிலைகளில் ஆண்டிருந்தாலும் – ‘பண்பாடு’ என்பதனை நாகரிகம் என்ற சொல்லால்தான் குறிப்பிடுகிறார்.

“பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

     நாகரிகம் வேண்டு பவர்”       (580)

இக்காலத்தில் – நாகரிகம் – பண்பாடு எனும் இரண்டுமே ஒரே பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டாலும், பண்பாடு – என்பதே ஆழ்ந்த பொருளமைதி உடையதாகத் தெரிகிறது. உள்ளச் செம்மையைக் காட்டுவதற்கே அச்சொல் பயன்பட்டது. அக்காலச் சூழலில்- உள்ளச் செம்மையோடு, அறம் தழுவி வாழ்ந்தமையே- பண்பாட்டு வளர்ச்சியாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று நாகரிகம் என்பது விரிந்த பொருளில் பேசப்படுகிறது. உடை, ஒப்பனை, செல்வப்பகட்டு என்பன இன்று நாகரிகப் புறவடிவங்களாக ஜொலிக்கின்றன. வசதியோடு வாழும் அமெரிக்க மக்களைப் போன்றவர்கள் ஆயுத, பொருளாதார பலத்தால் பிறரை அடக்கி ஆள்பவர்கள் நாகரிகத்தில் உச்சிக் கொம்பில் இருப்போராகவும், அஞ்சி தம் நாட்டளவில் அடங்கி இருக்க நேர்ந்தோர் காட்டுமிராண்டிப் பழங்குடியினர் போலவும் எண்ணப்படுகின்றனர்; இகழப்படுகின்றனர். ஆனால் அமெரிக்க அறிஞர்கள் சிலர் – தமது நாகரிக மேதகவையும் தாண்டி வந்து – உள்ளப் பண்பே உயரிய நாகரிகம் – எனப் பேசும் திருக்குறளின் வாழ்க்கைத் தத்துவங்களை அறிந்து கொள்ள விழைகின்றனர் என்பது மகிழ்ச்சியளித்தது.

அமெரிக்கத் தமிழ் மாநாடுகள் அவர்களிடையே இந்த விழைவை மேலும் வளர்த்திருப்பதை டெய்ட்டன் விழாவிலேயே காண முடிந்தது.

காலங்கள்தோறும் திருக்குறள் ஆட்சி

உலக மக்களின் சமுதாயப் பெருந்தோட்டத்தில் கோடானு கோடிச் சிந்தனை மலர்கள் பூத்துள்ளன. அவ்வாறு பூத்தவற்றுள் பெரும்பாலானவை, ஒரு பகல் வாழ்க்கையோடு, வாடி உதிர்ந்துபோய் உள்ளன. ஒரு சில மட்டுமே, கற்பகத்தருப் பூக்களைப் போல, காலம் கடந்தும் பயன்தந்து வருகின்றன. உலக சமயநூல்களோடும் தத்துவ ஏடுகளோடும் இவ்வாறு நிலைபெற்றவை கலைத்திறப் படைப்புக்களாகக் காலம் வென்று நிலவுகின்றன.

‘காலம் வென்று நிலவுதல்’ என்பது கடுமையான ஓர் உரைகல். சமயத் தத்துவமாயினும் சமுதாயச் சிந்தனையாயினும் – அது உருவாக்கப்பட்ட காலத்திற்கு மக்களைக் கூட்டிச் சென்று அறிவுறுத்தலாம். அது மட்டுமின்றி, மக்கள் தலைமுறைகள் வாழும் காலம் தோறும் – உடன்வந்து மிகு நன்மை தருவதாகவும் நீடிக்கலாம். திருக்குறள் காலத்தை வென்ற நூல் என மேடைகளில் முழங்கக் கேட்கிறோம். திருக்குறள் தான் எழுதப்பெற்ற காலப் பொதுமையைப் புலப்படுத்துவதோடு, நாம் வாழும் காலப் புதுமைக்கும் உகந்ததாக இருவழியில் நிலைபெற்று விளங்குகிறது. இதுவே திருக்குறளின் சிறப்பு, சமய நூல்களைப் போல. அவற்றையும் விட இது பெற்றுள்ள அழியாச் சிறப்பு. வேத உபநிடதங்கள், பகவத் கீதை, விவிலியம், திருக்குரான் ஆகியவற்றோடு திருக்குறளை ஒப்பிட்டு அது ‘தமிழ் வேதம்’ என்றும் ‘உத்தர வேதம்’ என்றும் பலர் போற்றி முழங்குவர். எனினும் வேதம் – வேதாந்தம் – எனும் சமயச் சிமிழ்களுக்குள் மட்டும் வள்ளுவத்தை அடக்கி, அதன் காலப் பொதுமையை விளக்கிக்காட்ட முற்படலாகாது. “சமயக் கணக்கர் மதி வழி கூறாமல் உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவமே நலம் தருவது” எனக் கொள்ளவேண்டும்.

