தமிழிசையும் தமிழர் இசையும்

Image result for tamilar isai

மின்னல் மறைவதைப் போல, நேற்றிருந்த மாமலை திடீரென இன்று மறைந்து போனால் எப்படி இருக்கும்? கரையுடைத்துப் பெருகியோடும் காவேரி நதி ஒரு நாள் வற்றிப்போனால் எப்படி இருக்கும்? அப்படியொரு அதிர்ச்சி நிலை நமக்குச் சென்ற மார்ச் மாதம் ஏற்பட்டது. இமயமாய் இசை உலகில் நின்றவரும் காவேரி போல் கான மழை பொழிந்தவருமான இசைமணி, டாக்டர் சீர்காழி கோவிந்தராசனாரின் அகால மரணம் தமிழிசை உலகில் ஈடுசெய்ய முடியாததொரு வெற்றிடத்தினை, வேதனையினை ஏற்படுத்திவிட்டது!

கணீர் என்ற கம்பீரமான குரல்; சாகித்தியங்களைப் பொருள் விளங்கப் பாடும் மிடுக்கு; இராக ஆலாபனைகளில் தமக்கே உரியதொரு எடுப்பு; சுர விஸ்தாரம் முதலிய நுண்ணிய துறைகளில் தனி முத்திரை – என இவற்றோடு கேட்டோரை மயங்கிக் கிறங்கவைக்கும் குழைவு… இவையெல்லாம் சீர்காழி எனும் இசை இமயத்தின் பல்வேறு சிகரங்கள்! அவர் கர்னாடக சங்கீதம் கை வந்த கலைஞர் எனினும், தமிழிசைக்கே. தலைமையிடம் தந்து அரங்கெல்லாம் முழங்கினார். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப்பாடும் இசை வல்லுநர்களில் அவர் தலைசிறந்து விளங்கினார். தமிழிசைக்குப் பேரூக்கம் நல்கிய ‘கலைப்புரவல’ராக விளங்கினார்.

“இயற்கையிலே கருத்தாங்கி, இனிமையிலே வடிவெடுத்துச்

     செயற்கை கடந்து இயலிசையில் செய்நடமாக”

வாழ்வு பெற்ற முத்தமிழில் இசைக்குச் சிறப்பிடம் தொன்றுதொட்டே உள்ளது. ‘தமிழோடு இசை பாடல் மறந்தறியாத’ இந்தச்சிறப்பு நிலை தமிழ்மொழிக்கு இருப்பது போல, தமிழர்களாகிய நம்மிடம் இசையுணர்வு நீங்கா நிலையில் இருப்பதில்லையே எனச் சீர்காழியார் அடிக்கடி குறைப்படுவார். அவர் மனக்குறையில் நியாயம் உண்டு. தமிழிசையை மதிப்பதில்லை; போற்றுவதில்லை. மேனாட்டு, வடநாட்டு இசை வடிவங்களுக்கெல்லாம் – நிகரான – மேலான – தூய இசை வடிவம் பெற்றிருந்தும், பிற இசை வடிவங்களைப் போற்றுவதே பெருமை என நினைக்கும் கலைஞர்கள் நம்மிடையே ‘புகழோடு’ உலாவுகின்றனர். அவர்கள் தாம் பங்கேற்கும் கச்சேரிகளில் தமிழ்ப் பாட்டுக்களை துக்கடாவாகக் கடைசியில் பாடி முடிப்பர். தம் இசை ஞானத்தைப் புலப்படுத்தும் களமாகத் தமிழிசையைக் கருதாமல், தமிழிசையில் என்ன இருக்கிறது எனும் அலட்சிய பாவனையில் இரண்டு பாட்டுப் பாடுவர், ரசிகர்களும் அப்படியே இருந்தனர்.

இக்கொடுமையை, மடமையை எதிர்த்து தமிழிசை இயக்கம் தோன்றியது. தமிழ் இன, மொழி உணர்வுகளுக்கு எல்லாம் முன்னோடியாகத் தமிழிசை இயக்கமே முதலில் களம் காணப் புறப்பட்டது. மதிப்பிற்குரிய பெருந்தகை, செட்டிநாட்டரசர், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களும் அறிஞர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் முதலியோரும் தமிழிசைக்கு உரிமையிடம் வேண்டிப் போராட்டம் தொடங்கினார்கள். தமிழிசை இயக்கம் ஆக்கம் பெற்றது. ஆலயங்களில் எல்லாம், ஆண்டவன் சன்னிதானங்களில் எல்லாம் அருந்தமிழோசை பரவும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

