குறள் நிலா முற்றம் – 4

ஒரு பேராசிரியர்

“நான் ஒரு கருத்தைக் கூறலாமா? வள்ளுவம் சொல்வது புறவாழ்வில் காணப்படும் போலியான தொரு பொதுமைப் பார்வை இல்லை; ஒவ்வொரு நபரின் தனி நெஞ்சத் தூய்மை! ஒரு சமூகத்தில் வாழும் மனிதரிடையே மொழி, மதம், குலம், கட்சி எனப் பல வகையால் முரண்பாடும், வேறுபாடும் தலைதூக்குவது உலகியற்கை. மனமாசு குறைவுபட்டால், எவ்வகை வேற்றுமை யிடையேயும் உறவு பூணவும், உதவி செய்யவும் சிந்தை மலரும்; செயலாக வளரும்.

எனவே, திருக்குறளுக்குச் சாதி, சமயம் என்றெல்லாம் சாயம் பூசும் ‘பொதுமை’ நிலைக்களம் இல்லை; மக்கள் மனமே நிலைக் களம். ஆளுக்கொரு மனம் உடைய அந்தப் பன்மை நிலைக்களம். நம் மனதில் கணந்தோறும் விரிந்து பரவும் நல்ல, தீய எண்ணங்கள் என்பன நிலைக்களம். பொதுமைக்குள்ளே பகைமையும் வேற்றுமைக்குள் நட்புறுதியும் கண்ட மனநல அறிஞர் வள்ளுவர். ஆதலால், தனித்தனி நபர்களின் வஞ்சனையை மாற்றி, நெஞ்சத் தூய்மை செய்வதே அவரது நூலின் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“தன் நெஞ்சறிவது பொய்யற்க”      (குறள் 293)

“நெஞ்சில் துறவார் துறந்தார் போல”  (குறள் 276)

“மனத்தது மாசாக மாண்டார் நீராடி”  (குறள் 278)

“வஞ்சக மனத்தான் படிற்றொழுக்கம்” (குறள் 271)

“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”        (குறள் 786)

எனப் பல்வேறு குறள்களில் நெஞ்சத்தையே வள்ளுவர் சுட்டிப் பேசுகிறார் என்பதை நாம் ஏற்கலாம்.”

வள்ளுவர் மருத்துவரா? மனநலச் செம்மலா? – ஒரு குரல்

“வள்ளுவரை மருத்துவராகவும், திருக்குறளை மருந்துக் கடையாகவும் உவமித்துள்ளதைச் சொன்னார்கள். அதுபற்றி மேலும் சிந்திக்கலாமே..?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல அவர் உடற் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார். மருத்துவர் என்ன செய்கிறார்? மக்கள் உடலையும், பல்வேறு உறுப்புக்களையும் நிலைக்களமாகக் கொண்டு, நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார் அவர், உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார். பசி, உறக்கம், செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கேற்ப சிகிச்சை தருகிறார். இவ்வாறு தன்னிடம் நலம் நாடி வரும் நோயினர் அனைவர்க்கும் சாதி சமய வேறுபாடு கருதாது சிகிச்சையளிக்கும் மருத்துவரைப் போல, வள்ளுவரும் நம் சமுதாய, தனிநபர் நடப்பியலுக்கேற்ற நலம்தரும் நடைமுறைகளைத் தொகுத்துரைக்கிறார். மருத்துவர் கைநாடி பார்க்கிறார்; வள்ளுவர் நம் மன நோயை நோக்குகிறார். இரண்டும் பணி முறையில் ஒன்றுதான்; முழு நலம் பெறுவதே முதன்மை நோக்கம்.

இன்று நம் நாட்டிலும் உலகிலும் காணும் இன, மொழி, சமய, மாறுபாடு வேறுபாடுகள் எல்லாம், பூசல்கள் எல்லாம் எரிமலை போன்றவை. மனதுக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் போராட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள். பிரஷர் குக்கரில் மூடிவைத்துள்ள பாத்திரத்தைச் சற்றே திறந்தவுடன், அது பெருமூச்சுவிட்டு ஆவியைக் கக்குவது போல, சந்தர்ப்பம் ஏற்படும்போது உள்ளக் கொதிப்பெல்லாம் கலவரமாக, போராக வெடிக்கிறது. அமைதி அமைதி என நாடு கூட்டிப் பேசிக் கொண்டே, அணுகுண்டுகளையும் பேரழிவு ஆயுதங்களையும் ஏவும் அச்சம், அபாயம் பரப்பப்படுகிறது. நல்லரசுகள் கூட, வல்லரசுகளாக அரக்க ஆட்சி நடத்தத் துடிக்கும் பேரபாயம் உலகை நடுங்கச் செய்து வருகிறது. மக்களது தனி நல்வாழ்வு எனும் கல்லறைகள் மீது பொறாமை எனும் போலி ஆதிக்கக் கோபுரமே எழுப்பப்படுகிறது. எனவே நீரினைத் தேக்கி வைக்கும் ஊருணியைத் தூய்மை செய்யாமல் அதனை ஊருக்குக் கொணரும் வாய்க்கால்கள், குழாய்களை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? எனவே ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்பது போல பொதுமை நோக்கோடு, தனிமனித நெஞ்சங்களையும் நிமிர்த்தவே முற்படுகிறார்.

‘மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்பதைத் தானே வள்ளுவமும் பிற அறநூல்களும் கூறியுள்ளன..?” என்று திசை திருப்பினார் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அன்பர் ஒருவர்.

பலரது உதவியும் தன்முயற்சியும் கூடி அமைந்ததே வாழ்க்கை என்பதைத்தான் குறளும் அதைத் தொடர்ந்த நம் அறநூல்களும் கூறியுள்ளன; நம் இலக்கியங்களும் பேசியுள்ளன.

ஒருங்கிணைப்பாளர் 

“உணர்வுக்கும் கற்பனைக்கும் தலைமையிடம் தந்து அமைவன இலக்கியங்கள்; சிந்தனைக்கும் அறிவுக்கும் முதலிடம் தந்து தொகுக்கப்படுவன நீதி நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியன. சமுதாயத்தில் வாழும் மனிதனுக்குரிய எல்லாச் சமுதாய ஒழுகலாறுகளையும் தனிமனித வரையறை களையும் விரித்து விளக்கி, தொகுத்து வகுத்துக்கூற வேண்டியவை அறநூல்கள். இந்த நீதி நூல்கள் சான்றோர் சிந்தனையிலும் தோன்றலாம்; சமூக நலனுக்காக நாளடைவில் உருவான பழக்க வழக்கங்களாலும் அமையலாம். இவை வாய்மொழி களாகவே தொடர்ந்ததால் பழமொழிகள், மூதுரைகள் என அழைக்கப்படுகின்றன.

திருக்குறளுக்கெல்லாம் முற்பட்ட நம் சங்க இலக்கியங்களில், ஆங்காங்கு அறநெறி முறைமைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன.

“அறநெறி இதுவெனத் தெளிந்த” என ஐங்குறுநூறும்,

“அறங்கடைப்பட்ட வாழ்க்கை” என அகநானூறும்,

“அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்” எனப்

பொருநராற்றுப்படையும்

என ஒரு புலவர் ஆதாரச் சீட்டுடன் படிக்கத் தொடங்கி விடவே அவரை இடைமறித்த ஒரு கல்லூரிப் பேராசிரியர்,

“அதுதான் எல்லோரும் நன்கறிந்த புறநானூற்றுப் பாடலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் போற்றத்தகும் வாழ்க்கை முறையாகச் சொல்லப்பட்டு விட்டதே? அதைத்தானே செங்கல் அடுக்குப் போலத் தாங்கள் படித்துக் காட்டிய ஆதாரங்களும் வலியுறுத்துகின்றன.”

ஓர் அன்பர்

“ஐயா செங்கல் அடுக்கு என்றதும் நம் தவத்திரு அடிகளார் ஆற்றிய அருளுரை ஒன்று நினைவில் மறிக்கிறது. அதைச் சொல்ல நிலா முற்ற அன்பர்கள் சற்றே அனுமதிக்க வேண்டும்.”

ஓர் இடைக்குரல்

“ஐயா ஏதோ செங்கல் கட்டுமானம் பற்றிப்  பேசுகிறார், கேளுங்கள்.”

முன்னவர் தொடர்கிறார்

“ஆயிரமாயிரம் செங்கற்கள் குவிந்து கிடந்தாலும் தாமாக அவை கட்டிடமாவது இல்லை! அவற்றை நூல் பிடித்து அளந்து முறையாக அடுக்கிச் சந்து பதிந்தால்தான், சுவரை எழுப்ப முடியும். உடைந்த செங்கற்களையும் முழுச் செங்கற்களையும் இணைத்து, இடைவெளி ஏற்படும் இடங்களில் சுவரது தேவைக்கேற்றபடி முழுச்செங்கலையும் கையில் உள்ள பூசு கரண்டியால் உடைத்துப் போட்டுச் சந்துகளை நிரப்புகிறார்கள் கொத்தனார்கள். அது போல மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயமெனும் சுவரைக் கட்டிஎழுப்ப ஒத்துழைக்க வேண்டும். தானும் முன்வர வேண்டும். உடைந்த செங்கலையும் முழுச்செங்கல்லையும் இணைத்துக் கட்டிடத்தை எழுப்புவார் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவர்களையும் வலிமை அற்றவர் களையும் இணைத்து, ஒருசேர வளர்ச்சி வலிமை நோக்கிக் கூட்டிச் செல்லுபவரே சமுதாயத் தலைவர்; சரியான வழிகாட்டி.”

“அதைத்தானே ஐயா அரசியலிலும் சமதர்மம்எனப்புதுப் பெயரிட்டுச் சொல்லுகிறார்கள். பொதுவுடைமை எனப் போதிக்கிறீர்கள்..!” என இடைச்செருகலானார், ஒரு கல்லூரிப் பொருளாதாரப் பேராசிரியர்; ஒருங்கிணைப்பாளர் கருத்துத் தொடர்ச்சியை இட்டு நிரப்பினார்.

ஒப்புரவு ஒப்பற்றது

‘சோசியலிசம்’ என்ற ஆங்கிலச் சொல் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து, உள்ளம் ஒன்றிப் பழகும் பண்பாட்டைக் குறிப்பதாகும். சமுதாயத்தையே நேசிக்கும் நெறியைப் போற்றுவது ஆகும். இதைத்தான் வள்ளுவர் ‘ஒப்புரவு’ எனக் குறிப்பிடுகிறார். நம்மோடு உள்ள மற்றவர்களோடு சேர்ந்து பழகும்போது அப்படிச் சேர்ந்து வாழ்வதனால் ஏதேனும் இடர்களோ, கேடுகளோ விளையுமானாலும் அவற்றைக் கூடுதல் பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே  வலியுறுத்துகிறார்.

‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ என்கிறார் வள்ளுவர். ‘ஒத்தது அறிதல்’ என்பதற்குப் பொருள் மற்றவர்களுக்கும் ஏற்புடையதைப் புரிந்து கொண்டு பழகுதல் என்பதுதான். அப்படி மற்றவர்களுக்கும் ஒத்ததை அறிந்து இணங்கி விட்டுக்கொடுத்து வாழ முனைவதுதான் உண்மையிலேயே நாம் உயிர்வாழ்தல் எனப்படும்.”

உடன்பாட்டோடு தொடரும் திருக்குறள் பேரவையின் அன்பர் ஒருவர் கூறுவது:

“அதாவது பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டாலும் பொறுத்துக் கொள் என்கிறார் வள்ளுவர். மனிதனையும் மனிதனையும் இணைத்துச் சமுதாயம் எனும் கட்டிடத்தை உருவாக்க இப்பொறுமைப் பண்பு, பெருமிதச் சால்பு மிகவும் அவசியம் என்பதே அவர் கூறும் ஆக்கநெறி.”

