தமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*

தமிழ் இலக்கியம் கற்பித்திடப்

புதிய சிந்தனைகள்*

 

‘கற்க கசடறக் கற்பவை’ என வாழ்க்கைக் கல்வி கூறும் வள்ளுவர், ‘நிற்க அதற்குத் தக’, ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ என வேண்டுவதும் ‘எழுமையும் ஏமாப்பு’, ‘தாமின்புறுவது உலகின்புற’, ‘செவிச்செல்வம்’ என விளக்குவதும் இலக்கியக் கல்விக்கே மிகவும் பொருந்தும். எல்லாக் கல்வி முறைக்கும் இன்றியமையாத எண்ணும் எழுத்தும் இலக்கியக் கல்விக்கே கண்களாக நின்றிலங்கும் என்பது குறள் நெறிப் பார்வை.

மனித இனம் பேசத் தொடங்கிய நாளிலிருந்தே எல்லையற்ற தொடர்புகளுக்கு வழிகோலும் அமைப்புகளான மொழிகள் பரவத் தொடங்கின. இம்மொழிகள் என்பன பக்கவரையற்ற பேரகராதியில் திரட்டப்பெறும் வெறும் வார்த்தைக் கூட்டங்களைப் போன்றன இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் சொந்தமான எண்ணத் தொகுப்புக்கள் ஆகும். இவ்வெண்ணத் தொகுப்புகள் கலைவடிவம் பெற்றபோது ‘இலக்கியங்கள்’ என்று அழைக்கப்பட்டன. மக்கள் எவ்வாறெல்லாம் தம் கருத்துக்களைப் புலப்படுத்தவும், தமக்குள் தொடர்பு பூணவும் முற்பட்டார்களோ, அவ்வாறெல்லாம் வகைவகையான இலக்கிய முறைகள் அந்தந்த மொழிகளில் வளர்ந்துள்ளன.

இலக்கியம் மனித உணர்வின் புலப்பாடு; அவன் படைத்த கலைகளில் எல்லாம் சிறந்து நிற்கும் சாதனை; தன்னை உருவாக்கிய நல்லுணர்வுகளை மேலும் விழுமிய நலங்களாக்கித் தரும் விந்தைமிகு கருவி; ஒரு மொழியில் தோன்றிய சிந்தனையை உலகச் சிந்தனையாக்கும் பொது உடைமை; மனித குலப் பண்பாட்டைப் பேணிக் காத்துவரும் களஞ்சியம்; கற்பனைச் சிறகுகளை விரிக்கப் புதுப்புது வானங்களைத் தேடும் முடிவற்ற பயணம்; ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்’ எனும் வளர்ச்சிக்கு உரிய வள்ளுவம்.

உணர்வுகளின் புலப்பாடே இலக்கியம் ஆனமையால், இந்த உணர்வுகளின் வேறுபாடுகள் இலக்கிய வகைகளையும் வேறுபடுத்தித் தந்துள்ளன. ஒவ்வொரு புலப்பாட்டிற்கும் உரியதொரு தனி வடிவம் இருப்பது போல, இலக்கிய வெளிப்பாட்டிலும் தனித்தனிப் போக்குகள் ஏற்பட்டுள்ளன. படைப்பாளியின் அனுபவத்திற்கும் உணர்ச்சிக்கும் ஏற்ப, சமுதாய விழைவிற்கும் காலத்தேவைக்கும் தக, இவ்விலக்கியங்களும் பலப்பலவாய் அமைந்து வந்துள்ளன. அச்சுக் கலை பரவிய பின்னர், இலக்கிய ஆக்கங்கள், உலகச் சிந்தனை அரங்கில் மிகப்பெரிய தாக்கங்களை உருவாக்கித் தந்துள்ளன.

இத்தகைய ஆக்கக் கருவியான இலக்கியம் ஒரு கலை (கிக்ஷீt) எனக் கருதப்படினும் அதைப் படைப்பது அரியதொரு கைவினைப் பொருள் (சிக்ஷீணீயீt) செய்தலைப் போன்றது. படைப்பது மட்டுமன்றி, இலக்கியத்தைப் பயில்வதும், பயிற்று விப்பதும் கலை உணர்வோடு, கைவினைத் திறத்தோடு கைக்கொள்ளுதற்கு உரிய களங்கள் ஆகும்.

