திருக்குறள் சிந்தனைகள்*

மனத்துக்கண் மாசிலன் ஆதல்!

உயிர்கள் அனைத்தும் உடம்பாலும் உணர்வாலும் வளர்வன, வாழ்வன ஆகும். பிற உயிரினங்களில் பெரும்பாலும் உடல் முயற்சிகளை மட்டுமே மிகுதியாகச் சார்ந்து வாழ்பவை. ஆனால் மனிதர் வாழ்வு மன உணர்வுகளையே பெரிதும் சார்ந்து வளரும். மனத்தால் நினைத்து வாழ்வதால் தான் ‘மனிதன்’ என்று அழைக்கப் படுகின்றான்.

எண்ணம், சொல், செயல் மூன்றனுள் அடிப்படை யானது எண்ணமே. மனம் என்னும் நிலம் நலமாக இருப்பின் அதில் விளையும் சொல்லும் செயலும் நலமாக, ஆக்கமாகச் செழிக்கும். ஆகவே இந்த அடிப்படையான மனத்தை மாசற்றதாக, தூய்மையுடையதாகப் பேணுவதே அறத்திற்கெல்லாம் அடிப்படை என்பார் வள்ளுவர்.

அறம் என்றால் என்ன? என்று வினாத் தொடுத்து ஒரே வரியில் அழகுடன் வள்ளுவர் பதில் அளிக்கின்றார்; எளிமையாகச் சொல்கிறார்; ஆனால் ஆழமாக, நுட்பமாகக் கூறுகிறார். அறம் என்றால் வேறொன்றும் அல்லை ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்று. நம் வீட்டில் இயற்கையாகவே தூசுகளும், அழுக்குகளும் சேர்வது இயல்பு. அதுபோல, மனத்திலும் அழுக்குச் சேர்வது இயல்பு. தூசு படிந்த வீட்டை, அழுக்குப் படிந்த வீட்டை நாள்தோறும் அடிக்கடி கூட்டித் தூய்மை செய்வது போல மனமாகிய அக வீட்டையும் கூட்டித் துப்புரவு செய்யவேண்டும்.

நிலத்தைப் பண்படுத்தி நல்ல நிலமாக்கிப் பின் வித்திட்டு, நீர்பாய்ச்சி, பயிர் வளர்க்கின்றோம்; பாடுபடு கின்றோம். அதில் களைகளை யாரும் விரும்பி விதைப்பதில்லை; விளைவிப்பதில்லை; வளர்ப்பதில்லை. ஆனால் களைகள் இயல்பாகவே பயிரோடு மண்டிவிடுகின்றன. உழவர் களைநீக்கும் வேலையைத்தான் முயன்று செய்யவேண்டி யுள்ளது. அதுபோல, ஆசிரியரோ, பெற்றோரோ, சான்றோர்களோ, சமுதாயமோ மனிதர்கள் பொறாமைப்பட வேண்டும், பேராசை கொள்ள வேண்டும், கோபம் கொள்ள வேண்டும், கடுமையான கடுஞ்சொல் கூற வேண்டும் என்று ஒருபோதும் கற்பிப்பது இல்லை. ஆனால் இந்த மாசுகள் கற்பிக்காமலே மனத்தில் நல்லுணர்வுப் பயிர்களிடையே எம் முயற்சியும் இல்லாமல் களையாக மண்டிவிடுகின்றன. உள்ளத்தை மாசுபடுத்தும் இக்களைகள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். இவற்றில் எல்லாம் அடிப்படையாக நீக்கப்பட வேண்டிய களைகள் நான்கு எனப் பட்டியலிட்டு இனம் காட்டிப் பிற அதிகாரங்களில் அவற்றை விரிவாகப் பேசுவார் வள்ளுவர்.

அந்த மாசுகள் நான்கு:-

“அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும்

     இழுக்கா இயன்றது அறம்.”          (35)

இவ்வழுக்குகள் மனத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்; அகற்றப்பட வேண்டும். மனத்தூய்மை இல்லாதான் வாழ்வு துன்பமாகும். மாசில்லா மனமே இன்பமாகும். அப்போது தான் மனமாகிய மாளிகை தூய்மையாகி, வசிப்பதற்கு ஏற்ற வனப்பு மாளிகையாக விளங்கும்; நம் வாழ்வு சிறக்கும்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;

     ஆகுல நீர பிற”              (34)

ஒழுக்காறாக் கொள்க!