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

“நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் அறிவித்தவர் வள்ளுவர் என்பதை அறிவோம். நண்பர் ஒருவர் நஞ்சு கலந்த பானத்தைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்துவிடு; நஞ்சு கலந்தது என்று அஞ்சாமல் பருகிவிடு என்று கூறுகிறார்.”

 

 

 

ஓர் அன்பர்

“ஏனய்யா அப்படிச் சொன்னார்…?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவரின் இந்தக் கருத்து சங்க இலக்கியத்தில் உண்டு; பின்னர் வந்த பெரிய புராணத்தில் ‘தத்தா நமர்’ என்று தொழுத கையுள் படையொடுங்கிடக் கண்டும் பண்போடு சாகும் முன் அன்போடு மன்னித்த மன்னன் வரலாற்றில் உண்டு.”

 

இடையே ஒருவர்

“சாக்ரடீஸ் கதையும் அப்படித்தான். அதைத்தான் வள்ளுவர் முன்பே வலியுறுத்தினார்.”

“நஞ்சு கலந்தது என்று நன்கு தெரிந்தும் தெரியாதவர் போல, அந்த நினைப்பிற்குள் சிக்காமலே பருகி விடு என்கிறார். நஞ்சு கலந்தது என நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரத் தொடங்கும். நஞ்சு கலந்தது என்பதைத் தெரிந்து கொண்டோமோ என அதைக் கலந்து வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் அஞ்சுவார் அல்லது வருந்தி உளைச்சலுக்கு ஆளாவார். அந்த வருத்தத்தைக் கூட அவருக்குத் தரக்கூடாது என உறுதியாயிருக்க வேண்டுமாம். அதனால் என்ன பயன்? நஞ்சு கலந்தது என்று நினைத்து அஞ்சாமல், வருவது வரட்டும் எனப் பருகி விட்டால், மரண பயத்தைக் கடந்தே துணிந்தால், அந்த நஞ்சு கூட ஒருவரைக் கொன்று விட முடியாது. தக்க சிகிச்சை பெறும்வரை நஞ்சையும் முறித்து உயிர் காக்க வல்லமை நெஞ்சத்தில் உறுதியாக நிலைகொள்ளும் என்கிறார். நஞ்சையும் அஞ்சாது பருகுவதால் அதைச் சற்றாவது முறிக்கும் வலிமை செங்குருதிக்கு உண்டாகி விடுமாம்.”

“ஆமாங்க, புலியடிச்சுச் சாகிறவனை விட கிலி பிடிச்சுச் செத்தவன்தாங்க அதிகம்” என ஒருவர் இடை மறிக்க, நிலா முற்ற அவையில் சிரிப்பு அலைகள் பரவின.

ஒரு சிவநெறிச் சீலர் நீறுபூசிய நெற்றி யுடையவராய்ப் பணிவோடு எழுந்தார், பகர்ந்தார்:

“அவையோரே… நம் அப்பர் சுவாமிகளுக்குக் கூட நஞ்சு கொடுக்கப்பட்டதைச் சேக்கிழார் பாடியுள்ளாரே?

அப்பர் அடிகள் நஞ்சுண்ட பின்னரும் சாகாமல் நமசிவாய மந்திரத்தையல்லவா உச்சரித்தார்?”

இன்னொருவர்

“அப்பரடிகள் போல நஞ்சுண்போர் எல்லாம் நமசிவாய மந்திரத்தால் மட்டும் பிழைத்துவிட்டால், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு ஆளைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய அவசியமில்லையே! நாமெல்லாம் அப்பரடிகள் போலவோ சாக்ரடீஸ் போலவோ இருந்துவிட முடியுமா..?”

மற்றொருவர்

“நாம் என்ன நஞ்சு சாப்பிடாமலா இருக்கிறோம்? இன்று நாம் உண்ணும் சாப்பாட்டில் கலப்படம்; நோய்க்குப் பருகும் மருந்தில் கலப்படம்; பல்துலக்கக் காலையில் உபயோகிக்கும் பற்பசை தொட்டு அனைத்திலும், நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை, ரசாயனக் கலவையை, தெரிந்தும் தெரியாமலே உட்கொண்டு எப்படியோ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”

ஓர் அன்பர்

“ஐயா தம் வீட்டில் மனைவி சமைத்துத் தரும் சாப்பாடு பிடிக்காமல் அப்படிச் சொல்லுகிறார் என நினைக்கிறேன்.”

(அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

 

“இந்த விவாதத்தை வள்ளுவரின் குறளோடு அதாவது,

‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

 நாகரிகம் வேண்டு பவர்”      (580)

என்பதோடு தொடர்வோம். அன்பும் அருளும் இரண்டற இணைந்ததே அந்த நயத்தக்க நாகரிகம். அத்தகைய நல்வாழ்வு வேண்டும். அதை நாடும் மனமாவது வேண்டும் என்பதே குறள் முதலிய நம் நீதி நூல்களின் தொடர்ச்சியான உருவாக்கத் திற்கான காரணம் எனக் கருதலாம். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் நேரிடும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவனவே குறள் உள்ளிட்ட நமது நீதி நூல்கள். வீட்டிலும், நாட்டிலும் மனம் பண்பட்டதொரு நாகரிகம் மலர வேண்டும் என்பதே தமிழில் ஒரு தொடர் போலத் தொகுக்கப்பட்ட நீதி நூல் ஆக்கங்களுக்கான அடிப்படைக் காரணம். வேறு மொழி எதிலும் காணப்படாத புதுமை இது!”

(  தொடரும் )

குறள் நிலா முற்றம் – 3

Image result for திருவள்ளுவர்“பொருளாதாரத்திற்கெல்லாம் அடித்தளம் அருளாதாரம்- அப்படித்தானே? அந்த அருள் எனும் அன்பு பெற்ற குழந்தைதான் வள்ளுவர் கூறும் வாழ்க்கைக்கலை, காலங்கள் மாறினாலும் கறைபடியாத கருணைக் கலை. அதாவது, அன்பு வழியில் வாழ்க்கை வளர்தல் வேண்டும். அவ்வழியில் வளரும் வாழ்க்கையே பண்பும் பயனும் உடையதாகும். பண்பும் பயனும் இரண்டறக் கலந்த இந்த வாழ்க்கை முறையே ஏனைய கலைகளுக் கெல்லாம் தாயகம்.”

ஒரு பேராசிரியர் எழுந்து கூறியது

“வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்தமையால் அறத்தின் தாயகம் என்று நாம் மட்டும் பெருமை பேசி உரிமை கொண்டாடிக் கொள்ளுவது சரியில்லை. வாழ்க்கைக் கலையை உலகுக்கு உணர்த்தியுள்ள அறிஞர்களின் பட்டியல் பெரிது என்பதை முறையாக ஏற்க வேண்டும். நம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஆதி மனுநீதி அடித்தளமாக இருந்ததை நாம் அடியோடு மறுத்துவிட லாகாது. அதுபோல, கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் எனும் மும்மூர்த்திகளே மேலைநாட்டு அரசியல் சமுதாயச் சித்தாந்தங்களுக்கெல்லாம் வித்திட்டனர் என்பதையும் நாம் புறக்கணிக்க இயலாது.”

இடைமறித்த அரசு அதிகாரியும் பொருளாதார வல்லுநருமான அறிஞரின் கருத்து

“ஆதி மனுநீதி நம்நாட்டுப் பண்டைய வாழ்க்கை முறைகளுக்கு ஆணிவேராக விளங்கியதை நாமோ, வரலாறோ மறுக்கவில்லை; மறைக்கவும் இல்லை. ஆனால் அந்த மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி எனப்பேசி சமுதாயத்தை முறையற்ற போக்கில் பிளவுபடுத்த முற்பட்டதால் இடைக் காலத்தே வழிதவறிப் போயிற்று; அதன் பக்க வேர்கள் எல்லாம் தனித்தனி மரங்களாகத் தலை தூக்கி, சமுதாய சீர்கேட்டுப் புதர்களாக எங்கும் மண்டி விட்டனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“ஆம்.. அன்பர் சுட்டிக்காட்டுவது போல, பழைய செம்மை நெறிக்குக் கேடு சூழும் வகையில், பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டது; பெண்ணடிமை எனும் பேதைமை புகுந்தது; தீண்டாமை எனும் கொடுமை படர்ந்தது; கண்மூடி வழக்கங்கள் பண்பாட்டை, வாழ்க்கைக் கலையை மண்மூடச் செய்தன.”

பேராசிரியர்

“அதுபோலவே, அரிஸ்டாட்டிலின் மேலைய சமுதாய விஞ்ஞானப் போக்கில், அதிகார ஆணவம், நாட்டாசை, பொறாமை, சுரண்டல், போர்வெறி என்பன எல்லாம் அரசு முறை நியாயங்களாயின. ‘வலிமையுடையதே வாழும்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ளியீ ஜிலீமீ திவீttமீst) எனும் பொய்மையான பேய்ச் சித்தாத்தங்கள் தலைவிரித்தாடத் தொடங்கின. உலகெங்கும் இரத்த ஆறுகள் ஓடலாயின.

ஆனாலும் வள்ளுவர் வகுத்த நெறி வாய்மை பிறழாத வாழ்வு முறையாக, வழிவழியாக எப்படியோ, எங்கோ ஒரு மூலையில் துளிர்விட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் வந்த தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், பக்திப் பனுவல்கள், ஒழுக்கப் போதனைகள் என அனைத்திலும் வள்ளுவச் சாயல்கள் படியலாயின; வழிவழியாக வள்ளுவம் வாழ்ந்து வரலாயிற்று.”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவம் வாழக் காரணம் அது மனித மனத்தளத்தில் காலூன்றிக் கொண்டதே முக்கியமான காரணம். மனிதன் மனத்தால் வாழ்கிறான். எனவே, ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல். அதுவே அனைத்தறன்’ என அழுத்தமாக எழுதி வைத்தார் வள்ளுவர். மனிதனிடம் மனம் என்பது உயிர்ப்புடன் வாழும்வரை இந்த அடிப்படைச் சிந்தனையும் வாழ்ந்தே தீரும் என்பது வள்ளுவத் துணிபு.

‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந் நான்கும்  இழுக்கா இயன்றது அறம்’ (35) என மனதில் மாசுபடியாது பளிங்கு மாடம் போல அவர் வலியுறுத்தி யிருப்பது இன்றும் நாம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதொரு மனோதத்துவக் கருத்து. மனத்தின் முழுத்தூய்மையே அறம் என்பது திருக்குறளின் தீர்மானம்.”

அன்பர் ஒருவர்

“நாம் சட்டமன்றங்களிலும், மாநாடுகளிலும் வாயளவுக்குத் தீர்மானங்களை வானளாவப் போட்டுக் கலைகிறோமே அப்படி நம் வள்ளுவர் வாய்ப்பந்தல் போட்டுத் தரவில்லை.

மனத்துக்கண் மாசில்லாத அற நிலையை மாந்த ரெல்லாம் அடைவதற்கு அவர் வகுத்துள்ள முறைகள் எல்லாம் எவரும் எளிதாக ஏற்கத்தக்கவை என்பதுதான் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“அதாவது இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை முதலாகச் சங்கிலித்தொடர் போல வரும் அதிகார வைப்பு முறைகளைத் தானே சொல்ல வருகிறீர்கள்?

ஆம் அன்பர்களே. அன்பும் அறமும் காலூன்றி நிற்கும் களம் நாம் வாழும் இல்லறம். இந்த இல்வாழ்க்கையாலும் அதன் சார்புகளாலும் அன்பு முளைக்கிறது. வளர்கிறது. இந்த வளர்நிலை அன்பு மனமாசைக் கழுவும் கருவியாகிறது.