நமது மொழி எண்ணற்ற இலக்கியங்களை இயம்பி இசைகொண்ட செம்மொழி. இவ்விலக்கியங்கள், பருகுவனன்ன ஆர்வத்தோடு வந்தார்க்கு இருவென இருந்து, சொல்லெனச் சொல்லி, செவி வாயாக, நெஞ்சு களனாகக் கொண்டு, காலமெல்லாம் கற்பிக்கப்பட்டு வந்தன. இலக்கியங் களும், சமயத் தத்துவங்களும், வாழ்க்கை நியதிகளுமே கல்விப் பொருளாக இருந்த காலம் மாறிவிட்டது. வாழ்க்கைப் போராட்டங்களும் பொருளாதாரத் தேவைகளும் அறிவியல் கல்விக்கு முதலிடம் தந்து, இலக்கியம் முதலிய கலையியல் துறைகளைப் பின்னிடத்தில் வைத்துள்ளன. என்றாலும், இலக்கியக் கல்விக்கு உரிய இன்றியமையாமையும் அவ்வப்போது வற்புறுத்தப்பட்டே வருகிறது. “நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” எனப் பாரதியார் கேட்டதைப் போல, நமக்குக் கிட்டிய வாழ்வினைக் கேட்டுக்கு உள்ளாக்கிவிடாமல், மனித நேயத்தோடு நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்விப்பதற்கு இலக்கியம் முதலிய கலை நலத் தொடர்புகள் தேவை என்பது உணரப்பட்டு வருகிறது.

புதிய விழைவுகளுக்கு ஈடுதரும் இலக்கியப் படைப்பைப் புதுப்பித்தலைப் போல, அவ்விலக்கியங் களைப் பயிற்றுவிப்பதிலும் மறுமலர்ச்சிச் சிந்தனைகள், உலக மொழி அரங்குகளில் ஏற்பட்டு வருகின்றன. விஞ்ஞான அடிப்படையில் மொழி, இலக்கியப் பாடங்களையும் திருத்தியமைத்துப் பயன்கொள்ளும் தமிழ் இலக்கியங்களைக் கற்பிப்பதிலும் தொடக்கப் பள்ளி தொட்டு, பல்கலைப் படிப்புவரை படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் எண்ணங்கள் மேலோங்கி வருகின்றன.

சென்ற நூற்றாண்டுத் தொடக்கம் வரை, ஏட்டையும், எழுத்தாணியையும் ஊடகமாகக் கொண்டு, ஆசானிடம் மாணாக்கர் அமைவுறப் பயிலும் குருகுலப் பாங்கே தமிழ்க் (இலக்கியக்)கல்வி முறையாக இருந்து வந்தது. அச்சுக் கலையும் ஆங்கிலக் கல்வி முறையும் அறிமுகமான பின்னரும்கூட, புலமைமிகு ஆசானை அண்டி நின்று, இலக்கியங்களைப் பாடம் கேட்கும் பாங்கே நீடித்தது.

தம் ஆசான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றி, டாக்டர் உ.வே.சா. ‘என் சரித்திர’த்தில் எழுதியமையும், டாக்டர். உ.வே.சாவின் மாணவர்களாக அமைந்தோர் மரபுவழி இலக்கியப் பயில்வுமுறையினைப் போற்றியதும் இதற்குச் சான்றாகும். ஒரு புலவரிடம் பாடம் கேட்பதுடன் மட்டும் நின்றுவிடாது. எந்த இலக்கியத்தில் எவர் மிகுபுலமை பெற்றிருந்தாரோ அவரைச் சார்ந்து அந்நூலைப் பாடம் கேட்கும் ஆழமான அணுக்கப் பயிற்சிமுறை பேணப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளுக்கு முன், பல்கலைக்கழகக் கல்வித் திட்டம் தொடங்கப் பெற்ற நாட்களில், தமிழ்க் கல்விக்குத் தக்க இடம் அளிக்கப்படவில்லை பிராந்திய மொழியாகத் தாய்மொழிக் கல்வி மாற்றாந் தாய்ப்பிள்ளையாகவே நடத்தப்பட்டு வந்தது. ‘ஆங்கிலம் ஒன்றையே கற்று அதற்கு ஆவியொடு ஆக்கையும் விற்ற’ அவல நிலைகளையும் பண்பாட்டுக் குலைவுகளையும் கண்ட வள்ளல் பாண்டித்துரைத் தேவர், மதுரையில், பெரும்புலவர்களைக் கூட்டி, நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி, தமிழ்ப்புலமைப் பயிற்சியை வரன்முறையானதொரு பாடத் திட்டமாக்கிட வழிகோலினார். மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், சென்னைக் கல்விச் சங்கம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை முதலியன புலவர் தேர்வுகளை நடத்தி, புதிய தலைமுறைத் ‘தமிழ் வித்துவான்களை’ உருவாக்கித் தரத் தொடங்கின.