‘உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவம்’ எனும் கருத்து நம் சிந்தனைக்கு உரியது. வள்ளுவர் வாழ்ந்த காலத்தில், தமிழ்நாட்டிலேயே பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்த போதிலும், பல வழிபாட்டு முறைகள் இருந்த போதிலும் அவற்றைக் கடந்து இறை நம்பிக்கை, வழிபாட்டுப் பொதுமை, சான்றாண்மை முதலிய பொது அறங்களையே அவர் அடிப்படையாகக் கொண்டார்; எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வகையில், சால்பு நெறிகளையே வலியுறுத்தினார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

     தெய்வத்துள் வைக்கப் படும்”         (50)

என இங்கு வாழ்வாங்கு வாழும் முறைக்கே அழுத்தம் கொடுத்தார். வான், நரகு, இருள்சேர் இருவினை, எழுமை, ஊழ் என்றெல்லாம் வள்ளுவர் துறக்க உலக நம்பிக்கைகள் பற்றிச் சொல்லியுள்ளார். எனினும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதையே முன்னிலை அமர வாழ்வாக்கிக் காட்டுகிறார். மனித நேயமே – எல்லோரும் ஏற்கத்தக்க சமய நெறி- என சமரச விளக்கம் தந்தார். இந்த மனிதநேயச் சிந்தனைகளே எக்காலத்திற்கும், எந்த நாட்டிற்கும் ஏற்றவை. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனும் பொது அறம் உலகெல்லாம் நிலவ வேண்டும் என்பதே அறிஞர் விழைவு: என்றாலும், அது என்று கைகூடும்; என்றைக்கு மனித குலம் உய்யும்?

அந்த உய்வு நாள் வரும் வரை ஓய்ந்து இருக்க முடியுமா? வள்ளுவர் அப்படிச் சொல்லவில்லை. சமய வழி, வகுப்பு வழி, சாம்ராஜ்ய வழி பலப்பலவாக இருந்தாலும், ஓரிடத்தில் – ஒரு கட்டமைவில் வாழ நேர்ந்த பல்வகைப் பிரிவனர் – தம் அனைவர் நலத்திற்கும் பொதுவான உணர்வுகளைப் பேணி வளர்த்து வாழ வேண்டும் என்கிறார்.

“அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய்

     தந்நோய்போல் போற்றாக் கடை?”          (315)

என்பதை விட வேறொரு சமய நெறி உண்டா என வினவுகிறார்.

“மறந்தும் பிறன் கேடு சூழற்க”       (204)

“பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்”          (972)

“அறத்தான் வருவதே இன்பம்”       (39)

“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”        (131)

என வள்ளுவர் கூறிய இவையெல்லாம் எக்காலத்தவர்க்கும், எச்சமயத்தவர்க்கும் ஏற்புடைய பொதுமைக் குறள் போதனைகள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் கூறியவை இன்றும் அப்படியே பொருந்துகின்றன. இந்தப் பொருத்தமே காலம் வென்று வாழும் நூல் எனும் பெருமையைத் திருக்குறளுக்கு அளிக்கிறது.