நல்ல நிலத்தில் பயனுள்ள நல்ல மரங்கள் வளரும் ஆனால் அழுக்கு நிறைந்த நீர்த்தேக்கங்களில் ஈக்களும், கொசுக்களும் விரைந்து வளர்ந்து பெருகும்; நோயைப் பரப்பும்; அதுபோலத் தீமை என்ற அழுக்கில் பொறாமை வளரும், தானாக வளரும், நன்றாக வளரும்.

ஒருவர் அடையும் நன்மைக்கு எல்லாம் அடிப்படை கடுமையான உழைப்பு; நல்லோர் உதவி; நல்லூழ்; இறைவன் திருவருள். ஆனால் தீயோர் பிறர்நலம் கண்டு, வளர்ச்சி கண்டு பொறுக்க மாட்டார்கள். நன்றாக வாழ்பவர்கள் பொறாமைக்காரர்களுக்கு ஒரு தீங்கும் செய்வதில்லை. அவர்கள் வாழ்வால் இவர்களுக்கு இடையூறும் இல்லை. ஆனால் பொறாமைக்காரர்கள் பிறரிடமிருந்து பெரு நன்மைகளைப் பெற்றால், வாழ்க்கையில் உண்பதிலும் உடுப்பதிலும் வசிப்பதிலும் பெருமையிலும் சிறந்து விளங்கினால், மனம் புழுங்கி, மனம் வெந்து அவர்களைப் பழி சொல்லிக் குற்றம் சொல்லி வாழ்வார்கள். கோள் சொல்வதும் குறை சொல்வதும் குற்றம் சொல்வதும் தீய பழக்கமாகி, நோயாகி, தம்மை அழிக்கும் நோய் என்று அறியாமலே அத் தீய சுகத்திலே மகிழ்ந்திருப்பர். பொறாமை என்னும் நோய் அவர்களை அழித்துவிடும்; பெற்றிருக்கும் செல்வத்தையும், உற்றாரையும், நண்பர்களையும் விட்டுப் பிரித்துவிடும் என்பதை அறியாமலே அழிந்திடுவர்.

அழுக்காறு எனில் பொறாமை. பிறரது வளர்ச்சி, வாழ்வு கண்டு தாங்க முடியாத ஒரு மனத்தவிப்பு. ‘பிறரது ஆக்கமெல்லாம் அப்படியே ஒரு நொடியில் தனக்கு உரியதாக வந்துவிடக்கூடாதா?!’ எனும் ஆசை தூண்டும் அளவற்ற ஏக்கம்; அந்த அவா உடனே கை கூடி வராத போது, தன் ஆற்றாமை காரணமாகத் தூண்டப்பெறும் வெகுளி; அந்த வெகுளியைப் வெளிப்படுத்துவது வெறுப்போடு கலந்து வரும் கடுஞ்சொல்.

அழுக்காற்றிலிருந்து தொடங்கி, இன்னாச் சொல் வரை ஒரு தொடராகக் கிளை விரிக்கும் மாசுகளில் முதன்மை இடம் பெறுகிறது அழுக்காறு. ‘அழுக்கு ஆறு’ என அழுத்தமாகச் சொல்கிறார் வள்ளுவர். நடந்திட நல்ல சாலை இருக்க, அழுக்கிலும், சேற்றிலும் கால் வைக்க முற்படுவதில்லை அல்லவா? அதுபோல பல்வகையாகப் பரவிக்கிடக்கும் பொறாமை எனும் அழுக்கின் மீது பாதம் பதிக்க வேண்டாம் என்கிறார் அவர்.

