என்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1

என்னைச் செதுக்கிய நூல்*

Image result for thirukkural

எனக்கு வந்தவுடனே ஒருவிதப் பெரிய திகைப்பு. இந்த இனிய மாலைப்பொழுதில் என்னைப் பற்றி அன்பின் காரணமாக அளவுக்கு மீறிப் புகழ்ந்து உரைத்தார்கள். இங்கே அமர்ந்திருப்பவர்கள் பல துறைகளில் சிறப்புப் பெற்றவர்கள்; பெரும் பேராசிரியர்கள். கற்றோர் முன் பேசுகின்றபொழுது பிழை ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. இருந்த போதிலும்கூட பிள்ளையைத் தந்தை பார்த்து மகிழ்வது போல நான் பேசுகின்ற சொல்லைச் செவிமடுத்து என்னை வாழ்த்து வார்கள் என்று கருதுகிறேன். சாகித்திய அகாதெமி கொடுத்திருக்கிற இந்தப் பெருமை என்றும் நினைந்து மகிழ்வதற்கு உரியது. இதனை நான் மிகப்பெரிய பேறாகக் கருதுகிறேன்.

இந்நாள் எப்படி அமைந்திருக்கிறது பாருங்கள்: 9-9-2007. இதைக் கூட்டினால் 9 வருகிறது. எப்படிக் கூட்டினாலும் 9 தான் வருகிறது. ஆகவே இந்த நாள் என் மனதில் இருந்து நீங்காது. இது ஒரு பசுமையான நினைவுகளைச் சுமந்திருக்கும்.

‘என்னைச் செதுக்கிய நூல்கள்’ என்று சாகித்திய அகாதெமி நண்பர்கள் தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். செதுக்கிய என்று பார்க்கிற சமயத்திலே அது ஒரு சிற்பமாகத்தான் இருக்கும். ஒரு பாறை இருக்கிறது. அதனை ஒரு சிற்பி சிலைவடிக்க நினைக்கிறார். சிற்பம் வடிக்க நினைக்கிறார். மிகச்சிறந்த பாறையைத் தேர்ந்தெடுக்கிறார். அதில் ஒரு சிறந்த அழகிய உருவத்தைக் காணுகிறார். அந்தப் பாறையில் வேண்டாத பகுதியை நீக்கிவிடுகிறார். அங்கே அழகிய சிற்பம் கிடைக்கிறது. அதற்கு எந்த உளியைப் பயன்படுத்துகிறார்? கலைநயத்தை, கற்பனையை, அறிவை, அனுபவத்தைப் பயன்படுத்தி மன ஒருமைப்பாட்டுடன் அந்தச் சிலையை வடிக்கிறார். பாறையில் உள்ள வேண்டாத பகுதியை நீக்கியவுடனே, அழகிய சிற்பம் அமைந்து விடுகிறது. அதுபோல வாழ்க்கை ஒரு பாறையாக இருந்தால் அதில் வேண்டிய பகுதிகளை வைத்துக் கொண்டு, வேண்டாத பகுதியை நீக்கிவிட்டால் அழகிய வாழ்க்கை என்னும் சிற்பம் அமைந்து விடும் என்பதைச் சுட்டிக் காட்டுவது போல இந்தத் தலைப்பை மிகச் சிறப்பாகக் கொடுத்திருக் கிறார்கள்.

ஒரு மனிதனை உருவாக்குவது எது? சந்தர்ப்பமா? சூழ்நிலையா? எது அவனை உருவாக்குகிறது? ஒரு வித்து இருக்கிறது. அதை நல்ல விளைநிலத்தில் போடுகிறோம். நல்ல விளைநிலத்தில் போடுகின்ற சமயத்திலே அங்கு அந்த விதை தன்னை முளைவிட்டுக் காட்டுகிறது. அந்தச் செழிப்பு மண்ணுடைய செழுமையைக் காட்டுகிறது. எந்த விதை போட்டோமோ அந்த விதை தன் கருவை வெளிப்படுத்துகிறது. ஆகவே சூழ்நிலையும், சந்தர்ப்பமும் ஒரு விதையின் தோற்றத்தை மண்ணிற்கு ஏற்ப மாற்றி விடுகிறது. ‘விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?’ மாம்பழ விதை போட்டால் மாமரம் கிடைக்கும். பலா விதை போட்டால் பலாமரம் கிடைக்கும். எந்தக் கனி விதையைப் போடுகிறோமோ அந்தக் கனி மரம் கிடைக்கும். ஆகவே மனிதனைச் சூழ்நிலையும், சந்தர்ப்பமும் உருவாக்குகின்றனவா என்றால் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் உருவாவதற்குத் துணைபுரிகின்றனவே தவிர அவனை உருவாக்குவதில்லை அதுதான் ஒருமனிதனுடைய குலச்சிறப்பு.