இந்த மறுமலர்ச்சியின் விடியலில், பூபாளம் இசைக்கப் போந்த அருங்கலைஞர் சீர்காழி கோவிந்தராசனார். அவர் இசை பயிலத் தொடங்கிய காலந்தொட்டே எதிர்நீச்சலிட்டு, உழைப்பால், உயரிய இலட்சியத்தால் படிப்படியாகப் பாடிப் பாடி முன்னேறினார். இசை ஞானம் என்பது பிறவிப்பயன், அதில் பேரும் புகழும் அடைவது என்பது சிலருக்கே கிட்டும் வரப்பிரசாதம். பிறவிப்பயனால் இசையுணர்வு பெற்ற கோவிந்தராசன், முறைப்படி சிட்சை பெற்றார். குருகுல முறையில் தவமிருந்து இசை ஞானத்துக்கு மெருகூட்டிக் கொண்டார். தம் சிறிய தந்தையார், சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாரின் நிழலைத் தொடர்ந்து அறிமுகமும் ஆக்கமும் பெற்றார்.

தமிழ்நாட்டில் இசை உலகம் போட்டி மிகுந்ததொரு போராட்டக் களம். பெரிய பெரிய வித்வான்களைக் கூட அமுக்கிவிடும் அமைப்புக்கள் பல உண்டு. சர்வ சாதாரணங்களை ‘ஆகா, ஓகோ’ என விமரிசனம் செய்து தலையில் தூக்கிக் கூத்தாடும் விமர்சகர்களும், பத்திரிக்கைகளும் உண்டு. இவற்றையெல்லாம் மீறி, பிரபலமானார் சீர்காழியார் என்றால் அது எவ்வளவு மகத்தானதொரு அசுர சாதனை என்பதை வரலாறே விவரிக்க முடியாது. கால் நூற்றாண்டுக்கு மேலாக, அவர் மேற்கொண்டதொரு வேள்வியே அவருக்குப் புகழை ஈட்டித் தந்தது. நாட்டின் பல்வேறு அமைப்புக்கள், தாமாக முன்வந்து அவரைப்  பாராட்டி, தாம் பெருமை பெற்றன. இமய மலையின் உன்னத சிகரம் போல அவர் உயர்ந்து கொண்டே வந்த தருணத்தில் காலனின் பார்வை பட்டுவிட்டது.

சாவு என்பது உலகியற்கை. ஆனால் யாருக்குச் சாவு? எப்போது சாவு?… என்னும் சஞ்சலங்களால் சூழப்படும் சாவு… நம் நெஞ்சத்தில் தீராத துயரை, ஆறா அவலத்தை உருவாக்கிவிடுகிறது “நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது” (குறள்:235). வித்தகர் என வள்ளுவப் பெருந்தகை கூறியது போல, சீர்காழி கோவிந்தராசனார் சாவையும் வென்ற வித்தகராக விளங்குகிறார். அவரது வித்தையின் நுட்பம் எஞ்ஞான்றும் விளங்கும். அவரது வழி நின்று, அவரது புதல்வர், திரு.சீர்காழி சிவசிதம்பரம் முன்னணிக்கு வந்துள்ளார். தகப்பனாரின் புகழொளியோடு மகனும் ஒளிசேர்ப்பது அரிதாக அமையும் இறையருள். இந்த இறையருள் பெற்றுள்ள திரு.சிவசிதம்பரம் தம் தந்தையார் தமிழிசைக்கு ஆற்றிவந்த தொண்டுகளைப் போல் தாமும் செய்து,

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

     மன்னுயிர்க்கு எல்லாம் இனிது”       (68)

எனும் குறள் நெறிக்கு இலக்கணமாக அமைவார் என நம்புவோம்.

டாக்டர் சீர்காழி கோவிந்தராசனாரைப் பற்றி நினைக்கும்  இத்தருணத்தில், தமிழர்க்கு இசையில்லையே என மனக்குறைபட்ட அவரது வருத்தத்தைக் கருதும் இவ்வேளையில், தமிழிசை இயக்கம் பற்றிய சில சிந்தனைகளையும் நினைப்பது தகும்.

தமிழிசையில் பயிற்சி முறையினையும் பரப்பும் நெறியினையும் நவீனப்படுத்த வேண்டும். தமிழிசைக்கெனச் சில நிறுவனங்களும் கல்லூரிகளும் உள்ளன. என்றாலும் இவை சடங்கு, சம்பிரதாயம் போலவே காலமெல்லாம் பணியாற்றி வருகின்றன. தமிழிசையினை மக்கள் இயக்க மாக்கும் மாபெரும் சாதனை இன்னும் கை கூடவில்லை.

