என்னைச் செதுக்கிய திருக்குறள் – பாகம் 3

Image result for காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார் திருவள்ளுவர். இங்கே அவர் ஒரு பெரிய உண்மையைக் கூறுகிறார்.

உனக்குச் சொந்தக்காரர், மனைவிக்குச் சொந்தக்காரர், நண்பருக்குச் சொந்தக்காரர் என்று நினைக்காதே. அவருக்கு உதவி செய்வது வேறு விஷயம். இந்தத் தொழிலுக்கு இவர் தகுதியானவரா என்று மட்டும் பார். அப்படி இல்லையென்றால் அந்தத் தொழில் அழிந்துவிடும். வாழ்நாள் முழுவதும் துயரம் தரும்.

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

     பேதமை எல்லாம் தரும்”       (507)

ஒரு காரியத்தைத் திட்டமிடுவதற்கு, ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன் அதன் லட்சியம் என்ன? அந்த லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள் யாவை? அந்த வழிமுறைகளுக்கு வரக்கூடிய இடையூறுகள் என்ன? அந்த இடையூறுகளை வெல்லுவதற்கு உரிய வழிமுறைகள் எவை? இவையெல்லாம் வெற்றி பெற்ற பின்பு உனக்குக் கிடைக்கக்கூடிய விளைவு (ரிசல்ட்) என்ன?

“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

     படுபயனும் பார்த்துச் செயல்”              (676)

ஒரு தொழிலை ஆரம்பித்திருக்கிறோம் என்றால் என்ன நோக்கத்திற்காக ஆரம்பித்துள்ளோம், அதற்கு என்ன லாபம் கிடைக்கும், இதற்கு இடையில் வரக்கூடிய இடையூறுகள் எவை, அவற்றை வெல்லுவதற்கு உரிய வழிகள் என்ன, இவைகளை எல்லாம் வென்ற பின்பு கடைசியில் உனக்கு லாபம் கிடைக்குமா? நட்டம் வருமா? இலாபம் கிடைத்தால் செய், இல்லை என்றால் விட்டுவிடு. என்று நன்கு ஆராய்ச்சி செய்யச் சொல்கிறார். அந்தத் தொழிலுக்கு எனத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மிகச் சிறந்தவர் களாக இருக்க வேண்டும் என்கிறார்.

“தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

 அரும்பொருள் யாதொன்றும் இல்”        (462)

அவ்வாறு தேர்ந்தெடுத்தவரைச் சூழ்ந்து ஆலோசனை பெறவேண்டும்… நீதான் தொழிலதிபர் என்று நினைக்காதே அந்தத் துறையில் சிறந்தவரைக் கூப்பிட்டு ஆராய்ந்துபார் அதற்குப் பிறகு முடிவெடு, துணிவு கொள். அந்தத் துணிவை மிக விரைந்து செய். இல்லாவிட்டால் பயன் இல்லாமல் போய்விடும். என விளைவு பற்றிப் பேசுகிறார் வள்ளுவர்.

“சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல்; அத்துணிவு

 தாழ்ச்சியுள் தங்குதல் தீது”                (671)

இதைச் செய்து முடித்தபிறகு வெற்றிபெற்று விட்டோம் என்று ஆனந்தமாய் இருந்துவிடாதே. மேலும் மேலும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றி பெற்று விட்டோம் என்று சும்மா இருந்து விடக்கூடாது.

“இறந்த வெகுளியின் தீதே சிறந்த

 உவகை மகிழ்ச்சியிற் சோர்வு”       (531)

“சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

 நிலத்தறைந்தான் கைபிழையா தற்று”  (307)

கோபம் கொண்டவன் அழிந்து போய்விடுவான். அதுபோல வெற்றி பெற்று விட்டோம் என்று சும்மா இருந்தால், மேலும் மேலும் செய்யாது சோர்ந்திருந்தால் நீ தோற்றுப்போய் விடுவாய். தொடர்ந்து சோர்வில்லாமல் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்றைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் 60 மைல் ஓடிக்கொண்டே இருந்தால்தான் 40 மைலைக் காப்பாற்ற முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டுகிறார் இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அது போல காரியம் செய்கின்றபோது,

“கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின்

 எற்றா விழுமம் தரும்”             (663)

என்கிறார். செய்யப் போகின்றதைப் பற்றி, ஒரு காரியத்தை உடனே வெளிப்படுத்தி விடக்கூடாது. அப்படி வெளியிட்டு விட்டால் தோற்றுப்போய் விடுவார்கள். பகைவர்களும், போட்டியாளர்களும் உத்தியைத் தெரிந்து கொண்டு தோற்கடித்து விடுவார்கள். அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். ஒன்று செய்கின்ற சமயத்திலே மிக ரகசியமாகத் திட்டமிட்டு அக்காரியம் முடிந்த பிறகே வெளிப்படுத்த வேண்டும் அதுதான் ஆண்மை என்று சொல்கிறார் வள்ளுவர்.

