குறள் நிலா முற்றம்

குறள் நிலா முற்றம்

 

Image result for குறள் நிலா முற்றம்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’

எனப் பாரதியார் பாடியது வெறும் புனைந்துரை இல்லை. வள்ளுவரது நெஞ்சமும் உலகோர் வாழ்வியல்பும் ஒரு தராசில் சம எடையாக நிறுத்தளந்தது போல், ஒரு சீராக நிற்பதைக் கண்டறிந்து கூறிய புகழுரை. வள்ளுவமே சமுதாயம் முழுவதற்கும் உரிய சரியான வாழ்க்கை விளக்கம் என அறுதியிட்ட தீர்ப்புரை.

திருவள்ளுவர் தமிழ்நாட்டிலே பிறந்தார். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மண்ணோடும் மரபோடும் ஒன்றிக் கலந்து உருவாகியிருந்த பண்பாட்டுச் சிந்தனைகளால் உரம் பெற்று வளர்ந்தார். அந்த வளர்ச்சியின் பயனாகக் குறட்பாக்களை வித்துக்களாக்கி ஈந்து உதவினார். அந்த வித்துக்கள் உலகின் எந்தச் சமுதாயப் புலத்தினும் ஊன்றிச் செழித்தோங்கும் இயல்புடையவை; அந்த முத்துக்கள் ஒவ்வொருவருக்கும் அணிகலனாக அழகு சேர்க்கக்கூடிய தனிச்சிறப்புடையவை.

வள்ளுவர் ஒரு நாட்டில் பிறந்தவர் எனினும் உலகச் சிந்தனையாளர். ‘மக்கள் எல்லோரும் ஒரு குலம்; மாநிலம் முழுவதும் ஒரு வீடு’ எனும் பரந்த நோக்குடையவர். கிரேக்கத்து அரிஸ்டாட்டிலைப் போல – பண்டைய இந்தியாவின் ஆதிமனுவைப் போல – அகிலப் பார்வை யுடையவர்; அறிவியல் – ஆன்மீகம் – மார்க்சியம் – காந்தியம் எனப் பல்துறைச் சார்புப் போக்கினர்க்கும் பொதுநலம் கூறும் சால்புடையவர்.

நூல்கள் இரு வகைப்படும் எனஅறிஞர் கூறுவர். எழுதப்பட்ட காலத்திற்கே நம்மைக் கூட்டிச் செல்வன முதல் வகை: நாம் வாழும் காலத்திற்குத் தாமும் உடன் நின்று வழி காட்டுபவை இரண்டாம் வகை.

திருக்குறளில் முதல் வகைப் பாங்கு ஓரளவிற்கும் இரண்டாம் நிலைப்பேறு பேரளவிலும் இணைந்திருப்ப தாக அறிஞர்கள் அரங்கு கூட்டிப் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்குத் திருக்குறள் வற்றாத ஊற்றாக, வளங்குன்றாத சுரங்கமாகப் பயன் தந்து கொண்டே இருக்கிறது.

என்றாலும் திருக்குறளை வாழ்க்கை விளக்கமாக ஏற்போரிடம் ஓர் ஐயம் அவ்வப்போது ஏற்பட்டு வருவதையும் மறுப்பதற்கு இல்லை.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால்

     இல்லாத எப்பொருளும் இல்லையால்”

என அன்று பாடிய திருவள்ளுவ மாலை இன்றைக்கும் வாடாத மாலை ஆகுமா? எனக் கேட்டு, நமது வாழ்க்கைப் போக்கிற்கெல்லாம் திருக்குறள் துணையாக வந்து விடுமா?  அவரவர் வாழ்க்கைக்கெல்லாம் வள்ளுவம் உதவுமா? என்பதோடு ஒவ்வொருவர் வாழ்வுக்கும் வள்ளுவம் வழி காட்ட வேண்டும் எனும் ஆர்வமும் தலைதூக்கி நிற்கிறது.

வள்ளுவத்தை மட்டுமல்ல, சமயப் போதனைகள், மார்க்சியம், காந்தியம் ஆகிய உண்மைகள் அனைத்தையும் வாழும் காலம் எனும் உரைகல்லில் உரசிப் பார்த்து எடை போட்டு அறியவே விழைகின்றனர்.

காலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை. காலத்தின் மாறுதல்கள் உடைமாற்ற நாகரிகங்களைப் போன்றவை; அடிப்படை உண்மைப் பண்புகள் உயிரைப் போன்றவை என்பர் அறிஞர்.

‘காந்தியக் கதராடையே சோபிதம்’ எனப் பாடிய காலம் சடுதியில் மாறியுள்ள சூழலில், வள்ளுவப் பழைய உடை இன்றைய புதுயுகத் தேவைக்கெல்லாம் பொருந்துமா எனக் கேட்டுப் பார்ப்பதில், எடைபோட்டுப் பார்ப்பதில் தவறில்லை.

