மெய்யுணர்தல்

உலக மக்கள் பலர் ஒருவகை மயக்கத்தோடு, என்றும் நிலைபெற்று நில்லாதவற்றை, ‘நிலை’ என்று உணர்ந்து வாழ்கின்றார்கள். செல்வம் வேண்டும், உடல் நலம் வேண்டும், இன்பம் வேண்டும். ஆனால் இவைகள் எல்லாம் மாறும் இயல்புடையவை. ஆதலின் நிலைக்காத செல்வத்தை நிலைக்கச் செய்ய செல்வத்தின் பயனை நிலைக்கச் செய்யும் வகையில் அறச்செயல்கள் செய்தல் வேண்டும். உடம்பு நிலைக்காவிட்டாலும், உடம்பால் செய்த நற்செயல் பலன் நல்கும். ஆதலின், வாழ்கின்ற காலத்திலே, இயன்ற வகை யெல்லாம் மனத்தால், சொல்லால், செயலால் அறப்பணிகள் ஆற்ற வேண்டும்.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும் வாயெல்லாம் செயல்”      (33) 

எது இன்பம்? எது மகிழ்ச்சி? எது துன்பம்? பொறிபுலன் நுகர்ச்சிகள் இன்பத்தைத் தருகின்றன. இவ்வின்பங்கள் எளிதாகக் கிடைத்துவிட்டால் அவைகள் சாதாரணமானவை களாகத் தெரிகின்றன. மீண்டும் கிடைக்காத பொருள்களில் ஏக்கம், கிடைக்காவிடின் அவைகளால் துக்கம், பொய்யான கனவுகள், நிறைவேறாத ஆசைகள், கோபம், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் துன்பத்தைத் தருகின்றன.

இத்துன்பங்களை வெல்லும் வழி என்ன? வாழ்வு, இரவும் பகலும் போல இன்ப துன்பங்கள் நிறைந்தது. வாழ்நாள் நிலையாமை என்னும் விதிக்கு உட்பட்டது. வாழ்வில் துன்பங்கள் இயற்கை ஆனவை என்ற மன உறுதியை மேற்கொண்டால், துன்பமே ஒரு சுவையாக, இன்பமாக மாறிவிடும்.

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

என்பார் வள்ளுவர். துன்பத்தையும் எதிர்நோக்கி, அதனை இன்பமாகக் கொள்பவனை, பகைவர்களும் விரும்பிப் போற்றுவார்கள் என்பார் அவர்.

இந்தப் பக்குவம் எப்போது ஏற்படும்? நிலையாமை பற்றிய அறிவு, எது மெய், எது பொய் என்று ஆராயும் அறிவு எப்போது ஏற்படும்? விதிவிலக்காக ஒரு சிலருக்கு இளமையிலே, இத்தகைய மெய்யறிவு வாய்க்கும் என்றாலும், பலருக்கு வயது முதிர முதிர மெய்யறிவு முகிழ்க்கும்; அகம் விரிவடையும்; பற்றற்ற பெருநிலையே அவர்களது ஆனந்த வாழ்வாக, அல்லல் நீக்கிய வாழ்வாக விளங்கத் தொடங்கும்.

குடும்பக் கடமை முடிந்தவுடன் அறச் செயல் செய்ய நாட்டம் பிறக்கும். பெருந்துன்பத்திற்குக் காரணமாகிய இப்பிறவியை வேரறுக்க மனம் நாடும். இறைவனை மறவாத நெஞ்சமாய் “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தான் வாழ்க!” என்ற பக்திப் பெருக்கு ஏற்படும். நெஞ்சம் கனியும், அன்பு பெருகும், அருள் சுரக்கும். இன்ப துன்பங்களைச் சமமாக மதிக்கும் ஆற்றல் பிறந்து விடும். வையத்துள் வாழ்கின்ற போதே, வாழ்வாங்கு வாழும் பேறு கிடைக்கும்.

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

     செம்பொருள் காண்பது அறிவு” (358)

என்ற தெளிவும், நிலைத்த, அழியாத, தூய இன்பப் பொருளை, செம்பொருளை அறிவால் காணும் ஆற்றலும் கிடைக்கும்.

அன்பு நலம் சான்ற பெரியவர் திரு.மகாலிங்கம் அவர்கள் மணிவிழாக் காணும் பெருமை பெற்றுள்ளார்கள். அரசுப் பணியில் படிப்படியாக உயர்ந்து உதவி ஆட்சியராகப் பணியாற்றியவர். எல்லோருக்கும் இனியராய், நல்லனவே எண்ணும் பண்பாளராய், புன்னகை பூத்தவராய், இயன்ற வரையில் அன்போடு பிறருக்கு உதவும் உயர்ந்த பண்பினராய், தமிழ்நாடு ஆயிர வைசிய சங்கத்தின் மாநாட்டு மதிப்புறு வரவேற்புத் தலைவராய் சீரிய பணியாற்றும் அன்பராய் சிறப்புப் பெற்றவர்.

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

     பண்புடை யாளர் தொடர்பு”         (783)

என்ற வள்ளுவரது இலக்கணத்திற்கு ஏற்ப வாழ்ந்து வரும் அவர், அன்னை அருள்மிகு மீனாட்சி – சுந்தரேசுவரர் அருளால் பல்லாண்டு வாழ்க! மேலும் பல நற்பணிகள் ஆற்றுக.

1947total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>