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் தமிழ்த்துறைகள் மொழிநலம் பேணத் தொடங்கிய பின்னர், தமிழைக் கற்றலிலும் கற்பித்தலிலும் புதுமெருகுகள் ஏற்பட்டன. பிற பாடங்களைப் போல, மொழிப் பயிற்சியும் பட்டம் பெறும் பாடத்திட்டம் ஆயிற்று. நாளடைவில் புலவர் சான்றிதழ்த் தேர்வும் புதிய பட்டப் பாடத்திட்டமும் இணைந்ததொரு மொழிக்கல்விமுறை தமிழாசிரியர்களை உருவாக்கும் களமாயிற்று. பெரும்புலவர்களைச் சார்ந்து பயில்வதும், திருமடங்களில் சேர்ந்து படிப்பதும் குறையலாயிற்று.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், காலனி ஆதிக்கப் பிடிப்புக்கள் தளர்ந்து, நாட்டு விடுதலைப் போர்கள் கிளர்ந்து, இன, மொழி, பண்பாட்டு இயக்கங்கள் உலகெல்லாம் எழுந்தமை, புதிய பார்வைகளுக்கு வழிகோலியது. இந்திய விடுதலையோடு இணைந்தெழுந்த தமிழியக்கம், தமிழின் பண்டைப் பெருமைகளை எல்லாம் புதிய ஒளியில் புலப்படுத்த முற்பட்டது. ஆராய்ச்சிப் பேரறிஞர்கள் பழஞ்சுவடிகளை ஆய்ந்து, புதையுண்டு கிடந்த தமிழ்ச் செல்வங்களைப் புதுப் படைப்பாக்கித் தந்தனர். நமது மொழிப் பயிற்சி முறையும் இக்கால கட்டத்திலே பழம்பெருமை தேடிப் பரவசமுறும் பாதையிலே போய்க்கொண்டு இருந்தது.

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழாமல், சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்ய வேண்டும் என்று முழங்கிய பாரதிப் புலவன், “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என அறைகூவினான். இந்த அறைகூவலை நாளடைவில் நடைமுறையாக்கும் எண்ணங்கள் மேவின. ‘பன்மொழிக் கட்டமைப்புடைய நாடு’ எனும் ஆட்சி வரையறைக்குள் நின்று மொழிநலம் பேணி வளர்க்கும் வகையில் துறைகள் ஆக்கப்பட்டன. பல்கலைக்கழகங்கள் விரிந்தன. உலகத் தமிழ் மாநாடுகள் கூடின. தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலிய மொழியாக்க மூலப் பட்டறைகள் நிலை கொண்டன.

மேலைநாட்டவர் ஆட்சிக்காலத்தே தமிழ்மொழியின் காலப்பழமையினையும் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையினையும் தேடித் தொகுக்கும் முயற்சிகள் அரும்பின. சிந்துவெளி நாகரிகம் தொட்டு, குமரிக்கண்ட அமிழ்வு வரை, மறைந்து, மறந்து போனவற்றை ஆய்ந்தறியும் வரலாற்றுச் சுவடுகள் வளர்ந்தன. புதையுண்ட கல்வெட்டுக் களையும், தூசுபடிந்த ஓலைச் சுவடிகளையும் கருத்தோடு கண்டறியும் பயணங்கள் நீண்டன. இந் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் பண்டைப் பெருமைகளை, வாழ்ந்த கதைகளை, வீர வரலாறுகளை எல்லாம் நினைவூட்டும் நறுஞ்சுனைகளாக, சோலைகளாக அம்முயற்சிகள் ஆங்காங்கே நிலைகொண்டன. உரிமை பெற்ற பின்னர் இந்நாட்டின் பல்வேறு தேசிய மரபுகள் தம்மை இனம்காட்டிக் கொள்ள முற்பட்டபோது தமிழ்நாடும் தனது பழமைச் செல்வங் களுக்குப் புது மெருகேற்றிக் கொள்ளத் தலைப்பட்டது.

மனோன்மணீயம் சுந்தரனாரின் ‘தமிழ்த்தாய்’ வாழ்த்தும், மகாகவி பாரதியின் ‘வாழிய செந்தமிழ்ப் பாட்டும்’ பாவேந்தரின் ‘தமிழியக்கமும்’, சுத்தானந்தரின் ‘தமிழ் உணர்ச்சியும்’ மறுமலர்ச்சி வித்துக்களைத் தூவின. சங்க இலக்கியங்கள் எல்லாம் புதுப்பதிப்புப் பெற்றன. முத்தமிழ்க் காப்பியங்கள் மாநாட்டு அரங்கேறின; பக்தி பனுவல்கள் பட்டிமன்றப் பொருளாயின; தமிழ்ப் பேரரசுகளின் வரலாறுகள் ‘பார்த்திபன் கனவாக’, ‘சிவகாமி சபதமாக’, ‘கல்கி’ முதலியோரால், புதினப் புத்தாடை அணிவிக்கப் பட்டன; அகத்திணை, புறத்துறைப் பாடல்கள், உரைநடை யிட்ட நாடகச் சித்திரங்களாக மு.வ., புலியூர்க்கேசிகன், கி.வா.ஜ. முதலிய புலமைச் செல்வர்களால் வளமுறுத்தப் பட்டன. இவ்வளங்கள் எல்லாம், தமிழ்ப்பாடத் திட்டப் பாத்திகளிலும் கரைந்தோடி வந்தன. அவற்றைக் கற்பதில் ஈடுபாடும், கற்பிப்பதில் பெருமையும் கைகோத்து நடம் பயிலத் தொடங்கின.