மனமாசற்ற நிலையே அறம் எனப்படும். அறத்தை விளங்கவும் துலங்கவும் வைப்பது அன்பு.”

ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அலுவலர் கா.கருப்பையா

“அன்பு, அறம் எனும் இருதூண்களால் நிறுவப்பெற்ற வள்ளுவ மாடம் முப்பரிமாணம் கொண்டது. அதை வள்ளுவம் – அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என வகுத்துச் சொல்லுகிறது. அறிஞர் மு.வ. ஓரிடத்தில் குறிப்பிட்டது போல ‘உலகம் ஒரு குலம்’ எனக் கால்கோள் இடப்பெறும் நிலம் காமத்துப் பால் எனும் இன்பத்துப் பால், நிலத்தில் விளையும் உயிர்ப் பயிருக்கு உரமூட்டுவது பொருட்பால். இவ்விரண்டையும் ஒன்றாய் இணைத்து, இயக்கி வேலியிட்டுக் காப்பது அறத்துப்பால். இம்மூன்றும் சீருற அமைந்த முப்பரிமாணமே  குறள் வைப்பு முறை…

குறள் எழுதப்பெற்ற அல்லது தொகுக்கப் பெற்ற நாள்தொட்டு அதற்கு ஏராளமான விளக்க உரைகள் வந்த வண்ணம் உள்ளன. காலந்தொறும் மேலும் புதுச் சிந்தனைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், குறளின் மூலக்கருத்து சிதைவு படாமல், புதிய எண்ணங்களாகிய ஊற்றுக் கண்களையும் திறந்து கொண்டே இருக்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“ஐயா கூறிய கருத்தை நான் முழுமனதாக ஆமோதிக்கிறேன். என் கையோடு அண்மையில் வெளிவந்த புதியதொரு விளக்க உரையைக் கொண்டு வந்துள்ளேன். இப்போது நாட்டு மயம், உலக மயம், தனியார் மயம் என்றெல்லாம் பொருளாதாரக் கோஷங்கள், முழக்கங்கள் போடுகிறார்களே, அவற்றிற்கெல்லாம் பதில் தரும், மார்க்கம் சொல்லும் புதுயுகச் சிந்தனைகள் குறளில் விரவிக் கிடக்கக் கண்டு வியந்து போனேன்.

அதனால்தான் ‘திருக்குறள் ஓர் அறிவுச் சுரங்கம்’ என்று சென்ற நூற்றாண்டிலேயே நம் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. ஆணித்தரமாகச் சொன்னார்.”

அன்பர் ஒருவர்

“திருக்குறள் ஒரு சுரங்கம் எனும் திரு.வி.க. உவமையை இங்கு நினைவூட்டிய அன்பர்க்கு நானும் நன்றி கூறுகிறேன். அவ்வக் காலத்திற்குத் தேவையான அளவு, நம்வாழ்வுக்கு வேண்டிய செய்திகளைச் சுரங்கம் போல வள்ளுவம் வழங்கிக் கொண்டே இருக்கிறது. இதுவரை அறிஞர்கள் ஆராய்ச்சியால் அகழ்ந்தெடுத்ததை விட இன்னும் அரும்பெரும் நவரத்தினச் சிந்தனைச் செல்வங்கள் குறள் எனும் சுரங்கத்திற்குள் புதைந்து பொதிந்து உள்ளதாகவே தோன்றுகிறது.”

வாழ்க்கைச் சுரங்கம்

பேராசிரியர்

“திருக்குறளை ஒரு வாழ்க்கைச் சுரங்கம் என்றும், வற்றாத அறிவூற்று என்றும், ஒவ்வொருவர் மனத்திற்கும் ஏற்ற செயல் விளக்கம் என்றும் இதுவரை இங்கே கலந்துரையாடப்பட்டன. அழகப்பாகலைக் கல்லூரியில் நான் முதுகலைத் தமிழ் பயின்றபோது எனக்குக் குறள் கற்பித்த பேராசான், வள்ளுவரை ஒரு மனநல, உடல்நல மருத்துவர் எனவும், திருக்குறளை ஒரு மருந்துக் கடை எனவும் உவமித்ததை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை.”

ஒருங்கிணைப்பாளர் 

“வள்ளுவம் மருந்துக்கடை போன்றது என்பது மதிக்கத்தக்க கருத்து. திருக்குறள் பொதுநூல் என்று மேலோட்டமாகச் சொல்லிப் பழகிவிட்டோம். இது பொது மக்கள், பொதுத்துறை என இன்று சொல்வதைப் போல உள்ளது. நாடு உரிமை பெற்ற பின்னர் ஊர்ப்பொது இடம், ஊருணி, சத்திரம், சாவடி, மைதானம், கழிப்பறை என்றெல்லாம் பலருக்கும் பயன் தரவேண்டியவற்றை நம்மில் யாரும் பொறுப்புணர்வோடு பார்ப்பதில்லை; போற்றிக் காப்பதும் இல்லை. பொது என்றாலே யாருக்கும் பொறுப்பற்ற, நாதியற்ற இடம் என்றாகிவிட்டது.

ஒரு போராட்டம் என்றால் முதலில் தாக்கப்படுவது அரசுப் பேருந்து தான்; வெட்டி வீழ்த்தப்படுவது சாலையோர நெடுமரம்தான்; சேதப்படுத்தப்படுவது பொதுக் கட்டிடங்கள்தான்! பொது என்றால் ஒவ்வொரு தனி நபருக்கும் ஒத்த உரிமையோடு அனைவர்க்கும் நெடிது பயன் தரவேண்டியது எனும் காப்புணர்வு நம் மக்களிடம் காணப்படுவதில்லை; மாறாகக் கசப்பு உணர்வையும் காழ்ப்பு வெறியையும் காட்டித் தீர்க்கப் பயன்படும் சேதாரங்களாகவே, அடையாளங்களாகவே அவை கருதப்படுகின்றன. வேறெந்த நாட்டிலும் காணப்பெறாத, ஜனநாயக விரோதச் செயல்கள் நம் நாட்டில் போராட்டம், தர்ணா, மறியல் எனும் பெயர்களால் மக்களையே சீரழிப்பது மடமை; கொடுமை. இதற்கொரு மருந்தாக ஏவப்படும் அடக்குமுறையும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது; சாதி, சமயப் பிளவுகளை வளர்க்கிறது.

ஆனால் வள்ளுவத்திற்குச் சாதி, சமயம் என்பன பொதுமை நிலைக்களன்கள் இல்லை. மக்கள் மனமே நிலைக்களம்! மக்கள் என்போர், ஆளுக்கொரு மனம் உடையவராதலால், அந்தப் பன்மைகளே குறட்பாக்களின் அடித்தளம். மனங்கள் தோறும் பரந்து, விரிந்து உலாவும் நல்ல, தூய எண்ணங்களை உணர்ந்து செம்மைப் படுத்த உதவுவதே வள்ளுவத் தருவின் வளரும் கிளை விரிப்புக்கள்.

இன்று நாம் வாழ்வது ஜனநாயக யுகம் என்கிறோம். ஆனால் கட்சிப் பூசல்களும், உட்கட்சிக் காழ்ப்புணர்வும் பகைமைத் தீயையே பாராளுமன்றம் வரை பற்றி எரியச் செய்து வருகின்றன. ஒன்று கூடி, அமைதியாகப் பேசி மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பஞ்சாயத்து, பாராளுமன்றம் எனும் மக்கள் மன்றங்கள் எல்லாம் போர்க் களங்களாகி வருகின்றன; பேயாட்டங்கள் தலைவிரித்தாடும் அரக்கப் பண்ணைகளாகி வருகின்றன. ‘சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டு கொல்!’ என்று சிலப்பதிகாரக் கண்ணகி அன்று மதுரைத் தெருவில் கேட்ட அந்தக் கையறுநிலைக் கேள்வியை இன்று பஞ்சாயத்துக் கூட்டங்களிலாவது ஒருவர் எழுந்து துணிந்து கேட்க முன்வருவதில்லை. மக்கள் மனம் நியாயம் கேட்கும் துணிவின்றி நாளுக்கு நாள் நலிந்து நம்பிக்கையின்றிக் கிடக்கிறது. இதுவே இன்றைய அவலக் காட்சி; கிராமம் முதல் தலை நகரம் வரை அரங்கேறும் அன்றாட அநியாயம்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 2

குறள் நிலா முற்றம் – 2

 

 

ஒருங்கிணைப்பாளர் ( மணிமொழியன் )

 

“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா?”

இடைமறித்த ஒருவர்

“அதனால்தான் ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாரதிப் புலவன் பாடிவிட்டானே….

நாட்டிலும் ‘உலகு’ என்பது பெரிது. அத்தகைய நூலை அளித்த ஒருவரை ஈன்றெடுத்த பெருமை தமிழ் நாட்டுக்கு உண்டு என்பதும் அருமையே!

திருக்குறளின் முதல் குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பதிலிருந்து நூலின் இறுதி வரை, ‘உலகு’ என்ற சொல் மட்டுமின்றி, பொதுமைப் பொருளுணர்த்தும் சொற்களும், சொற்றொடர் களும் தக்க இடங்களில் எடுத்தாளப்படுகின்றன. இவையெல்லாம் தமிழில் எழுதப்பெற்றாலும், குறள் உலகுக்கெல்லாம் உரியதொரு பயன்பாட்டு நூல் என்றே இன்றளவும் உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.”

இடைமறித்து இன்னொரு குரல்

“நிலாமுற்றத்தில் கூடியுள்ள குறள் அன்பர்களுக்கு என் நினைவில் படரும் கருத்தொன்றை முன்வைக்க விரும்புகிறேன்…

திருக்குறள் எனும் நூலில் பொதிந்துள்ள வள்ளுவரின் உள்ளக் கிடக்கையைப் பல படக் கூறலாம். அவற்றுள் எல்லாம் உயிர்க்கூறாய், ஊடுசரமாய்த் துலங்குவது ஒன்று… அது ‘உலகம் ஒரு குலம்’ என்பது (அவையோர் கைதட்டுதல்)

எதிர்க்கேள்வி

“இக்கருத்தை உறுதியாகக் கொள்ள வள்ளுவர் உலகோடு எல்லாம் தொடர்பு கொள்ளும் அனைத்து வாய்ப்பினையும் அன்றே பெற்றிருந்தாரா?”

கலங்கரை விளக்கம்

பதில்: “அத்தகைய வாய்ப்புக்கள் பெரிதும் இருந்திருக்க முடியாது என்றாலும் உலகு தோன்றிய நாளிலிருந்தே, ஐந்திணைக் கூறுகளைப் பகுத்தறிந்து, பண்பாட்டு நலத்தில் படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்த தமிழகம், நினைப்பிற் கெல்லாம் எட்டாத நெடுங்காலந்தொட்டே அறிவுலக ஆய்வில் வேரூன்றி நின்ற தமிழகம், சங்க காலம் என வரலாற்றாசிரியர்களாலேயே வரையறுக்க முடியாத வேத காலத்தோடு ஒப்பிடத்தக்க பழமை நிலமான தமிழகம். உலகச் சிந்தனைகளை எல்லாம் கருக்கொள்ளும் பண்பட்ட நிலமாகவும் தலைநிமிர்ந்து விளங்கியது. முதன்மையும் தொன்மையும் கலந்து அமைந்த பழந்தமிழகத்தில் உலக வாழ்க்கைக் கூறுகளும் கலந்தமையலாயின. இயல்பாகக் கருக்கொண்ட சிந்தனைகளும், புதுப்புது வரவாக வந்து சேர்ந்த எண்ணங்களும் வள்ளுவர் போன்ற அறிஞர் களுக்குப் புலனாயின. ஆகவே, அத்தகைய அறிஞர்களான சங்கப் புலவர்கள், வள்ளுவப் பெருந்தகை ஆகியோரிடம் ‘மக்கள் எல்லாம் ஒரு குலம்; மாநிலமெல்லாம் ஒரே வீடு’ எனும் சிந்தனைகள் மேவலாயின. அவை மலர்ந்து வாழ்வுக்கு வழிகாட்டி ஒளியூட்டும் அறநெறி விளக்குகளாக ஒளி வழங்கலாயின. அவற்றுள் திருக்குறளே தலையாய கலங்கரை விளக்கம் ஆயிற்று. அதுவே நம் நாடு மட்டுமன்றி, பிற நாட்டுப் பேரறிஞர்களாலும் வியந்து ஏற்கப்பட்டு பல்வேறு சமுதாய, அரசியல், அறிவியல் சித்தாந்தங்களாகப் பூக்கலாயிற்று. இன்றைய சமுதாய விஞ்ஞானங்களாகக் கருதப்படும் மார்க்சியம், காந்தியம், உலோகாயதம், உலகமயம், நாட்டுமயம், தனியார்மயம் என்றெல்லாம் எண்ண மலர்கள் பலப்பலப் பாத்திகளில் பூத்திட்டாலும், விஞ்ஞான மார்க்சியமும் தெய்விகக் காந்தியமும் போல, மனித நேய வள்ளுவமே உலகுக் கெல்லாம் நிலையான வாழ்வு மணமூட்டும்’ என்பார் தமிழ் முனிவர் திரு.வி.க.”

