வ.உ.சி.

“உடல் மண்ணுக்கும் உயிர் நாட்டுக்கும்”

வ.உ.சி.

Image result for va vu chidambaram pillai

“தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

 மன்னுயிர் எல்லாம் தொழும்”       (குறள் 267)

எனும் வள்ளுவ நெறிக்கு ஏற்ப, ‘என்பும் உரியர் பிறர்க்கு’ என்ற அன்பு நெறிக்கு ஏற்ப உடலை மண்ணுக்கும் உயிரை நாட்டுக்கும் நல்கிய பேராண்மைச் சான்றோர்கள் நம்மால் எஞ்ஞான்றும் போற்றப்படுகின்றனர். பிறந்தவர் இறத்தல் பேருலகின் இயற்கை என்றாலும், தியாகத்தால், தொண்டால் புகழ் பெற்று வாழ்வோர் புகழ் உடம்பும் பூத உடம்பும் ஆகிய ஈருடம்பும் பெற்று வாழ்பவர் ஆவர். சாதாரண மக்கள் போல் அல்லாமல் இச்சான்றோர் பூத உடம்பு அழிந்தாலும், புகழ் உடம்பால் நிலைபெற்றுப் புகழோடும், பெருமையோடும் என்றும் நிலைபெற்று வாழ்வர். அத்தகைய தியாகச் செம்மல்களுள் தலைசிறந்து நிற்பவர், நம் தமிழகம் தந்த ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார்.

“மேலோர்கள் வெஞ்சிறையில்

           வீழ்ந்து கிடப்பதுவும்

     நூலோர்கள் செக்கடியில்

           நோவதுவும் காண்கிலையோ?”

என இவரது தியாக வாழ்வுபற்றி மகாகவி பாரதி மனம் கசிந்து பாடினார்; ஆங்கில அரசால் வ.உ.சி. சிறைப் படுத்தப்பட்ட கொடுமையையும் செக்கிழுத்துச் சோர்ந்த போதும் தணியாத, அயராத அவரது சுதந்திர வேட்கையையும் பாடிப் பரவினார்.

“இதம்தரு மனையின் நீங்கி

           இடர்மிகு சிறைப்பட் டாலும்

     பதம்திரு இரண்டும் மாறிப்

           பழிமிகுந் திழிவுற் றாலும்

     விதந்திரு கோடி யின்னல்

           விளைந்தென்னை அழித்திட் டாலும்

     சுதந்திர தேவி நின்னைத்

           தொழுதிடல் மறக்கி லேனே…”

எனப் பாடிய பாரதியார் நெஞ்சம், வ.உ.சி.யின் வரலாற்றையே நமக்கு நினைவூட்டுகிறது.

இந்திய விடுதலைப் போர்ச் சகாப்தத்தில் – கட்டபொம்மன் காலம் தொடங்கி, காந்தியடிகள் காலம் வரை பல்லாயிரவர் பங்கேற்றனர். இந்த உரிமைப் போரிலே தமிழினத்தார் செய்த புரட்சிகளும், ஆற்றிய தியாகங்களும் வரலாற்றுச் சிறப்புடையவை. வ.உ.சி.யின் தியாகங்கள் மணிமுடியாக இலங்குபவை.

நமது உரிமைப் போரில் ‘திலகர் சகாப்தம்’ என்பது ஒரு திருப்பு முனை. காங்கிரஸ் மகாசபை ஆரம்பிக்கப்பட்ட நாள் தொட்டு, மாட்சிமை தங்கிய மன்னர் பிரானுக்கு மனுப்போடும் சம்பிரதாயத்தையே அது பின்பற்றி வந்தது. “சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்” என வீரமுழக்கம் செய்த திலகர், கொந்தளித்துக் கொண்டிருந்த தேசிய உணர்ச்சி வெள்ளத்திற்கு வடிகால் அமைத்தார். இத்திலகர் சகாப்தத்திலே, தமிழகத்தின் தலைவராக, தென்னாட்டுத் திலகராகக் கப்பலோட்டிய தமிழர் விளங்கினார்.

அவருக்கும் திலகருக்கும் இருந்த தொடர்பை,

“திலக மகரிஷியின் கதை பாடும் போது

     சிதம்பரம் பிள்ளை வந்து சுதி போடும்”

என நாமக்கல் கவிஞர் வருணித்தார். சிதம்பரனார், தமிழ்ப்பற்று மிக்க குடும்பத்திலே பிறந்தார். தம் தந்தை யாரையும், தமையனாரையும் போல, இவரும் உயர்தரக் கல்வி கற்று, சட்டம் பயின்று, வழக்கறிஞர் ஆனார். ஆங்கில மொழியில் ஆக்கம் பெற்றது போல, அருந்தமிழ் மொழியிலும் பெரும்புலமை பெற்றார். நாட்டிலே வீறிட்டெழுந்த சுதந்திர இயக்கம் சிதம்பரனாரின் உள்ளத்தையும் ஈர்த்தது. அவரும் அதில் தீவிரப் பங்கு கொள்ளத் தொடங்கினார்.

“கப்பலேறுவாயோ  அடிமை

     கடலைத் தாண்டுவாயோ?”

எனக் கேட்ட ஆங்கிலேயனுக்கு,

“சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே

     துஞ்சிடோம்  இனி அஞ்சிடோம்”

எனத் தேச பக்தன் மறுமொழி பகர்ந்ததாகப் பாரதி பாடினார். அந்தத் தேச பக்தன் வ.உ.சி. தான்! வெள்ளையர் களுடைய கொள்ளை லாபத்திற்கு உதவுவது கப்பல் வாணிபம் என்பதை உணர்ந்து அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தத் திட்டமிட்டார். இந்தியரின் மூலதன இரத்தத்தால் உருவாக்கப்பட்ட ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’யில் இந்தியர்களே புறக்கணிக்கப்பட்ட போக்கிற்கு எதிராகச் ‘சுதேசிக் கப்பல் கம்பெனி’யை முழுவதும் இந்திய மூலதனத்துடன் 1906-இல் நிறுவினார். இப்போட்டிக் கப்பல் நிறுவனத்தைக் குலைக்க, ஆங்கில அரசு கப்பல் கட்டணத்தைக் குறைத்து மேற்கொண்ட சூழ்ச்சிகள் பலிக்கவில்லை. எனவே சிதம்பரனாரை ஒடுக்க வேறு கடுமையான, கொடுமையான முறைகளை மேற்கொண்டது.

வீர ஆவேசக் கனலாக வ.உ.சி. மேடைகளில் முழங்கினார்.

“சுதந்திரம் நமது குறிக்கோள்,

     வீறு கொண்டு பாரதம் பூரண

     விடுதலை எய்தும் வரை ஓயமாட்டோம்!

     உறுதியில் தளர மாட்டோம்.

     விடுதலை பெறாது உயிர் வாழமாட்டோம்.”

எனச் சூளுரைத்தார். “அடிமைத் தனத்தை விடவா சாவு அஞ்சுதற்கு உரியது? மரணத்தைக் கண்டு அஞ்சுபவன்தான் கோழை! ஆன்மா அழிவற்றது! நாட்டு விடுதலைக்காக, நாட்டு நன்மைக்காக எவனொருவன் உயிர் துறக்கின்றானோ அவனே துறக்க உலகமாகிய இன்ப உலகிற்குச் செல்கின்றான்” என முழங்கினார். இவ்வாறு புரட்சி இயக்கத்தை வளர்த்ததுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கு உதவி செய்தார் எனப் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டுச் சிதம்பரனார் கொடுமை மிக்க ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டார்.

30-ஆம் வயதிலே அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. இருபது, இருபது வருடமாக மொத்தம் 40 ஆண்டுத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்த அப்பீலில் இது 6 வருடக் கடுங்காவல் தண்டனை யாகக் குறைக்கப்பட்டது. கோயமுத்தூர், கண்ணனூர்ச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுச் சொல்லொணாக் கொடுமைகட்கு உள்ளானார். ‘வந்தே மாதரம்’ எனச் சொல்லிக் கொண்டே கல்லுடைத்தார், செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார்.

“‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்

           மன்னனென மீண்டான்’ என்றே

     கேளாத கதை விரைவில் கேட்பாய் நீயே

           வருந்தலை என் கேண்மைக் கோவே..”

எனப் பாடிய பாரதியார், சிதம்பரனார் சிறைப்பட்டதால் நாடெங்கும் பரவிய அவல உணர்வைத் தம் கவிதையில் வடித்துக் கண்ணீர் சிந்தினார்.

சிதம்பரனார் சிறையில் தவம் இருந்தார்; சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக, அறிவுக் கோட்டமாக மாற்றினார்.

கண்ணனூர்ச் சிறையில், கொடிய குற்றவாளிகளுடன் அவரும் அடைக்கப்பட்டிருந்தாலும், உடனிருந்தவர்களை உளமார நேசித்தார்; அவர்களுக்கு அறநெறி காட்டுவதற்கென, எளிய நடையில் ‘மெய்யறிவு’ எனும் நூலை 100 வெண்பாக்களில் இயற்றினார். ‘மெய்யறம்’ எனும் மற்றொரு நூலையும் கண்ணனூர்ச் சிறையில் பாடினார். சமுதாயத்தை ஒழுக்கப் பாதையில் இட்டுச் செல்லும் தமது கடமையை மறவாது சிறையிலும் ஞான வேள்வி செய்தார் வ.உ.சி. ‘சுயசரிதை’ எனும் நூல் – அவரது சொந்தச் சரிதை மட்டுமன்று, தமிழகச் சுதந்திரப் போரின் திலகர் சகாப்த வரலாற்றில் ஓர் அங்கமாக விளங்கும் அரசியல் பொன்னேடும் ஆகும். ‘தனிப்பாடல் திரட்டு’, தமது முதல் மனைவிக்கு அஞ்சலியாக யாத்த ‘வள்ளியம்மை சரித்திரம்’ ஆகியன வ.உ.சி.யின் சிறை வாழ்வு தந்த தமிழ்க் கொடைகள்.

தண்டனைக் காலம் முடிந்து 1919-இல் சிதம்பரனார் விடுதலையானார். நெல்லை மாவட்டத்திற்குள் நுழையக் கூடாதென ஆங்கில அரசு தடை விதித்தது. இராஜத் துரோகக் குற்றம் சாட்டி, வக்கீல் சின்னத்தையும் பறித்துக் கொண்டது. நீதிமன்றத்திலே தொழில் புரிய முடியாது போயினும், சுதேசிக் கப்பல் கம்பெனி செயல்பட இயலாது போயினும் சிதம்பரனார் சிந்தை தளரவில்லை. அவர் தீவிர அரசியலை விட்டு ஒதுங்க நேரிட்டபோதும், தமிழ்ப் பணியை உயிர்ப்பணியாகக் கொண்டார்.

தமிழ்ப்புலவர்களும், அறிஞர்களும் தேசியப் போர்ப்பாசறைக்கு வர வழி காட்டியவர் வ.உ.சி. அவரைத் தொடர்ந்து பின்னாளில் திரு.வி.க. முதலான தமிழறிஞர்கள் போர்ப்பரணி அமைத்தனர்; தாய்மொழிப் பற்றோடு தாய்நாட்டுப் பற்றையும் பேணி வளர்க்கும் பேரணி கண்டனர்.

சிதம்பரனார் மரபு வழியாலும் மாண்பார் முயற்சியாலும் தமிழ் மொழியில் பெரும்புலமை பெற்றார்; சோழவந்தான் அரசஞ்சண்முகனார் போன்ற புலவரைச் சார்ந்து தொல்காப்பியத்தைக் கசடறக் கற்றார்; மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்து, பல நூல்களைக் கற்றுச் ‘சங்கப் புலவர்’ எனும் சிறப்பையும் அடைந்தார். சிறையில் அடைபட்டபோதும் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்து கற்றார் என்பதைச் ‘சுயசரிதை’யில்…

“வள்ளுவர் மறையும் மாண்புயர் நல்லாப்

 பிள்ளை பாரதமும் பெரும்பொருள் நிரம்பிய

 பகவத் கீதையும் படித்தேம்…”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறள் எனும் நமது தேசிய நூல் தோன்றிய காலந்தொட்டே, அதற்குக் காலந்தோறும் அறிஞர் பெருமக்கள் உரைவளம் சேர்த்துள்ளனர். உணர உணரப் புத்துரம் நல்கும் இவ்வாழ்க்கை நூலுக்கு இந்நூற்றாண்டில் உரைமாலை சூட்டிய அறிஞர் வரிசையில் வ.உ.சி. முதலிடம் பெறுகிறார். திருக்குறளுக்கு விருத்தியுரை எழுதி, திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயில் மண்டபத்தில் புலவர் அவையில் அதனை அரங்கேற்றினார். திருக்குறளின் முப்பாலுக்கும் அவர் உரை வரைந்தாலும், 1935-இல் வெளியிடப்பட்ட அறத்துப் பால் உரை மட்டுமே நமக்குக் கிட்டியது.

சிவஞான போதத்தை ஆழ்ந்து படித்து அதற்கும் புதியதொரு உரை எழுதி அரங்கேற்றினார். தம் மதப் புகழ் கூறிப் பிறர் மதம் சாடும் பழைய மரபை விடுத்து, வேற்றுமையே பேசும் விகற்ப நிலை விடுத்து சமய ஒற்றுமையும், பொதுமையும் நாடும் புதுநெறிக்கு வித்திட்டார். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான ‘இன்னிலை’க்கு உரை எழுதியதோடு, தொல்காப்பிய இளம்பூரணர் உரைக்கும் புதுப்பதிப்புச் செய்வித்தார். இத்தமிழ்த் தொண்டுகளால் அவர் செந்தமிழ் வளர்த்த சிதம்பரனாராகத் திகழ்ந்தார்.

சிதம்பரனார் நெடிது காலம் வாழ்ந்து சுதந்திர உதயம் காணாதே மறைந்துவிட்டார். பாரதியார், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்ற புரட்சி வீரர்களைப் போல, அவர் சுதந்திரப் போர்க் கனலிலேயே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அத்தியாகச் செம்மல்களை நன்றியுடன் நினைவோம். சிதம்பரனார் வாழ்ந்த காலம் சிறிதளவே எனினும் வாழ்ந்த காலமெல்லாம்  பிறர்க்கெனப் பயன் தந்து வாழ்ந்தார். தன்னை எரித்துக்கொண்டு, முழுவதும் மணக்கும் கற்பூரம் போல, முழுமையும் எரிந்து ஒளி நல்கும் மெழுகுவர்த்தி போல, நினைப்பாலும் செயலாலும் தம் தியாகத்தால் இம்மண்ணின் புகழ் மணக்கச் செய்தார்; நாட்டை ஒளிரச் செய்தார். அன்னிய அரசு அவரைச் சிறையில் போட்டு ஒடுக்க முயன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் மக்களின் மனக் கோயிலில் சான்றோராக மதித்துப் போற்றப்பட்டார். அன்னை நாட்டின் அடிமை விலங்கை ஓடித்தெறியத் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உவந்தளித்த தியாக சீலராகக் வணங்கப் பெற்றார்.

இன்னுயிரை நாட்டுக்கு நல்கி, தியாகத்தால் சுதந்திரம் பெற்றுத் தந்தமைக்காக காந்தி மகான், வ.உ.சி. போன்ற சான்றோரை நாம் மதிப்பது உண்மை என்றால், அச் சான்றோர் நம் வாழ்வுக்குக் காட்டிய நன்னெறியின் வழி தொடர்வதே அப்பெருமக்களுக்கு நாம் செய்யும் அன்றாட வழிபாடாக அமையும். ‘உடலை மண்ணுக்கும் உயிரை நாட்டுக்கும் நல்கிய வ.உ.சி.யைப் போன்ற சான்றோர் இச்சுதந்திர மண்ணில் மறுபடியும் பிறக்க மாட்டார்களா?’ என்னும் ஏக்கம் நம்மிடையே பரவலாகத் தெரிகிறது.