மொழியியல் இலக்கியக் கல்வியில் ஆர்வமும், நூலாக்கப் பணிகளில் ஈடுபாடும் இவ்வாறு பெருகத் தொடங்கின. என்றாலும், அண்மைக் காலமாகத் தாய்மொழிக் கல்வியில் தளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியில் தேக்கமும் ஏற்பட்டிருப்பது பலராலும் உணரப்படுகிறது. புலரும் நூற்றாண்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு, தமிழ்மொழி இலக்கியங்களைப் பயிற்றுவிப்பதில் சில மாற்றங்களைக் கொணர வேண்டும் என்பதும் வலியுறுத்தப் படுகிறது.

தமிழ் இலக்கியங்கள் தொன்மையில் வேரூன்றியவை; தொடர்ந்து நூல் வளத்தினைப் பரப்பியவை; மரபுகள் எனும் விழுதூன்றிக் கொண்டவை: புதுமையையும் கொண்டு கலைமணம் பரப்ப உணர்வூட்டி வருபவை; “தூய்மை, தொன்மை, புதுமை, அகலம், ஆழம் என்ற அனைத்துத் திறன்களும் இயல்பாக ஒருங்குபெற்று, இடையூறு, எதிர்ப்பெல்லாம் கடந்து வாழ்ந்தியங்குவது நம் தமிழ் மொழி” (பேராசிரியர் வ.சுப.மாணிக்கம்). இலக்கியங்களைப் பாட வகைப்படுத்தும்போது, இத்தனை சிறப்புக்களும் போற்றப்படும் வகையில் திட்டமிடுதல் வேண்டும். ‘தமிழை முறையாகக் கற்பிக்கவில்லை, தமிழிலக்கியச் செல்வத்தை அறிவிக்கவில்லை, தமிழைக் காலமொழியாக வளர்க்கவில்லை’ எனும் குறைகளுக்கு இடம் கொடாமல், தமிழ்ப் பாடத்திட்டத்தை வகுத்திட வேண்டும். தமிழ் நிலத்து ஐந்திணை வளமும் மரபு நலமும் பழந்தமிழ் இலக்கியத்திற்குக் களங்கள் ஆயினமையும், சமய எழுச்சியும் அரசு ஏற்ற இறக்கங்களும் இடைக்கால இலக்கியங்களுக்குப் பின்னணி தந்தமையும், உரிமை வேட்கையும் அறிவியல் பெருக்கமும் இக்கால உணர்வுகளுக்கு ஊக்கமளித்து வருவதும் நமது இலக்கியப் பாடத்திட்ட வரன்முறைகளில் பிரதிபலிக்க வேண்டும்.

தொடக்கப் பள்ளி முதல் தாய்மொழி இலக்கியக் கல்வி இருநிலைகளை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படுகிறது:

  1. பொதுநிலை

  2. சிறப்பு நிலை

பிழையின்றி எழுதப் படிக்கக் கற்றல், தம் கருத்தைப் புலப்படுத்த ஆற்றல் பெறுதல், மொழியின் இலக்கியப் பயன்பாட்டைப் புரிந்துகொள்வதோடு, தனியொரு கலைவடிவமாக இலக்கியத்தையும் போற்றுதல் – இது எல்லோர்க்கும் உரிய பொது நிலைப் பயிற்சி.

மொழி இலக்கியக் கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள முற்படுதல்:

திறனாய்வுத் திறமும் தேர்ந்த புலமையும் பெறுதல்.

– இது சிலர்க்கு மட்டுமே அமைய வேண்டிய சிறப்பு நிலைப் பயிற்சி.

இவ்விரு நிலைகளுக்கு ஏற்ப – தமிழ் இலக்கியப் பயிற்சியும் – பொதுத்தமிழ் – சிறப்புத்தமிழ் என இருகூறாக மேனிலைப் பள்ளிக் கல்வியிலிருந்து பகுக்கப்பட்டுள்ளது. பொதுத் தமிழாகவும், சிறப்புத் தமிழாகவும் கற்பிப்பதில் இப்போது கருதவேண்டிய சிந்தனைகள் இவை.