இடைமறிக்கும் வினா ஒன்று

“உலகு ஒரு குலம் எனும் உயிர்ப்பான வித்து திருக்குறள் என நாம் ஒரு வாதத்திற்காகவோ பெருமைக்காகவோ ஏற்றுக்கொண்டாலும் அந்த நல்வித்து நிலத்திற்குள்ளேயே புதைந்து கிடக்குமா அல்லது முளைத்தெழுந்து விரிந்த மரமாகி, நீடு நிழல் பரப்புமா…?”

ஒருங்கிணைப்பாளர் பதில்

“உலகம் ஒரு குலம் ஆதல் வேண்டும் என்றெல்லாம் பேசுவது எளிது; எழுதுவதும் எளிது. அதே சமயம், பேச்சும், எழுத்தும் செயலாதல் வேண்டும் அல்லவா?

அப்படியானால்…?

பேச்சைச் செயலாக்க வல்லதொரு கருவி வேண்டும்; அந்தக் கருவியும் நம் கைவசமே உள்ளது என்கிறது வள்ளுவம். அந்த அரிய, ஆனால் மிக, மிக எளிய கருவியின் பெயர்… நமக்கெல்லாம் தெரிந்ததுதான்…

அதுதான் ‘அன்பு.’ உலகை ஒரு குலம் ஆக்குவதற்கென்றே அன்பு இயற்கையில் அமைந்துள்ளது. அந்த அன்பே வித்து – அந்த அன்பே வித்தை.

‘அன்பின் வழியது உயிர்நிலை, அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு’ என்பதே வள்ளுவத்தின் வாய்மை; வழிமுறை.

இந்த அன்பு எங்கும் உள்ளது; எதிலும் உள்ளது; அதன் மறுபெயரே வளர்ச்சி; அதன் பரிணாமமே உலக நேயம். அதைத்தான் ணிஸ்ஷீறீutவீஷீஸீ எனும் அற்புதச் சொல்லால், விஞ்ஞான அடிப்படையாக விரித்துரைக்கிறார்கள்.

இந்த அன்பெனும் வித்து விரைந்து வளரும் பக்குவமான, பண்பட்ட விளைநிலம் மக்கள் மனம். அறிவார்ந்த நம் மானுடப் பிறவி, பிற உயிர்களை விட விழுமியதாவது எப்போது? தன்னிடம் பொதிந்துள்ள அன்பு எனும் உணர்வினை, வளர்ச்சிக்கு உரியதொரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பிற உயிர்களையும் பேண வேண்டும்.

‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

     தந்நோய் போல் போற்றாக் கடை’    (315)

என்று அன்று வள்ளுவர் சொன்னார்; அவருக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகட்குப் பின்னர் வந்த அடியவர்கள் ‘அன்பே கடவுள்’ எனப் போற்றினர்; அருட்பெருஞ் சோதியாக வந்த வள்ளலார்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’

எனத் தனிப்பெருங் கருணை பெருகிட வழி காட்டினார். கிறித்துவ சமயத்தைத் தோற்றுவித்த இயேசுநாதர் ‘ஏழையர் இந்த உலகில் என்றென்றும் இருப்பார்கள்’ என வரையறுத்துக் கூறி, என்னதான் ஆட்சிமுறை மாறினாலும், பொருளாதாரத் திட்டங்கள் தீட்டினாலும் மனிதனின் உள்ளத்தில் பிறரையும் தன்னைப் போல நேசிக்கும் அருளாதாரம் என்றென்றும் இவ்வுலகில் முன்னிடம் பெறவேண்டும் என்றார்.”

(  தொடரும் )

குறள் நிலா முற்றம் – 1

குறள் நிலா முற்றம்

 

பாகம் : 1

Image result for குறள் நிலா முற்றம்

ஒருங்கிணைப்பாளர்:  

 

‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன்

 

 

 

ஏற்பாடு : மதுரை வானொலி நிலையம்

‘வழிபாட்டு நூலா? வழிகாட்டும் நூலா?

திருக்குறள் நாம் வாழும் காலச் சூழ்நிலைக்கெல்லாம் பொருந்தும் வகையில் நம் முன்னர் எழும் சமூகச் சிக்கல்களுக்குத் தக்க தீர்வைத் தருமா? படித்துச் சுவைத்து நுகர்வதற்கு உரிய இலக்கியமாக மட்டுமே நீடிக்குமா? அல்லது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் சமுதாயத்திற்கும் தனி நபர்களுக்கும் பொருந்தும் வகையில் வழிகாட்டுமா? அது கைகூப்பித் தொழும் வழிபாட்டு நூலாகப் போற்றப்படுகிறதா? அல்லது நம்மைக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் வழிகாட்டு நூலாக ஏற்கப்படுகிறதா? மனிதர்களிடையே இயல்பாக உள்ள முரண்களைப் போலத் திருக்குறள் கூறும் வாழ்வியல் சிந்தனைகளிலும் முரண்கள் இருப்பது போலத் தெரிகிறது. அவையெல்லாம் உண்மையிலேயே முரண்பாடுகளா? அல்லது தெளிவுறு மனத்தோடு சிந்தித்தால் அம்முரண்களினூடேயும் வலுவான அரண் போன்ற கோட்பாடுகள் அமைந்திருப்பதைத் தெளிந்து கொள்ள முடியுமா?… எனப் பல்வேறு சிந்தனைக் கீற்றுகளுடன் நிலா முற்றத்தில் அறிஞர் அவை கூடியிருந்தது.

நீலவான் ஆடைக்குள் முகம் மறைத்திருந்த நிலவு, மேகத்திரள் தாண்டி மேலெழுந்து தன் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுவது போல, மெல்லென அதிர்ந்த மின்னல் போலத் தொடங்கிய நிலா முற்ற அரங்கு, நேரம் ஆக ஆகக் கூடியிருந்த அறிஞர் பெருமக்களின் கலந்துரையாடலாலும் கருத்து மோதல்களாலும் விளக்கம் பெறத் தொடங்கிவிட்டது. தனிப்பேச்சு, கருத்தரங்கம், பட்டிமன்றம் எனும் முப்பரிமாணம் கொண்ட முற்றமாக அது பயன் நல்கலாயிற்று.

திருக்குறள் தமிழ்மொழியில் தோன்றியமை நம் தமிழ் பெற்றதொரு வரலாற்றுப்பெருமை. பாரதியாரைப் போற்றிப் பாடிய பாவேந்தர் பாரதிதாசன்,

“என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!

     தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்,

     தமிழால் பாரதி தகுதி பெற்றதும்…!”

என வியந்து முடிவுரை கூறியதைப் போல…

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே  தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

எனப் பாரதிப் புலவரே வள்ளுவத்தால் தமிழ் மொழியும் நாடும் பெற்ற உலகப் பெருமைக்கு முத்தாய்ப்பிட்டுப் பாடிவிட்டார்.

‘தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி, வழிவழியாக வாழ்வு பெற்று இன்றும் வழக்கில் உள்ளது எனப் போற்றிப் பாராட்டப் பெறும் பெருமைக்குரிய ஒரே நூல் திருக்குறள்’ எனப் பழங்கதை போலப் பேசி வருகிறோம்; நமக்குள்ளே மகிழ்கிறோம். இந்தச் சிறப்பு திருக்குறளுக்கு உண்மையிலேயே பொருந்துமா? அல்லது ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என நமக்கு நாமே கூடிப் பேசிக் கலைகிறோமா? எனச் சிலர் வினாத் தொடுத்திட, நிலா முற்றம் களைகட்டியது.

இடைமறித்த பேராசிரியர்

“திருக்குறளின் கருத்து கால எல்லை க்கு உட்பட்டதல்ல. காலம் கடந்த தத்துவங்களையும் சமுதாயச் சிந்தனைகளையும் நடைமுறைப்படுத்த வல்ல செயல் நூல் அது. பகவத் கீதை, விவிலியம், திருக்குர்ஆன் போன்ற சமய நூல்களைப் போல உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்புச் செய்யப் பெற்றுள்ள ஒரே வாழ்விலக்கிய நூல் அது ஒன்றுதான். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு எனும் வரையறைகளைக் கடந்து உலக மெல்லாம் தழுவிக் கொள்ளத்தக்க தகுதியுடைய பொது நூல். அது மனித குலத்தின் நீதி நூல்; வாழும் நியதி நூல்.”

மற்றோர் அறிஞர்

“வள்ளுவத்தில் அதிசயங்களோ, அற்புதங்களோ, சூத்திரங்களோ, சூட்சுமங்களோ இல்லை; அன்று வள்ளுவர் வரைந்தளித்ததை இன்று நாம் அப்படியே கையாள முடியவில்லை என்றால், அது நூலின் பிழையில்லை; நம் இன்றைய சமூக வாழ்வின் பிழை. நாம் மனிதத் தன்மையிலிருந்தும் மனிதப் பண்பிலிருந்தும் நெடுந்தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே இந்தப் பிழைக்குக் காரணம்.

நமது பிள்ளைகளுக்கு அளிக்கப்பெறும் கல்விக்கும் அவர்களோடு நாம் வாழும் வாழ்க்கைக்கும் இன்று உள்ள உறவு ‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவு’ போலத்தான் உள்ளது! (சிரிப்பு)….

நம் வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் முழுமையாய்ப் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை, அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி.

சாதாரண மனிதன் கூட, நடை பயிலக் கூடிய எளிய அற நெறியையே வள்ளுவர் கூறினார்; அதையும் தனித்தனி அதிகார வரம்பிற்குள் நின்று, எளிய முறையில் கூறினார்.

திருக்குறள் ஒரு வாழ்க்கை அனுபவ விளக்கம். வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் கண்டறிந்த, உற்றறிந்த உணர்வோடு தொகுத்துச் சொல்லும் கையடக்க ஏடு. அதிகாலைப் பனிப்பொழிவால் தரையில் படர்ந்துள்ள புல்லின் இதழ் நுனியில் தூங்கும் அந்தப் பனித்திவலையைச் சற்று உற்றுப் பார்த்தால், அதில் வானத்து விளிம்பு முழுதுமே தெரியும். அதைப் போல ஒரு குறட்பாவைப் படித்தாலும் போதும்… அது தான் பேச வந்த ஒரு பொருள் பற்றிய விரிவெல்லை முழுவதையுமே நமக்குக் காட்டிவிடும்…”

கூட்டத்தில் ஒருவர்

“ஒவ்வொரு குறட்பாவும் பனித்துளி காட்டும் பளிங்கு மா மண்டபம் என்பது அழகான உவமை.”