தன்னலம் பேணி இழிதொழில் புரிதலும்,

தாய்த்திரு நாடெனில் தன்னுழைப்பைச் சுருக்கலும்

நம் உரிமை வாழ்வை மங்கச் செய்வது புலப்படுகிறது. ‘நாடு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது?’ எனக் கவலைப்படுவதும், ‘நலமெல்லாம், வளமெல்லாம், தீயோர் திசை நோக்கியே செல்கிறது’ எனக் குமைவதும் எங்கும் ஒலிக்கின்றது. நாம் என்ன செய்யப் போகிறோம்? நெட்டை மரங்கள் போல நின்று புலம்பப் போகிறோமா? கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றப் போகிறோமா? நம்மை நாமே ஆண்டு கொள்ளும் இந்த உரிமைச் சூழலிலே நாம் நடை தடுமாறுகிறோம். நாடு முழுவதும் அடிமைப்பட்டுக் கிடந்த துயரச் சூழலில் மக்கள் எவ்வாறு சுதந்திரப் பயிர் வளர்த்தார்கள் என்று மறுபடியும் சிந்திப்பது நம் தடுமாற்றத்தைச் சீராக்கும்; தலை நிமிர்ந்து நடக்க வைக்கும். சிதம்பரனார் ஆங்கில அரசின் அடக்கு முறைகளுக்கு எல்லாம் அஞ்சாது வாழ்ந்தார். அடிமை நாட்டில், உரிமை உணர்வு பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு இறந்தார்.

“புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்து கோள் தக்கதுடைத்து” (780) எனும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப அவரது இறப்பு இன்றும் நம் கண்களைப் பனிக்க வைக்கிறது; உள்ளத்தை உருக்குகின்றது; நெஞ்சை நெகிழ வைக்கிறது.

நாட்டுக்காகச் சாவது ஒரு தேவை;

நாட்டுக்காக வாழ்வது மற்றும் ஒரு சேவை.

வ.உ.சி.யின் வீர வாழ்வை, தியாக வாழ்வைக் கருதும் நாம் அவரது நாட்டுப் பற்று, மொழிப் பற்று, தன்னலமற்ற தியாகம், அயரா உழைப்பு, காரிய உறுதி ஆகியவற்றையும் கருதிச் செயலாற்ற வேண்டும். நம் மனம் உள்ளேயும் புறத்திலும் நேர்மையின்மை, அச்சம், தன்னலம், பொறாமை, சூது, வஞ்சகம் போன்ற தளைகளால் பிணிக்கப் பட்டுள்ளது. மனத்தைப் பிணித்துள்ள இத்தளைகளை நீக்கினால் தான் நம் நாட்டிற்கு உண்மையான விடுதலை கிடைக்கும். மனம், மனச்சாட்சியைச் சுற்றியுள்ள தளைகளிலிருந்து கட்டுக்களிலிருந்து விடுதலை பெற வேண்டும். அப்போது தான் நாம் உண்மையாகச் சுதந்திரம் அடைந்தவர்கள் ஆவோம். நாமும் வாழ்ந்து நம் நாட்டையும் வாழ்விக்கும் நற்பணியில் ஒன்றுபட வேண்டும். சிறுசிறு பூசல்களையும் பிணக்குகளையும் வளர்த்து பெற்ற சுதந்திரத்தைச் சின்னாபின்னமாக்கும் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும். உடலை மண்ணுக்கும், உயிரை நாட்டுக்கும் நல்கச் செக்கிழுத்த செம்மலுக்கு, செந்தமிழ் வளர்த்த சீலர்க்கு, கப்பலோட்டிய தமிழர்க்கு, நாட்டுக்கு உயிராகிய தியாகச் செம்மல் வ.உ.சிதம்பரனார்க்கு நாம் தந்திடும் அன்புக் காணிக்கையும் அதுவே ஆகும்.

 

 

நாயகர் பி.டி.ஆர்!

பெருமைமிகு வரலாற்று

நாயகர் பி.டி.ஆர்!

“ஆண்டுகள் பல கடந்து முதுமை எய்திய போதிலும் உமக்கு நரையும் திரையும் ஏற்படாமைக்குக் காரணம் என்ன?” எனக் கேட்டாரிடம் சங்கப்புலவர் பிசிராந்தையார் பலவற்றைப் பட்டியலிட்டுவிட்டு, முடிமணியாக ஒன்றைச் சொன்னார். அந்த ஒன்று, இன்றும் எல்லோரது நினைவிலும் நிற்கும். “சான்றோர் பலர் யான் வாழும் ஊரே!” எனக் கூறியது நினைவெல்லாம் கடந்த வரலாறு வடிவெடுப்பதற்கு உரிய காரணத்தையும் சுட்டிக்காட்டும்.

சான்றோர் பலர் வாழ்வதே, அவ்வாறு வாய்ப்பதே, ஒரு ஊருக்குப் பெருமை; ஒரு நாட்டுக்குப் பெருமை.

‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ (996) என வள்ளுவர் ‘பண்புடைமை’ அதிகாரத்தில் வரையறுப்பது போல, இந்தப் பாருலகம் நிலைபெற்றிருப்பதற்கு முக்கிய அடிப்படை ஒரு சிலராவது பண்புடையவர்களாக அவ்வப் போது தோன்றி, வாழ்க்கை நெறி காட்டுவதால் தான். அவ்வாறு சான்றோர்கள் காலந்தோறும் வந்து பிறக்காத வறட்டு மலட்டுத்தனம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுவிட்டால், அந்தச் சமுதாயம் வாழும் நிலம் மண்ணோடு மண்ணாய் மக்கிப் போகும் என்கிறார் வள்ளுவர்.

சான்றோர் பலரும், பண்புடையாரும் வாழ்வதே- வாழும் சூழல் அமைவதே ஒரு சமுதாயத்திற்கு, அதன் வரலாற்றுப் பெருமைக்குக் கிட்டக்கூடிய பெறற்கரிய பேறு.

வரலாற்று நாயகராக வடிவெடுக்கும் பண்புடைச் சான்றோர் ஒருவருக்குப் பெருமைகள் பல வகைகளால் அமையும்.

பிறந்த குலப்பெருமை

பெற்றுள்ள கல்விப் பெருமை

சேர்ந்த செல்வப் பெருமை

சேகரித்த அனுபவப் பெருமை

உடல் அழகு வலிமைப் பெருமை

ஒருங்கே கொண்ட அதிகாரப் பெருமை

ஒழுக்கப் படிப்பால் வந்த பெருமை

சாதித்த சாதனைப் பெருமை…

இந்த எண்வகைப் பெருமைகளும் கைவரப்பெறுவோர் சரித்திர நாயகர்களாக உயர்வர்; பிறரையும் உயர்த்துவர்.

‘இத்தனை பெருமைகளோடும், நீங்கள் அறிய, இங்கே வாழ்ந்தவர் பெயரை உடனே சொல்லுங்கள்’ எனக் கேட்டால், சட்டென ஒரு மூன்று எழுத்துப் பெயரைச் சொல்லிவிடுவேன்…

அவர்தான் பெருமை மிகு ஐயா பி.டி.ஆர்.!

சென்ற தலைமுறையில் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் காவலர்களாகத் திகழ்ந்த இரு தியாகராசர்கள் மதுரை மாநகர்ப்புறத்திற்கும் மாண்பார் தமிழ்நாட்டுக்கும் பெருமை யளித்தனர். ஒருவர் ஆலையரசர் கருமுத்து தியாகராசர்; மற்றவர் நீதிக்கட்சித் தலைவர் தமிழவேள் பொன்னம்பல தியாகராசர்.

