‘அனைத்துலக மனிதனைப் பாடிய பாவலர்’
“தமிழன் திருக்குலத்தில் தமிழ்த்தாய் திருவயிற்றில்
தமிழ்த்திரு வள்ளுவனார் & கிளியே
தமிழாய்ப் பிறந்தாரடி!”
எனத் திருவள்ளுவருக்குப் புகழாரம் சூட்டும் ‘திருவள்ளுவர் கிளிக்கண்ணி’. இதனை வழிமொழிவது போல் இருபதாம் நூற்றாண்டுப் பெரும்புலவர் பாரதியாரும்,
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
எனத் திருவள்ளுவரைப் போற்றிப் பாடுவார்.
- திருக்குறளின் தனித்தன்மைகளில் முதலாவதாகக் குறிக்கத்தக்கது அதன் உலகப் பொதுமைப் பண்பு ஆகும். பேராசிரியர் தனிநாயக அடிகள் குறிப்பிடுவது போல், ‘தமிழோ, தமிழ்நாடோ என்ற குறிப்பேதும் இல்லாமல், எல்லா உலகிற்கும், எல்லா மக்களுக்கும் பயன்படும் முறையில் உலகெலாம் தழுவுவதற்கு உரிய பான்மையில் வள்ளுவர் தம் நூலை யாத்திருப்பது’ ஒரு சிறப்பாகும். இச் சிறப்பு கருதியே, திருவள்ளுவர் ‘அனைத்துலக மனிதனைப் பாடிய பாவலர்’ (ஜிலீமீ ஙிணீக்ஷீபீ ஷீயீ tலீமீ ஹிஸீவீஸ்மீக்ஷீsணீறீ விணீஸீ) என அறிஞர் உலகால் போற்றப்படுகின்றார்; திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ எனச் சிறப்பிக்கப் பெறுகின்றது.
- முப்பாலில் நாற்பாலின் கருத்துக்களையும் உள்ளடக்கிப் பாடி இருப்பது திருவள்ளுவரின் பிறிதொரு தனிப்பண்பு ஆகும். அறம் – பொருள் – இன்பம் என்னும் முப்பால் பற்றியே வள்ளுவர் தம் நூலில் பேசியுள்ளார்; வீடு குறித்து அவர் தனி ஒரு பாலினை வகுக்கவில்லை. காரணம்,
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (50)
என்பது அவரது முடிந்த முடிபு ஆகும். சிந்தைக்கு எட்டாத மேலுலகம் பற்றிக் கவலைப்படாமல், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதே உயரிய வாழ்க்கை நெறி என்பது திருவள்ளுவரின் திண்ணிய கருத்து ஆகும்.
- திருக்குறள் வழிபாட்டு நூல் அன்று; வழிகாட்டும் நூல் ஆகும். இன்றைய கணினி யுகத்திற்கும் வழிகாட்டும் விழுமிய நூல் ஆகும். ஆல்பர்ட் சுவைட்சர் என்னும் ஜெர்மன் தத்துவ ஞானி – இசை, தத்துவம், மருத்துவம் என்னும் மூன்று துறைகளிலே முத்திரை பதித்த பேரறிஞர் – தம்முடைய ‘இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்’ (மிஸீபீவீணீஸீ ஜிலீஷீuரீலீt ணீஸீபீ மிts ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt) என்ற நூலில் திருக்குறளைப் பற்றிக் குறிப்பிடும் கருத்து இங்கே மனங்கொளத்தக்கது.
“உலக இலக்கியத்தில் திருக்குறளைப் போன்ற ஓர் உயர்ந்த ஞானப் பொன்மொழிகளைக் கொண்ட தொகை நூலைக் காண்பது அரிது!”
மேலும், உலகையோ வாழ்வையோ எதிர்மறையாக நோக்கும் பார்வை திருவள்ளுவரிடம் காணப்படாததையும் சுவைட்சர் சுட்டிக்காட்டுவார்; உலகம், வாழ்வு, பெண், மனிதன் என எல்லாவற்றையும், எல்லோரையும் உடன் பாடாகக் காண்பதே வள்ளுவரின் சிறப்பியல்பு ஆகும்.
- ‘அருமையில் எளிய அழகே போற்றி!’ என மாணிக்க வாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பரவுவார். திருவள்ளுவரின் சிந்தனை அருமை, எளிமை, அழகு என்னும் முப்பெரும் பண்புகளையும் தன்னகத்தே கொண்டது. பதச்சோறாக, அறம் – பொருள் – இன்பம் பற்றிய வள்ளுவரின் சிந்தனைகளை இங்கே எண்ணிப் பார்க்கலாம்.
- “மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்; அனைத்துஅறன்;
ஆகுல நீர பிற” (34)
– இதனினும் இரத்தினச் சுருக்கமாக உலக இலக்கியப் புலவர்கள் எவரும் அறத்தினை விளக்கியதில்லை. இது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.