ஒருங்கிணைப்பாளர்

“இப்போது வள்ளுவரைப் பற்றி எனக்கு வேறொரு உவமை சொல்லத் தோன்றுகிறது…! திருவள்ளுவர் சமுதாயத்தில் பல்வேறு துறைகளையும், நிலைகளையும் ஆய்ந்தறிந்து, நாட்டில் அதுவரை பரவியிருந்த அறிஞர் மற்றும் புலவர்தம் கருத்துக்களையும் கேட்டு, படித்து, அறிந்து, தெளிந்து, எல்லாவற்றையும் நினைவில் கொண்டு, வள்ளுவத்தைச் செய்திருக்கிறார். மிகச்சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றியிருக்கிறார். அவர் ஒரு கைத்திறமிக்க ‘சொல் தச்சராகவே’ – ‘கருத்துச் சிற்பியாகவே’ இன்றும் நமக்குத் தோன்றுகிறார்… மக்கள் அள்ளித்தெளித்த கோலம் போல இன்று வாழ்கிறார்கள்… வள்ளுவர் அன்றே எழுதிய குறட்பாக்களைப் புள்ளிகளாக்கிப் புதுக்கோலம் புனைந்துள்ளார்…. இல்லத்து முன்றிலில் விடிகாலை தோறும் கோலமிட்டு மனைவிளக்கம் தரும் மங்கையர் பணி போல, வாழ்வில் அன்றாடம் நாமும் நல்லாடை புனைதல் போல, புதுப்புதுக் கருத்துப் பொலிவால் புதுநலன்கள் பெறுவோம்; புத்துணர்ச்சி பெருகக் காண்போம். ஒவ்வொரு நாளையும் ஒரு திருநாள் போலக் கருதி, புதுமலர் போலச் சூடி அன்றாட வரலாற்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும் – அகம் – புறம் எனும் இரு நிலைகளிலும் – வளர்ச்சிக்கு உரிய மாற்றங்களை வழங்குவதே குறளின் நிலைபேற்றிற்கும் நீடு புகழுக்கும் காரணம்.

உலக சமுதாயங்களில் புறத்துறை வாழ்வில் புரட்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பது வரலாறு. ஆனால் அகம் – புறம் எனும் இரு துறைகளிலும் சமச்சீரான மாற்றங்களைச் செய்து, பிறருடன் இணங்கி, ஏற்றமுற வாழ வழிகாட்டிய சான்றோர் மட்டுமே உலக நாகரிகத்தை உருவாக்கியவர்கள். அத்தகையோர் எண்ணிக் கையில் மிகச்சிலரே ஆயினும் அவர்களால் தான் இன்றளவும் உலகம் புதுப்புதுச் சிந்தனை மலர்களால் தன்னைச் சிங்காரித்துக் கொள்கிறது.”

இடைமறித்த ஒரு பேராசிரியர்

“உலக நாகரிகத்தை, சிந்தனைச் செல்வத்தை உருவாக்கிய சான்றோருள் திருவள்ளுவர் தலையாயவர் என இங்கே எதிரொலித்த செய்தி கேட்டு என் செவிகள் எல்லாம் இனித்தன… உங்கள் செவிகளும் இத்தேனினு மினிய கனிகளை நுகர்ந்திருக்கும்…”

புலவர்

ஐயா அவர்கள் ‘செவிநுகர் கனிகள்’ எனும் கம்பன் வாக்கைத் தான் நினைவூட்டுகிறார்.

கம்பன் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளுக்கு விளக்கவுரை போலச் செய்துள்ளதைத் தான் நினைவூட்டினேன்; குறளின் சூத்திரங்களைக் கம்பன் தன் பாத்திரங்கள் வாயிலாகப் பேசினான்!

தமிழுக்குக் ‘கதி’ எனக் கம்பரையும் திருவள்ளு வரையும் சொல்வது அதனால்தான் வந்தது…”

இன்னொருவர்

“சரி… சரி… குறள் முற்றத்துக்கு வருவோம்… கம்பரும் வள்ளுவரும் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் என்றென்றும் நிலைபெறச் செய்தார்கள். தமிழர்களாகிய நாம் செய்த தவம் அது ஒன்று போதும்.

தமிழ் முனிவர் திரு.வி.க. அன்று சொன்னதை இந்த நிலா முற்ற அரங்கில் நினைவூட்ட விரும்புகிறேன்.”

பேராசிரியர்

“சொல்லுங்கள் சுருக்கமாக.”

“திருவள்ளுவரின் பிறப்பு வளர்ப்பு பற்றிய உண்மை வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. அவரது வரலாறு சொல்லப்படுகிறது. அவற்றுள் பெரும்பாலானவை வெறும் புனைந்துரைகள், கற்பனைகள் என விட்டுவிடலாம். வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இல்வாழ்க்கையில் நின்று ஒழுகியவர் என்பதும், மக்களை ஈன்று புறந்தந்தவர் என்பதும், அறவோர் என்பதும், தெய்வப் புலவராகப் போற்றப்பட்டவர் என்பதும் அவர் அருளிய நூலால் இனிது விளங்குகின்றன” என்கிறார் திரு.வி.க.

மற்றொரு பேராசிரியர்

“அதனால்தான் திரு.வி.க. அவர்களின் மாணவராகத் தம்மை வரித்துக் கொண்டு வாழ்ந்த அறிஞர் மு.வரதராசனார் தாம் எழுதிய நூலுக்குத் ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ எனப் பொருத்தமாகப் பெயரிட்டார்…

ஒருங்கிணைப்பாளர்

“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா?”

 

( தொடரும் )

குறள் நிலா முற்றம்

குறள் நிலா முற்றம்

 

Image result for குறள் நிலா முற்றம்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’

எனப் பாரதியார் பாடியது வெறும் புனைந்துரை இல்லை. வள்ளுவரது நெஞ்சமும் உலகோர் வாழ்வியல்பும் ஒரு தராசில் சம எடையாக நிறுத்தளந்தது போல், ஒரு சீராக நிற்பதைக் கண்டறிந்து கூறிய புகழுரை. வள்ளுவமே சமுதாயம் முழுவதற்கும் உரிய சரியான வாழ்க்கை விளக்கம் என அறுதியிட்ட தீர்ப்புரை.

திருவள்ளுவர் தமிழ்நாட்டிலே பிறந்தார். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மண்ணோடும் மரபோடும் ஒன்றிக் கலந்து உருவாகியிருந்த பண்பாட்டுச் சிந்தனைகளால் உரம் பெற்று வளர்ந்தார். அந்த வளர்ச்சியின் பயனாகக் குறட்பாக்களை வித்துக்களாக்கி ஈந்து உதவினார். அந்த வித்துக்கள் உலகின் எந்தச் சமுதாயப் புலத்தினும் ஊன்றிச் செழித்தோங்கும் இயல்புடையவை; அந்த முத்துக்கள் ஒவ்வொருவருக்கும் அணிகலனாக அழகு சேர்க்கக்கூடிய தனிச்சிறப்புடையவை.

வள்ளுவர் ஒரு நாட்டில் பிறந்தவர் எனினும் உலகச் சிந்தனையாளர். ‘மக்கள் எல்லோரும் ஒரு குலம்; மாநிலம் முழுவதும் ஒரு வீடு’ எனும் பரந்த நோக்குடையவர். கிரேக்கத்து அரிஸ்டாட்டிலைப் போல – பண்டைய இந்தியாவின் ஆதிமனுவைப் போல – அகிலப் பார்வை யுடையவர்; அறிவியல் – ஆன்மீகம் – மார்க்சியம் – காந்தியம் எனப் பல்துறைச் சார்புப் போக்கினர்க்கும் பொதுநலம் கூறும் சால்புடையவர்.

நூல்கள் இரு வகைப்படும் எனஅறிஞர் கூறுவர். எழுதப்பட்ட காலத்திற்கே நம்மைக் கூட்டிச் செல்வன முதல் வகை: நாம் வாழும் காலத்திற்குத் தாமும் உடன் நின்று வழி காட்டுபவை இரண்டாம் வகை.

திருக்குறளில் முதல் வகைப் பாங்கு ஓரளவிற்கும் இரண்டாம் நிலைப்பேறு பேரளவிலும் இணைந்திருப்ப தாக அறிஞர்கள் அரங்கு கூட்டிப் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்குத் திருக்குறள் வற்றாத ஊற்றாக, வளங்குன்றாத சுரங்கமாகப் பயன் தந்து கொண்டே இருக்கிறது.

என்றாலும் திருக்குறளை வாழ்க்கை விளக்கமாக ஏற்போரிடம் ஓர் ஐயம் அவ்வப்போது ஏற்பட்டு வருவதையும் மறுப்பதற்கு இல்லை.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால்

     இல்லாத எப்பொருளும் இல்லையால்”

என அன்று பாடிய திருவள்ளுவ மாலை இன்றைக்கும் வாடாத மாலை ஆகுமா? எனக் கேட்டு, நமது வாழ்க்கைப் போக்கிற்கெல்லாம் திருக்குறள் துணையாக வந்து விடுமா?  அவரவர் வாழ்க்கைக்கெல்லாம் வள்ளுவம் உதவுமா? என்பதோடு ஒவ்வொருவர் வாழ்வுக்கும் வள்ளுவம் வழி காட்ட வேண்டும் எனும் ஆர்வமும் தலைதூக்கி நிற்கிறது.

வள்ளுவத்தை மட்டுமல்ல, சமயப் போதனைகள், மார்க்சியம், காந்தியம் ஆகிய உண்மைகள் அனைத்தையும் வாழும் காலம் எனும் உரைகல்லில் உரசிப் பார்த்து எடை போட்டு அறியவே விழைகின்றனர்.

காலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை. காலத்தின் மாறுதல்கள் உடைமாற்ற நாகரிகங்களைப் போன்றவை; அடிப்படை உண்மைப் பண்புகள் உயிரைப் போன்றவை என்பர் அறிஞர்.

‘காந்தியக் கதராடையே சோபிதம்’ எனப் பாடிய காலம் சடுதியில் மாறியுள்ள சூழலில், வள்ளுவப் பழைய உடை இன்றைய புதுயுகத் தேவைக்கெல்லாம் பொருந்துமா எனக் கேட்டுப் பார்ப்பதில், எடைபோட்டுப் பார்ப்பதில் தவறில்லை.

‘நாம் வாழும் இந்தக் காலத்திற்கு வள்ளுவம் வழி காட்டுமா?’ என்பது பயனுள்ள கேள்வியே ஆகும்.

இக்கேள்விக்குப் பலரை ஒருங்கு கூட்டி, விவாதப் பொருளாக இதை முன்வைத்துப் பயன்தர மதுரை வானொலி புதுமையான நிகழ்ச்சியை ஒரு சரமாகத் தொடுக்க முனைந்தது. நிகழ்ச்சிகளை வானொலி அரங்கில் இருந்தே ஒலிபரப்பும் பழைய முறையை மாற்றி ‘வாசலுக்கு வரும் நேசக் கரங்களை’ நீட்டி நிகழ்ச்சிகளை அமைக்கும் புதுமையை அரங்கேற்றியது. அதில் ஒன்று நிலா முற்றம்.

‘நீலவான் ஆடைக்குள் ஒளி மறைத்து

     நிலாவென்று முகம் காட்டும்’

வளர்பிறை, மாதந்தோறும் முழுமதியாக வானக் காட்சி தருவது. வீட்டுவெளியில் வந்து அண்ணாந்து பார்த்து மகிழவோ வியக்கவோ நமக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை – விருப்பம் இருப்பதில்லை.