நூற்றாண்டுகளைக் கடந்தும் பெருமைச் சான்றோராகப் போற்றப்படும் பி.டி.ஆர். அவர்கள் தென்னக வரலாற்றில் தனி முத்திரை பொறித்தவர்; தலைமைச் சிங்கமாக உலாவியவர்; சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் போராடியவர்; அறநெறிக் காவலராகவும் ஆன்மிகச் செல்வராகவும் பொலிந்தவர். பி.டி.ஆர். எனும் மூன்றெழுத்து மோகன விலாசத்தால் பாளையம் இல்லத்தையும் பண்பார் தமிழ் உள்ளத்தையும் சரித்திர சாசனங்கள் ஆக்கியவர்.

அரசாண்ட அரிய நாயக முதலியாரது மரபு வழியான உத்தம பாளையம் முதன்மைக் குடும்பத்தில், செல்வச் சூழலில் பிறந்து இளமையில் பெற்றோர் இருவரையும் இழந்த போதிலும், சிற்றப்பாவின் சீராட்டில் வளர்ந்து சேதுபதிப் பள்ளியில் அகரம் பயிலத் தொடங்கி, சீமை சென்று பார்-அட்-லா பட்டம் பெற்றுத் திரும்பியது வரை பொன்னம்பல தியாகராசர் வாழ்வில் மகத்தான சம்பவங்கள் ஏதும் இல்லை.

ஆனால் 1920-இல் பார்-அட்-லா பட்டத்தோடு தமிழகம் திரும்பிய பின்னர்தான் அவரது பொது வாழ்வில் பூபாளங்கள் தொடங்கின. ஏறத்தாழ அதே ஆண்டுகளில் சீமைப்பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பிய பண்டித நேருவை தேசியப் போராட்ட வெள்ளம் ஏந்திச் செல்லக் காத்திருந்தது. பி.டி.ஆரையோ தமிழ்நாட்டில் புரையோடிக் கிடந்த சாதிப்புன்மையும் ஆதிக்க வர்க்கச் சழக்கும் சமூக நீதிச் சூழலில் எதிர்நீச்சல் போடச் செய்தன. அவ்வளவு பட்டம் பெற்றவர் தேசியப் போரில் ஈடுபட்டு, மிக எளிதில் பிறரைப் போலப் பிரபலமாகி இருக்கலாம். ஆனால் பி.டி.ஆர். ஆங்கில ஆட்சிக்கு இசைந்திருந்து, ஆளப்படும் மக்களின் சமத்துவ உரிமை கைவரப்பெற்று அப்புறம் அன்னிய அரசை எதிர்க்க வேண்டும் என ஏற்றுக்கொண்டார். இல்லாவிடில் வெள்ளையர் வெளியேறினாலும் வேறு ஒரு மேல் சாதிக் கொள்ளையரே பெரும்பான்மையரைச் சுரண்டுவர்  சாதிய அடிமைகள் என்றென்றும் சரித்திர அடிமைகளாகவே நீடிப்பர். எனவே சமத்துவம் நல்கும் சமூகச் சமநீதியே உடனடித் தேவை என அன்று புறப்பட்ட ஜஸ்டிஸ் நீதிக் கட்சியைச் சார்ந்தார்; சுய மரியாதை இயக்கத்திற்கு வலிமை ஊட்டினார்.

1920-40களில் காங்கிரஸ் மாகாண சுயாட்சி முதலிய பொறுப்புக்களை ஏற்கச் சம்மதிக்கும் முன்னர், டொமினியன் அந்தஸ்தை ஆங்கில அரசு முதல்படியாக ஜஸ்டிஸ் பார்ட்டி தயாராகி விட்டது. வடபுலத்தை விட, தென்னகத்தே காங்கிரஸ் இயக்கத்திலும் மேல் சாதியினர் ஆதிக்கமே நீடித்ததால் படித்தவர், பாமரர் அனைவரையும் ஓரணியில் கூட்டும் நீதி இயக்கமாக அது மாறியது.

சர் பி.டி.தியாகராசர், பனகல் மன்னர், பொப்பிலிராஜா, கே.வி.ரெட்டி, முத்தைய அரசர் ஆகியோர் இயக்கச் செம்மல்களாகப் புகழோச்சி வந்தனர்.

அப்போது பொதுப்பணி ஆர்வத்தோடு, சட்டமன்றத் தேர்தலில் வாகை சூடிய இளைஞர் பி.டி.ஆர். அமைச்சுப் பொறுப்பேற்றிட அழைக்கப்பட்டார். ஆறு ஆண்டுக் காலம் பல நிலைகளில், வெவ்வேறு துறைகளில் அவர் செயலாற்றினார். உள்ளூர்த் தல சுயாட்சியில் தன்னிறைவுக்கு அப்போதே வழிகோலினார். கல்வி, குடிநீர், சுகாதாரம் எனும் மூன்றனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக்காக முதல் குரல் கொடுத்தார். ‘சரிகைக் குல்லாக் கட்சி’ என்று நீதிக்கட்சியை ஏளனம் செய்தோர் இருந்த போதிலும், சர் பி.டி.ராஜன் – எதிரணியினராலும் மரியாதையோடு ஏற்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தே ஜெர்மனியும் ஜப்பானும் அசுர பலத்தால் அதிரடி வெற்றிகளைப் பெற்று வந்த சூழலில் – ‘இந்தியர்கள் பிரிட்டனுக்கு எதிராக அச்சு நாடுகள் வெற்றிபெற ரகசியமாகச் செயல்படவேண்டும் என்ற ராட்சத நாடுகள் ஜெயித்தால் மானுட உரிமையே பறிபோய்விடும் இப்போது பிரிட்டனை ஜெயிக்க வைப்போம்; பின்னர் அதனுடன் வாதிடுவோம்’ என யுத்த நிதி திரட்ட முற்பட்டார். ஒரு போர் விமானம் மதுரை மக்கள் பெயரால் வாங்கிடப் பெரு நிதி குவித்தார். பி.டி.ஆரின் கருத்தே பின்னர் வரலாற்று உண்மையும் ஆயிற்று.

சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே சுயமரியாதை இயக்கத்தின் இந்தி எதிர்ப்புப் போர், விதவையர் மறுமணம், முதலியவற்றில் தந்தை பெரியாரின் தளபதி ஆனார்.

பார்-அட்-லா பட்டம் பெற்றவர் நீதிமன்றத்தையே மறந்துவிட்டாரா?

அது முடியுமா? பி.டிஆரால் இயலுமா?

அரசியல் பணிமாற்றம் கண்ட அந்த வினாடியே, 1937-இல் மதுரை வழக்கறிஞர் அவைக்குள் (ஙிணீக்ஷீ) பிரவேசமாகி விட்டார். அன்றைய பிரபலங்களான சட்ட வல்லுநர்கள் பி.ரங்கசாமி நாயுடு, துரைசாமிப்பிள்ளை, சுப்பிரமணிய ஐயர் ஆகியோருக்கு நிகராக வாதிட்டு பல கிரிமினல் வழக்குகளில் வாகை சூடினார். பின்னர் பிரபலங்களான பலர் அப்போது அவருடைய ஜுனியர்களாகப் பழகிவந்தனர்! வழக்கறிஞர்கள் திரு. ஞி. சந்தோஷம், வி.ராஜையா, ழி.ரி.  பாகுலேயன் எனும் இப்பட்டியல் பெரியது அதிலும் பெரிய பணி மதுரை நீதிமன்றக் கட்டிட வளாகமாக – இப்போதுள்ள இடத்தைத் தேர்வு செய்த குழுவில் பணியாற்றிய வகைமை.

வகைமைகள் வளர்வதற்கெல்லாம் வழியமைத்தவை இரண்டு – ஒன்று பி.டி.ஆர் எனும் விரிந்த மனம்; மற்றொன்று பாளையம் இல்லம் எனும் திறந்த வாயில், அடையா நெடுங்கதவம்.

“குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

     இனனும் அறிந்தியாக்க நட்பு”        (793)

என நட்பாராய்தலுக்கு வள்ளுவர் கூறிய இலக்கணம்- பாளையம் இல்லத்தாருக்கே பொருந்தும். அந்தத் திருமனையின் செல்வாக்குக்கு அது தேடிக் கொண்ட நட்புச் செல்வங்களே அடித்தளம்.