“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்

     குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்” (959)

இங்கே நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது: சாதி என்பது வேறு. குலம் என்பது வேறு. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன திருவள்ளுவர், குலச்சிறப்பு சொல்லுகின்ற பொழுது எந்தச் சாதியில் பிறந்தாலும் எங்கே பிறந்தாலும் சரி ஒரு பாரம்பரியம் என்று சொல்கிறோமே, அதுபோல பாரம்பரியச் சிறப்பு உடையவர்களுக்கு இயல்பாகவே சில பண்பாடுகள் அமைந்திருக்கும். அவர்களிடம் ஒழுக்கம், நேர்மை, பிறர்க்கு உதவுதல், அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் என்ற சான்றாண்மைப் பண்புகள் மரபு வழியில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட குடும்பங்கள் தனிச்சிறப்புடையனவாக இருக்கும். அதனால் குலச்சிறப்பு என்பது முக்கியமான ஓர் உண்மை. அதுமட்டுமல்லாமல் பழகுகின்றவர்கள், படித்த புத்தகங்கள், சார்ந்து இருப்பவர்கள் இவைகளெல்லாம் ஒருவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்று சொன்னால் நான் வரலாற்றைச் சொல்லுகின்ற அளவுக்குப் பெருமையுடையன் அல்ல இருந்தாலும் இந்த நேரத்தில் சொல்வது பொருந்தும் என்பதனால் சில செய்திகளை நான் சொல்ல விரும்புகிறேன்.

என்னுடைய கிராமத்தில் இருந்த எனது தாத்தா ஓர் அருளாளராக இருந்தார். அவர் செல்வாக்கு உடையவராக இருந்தார். ஆசுகவி என்ற பட்டம் பெற்றவராக இருந்தார். அதுபோல என் தந்தையும் அதிகம் படிக்காதவராக இருந்தாலும் கூட ஓர் அருளாளராகவும் பிறர் நலம் பேணக் கூடியவராகவும் இருந்தார். ஏறக்குறைய 150 ஆண்டுகள் என்று சொல்லலாம். அவர்கள் நிறைய அறப்பணிகள் செய்தார்கள். சிவன் கோயில் ஒன்று, பெருமாள் கோயில் ஒன்று, குளம் ஒன்று கட்டினார்கள். இப்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்.

அந்தப் பாரம்பரியப் பண்புகள் என்னை அறியாமலே என்னுள் வித்திட்டு இருக்கின்றன என்று நான் கருதுகிறேன். நான் உருவாவதற்கும் திருக்குறளில் ஈடுபாடு கொள்வதற்கும் இயல்பாகவே அவர்களுடைய வித்தில் இருக்கக்கூடிய கரு எனக்கு கிடைத்திருக்கிறது என நான் கருதுகின்றேன். ஆகவேதான் நான் வேறு துறையில் – பொருளாதாரத் துறையில் – படித்திருந்தாலும்கூட இயல்பாகவே இது அமைந்தது.

பாரம்பரியப் பண்பைப் பற்றி வள்ளுவர் சொல்லு கின்றபோது,

Image result for thirukkural

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

     உண்மை அறிவே மிகும்”            (373)

என்கிறார். உண்மை அறிவு என்பது பாரம்பரியமான அறிவு. அந்த வகையில் அந்தச் சிறப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்நேரத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் உயர்வதற்கு அடிப்படையாக அவன் ஒரு சிறந்த வித்தாக இருக்க வேண்டும். சார்ந்தவன் சார்ந்த வண்ணம் உயர்வதாலே சார்ந்தவர்கள் சிறப்புடையவர் களாக இருக்க வேண்டும். அந்த வகையிலே என்னைச் சார்ந்தவர்கள் எல்லாம் சிறப்பைச் செய்திருக்கிறார்கள். சான்றாக, எனக்கு சின்ன வயதிலே ஒரு சுயமரியாதை உணர்வு ஏற்பட்டது. எப்படி என்று சொன்னால் எனது தந்தை இயல்பாகவே என்னை அவன், இவன் என்று சொல்லமாட்டார். அவர் இவர் என்று தான் சொல்லுவார். அதுபோல ஆசிரியர்களும் அப்படித்தான். எல்லா மாணவர்களையும் அவன், இவன் என்று அழைப்பதில்லை. சின்ன வயதிலே எந்த விதச் செருக்கும் உண்டாகவில்லை. அதற்கு மாறாக, ஒரு பெருமிதம் ஏற்பட்டது. ஆகவே தன்மானத்தோடும் சுய மரியாதையோடும் இருப்பதற்கு அடிப்படையிலே என்னை அறியாமலே ஒரு பண்பாடு ஏற்பட்டது. ஆகவே ஒரு மனிதனை உருவாக்குவதற்கு அந்த வித்தினைச் சார்ந்தவர்கள், சிறந்தவர்களாக. சார்ந்த வண்ணம் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அதுபோல நான் படிக்கிற காலத்தில் எனது ஆசிரியப் பெருமக்கள் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள்.

“நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

     இனத்துஇயல்பது ஆகும் அறிவு.”      (452)

என்பது போல சார்ந்தவர்கள் வண்ணமாக பெரியோர்களை துணைக் கொள்ளும்போது அவர்களின் நற்பண்புகள் எல்லாம் என்னைச் சார்ந்திருக்கின்றன. மேலும் மேலும்  சிற்றினம் சேராமல் பெரியோர்களைச் சார்ந்ததால் அந்தப் பெருமிதம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

சிந்தித்துப் பார்க்கிற சமயத்திலே ஒரு மனிதன்  பிறந்த குடும்பம்; அவன் சார்ந்திருக்கிற மனிதர்கள்; அவனது மிகச்சிறந்த ஆசிரியர்கள்; அவன் படித்த புத்தகங்கள் இவைகள்தான் ஒரு மனிதனை உருவாக்குகின்றன என்பதை அறியமுடிகிறது.

நமது ஐயா பேராசிரியர் தமிழண்ணல் இருக்கிறார். இவரை அறிமுகப்படுத்தியவர் பெரும்புலமை மிக்க பொய்சொல்லா மாணிக்கம் டாக்டர் வ.சு.ப.மாணிக்கம் அவர்கள். அவர்களைப் போன்ற பெரிய பேராசிரியர்கள் எல்லாம் என்னை உயர்த்தினார்கள். பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் நமச்சிவாயம், பேராசிரியர் சுப.அண்ணாமலை, பேராசிரியர் நா.பாலுசாமி. இதுபோன்ற மிகச்சிறந்த அறிஞர் கூட்டம் என்னைச் சூழ்ந்திருந்தது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது போல இந்த அறிஞர்களுடைய செல்வாக்கு எனக்கு மிகுதியாக இருந்தது. அது எனக்குத் தமிழ்மீது ஆர்வமும், பற்றும் ஏற்படுத்தியது. நான் மிகப்பெரிய தமிழ்த்துறையில் படித்தவனில்லை. இருந்தாலும் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இந்தப் பெருமையெல்லாம் கிடைத்திருக்கிறது எனக் கருதுகிறேன். அதிலும் இந்தப் பேராசிரியர்களின் பங்கு மிகச் சிறப்பானது.

அந்தக் காலத்தில் நான் மேடைகளில் பேசுகின்ற சமயத்திலே எல்லாம் பார்த்தேன். எங்கு சென்றாலும் தமிழறிஞர்கள் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். அப்பொழுது எனக்கு ஓர் ஆசை வந்தது, ஏன் திருக்குறளை முழுமையாகப் படித்துவிடக் கூடாது என்று.

பள்ளி இறுதி வகுப்பு பயின்ற சமயத்திலேயே நான் 1330 திருக்குறளையும் முடிந்தவரை படித்துவிட்டேன். அதற்குப் பிறகு  திருக்குறள் எனக்குப் பெரும் துணையாக இருந்தது. உலகப் பொதுமறைக்கு நிகராக வேறு ஒன்றும் இல்லை என்பதை நன்றாகக் கண்டுகொண்டேன்.

திருக்குறளின் பெருமைகளை எல்லாம் நீங்கள் நன்றாக அறிவீர்கள். திரும்பத் திரும்பச் சொன்னாலும் பெருமை தரக்கூடிய வாசகம் இது.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

நாம் வள்ளுவரை உலகிற்குத் தந்தோம்; அவரிடம் இருந்து புகழை நாம் எடுத்துக் கொண்டோம்.

திருக்குறள் தமிழகத்தில் தோன்றினாலும் அது தமிழனுக்கு மட்டும் படைக்கப்பட்டது அல்ல அது உலகத்திற்குப் படைக்கப் பட்டது.