வீட்டு அறைக்குள் அமர்ந்து உண்ணும் சாப்பாட்டை நம் வீட்டு முற்றத்திலேயே பிள்ளைகளுடன் குடும்பத் தாருடன் ஒன்றாய் அமர்ந்து குலவிப் பேசி அதை நிலாச் சோறாக உண்பதிலும் நாட்டம் கொள்வதில்லை! இயற்கையை ரசிக்க எங்கெல்லாமோ பயணம் போகிறோம். வீட்டிற்குள்ளேயே – வீட்டருகே வலம் வரும் விந்தைகள் கூட நம் கண்ணிலோ மனத்திலோ படுவதில்லை; படிவதில்லை.

திருக்குறள் சிந்தனையைப் பலரது கருத்திலும் படரச் செய்யக் கருதிய வானொலி நிலையம் அதை நிலா முற்ற விருந்தாக, அரங்காகக் கூட்டியது.

அந்த அரங்க அமைப்பினை என் வீட்டு முற்றத்தில் நிலா விருந்தாக்கிட நான் விழைந்தேன். மதுரைத் தமிழ் அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அழைத்து வர வானொலியார் இசைந்தார்.

என் இல்லத்து விரிந்த முற்றத்தில் திருக்குறள் நிலா முற்றம் கூடியது.

‘குறள் நெறிகள் நம் காலத்திற்குப் பொருந்துமா?’ எனும் தலைப்பில் விவாத மேடைச் சிந்தனைகளைத் தொகுத்து ஒரு சரமாக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப் பட்டது.

இளமைப் பருவம் முதல் குறட்பாக்களில் சிந்தை மயங்கி வளர்ந்து குறள் கருத்துக்களைச் சமுதாயப் பொது உடைமை ஆக்கிப் பரப்பும் ‘உலகத்திருக்குறள் பேரவை’ யின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றிருந்த எனக்குக் குறள் பற்றிய அறிஞர் பெருமக்களின் சிந்தனைகளோடு இணையும் இனிய வாய்ப்பு இது எனக் கருதினேன்.

குறள் நிலா முற்ற அரங்கு கூடியிருந்தது.

திருக்குறள் பேரவையின் தமிழ்நாட்டமைப்பின் துணைத்தலைவர், செயலாளர், பல கிளைப் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், புலவர்கள், அரசு உயர்நிலை அலுவலர்கள், சமூக இயக்கச் சிந்தனையாளர்கள், நாட்டுநலத் தொண்டர்கள் என ஒரு பிரதிநிதித்துவப் பேரணி போலக் கூடி இருந்தது அவை.

வானத்திலே முழுமை நிலா, அழகு நிலா மேலெழுந்து கொண்டிருந்தது. நிலா முற்ற அரங்கில் குறள் நெறிச் சிந்தனைகள் அறிஞர்களிடையே உலா வரத் தொடங்கின. இந்த நிலா முற்ற விருந்தில் குறள் அமுதம் அருந்திட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இந்நூல் சிறப்புற வெளிவரப் பெரிதும் துணையாக, இருந்த பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் இரா.மோகன் ஆகியோருக்கும், அணிந்துரை நல்கிய வணக்கத்திற்கு உரிய மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார், மூதறிஞர்.தமிழண்ணல், இசைவாணர் எஸ்.மோகன்காந்தி ஆகிய சான்றோர்களுக்கும் எனது இதய நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.

ந.மணிமொழியன்

பொதுச்செயலாளர்

உலகத் திருக்குறள் பேரவை

உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய காந்தியடிகள்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய

உலக உத்தமர் காந்தியடிகள்

“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

 உள்ளத்துள் எல்லாம் உளன்”        (294)

உள்ளம் அறிந்து பொய்யாமை நினையாதவர்கள் உலகத்து மக்கள் உள்ளத்தில் எல்லாம் புகழோடு நிலைத்திருப்பார்கள் என்பதைத் தமது உண்மையான தூய தொண்டின் மூலம் மெய்ப்பித்து வெற்றி கண்டவர் அண்ணல் காந்தியடிகள்.

முழுமையும் நல்லவராக, முழுமையும் உண்மையுடைய வராக, முழுமையும் அன்புடையவராக வாழ்ந்திட விரும்பினார் காந்தியடிகள். வாழ்வின் அனைத்துக் களங்களிலும் அவர் உண்மையின் ஒளியில் வாழ்ந்திட மேற்கொண்ட விருப்பம் சாதாரண ஆத்மாவாக இருந்த அண்ணல் காந்தி அவர்களை மகாத்மாகாந்தியாக உருவாக்கியது. தேசப்பிதா என்று நாடே கொண்டாடியது.

காந்தியடிகள் என்றவுடன் நமக்கு முன் தோன்றி நிற்பது அகிம்சையும், சத்தியமும் தான். எந்த வகையிலும் உயிர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தல் கூடாது என்பது அகிம்சை. எந்த நிலையிலும் பொய்யை ஒரு போதும் சொல்லக்கூடாது, உண்மையே கூறுதல் வேண்டும் என்பது சத்தியம்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்

 பின்சாரப் பொய்யாமை நன்று”      (323)

என்பது வள்ளுவம். இந்தியத் திருநாடு ஏறத்தாழ சுதந்திரம் பெற்று விட்ட நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்டார்: “நிராயுதபாணியாய் நின்று போராடும் ஒற்றை மனிதரின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்களை வைத்திருக்கும் பிரிட்டிஷ் அரசால் நசுக்க முடியவில்லையா?” சர்ச்சில் அவர்கள் அதற்குப் பதிலளிக்கையில் அந்த மனிதர் “காந்தியடிகள் கத்தியை எடுத்திருந்தால் நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன், துப்பாக்கியை எடுத்திருந் தால் நான் பீரங்கியைக் கொண்டு நசுக்கி இருப்பேன். ஆனால் அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார்? சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லையே?” என்றார். அதிவேக ஆயுதபலமும் வலிமை வாய்ந்த இராணுவமும் கொண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்தை சத்தியம் என்னும் ஆயுதம் கொண்டு சத்தியாகிரகம் எனும் அறப்போர் முறையில் கத்தியின்றி இரத்தமின்றி போராடிப் பணியவைத்தவர் காந்தியடிகள்.

“உங்கள் எதிரிகளை சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை நீங்கள் ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைப் பழிப்பவர் களுக்காகவும் பிரார்த்தனை பண்ணுங்கள். அப்போது தான் மனித வாழ்வின் மேன்மை என்னவென்றே உணர்வீர்கள்” என்பது ஏசு பெருமானின் போதனைகள்.

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

     நன்னயம் செய்து விடல்”      (314)

என்பது வள்ளுவம். துன்பம் செய்தவரைத் தண்டிக்காது. அவர் வெட்கப்படும்படியான தண்டனையாக நன்மையைச் செய்து அவர் செய்த துன்பத்தை மறந்திடுதல் மேன்மை யுடையோர் செயலாகக் கருதப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர். இக்கொள்கையில் நிலையாக நின்றவர் காந்தியடிகள்.

நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை பெற்ற காந்தியடிகள் எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறை அதிகாரியாக இருந்த ஸ்மட்ஸ், காந்தியின் மார்பில் மிதித்துச் சிறையில் தள்ளுகிறார். அதற்காக காந்தியடிகள் வருந்தவில்லை. சிறைத் தண்டனை முடித்து வெளிவந்த காந்தியடிகள் அந்த சிறை அதிகாரிக்கு சிறையில் கிடைத்த தோல்களைக் கொண்டு தாமே தைத்த மிதியடி ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். “மிதியடி கொடுத்தமைக்கு நன்றி. எனது காலின் சரியான அளவு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?” என்றார். காந்தியடிகள் புன்னகையுடன் “நீங்கள் உங்கள் பூட்ஸ் காலால் என்னை உதைத்தீர்களே அந்தத் தடயம் என் மார்பில் இருந்தது. அதிலிருந்து எடுத்துக் கொண்டேன்” என்றார். அந்த சிறை அதிகாரி வெட்கித் தலைகுனிந்து காந்தியடிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்ற செய்தியினை அறியும்போது மகாத்மா மகாத்மா தான் எனச் சொல்லத் தோன்றுகிறது.*

“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

     என்ன பயத்ததோ சால்பு?”           (987)

நமக்குத் துன்பம் செய்தவருக்கும், நாம் நன்மை செய்யவில்லை என்றால் நம்முடைய பெருந்தன்மை வேறு எதைச் சாதிக்கப் போகிறது எனக் கேட்கும் வள்ளுவத்தின் சான்றாண்மை நெறியினைக் காந்தியடிகள் வாழ்வின் உயிரெனக் கொண்டு வாழ்ந்துள்ளார் என்பதை அறியும் பொழுது நம் நெஞ்சம் நம்மை அறியாமலே நிமிரத் தானே செய்கிறது?

ஓர் இலட்சியத்திற்காக மனமுவந்து ஏற்கும் தியாகமே தவம் என்பர். உண்ணாவிரதம் இருப்பதும் அடுத்தவர் துன்புறுத்தினாலும் அவர்க்கு எதிராகக் கையைக் கூட அசைக்கக் கூடாது என்பதும் காந்தியடிகள் சத்தியா கிரகத்திற்குக் கூறிய இலக்கணங்கள்.

Image result for திருவள்ளுவர்

“உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை

 அற்றே தவத்திற்கு உரு”       (261)

தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குக் கேடு செய்யாதிருத்தலுமே தவம் என்பார் திருவள்ளுவர். காந்தியடிகள் மிகச்சிறந்த தவசீலராக விளங்கினார்.

மகாத்மாவாக வாழ்ந்த காந்தியடிகள் தம்மை ஒரு சாதாரண மனிதராகவே கருதிக்கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அக்கறை கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அவர் கொண்ட அன்பு தான் சாதாரண மனிதர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்ய வைத்தது. காந்தியடிகள் தேசிய விடுதலையைச் சிந்தித்த அதே வேளையில் சமூக விடுதலையைப் பற்றியும் சிந்தித்தார். அதனால்தான் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்தார்.

“நான் என்ன விரும்புகிறேனோ, எதற்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேனோ, எதற்காகச் சாவதற்கு மகிழ்ச்சி யடைகிறேனோ அது தீண்டாமை. வேரும் கிளையு மில்லாமல் அழித்து விடுவதாகும் என்னுடைய உண்ணாவிரதம் சாதி இந்துக்களை அவர்களுடைய உறக்கத்திலிருந்து எழுச்சி பெறச் செய்து விழிப்புறச் செய்யுமானால் அது அதன் நோக்கத்தை நிறைவேற்றியதாகும்.” எனச் சூளுரைத்து அதில் வெற்றியும் கண்டார். காந்தி யடிகளின் போராட்டத் திற்குப் பின் பல ஜாதி இந்துக்கள் தீண்டாமை பற்றிய வைதீக எண்ணத்தைக் கைவிட்டனர். கோயில்கள், சாலைகள், கிணறுகள் அனைத்தும் தீண்டத் தகாதவர்களுக்கும் திறந்து விடப்பட்டன என்பது வரலாறு. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதையும், ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்பதையும், அன்பு வழியே ஆயுதத்தால் சாதிக்க இயலாததைச் சாதிக்க வல்லது என்பதையும் தமது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டியவர் காந்தியடிகள். அன்பு வழி மாறி இன்றைய உலகம் செல்வதால் தான் எங்கும் பகைமையும், பூசலும், வன்முறையும் நிலவுகின்றன.

 

காந்தியடிகளின் தமிழ்ப்பற்று

Image result for காந்தியடிகள்

காந்தியடிகள் தமிழ்மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்தார். ‘தமிழ்மொழி கற்க மிகுந்த நாட்களைச் செலவு செய்துள்ளேன்’ என அவரே கூறியுள்ளார். ‘இந்தியாவில் அனைவரும் ஓரினமாக வாழ வேண்டும் என்றால் சென்னை மாநிலத்திற்கு வெளியே வாழ்கிறவர்கள் தமிழ் மொழியை அவசியம் கற்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார் காந்தியடிகள்.

