குறள் நிலா முற்றம் – 11

Image result for valluvar

பெரும்புலவர்

“இல்லாளுக்குப் பத்து இல்லாதவனுக்கு 20!”

ஓர் அன்பர்

“என்ன பெரும்புலவர் ஐயா ஏதோ புதிர் போடுகிறார்?”

பேராசிரியர்

“மனையற வாழ்வில் ‘இல்லாள்’ எனும் சொல் இல்லத்திற்கு உரியவளேயான மனைவியைக் குறித்திட, ‘இல்லான்’ எனும் எதிர்ச்சொல், கணவனைச் சுட்டாமல் ஏதும் இல்லாத வெறும் பயலைக் குறிப்பதாகப் புலவர் ஐயா, சொல்லாமல் சொல்லுகிறார். ஆனால் 10/20 என்ற கணக்குத்தான் புரியவில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பெரும்புலமைப் பெருந்தகை ஒரு வகையில் கணக்குப் போட்டே சொல்லியிருப்பதாகக் கருதலாம். வாழ்க்கைத் துணை நல இல்லத்தரசி பற்றி 10 குறளோடு முடித்துவிட்டு, இல்லத் தலைவன் கடைப்பிடிக்க வேண்டியவற்றை ‘பிறனில் விழையாமை’, ‘பெண் வழிச்சேரல்’ எனும் இதர தலைப்பில் 20 குறளில் சொல்ல நேர்ந்ததை 20 அம்சத் திட்டம் போலச் சொல்லியதாகக் கருதுவோமே!”

வளனரசு

“பிறனில் விழையாமை’ அதிகாரத்திற்கு முன்னுரை எழுதிய பரிமேலழக உரையாசான், ‘காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை எனும் இது ஒழுக்கமுடையாரிடமே நிகழ்வதாதலின், ஒழுக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது’ எனப் பொருத்தமான விளக்கம் தருவார்.

“பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

     அறம்பொருள் கண்டார்கண் இல்.”    (141)

“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

     நின்றாரின் பேதையார் இல்”        (142)

என்றெல்லாம் வள்ளுவர் அறவழி நிறுத்துவர்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வளனரசு வரிசைப்படுத்தியமை போல அறநெறியில் இல்வாழ்பவன், பிறன் மனை நயவாதவனே ஆவான். ‘ஆண்மை’ என்றால் ஆளுமை. அது புற வீரத்தைவிட, அக ஒழுக்கமான மனஅடக்கத்தில்தான் தலைநிமிர்ந்து விளங்கும். அது கோழைத்தனம் அல்ல.”

அரசு அதிகாரி

“ ‘பிறன்மனை நோக்காத பேராண்மை’ என்கிறாரே?”

 

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“அன்பர் சுட்டிய ‘நோக்காத’ எனும் வள்ளுவச் சொல்லாட்சி மீண்டும் மீண்டும் நினைக்கத்தக்கது. ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட ஒரு பொருள் சுட்டும் பல சொற்கள் உள்ளமை போலத் தமிழிலும் காண், பார், நோக்கு எனும் சொற்கள், பல்வேறு பொருளமைதிச் சாயல்களுடன் கையாளப்படுகின்றன.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் சுட்டிக்காட்டியது போல வள்ளுவர் நோக்காமை’ எனும் சொல்லால் மிகுந்த நுண்மாண் நுழைபுலத்தோடும் உளவியல் பாங்கோடும் எடுத்தாண்டுள்ளார்.

ஓர் அன்பர்

“ஒருவகை உள்நோக்கத்துடன் பார்ப்பதைத் தான் ‘நோக்கு’ என்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அதுதான் உகந்த பொருள். அழகாக இருக்கும் பொருளைப் பார்த்து உளமார ரசிப்பதில் தவறில்லை. அழகிய மாதொருத்தியை நோக்கி, அவள் தன் மனைவியாக இருக்கக் கூடாதா என மறுகுவதுதான் தவறான உள் நோக்கு.”

அரசு அதிகாரி

“அப்ப ரசிக்கலாம். நோக்கக்கூடாது என்கிறீர்கள்.”

கருணைதாசன்

“ரசனைக்கும் ஒரு வரையறை உண்டே?”