(அ). நர்சரிப் பள்ளி தொட்டு, தாய்மொழி வாயிலாகக் கல்வி தருவதே செவ்விய இயற்கை நெறி. அண்மைக் காலமாக, ஆங்கில வழிக் கல்வி மோகம் ஆங்கில ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, நர்சரிப் பள்ளிகளிலேயே வேரூன்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிக் கல்வி அறிஞர்கள் கவலை தெரிவித்த பின்னர், இப்போக்கைத் தடுத்தாட் கொண்டு, தாய்மொழிக் கல்விக்கு அங்கு முன்னுரிமை தரும் முயற்சிகள் தலைதூக்கி வருகின்றன.

(ஆ). நர்சரிப் பள்ளி முதல் தொடக்கப் பள்ளியின் எட்டாம் வகுப்பு வரை தமிழைக் கற்பிக்கும்போது நல்ல பாடல்களைத் தேர்ந்து, மனப்பாடப் பகுதிகளாக வைத்து, மாணவரின் நினைவுத் திறனை ஊக்கி வளர்க்க வேண்டும். அப்பகுதிகளைத் தேர்வுத்தாளில் விடையாக எழுதுவதோடு அமையாது, அறிவியல் பாடச் செய்முறைபோல் ஒலிப்பிழையின்றி ஒப்புவிக்கவும் செய்திட வேண்டும். நர்சரி தொடக்க வகுப்புப் பருவப் பாடல்கள், குறுகுறு நடையுடையனவாக, ஓசை நயமுடையனவாக, எளிய கருத்தை இயம்பும் கதைப்பாங்கினவாகத் தெரிவு செய்யப்படுதல் வேண்டும்.

(இ). ஐந்தாம் வகுப்பு வரை நீதி நூல்களுக்குச் சிறப்பிடம் தரலாம். உணர்வுக்கும் கற்பனைக்கும் முதலிடம் தந்து அமைவன இலக்கியங்கள் எனில், அறிவுக்கும் சிந்தனைக்கும் தலைமையிடம் தருவன நீதி நூல்கள் ஆகும். வளரும் பிள்ளைகள் சமுதாய நியதிகளையும் தனிமனித ஒழுகலாறுகளையும் கற்றறிய உதவும் படிகளாக நீதிநூல் கல்வி அமையும். ஆத்திசூடி முதலிய நீதிநூல்களை ஒவ்வொரு வகுப்பிலும், மாணவரின் திறனுக்கு உகந்தவாறு அறிமுகப்படுத்த வேண்டும். ஐந்தாம் வகுப்பில் திருக்குறளைத் தொடங்குவதோடு இடைக்கால, இக்கால இலக்கியங்களையும், கட்டுரை, உரைநடை, நாடகம், கடிதம் முதலியவற்றையும் பாடமாகத் தொகுக்க வேண்டும். இப்போதுள்ள பாடநூல் களில் இம்முறை பொதுவாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்றாலும் ‘நல்ல தமிழ் எழுதத் தெரியாத’ மாணவர்களாகவே பெரும்பாலோர் இருப்பதால், பயிற்று முறையில் ஏதோ குறையுள்ளது எனத் தெரிகிறது. தொடக்கப் பள்ளி வகுப்புகளில், மாணவர் எண்ணிக்கை ஓராசானின் போதனை வரம்பிற்கும் அதிகமாக இருப்பது ஒரு காரணம் என்றாலும், உணர்வுத் திறத்தோடு மொழிக்கல்வி புகட்ட மாட்டாதவர்கள் ஆசான்களாக அமையும் குறையே முக்கியமான காரணமாகும்.

திருக்குறளைப் பயிற்றுவிப்பது பற்றிய ஒரு கருத்தை இங்கே வலியுறுத்துதல் பொருந்தும். தமிழ்மொழியில் முதன்மையானதும், முழுமையானதும், தொன்மையானதும், தொடர்ந்து புதுமை நலம் பேணுவதுமான திருக்குறளைக் கற்பிப்பதில் பிற நூல் போதனையை விடச் சற்று அதிகமான அக்கறை வேண்டும். வாழ்க்கைக் கூறுகளாம் அறம், பொருள், இன்பம் எனும் மூன்று முதற்பொருள் களையும் தனித்தனியாகவும், முழுமையாகவும் வள்ளுவர் உணர்த்தியுள்ளார். இப்பயனை இளமை முதலே மாணவர் தெரிந்து தெளியும் வகையில் குறட்பாக்களைப் பாடமாக வைக்க வேண்டும். முதல் வகுப்புகளில் படித்த திருக்குறள் அதிகாரங்களே மேல் வகுப்புகளிலும் பாடமாகத் திருப்பித் திருப்பி வராவண்ணம், இந்த வகுப்புக்கு இந்த அதிகாரப் பகுதி என வரையறுத்துக் கொள்ள வேண்டும். காப்பியங்கள், பக்திப் பனுவல்களுக்கும் இத்தெரிவு முறை முழுப் பயன் தரும்.

(ஈ). மொழி இலக்கியப் பயிற்சி இரு வகைப்படும்.