இன்று சமூக வாழ்க்கையில் பொறாமையே ஆதிக்கம் செலுத்துகிறது. பிறரது வாழ்வு, வசதி கண்டு ஆற்றாமையால் தனது நெஞ்சிலும், வயிற்றிலும் நெருப்பை வெறுப்பாக வளர்த்து வருகிறது. பிறர் முயற்சி கண்டு, தானும் அவ்வாறு வளர்வதை விடுத்து, பழிசொல்லி, தீமை விளைவித்து அதிலேயே ஒரு சுகம் காணும் உணர்வை உருவாக்கி விடுகிறது. தனது வளர்ச்சியை அக்கறையோடு கருதுவதை விட, பிறரது முயற்சியை உன்னிப்பாகக் கவனித்து – எவ்வாறெல்லாம் அதற்கு உலை வைக்கலாம், அழிக்கலாம் எனப் பொறாமை கொள்ள வழிவகுக்கிறது. சாதாரண மக்களிடம்தான் இப்பொறாமை உண்டு எனக் கருதிவிடக் கூடாது; பதவியில், தொழிலில், செல்வாக்கில் திளைக்கும் பெரிய மனிதர்களிடம் தான் அழுக்காறு கொடிகட்டிச் செங்கோல் செலுத்துகிறது. அதனால் எத்தனையோ பகை உணர்வுகளையும், குரோதங்களையும், பொல்லாங்கு களையும் அலைவட்டம் போலச் சமுதாயத்தில் உருவாக்கி, நேரடித் தொடர்பு இல்லாதவர்களைக் கூட, பொய்மையில் மயங்கச் செய்து விடுகிறது. நல்ல மனிதர்களைக் கூட நச்சுப்பாம்புகளாக, கபடமற்ற மாடப்புறாவைப் போன்ற மனங்கொண்டவர்களைக்கூட, கழுகுகளாக மாற்றவல்ல உலைத் தீ அழுக்காறு. எனவே பண்பட்ட மனத்தால் அழுக்காறு எனும் தீமையை வெல்ல வேண்டும். நல்லெண்ணம் எனும் திருமகளைத் தள்ளிவிட்டு, தீமையை அரங்கேற்றவரும் பொறாமை எனும் மூத்தவளை ஏற்கலாமா? முதன்முதலில் பொறாமையை அகற்றிவிடுதல் வேண்டும். இல்லை எனில் அழுக்காறு திருவை அழித்து, தீயூழுக்கு உள்ளாக்கிவிடும். தீயானது தொட்டால் மட்டும் சுடும். அந்தக் காயம்கூட ஆறிவிட வாய்ப்புண்டு. ஆனால் அழுக்காறு எனும் தீயவள் ஏற்றும் தீ பிறவிதோறும் நிழல் போலத் தொடரும்…

வீட்டில் சிலந்தி வலைகளை அலங்காரத் தோரணம் என நினைப்பதில்லை. ஆனால் அளவற்ற அவாவை அழகுத் தோரணமாக நினைக்கிறோம். அழுக்காற்றுக்கு அடுத்தபடியாக அகற்றத்தக்கது. அவா என்கிறது வள்ளுவம். வாழ்வுக்கு ஆசை என்பது அடித்தளம். முறையான ஆசைகள் தான் முயற்சியைத் தூண்டி, நிலையான ஆக்கங்களுக்கு வழிகோலுகின்றன. அதை விடுத்து பிறரைப் போலத் தானும் ஒரு நொடியில் பெரியவராய் ஆகிவிட விழையும் பேரவாவினால் பெருந்துன்பமே மிகும். பிறரைப் போல, தானும் தகுதியை வளர்த்துக்கொண்டு ஆசைகளை அடுக்கு மாடிகளாக ஆக்க முற்படுவதில் தவறில்லை. ஆனால் அளவிறந்த, தவறான, தீய பேராசையால் அலைந்து திரிவதே குற்றம். முரட்டுத்தனத்தையும், மூர்க்கப் போக்கையும் கைக்கொண்டு எப்படியும், எதையும் பெற்றுவிடத் துணியும் அந்தப் பேரவா பேரிழப்பையே தருகிறது; மனத்தை மீளமுடியாத ஆசைப் படுகுழிக்குள் தள்ளிவிடுகிறது. எனவேதான் அறம் எனும் வாயிலில் நுழையும் முன்னர் அழுக்காற்றையும், அவாவையும் களைந்திடு என்று வள்ளுவம் ஆணையிடுகிறது. பேராசையால், பொறாமையால், அகந்தையால், அகங்காரத்தால், கோபத்தால், பகையால், குரோதத்தால் பிறருக்குத் தீமை செய்தால் அவனை அறக்கடவுள் அழித்துவிடுவார் என வள்ளுவம் எச்சரிக்கின்றது.