ஒருவகைப் புல் உண்டு. அதனைப் போட்டுவிட்டால் மண்ணுக்கு அடியிலேயே மிகச்சிறப்பாக வளர்ந்து திடீரென வெளிப்படும். மிகச்சீரிய காரியங்களைச் செய்யும் போது கடைசிவரை அதனை வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்கிறார் வள்ளுவர். மிக வியப்பாக இருக்கிறது. இப்பொழுது உள்ள தொழில்நுட்பத் திறன் பற்றி எல்லாம் திருவள்ளுவர் அன்றே சிந்தித்து இருக்கிறார். லேண்ட், லேபர், கேப்பிட்டல், டைம் என்ற கான்ஸப்ட் பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறார்.

Image result for thirukkural

“பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்

     இருள்தீர எண்ணிச் செயல்”          (675)

ஒரு காரியத்தைச் செய்வதற்கு, செயலுக்குத் தேவைப்படுகின்ற ஒரு மனிதனின் அளவுகோல் எது? குலச்சிறப்பு வேண்டாம், படித்திருக்க வேண்டாம், பட்டம் பெற வேண்டாம். ஆனால் அவன் நல்ல எண்ணத்தோடு, நல்லதைக் கேட்டுச் செய்து விடுவானானால் அவனால் முடியாதது என எதுவும் இருக்காது.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

 செல்லும்வா யெல்லாம் செயல்”     (33)

“ஒல்லும் வாய்எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்

 செல்லும்வாய் நோக்கிச் செயல்”     (673)

“ஓல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்

 செல்வார்க்குச் செல்லாதது இல்”     (472)

இது ஒரு திறன். இயன்றவரையில் எல்லாம், வகையில் எல்லாம், தொடர்ந்து தயங்காமல் காரியத்தைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.

எந்தக் காரியம் செய்தாலும் காலம் அறிந்து, இடமறிந்து செய்தால் வெற்றி பெறலாம். எது உன்னால் முடியும் என்று ஆராய்ந்து செய். முடியாததை நினைக்காமல் விட்டுவிடு.

“உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி

 இடைக்கண் முரிந்தார் பலர்”        (473)

உன் வலிமை எது என்பதைப் புரிந்து கொண்டு, அதனை நன்றாக ஆராய்ந்து, அதனில் கருத்தைச் செலுத்தி, மன வலிமையைச் செலுத்தி அந்தக் காரியத்தைச் செய்தால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர் இது தன்னம்பிக்கை ஊட்டக் கூடியது. மிக வியப்பாக இருக்கிறது. அதுபோல ஒரு காரியத்தில் வெற்றி பெற்று விட்டாயானால் மற்றதில் எளிதாக வெற்றி பெறலாம். சினிமாக்காரர்கள் வருவதற்கு இதுதான் காரணம். அந்தத் துறையில் வெற்றிபெற்றவர்கள் மீண்டும் வந்து விடுவார்கள். என்ன காரணம் ஒரு காரியத்தைச் செப்பமாகச் செய்ததனால் மற்ற காரியங்கள் இயல்பாகச் செயல்படத் தொடங்கிவிடும். இதுதான் வினையாகச் செயல்படுவது.

ஒரு மதம் பிடித்த யானையை நன்றாகப் பழக்கி விட்டோமானால் அந்த யானையை வைத்து காட்டில் பல யானைகளைப் பிடித்துவிடலாம்.

“வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

 யானையால் யானையாத் தற்று”      (678)

‘மேனேஜிங் கான்சப்ட்’ குறித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்றால் மிகப் பெரிய வியப்பாக இருக்கிறது.