  1. மொழிப் பயிற்சி வழியாக இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் ஒருமுறை.

  2. இலக்கியங்கள் மூலமாக மொழியின் கூறுகளை அறிதலும் ஆளுதலும் மற்றொரு முறை.

ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மொழிப்பயிற்சி வழியாக இலக்கியங்களை அறிமுகப் படுத்தும் வகையில், இப்போதுள்ள பாட முறையில், செய்யுள் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்கள், பாட நூலுக்கு அப்பாலும் சென்று மொழித்திறம் பெறுவதற்கு உதவும் உரைநடை (சிறுகதை, புதினம், பயண நூல், அருஞ்சாகசக் கற்பனைகள் என்பன) நூல்களும் சேர்க்கப்பட வேண்டும்.

(உ). மேனிலைப் பள்ளியோடு படிப்பை முடித்துக் கொள்ளுவோருக்கும், பிற தொழிற் படிப்புக்களில் சேருவோருக்கும் அதுவரை தாம் கற்ற தாய்மொழியும் இலக்கியப் பயிற்சியும் தற்சார்புடையனவாக அமைந்திருத்தல் வேண்டும். தாமே முயன்று மொழித்திறத்தையும் கருத்துப் புலப்பாடுகளையும் வளர்த்துக் கொள்ள வழிகாட்டுவதாக இலக்கியக் கல்வி ஆக்கம் தந்திட வேண்டும். ஒருவரிடம் இயல்பாகக் குடிகொண்டுள்ள சிந்தனை வளத்தை வெளிக் கொணர உதவும் வாயில்களில் ஒன்றாகச் செய்தித்தாள்களும் இதழ்களும் வளர்ந்துள்ளன. படிப்போரை எல்லாம் படைப்பாளிகளாக்கிக் கொண்டு வரும் இதழியல் முதலிய தொடர்புச் சாதனங்களில் எல்லாம் இலக்கியம் படிப்போர் நாட்டம் கொள்ளத் தூண்டுவனவாகப் பயிற்சி முறைகள் அமைய வேண்டும்.

(ஊ). பள்ளிக் கல்வி – கல்லூரிக் கல்வி எனும் தெளிவான வரையறை – மரத்தின் முன்னிலை வளர்ச்சியோடும் அது நல்கும் பின்னிலைப் பயனோடும் ஒப்புநோக்கக் கூடியது. மரம் – பலன் தருவதற்கு முன்னர் தக்க வளர்ச்சி பெறும் தனி நிலையினையும், தக்க வளர்ச்சி பெற்ற பின்னர் பயன்தந்து நிற்கும் முழுநிலையினையும் பெற்றுள்ளமை போல, வாழும் சூழலிலிருந்து கிடைக்கும் இயற்கைச் சத்துக்களையும் ஆசான் நல்கும் ஊக்க உரத்தினையும் பெற்று மாணவர் தனிநிலை வளர்ச்சி காண வேண்டும். மேனிலைப் பள்ளிப் படிப்புவரை இத் தனிநிலை வளர்ச்சி நீடிக்கலாம். கல்லூரிக் கல்வியிலிருந்து விரிந்த நிழலும் விழுமிய நலனும் நல்கிடும் முழுநிலை இலக்கியப் பயிற்சி, முயற்சிகளுக்கு முற்பட வேண்டும்.

(எ). கல்லூரிகள் தமிழ் இலக்கியப் பாசறைகளாக விளங்க வேண்டியவை. அங்குள்ள உலைக் களங்களில், அறிவியல், கலைத்துறைகளோடு, மொழித்துறையும் சிந்தனைத் தீயில் புடமிடப்பட்டுச் செம்மை வடிவம் பெற வேண்டும். இந்த உலைக்களத்தில் காலத்திற்கு ஏற்ற புதிய கருவிகளை மொழித்துறை படைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்கு ஏற்ற புதுப்புது இலக்கியப் படைக்கலங்களை உருவாக்கித் தர வேண்டும்.

(ஏ). வாழ்வு என்பதும் வாழ்க்கை என்பதும் வெவ்வேறு ஆகும். வாழ்வு என்பது தோற்றம், நிலை, மறைவு எனும் பிரபஞ்ச இயல்பு பற்றியது. வாழ்க்கை என்பது தனிப்பட்ட உயிர்களின் உயிர்ப்பாசத்தினால் ஏற்படும் உணர்வுகள் மற்றும் விளைவுகளைச் சார்ந்து அமைவது. வாழ்வு, வாழ்க்கை எனும் இவற்றிடையே உள்ள தொடர்பையோ, தொடர்பற்ற தன்மையையோ விளக்குவதே மனிதச் சிந்தனையின் சாரம். இச்சிந்தனைகள், கலைவடிவம் பெறும்போது இலக்கியங்கள் ஆகின்றன. மன உணர்வுகளைச் சித்திரங்களாகத் தீட்டும் இலக்கியக் கலையின் இயல்புகளை அறிவதும், இயன்றவாறு எல்லாம் புதியவர்களை ஆக்க வழிகாட்டுவதும் கல்லூரி இலக்கியக் கல்வியின் நோக்கம் எனலாம்.

