நாலடிப் பயணம்*

நாலடிப் பயணம்*

சுற்றம் தழால்

 

Image result for naladiyar

திருக்குறளுக்கு அடுத்தபடி புகழுடன். பெருமையுடன் இருப்பது நாலடியார். ‘பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்று பாராட்டப்படுவது; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார் முதலாவதாகும்.

இது சமண முனிவர்களால் தனித்தனியாகப் பாடப்பட்டுப் பின்னர் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டது. உவமைகள், கதைகள், பழமொழிகள் நிறைந்து நிற்கும். உலக நடைமுறை கூறி உறுதிப்பொருள் உணர்த்தும். அத்தகைய நயம் மிகுந்த நாலடியாரில் இன்று ஒரு பாடலின் நெறியினைக் காண்போம்.

வீட்டில் தொடங்கி நாட்டில் நிகழும் விழாக்களில் எல்லாம் நட்பும், சுற்றமும் துணைபுரியும் சிறப்பைக் காணலாம் நமது திருமண அழைப்பிதழ்களில் ‘தங்கள் நல்வரவினை நாடும் சுற்றமும் நட்பும்’ எனவும், பொதுவிழா அமைப்புக்களில் புரவலர்கள், பண்பு பாராட்டும் விழாக் குழுவினர் எனவும் நண்பர்கள், உறவினர் இடம்பெறுவதைக் காணலாம்.

சுற்றமும் நட்பும் சமுதாய வாழ்வுக்கு இரு கால்களைப் போல, இரு கரங்களைப்போல உதவ வல்லவை. சுற்றமும் நட்பும் உடையவர் சோதனைக் காலத்திலும் வேதனை நீக்கிச் சாதனையாளராகத் திகழ்வர்.

தந்தை, தாய், மனைவி இவர்களைச் சார்ந்த நெருங்கிய உறவினர் மட்டும் உறவினர் அல்லர். நம்மைச் சுற்றிச் சூழ்ந்து அன்போடு உறவாடுபவரும் உறவினர்தாம்; நம்மை நாடி வந்து அன்பு செய்பவரும், நாம் நாடிச் சென்று அன்பு கொள்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.

நமது நீதி இலக்கியமான நாலடியார் திருக்குறளைப் பின்பற்றிக் கனியும், நிழலும் நல்கும் பெரிய கனிமரத்தைப் போல சுற்றமும் நட்பும் சூழ வாழ வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

கோடை வெய்யிலின் கடுமையான வெப்பம். நடைப் பயணத்தில் சூடு தாங்காமல் வாடி வருந்தி நிழல் தேடி ஒதுங்கி நிற்க இடம் தேடி அலைகின்றன கால்கள். கண்ணில் தெரிகின்றது பெரிய கனிமரம். ‘கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே, தருநிழலே, நிழல் கனிந்த கனியே’ என மனம் மகிழ்ந்து விரைந்து தேடி அடைக்கலம் அடைகின்றன கால்கள். வெப்பம் மிகுந்த அக்கோடைக் காலத்திலே, தன்னை நாடி வந்தவருக்கு எல்லாம் வேறுபாடு இல்லாமல், குளுமையும், இனிமையுமாய் நிழல் தந்து, கனிதந்து காக்கின்றது அம்மரம். முதற்பயன் நிழல் கொடுப்பது. முழுப்பயன் கனிதருவது. பழுமரம் கனி தந்தும், நிழல் தந்தும் ஒருசேரப் பயன்தந்து வாழ்வது போல் வாழ்வது ‘சுற்றமும் நட்பும் சூழும் வாழ்க்கையாகும்’

பழுமரத்தில் உள்ள பழுத்த பழங்களை எல்லாம் மரமே உண்ணுவதில்லை. பிற உயிர்கள் உண்ணவே அக்கனிகள் பயன்படுகின்றன. நிழலும் கனியும் தந்து உள்ளூரில் பழுத்து மரம் செழித்து இருப்பது போல, செல்வச் செழிப்பு உடையவரும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நிழல் தந்து, அடைக்கலம் அளித்துக் காத்து நெடிய பயன் நல்கும் நல்ல மனமுடைய நல்லவர்களாக விளங்க வேண்டும்.