‘நாம் வாழும் இந்தக் காலத்திற்கு வள்ளுவம் வழி காட்டுமா?’ என்பது பயனுள்ள கேள்வியே ஆகும்.

இக்கேள்விக்குப் பலரை ஒருங்கு கூட்டி, விவாதப் பொருளாக இதை முன்வைத்துப் பயன்தர மதுரை வானொலி புதுமையான நிகழ்ச்சியை ஒரு சரமாகத் தொடுக்க முனைந்தது. நிகழ்ச்சிகளை வானொலி அரங்கில் இருந்தே ஒலிபரப்பும் பழைய முறையை மாற்றி ‘வாசலுக்கு வரும் நேசக் கரங்களை’ நீட்டி நிகழ்ச்சிகளை அமைக்கும் புதுமையை அரங்கேற்றியது. அதில் ஒன்று நிலா முற்றம்.

‘நீலவான் ஆடைக்குள் ஒளி மறைத்து

     நிலாவென்று முகம் காட்டும்’

வளர்பிறை, மாதந்தோறும் முழுமதியாக வானக் காட்சி தருவது. வீட்டுவெளியில் வந்து அண்ணாந்து பார்த்து மகிழவோ வியக்கவோ நமக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை – விருப்பம் இருப்பதில்லை.

வீட்டு அறைக்குள் அமர்ந்து உண்ணும் சாப்பாட்டை நம் வீட்டு முற்றத்திலேயே பிள்ளைகளுடன் குடும்பத் தாருடன் ஒன்றாய் அமர்ந்து குலவிப் பேசி அதை நிலாச் சோறாக உண்பதிலும் நாட்டம் கொள்வதில்லை! இயற்கையை ரசிக்க எங்கெல்லாமோ பயணம் போகிறோம். வீட்டிற்குள்ளேயே – வீட்டருகே வலம் வரும் விந்தைகள் கூட நம் கண்ணிலோ மனத்திலோ படுவதில்லை; படிவதில்லை.

திருக்குறள் சிந்தனையைப் பலரது கருத்திலும் படரச் செய்யக் கருதிய வானொலி நிலையம் அதை நிலா முற்ற விருந்தாக, அரங்காகக் கூட்டியது.

அந்த அரங்க அமைப்பினை என் வீட்டு முற்றத்தில் நிலா விருந்தாக்கிட நான் விழைந்தேன். மதுரைத் தமிழ் அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அழைத்து வர வானொலியார் இசைந்தார்.

என் இல்லத்து விரிந்த முற்றத்தில் திருக்குறள் நிலா முற்றம் கூடியது.

‘குறள் நெறிகள் நம் காலத்திற்குப் பொருந்துமா?’ எனும் தலைப்பில் விவாத மேடைச் சிந்தனைகளைத் தொகுத்து ஒரு சரமாக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப் பட்டது.

இளமைப் பருவம் முதல் குறட்பாக்களில் சிந்தை மயங்கி வளர்ந்து குறள் கருத்துக்களைச் சமுதாயப் பொது உடைமை ஆக்கிப் பரப்பும் ‘உலகத்திருக்குறள் பேரவை’ யின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றிருந்த எனக்குக் குறள் பற்றிய அறிஞர் பெருமக்களின் சிந்தனைகளோடு இணையும் இனிய வாய்ப்பு இது எனக் கருதினேன்.

குறள் நிலா முற்ற அரங்கு கூடியிருந்தது.

திருக்குறள் பேரவையின் தமிழ்நாட்டமைப்பின் துணைத்தலைவர், செயலாளர், பல கிளைப் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், புலவர்கள், அரசு உயர்நிலை அலுவலர்கள், சமூக இயக்கச் சிந்தனையாளர்கள், நாட்டுநலத் தொண்டர்கள் என ஒரு பிரதிநிதித்துவப் பேரணி போலக் கூடி இருந்தது அவை.

வானத்திலே முழுமை நிலா, அழகு நிலா மேலெழுந்து கொண்டிருந்தது. நிலா முற்ற அரங்கில் குறள் நெறிச் சிந்தனைகள் அறிஞர்களிடையே உலா வரத் தொடங்கின. இந்த நிலா முற்ற விருந்தில் குறள் அமுதம் அருந்திட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இந்நூல் சிறப்புற வெளிவரப் பெரிதும் துணையாக, இருந்த பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் இரா.மோகன் ஆகியோருக்கும், அணிந்துரை நல்கிய வணக்கத்திற்கு உரிய மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார், மூதறிஞர்.தமிழண்ணல், இசைவாணர் எஸ்.மோகன்காந்தி ஆகிய சான்றோர்களுக்கும் எனது இதய நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.

ந.மணிமொழியன்

பொதுச்செயலாளர்

உலகத் திருக்குறள் பேரவை