ஒரு வரலாற்றை தனியொருவர் வாழ்வுப் போக்கை வளர்கதையாக்கி வழங்குவது, மூலவேரிலிருந்து முளைத்து மேல் எழும் பண்புக் கிளையும் நட்பு மலர்களும் தான்… பாளையம் தருவில் மலர்களுக்கும் கனிகளுக்கும் பஞ்சமே ஏற்பட்டதில்லை.

சுதந்திரம் வந்த பின்னர் காங்கிரஸ் அரச கட்டில் ஏறியபோது 1952-இல் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு தலைவராக வந்து அப்போதும் வரலாறு படைத்தார். தற்காலிக சபாநாயகராக, மேலவை உறுப்பினராக சட்ட ஞானம் நிறைந்த செயலாற்றிப் புகழ்பெற்றவர். அக்காலத் தலைவர்களான மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராசர், அறிஞர் அண்ணா, மேதை ஜி.டி.நாயுடு ஆகியோர் போற்றும் சான்றோர்கள் ஆனார். தேவிகுளம் பீர்மேட்டுப் போராட்டத்தில் தமிழ் மண்ணுரிமை கோரினார்.

அரசியல் பணிகள் என்பன, ஆற்று வெள்ளம் போல அதன் பயன்களும் புகழும் பிரளயமாகப் பெருகிவரும்; பின்னர் அருகிப் போகும். ஆனால், சமய, சமுதாயப் பணிகள் என்பவை ஊற்று நீர் போன்றவை. மழை ஓய்ந்த பின்னரும் மறுபயன் தருபவை; மறுமலர்ச்சி ஊட்டுபவை.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்திடவும் மதுரைப் பல்கலைக்கழகம் பிறந்திடவும் பி.டி.ஆரே காரணர். மதுரைத் தமிழ்ச் சங்க பொன்விழாச் சிறக்கவும், முதல் உலகத் தமிழ்மாநாடு கோலாலம்பூரில் பொலிவுறவும் பி.டி.ஆரே முதன்மையர்.

சமய மறுமலர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும்பணி தமிழகத்தில் புதிய பக்தி இயக்கத்தையே தோற்றுவித்து விட்டது. கடவுள் மறுப்புக் கொள்கையரோடு அவருக்கு அரசியல் தொடர்பு இருந்தபோதிலும் சமயத் தனி ஒழுக்கத்தில் அவர் தனிப்பாதையில் நடந்தார், அந்தப் பாதையில் பலரையும் பவனி வரச் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலைப் புனரமைத்து நடப்பித்த பெருங்குட முழுக்கும், அன்னை மீனாட்சிக்குச் சூட்டிய வைரக் கிரீடமும், அய்யப்ப சுவாமிகள் பக்தியைத் தமிழ்நாட்டில் மாபெரும் பக்திப் புரட்சி இயக்கமாக மாற்றுவித்ததும், திருவாதவூர், வடபழனியாண்டவர் ஆலயம் உள்ளிட்ட புனரமைப்பும் பி.டி.ஆர் அவர்களின் முத்திரைத் தொண்டுகள்.

பி.டி.ஆர். பெற்ற மக்களுள் பொறியியல் கற்று, புல்லாங்குழல் இசை ஆய்ந்து, புலன் திருந்தும் ஆன்மவியல் நாடி, வள்ளுவர் கழகப் புகழ் வளர்ப்பவர் ஒருவர்.

தந்தை வழிச் சுவடு சேர்ந்து சட்டம் பயின்று, கல்வி சமுதாயப் பணிக்கே ஆட்பட்டு வளர்நிலைக் கழகத்திலேயே சார்ந்திருப்பர் பழனிவேல்ராஜா!

தந்தையின் விலாசத்தாலேயே கட்டப்பெறும் இத்தலைமுறைத் தலைவர் பி.டி.ஆர். அவர்கள் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகராக ஆற்றிவரும் ஆக்கங்களை நாடு போற்றுகிறது; தந்தை வழியே தனயர்களின் வாழ்வும் வரலாற்று மடல்களாகக் கண்டு மனம் பூரிக்கிறது.

வரலாற்றுச் சான்றோர்கள், சமுதாயத்தின் கருவூலங்கள் ஆகும்போதே அந்தச் சமுதாய வாழ்வின் புது ரத்தம் புனலாகப் பரந்தோடும். நம் தமிழகச் சான்றோர்களையும் நாம் சரித்திர நாயகர்களாக ஆக்கி, வளரும் நம் பிள்ளை களுக்குப் பாடமாக்கிச் சொல்ல வேண்டும். அலெக்சாண்டரையும் அக்பரையும் படிக்கும் பிள்ளைகள், தமிழவேள் பி.டி.ஆரையும் பிற தமிழினச் சான்றோரையும் பற்றிப் பயிலும்போதே உண்மைத் தமிழக வரலாறு ஒளிவிடும்.

தமிழக ஒளிவிளக்காக வரலாறு படைத்த பி.டி.ஆரின் வாழ்க்கை நமக்கு ஒளியூட்டுக.

ஆயிரம் பிறை காணும் அண்ணல்

 

எதிர்பாரா வகையில் ஏற்படும் சில அறிமுகங்கள் என்றும் நீடித்து நலம் செய்யும் உறவுகளாக வளர்ந்து விடுவது உண்டு. அவ்வாறு வளர்ந்து, மலர்ந்து, மணம் பரப்பிவரும் அரிய உறவுத் தொடர்பு – ஆயிரம் பிறை காணும் அண்ணல் அழகேசருடன் எனக்கு அமைந்த தொடர்பு. இதனை ஒருவகையில் திருக்குறள் கூட்டுவித்த இலக்கியத் தொடர்பு எனலாம். ஆனால் இதனை எஞ்ஞான்றும் நிலைக்கும் இலட்சியத் தொடர்பாகவே நான் போற்றி வருகிறேன்.

கூனூரில் உள்ள தேயிலைத் தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பேற்றுச் சென்றிருந்தேன். இயல்பாக திருக்குறள் சிந்தனை அங்கும் என்னை வலம் வந்தது. எனது திருக்குறள் கருத்துக்களைக் கேட்கவும் பள்ளி மலரில் கட்டுரையாக வந்ததைப் படிக்கவும் வாய்ப்பினைப் பெற்ற அழகேசனார் என்னை நேரில் அழைத்து விருந்தளித்து, மகிழ்வித்து ஊக்குவித்தார். கூனூரில், பிருந்தாவன் பள்ளியைத் திறம்பட நடத்தும் பணியில் தம்மை மறந்து நாட்ட முற்றிருந்த சிலபெரியவருடன் எனக்கு ஏற்பட்ட திருக்குறள் அறிமுகம் ஆலம் விழுது போலப் படர ஆரம்பித்தது. “செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல், வினைக்கரிய யாவுள காப்பு” (781) எனும் திருக்குறள் நட்புநெறி எங்களுக்குள் கிளைபரப்பத் தொடங்கியது.

அந்த முதல் சந்திப்பிலேயே, அவர் என் சிந்தை கவர்ந்தார். அவரது காந்திய எளிமையும், கதருடை அணிந்த புனிதமும், கருணைமலிந்த கண்ணோட்டமும், கனிவுடன் ஊக்குவிக்கும் இங்கிதமும், கடமையே கண்ணான பற்றுறுதியும், நம்பிக்கையூட்டும் செயல்திறனும் காந்தம் போல் என்னை ஈர்க்கத் தொடங்கின. அவரைச் சந்தித்து உரையாடும் போதெல்லாம் ஒரு வகைப் புத்துணர்ச்சியும் புளகாங்கிதமும் அடைவதுபோல உணர்ந்தேன். பொய்தீர் ஒழுக்க நெறி நிற்கும் புலனழுக்கற்ற அந்தணாளரின் உறவுக்கு இலக்கணமாக அதைக் கருதினேன். சூரியனை வலம் வருவதால் பிற கோள்கள் நலமுறுவதைப் போல, நானும் அவரோடு பூண்ட நட்புறவால் நயனும் பயனும் காணத் தொடங்கினேன்.