“ஒழுக்காறாக் கொள்க; ஒருவன்தன் நெஞ்சத்து

     அழுக்காறு இல்லாத இயல்பு”        (161)

     மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்

     அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு”        (204)

அறம் எனும் வாழ்க்கை வாயிலில் புகும்போது களைந்துவிட வேண்டிய அழுக்காறு, அவாவைப் போல, வெகுளியும் இன்னாச் சொல்லும் மிக முக்கியமானவை. கோபம் மனிதனை நிலைகுலையச் செய்துவிடும். வெகுளி, சினம், கோபம் எனும் பல வகையால் சொல்லப்படும் இது சில சமயங்களில் வாழ்க்கைப் போக்கில் அவசியமாகத் தேவைப்படுவது போலத் தோன்றலாம். ஏந்திய கொள்கையரும், சான்றோரும் சினம் கொள்ளவில்லையா? எனக் கேட்கலாம். கணத்தில் மாறிவிடும் நலன் கருதிய, இயல்பான, நல்ல கோபத்தை இங்கே குறிப்பிடவில்லை. அழுக்காறும், அவாவும் தூண்டி எரிய வைக்கும் ஆகா வெகுளியையே வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். வைரம் பாய்ந்த மரத்தைக் காற்று வீழ்த்தி விடுவதில்லை; வலிமையற்ற மரத்தைக் காற்று அலைக்கழிப்பது போல, பண்பாட்டால் உரம் பெறாத மனத்தையே வெகுளிக் காற்று அசைத்து வீழ்த்தும். ஓடுகிற வண்டியை ஆபத்துக் கண்டதும் உடனே நிறுத்திவிடும் சாரதியைப் போல, கோப உணர்வு ஒரு வேளை மூண்டால் அடக்கிவிட வேண்டும். அதை அடக்கிக் கொள்ளாத பண்பற்றவர்களின் வெகுளியால் அற வாழ்வுக்கு தனது – பிறரது வாழ்வுக்கு எல்லையற்ற இடரே விளையும்.

வெகுளி என்பது தீயைப் போல, எரியக்கூடிய பொருளை எரித்துவிட்ட பின்னரே தானாக அவியும்.  அதுபோல வெகுளியும் வெகுளிகொண்ட மனிதர்களை அழித்த பின்னரே, தானாக அடங்கும். இந்த வெகுளி, தனக்குப் பிரியமானவர் களைக்கூட ஒரு நொடியில் வேண்டாதவர்கள் ஆக்கி விடும். முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்கக் கண்டதும் நண்பர்கள் கூடத் தானாக நகர்ந்து விடுவர். அடக்கி வைத்த வெப்பம் சக்தியாக மாறிப் பயன் அளிப்பது போல, உரிய தருணத்தில் அடக்கிக் கொள்ளும் வெகுளியே ஆற்றலாக மாறும்; கோபம் தோன்றுதல் மனித இயல்பு.

அடங்காச் சினம் கொள்பவன், தன் கையால் நிலத்தில் ஓங்கி அறைந்துவிட்டு பின்னர் கை வலியால் வருந்துபவனைப் போலவே துயரடைவான். இந்த அடங்காச் சினம் அவனது அற உணர்வை முளையிலேயே தீய்த்துவிடும்.

“சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு

     நிலத்தறைந்தான் கைபிழையா தற்று”   (307)

“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

     செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்” (91)

அடங்காச் சினம் எரியும் முதல் அம்பு இன்னாச் சொல். கண்மூடிச் சினம், காது பொறுக்காத சொற்களை வீசும். சொல் பிறக்குமிடம் நாக்கு. மனித உறுப்புகளில் நீர்ப்பசை சூழ விளங்குவன கண்ணும் நாக்கும். கண்ணுக்கு நீர்மை கண்ணோட்டம் இவற்றுள் எந்நேரமும் ஈரப்பசையோடு இருப்பது நாக்கு. சுரக்கும் ஈரம் மட்டும் நாக்கின் ஈரம் இல்லை. அதனினும் சிறந்த ஈரங்கள் உள்ளன. அன்பு, இனமை, உண்மை, இங்கிதம், பரிவு, பாசம், நேசம், நிறைவு எனும் பலவித நீர்மைகளில் படிந்து நாக்கு இயங்குகிறது. அவ்வாறு தான் இயங்கவேண்டும் என்கிறார் வள்ளுவர்.