பெரும்புலவர்

“வரம்பு மீறி ரசித்து, விழைந்தமையால் வந்த வினையைப் பல கதைகள் நமக்குப் பாடமாகச் சொல்லி உள்ளனவே… அடுத்தவன் மனைவியின் அழகில் மயங்கி, அறம் தவறி, மதிகெட்டு, மானம் மட்டும்  இன்றி, தன் வாழ்க்கையையே வீணடித்துக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகள் நம் நாட்டில் பல உண்டு.”

மற்றொரு புலவர்

“வானுலக வேந்தனான இந்திரன், அகலிகையின் அழகில் மயங்கி, அவளை நுகர மானுட வேடம் போட்டு நடத்திய நாடகத்தில் முனிவரிடம் பெற்ற சாபம் ஒரு பெரிய புராணம்!”

புலவர் செல்வ கணபதி

“அதைச் சேக்கிழாரின் புனிதமான பெரிய புராணத்தோடு ஒப்பிட்டு விடாதீர்கள்.” (சிரிப்பலை அவையில்)

அரசு அதிகாரி

“இந்தக் காலத்தில் எல்லாம் ஏதேனும் ஒரு சின்னவீடு இருந்தால்தான் ஒரு பெரிய மனிதருக்குப் பெருமை என்றாகிவிட்டது.” (மீண்டும் சிரிப்பலை)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இராமாயணக் காப்பியத்தின் மூலக்கருவே இராவண வதம் என்றால் அவனது அழிவுக்குக் காரணம்? ‘முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், எவராலும் வெல்லப்படாய் எனப் பெற்ற வரமும், உலகெல்லாம் கடந்த புயவலியும்’ என்பன எல்லாம் கற்பெனும் கனலியான சீதையை, வஞ்சகமாய் அபகரித்த காரணத்தால் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினான் என்ற அவலத்தை நினைத்து சின்ன வீட்டு ஆசைகளை அகற்றிவிட வேண்டுகிறேன்.” (சிரிப்பு)

வருமான வரித் துறை ஆணையர்

“இல்லறக் கடமைகளில் ஆணை விடக் கூடுதலாகப் பொறுப்பேற்கும் பங்காளி என்பதால் தான் ஆங்கில மரபில் ‘ஙிமீttமீக்ஷீ பிணீறீயீ’ என்பர். காந்தியடிகள் ‘கீஷீனீணீஸீ வீs லிவீயீமீ’s றிணீக்ஷீtஸீமீக்ஷீ’ எனச் சரிநிகர் சமானம் தந்தார்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராண்மை என்ற சொல்லை மீண்டும் நினைத்தால் வள்ளுவர் மனத்திட்பத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் என்பது விளங்கும்”

அவையில் ஒருவர்

“செம்மல் சொல்வது போல எவ்வளவுதான் மனத்திட்பத்தோடு வீட்டை விட்டு வெளிக்கிளம் பினாலும் சினிமாக் கவர்ச்சிகளும் விளம்பரக் காட்சிகளும் ஆண்கள் மனத்தை மட்டும் அல்ல, பெண்கள் உடல் நளினத்தையும் அளவுக்கு மீறிக் கொச்சைப் படுத்தும் ஒரு புதிய அநாகரிகம் ஓங்கி வருவது எல்லோரையும் அன்றைய இந்திரன் போல அகலிகைகளைத் தேடச் செய்துவிடும் போல உள்ளது.”

அன்பர் ஒருவர்

“கண்களை மூடிக்கொண்டு நடக்கப் பழகுங்கள், சரியாகிவிடும்” (அவையில் சிரிப்பு)

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“நீங்கள் என்னதான் சமாதானம் கூறினாலும் வள்ளுவர் பெண்களை ஆண்களுக்கு அடிமை களாகக் கருதியே பல குறட்பாக்களைச் செய்துள்ளதாக நான் குற்றம் சாட்டுகிறேன்.