“நூல் இருவகை: தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று; நம் காலத்திற்குத் தான் வந்து உதவுவது மற்றொன்று. நூலைக் கற்கும் முறையும் இருவகை: வாழும் காலத்தை மறந்து நூலெழுதிய காலத்திற்குக் கற்பனைச் சிறகுகொண்டு பறந்து சென்று நூற்பொருளைக் கற்பது ஒருவகை; நூலெழுதிய காலம் எதுவாயினும் அதைவிட்டு, வாழும் காலத்திற்கே வந்து வழிகாட்டும்படியாக நூலைப் போற்றிக் கற்பது மற்றொரு வகை;” என்பார் அறிஞர் மு.வ. புலவருலகில் நின்று இலக்கியமாக மட்டும் மதிக்கும் முதல்வகை நூல்களையும், மக்கள் உள்ளங்களையே கோயில்களாகக் கொண்டு வாழும் இரண்டாம் வகை இலக்கியங்களையும் முறையறிந்து கற்பிக்கும் அணுகுமுறை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் புதுப்புது உத்திகளோடு இணைந்து ஏற்பட வேண்டும்.

கல்லூரியில் முதற்பாகமாக மட்டும் தமிழைப் பயில்வோரின் தொகையே மிகுதி. பல்வேறு துறைகளைப் பாடமாகத் தேர்ந்து பயிலும் இவர்களது வளர்ச்சி நோக்கம் சிதையா வகையிலும், அதை மேலும் சிறப்புறுத்தும் முறையிலும் இலக்கியப் பயிற்சி தரப்படுதல் வேண்டும். இலக்கியப் பாடங்களை ஒரு சுமையாகக் கருதாமல், அருஞ்சுவையாக ஏற்றுப் படிக்கும் வகையில் பாடத்தொகுப்பு அமைய வேண்டும். தேர்வெழுதியதோடு இலக்கியப் படைப்பையும் மூடிவைத்து விடாமல், வாழ்க்கை முழுவதும் நல்லிலக்கியங்கள் மீது நாட்டம் கொள்ளும் வகையில் உணர்வூட்ட வேண்டும். பிறதுறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களில் சிலர், சிறந்த இலக்கிய மேதைகளாகவும் விளங்குவதற்கு அவர்கள் பெற்றுக்கொண்ட இந்த இலக்கிய ஊட்டமே காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்லூரிநிலை முதல் பாகத் தமிழ்ப்பாடத் திட்டத்தில் சங்க கால, இடைக்கால இலக்கியங்கள் ஓராண்டும், இக்கால இலக்கிய வகைகள் மறு ஆண்டிலும் அமையலாம். இக்கால இலக்கிய வகைகளில் சிறுகதை, புதினம், இதழியல் முதலியவற்றிற்குக் கூடுதலான வாய்ப்பு அளிக்கலாம்.

ஐ. பட்ட வகுப்புச் சிறப்புப் பாடமாகவும், முதுகலை வகுப்புப் புலமைப் பாடமாகவும் அமையும் தமிழ் இலக்கியத் தொகுப்பில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அவ்வப்போது செய்து கொள்ளப் பல்கலைக்கழகங்கள் துணிய வேண்டும். அறிவியல் பாடத்திட்டங்களைத் தயக்கமின்றி மேம்படுத்தி (ஹிஜீபீணீtவீஸீரீ) வருவதைப் போல, இலக்கியப் பாடத்திட்டங்களையும் புதுநெறிப்படுத்திடத் தமிழறிஞர்கள் இசைய வேண்டும்; புதுமரபுகளுக்கு இடம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்திற்கு அன்று தொட்டு அமைந்த பல்வகை மரபுத் தூண்களையே எப்போதும் பற்றி நிற்காமல், புது மரபுப் பந்தல்களையே தேட வேண்டும், போட வேண்டும்.

ஒ. திறனாய்வும் ஒப்பீட்டாய்வும் உலக இலக்கியச் சோலைகளில் இவ்வாறு புதுப்பந்தல்களைப் போட்டு வருவது நம் கண்களில் பட வேண்டும். தமிழில் திறனாய்வும் ஒப்பீடும் அண்மையில் ஓரளவு வளர்ந்துள்ள போதிலும், இவ்விரண்டையும் விரிவுரையாளராக மட்டும் சொல்லித் தராமல், விமரிசனத்தைப் படைப்பு நிலைக்கு உயர்த்திட வேண்டும். இலக்கிய வளர்ச்சிக்கு உரமூட்டும் வண்ணம் கற்பிக்க வேண்டும்.

