குறள் நிலா முற்றம் 13

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

அரசு அதிகாரி

“பசிப்பிணியைப் போக்க அரசு பல திட்டங்களைப் போட்டு வருகின்றது. பசிப் பிரச்சினை மற்றும் வேலை இல்லாத் திண்டாட்டம் என்பன பெருகும் மக்கள் தொகையாலும் இதர நிர்வாக முறைகளாலும் தவிர்க்க முடியாத பிரச்சினைகளாக நீடிக்கின்றன. இதைச் சமாளிக்க அரசு வரிகளைக் கூட்டினால் எதிர்ப்பு வலுக்கிறது.”

பேராசிரியர்

“இப்போதெல்லாம் குடியாட்சி செலுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசு பெரும்பாலும் வரிகளை மக்கள் ஒரு கடமையாகத் தாமாக முன்வந்து செலுத்த ஊக்கம் தருவதில்லை. கசக்கிப் பிழிய முற்படுவதால் மக்களில் பலர் வரி கட்டாது ஏமாற்றப் பார்க்கிறார்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் பொதுவுடைமைச் சமுதாயம் என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே நீடிக்கிறது. எனவே வரிகளைப் பெருக்கி, வசதிகளைப் பெருக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்படுகின்றது. அவ்வாறு வரி தண்டுவதிலும் ஒருவகை மனிதநேயப் பாங்கு இருக்க வேண்டும் என்பது வள்ளுவ நியதி.. அனைவருக்கும் தெரிந்த குறள்தான் அது.

‘வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

     கோலொடு நின்றான் இரவு.’         (552)

ஆட்சி அதிகாரத்தோடு, முறை கடந்து பொருளைக் கைக்கொள்ளுவது, பாதை நடுவே வேலோடு நின்ற கள்வன், பொருளைக் கொடு என அச்சுறுத்திப் பொருளைப் பறித்துச் செல்வதைப் போன்றது என அடித்துச் சொல்கிறார் வள்ளுவர். நல்லாட்சி பற்றிப் பேசும் போது, வெற்றிதருவது கோல் எனப் பேசிய வள்ளுவர், கொடுங்கோன்மையால் கசக்கிப் பிழிந்து வரிபெறுவது அருளற்ற ஆட்சி, அது நிலத்துக்குச் சுமை, கொள்ளையர் ஆட்சி என்றெல்லாம் சாடுகிறார்.”

பெரும்புலவர்

“நன்முறையில் வரி பெறுவதையும் தீய வழியில் வரி பறிப்பதையும் பற்றிய புறநானூற்றுப் பாடலில் வரும் யானை பற்றிய உவமையை இங்கே நினைவில் கொள்ளலாம். ஒருமா பரப்பளவுள்ள நிலமாயினும் அதில் விளையும் நெல்லை அளந்து யானைக்குத் தீனியாகப் போட்டால், அது பல நாட்களுக்கு வேளை தவறா உணவாக நீடிக்கும். அதை விடுத்து, யானையை அவிழ்த்துவிட்டு, நீயே போய் உண்டு கொள்ளலாம் என விட்டோமானால் அதன் வாயில் புகும் நெற்கதிரை விடக் காலால் மிதிபட்டு அழியும் பயிரே பல மடங்கு ஆகும். நூறு செறு நிலப்பரப்பில் விளைந்தவை எல்லாம் ஓரிரு நாளில் பாழாகிவிடும். எனவே அரசன் முறையறிந்து நெறி பிறழாது வரிகளைப் பெற வேண்டும் எனும் அந்தப் பாடலே வள்ளுவத்திலும் எதிரொலிக்கிறது.”

அரசு அதிகாரி

“அந்தப் பாட்டில் புலவர் நன்கு முற்றிக் காயும் நிலையில் உள்ள நெல்லைக் குறித்துள்ளார். ஆனால் இன்று நம் வயிறு காய்ந்தாலும் வரியைக் கட்டியாக வேண்டிய கடுமையான நிலையன்றோ நீடிக்கிறது? இதெல்லாம் நல்லாட்சிக்கு ஏற்றதா என்ன? இந்த ஆட்சி அமைப்பின் மீது மக்கள் எப்படி நம்பிக்கையோ, பற்றோ கொள்ள முடியும்?”