மரம், தான் உருவாக்கிய பழங்களைப் பல்லுயிர்க்கும் பயன்படச் செய்வதுபோல, துன்பம் கொண்டு, கடுமையாக உழைத்து வருந்தி முயன்று ஈட்டிய செல்வத்தைச் சுற்றமும் சூழ்ந்திருக்கும் நட்பும் நலமும் பயனும் பெறும்படி அன்போடு வழங்க வேண்டும். ‘செல்வருக்கு அழகு செழுங்கிளை தாங்குதல்’ எனும் ஒப்புரவுக் கொடையே வாழ்க்கையின் கடமை என நாலடியார் வலியுறுத்துகிறது.

செல்வத்தைப் பெற்றதன் நோக்கம், அச்செல்வத்தைச் சுற்றத்தார் எப்போதும் சூழ்ந்திருக்கப் பயன் தந்து வாழ்வதே.

“சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்

     பெற்றத்தால் பெற்ற பயன்”          (524)

என்ற வள்ளுவத்தில் வாழ்வியல் நெறிக்குத் தக்க விளக்கமாய் விளங்குவது நாலடிப் பாடல்

“அழல்மண்டு போழ்தில் அடைந்தவர்கட்கு எல்லாம்

     நிழல்மரம்போல் நேர்ஒப்பத் தாங்கிப் & பழுமரம்போல்

     பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

     நல்ஆண் மகற்குக் கடன்”.      (202)

என்பது நாலடியார்

பிறர் வருத்தமும், வறுமையும் நீங்கிட தான் வருந்தி வாழும் நிலைவரை சென்று வாழ்வு அளிப்பதே நல்லாண்மை எனச் செல்வமுடையாரின் கடமையைச் செப்பமுடன் சொல்லும் நாலடியார், நிழலும் கனியும் நல்கும் பழுத்த பழமரம் போல், நட்பும் சுற்றமும் போற்றி நலம் பெற்று வாழ்வோம்.

நட்பு

வள்ளுவத்தைப் பின்பற்றி அறநெறி உணர்த்தும் அறிவுக் களஞ்சியம் நாலடியார். கற்பனை நயத்தோடும், கலை அழகோடும் வாழ்வியல் உண்மைகளை உணர்த்துபவை நாலடிப் பாடல்கள். இன்று ‘நட்பு’ பற்றிக் கூறும் நாலடியார் பாடல் நயம் காண்போம்.

நாலடியார் நட்பின் பல்வேறு கூறுகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. நட்பாராய்தல், நட்பிற்பிழை பொறுத்தல், கூடாநட்பு என நட்பின் பல்வேறு நிலைகளை எடுத்துக் கூறுகின்றது. உண்மையான நட்புச் செய்வது என்பது அரிய காரியங்களில் எல்லாம் அரிய காரியமாகும். துன்பத்தின் போது துணையாக நிற்பதும், காப்பதும், காத்து அரணாக நிற்பதும் நலம் செய்யும் நட்பே ஆகும்.

நட்பு செய்வதில், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமும் ஆராய்ச்சியும் வேண்டும். நிறைநீர நீரவர்கேண்மை என்ற நிறைமதி நட்பையும், பிறைமதிப் பின்னீர என்ற பேதையர் நட்பையும் குறள் விளக்குவது போல ‘பெரியோர் கேண்மை பிறை போல் நாளும் வளரும் வரிசை’ என ஒளி தரும், ஆனால் சிறியோர் தொடர்பு வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே என்பது நாலடிச் செய்தி.

கற்றறிந்த பெரியோர் நட்பு கரும்பை நுனிப்பகுதியில் இருந்து கடித்துத் தின்று சுவை காண்பது போல் போகப் போகச் சுவை தருவதாக இருக்கும். பேதையர் நட்பு கரும்பை அடிப்பகுதியில் இருந்து நுனிநோக்கிக் கடித்துத் தின்பது போன்றதாகும். இனிய குணமில்லாத பேதையர் நட்பு ஆரம்பத்தில் இனிதாகத் தோன்றி போகப் போகக் கசக்கும்.

மரத்தின் உச்சியில் பூத்த கோட்டுப்பூ ஒரு முறை மலர்ந்தால் பின் ஓயாது. என்றும் இனிமைதரும் மணம் நல்கிக் கொண்டிருக்கும். உயர்குடிப்பிறப்பும், நடுவு நிலைமையும் உள்ள சான்றோர் நட்பு நாளும் வளரும். ஆனால் குளத்தில் பூத்த சிறுமலர்கள், பூத்த சமயம் பார்த்தால் கண்ணுக்கு அழகாக இருக்கும். போகப்போக அழகிழந்து, பொலிவிழந்து காட்சியளிக்கும். இவ்வாறு உள்ள, சுயநலம் மட்டும் கருதும், இலாபம் கருதிப் பழகும் சிற்றினத்தோர் நட்பை ஏற்றுக் கொள்ளாது நீக்கிவிட வேண்டும்.