முதுகலை மாணவர்க்கு இவற்றை இன்னும் ஆழமாகக் கற்பிக்கலாம். கற்பிக்கும் பேராசிரியர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் நுண்மாண் நுழைபுலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்கள் சில பாடத் துறைகளால் தனிப்புகழ் அடைவது போல, பேராசிரியர்களும் தனி இலக்கியப் புலமையில் சிகரங்களாகத் திகழ வேண்டும். ‘நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்’ (திருமூலர் – திருமந்திரம்) எனும் குறை நம் இலக்கியப் பேராசிரியர் களுக்கு நேரிடக் கூடாது. ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ (குறள்: 595) போல, பேராசிரியர்கள் உயர்வுக்கு ஒப்பவே அவர்தம் மாணவரின் மலர்ச்சியும் அமையும் அன்றோ?

‘கம்பனொடு கவி போயிற்று’ என்ற முந்தைய நூற்றாண்டு ஏக்கமும், ‘பாரதி, பாரதிதாசனுக்குப்பின் யாவர்?’ எனும் இந்த நூற்றாண்டுக் கேள்வியும் தமிழ் உலகில் எதிரொலித்துக் கொண்டே உள்ளன. வெளிநாட்டார் வணக்கம் செய்யும் திறமான படைப்புக்கள் ‘ஞானபீடம்’ ஏந்திடும் தரத்திற்கு உயரும் நாள் எந்நாளோ? எனும் பெருமூச்சுக்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. மறைமலை யடிகள், திரு.வி.க. போல, புதுமைப்பித்தன், கல்கி போல, மு.வ., தெ.பொ.மீ. போல, தனிநாயக அடிகள், கைலாசபதி போல இந்தத் தலைமுறையிலும் இலக்கியச் செல்வர்களைத் தேடும் பார்வைகள் அலைகின்றன.

பத்திரிகைகளும் பல்கலைக்கழகங்களுமே இன்று, தமிழ் இலக்கியப் பயிர் புரக்கும் பண்ணைகளாக உள்ளன. இலக்கிய வேள்வியில் முனைந்த ஒரு சில ஏடுகள், சாண்ஏறி, முழம் வழுக்கிக் கொண்டிருக்கின்றன. விளம்பர வேட்டையாடும் பத்திரிகைகளில் பெரும்பாலானவை பாதியாடைச் சித்திரங்களோடு பச்சைப் பயிர் வளர்த்துக் கொழிக்கின்றன. களையாக வளரும் இந்த நச்சு எழுத்துக்களை எளிதில் இனம் பிரித்தறிய முடியாத அளவு அவை ஊடு பயிர்களாக வளர்க்கப்படுகின்றன. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவை இவை ‘நசிவு இலக்கியங்கள்’ என ஆய்ந்து சொல்வதோடு நின்றுவிடாமல், நல்ல இலக்கியங்களைப் படிக்கவும், படைக்கவும் வாய்ப்பளிக்கும் நிலங்கள் ஆகும் பொறுப்பையும் இன்று ஏற்க வேண்டியுள்ளது. எங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள், எங்களது வாழ்க்கை முயற்சிகளினூடே ‘திருக்குறள் பேரவை’ போலும் இலக்கிய மன்றங்களை நடத்தி, இயன்றவாறெல்லாம் தமிழ் மணம் பரப்பி வருகின்றோம். கல்லூரிகளில் அன்று எங்களுக்கு புகட்டப்பட்ட ‘தமிழ்ப்பால்’ போன்ற ஞான நீரோடைகள் இன்றும் வாழ்க்கை வயல்களில் பாய்ந்தோடி வரவேண்டும் என விழைகின்றோம். இலக்கிய விழாக்களை அரிதின் முயன்று ஏற்பாடு செய்யும்போது மொழியைத் தொழிலாகக் கொண்டு அதை வளர்க்கும் பொறுப்புடையோரே இவ்விழாக்களை ஒதுக்குவதும் அவற்றிலிருந்து ஒதுங்குவதும் கவலை தருகிறது.

தமிழ் அறிஞர் பெருமக்கள், இலக்கிய நீரோடை களைப் பெருக்கெடுத்து ஓடச் செய்யும் உயிரூற்றுகளாகத் தமிழ்த்துறைகளை ஆக்கித்தர வேண்டும். தமிழ் ஆசிரியப் பெருமக்கள் கூடி நடத்தும் இதுபோன்ற உலகளாவிய மாநாட்டு அரங்குகள், திருவிழாக்களாக மட்டும் போய் விடாது புதிய செயல்திட்டங்களை வடிவமைக்கும் வாய்க்கால்களாகவும் பயன்தரவேண்டும்.

 

4150total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>