என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் எனது மாமனார் திரு.வி.கே.கே. கல்யாணசுந்தரம் அவர்கள். அவர்களைப் பற்றி அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அவர் அதிகமாகப் படித்ததில்லை. ஆனால் அவர் வெற்றி பெற்றதற்குக் காரணம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அதன் பிறகு விடாமுயற்சி, தன்னம்பிக்கை. பெரியோர்களின் ஆசி, இறைவன் திருவருள் இவையெல்லாம் அவரிடம் இருந்ததனால்தான் மிகப்பெரிய அளவில் உயர்ந்தார். திருவள்ளுவர் சொல்கிறார் வெறும் உழைப்பு மட்டும் போதாது. புத்திசாலித்தனமான உழைப்பாக இருக்க வேண்டும் என்கிறார்.

“ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்

 நீள்வினையால் நீளும் குடி.”         (1022)

“முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை

 இன்மை புகுத்தி விடும்.”      (616)

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

 மெய்வருத்தக் கூலி தரும்.”          (619)

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

 பெருமை முயற்சி தரும்”      (611)

என்னால் செய்ய முடியுமா என்று அஞ்சி நிற்காதே. புறநானூற்றுப் புலவர் இதனை அழகாகச் சொல்வார். இதைச் செய்ய முடியுமா என்று அஞ்சிநிற்கும் கோழைகளே! உங்களுக்குச் சொல்கிறேன். யானை வேட்டைக்குச் செல்லுங்கள். யானை வேட்டை என்றால் யானையைப் போன்ற பெரிய இலட்சியத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். யானை வேட்டைக்குச் சென்றால் யானையைப் பெற்றுவிடலாம். குருவி வேட்டைக்குச் செல்லாதீர்கள். சிறு இலட்சியத்தைத் தேடாதீர்கள். குருவி கிடைக்காமல் போகலாம். ஆகவே வாழ்கின்ற காலத்தில் கடுமையான முயற்சியுடன் உழைத்தீர்களேயானால் இந்தச் சமுதாயத்தில் நீங்கள் பெரும் பெருமையைப் பெறலாம்.

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது

     வேண்டாமை வேண்ட வரும்”  (362)

“கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

     மற்றுஈண்டு வாரா நெறி”       (356)

பிறவி இல்லாத வாழ்க்கை உங்களுக்கு முக்தியினைத் தந்திருக்கும். அதில் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் சொர்க்க லோக இன்பம் தரும். அதிலும் நம்பிக்கை இல்லை யென்றால் நீ வாழ்கிற காலத்திலே பெருமையுடையதாக வாய்த்திராது.

வானளவு உயர்ந்திருக்கும் இமயமலை அளவு நீ வாழலாம். கவிப்பேரரசு வைரமுத்து சொல்வது போல சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறலாம். வாழ்கின்ற காலத்திலே வேண்டியதை எல்லாம் கடுமையான முயற்சியும் உழைப்பும் இருந்து தொடர்ந்து பணியாற்றினால் வெற்றி பெறுவீர்கள். நான் அடிக்கடி மாணவர்களிடையே சொல்லுவது வழக்கம். எல்லா மாணவர்களும் கடைப் பிடிக்க வேண்டியது இதுதான்.

வாழ்க்கையிலே மிகப்பெரிய லட்சியம் இருக்க வேண்டும் நான்கு குற்றங்களை நீக்க வேண்டும்.

“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

     கெடுநீரார் காமக் கலன்.”      (605)

ஒருவன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து விட்டால் ஒரு கப்பல் இருக்கிறது. அதில் ஏறிக்கொள்ளலாம் காலம் தாழ்த்திச் செய்தல், மறந்து போதல், செய்யக் கூடியதை மறந்து விடுதல், தூக்கம், சோம்பல், சுறுசுறுப்பு இன்மை, சோம்பலில் இரண்டு சோம்பல் உண்டு. உடல் சோம்பல், மூளைச் சோம்பல் இந்த இரண்டையும் நீ விட்டுவிடு. காலம் தாழ்த்திச் செய்தல். மறந்து போதல், தூக்கம், சோம்பல் இந்த நான்கையும் விட்டுவிடு என்று வள்ளுவர் சொல்கிறார்.

முயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் நல்ல நேர்மை யுடனும் காரியம் ஆற்றுபவனுக்கு இறைவன் திருவருள் வாய்க்குமேயானால் அவன் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவான். அந்த வகையில் தான் எனது மாமனார் உள்ளுணர்வு மிக்கவராக இருந்தார். பெண்களுக்கும் சிந்தனையாளர்க்கும் அந்த ஆற்றல் மிகுதியாக இருக்கும். நான் அவரைப் பற்றிச் சொல்லும் பொழுது விரைவு பற்றிச் சொல்வேன். நாளைதான் செய்ய முடியும் என்ற காரியத்தை, வேலையை இன்றே அல்ல, நேற்றே முடித்திருக்க வேண்டும் என்று சொல்லுவார். விரைவு, துணிவு அப்படி ஒரு மிகப் பெரிய ஆற்றல் அவருக்கு இருந்தது. அவரை அறியாமலே அத்தகு ஆற்றல் அவருக்குக் கிடைத்திருக்கிறது. தன் குடும்பத்தை உயர்த்துவதாக இருந்தாலும் சரி, குடியை உயர்த்த வேண்டுமானாலும் சரி, நாட்டை உயர்த்த வேண்டுமானாலும் சரி அந்தப் பேராற்றல் அவருக்குத் துணை நின்றது.

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

     மடிதற்றுத் தான்முந் துறும்”          (1023)

ஒருவன் தன் குடியை உயரச் செய்வேன், நாட்டை உயரச் செய்வேன் என்று தனது கையை உயர்த்தி நிற்கையிலே தெய்வம் வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டு அவனுக்கு ஏவல் செய்யக் காத்திருக்கும்; தூணாக நின்று தாங்கி நிற்கும். இவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டியவர் திருவள்ளுவர். இந்த நூற்றாண்டில் இதைவிட வழிகாட்டுதல் வேறு எது வேண்டும்? இதுபோன்ற நிறையச் செய்திகளைச் சொல்லி வைத்திருக்கிறார் வள்ளுவர்.

இந்த அடிப்படையைப் பெற்றுக் கொண்டால் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறலாம். வாழ்க்கையில் அவசியமானது எது? பொருள் முக்கியம். போதும் என்ற மனமே பொன் செய்யும் என்று வள்ளுவர் சொல்லவில்லை நீ சமுதாயத்தில் உயர வேண்டும் என்று சொன்னால் பொருளாதாரத்திலே சிறந்து இருக்க வேண்டும் என்கிறார்.

“பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருள்அல்லது இல்லை பொருள்”         (751)

பொருள் போல வலிமையுள்ளது வேறு எதுவுமில்லை. ஒன்றுமே லாயக்கில்லாதவனையும், மிகச்சிறந்த மனிதனாக்க வேண்டும் என்று சொன்னால் பொருளை சம்பாதி என்கிறார் வள்ளுவர். மேலும் பிறரது செருக்கை அழிக்க வேண்டும் என்றால் செல்வத்தை ஈட்டு என்கிறார்.

“செய்க பொருளை; செறுநர் செருக்கறுக்கும்

     எஃகுஅதனின் கூரியது இல்”         (759)

‘உன்னை உயர்த்திக் கொள்ள, உன் பகைவனுடைய செருக்கை அடக்கிட, மிகப்பெரிய செல்வத்தைச் செய்’ என்று கட்டளை இடுகிறார் வள்ளுவர்.

“பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்

     எண்ணிய தேயத்துச் சென்று”         (753)

அதுபோல ஒரு நாடு தன்னிறைவு பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நிறைய உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இருள் என்பது அறியாமை, வறுமை இந்த வறுமையைப் போக்க வேண்டும் என்றால் சென்ற நாடெல்லாம் முயன்று பொருள் ஈட்டவேண்டும்.

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதுஇன்றி வந்த பொருள்”           (754)

அருளை வளர்க்க வேண்டுமென்று சொன்னால் கூடப் பொருள் வேண்டும்.

“அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்

     செல்வச் செவிலியால் உண்டு” (757)

ஆகவே பொருள் தான் மிக முக்கியம். நியாயமான முறையில் பொருளை சம்பாதித்தாயானால் அதுதான் அன்பை வளர்க்கக் கூடிய அருளை வளர்க்கும் நீ வலிமை யுடையவனாக இருக்கலாம். பொருள்தான் உன்னை மதிக்கத்தக்கவனாக மாற்றும். ஆகவே பொருளாதார மேன்மை வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு நாட்டினுடைய பெருமை எங்கிருக்கிறது என்று சொன்னால் தன்னிறைவு பெற்றதாக இருக்கிறது என்பதில் இருக்கிறது. யாரையும் நாடி நிற்கக்கூடாது. அந்த அளவுக்கு அந்த நாடு ஆற்றல் பெற்ற நாடாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஒரு நாடு வல்லரசாக முடியும். 2020-இல் வல்லரசு ஆக வேண்டுமென்று சொன்னால் பல வகையிலும் முயன்று வளத்தைப் பெருக்கி இந்நாட்டை நாம் உருவாக்க வேண்டும் எனக் கட்டளை இடுகிறார்.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

     ஆராய்வான் செய்க வினை”          (512)

என்கிறார் வள்ளுவர். இவைகளெல்லாம் நடைமுறைச் சிந்தனைகள்.

வாழ்க்கையில் மனித நேயம் வேண்டும். அதை மிகச்சிறப்பாக வலியுறுத்துகிறார் வள்ளுவர். வாழ்கின்ற வாழ்க்கையின் பயன் எது? வாழ்க்கையின் பயனே பிறருக்கு உதவுவது தான்.

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

     தந்நோய்போல் போற்றாக் கடை?”    (315)

இதில் அதிகமான நுட்பம் இருக்கிறது. அறிவைப் பெற்றதனால் என்ன பயன்? பிறருக்கு உதவுதல் தான். உதவுவது என்றால் ‘பார்டிசிபேசன் அண்டு இன்வால்வ் மென்ட்’. பிறருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக ஏற்றுக்கொண்டு அத்துன்பத்தில் பங்கெடுத்துக்கொண்டு அத்துன்பத்தின் கொடுமையை உணர்ந்து அவர்களுக்கு நன்மை செய்வோமேயானால் அதுதான் மனித நேயம்.

Image result for thirukkural

“பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

     தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”     (322)

மனித உயிர்களன்றி இந்த உலகத்தில் உள்ள ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை எல்லாவற்றையும் காக்க வேண்டியது நமது கடமை. இது நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய அறமாகச் சொல்வது.

இராமலிங்க அடிகளார் மிகவும் அழகாகச் சொல்கிறார்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’

என்று. மிகப்பெரிய நேயம் என்று சொன்னால் அது மனித நேயம் தான். எத்துணையும் பேதமுறாது எல்லாவுயிரையும் நேசிக்கிறார் வள்ளலார்.

‘நான் தொண்டருடைய தாளைப் பணிய விரும்புகிறேன் தொண்டர் எப்படிப்பட்டவர்? அவர் சாதாரணமானவரில்லை. எல்லா உயிரையும் நேசிக்கிறவர். அவர் உள்ளத்திலே சிவபெருமான், தில்லை நடராசர் நடனம் ஆடுகிறார். அந்த அருளாளரைக் கண்டு அவர் தாளினைப் பணிய என் உள்ளம் விழைகிறது. யாரெல்லாம் சமுதாயத்தின் உயிர்களை நேகிக்கின்றாரோ அவரே என் இறைவன். அவரே என் தலைவன்’ என்று கூறுகிறார் வள்ளலார்.

மனிதராகப் பிறந்தவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஒரு பயன் இருக்க வேண்டும். பலரால் இந்த உலகம் வாழவில்லை ஒரு சிலரால்தான் இந்த உலகம் வாழ்கிறது. அந்த ஒருசிலரில் நாம் ஒருவராக இருக்க வேண்டும்.

இந்த உலகம் எதனால், யாரால் வாழ்கிறது என்றால் தனக்கென வாழாது பிறர்க்காக வாழும் ஒரு சிலரால் தான் வாழ்கிறது.

“உண்டால் அம்ம இவ்வுலகம்…

     தமக்கென முயலா நோன்தான்

     பிறர்க்கென முயலுநர் உண்மையானே”

“விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா

     மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று” (82)

அமிழ்தமே கிடைத்தது என்றாலும் அதனைப் பகிர்ந்தளிப்பார்கள். இந்த உலகமே பரிசு என்று சொன்னாலும் பழிச்செயல்களைச் செய்ய மாட்டார்கள். புகழ் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள். உழைப்பார்கள்; கடுமையாக உழைப்பார்கள். பிறர்க்காக உழைப்பார்கள். அத்தகைய ஒரு சிலர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது. அதை அழகாக,

“பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அதுஇன்றேல்

     மண்புக்கு மாய்வது மன்”      (996)

என்கிறார் வள்ளுவர்.