“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

     செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்” (91)

என்பதே வள்ளுவர் வாய்ச்சொல்.

பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் கூட – அதை இதமாகச் சொல்ல வேண்டும். அதுவும் முடியா விட்டால், பதம் கெட்ட வார்த்தைகளால் அடிக்கக் கூடாது. அதனால்தான் இனிய சொல்லாவிட்டாலும் இன்னாச் சொல்லைக் கைவிடுக என வேண்டுகிறார் வள்ளுவர். இன்சொல்லின் விலை மலிவு, எளிது. இது கையிருப்பாக உள்ளது. ஆனால் அதன் மதிப்பு அதிகம். வன்சொல்லின் விளைவு கொடிது. அதனால் விளைவது நாசம். சொன்ன இன்னாச்சொல் திரும்பி வருவதில்லை. எனவே வள்ளுவம் இன்னாச்சொல்லையேனும் கைவிடுக என வலியுறுத்து கிறது. அறன் எனும் வாழ்க்கை வாயிலில் நுழையும் முன்னர் – அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் எனும் நான்கையும் கட்டாயமாகக் களைய வேண்டும், நீக்க வேண்டும். பொறாமையும், பேராசையும், கோபமும், குரோதமும், கடுஞ்சொல்லும் எவ்வளவு செல்வம் படைத்தவர் களையும் அழித்துவிடும். நிகழ்காலத்தில் வாழும் துரியோதனர்கள், சகுனிகள் இதனை உணர வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவைகளில் இருந்து நீங்கியவர்கள் இன்பமும், புகழும், நிறைவும் நிரம்பப் பெற்று திருமகளைக் கைப்பிடித்து வாழ்வர். இத்தகைய நல்லோர்களின், அறவோர்களின் புகழை, சமுதாயம் என்றும் போற்றிப் பெருமை செய்யும். சமுதாயத்தில் ‘அல்லவைதேய அறம் பெருகும்.’

 

புலால் மறுத்தல்

 

உணவிற்காக உயிர்களைக் கொல்வது மிகக் கொடுமை யாகும். உலகத்தில் பலர் புலால் உணவு உண்பவர்கள். அவர்களுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுகின்றன. எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எல்லா உயிர்களும் அருமையானவை. தற்காத்துக் கொள்ள முடியாத உயிர்களைப் பதைபதைக்கக் கொல்வது பாவமாகும். நமது உடம்பில் ஏதேனும் ஓர் உறுப்பை இழக்கச் சம்மதிப்போமோ? நாம் பிற உயிரைக் கொல்லலாம் என்றால் நம்மையும் பிறர் கொல்லலாம் அல்லவா? பிற உயிர்களைப் பேணாது நம் உடம்பை வளர்ப்பதற்காக பிற உயிர்களைத் துடிதுடிக்கக் கொன்று தின்று வாழ்வது என்ன வாழ்க்கை?

நம்மோடு தொடர்பு இல்லாதவர்களிடமும் காட்டும் அன்புதான் கருணை. பிறர்படும் துன்பத்தைக் கண்டு வருந்தி உருகுவதுதான் கருணை. பிறர் துன்பத்தைத் தீர்க்க முயல்வதும் கருணை.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்க வேண்டும் என்பார் வள்ளலார்.

கருணை மிக்கவர்கள் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் நேசிப்பார்கள்.

அருள் ஆட்சி உள்ளவர்களுக்கு உயிர்களிடம் இரக்கம் உண்டு. தன் உடம்பை வளர்ப்பதற்காகப் பிற உயிர்களின் உடம்பைக் கொன்று தின்பவனுக்கு அருளாட்சி உண்டா என்று வினவுவார் வள்ளுவர்.

“தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

     எங்ஙனம் ஆளும் அருள்?”           (251)

தோலை நீக்கிவிட்டால் உடம்பின் உட்பகுதி புண் வடிவத்தில் தோன்றுகின்றது. சிறிது வெளியே தெரிந்தாலும் அருவருப்பு ஏற்படுகிறது. நமது உடலின் புண் நமக்கு அருவருப்பாக இருக்கிறது; பிறருக்கும் அருவருப்பாகத் தோன்றுகிறது. ஆதலால் அப்புண்ணை வெளிக்காட்டாமல் மறைத்து விடுகிறோம். நாவின் சுவையை மட்டும் கொண்டு இந்த அருவருப்பை மறந்து விடுகிறோம். புண்ணுக்கு என்ன என்ன தன்மை உண்டோ அனைத்தும் புலாலுக்கும் உண்டு. சுவையை மறந்து விட்டால் அது மற்றோர் உடம்பின் புண் என்று உணர்வோம்; அருவருப்பு அடைவோம். இதை உணர்ந்தாவது புலால் மறுக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.

“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்

     புண்அது உணர்வார்ப் பெறின்.”      (257)

பிற உயிர்களின் உடலைக் கொன்று தின்று சுவை கொண்டவன் சுவையிலே வெறி கொள்வானே தவிர நன்மையில் பெரிதும் நாட்டம் கொள்ள மாட்டான். படைவீரன் போர்க் கருவிகளை, கொலைக் கருவிகளைக் கொண்டு உயிர்களை அழிக்கும்போது ஏற்படும் வெறி போல் புலால் உண்பவனும் கருணையற்றவனாய் சுவை வெறி கொண்டு நன்மையை நாட மாட்டான்.

“படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்

     உடல்சுவை உண்டார் மனம்”              (253)

வாழ்வில் அருளாட்சியை இலட்சியமாகக் கொண்டவர்க்கு எந்தச் சூழ்நிலையிலும் புலால் மறுத்தலே தவமாகும். உயிர்க் கொலையால் வரும் புலால் உணவு மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பது; உடல் வளர்ச்சிக்கோ, மன நலத்திற்கோ பயன் தராதது; துன்பத்தையும் பாவத்தையும் தருவது.

“அருள்அல்லது யாதுஎனில் கொல்லாமை கோறல்

     பொருள்அல்லது அவ்வூன் தினல்”           (254)

புலால் உண்ணாமை என்பது அருளை அடிப்படையாகக் கொண்டது. அறத்தின் அடிப்படையில் புலால் உண்ணாமை என்ற அருள்உணர்வு உடம்பினுள் வந்து தங்கியுள்ளது.

ஊனைத் தின்பவர்க்குத் துன்பம் தரும் நரகம்தான் கிடைக்கும். ஊன் தின்பவரைக் கொடுமை மிகுந்த நரகம் விழுங்கும். அங்கிருந்து அவ்வுயிர் மீள முடியாது. இவ்வுயிர் மீண்டும் வந்து பிற உயிர்களைக் கொலை செய்து வயிறு வளர்க்கும் கொடுமையைப் பொறுக்காது நரகம் கூட வாயை மூடிக்கொள்ளும். உயிர் வெளியேற முடியாமல் வாயைத் திறக்காது மூடிக்கொள்ளும். இதை வள்ளுவர் அழகாகக் கூறுகிறார்.

“உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண

     அண்ணாத்தல் செய்யாது அளறு.”          (255)

மாமிசம் உண்பவர்களை, புலால் உண்பவர்களைப் பார்த்து, ‘உயிர்க்கொலை செய்யாதீர்கள், மாமிசம் உண்ணாதீர்கள்’ என்று கூறினால், அவர்கள் ‘நாங்களா கொல்கின்றோம்? கடையில் விற்பனையாகும் புலாலைத்தான் மாமிசத்தைத்தான் வாங்குகின்றோம். நாங்கள் கொன்று பாவம் செய்வதில்லை’ என்று கூறுவார்கள். வள்ளுவர் இங்குதான் அழகான பொருளாதாரத் தத்துவத்தைக் கூறுகிறார். தேவை இருந்தால்தான் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வார்கள் தேவை இல்லை என்றால் அங்கு உற்பத்தி இல்லை. ‘ஞிமீனீணீஸீபீ ணீஸீபீ ஷிuஜீஜீறீஹ் ஜிலீமீஷீக்ஷீஹ்’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தேவைதான் உற்பத்திக்கும், வியாபாரத்திற்கும் காரணம்.