மேனாடுகளில் இசைப்பயிற்சியினை, பாடத்திட்ட மாக்கித் தொடக்கப்பள்ளி முதல் பயனுறும் வகையில் கற்பிக்கின்றனர். அத்தகைய நன்முயற்சிகள் நம் நாட்டில், தமிழிசைக்கு இதுவரை ஏற்படாமை மிகவும் வருந்தத்தக்கது. அடிப்படை இசை அறிவு இளமையிலேயே ஏற்பட வகை துறை ஏற்பட்டால், அது காலப்போக்கில் வளர்ந்து, மக்கள் இயக்கமாகும் வழி தானே அமையும். அதுவரை நம் சாஸ்திரீய சங்கீதம் என்பது அறைக்குள்ளே நாலுபேர் கூடித் தலையசைக்கும் பொம்மலாட்டமாகவே கால மெல்லாம் நீடிக்கும். பொதுமக்களுக்கும், தமிழிசைக்கும் தொடர்பில்லாமலே போய்க் கொண்டிருக்கும். இத்துறையில் தாராளச் சிந்தையும், கொடையுணர்வும் கொண்ட தனிநபர்களும் நிறுவனங்களும் நற்பணியாற்ற நிறைய இடம் உள்ளது. தமிழிசையைப் பரப்புவதற்கென்றே அறக்கட்டளைகளை அமைத்து வான்புகழ் பெற வாய்ப்பு உள்ளது.

தமிழிசைத் துறையில் இதுவரை எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. புதுமைகள் செய்து பார்க்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் காதிலே பட்டுக் காற்றோடு போய்க்கொண்டே இருக்கின்றன. மேலைநாடு களிலும் சிறிது காலத்துக்கு முன்னர் வரை அப்படித்தான் நடந்தது. புதிய விஞ்ஞானக் கருவிகள் வந்த பின்னர், அங்கே பழைய, பாரம்பரிய இசை வடிவங்களையும் கோலங்களையும் பேணிவைப்பதில், வகை, தரம், துறை பிரித்துக் காட்டுவதில், காப்பதில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். பதிவு நாடா (டேப் ரிக்கார்டர்), கணிப்பொறி (கம்ப்யூட்டர்), வீடியோ முதலிய கருவிகள் வந்த பின்னர், கிடைத்துள்ள ஆவணங்கள் அங்கே சிறப்புடன் பராமரிக்கப் படுகின்றன. ‘கல்யாணி’ எனும் ராகத்தை எடுத்துக் கொண்டால் அந்த ராகம் காலப்போக்கில், இந்த இந்தக் கலைஞரின் கற்பனையால், இந்த இந்த மாற்றங்களைப் பெற்றுப் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது எனப் புதிய தலைமுறையினர்க்குச் சொல்லக்கூடிய சேமிப்புமுறை (டாக்குமெண்டேசன்) நம்மிடம் உண்டா? மேனாட்டாரிடம் ஏராளமாக உண்டு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் புதுப்புது ஆராய்ச்சிகளைச் செய்யும் உற்சாகமும் உண்டு; தாராளமாக உண்டு. நம் நாட்டில், நம் தமிழிசைக்கு அத்தகைய வழிவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர முற்பட வேண்டும்.

தமிழசைக்கென தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள மதுரைத் தமிழிசைச் சங்கத்தின் புகழார்ந்த ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசைக்கென ஒரு பதிவு நாடாப் பெட்டகம் அமைய வேண்டும். வானொலி, தொலைக்காட்சி, இசை மன்றங்கள், கல்லூரிகள் ஆகியன இணைந்து புதிய பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும். தமிழிசையை மக்கள் இயக்கமாக்க வேண்டும் என வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட சீர்காழி கோவிந்தராசனார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கண்ட கனவு அப்போது நனவாகும். பிற இசை போல, தமிழர்க்கும் இசை உண்டு எனும் நம்பிக்கை நம்மிடையே உருவாகும்.

தேமதுரத் தமிழ் இசை தமிழர் இல்லங்களில் எல்லாம் ஒலிக்க வேண்டும். திருக்குறள், சங்கப் பாடல்கள், மற்றும் தலைசிறந்த பாடல்கள் எல்லாம் எளிய சந்தங்களில் பாமரர்க்கும் பொருள்புரியும் வகையில் எளிய இனிய இசைப்பாடல்களாகப் பெருக வேண்டும். தமிழ் இசை, தமிழர் மனங்களையெல்லாம் இசையச் செய்து, இசைபட வாழச்செய்து, தமிழரை உலகெல்லாம் போற்றும் ஆற்றல் பெற வேண்டும்.

தமிழ் இசை தமிழர் இசையாக வாழ்க!

 

2393total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>