இளமைப் பருவத்தில் நம் நெஞ்சம் எனும் வானில் எத்தனையோ ஏற்றம் மிக்க இலட்சியங்கள் இடம்பெறுவது உண்டு. அவற்றுள் சில மட்டுமே வளர்பிறையாக வளர்ந்து, முழு மதியாக நிலைக்கும். என் இளமை மனம் எனும் வளர்ச்சி விளிம்பில் அவ்வாறு வலம் வந்த இலட்சிய உணர்வு உள்ள பெரியோருள் அழகேசனாரும் ஒருவர். அவர் மொழிபெயர்த்த பண்டித நேருவின் ‘உலக வரலாற்றுப் பார்வைகளை’ (நிறீவீனீஜீsமீs ஷீயீ கீஷீக்ஷீறீபீ பிவீstஷீக்ஷீஹ்) படிக்கும் வாய்ப்புப் பெற்றபோதே அவருடைய நடை எளிமையும் சரளமான மொழியாக்கமும் என் நெஞ்சில் இடம் பெற்றன. பண்டித நேருவின் ஆங்கிலத்தைப் படிக்கத் தூண்டும் வகையில் அழகேசனாரின் தமிழாக்கம் கட்டியம் கூறி அழைத்தது. நானும் படித்து நண்பர்களையும் படிக்கச் சொன்னேன்.

அரசியல் அரங்கில் அக்காலத்தே ஒழுக்க உணர்வோடு பணியாற்றி வந்த தலைவர்கள் வரிசையில் ஒ.வி.அழகேசனாரும் ஒருவராக விளங்கினார். காந்தி யுகம் உருவாக்கிய இவர், நாட்டுப்பணியைத் தியாக உணர்வோடு தன்னல நாட்டம் ஏதுமின்றிச் செய்யும் சிலருள் ஒருவராகத் திகழ்ந்தார். அரியலூரில் தற்செயலாக நேரிட்ட ரயில் விபத்தைப் பிரச்சாரக் கருவியாகக் கொண்டு, பொய்ம்மை ஊர்வலம் வந்தபோதிலும் கூட, உறுதி தளராமல், தன்னடக்கத்தோடு பல நிலைகளில் பல துறைகளில் முத்திரை பதித்தார். தாம்பரம் விழுப்புரம் ரயில் பாதையை மின்னாற்றலால் இயக்கிட மேற்கொண்ட முயற்சிகளால் இன்றும், என்றும் அவர் நினைவுகூரப்படுவார். அது மட்டுமா? பெரம்பூரில் ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை வருவதற்கும், வளர்வதற்கும் பாத்திகட்டித்  தந்தவர் அழகேசனார் என்பதையாவது தமிழ்நாடு நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும்.

தோற்றத்தில் எளிமையும், செயற்பாங்கில் மனித நேயமும் சேர்ந்திருப்பது அரிது. அத்தகைய அருமைப்பாடு உடையவர் ஐயா அழகேசனார்! வினைத்திட்பமும் மனத்திட்பமும் கொண்டவர் இப்பெரியார்!

அவரது மனிதநேயம் பட்டையிடப்பட்ட வைரமாக அவருடைய வாழ்க்கை முழுதும் பரவி ஒளிபாய்ச்சியுள்ளது. மத்திய அமைச்சராக, பண்டித நேருவின் நம்பிக்கைக்கு உரிய இளைய தலைமுறைத் தொண்டராக அவர் ஆற்றிய அருஞ்செயல்களின் பட்டியல் பெரிது. வானவில்லைப் போல, வந்துபோகும் மின்னலைப் போல இன்று ஆரவார அரசியல் நடத்துவோருடன் ஒப்பிட முடியாத வகையில் அழகேசனாரின் ஆக்க பூர்வ அரசியல் பணிகள் மூங்கில் மரக்காடு போல ஓங்கி எழுமாடம் போலப் பயனும் பாங்கும் கொண்டு அமைந்தன. போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது அமைக்கப்பட்ட காஷ்மீர் சாலை பிரிவாக்கங்கள், பாம்பன் பாலத் திட்ட ஏற்புகள், சேது சமுத்திரத் திட்டச் சிந்தனைகள், கொச்சி உள்ளிட்ட துறைமுக விரிவாக்கங்கள் எல்லாம் வரலாற்றுத் திருப்பங்கள் ஆகும்.

பின்னர் நீர்ப்பாசன, எரிசக்தி அமைச்சராகப் பொறுப்பில் இருந்தபோது கிருஷ்ணாநதி நீர்ப்பங்கீட்டுத் தீர்வுக்கு வழிகண்டமையும், முடங்கிக்கிடந்த ஸ்ரீசைலம், போச்சம்பாடு அணைத்திட்டங்களை முடுக்கிவிட்டமையும், நெய்வேலி மின்சாரம் நிறைநலம் பெறச் செய்தமையும் என்றும் வாழும் நினைவுகள்; என்றென்றும் வாழ்விக்கும் நிறைவுகள்!

“பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

     அருமை உடைய செயல்”      (975)

என்பது  அழகேசனார்க்கே அமைந்த குபேரச் செல்வம்; குன்றா மணிவிளக்கம்!

சென்னைக்கு அருகில் மணலியில் எண்ணெய் சுத்திகரிப்பாலை வந்திடவும், காவிரிநதி தீரப் படுகையில் எண்ணெய், எரிவாயுச் சுரங்கங்கள் தோண்டிடவும் அன்றே வழிகண்டவர் அழகேசனார் என்பதை இன்றைய தலைமுறையினர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

அமைச்சர் பணி போல, அயலகத் தூதர் பணியிலும் முதன்மை பெற்றார் அழகேசனார்.

“தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

     நன்றிய பயப்பதாம் தூது”      (685)

எனும் இலக்கணத்திற்கே இலக்கியமாகத் திகழ்ந்தார்.

அமைச்சர், அயல்நாட்டில் நமது தூதர் எனும் பணிகள் பலவற்றில் அழகேசர் தலைப்பட்டாலும், அவருடைய நெஞ்சிற்கு இனிய பணியாக நின்றது அவரது கல்விப் பணிதான்! ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், அந்த நாடு, தனது கல்வி முயற்சிகளில் முனைப்பும் முன்நோக்கும் கொண்டிருத்தல் அவசியம் என்பதை அவர் அறிந்திருந்தார். எங்கும் இருள் மண்டியிருக்கிறதே எனப் பழித்துவிட்டுச் சோம்பியிராமல், தன்னால் இயன்றமட்டும் ஒருசில சுடர்களை ஏற்றி வைக்க முற்பட்டார். அச்சுடர்களே பிருந்தாவனம் கல்விக்கூடங்கள்!

கூனூர், ஆத்தூர், கொடைக்கானல் முதலிய தலங்களில் தலைமைபெற்று வரும் இக்கல்விக்கூடங்களை நேரில் கண்டு வியப்படைந்துள்ளேன். அப்போதெல்லாம் இவற்றை உருவாக்கிய சிற்பி அழகேசனார் என் மனத்தே விசுவரூபம் எடுத்து நிற்பார். கல்விப் பணியை ஒரு வேள்வி போலச் செய்யும் விஞ்ஞானியாக, இக்காலத்திற்கு உரிய முனிபுங்கவராக, அவர் விழாக்கோலம் பூணுவார். பிருந்தாவனம் கல்விக்கூடங்கள் விழாமலிந்த பேரூர் போல, வித்தைகள் மலிந்த ஆய்வரங்கமாக வளர்ந்து வருகின்றன.