மாமிசத்தை உண்பவர்கள் இருப்பதால்தான் அத் தேவையைப் பூர்த்தி செய்ய மாமிச விற்பனை நடைபெறுகிறது. அந்த விற்பனைக்காகவே உயிர்கள் கொல்லப்படுகின்றன. புலால் உண்பவர்கள்தான் உயிர்க்கொலைக்கு மூல காரணமாக இருப்பவர்கள் அவ்வகையில் மாமிசம் உண்பவருக்கே அதிகப் பாவம் விளைகின்றது.

“தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்

     விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்”    (256)

தற்போது மேலைநாடுகளில் கூட புலால் மறுப்பு இயக்கம் அமைதியாகவும் வேகமாகவும் நடந்து வருகிறது. மாமிசம் உண்பவர்களை விட சைவம் உண்பவர்களுக்கே நோய் விரைவில் குணமடைகின்றது. புலால் உணவு வலிமை தரும் என்பது தவறானது. விரைந்து ஓடும் குதிரையும் வலிமை மிகுந்த யானையும் புலால் உணவா உண்கின்றன? வாழ்வின் பயன் ஒழுக்கமும், கல்வியும், அறிவும் பெற்று உடல்நலமும், உள்ள நலமும், மனஅமைதியும், இன்பமும் பெற்றுக் கருணை மிகுந்தவராய் இறைநிலை அடைதலே ஆகும். இதற்கு அடிப்படை புலால் மறுத்தல் ஆகும்.

பிற உயிர்களை உணவிற்காகவும், மற்ற காரணங்களுக்கும் கொல்லாமல் இருக்க வேண்டும். பிற உயிர்களைப் பாதுகாத்து, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் வேண்டும். இவ்வாறு ஓர் உயிரையும் கொல்லாது, பிற உயிர்களைப் பாதுகாத்து, விற்பனைக்கு இருக்கிறது என விற்கும் புலாலையும் மறுத்தும் தவிர்த்தும் இருக்கும் ஒருவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் சென்று தொழுது ஏத்தி வாழ்த்தி நிற்கும் என்று வாழ்த்துகிறார் வள்ளுவர்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

     எல்லா உயிரும் தொழும்.”                (260)

 

 

கள்ளுண்ணாமை

சமுதாயம் சிக்கல்கள், துன்பங்கள் நீங்கி இனிதே செழித்து ஓங்கி வளர வேண்டும்.

சமுதாயத்திற்குத் துன்பங்கள் ஏற்படுத்துவன எல்லாம் மக்களின் தவறான நடத்தைகளும் குற்றங்களும் ஆகும். குற்றம் என்பது தனக்கே இழைத்துக் கொள்ளும் தீங்கும், பிற மனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் இழைக்கும் தீங்கும் ஆகும்.

இக்குற்றங்கள் பழங்காலத்திலிருந்தே தொடர்ந்து வந்துள்ளன. இக்குற்றங்கள் இன்று மிகுதியும் பெருகியுள்ளன.

இக்குற்றங்களும் தீமைகளும் நீக்கப்பட்டால்தான் சமுதாயம் இன்பம் நிறைந்ததாய், வளம் நிறைந்ததாய் வாழ்வு பெறும்.

சமுதாயக் குற்றங்களில் இன்று தலையாய குற்றமாய்ப் பெருகி வருவது குடி கெடுக்கும் குடி ஆகும். சிறுமை பல செய்து சீரழித்து வறுமையையும் துன்பத்தையும் பரிசாகத் தருவது குடியாகும்.

விரைவில் வளரும் புறநாகரிகமும் மாற்றங்களும், அக நாகரிகத்தை வளர்க்கவில்லை. தன்னலம் மிகுந்து, சூழலைப் பாழ்படுத்தி மற்றவர்களைப் பற்றி அக்கறையின்றி, பொறுப்புணர்வு இல்லாமல் வாழும்போது கேடு சூழ்கின்றது. வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், ஏமாற்றங்கள், மனக்குறைகள், குடும்பப் போராட்டம் இவைகளால் எழும் கசப்புணர்வுகள், குற்றங்கள் பெருக வித்தாகின்றன.

குடி மனிதனின் சிந்தனை ஆற்றலையும், ஆக்க அறிவினையும் மழுங்கச் செய்துவிடுகிறது. குடிப்பழக்கம் ஒடுக்கப்படாவிட்டால் சமுதாய நிலை பாழ்பட்டுப் போகும். குடி, மனிதன் மனத்தை மயங்க வைத்து, தீய நினைவுகளை உருவாக்கும். தீய நினைவுகளின் பயன்களாகவும் பலன்களாகவும் விளைபவை கீழ்மையும், துயரும், துன்பமும் ஆகும்.