பேராசிரியர்

“பொதுவுடைமை அரசே ஆயினும் வரி இன்றி ஆட்சி செலுத்த முடியாது. பொதுவுடைமை என்பதும் உலகின் ஒரு சில நாடுகளில் மட்டும் பந்தலிட்டுப் படருவதால் பயன்இல்லை. உள்நாட்டுப் பொதுவுடைமை, உலகப் பொதுவுடைமையாதல் வேண்டும். ‘ஓருலகம்’ ) என வெண்டல் வில்கி எனும் அறிஞர் ஒருவர் கண்ட கனவும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் தமிழ்ச் சான்றோர் கூறியனவும், தன்னலம் தீர்ந்த, சண்டையில்லாததாய் உள்ள சமுதாயமும் உருவாகக்கூடிய பாதையை விடுத்து உலக சமுதாயம் திசை மாறியே போய்க்கொண்டிருக்கிறது. இதில் பசிப்பிணியை அறவே நீக்க ஒவ்வொருவர் கையிலும் மணிமேகலையின் அட்சயப் பாத்திரம் இருந்தாக வேண்டும்.”

ஒருவர் இடைமறிக்க ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் உங்கள் கருத்தைச் சொல்லி முடியுங்கள்.”

பேராசிரியர்

“‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ என்று அன்று மணிமேகலை செய்தாள், இன்று நம் பாரதப் பிரதமரும் பசியை அறவே நீக்கப் பல அறிக்கைகளை வெளியிடுகிறார். பசியை நீக்கப் பொய்யான பொதுவுடைமைக் கோஷத்தால் முடியாது. உண்மையான நல்லாட்சித் திட்டங்கள் வேண்டும். அரசுத் திட்டங்கள் மட்டும் பசியைப் போக்கிவிடாது. இந்தப் பாரகம் உள்ள வரை தனிமனித நேயமும் உதவிக் கரம் நீட்டியாக வேண்டும். அதுதான் நல்ல நாடு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘உறுபசியும் ஓவாப் பிணியும், செறுபகையும் சேராதியல்வதே’ (734) நல்ல நாட்டின் இலக்கணம் என்பது வள்ளுவம். அத்துடன் புலவர் ஐயா சுட்டிக்காட்டிய, ஒப்புரவு உள்ளமும் மக்களிடம் நிலை கொண்டாக வேண்டும். அதற்கான முன் முயற்சியாகத்தான் ‘செய்க பொருளை’ எனக் கட்டளையிட்டார் வள்ளுவர். அவர் ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என எச்சரித்தார்; இல்லாதார்க்கு மனமுவந்து செல்வராக இருப்போர் ஈந்து உவக்கும் இன்பம் பெறவேண்டும் எனத் தூண்டினார்.”

புலவர் செல்வகணபதி

“அப்படியெல்லாம் செல்வரும் எளிதில் ஈயும் மனத்தோடு நடப்பதில்லை. விளம்பரக் கொடையே நடக்கிறது. கட்டாய வசூலே நாடகமாகிறது. ‘ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும் கூன் கையர் அல்லாதார்க்கு’ என்றது  போல, கயவர்களுக்குப் பயந்து தருகிறார்கள். அந்தச் செல்வர்கள் ‘செல்வத்துப் பயனே ஈதல்’ எனப் பெரும்பாலும் நினைப்பதில்லை.”

இடைமறித்த ஒருவர்

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.”

புலவர்

“அப்படியே தீயவர் பெருகினால், சமூகத்தில் புரட்சிதான் வெடிக்கும். பொய்யும் புரட்டும் தான் வளரும்.”