சான்றாக,

‘தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதுஎழுவாள்

     பெய்யெனப் பெய்யும் மழை’        (55)

எனும் குறளில் பெண் தன் கணவனையே தெய்வமாகத் தொழவேண்டும் எனும் நிபந்தனை யையும், அத்தகையவள் ‘பெய்’ எனச் சொன்னால் மழை பொழிய வேண்டும் என்ற கட்டாயமும் ஒருவகை ஆணாதிக்கத்தையே காட்டுகின்றன. இப்போதெல்லாம் பெண்கள் கணவனைத் தொழாமல், பெய் எனவும் சொல்லாமல் இடை விடாமல் பேய்மழை பொழிந்து ஊரெல்லாம் வெள்ளக்காடாகி விட்டதே? அப்படியானால் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தத்தம் கணவன்மார்களுக்கு ஒரே சமயத்தில் செய்த வழிபாட்டு ஆராதனையின் விளைவா இந்த வெள்ளப் பெருக்கு?”

மற்றொரு தமிழாசிரியை

“செல்வி சித்ரா குறிப்பிட்டதை விட, சமுதாயத்தில் கண்டதும் காதல், பெண்மைச் சீண்டல் (ணிஸ்மீ ஜிமீணீsவீஸீரீ)..” ஆகியன தினசரி நடப்பு களாக உள்ளனவே…

இடைமறித்த ஒருவர்

“ஆண்களும் சீண்டப்படுகிறார்களே?” (சிரிப்பலை)

மற்றொருவர்

“சீண்டலாலும் தீண்டலாலும் ஆண்மகன் எப்படியோ தப்பித்து விடுகிறானே! பெண்கள் தானே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்? சீண்டல்- தீண்டலின் விளைவை காலம், பருவம் எல்லாம் காட்டிக் கொடுத்து விடுகின்றனவே…?”

புலவர்

“குறள் நம் கையில் உள்ள முகக் கண்ணாடி போன்றது. அவரவர் முகம் அதில் தெரிவது போல, ஒழுக்கத்தைப் பொறுத்தவரை அவரவரே வரம்பு கட்டி வாழ வேண்டும்.”

வளனரசு

“சற்றுமுன் குறிப்பிடப்பட்ட பெண் பெய் எனப் பெய்யும் மழை பற்றி ஒரு கருத்து…”

அன்பர் ஒருவர்

“வெளியே மழை ஓய்ந்தாலும் அரங்கினுள்ளே தூவானம் விடாது போலிருக்கிறதே!”

வளனரசு

“சிறுதெய்வ வழிபாட்டை விடத் தன் கணவனையே உளமார நேசித்து வணங்கி வாழ்பவள், உரிய நேரத்தே பெய்ய வேண்டும் எனப் பிறர் எல்லாம் வேண்டும் பருவ மழையைப் போன்றவள் என நேரடியாகவே பொருள் கொள்ளலாம். இதில் ஒரு கடவுள் தன்மையையும் பகுத்தறிவுக்குப் பொருந்தாமையையும் தம் உரைமேல் ஏற்றி, பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பெருமக்கள் அன்றைய காலப் போக்கிற் கேற்பச் செய்து வைத்த தவறு. அந்த உரைகளில் கூட வேறுபாடுகள் உண்டு என்பதே உண்மை.”

பேராசிரியர்

“இக்குறட்பா இளங்கோவடிகளையும் மணிமேகலை ஆசிரியரையும் மனம் கவர்ந்தது என்பார் பேரறிஞர் கா.அப்பாத்துரையார், இருவருமே தமது காப்பியங்களின் நாயகியரின் கற்புத்திறம் விளக்க இக்குறளை எடுத்தாண்டு உள்ளதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“கற்பரசி, தெய்வத்தையோ கணவனையோ தொழுதெழுவாள்; மழை பெய்யும் என்பதை விட கற்புடைப் பெண்ணைத் தெய்வமும் தொழுதேத்தும் எனும் உணர்வோடு பொய்யில் புலவன் பொருளுரை தேர்ந்து இந்த விவாதப் பகுதியை இத்துடன் முடிப்போமே.”

கல்லூரி மாணவி

“முற்றத்து அவையோர் முன்னர் மகளிர் சார்பாக மற்றும் ஓர் ஐயத்தைக் கேட்டு, இனி அடுத்து வரும் நாட்டாட்சி பற்றிய பகுதிக்குச் செல்லத் தடைக்கல்லாக நிற்கிறேன். மன்னிக்கவும்.”