பல காலம்  நெருக்கமாக இருந்தாலும் உள்ளன்பு இல்லாதவர் நட்பு ஒட்டாத நட்பாகும். உள்ளன்போடு ஒத்த இயல்புடையவர் நட்பு பிரிந்து இருந்தாலும் என்றும் பெரும் பயன் நல்கும்.

ஆகவே குறைகளையும் நிறைகளையும் ஆராய்ந்து அறிந்த பின்பே ஒருவரிடம் நட்பு கொள்ள வேண்டும். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்’ (504) என்பார் வள்ளுவர். அவ்வாறு தேர்ந்தெடுத்த பின் குணத்தோடு சில குற்றங்கள் இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்கள் சில சமயங்களில் அளவு கடந்த உரிமையாலும், பழமையான நட்பாலும், அறியாமையாலும் தவறு செய்தால் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நல்லவர், நண்பர் என்று நம்பியவர்களிடம் சில தவறுகள் காணப்பட்டாலும் அன்புணர்வால் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

உணவாகப் பயன்படும் நெல்லுக்கும் ஒரு குறை உண்டு. நெல்லுக்குத் தவிடு இருப்பது தவிர்க்க முடியாதது போல், நல்லவர்களுக்கும் குறை இருக்கும். தூய்மையான நீருக்கு நுரை என்ற களங்கம் உண்டு. மணம் வீசும் பூவிற்குப் புற இதழ்கள் உண்டு. ரோஜா மலருக்கு முள் உண்டு. குறையில்லாத நிறைவே உடைய இடம் குறைவு. இதுவே நடைமுறை உண்மை. இதனை உணர்ந்து நண்பர்களிடம் நன்மையைப் பெறுவது போல, அன்புணர்வுடன் அவர்கள் குறை தாங்குதல் நிறைவுடைமை ஆகும்.

“நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

     அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

     நெல்லுக்கு உமிஉண்டு, நீர்க்கு நுரைஉண்டு

     புல்லிதழ் பூவிற்கும் உண்டு”          (221)

கரையை உடைத்துக்கொண்டு கரைபுரண்டு விரைந்து வேகமாகப் பாய்ந்து வருகிறது வெள்ளம்; அவ்வாறு பாய்ந்து வரும் வெள்ளத்தைக் கண்டு கலங்காது, கோபிக்காது நீரைத் தேக்கி, வயலில் பாய்ச்சிப் பயனடைவர் உழவர். அதுபோல விரும்பி நட்புக் கொண்டவர் வெறுக்கும் தகைமை செய்திடும்போதும், பெரியோர்கள் பிழை பொறுத்து அவர்கள் செய்த குறைகளையெல்லாம் நிறைகளாக்கிப் பயன்பெறுவர்.

“செறுத்தோறு உடைப்பினுஞ் செம்புனலோடு ஊடார்,

     மறுத்தும் சிறை செய்வர் நீர்நசைஇ வாழ்நர்

     வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே

     தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு” (222)

நல்ல நட்பு நயனும், பயனும், பாதுகாப்பும் நிறைந்தது. கொடுத்தும், கொண்டும் இயல்பாக வளர்வது நட்பு. உதவி செய்தலும், உதவி பெறுவதலும் நட்பில் இயல்பாக நிகழ்பவை. ஆனால் கணக்குப் பார்த்துச் செய்யும் வணிகம் அல்ல நட்பு. உறுவது சீர் தூக்கும் நட்பும், பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர் என்பது வள்ளுவம். ஆதலின் நட்பு இரட்டை வழிப்பாதை என்றாலும் இயல்பாக நிகழ்வது.

செய்வதற்கு இயலாத கடினமான செயல்களைச் செய்வேன் என வீராப்புப் பேசுவதும், செய்யக்கூடிய எளிய செயல்களை நண்பர்களுக்குச் செய்யாமல் காலம் தாழ்த்துவதும், நாட்களை வீணே பயனில்லாமல் கடத்திக் கொண்டிருப்பதும் வாழ்நாட்களை வீணான நாட்களாக ஆக்கும் செயல்கள் ஆகும். இத்தகு நட்பு துன்பம் தரும். ஆதலால் வாக்குக் கொடுக்கும்போது நன்றாக ஆராய்ந்து வாக்குக் கொடுக்க வேண்டும். செய்யக்கூடிய செயல்கள் என்றால் உரிய நேரத்தில் விரைந்து அந்த நன்மையைச் செய்து நண்பர்கள் துயர் போக்க வேண்டும். இயலாதாயின் வீராப்புப்  பேசாது, தந்திரமாக ஏமாற்றாமல் உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். தவறான வாக்குறுதி களைத் தவிர்த்துவிட வேண்டும்.