தொழிலதிபர் லெ.நாராயணன் செட்டியார்

“புரட்சியால் விளையும் போட்டி ஆட்சியை விட, மனமாற்றத்தால் நிலவும் நல்லாட்சி முறையே நல்ல பயனை நீடித்துத் தரும். சுதந்திரம் பெற்ற நாள் முதல், நம்மோடு உரிமை பெற்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் தேசத்தில் பரவலாக நல்லாட்சி முறையே நீடித்திருக்கிறது என ஏற்பதில் தவறில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நாடு என்றால் அது எப்படி அமைந்திருக்க வேண்டும், அதனை ஆளும் நல்லாட்சியின் இலக்கணம் என்ன, அரசர்- அமைச்சர் ஆகியோரின் கடமைப் பொறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் ஓர் அரசியல் பொருளாதார மேதையாகவே நின்று பேசியுள்ளார்.”

ஒருவர்

“அவற்றுள் பொருத்தமான சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கலாமே?”

மற்றொருவர்

“பேசிப் பேசிப் புளித்துப்போன அரசியலைப் பற்றி இங்கேயும் பேசி நேரத்தை வீணாக்க வேண்டுமா? அந்தச் சாக்கடைகளை நாமும் தோண்ட வேண்டுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசான் வ.சுப.மா. அவர்கள் அப்படி நினைக்கவில்லை. பலருக்கும் வாக்குரிமையும் கடமைப் பொறுப்பும் உள்ள குடியாட்சி முறையில் நலன், தீங்கு என்பவை தராசின் இரு தட்டுக்களைப் போன்றவை. ஆனால், வள்ளுவர் வகுத்த அரசு நெறி எவ்வரசுக்கும்- எக்காலத்திற்கும் – அன்பர் குறிப்பிட்டது போன்று இன்றைய அரசியல் சாக்கடையா, சாக்காடா… என்ற அந்த நிலைக்கும் பொருந்தவே செய்யும்.”

அரசு அதிகாரி

“இன்று அரசியல் தலையிடாத துறையே இல்லை. இன்று பேசிப் பேசிப் பொழுதை வீணடிப்பதுதான் அரசியல் கலாச்சாரம். தன் கட்சியை மலையளவு ஏற்றுதல், பிற கட்சியினை முடிந்த அளவு தூற்றுதல், வசவு நடை, வம்பிழுப்பு, ஆகாக் கத்தல், அடியாள் சேர்த்தல் – இத்தகைய போலிக் குடியாட்சியைப் பற்றி – அது வள்ளுவத்தோடு பொருந்துமா என்பது பற்றி – நாம் பேசிப் பயன் என்ன? வாக்களிக்கும் சக்தி படைத்த பெரும்பான்மையும் அரசியலே புரியாத மக்களிடையே அல்லவா போய்ப் பேச வேண்டும்!”

புலவர்

“போய்ப் பேச வேண்டுமா? பெரிய பொய் பேச வேண்டுமா? (சிரிப்பலை) குடியாட்சி முறைக்கே அடித்தளமான தேர்தல் முறையே விலைபேசப்படும்போது, அரசியல் வியாபாரம் பற்றி நாம் பேரம் பேசிப் பயன் என்ன? உலகமே வியாபார மயமாகி வருகிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“உலகம் ஒன்றெனக் கருதும் காலம் எப்போதோ தோன்றிவிட்டது; என்றாலும், அது நனவாக நடைமுறைப்பட எத்தனைக் காலம் ஆகுமோ தெரியாது. ஆனால் எவரும் உலகக் குடிமக்களாகப் பிறப்பதில்லை. ஒருநாட்டு, ஒரு வீட்டு உரிமைக் குடிமகனாகவே ஒருவன் பிறக்கிறான். எனவேதான் வள்ளுவர் நாடு – வேந்து – அரசு என்றெல்லாம் பொதுநிலை அரச அறங்கள் கூறியதாகக் கருதுவோம்.

நாடு என்றால் ஒரு நிலவரையறை இருப்பது போலவே வேந்தளவு அதாவது இறையாண்மை (ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) எனும் அரசாளுமை இருக்க வேண்டும் என முதலில் விதிக்கிறது. இத்தகைய நாட்டுத் தலைவருக்கு என்ன வேண்டும்? ‘தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவர்க்கு’ என்றார் வள்ளுவர்.”

ஓரன்பர்

“இப்போதெல்லாம் தூங்குவதற்கே சட்டமன்றம் போகிறார்கள்.”

மற்றொருவர்

“குறட்டை விடாமல் தூங்கலாம் என்று ஒருமுறை சபாநாயகர்த் தீர்ப்பு வந்ததே…!”