காந்தியடிகள் திருக்குறள் மீது அளவிட முடியாத அளவிற்கு விருப்பமும், மரியாதையும் வைத்திருந்தார். “திருக்குறளைப் படிக்காத ஒருவரை இந்திய இலக்கியப் படைப்பாளியாக நான் கருத மாட்டேன்” என்பது அகமதாபாத் நகரில் நடந்த இந்திய இலக்கியப் படைப்பாளிகள் மாநாட்டில் காந்தியடிகள் வெளியிட்ட பிரகடனம் என்றும், காந்தியடிகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர் தில்லை யாடியைச் சேர்ந்த கன்னியப்பச் செட்டியார் என்ற தகவலையும் செய்தித் துறையில் பணியாற்றிப் பெருமை பெற்ற திரு.அ.பிச்சையா தமது ‘சிந்தனைப் புள்ளிகள்’ நூலில் குறிப்பிடுகிறார்.

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கியும் மேதையில் மேதையாக வாழ்ந்திட்ட மகாத்மா அவர்கள் சத்தியத்தின் மீதும், அகிம்சையின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு, அதனையே தமது போராட்டக் களத்தின் ஆயுதமாக முன் நிறுத்தி இந்திய தேசத்தின் விடுதலைக்கும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நிலைப்பாட்டினை உருவாக்கி சமூக விடுதலைக்கும் வித்திட்டு மானிட சுதந்திரப் பயிரினைச் செழிப்புற வளர்த்திட்ட பெருமகனார்.

“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

     மலையினும் மாணப் பெரிது”        (124)

என நடையில் நின்றுயர் நாயகராகத் திகழ்ந்திட்ட மகாத்மா அவர்களுக்குச் சிலை வைத்துச் சிறப்புச் செய்வது பாராட்டிற்கு உரியது. பிரான்சு நாட்டில் உள்ள வொரெயால் நகரத்தில் புதுச்சேரி தமிழ் உள்ளங்கள் தமிழ்க் கலாச்சார மன்றம் வைத்து இந்திய நாட்டின் கலாச்சார சிறப்புக்களையும், தமிழக மக்களின் பண்பாட்டு மேன்மைகளையும் பரப்பி வருவது போற்றுதற்கு உரியது. இச்சீரிய பணியினை சிரமேற்கொண்டு செய்து வரும் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் திரு.பாண்டுரங்கன், இலங்கைவேந்தன், செயலாளர் திரு.இராமச்சந்திரன் உள்ளிட்ட மன்ற நிர்வாகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். நீண்ட நெடுங்காலம் ஒற்றுமையுடன் பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்துத் தமிழ் மக்களும், அவர்கள்தம் குடும்பத்தினரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து சிறந்திட எல்லாம் வல்ல அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் அருளினை வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன்.

 

வழிகாட்டும் மணிமொழியம்

Image result for மணிமொழியன்

 

வழிகாட்டும் மணிமொழியம்

 