இன்றைய வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்கள்; புதுப்புதுப் பிரச்சினைகள். இவற்றிற்கெல்லாம் தீர்வு தேடி அலைவதே ஒரு பெரிய வாழ்க்கைப் போராட்டமாக உள்ளது. தக்க தீர்வுகளைத் தேடுவோர்க்குத் திருக்குறள் வழிகாட்டுகிறது.

அதிலும் வள்ளுவத்தின் தனித்தன்மை புலப்படும். தீர்வுகளை எதிர்மறைப் பிணக்கின்றி, உடன்பாட்டு முறையால் நம்பிக்கையூட்டிச் சொல்லும் தன்மை விளங்கும். சான்றாக ஒரு குறளைச் சொல்ல விழைகிறேன்.

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

துன்பமும் முடிவில் ஒருவகையில் இன்பமானதே எனக் கருதிச் செயலாற்றுபவன், இறுதியில் தன் பகைவரும் போற்றித் தன்பால் வரக்கூடிய சிறப்பினை அடைவான் என்று ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்ளும் உயர்தனிச் செயல் முறையை இக்குறள் சொல்லுகிறது; அத்தகையவருக்குத் தமது பகைவரும் விரும்பத்தக்கவையில் சிறப்புகள் வந்து சேரும் என நம்பிக்கையூட்டுகிறது.

வள்ளுவன் புகழ் வையகம் எல்லாம்!

“அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்

     திறம்தெரிந்து தேறப் படும்”          (501)

என்பது பொருட்பாலில் ‘தெரிந்து தெளிதல்’ அதிகாரத்தின் முதல் குறள்.

தனக்குத் துணையாக இருக்க வல்லோரைத் தெரிந்து தெளிய வழிகாட்டும் குறட்பா இது. அறத்தில் நம்பிக்கை உறுதி உடையவரா? பொருள் வகையில் நாணயம் ஆனவரா? இன்ப வேட்கைக்கு எளிதில் அடிமையாகக் கூடியவரா? தன் உயிர்க்கு அஞ்சி நெருக்கடியில் நம்பியோரைக் கைவிட முற்படுபவரா? என்றெல்லாம் ஒருவரை ஆய்ந்து தெளியவேண்டும் எனக் கூறுகிறது இக்குறள்:

தலைமைப் பண்பு விழைவார்க்கு மட்டும் இக்குறள் பொருந்தும் என நினைக்காமல் தலையாய நூலாக நாம் ஏற்க விழையும் நூலுக்கும் இத்தேர்ச்சி முறை பொருந்தும் என்பது என் கருத்து. அந்த வினாடிக்கு மட்டும் இன்பம் தந்து பின் மறக்கச் செய்யும் நூலை விட எக்காலத்திற்கும் எச்சூழலிலும் கைகொடுத்து உதவ வல்லதே சிறந்த நூல். அப்படிச் சிறந்து நிற்கும் தலைமை நூலாகத் திருக்குறளை நாம் பெற்றுள்ளோம். எனினும் எந்த அளவுக்கு அதில் தெளிவு பெற முயல்கிறோம்?

ஒருவனுடைய அறிவை ஆராய்கையில், மறக்கக்கூடாத அடிப்படையான உண்மை ஒன்று உண்டு. எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் என இவ்வுலகில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓரளவேனும் உலக ஞானம் இருக்கவே செய்யும். அதுபோலச் சிறந்த அறிஞரிடத்தில் ஓரளவு அறியாமை இருப்பதும் இயல்பு.

“அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

     இன்மை அரிதே வெளிறு”           (503)

எனும் இக்குறட்பா, திருக்குறளைப் போற்றிப் பயில்வார்க்கும் ஒரு வகையில் பொருந்தும். திருக்குறளின் அரிய கருத்துக்களைப் பிழையறக் கற்றாலும் கூட, நமக்கு அதனை முழுதுறத் தெரிந்து கொண்டதொரு மனநிறைவு ஏற்படுவதில்லை.