ஆன்மிகப் பணிகளில் எல்லாம் அவருக்கு நிறைய நாட்டம் உண்டு. அரசியல், ஆன்மிகம் எனும் துறைகளைவிட அருங்கல்வித்துறைக்கு அவர் ஆற்றிய பணிகளே என்னைக் கவர்ந்துள்ளன. ஆன்மிகம் – வரையறுக்க இயலாத ஒரு பெருவெளி; அரசியல் வரையறைக்குள் உட்பட மறுக்கும் ஆரவாரக் கடல்! ஆனால் அருங்கல்விப்பணி ஆக்கம் தரும் அணைக்கட்டுப் போன்றது. நீர்ப்பெருக்கை உரிய பருவத்தே தேக்கிவைத்து வேண்டிய துறைகளில், வேண்டு மட்டும் வழங்கும் அணைபோல, கல்விப்பயிர் புரக்கும் தன்மையது; தகுதியது.

அழகேசனாரின் இலட்சியங்கள் எல்லாம் பிருந்தாவன் பள்ளிகளில் செயல்வடிவம் பெறுகின்றன. எதிர்காலத்தில் இந்த நாட்டில் பெருமையுறப் போகும் செல்வங்கள் எல்லாம் இங்குள்ள உலைக்களங்களில் சீரோடும் சிறப்போடும் வடிவமைக்கப்படுகின்றன. ‘கல்வி என்றாலே வளர்ச்சி’ எனும் விளக்கத்தைச் சில பள்ளிகளில் அவர் நடைமுறைப் படுத்திக் காட்டுகிறார் ‘தாமின்புறுவது உலகின்புறக்கண்டு’ உவகை கொள்ளுகிறார்.

அழகேசனார் ஆயிரம் பிறைகாணும் பெருமைக்கு உரியவராகத் திகழ்கிறார். காலமெல்லாம் பயனுற வாழ்ந்த தமது வாழ்க்கையை நமக்கு வழிகாட்டியாக நல்கியுள்ளார். பிறர் வழிபடும் வண்ணம், தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அண்ணலாக, அறிஞராக அவர் திகழ்கிறார். இத்தகைய அறிஞர்களின் வாழ்க்கையே, ஒரு நாட்டின் வரலாற்றில் சுவடிகளாகச் சேருகின்றன. அவ்வாறு வரலாற்றில் தமது சுவடுகளைப் பதிக்கும் வகையில் வாழ்ந்து, பிறரையும் வாழ்வித்து வரும் அண்ணல்  அழகேசனார் அவர்களின் பெருமை – திருக்குறளைப் போல நிலைபெறுக என வாழ்த்துகிறேன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வநலமெல்லாம் இங்கே புலப்படுத்தி நிற்கும் இப்பெருந்தகை, பல்லாண்டு வாழ அவர் போற்றி வணங்கும் திருவேங்கடமுடையானை வேண்டுகிறேன்.

தேர்தலும் திருவள்ளுவரும்

Image result for thiruvalluvar

உலகெங்கும் குடியாட்சி மரபுகள் வேரூன்றி வரும் சூழலில் நாம் இருக்கின்றோம். நம் நாட்டில் ‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு…!’ எனும் உரிமை பெற்று எழுபதாண்டுகள் ஆகின்றன; இப்போது ‘எங்கும் தேர்தல் என்பதே மூச்சு!’ எனும் பரபரப்பில் இருக்கிறோம். தேர்தல் பரபரப்பு வாழ்க்கைக்கு ஏற்ற பயன்மிகு சிந்தனைகளை வள்ளுவர் சொல்லியுள்ளாரா எனத் தேடுகிறோம்.

வள்ளுவர் அரசியலைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். அவர் முடியாட்சிக் காலத்தே வாழ்ந்தவர். தமிழ்நாட்டில் கோனாட்சியே நிலவியது. எனவே அரசன், வேந்தன், இறைவன் என ஆளும் தலைவனைக் குறிப்பிட்டார். இன்று நாம் வாழ்வது குடியாட்சிக் காலம். இக்காலத்திற்கு வள்ளுவச் சிந்தனைகள் பொருந்துமா?

நிச்சயம் பொருந்தும். எக்காலத்திற்கும், எந்தச் சூழலுக்கும் பொருந்தும் வகையில் வாழ்க்கை அறம் வகுத்திருப்பதே வள்ளுவத் தனிச்சிறப்பு. மன்னராட்சி முறைக்கு அவர் கூறியுள்ள நெறிகள் – மக்களாட்சி முறைக்கும் பாராளுமன்ற அமைச்சரவை ஆட்சி முறைக்கும் ஏற்புடையனவாக இருப்பதே வள்ளுவப் பெருமை. ஆட்சி முறை எதுவாய் இருப்பினும், அடிப்படையான தேவைகளும் முறைகளும் மாறுவதில்லை எனத் தெளிந்தவர் வள்ளுவர். மன்னராட்சி ஆயினும், மக்கள் ஆட்சி ஆயினும் ஒத்திருக்கக்கூடிய அடிப்படைகள் உள்ளன. குடிமக்களின் நலன் கருதி ஆளுதல், ஒற்றுமையை வளர்த்தல், பகையை ஒடுக்குதல், பசி, பிணியின்றி நாட்டைப் புரத்தல், நீர்வளம், நிலவளம், தொழில்வளம் என்பனவற்றைப் பெருக்குதல், எல்லோர்க்கும் ஒத்த உரிமை நல்கி, நடுநிலை வழுவாமல் முறை செய்தல் ஆகியன இருவகை ஆட்சிக்கும் ஏற்புடைய பொதுநல அறங்கள்.

இருவகை ஆட்சியிலும் தலைமைப் பொறுப்பேற்க, நிர்வாகப் பொறுப்பேற்க ஏற்றவர்கள் இருக்க வேண்டும். இப்பதவிகளைப் பெறுவோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பதவியும் அதனால் வரும் அதிகார ஆக்கங்களும் எப்போதும் நிலைபெற்று நிற்பவை எனக் கருதி மனம்போல நடக்கலாமா? பதவியே பெரிதென முறை மீறிச் செயல்படலாமா? பெற்ற பதவி மக்களுக்குப் பணி செய்வதற்கே என உணர்ந்து ஏற்ற பொறுப்பிற்கு உகந்தவாறு பணியாற்ற வேண்டாமா? பதவி இல்லாக் காலத்தும் தம் தூய தொண்டால் மக்கள் மதிக்கும் வகையில் என்றும் தமது மதிப்பினைப் பேணி நடக்க முற்பட வேண்டாமா?

மக்களாட்சித் தேர்தலில் வெற்றி தோல்விகளை, வாக்களிக்கும் மக்கள் நிர்ணயிக்கின்றனர். மக்கள் நலனையே மதித்துத் தொண்டு புரிந்தவர்களை மறுபடி மறுபடி ஆட்சி அரியணையில் ஏற்றுகிறார்கள்; சொந்த சுய லாபத்தையே கருதிப் பதவிப் பொறுப்பை வேட்டைக் காடாக்கியவர்களை இருந்த சுவடு தெரியாமல் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

“நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

     நயம் புரிவாள் எங்கள் தாய் & அவர்

     அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

     ஆனந்தக் கூத்திடுவாள்….”

எனப் பாரதி பாடியது, இன்றும் நமது குடியாட்சியில் நன்கு புலனாகிறது.

இது ஒருவகையில் கொள்கைக் காலம். அரசியல், மதவியல், அறிவியல், பொருளியல் எனும் துறைதோறும் தத்தம் கொள்கைகளைப் பரப்பக் கட்சிகள் வரிந்து கட்டி வருகின்றன. மக்களிடையே கொள்கை மீது பற்றை ஏற்படுத்துகின்றன என்பதை விட, ஒருவகைக் கொள்கை வெறியையே மூட்டி விடுகின்றன. பற்று எனும் நெறியைக் காட்டுவோரும், அதனை வெறியாக்கி மூட்டுவோரும் அவ்வச் சூழலுக்கேற்றபடி தலைமை பெற்றுக் கொள்ளுவார்கள். ஆனால் அத்தலைமைப் பேறு எவ்வளவு காலம் நீடிக்கும்?