வேறொருவர்

“நம் நிலா முற்ற அவையில் யாரும் குறட்டை விடவில்லையே!” (சிரிப்பலை),

ஒருங்கிணைப்பாளர்

“‘தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும்’ என்றெல்லாம் ஒரு நாட்டிற்குத் தேவையான வள்ளுவ இலக்கணங்களை இங்கே நாம் எண்ணுவதை விட, இன்றைய குடியாட்சி முறையில் புகுந்துவிட்ட கேடுகளை வள்ளுவர் அப்போதே வரிசைப்படுத்தியுள்ள அருமையை நினைவுகூர்ந்து, திருந்தவோ, திருத்தவோ சிந்திக்கலாம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“தேர்தலில் மிகுபெரும்பான்மை பெற்றுவிட்ட தோரணையால் – எல்லை மீறிய வலிமையால் – நல்லாட்சி புரிவதை விடுத்து அடிக்கடி மனம் போலக் கடுமையான சட்டங்களை இயற்றுவதும், தண்டனைகளை விதிப்பதும் நடைமுறையில் உள்ளனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன், அடுமுரண் தேய்க்கும் அரம்’ (567) எனும் குறளைத் தானே சொல்லுகிறீர்கள்?”

பெரும்புலவர்

“அல்லற்பட்டு ஆற்றாது அழும் நிலை மக்களுக்கு ஏற்பட்டால், அதுவே ஆட்சிச் செருக்கை அழிக்கும் படை ஆகிவிடுமாம்.”

இளைஞர் ஒருவர்

“‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என எங்கள் பாரதிக் கவிஞன் ஏகாதிபத்தியத்தையே ஏளனம் செய்து பாடி விட்டான்” (குரல்கள் : சபாஷ் தம்பி – கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் வகுத்த அரசு குடிமக்களுக்கு முதன்மை மதிப்பும் பாதுகாப்பும் தருவது; குடி தழுவிக் கோலோச்சுவது; முறை செய்து காப்பாற்ற வேண்டியது; காட்சிக்கு எளிமையாய் விளங்க வேண்டியது; உள்ளுவதெல்லாம் மக்கள் நலனே கருதி உயர்வாக உள்ளும் பொறுப்புடையது; பகை நட்பாகக் கொண்டு ஒழுக, உறுபசி, ஓவாப் பிணி என்பன சேராமல், நேராமல் பேண வேண்டியது; எதிர்காலக் குறிக்கோளுடனும் நிகழ்காலத் திட்டங்களுடனும் நன்கு செயலாற்ற வேண்டியது.”

அரசு அதிகாரி

“ஆனால் எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள் போல உள்நாட்டிலேயே போர்க்களங்கள் அமைத்து அரசை இயங்கவிடாமல் செய்வது தான் அன்றாடக் காட்சிகள்.”

பேராசிரியர்

“எதிர்க்கட்சி வலுவாக இல்லாத குடி ஆட்சிமுறை, அங்குசம் இல்லாத யானைச் சவாரி போன்றது.”

ஒரு மாணவி

“‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்’ என்பது வள்ளுவர் ஏற்ற எதிர்நிலைத் தேவை.”

ஒருங்கிணைப்பாளர்

“‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் கொல் குறும்பும் இல்லது நாடு’ (735).

‘வேந்தலைக்கும்’ என வள்ளுவர் எச்சரித்தது குடியாட்சி முறையில் கொடி கொடியாய்ப் படர்ந்து வருவது நல்லதில்லை.”

பெரும்புலவர்

“ஒரு கட்சிக்குள்ளே பல குழுக்கள், உட்பகைகள், வெளிப்போர்கள், கொல் குறும்புகள்… இந்தப் ‘பல்குழு’, ‘கொல் குறும்பு’ எனும் தொடராட்சி வள்ளுவருக்கே கைவந்த கலை.”

 

ஓரன்பர்

“புலவர் ஐயா கொல் குறும்பில் நுழைந்து விட்டார். இது நீடித்தால் குழப்பம் தான்.”

ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

5064total visits,3visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>