அதனால் தான் பாரதி மிகப்பெருமையாகப் பேசுகிறார்:

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

 வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல்

 பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,

 உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை”

திருக்குறளின் பெருமையைக் கேட்டுக் கேட்டு அந்தத் திருக்குறளே எனக்கு உயிர் மூச்சானது.

‘என்னைச் செதுக்கிய நூல்’ என்று பார்க்கும்போது திருக்குறள் ஒன்றை முழுமையாகப் படித்துவிட்டாலே அத்தனை நூல்களையும் படித்ததற்குச் சமம் என அறிந்து கொண்டேன்.

சில ஆண்டுகளுக்குமுன் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பாக மூன்று நாள் கருத்தரங்கம் நடத்தினோம் அது. ‘உலக அரங்கிலே திருவள்ளுவர்’ என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதில் மார்க்கஸ் அரேலியஸ், சாக்ரடீஸ், சுக்கிரநீதி, பெரியார், கீதை, நாராயண குரு எனப் பல அறிஞர்களுடன் அறநூல்களுடன் எல்லாம் ஒப்பீடு செய்து அறிஞர்கள் பேசினார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டபொழுது, எல்லாவற்றிலும் திருவள்ளுவர் விஞ்சி நிற்கிறார் என்பதை உணர முடிந்தது.

திருவள்ளுவர் ஒருவரைப் படித்துவிட்டாலே, திருக்குறளின் 133 அதிகாரங்களைப் படித்து விட்டாலே 133 புத்தகங்களைப் படித்ததற்குச் சமம். இதைவிடச் சொல்வதற்கு ஒன்றில்லை. எல்லாப் பொருளும் இதன்பால் உள என்று திருக்குறளை எனது உயிர் மூச்சாகக் கொண்டேன்.

திருவள்ளுவர் ஒருவர்தான் அக உலகை அளந்தவர் என ஒருவர் பாராட்டினார். உங்கள் எல்லோருக்கும் வாமன அவதாரத்தைப் பற்றித் தெரியும். வாமன அவதாரத்தில் திருமால் குள்ள வடிவினனாக வந்து மாவலி சக்கரவர்த்தியிடம் 3 அடி நிலம் கேட்கிறார். குள்ளம் என்றால் 1 1/2 அடி குறள் வடிவினனாக வந்தார். மாவலியும் குள்ளமானவன் என்பதனாலே மூன்றடியைக் கொடுத்தார். திருமால் விசுவரூபம் எடுத்து ஓர் அடியால் இந்தப் பரந்த மண்ணுலகையும் இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் மூன்றாவது அடியை அவன் தலையில் வைத்து மாவலியின் அகந்தையை அழித்தார். திருமால் புற உலகை அளந்தார்; திருவள்ளுவர் அதே குறள் வடிவினால் அக உலகை அளந்தார். இதை அழகாக ஒரு புலவர் ‘திருவள்ளுவ மாலை’ என்ற புகழ் பெற்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

வள்ளுவர் பாவடியினால் அளந்தார், திருமால் காலடியால் அளந்தார் திருமால் புறவுலகை அளந்தார், வள்ளுவர் அகவுலகை அளந்தார். இரண்டு பேரும் குறள் வடிவிலே அளந்தனர். திருமாலும் வள்ளுவரும் ஒருவரே என மிக அழகாகப் பாடுகிறார் புலவர். அந்த வகையில் அக உலகை அளந்த திருவள்ளுவர் மீது எனக்கு ஓர் உயிர்ப்பு ஏற்பட்டது. அது உயிர் மூச்சாக இருந்தது. திருக்குறளைப் படித்தாலே போதும், நம்முடைய வாழ்க்கை செம்மையாகும் என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்தேன். அனுபவங்கள்தான் வாழ்க்கையில் வள்ளுவத்தை மிகப்பெரியதாகக்  காட்டின.

முதலில் படிக்கின்ற காலத்திலே திருக்குறளின் பெருமை அவ்வளவு பெரியதாகத் தெரியவில்லை. வாழ்க்கையில் சிக்கல்களும் பிரச்சினைகளும் சோதனைகளும் வரும்பொழுது தான் திருவள்ளுவரின் அருமைகளை பெருமைகளை உணர முடிந்தது. திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்று, நாம் வாழ்கின்ற காலத்திலும் இங்கு இருக்கக்கூடிய நிகழ்காலச் சிக்கல்களுக்கும் எதிர்காலச் சிக்கல்களுக்கும் தீர்வு காண்பவர்.