சமுத்திரக் கரையில் நின்று அதனை நாள்தோறும் பார்த்தாலும் கூட மீண்டும் மீண்டும் சென்று அலை எழுச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எவர்க்கும் குறைவதில்லை. வானத்தில் வலம்வரும் பூரணச் சந்திரனை எத்தனைதரம் பார்த்தாலும் மனம் சலிப்பதில்லை. மீண்டும் அதை அண்ணாந்து பார்க்கவே ஆவல் பிறக்கும். தெருவில் மணியோசை எழுப்பி வரும் கோவில் யானையைப் பலமுறை பார்த்திருந்தாலும், அது மறுநாள் மணியடித்து வரும்போதெல்லாம், சிறுபிள்ளை போல மீண்டும் அதனை வியப்புடன் பார்க்கும் விருப்பில் இருந்து யாராலும் விடுபட முடிவதில்லை. திருக்குறள் பயிற்சிக்கும் இது பொருந்தும். எத்தனை முறை புரட்டினாலும் திருக்குறள் எழுப்பும் அறிவுரை அலைகள் ஓய்வதில்லை; பலமுறை பயின்றாலும் அதன் முழுநிலவொளி ஊற்று வற்றிப் போவதில்லை. எத்தனை தடவை திருப்பிப் பார்த்தாலும் அதன் பொருட்பெருமை வியப்பூட்டத் தவறுவதில்லை.

“வள்ளுவன் புகழ் வையமெல்லாம் வாரி இறையடா தமிழா” என இளமையில் கேட்ட திரைப்பாடலை இன்று கேட்டாலும் நமக்குள் அது கிளர்ச்சியூட்டாமல் இருப்பதில்லை. அப்பாடலின் எடுப்பான இசையைவிட, அழுத்தமான பொருட்செறிவே அப்பாடலை இன்றும் நினைக்கச் செய்கிறது.

வையகம் முழுமைக்கும் உரிய நூல் திருக்குறள். அதனை இயற்றிய திருவள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் எனினும் அவர் யாத்த நூலே அவரை உலகறியச் செய்துள்ளது. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனும் தொடர் நூல் வழியாக – ஆசிரியரையும் உலகப் பொதுவுடைமை ஆக்கிவிட்டது.

வள்ளுவம் – உலக நூல், அறம் – பொருள் – முதலான அதன் கருத்துக்கள், ஒருநாட்டார்க்கோ, மதத்தார்க்கோ மட்டும் உரியன அல்ல. திருக்குறள் முழுதும் வரும் ‘உலகு’ எனும் சொல்லாட்சியே இவ்வுண்மையை நிலைநிறுத்தும். பழந்தமிழ்ப் பண்பாட்டின் மூல வித்தாகிய – ‘உலகு’ எனும் கருத்து விரிந்த சிந்தனை மரமாகிச் செழித்திருப்பதே திருக்குறள் எனும் பண்ணை நிலம். பின்னர் உலகம் தோன்றிய சீவகாருண்ய, மனிதாபிமான, சமதர்ம உணர்வுகள் அனைத்தும் திருக்குறள் எனும் பேராலமர நிழலுக்குள் அடங்கிவிடுவன என்றே சொல்ல வேண்டும்.

‘உலகு ஒரு குலம்’ என உபதேசம் செய்து நின்று விடாமல் ஒருகுலச் சிந்தனை உருவாவதற்கான கருவிகளையும் திருக்குறள் அளிக்கிறது. அவற்றுள் முதல் கருவி அன்பு,

“அன்பின் வழியது உயிர்நிலை; அஃதுஇலார்க்கு

     என்புதோல் போர்த்த உடம்பு”       (80)

என்பது அக்கருவியின் ஆற்றலைக் கூறுகிறது. அன்பு, இயற்கை உணர்வு; எல்லா உயிர்களிடமும் விளங்குவது; அனைத்தையும் வளர்ப்பது; பரிணாம வளர்ச்சியாக; கூர்தல் அறமாக என்றும் நிலவுவது, அந்த அன்பு விரைந்து வளரும் களம் மாந்தர் மனம். மனத்தாலமைவதே வாழ்வு. அன்பின் வழியே வாழ்க்கை வளர்தல் வேண்டும். அவ்வாறு வளரும் வாழ்வு பண்பும் பயனும் தரும்; வாழ்க்கைக் கலையாக நீடு நிலவும்.