 1. எனது திருக்குறள் ஈடுபாட்டு வளர்ச்சிக்கு உதவியவை இரண்டு; ஒன்று, நான் பெற்ற பேறு; மற்றொன்று, எனக்கு அமைந்த வாய்ப்பு.
 2. ஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்து வந்தன. வாழ்வின் புதிய அனுபவங்களுக்கு உட்பட்ட போதெல்லாம் வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான்விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின.
 3. மேலை நாடுகளிலே ஒருவருக்கு ஒருவர் பேசுகின்ற சமயத்திலே பொறுமையாகவும் முழுமையாகவும் மற்றவர் பேச்சைக் கவனிக்கின்றார்கள். ஒரு செய்தியைச் சொல்லும் போது இடையில் யாரும் குறுக்கிடுவது இல்லை. மென்மையாகப் பேசுகின்றார்கள். பேசி முடித்தவுடன் தங்களுடைய உடன்பாட்டையோ மறுப்பையோ இதமாக நயம்படக் கூறுகிறார்கள். சில சமயம் உடன்படாக் கருத்துக்களுக்கு மௌனமாக ஒரு புன்னகை செய்து விட்டுவிடுகின்றனர். இவை எல்லாம் எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தன.
 4. உலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும்போது மட்டும் ஊர் கூட்டி முழக்க மிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவது தான் நம் வழக்கம்.
 5. வள்ளுவர் நம் மொழியில் எழுதினார். ஆனால் அதனை நம்மைவிட, கிழக்கே ஜப்பானியரும், மேற்கே அமெரிக்கருமே போற்றி வாழுகின்றார்கள். வள்ளுவம் அங்கெல்லாம் வாழுகிறது! நன்றாக வாழுகிறது!
 6. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப் பாரதியார் பாடினார். முதன்முதலாகத் திருக்குறளை, மேலைய உலகிற்கு வழங்கி அறிமுகப்படுத்தும் பணியைக் கூட நாம் செய்யவில்லை. தமிழ் உணர்வறிந்த மேலை நாட்டு அறிஞர்கள் எடுத்துச் சொன்ன பின்னரே திருக்குறள் பல மொழிகளில் உலகறியத் தொடங்கியது.
 7. பலருக்கும் பல வகையில் பயன்படும் சிறப்பு வாய்ந்த தனிப்பொது நூலாகிய திருக்குறளை இலக்கியமாகக் கருதிக் கலைநயம் காணலாம்; ஒழுக்க நூலாகப் பேணலாம்; அரசியல் நூலாகப் படிக்கலாம். காலம் மாறினாலும் அடிப்படை அறங்கள் மாறுவதில்லை எனும் பேருண்மையை அறியலாம்.
 8. இன்றைய வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்கள்; புதுப்புதுப் பிரச்சினைகள். இவற்றிற்கெல்லாம் தீர்வு தேடி அலைவதே ஒரு பெரிய வாழ்க்கைப் போராட்ட மாக உள்ளது. தக்க தீர்வுகளைத் தேடுவார்க்குத் திருக்குறள் வழிகாட்டுகிறது.
 9. எக் காலத்திற்கும், எந்தச் சூழலுக்கும் பொருந்தும் வகையில் வாழ்க்கை அறம் வகுத்திருப்பதே வள்ளுவத் தனிச்சிறப்பு.
 10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.
 11. ‘உலகம் ஒரு குலம்’ என்பதே திருக்குறளின் உயிரோட்டம். உலகம் ஒரு குலமாக விளங்க வேண்டும் எனில், அந்த உயிரோட்டத்திற்கு, அன்பு எனும் குருதியோட்டம் நிலையாக இயங்குதல் வேண்டும். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதே வள்ளுவத்தின் நிலையான குருதியோட்டம்.
 12. குறள் முழுவதிலும், பல்வேறு மாந்தருக்கும் நிலைக்கும் ஏற்றவாறு, வெவ்வேறு நடைத்திறங்களைக் கையாளும் வள்ளுவச் செம்மல், ‘உண்ணற்க கள்ளை’ எனத் தீய பழக்கத்தைக் கைவிடுமாறு, வியங்கோளாக வேண்டுதல் நடையில் கூறிய வள்ளுவர், இங்கே, ‘செய்க பொருளை’ என ஆக்க நெறிக்கு ஆட்பட வருமாறு கட்டளையிடுகிறார்; கண்டிப்பாக வற்புறுத்து கிறார்.
 13. திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனிநபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்
 14. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட் பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனிநாட்டை விட, உலகு என்பது பெரியது அல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பது அல்லவா?
 15. ‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்நான்கும், இழுக்கா இயன்றது அறம்’ (35) என மனதில் பாசு படியாது பளிங்கு மாடம் போல வள்ளுவர் வலியுறுத்தி இருப்பது – இன்றும் நாம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதொரு மனோதத்துவக் கருத்து. மனத்தின் முழுத் தூய்மையே அறம் என்பது திருக்குறளின் தீர்மானம்.
 16. வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல, அவர் உடல் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார்… அவர் நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார்; உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார்; பசி, செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கு ஏற்ப சிகிச்சை தருகிறார்.
 17. ‘ஆண்மை’ என்றால் ஆளுமை. அது புற வீரத்தை விட, அக ஒழுக்கமான மன அடக்கத்தில் தான் தலைநிமிர்ந்து விளங்கும். அது கோழைத்தனம் அல்ல.
 18. ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு’ (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமை மிகுவதையே இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது.
 19. திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாக சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்றார்.
 20. கீதை காட்டும் பாதையும் வள்ளுவர் காட்டும் வழியும் ஒன்றொடு ஒன்று இசைந்தவை; இணைந்தவை. கீதையில் குறளையும் குறளில் கீதையையும் காண்கின்றோம்.
 21. ‘சத்யமேவ ஜயதே’ என்ற இந்தியக் குடியரசின் இலச்சினையும் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தமிழக அரசின் இலச்சினையும் வாய்மையின் சிறப்புக் கருதியே பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வுண்மைகள் நம் இதயத்தில் இடம்பெற வேண்டும்.
 22. உண்மையில் எந்த ஒன்றும் முற்றிலும் துன்பம் தருவதில்லை. அத் துன்பத்தின் ஊடேயும் – புகை நடுவினில் தீ இருப்பதைப் போல – அத் துயரத்தின் நடுவிலும் வாழ்க்கை எனும் நம்பிக்கைத் தீ கனன்று கொண்டே இருக்கும்.
 23. உலகப் போக்கோடு – அந்த வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவதை விட, அதற்கு எதிர்நீச்சல் இடும்போது தான் வாழ்வில் ஒரு வகைச் சுகம் தெரிகிறது. இந்தச் சுக அனுபவம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் உரியது; சற்று முயலும் எவர்க்கும் எளியது; நாளடைவில் எல்லோர்க்கும் இனியது.
 24. ‘பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா? பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?’ என்பது ஒரு பழைய திரைப் பாடல். ‘பேணி வளர்க்க வேண்டும்’ எனும் தொடரிலேயே பெற்றோர்கள், தம் பிள்ளைகளைப் பொறுத்தவரை பேண வேண்டிய விருப்பங்களும் விழைவுகளும் பொதிந்துள்ளன.
 25. பிள்ளைகளைப் பள்ளியில் பணம் கட்டிச் சேர்ப்பதோடு தம் கடமை முடிந்துவிட்டது. பையன் தானாக வளர்ந்து விடுவான் என நினைக்கக்கூடாது வேம்புச் செடியை நட்டுவிட்டுத் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதுமா? செடி வளர்கையில் ஆடு மாடு கடிக்காமல் சுற்றி அதற்கு வேலி வனைவதும், அது நன்கு உயரும் வரை காப்பதும் கடமை அல்லவா! பெற்றோர்கள் வேலி போடவும் வேண்டும், விருப்பம் போல வளர்ந்து உயர்ந்திட உதவவும் வேண்டும்.
 26. அறிவு என்பது நினைத்தவுடன் வாங்கிச் சேர்க்கும் பொருள் இல்லை. அவரவர் இயல்பிலே தோன்றி, முறையாக வளர்ந்திட, வளர்க்கப்பட வேண்டியதொரு தரு. சிறு வித்து வளர்ந்த மரம் ஆவது போல, பிள்ளை களிடம் உள்ள இயல்பே அறிவாக, ஆக்கமாகப் பரிணமிக்கிறது.
 27. கல்வியின் தலையாய நோக்கம் அறிவைத் தருவது மட்டும் இல்லை. நல்ல மக்களாக வளர்ந்திட உதவும் பண்பாக்கமே கல்வியின் இலட்சியம்.
 28. கல்வி என்றால் வளர்ச்சி! எதன் வளர்ச்சி? மனம், உடல், ஆன்மா எனும் மூன்றின் ஒருங்கிணைந்த, ஒத்த, பரிபூரணமான வளர்ச்சியே!
 29. கல்வி என்றால் செலவு என மட்டும் பொருள் இல்லை. கல்வி என்பது இன்று கைவிட்டுச் செலவிடுவது போலத் தோன்றும் நாளைய முதலீடு.
 30. பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளர வேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.
 31. இலக்கியம் இனியதொரு வாழ்க்கைக் கலை; கலைகளுள் எல்லாம் சிறந்த கலை. ஓவியம், சிற்பம் முதலிய கலைகள் காலத்தின் கைப்பட்டுச் சிதைய நேரிட்டாலும் கூட, காலத்தை வென்று நிற்கும் அரிய கலையாக இலக்கியமே விளங்குகிறது.
 32. இலக்கியம் புலவர்கள் உணர்வில் வாழ்ந்தால் மட்டும் போதாது; பொதுமக்கள் நாவிலும் அது அன்றாடம் புழங்கிவருதல் வேண்டும்.
 33. இலக்கியங்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், நிரந்து இனிது சொல்லும் வல்லமையால் ஞாலத்தை விரைந்து தொழில் கேட்கச் செய்ய வல்லவை.
 34. பிற மொழியினரை விட, தமிழ் மொழியினர்க்கு இலக்கியத்தைப் பேசி மகிழ்வதில் ஒரு தனிநாட்டமும் ஆர்வமும் எப்போதும் இருந்து வருதல் கண்கூடு. சங்க இலக்கிய மாநாடு, திருக்குறள் பேரவை, சிலம்பு மேடை, உலகத்தமிழ் மாநாடு, பட்டிமன்றம், இலக்கிய வட்டம், வழக்காடு மன்றம் எனப் பல்வேறு முறைகளில், வெவ்வேறு நிலைகளில் இங்கே இலக்கியம் எப்போதும் வாழ்வு பெற்றே வருகிறது.
 35. இந்திய நாட்டுப் பொது நூல்களின் வரிசையில் முன்னிடம் பெறுபவை இராமாயணமும் மகாபாரதமும் திருக்குறளும் ஆகும். இராமாயணம் – இனியதொரு நீதிநூல்; மகாபாரதம் – விரிந்ததொரு சமூகச் சாத்திரம்; திருக்குறள் – ஓர் உலகப் பொதுமறை.
 36. திருக்குறளும் கீதையும் வாழ்வில் முழு நிறைவு நூல்கள் ஆகும். மனிதனை நிறைமனிதன் ஆக்குவது இரு நூல்களின் அடிப்படை ஆகும்.
 37. வாழ்வில் இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல இயற்கையானவை. வாழ்வெல்லாம் இன்பமாகவே வாழ்ந்தாரும் இல்லை; முழுதும் துன்பத்தால் துவண்டாரும் இல்லை என்பது பழமொழி.
 38. இன்பம், பிறரை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது; ஆனால் துன்பம், நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தித் தருகிறது.
 39. எதையும் தாங்கும் இதயம் கொண்டு, சிறு துன்பங் களைப் பழக்கமான ஒன்றாக ஏற்றுப் பெருந் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி ஒன்றாகக் கருதித் துணிந்து, ஆற்றலும் வன்மையும் பெற்று வாழ வேண்டும்.
 40. பகைவரும் மதிக்கும் சிறப்புப் பெற வேண்டும் எனில், துன்பத்தையே இன்பமாக மாற்றும் ஆற்றல் பெற வேண்டும்.
 41. துன்பம் – ஒருவகையில் – பலருக்கும் கசப்புத்தான். என்றாலும் கசப்பே நாளடைவில் நாம் விரும்பும் சுவையாகிவிட முடியும். வேப்பங் கொழுத்தைச் சிறிது சிறிதாகத் தின்னப் பழகிக்கொண்டால் – அதுசுவையான மருந்தாகி நலம் செய்வதைப் போல- துன்பச் சுவையும் நலம் தரும் மருந்தாகிவிடும்.
 42. வாழ்வில் துன்பமும் சில சமயங்களில் நமக்குத் தேவைதான். அழுக்குத் துணியை அடித்துத் தோய்த்து மாசு நீக்குதல் போல, நம்மைப் பிடிக்கும் பல்வேறு மனமாசுகளையும் நீக்கிக்கொள்ள, அத் துன்பத் தோய்வே தக்க பயன் தரும்.
 43. சிறந்த மனிதர்களிடம் சில மணித்துளிகள் கேட்பது, பல புத்தகங்கள் படித்து அவற்றின் சாரத்தை ஈர்த்துக் கொள்ளும் வாய்ப்பிற்கு நிகராகும்.
 44. ‘யார் கூறுகின்றார்’ என்று பார்க்காமல், ‘யாது கூறினார்’ என்று ஆய்ந்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
 45. நல்லவர்கள் வல்லவர்களிடம் பொது நன்மை கருதி அட்டை போல் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
 46. மனம் மாசற்று இருப்பது தான் அறம். உள்ளம் தூய்மையுடையதாய், உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவதுதான் அறம்.
 47. ‘நேற்று இருந்தார் இன்று இல்லை, இன்று இருப்பவர் நாளை இல்லை’ என்ற வியப்பான உலகில், காலம் தாழ்த்தாது, வாழும் ஒவ்வொரு நாளும் அறம் செய்ய வேண்டும்.
 48. சான்றாமைக்கு ஆழி எனப்படும், ஊழி பெயரிலும் தாம் பெயராச் சான்றோர் வாழும் வரை, மனிதப் பண்புகள், உணர்வுகள் மனிதனிடம் நிலைத்து நிற்கும் வரை, அறம் அழியாது; அறத்தை அழிக்க முடியாது.
 49. மனத்தோடு வாய்மை மொழிந்து, சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபடாமல் உண்மையாளர் களாய், நல்ல அரிய செயல் செய்பவர்களால் தான் உலகம் வாழ்கிறது.
 50. சிறுசிறு வெற்றிகளில் திருப்தி அடையாமல், பெரும் வெற்றி நோக்கிப் பீடுநடை போட வேண்டும்.
 51. பிறருக்குச் சொல்வது வேறு – அவ்வாறு தாம் வாழ்ந்து காட்டும் நடைமுறை உலகம் வேறு – இரண்டும் வெவ்வேறு என்ற மனப்போக்கு இன்று மலிந்து கிடக்கிறது. எதை எண்ணுகின்றோமோ, அதைச் சொல்கின்ற துணிவும், சொல்லிய வண்ணம் செயலாக்கும் திறனும் அற்று நாம் வாழ்வதே இதற்குக் காரணம்.
 52. நெஞ்சில் உறுதியின்றி, நேர்மைத் திறனுமின்றி ஆற்றல் இருந்தும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் இதுவே எல்லாத் தீமைகளுக்கும் பாவங்களுக்கும் அடிப்படையாக மாறி விடும்.
 53. ஒருவன் எண்ணும் எண்ணமும், சொல்லும் சொற்களும் அவன் உயர்ந்தவனா? தாழ்ந்தவனா?, சிறியவனா? பெரியவனா? என்ற உண்மைகளை உரைகல்லாகக் காட்டிவிடும். செய்கின்ற செயலின் திறத்தால் ‘தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்ற அடிப்படையில் அவரவர் தகுதியை அறியலாம்.
 54. வேள்வியால் கிடைப்பது விண்ணில் வாழும் அமரர் விரும்பும் அமரத்தன்மை தரும் அவியுணவு. கேள்வியால் கிடைப்பது மண்ணிலே வாழ்வோர் விரும்பும் இறவாச் சிறப்புடைய அமுத வாழ்வு.
 55. தகுதி மிக உடையவர் முயற்சியால் பெருஞ்செல்வம் ஈட்டினால் அப்பொருளைத் தமக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் நலம் பயக்கும்படி பயன்படுத்துவர்.
 56. உயர்ந்த புகழ் பிறர்க்கு உதவுதலிலே உள்ளது. தன்னலம் இழந்து உதவுவது தலையாய புகழ் ஆகும்.
 57. ஒருவனுடைய அறிவை ஆராய்கையில், மறக்கக் கூடாத அடிப்படையான உண்மை ஒன்று உண்டு. எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் என இவ்வுலகில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓரளவேனும் உலக ஞானம் இருக்கவே செய்யும். அதுபோலச் சிறந்த அறிஞரிடத்தில் ஓரளவு அறியாமை இருப்பதும் இயல்பு.
 58. நாம் பல கருத்துக்களை விரிவாக, ஆழமாக விவாதம் செய்கின்றோம். நல்ல கருத்துக்களை உணர்ச்சி வசமாகப் பேசி மகிழ்வதோடு அமைதி அடைந்து விடுகின்றோம். அப் பிரச்சினைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துத் தீர்வு காண்பதில்லை.
 59. தமிழிசை இயக்கம் பாட நூலோடு, பண்முறை ஆராய்ச்சியோடு, மாநாட்டோடு, மலர் வெளியிட்டோடு நின்று விடுகிறது. இது நாள்வரை இப்படி இருந்தது போதும், இனிமேல் தமிழிசை இயக்கத்தின் எல்லைகள் விரிய வேண்டும்… வெளிநாட்டார் நாடிப் போற்றும் வகையில் நம் தமிழிசை தேனார் தமிழிசையாய்ச் சிறக்க வேண்டும்.
 60. தமிழ் இசை, தமிழர் மனங்களை எல்லாம் இசையச் செய்து, இசைபட வாழச் செய்து, தமிழரை உலகெல்லாம் போற்றும் ஆற்றல் பெற வேண்டும். தமிழ் இசை தமிழர் இசையாக வாழ்க! வளம் பெருகுக!
 61. எக்காலத்திற்கும் பொருந்தும் அறங்களை உண்மை களின் அடிப்படையில் விளக்குவதால் திருக்குறள் முக்காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதொடு, பண்பாட்டுத் தொடர்ச்சியை இணைக்கும் இனிய சரடாகவும் இருக்கிறது.
 62. உழைப்பும் திறமையும் வலிமையும் வாழ்வில் வளமை சேர்க்கும் என்பதே அமெரிக்க வாழ்க்கை.
 63. நாளை நாளை என்று நாட்களைத் தள்ளிப் போட்டுத் தட்டிக் கழித்து விடாமல், நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழோடு வாழத் தலைப்பட வேண்டும்.
 64. உழைப்பால் தான் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உறுதியாக ஏற்பட்டாக வேண்டும்.
 65. அறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள் தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.
 66. இளமைப் பருவத்தில் நம் நெஞ்சம் எனும் வானில் எத்தனையோ ஏற்றம் மிக்க இலட்சியங்கள் இடம் பெறுவது உண்டு. அவற்றுள் சில மட்டும் வளர்பிறையாக வளர்ந்து, முழுமதியாக நிலைக்கும்.
 67. தேடிச் சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கை அல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.
 68. கல்வி, அறிவு, செல்வம், பண்பு, செல்வாக்கு, புகழ் பெற முயன்று உழைப்பவனே உயர்ந்தவன்; அவ்வாறு முயலாது சோம்பி, உண்டு, உறங்கி, களித்துத் திரிபவன் நிந்தனைக்கு உரியவன்; சமுதாயத்தைப் பாழ்படுத்துபவன், முயற்சியும், உழைப்பும், ஊக்கமும், தொண்டும் உடையவன் தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்துவான்.
 69. கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்; நீர் அருவி, ஆலயக் கோபுரம்.
 70. பயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம்… நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப்போனவர்களின் பார்வையினைப் ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே!’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்.
 71. எண்ணம், சொல், செயல் மூன்றனுள் அடிப்படை யானது எண்ணமே. மனம் என்னும் நிலம் நலமாக இருப்பின், அதில் விளையும் சொல்லும், செயலும் நலமாக, ஆக்கமாகச் செழிக்கும்.
Pages: 1 2