கள்ளும், மதுவும் மனிதரை மயக்கி அழிக்கும் ஆற்றல் உள்ளவை. கள்ளுண்டவர் நஞ்சுண்டவர் ஆவர். கள் வெறியால் என்றும் போதையிலே மயங்கி, பேதையாய், பிணம் போல் கிடப்பர். இறந்தவர்களுக்கும் கள்ளுண்டு மதுவுண்டு மயங்கிக் கிடப்பவருக்கும் வேறுபாடு இல்லை, வேற்றுமையில்லை என்று குடியைக் கடிந்து பேசுவார் வள்ளுவர்.

“துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்

     நஞ்சுஉண்பார் கள்உண் பவர்”        (926)

குடி வெறியர் பகைவருக்கு மிகவும் எளியவர் ஆவர். குடி வெறியரைக் கண்டு பகைவர் அஞ்சமாட்டார்; ஏளனம் செய்வார்.

பெற்ற தாய் குற்றங்களைப் பொறுக்கக் கூடியவள். தாய்ப்பாசத்திற்கு இணையான வேறு பாசம் உண்டோ? குற்றங்களை எல்லாம், வெறுக்கும் தகைமைகளை எல்லாம் பொறுக்கும் பெற்ற தாயும் குடியர் முகத்தில் விழிக்காது வெறுத்து ஒதுக்குவாள் என்றால் சான்றோர் வெறுப்பைக் கூறவும் இயலுமோ?

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்

     சான்றோர் முகத்துக் களி?”           (923)

பணத்தையும் கொடுத்து உடலைக் கெடுத்துப் பிணம் போல் படுக்கச் செய்யும் போதையில் விருப்பங்கொண்ட பேதைகள், அறிவிலிகள் போல் வேறு யாரும் உண்டா?

“கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

     மெய்அறி யாமை கொளல்”               (925)

என்று இரக்கப்படுவர் வள்ளுவர்.

கள்ளின் மேல் விருப்பங்கொண்டு, கள்ளின்மேல் காதல் கொண்டு திரிபவர் எப்போதும் யாராலும் அஞ்சப்பட மாட்டார்; நன்மதிப்பையும் புகழையும் இழப்பர்.

“உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்

     கட்காதல் கொண்டுஒழுகு வார்”      (921)

பாதை மாறிச் சென்று என்றும்  போதை கொண்ட, பேதையருக்கு, கள்ளுண்டு மயங்கிக் களித்தவனுக்குக் காரணம் காட்டித் தெளிவித்தல் வீணாக முடியும். அம்முயற்சி நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுதலுக்கு இணையாகும்.

“களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

     குளித்தாணைத் தீத்துரீஇ யற்று”       (929)

மதியை அழித்து மானம் கெடுக்கும் குடிப்பெருமை அழிக்கும் குடியை நீக்கிச் சமுதாயம் வாழ வேண்டும்.

மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா போன்ற பெரியவர்கள் மதுவிலக்கில் தீரத்தோடு காட்டிய தீவிரம் இன்று பின்பற்றப் பட வேண்டும்.

குடியால் விளையும் தீமைகளை நன்கு உணர்ந்து, குடியால் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் சீரழிவு, வேலை இழப்பு, உழைப்புத் திறன் குறைதல், குழந்தைகளின் எதிர்காலம் பாழ்படுதல் இவைகளையெல்லாம் சிந்தித்து ஹரியானா மாநிலத்தைப் போல் நம் நாட்டிலும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும்.

‘உண்ணற்க கள்ளை’ எனக் கள்ளுண்ணாமையைத் தனி நபர் ஒழுக்கமாகவும் சமுதாய ஒழுக்கமாகவும் போற்ற வேண்டும்.

சமுதாய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் முடிவில் இன்பம் தரும் செயலாயின் முதலில் செயல்படுத்தும் போது துன்பம் வரினும் தொடர்ந்து சோர்வின்றி உறுதியோடு செய்து முடித்தல் வேண்டும்.

“துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

     இன்பம் பயக்கும் வினை”      (669)