நல்ல பண்புடையவர்களுடன் பொருந்தி இருப்பதனால் தான் இந்த உலகம் நிலைத்திருக்கிறது. இல்லையென்றால் இந்த உலகம் என்றோ அழிந்து போயிருக்கும் என்று சொல்கிறார் வள்ளுவர்.

எனது வாழ்க்கையில் நான் பல நூல்களைப் படித்திருந்தாலும்கூட திருக்குறள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. அதனால்தான் நாம் திருக்குறளை உலகப் பொதுமறையாகக் கொண்டிருக்கிறோம்.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

     மறைமொழி காட்டி விடும்”         (28)

எனப் பேசுகிறோம். திருக்குறள் இந்தியாவின் தேசிய நூல் ஆக வேண்டும். இந்திய நாட்டின் தேசியப் பறவை மயிலாக இருக்கிறது, தேசிய விலங்கு புலியாக இருக்கிறது, தேசிய மலர் தாமரையாக இருக்கிறது, உலகமெல்லாம் போற்றக்கூடிய திருக்குறள் தேசிய நூலாக வேண்டாமா? அதற்கு நாமெல்லாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். சிந்தனையை ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டும். ஒன்றை நினைத்து நினைத்துச் சிந்தித்துச் சிந்தித்து செய்து கொண்டிருந்தால் வெற்றியாகும். வெற்றி பெறுவதற்கு எது அடிப்படை என்று சொன்னால்,

“உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றும்தான்

     உள்ளியது உள்ளப் பெறின்”          (540)

என்றும்,

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

     திண்ணியர் ஆகப் பெறின்”           (666)

என்றும் அறுதியிட்டு உரைப்பார் வள்ளுவர்.

திருப்பித் திருப்பி அதை நினைப்போம் எல்லோரும் ஒன்றாக இணைந்து நினைப்போம்.

“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

     நாடி இனிய சொலின்”        (96)

என்பது வள்ளுவர் வாக்கு.

என்னைப் பெருமைப்படுத்த எவ்வளவு பெரியவர்கள் வந்திருக்கிறீர்கள். இது எனக்குப் பெருமகிழ்ச்சி

இந்த உலகம் சிறப்பாக வாழ வேண்டும் என்று சொன்னால் ஒருமைப்பாடும், சகோதர நேயமும் இருக்க வேண்டும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்.’ இது ஒரு பெரிய தத்துவம்!

சான்றோர்கள் என்ன செய்வார்கள்? மிகப்பெரிய ஆற்றலுடையவர்களைக் கண்டு இது இயற்கைதானே என்று அவர்களைப் பற்றி வியக்கமாட்டார்கள் சரி கீழே இருப்பவர்களைக் கண்டு மோசமானவர்கள் என்று அவர்களை இகழ மாட்டார்கள்.

பெரியவர்கள் பெரியவர்களாக இருப்பது இயற்கை என்று கொண்டு, சிறியவர்கள் மீது இரக்கம் காட்டி நடந்து கொள்வார்கள். எனக்குச் சில சமயங்களில் இந்த சந்தேகம் வந்துகொண்டிருக்கும். எதற்காக அப்படிச் சொன்னார்கள் என்று மிகச்சிறப்பாகச் செய்யக் கூடியவர்களை உனக்கு இது இயற்கைதானே என்று வியக்க மாட்டார்கள். அதுபோல சிறியவர்களை இகழமாட்டார்கள். இவர்கள் இப்படித்தான் இருக்க முடியும் என்று நம்புவார்கள். இது சமநிலை. தன்னுடைய தவறுக்குத் தானே தான் காரணம். அதனைத் தீர்ப்பது உன்னைப் பொருத்தது. இந்த துன்பம் வந்ததற்குக் காரணம் வேறு ஒருவர் அல்ல. இந்தத் துன்பத்திற்குக் காரணம் நீதான். உன்னுடைய உழைப்புதான் அந்த துன்பத்தை நீக்க வேண்டும்.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா.”

வாழ்கின்ற காலத்திலே மிகச்சிறந்த நன்மைகளைச் செய்து வாழ வேண்டும்.

“அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றுஅது

     பொன்றுங்கால் பொன்றாத் துணை”         (36)

17326total visits,4visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>