“செய்யாது செய்தும்நாம் என்றாலும், செய்வதனைச்

     செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் & மெய்யாக

     இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே

     துன்புறூஉம் பெற்றி தரும்.”          (235)

என்று நாலடி பேசும். ஆதலின் நாலடி இகழ்வது துன்பம் தரும் தீ நட்பு; கூடா நட்பு. நாலடி போற்றுவது இன்பந் தரும் சான்றோர் நட்பு; பெரியோர் நட்பு.

நிலைத்த செயல்கள் செய்க!

“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

     நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”

என்பது திருக்குறளுக்கும் நாலடியாருக்கும் புகழ்கூறும் நாட்டு வழக்கு. திருக்குறளைப் பின்பற்றி நாலடியார் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பாலையும் வாழ்க்கை நெறிகளாகத் தொகுத்தும் விரித்தும் கூறுகிறது.

நிலைத்தது எது? நிலையாதது எது? என்று கேட்டால், நிலையாமைதான் நிலைத்தது. இளமை நிலையாதது, அழகு நிலையாதது, செல்வம் நிலையாதது. பதவி, அதிகாரம் இவையனைத்தும் நிலையாதவை. இவையெல்லாம் நிலையில்லாதவை என்பதால், அழகு, இளமை, செல்வம், பதவி, உடல்நலம், புகழ் இவையனைத்தையும் துறந்து விடுவதா? நிலையில்லாத இச்செல்வங்களை நிலைத்த, நிலைபேறுடைய செயல்களாக நிலைநிறுத்துவதே தமிழ் நியதி.

இளமை ஆற்றல் இருக்கும்போதே தனக்குப் பயன்படுவது போல பிறர்க்கும் பயன்பட்டு உதவி வாழ்ந்து உயர்ந்திருக்க; அழகு நீடிக்கும் வரை இளமையோடு, இனிமையும், வளமையும், இன்பமும், காட்சியும், மாட்சியும் பெற்றுக் கொள்க; செல்வம் இருக்கும்போது பழுத்த பயன்தரும் கனிமரங்களாக, ஊருணியாக, நோய் தீர்க்கும் சஞ்சீவியாய், மருந்து மரமாய் வாழ்க; உடல் இருக்கும்போதே உன்னதமான தொண்டும், அறச்செயல்களும் ஆற்றுக. பதவி, அதிகாரம் இருக்கும் போதே, பதவி உதவுதற்கே என உணர்ந்து பிறர்க்கு உதவி, பிறர்துன்பம் தீர்த்துப் புகழும் போற்றுதலும் பெற்றிடுக என்பதே வாழ்வியல்,

சிறிது சிறிதாகச் சேர்ந்த பெருஞ்செல்வம் ஆனாலும் அப்பெருஞ்செல்வம் இருக்கும்போதே நட்போடும் சுற்றத்தோடும் பகிர்ந்துண்டு பாசத்தோடு வாழ்க. இல்லையேல் அச்செல்வம் ஒரு நாள் ஓடிவிடும். வண்டிச் சக்கரம்போல் சுழலும் நிலையாமையை எண்ணி செல்வம் இருக்கும் போதே அதனை அனுபவித்துப் பயன்பெற்று மகிழ்க.

“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்

     பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க;

     அகடுஉற யார்மாட்டும் நில்லாது செல்வம்

     சகடக்கால் போல வரும்.”      (2)

என்பது நாலடியார்.

சூரியனால் தோன்றியும் மறைந்தும் உண்டாகும் பகலும் இரவும் ஆகிய ஒவ்வொரு நாளும் வாளாகக் கொண்டு எமன் வாழ்நாள் ஒவ்வொன்றையும் உண்டு தீர்த்து வருகின்றான். எனவே உயிருடன் இருக்கும்போதே அடுத்தவர்க்கு உதவி வாழும்  அன்புடையவர் ஆகுங்கள். இல்லையென்றால் மனிதனாகப் பிறந்தும் பயனில்லாது போய்விடும். மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமே பிறர்க்கு உதவி வாழ்தலே ஆகும்.

“தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்

     கூற்றம் அளந்துநும் நாள்உண்ணும் & ஆற்ற

     அறஞ்செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்

     பிறந்தும் பிறவாதார் இல்.”           (7)

ஆதலால் நில்லாதவற்றை நிலையென்று உணர்ந்து மயங்காமல் நிலைத்த செயல்களைத் தன்னம்பிக்கையோடு ஆற்றவேண்டும்; தனிமனித உழைப்பும், சமுதாயத்தின் கூட்டு முயற்சியும் ஒன்றிணையும்போது நாடு நலம் பெறும்.

ஒரு செயலை இன்று எளிமையாகத் தொடங்கினாலும், தொடங்கிய முயற்சியை இடைவிடாது பேணிவந்தால், தளர்ச்சியடையாமல் ஊக்கத்துடன், துணிவுடன் பணியாற்றினால் அச்செயல் நாளடைவில் சாதனைக்கு உரிய பெரிய அரிய செயலாகிவிடும்.

ஓர் இளஞ்செடி தடைகளைக் கடந்து வளர்ந்திருக்கின்றது. ஆடு கடிக்கும் அளவு உயரத்திற்கு வளர்ந்திருக்கிறது. அவ்விளஞ் செடியானது பாதுகாக்கப்பட்டு உரம் பெற்று வளர்ந்து விடுகிறது. படிப்படியாக வளர்ந்து வைரம் பாய்ந்த பெருமரமாகின்றது. ஆடு கடித்தாலே அழிந்திருக்கும் அச்செடி வளர்ந்தவுடன், வளர்ந்து உரமும் வலிமையும் பெற்று நிற்கும்போது வலிமை மிகுந்த யானையையே கட்டிவைக்கும் கட்டுத்தறியாகி விடுகின்றது. அதுபோல இன்று தொடங்கும் சிறிய செடி போன்ற சிறிய முயற்சி, ஈடுபாட்டுடன் இடைவிடாமல், பேணிப் பாதுகாத்து, இகழ்ச்சிக்கும் எள்ளலுக்கும் இடம்தராமல், மனத்தளர்ச்சி யின்றி ஊக்கத்துடன், உறுதியுடன், ஒருமையுடன், தன்னம்பிக்கை யுடன் செயல்பட்டால் செடி செழித்து வளர்ந்து உரமிகுந்த வைரம் பாய்ந்த மரம்போல, நமது செயலும் அரிய பெரிய செயலாக வளர்ந்து ஆக்கம் தரும்.

“ஆடுகோடு ஆகி அதர்இடை நின்றதூஉம்

     காழ்கொண்ட கண்ணே களிறுஅணைக்குங் கந்துஆகும்

     வாழ்தலும் அன்ன தகைத்தே; ஒருவன்தான்

     தாழ்வின்றி தன்னைச் செயின்.”       (192)

“இசையாது எனினும் இயற்றிஓர் ஆற்றால்

     அசையாது நிற்பதாம் ஆண்மை & இசையுங்கால்

     கண்டல் திரைஅலைக்கும் கானலந் தண்சேர்ப்ப

     பெண்டிரும் வாழாரோ மற்று”             (194)

எனச் செயலாண்மையைப் போற்றிப் பேசுகிறது நாலடியார்.

உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்பது பிறப்பால் அமைவதல்ல; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.’ (குறள்: 972) உயர்வும் தாழ்வும் அவனவன் செயல்களைப் பொறுத்ததே.

கல்வி, அறிவு, செல்வம், பண்பு, செல்வாக்கு, புகழ் பெற முயன்று உழைப்பவனே உயர்ந்தவன்; அவ்வாறு முயலாது சோம்பி, உண்டு, உறங்கி, களித்துத் திரிபவன் நிந்தனைக்கு உரியவன்; சமுதாயத்தைப் பாழ்படுத்துபவன். முயற்சியும், உழைப்பும், ஊக்கமும், தொண்டும் உடையவன் தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்துவான். தன்னை உயர்த்துவதும் தாழ்த்துவதும் அவனவன் கைகளிலே அமைந்திருக்கிறது.

“நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

     நிலைகலக்கிக் கீழிடு வானும் & நிலையினும்

     மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்

     தலையாகச் செய்வானும் தான்.”      (248)

 

 

3912total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>