முதியவர் ஒருவர்

“ஏம்மா தயக்கம்? வீட்டுக்கு அப்புறம் தான் நாடு, அதிலும் மகளிர்க்கு ஐயப்பாடு வந்தால் வீடும் சரிப்படாது; நாடும் உருப்படாது. கேளுங்கள், கேளுங்கள்.”

மாணவி

“வள்ளுவரின் காமத்துப்பால் உலகு முழுவதும் உள்ள ஆண் – பெண் உறவு முறைக்குப் பொருந்துமா? இந்த உறவு முறைகளில் இப்போதெல்லாம் பல வகையான அனுசரித்துப் போதல். அதாவது…”

பேராசிரியர்

ஆங்கிலத்தில் சொல்லப் படும் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் இசைவில்லாத, அவிழ்த்து விடப்பட்ட ஒரு சுதந்திரமான, மனம் போன போக்கு – ஒரு கலாச்சாரமாக அல்லது அனாச்சாரமாக வளர்ந்து வருவதைத்தானே சொல்கிறீர்கள்?”

வளனரசு

“ஆண் – பெண் உறவு முறை என்பது அடிப்படை நோக்கில் உலகு முழுவதும் ஒன்றுதான். அணுகும் முறைகளில்தான் அந்தந்தப் பண்பாட்டுக்கு உகந்த மாறு பாடுகள் உண்டு. அதனை அந்தந்தச் சமூகம் ஏற்றுக் கொண்டால் சரிதான். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, சங்க இலக்கிய அகத்திணை தொட்டு வள்ளுவம் வரை கருதும்போது – ‘களவில் தொடங்கி கற்பில் முடிவதே’ இந்தப் புனித உறவு என்று சொல்லி விடலாம். எங்கள் பேராசான் வ.சுப.மா.அவர்கள் முனைவர் பட்ட ஆய்வேடாக நூலில் கிரேக்க ஆங்கில மேதைகளின் கருத்துக்களையும் குறிப்பாக ஹாவ்லக் எல்லிஸ்எ ன்பாரின் இரு தொகுதிப் பேரேட்டிலும் இக்கருத்தே நிலவுகிறது. காதலில் தொடங்கிக் கற்பில் நிலை கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போலவே கொழுநனிடம் ‘நண்ணேன் பரத்த நின்மார்பு’ எனும் உறுதிப்பாடு நன்றாகத் தொனிக்கிறது; இன்பத்துப் பால் வாழ்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“இன்பத்துப்பாலில்தான் வள்ளுவர் மிக நுட்பமான செய்திகளைச் சொல்லுகிறார்.”

ஒருவர்

“அதை விரிவாகவே சொல்லுங்கள்!” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“அறத்துப்பாலில் சொல்லாது விடப் பட்ட பல அறிவியல் செய்திகள்… குறிப்பாக ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்…’ என்ற அரிய தொடர்  அன்றே கருதிய ஒப்பரிய செய்தி வருகிறது.”

பேராசிரியர்

“மனம் பயன்படும் இடம் சமூக வாழ்வோடு இணைந்திருந்தாலும் அது பண்படும் இடம் குடும்ப வாழ்வின் இன்ப நிலையமே என்பார் பேரறிஞர் மு.வ. அது மட்டும் அல்ல. அறிவும் உணர்வும், வன்மையும் மென்மையும், அழகும் இளமையும், கவர்ச்சியும் முயற்சியும் என்றெல்லாம் இணந்துள்ள குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, தொண்டும் தியாகமும் மேவிட வாழ்வதே சீரிய வாழ்வு எனவும் வலியுறுத்துவார்.”

பெரும்புலவர்

“அதுமட்டும் அல்ல ஐயா!… வள்ளுவர் காமத்துப் பாலில் ஒருதலைக் காமத்தையோ, ஒவ்வாக் காதலையோ கூறவில்லை. ‘அன்பின் ஐந்திணை’ எனப் பெரியோர் வகுத்த ஒத்த அன்புடைய, ஒன்றிய அன்றில் பறவை போன்ற உரிமை வாழ்வையே பேசுகிறார்; நன்கு குறிப்பிட்டுப் பேசுகிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

1883total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>