திருக்குறளைப் படிப்பது இலக்கியச் சுவைக்காகவோ, இன்ப நலத்திற்காகவோ மட்டும் இல்லை.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

 தெய்வத்துள் வைக்கப் படும்.”       (50)

என்கிற நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் எனச் சொன்னால் திருக்குறள் ஒன்றைப் படித்தாலே போதும் என்ற உணர்வோடு திருக்குறளின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. திருக்குறளில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை எனக் கண்டு கொண்டேன். அதுபோல வாழ்க்கையில் பிரச்சினை என்று வரும் பொழுது (எனது அனுபவத்தைச் சொல்கிறேன்) திருக்குறளைப் புரட்டிப்பார்ப்பேன்; அதில் தீர்வு இருக்கும். எனக்கே வியப்பாக இருக்கும். இது மூட நம்பிக்கையாகக் கூட இருக்கட்டும். ஆனால் இந்த வகையில் தீர்வு என்ன என்பதைக் கண்டு பிடித்திருக்கிறேன்.

மகாத்மா காந்தி அவர்களை மாற்றியது எல்லாம் புத்தகங்கள்தான். ஜான் ரஸ்கின் எழுதிய ஹிஸீ ஜிஷீ ஜிலீமீ லிணீst என்ற புத்தகமும், அவர் பார்த்த அரிச்சந்திர நாடகமும் தான் காந்தியடிகளை மகாத்மா ஆக்கின.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

     செய்யாமை செய்யாமை நன்று” (297)

என்பது வள்ளுவம். காந்தியடிகள் இரண்டு கொள்கைகளைக் கைக்கொண்டார்: அகிம்சை, கொல்லாமை. அந்த அகிம்சையையும், கொல்லாமையையும் திருவள்ளுவர் ஒன்றாகச் சொல்கிறார்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்

     பின்சாரப் பொய்யாமை நன்று.” (323)

காந்தியடிகள் போற்றியது எல்லாம் உண்மையையும் நேர்மையையும் கொல்லாமையையும், அகிம்சையையும் தான். வீரனுக்கு உரியது என்று போற்றி, விடாது அவற்றைக் கடைப்பிடித்தார். அவர் வாழ்க்கையிலே மிகப்பெரிய திருப்பு முனைக்குக் காரணமாக இருந்தது புத்தகம்தான். அடிகள் சொல்கிறார்: “பிரச்சினைகள், துன்பங்கள் வரும் போதெல்லாம் என்னை மாற்றியது கீதை தான். எனது பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வைக் கீதையில் காண்பேன்.”

அதுபோல என்னுடைய வாழ்க்கையில் பிரச்சினைகள், துன்பங்கள் முன் வந்த பொழுது திருக்குறள்தான் முன்னின்றது. மிகச்சிறந்த புத்தகம் நம் கையில் இருக்குமானால் அது நம்மை உருவாக்குகிறது. சில புத்தகங்களை நாம் படித்திருக் கிறோம். ஆனால் அவற்றின் பெருமையை உணர்ந்திருக்க மாட்டோம்.

சில நூல்கள் படித்து அப்படியே மகிழ்வதற்கு மட்டும் இருக்கும். இலக்கியம் இலக்கியத்திற்கு மட்டும் இருக்கும் ஆனால் திருக்குறள் அப்படியல்ல. ஓதி உணர்வதற்கும் பிறர்க்கு உரைப்பதற்கும் உரிய நூல் அது.

“ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்

     பேதையின் பேதையார் இல்”         (834)

என்பது வள்ளுவம்.

ஓதுவது சிரமம்; ஓதி உணர்வது அதை விடச் சிரமம்; உணர்தல் சிரமம்; உணர்ந்ததை உணர்ந்தபடியே சொல்வது அதை விடச் சிரமம்.

“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

     உணர விரித்துஉரையா தார்”               (650)

படித்ததை சிரமப்பட்டு விளக்கிச் சொல்லி அதைப் பரப்புவதும் சிரமமானது. கொத்தாக மலர் மலர்ந்திருக்கிறது. அந்த மலர்கள் மணம் வீசாத காகிதப் பூக்களாக இருந்தால் பயனில்லை இவைகளையெல்லாம் தெரிந்தும், பிறர்க்கு உணர்த்தியும், சிரமப்பட்டு தாம் படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழாமல் போய்விட்டால் அவன் பேதையிலும் பேதை என்கிறார் வள்ளுவர். ஆகவே திருக்குறளைப் படிக்கின்ற நோக்கமே அதை வாழ்வியல் நூலாக, வருகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருப்பதுதான் என்பதைக் கண்டேன்.

41519total visits,2visits today

One comment

  • test

    By test

    Reply

    test

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>