- ‘செல்வம் நிலையில்லாதது’ எனப் பாடுவதே பெரும்பான்மை வழக்கு வள்ளுவரோ ‘பொருள் செயல் வகை’ என ஓர் அதிகாரத்தினைப் படைத்து, ‘செய்க பொருளை’ என வழிகாட்டுகின்றார்.
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்” (754)
என அறிவுறுத்துகின்றார். இது அரிய – வாழ்வில் அனைவரும் பின்பற்றுவதற்கு உரிய – சிந்தனை ஆகும்.
- வள்ளுவரின் கருத்தியலில் இன்பம் என்பது வெறும் உடல் இன்பம் மட்டும் அன்று; புலன் சார்ந்தது மட்டும் அன்று. அதற்கும் மேலாக, உள்ளம் சார்ந்தது; நுண்ணியது.
“நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” (1128)
என்னும் குறட்பா நுண்ணிய காதல் உணர்வின் அழகிய வெளிப்பாடு ஆகும்.
- திருக்குறள் முன்னைப் பழமையும் பின்னைப் புதுமையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட உயரிய நூல் ஆகும். மேலாண்மை இயல் (விணீஸீணீரீமீனீமீஸீt), உளவியல் (றிsஹ்நீலீஷீறீஷீரீஹ்), எதிர்காலவியல் (திutuக்ஷீஷீறீஷீரீஹ்) முதலான இன்றைய அறிவுத் துறைகளுக்கான அடிப்படைகளைத் திருக்குறளில் கண்டறிய முடியும். ஓர் உதாரணம்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்” (517)
மேலாண்மை இயலின் அடிப்படைத் தத்துவத்தை இதனினும் மேலாக எவரும் கூற முடியாது.
“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்” (429)
– வள்ளுவரின் புதுமைச் சிந்தனைக்குக் கட்டியம் கூறி நிற்கும் குறட்பா இது
- வள்ளுவர் அற நெறிக்கு முதன்மை தருபவர்; எதற்காகவும் தூய அறநெறியை விட்டுத் தராதவர். சமரசம் செய்து கொள்ளும் போக்கு திருவள்ளுவரிடம் மருந்துக்குக் கூட இல்லை; இல்லவே இல்லை. பெற்ற தாய் பசியோடு வாடினால் அவள் பசியைத் தீர்ப்பதற்காக எதையும் செய்யலாம் எனக் கூறும் வடமொழி தரும சாத்திரம்; இதற்கு ‘ஆபத்துத் தருமம்’ எனவும் பெயர் சூட்டும். ஆயின் வள்ளுவரோ,
“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை” (656)
என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். திருவள்ளுவரிடம் தூக்கலாக காணப்படும் அரும்பெரும் தனிப்பண்பு இது!
- சங்க காலத்தில் புலால் உண்ணும் வழக்கம் பரவலாக இருந்தது; ஆணும் பெண்ணும் கள்ளுண்ணும் வழக்கம் இருந்தது; ‘வரைவின் மகளிர்’ என்ற பிரிவினர் இருந்தனர். இவற்றிற்கு எதிராகத் திருவள்ளுவர் தம் நூலில் போர்க் கொடி பிடித்துள்ளார் அவர்,
“உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார்” (922)
என அறிவுறுத்தியுள்ளார்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்” (260)
என முழங்கியுள்ளார்.
காமத்துப் பாலில் பாடிய 250 குறட்பாக்களில் ஓர் இடத்தில் கூட வள்ளுவர் பரத்தையைப் படைத்துக் காட்டவில்லை; மாறாக, ‘பரத்த(ன்)’ என்ற சொல்லால் தலைவனின் பரத்தைமை இழுக்கத்தைச் சாடி இருப்பது அவரது புரட்சி மனப்பான்மையைப் பறைசாற்றுகின்றது.
‘புலால் மறுத்தல்’ (26), ‘கள் உண்ணாமை’ (93), ‘வரைவில் மகளிர்’ (92) என்னும் அதிகாரங்கள் திருவள்ளுவரின் புரட்சி மனப்பான்மையைச் காட்டுவன வாகும்.
அப்துல் கலாம் முதல் ஆல்பர்ட் சுவைட்சர் வரை- பரிமேலழகர் முதல் பாவாணர் வரை – மு. வரதராசனார் முதல் சுஜாதா வரை – அனைவரும் ஒருமித்த குரலில் திருவள்ளுவரைப் போற்றிப் புகழ்வதற்கான அடிப்படைக் காரணங்கள் – தூய்மை – பொதுமை – புதுமை ஆகிய தனிப்பெரும் பண்புகளே ஆகும்.
10188total visits,2visits today