வள்ளுவம் வழங்கும் மற்றோர் ஆற்றல் மிகு கருவி: அறம்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதன்; அனைத்துஅறன்”(34)

என்றும்,

“அழுக்காறு, அவா,வெகுளி, இன்னாச்சொல் நான்கும்

     இழுக்கா இயன்றது அறம்”           (35)

என்றும் குறள் நெறி கூறுகிறது அன்பு – அறம் எனும் குறள் நெறிகளைப் பயன் கொள்ளும் துறைகளாக, இல்வாழ்க்கை தொட்டு எல்லா அதிகாரங்களும் படிக்கட்டுப் போல அமைக்கப்பட்டுள்ளன.

‘திருக்குறள் – ஒரு சுரங்கம்’ என்பார் திரு.வி.க. அதிலிருந்து இதுவரை எத்தனையோ கருத்துச் செல்வங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு ஆயிரமாயிரம் இலக்கியங்களுக்கு ஆபரணக் கற்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. அணிவோர்க் கெல்லாம் விலைமதிப்பற்ற அழகுச் செல்வங்களாக இன்றும் துலங்குகின்றன.

‘திருக்குறள் ஒரு பெரிய சந்தை’ என்பார் அறிஞர் வ.சுப.மா. அங்காடியில் பல்வகைப் பண்டங்களும் பகர்ந்து விற்கப்படுவது போல, வள்ளுவச் சந்தையில் எல்லாப் பொருளும் விலை கூறப்படுகின்றன. எத்தன்மையுடை யோர்க்கு, எப்பொருள் தேவையோ, அதனை இச்சந்தையில் பெறலாம். நடப்புச் சந்தையில் பல இனச் சரக்குகளும், ஓரினத்துள்ளே பலவகைப் பொருள்களும் உள்ளமை போலத் திருக்குறள் சந்தையில் உள்ள அதிகாரங்களும் பல இனச்சரக்குகள். திருக்குறள் சந்தைப் பொருள்களை எல்லாம் ஒருவரே ஏகபோகமாகக் கொள்முதல் செய்ய முடியாது; செய்யவும் இயலாது. கைப்பணத்திற்கேற்பவும், அன்றாடத் தேவைக்கேற்பவும் பண்டங்களை வாங்கினால் போதும்; வாங்கிக் கொள்வதால் எல்லாப் பொருளும் விற்பனையாகிவிடும் தன்மையுடையன.

‘திருக்குறளை ஓர் உயிர்மருந்துக் கடை’ என ஒப்பிடுவார் அறிஞர் வ.சுப.மாணிக்கனார். அவரவர் நோய்க்கேற்றபடி, உரிய மருந்துகள் கடையில் இருப்பதைப் போல, நம் வாழ்வுக்கேற்ற தனி அறங்களும் பொது அறங்களும் திருக்குறள் மருந்துக் கடையில் உண்டு. அவற்றை நாமே வாங்கிப் பிணிதீர்த்துக் கொள்ளலாம்.

பலருக்கும் பல வகையில் பயன்படும் சிறப்பு வாய்ந்த தனிப்பொது நூலாகிய திருக்குறளை இலக்கியமாகக் கருதிக் கலைநயம் காணலாம்; ஒழுக்க நூலாகப் பேணலாம்; அரசியல் நூலாகப் படிக்கலாம்; காலம் மாறினாலும் அடிப்படை அறங்கள் மாறுவதில்லை எனும் பேருண்மையை அறியலாம்.

சமய நூல்களுக்குக் கொடுக்கும் உயரிய இடத்தைத் திருக்குறளுக்குத் தந்து அனைத்துச் சமயத்தவரும் ஒருங்குகூடி இங்கே விழா எடுத்துள்ளீர்கள். உங்கள் பேரன்பையும் பெருமுயற்சியையும் இங்கு வந்துள்ள நாங்கள் மட்டுமின்றி தமிழ் உலகும் வாழ்த்தி நிற்கும் என நம்புகிறேன்.