இது மறுவகையில் பதவிக் காலம். உயர்ந்த பதவி கிட்டின், தானும் உயர்ந்த வகைச் செருக்குக் கொள்ளுகிறான். பதவி தாழின், தானும் தாழ்ந்தவனாக எண்ணிச் சோர்கிறான். உலகமும் பதவியின் ஏற்ற இறக்கத்திற்குத் தக்கவாறே ஒருவரின் தராதரத்தையும் மதிப்பிட முற்படுகிறது. நூறு ரூபாய் சம்பாதிப்பவனை விட, ஆயிரம் சம்பாதிப்பவன் தரத்தில், குணத்தில் உயர்ந்தவன் எனக் கருதி மரியாதை செய்கிறது. பதவிக்கும் பண்புக்கும் நேரடியான காரண காரியத் தொடர்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட தாகத் தெரியவில்லை. அதிகாரத்தை ஒருவர் இழக்க நேர்ந்தால் – அவர் எல்லாவற்றிற்குமே தகுதியற்றவர் என ஒதுக்கிவிடும் மனப்பாங்கும் சரியாகாது. எனவே – அவரவர் குணநலம் – ஒழுக்கம் – நன்னடை – எனும் உரைகற்களைக் கொண்டே ஒருவரை மதிப்பிட வேண்டும். பதவியாலோ, செல்வாக்காலோ ஒருவர் இன்று மேல் இருப்பார்; நாளை அவர் கீழே வந்துவிடுவார். குணம் எனும் குன்றேறியவர் எனினும், எளிமையாக, அடக்கமாக அவர் என்றும் ஒரே நிலையில் வாழ்வார். அவ்வாறு அடக்கமாக இருப்பதால்- அவர் கீழவர் ஆகமாட்டார்.

“மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்

     கீழ்அல்லார் கீழ்அல் லவர்”          (973)

மேலான நிலையில் இருந்தாலும் மேன்மையற்ற நெஞ்சினர் ஒருபோதும் மேலானவராகக் கருதப்பட மாட்டார்; கீழான ஏழ்மை நிலையிலிருந்தாலும் கீழ்த்தரமான ஒழுக்கமில்லாதவர் ஒருபோதும் கீழானவராகி விட மாட்டார் எனப் ‘பெருமை’ எனும் அதிகாரத்தில் வரும் குறட்பாக் கருத்து, குடியாட்சித் தேர்தல் காலத்திற்கு மிகமிக ஏற்ற சிந்தனையை வழங்குகிறது.

 

 

திருக்குறள் சிந்தனைகள்*

மனத்துக்கண் மாசிலன் ஆதல்!

உயிர்கள் அனைத்தும் உடம்பாலும் உணர்வாலும் வளர்வன, வாழ்வன ஆகும். பிற உயிரினங்களில் பெரும்பாலும் உடல் முயற்சிகளை மட்டுமே மிகுதியாகச் சார்ந்து வாழ்பவை. ஆனால் மனிதர் வாழ்வு மன உணர்வுகளையே பெரிதும் சார்ந்து வளரும். மனத்தால் நினைத்து வாழ்வதால் தான் ‘மனிதன்’ என்று அழைக்கப் படுகின்றான்.

எண்ணம், சொல், செயல் மூன்றனுள் அடிப்படை யானது எண்ணமே. மனம் என்னும் நிலம் நலமாக இருப்பின் அதில் விளையும் சொல்லும் செயலும் நலமாக, ஆக்கமாகச் செழிக்கும். ஆகவே இந்த அடிப்படையான மனத்தை மாசற்றதாக, தூய்மையுடையதாகப் பேணுவதே அறத்திற்கெல்லாம் அடிப்படை என்பார் வள்ளுவர்.

அறம் என்றால் என்ன? என்று வினாத் தொடுத்து ஒரே வரியில் அழகுடன் வள்ளுவர் பதில் அளிக்கின்றார்; எளிமையாகச் சொல்கிறார்; ஆனால் ஆழமாக, நுட்பமாகக் கூறுகிறார். அறம் என்றால் வேறொன்றும் அல்லை ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்று. நம் வீட்டில் இயற்கையாகவே தூசுகளும், அழுக்குகளும் சேர்வது இயல்பு. அதுபோல, மனத்திலும் அழுக்குச் சேர்வது இயல்பு. தூசு படிந்த வீட்டை, அழுக்குப் படிந்த வீட்டை நாள்தோறும் அடிக்கடி கூட்டித் தூய்மை செய்வது போல மனமாகிய அக வீட்டையும் கூட்டித் துப்புரவு செய்யவேண்டும்.

நிலத்தைப் பண்படுத்தி நல்ல நிலமாக்கிப் பின் வித்திட்டு, நீர்பாய்ச்சி, பயிர் வளர்க்கின்றோம்; பாடுபடு கின்றோம். அதில் களைகளை யாரும் விரும்பி விதைப்பதில்லை; விளைவிப்பதில்லை; வளர்ப்பதில்லை. ஆனால் களைகள் இயல்பாகவே பயிரோடு மண்டிவிடுகின்றன. உழவர் களைநீக்கும் வேலையைத்தான் முயன்று செய்யவேண்டி யுள்ளது. அதுபோல, ஆசிரியரோ, பெற்றோரோ, சான்றோர்களோ, சமுதாயமோ மனிதர்கள் பொறாமைப்பட வேண்டும், பேராசை கொள்ள வேண்டும், கோபம் கொள்ள வேண்டும், கடுமையான கடுஞ்சொல் கூற வேண்டும் என்று ஒருபோதும் கற்பிப்பது இல்லை. ஆனால் இந்த மாசுகள் கற்பிக்காமலே மனத்தில் நல்லுணர்வுப் பயிர்களிடையே எம் முயற்சியும் இல்லாமல் களையாக மண்டிவிடுகின்றன. உள்ளத்தை மாசுபடுத்தும் இக்களைகள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். இவற்றில் எல்லாம் அடிப்படையாக நீக்கப்பட வேண்டிய களைகள் நான்கு எனப் பட்டியலிட்டு இனம் காட்டிப் பிற அதிகாரங்களில் அவற்றை விரிவாகப் பேசுவார் வள்ளுவர்.

அந்த மாசுகள் நான்கு:-

“அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும்

     இழுக்கா இயன்றது அறம்.”          (35)

இவ்வழுக்குகள் மனத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்; அகற்றப்பட வேண்டும். மனத்தூய்மை இல்லாதான் வாழ்வு துன்பமாகும். மாசில்லா மனமே இன்பமாகும். அப்போது தான் மனமாகிய மாளிகை தூய்மையாகி, வசிப்பதற்கு ஏற்ற வனப்பு மாளிகையாக விளங்கும்; நம் வாழ்வு சிறக்கும்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;

     ஆகுல நீர பிற”              (34)

ஒழுக்காறாக் கொள்க!

நல்ல நிலத்தில் பயனுள்ள நல்ல மரங்கள் வளரும் ஆனால் அழுக்கு நிறைந்த நீர்த்தேக்கங்களில் ஈக்களும், கொசுக்களும் விரைந்து வளர்ந்து பெருகும்; நோயைப் பரப்பும்; அதுபோலத் தீமை என்ற அழுக்கில் பொறாமை வளரும், தானாக வளரும், நன்றாக வளரும்.

ஒருவர் அடையும் நன்மைக்கு எல்லாம் அடிப்படை கடுமையான உழைப்பு; நல்லோர் உதவி; நல்லூழ்; இறைவன் திருவருள். ஆனால் தீயோர் பிறர்நலம் கண்டு, வளர்ச்சி கண்டு பொறுக்க மாட்டார்கள். நன்றாக வாழ்பவர்கள் பொறாமைக்காரர்களுக்கு ஒரு தீங்கும் செய்வதில்லை. அவர்கள் வாழ்வால் இவர்களுக்கு இடையூறும் இல்லை. ஆனால் பொறாமைக்காரர்கள் பிறரிடமிருந்து பெரு நன்மைகளைப் பெற்றால், வாழ்க்கையில் உண்பதிலும் உடுப்பதிலும் வசிப்பதிலும் பெருமையிலும் சிறந்து விளங்கினால், மனம் புழுங்கி, மனம் வெந்து அவர்களைப் பழி சொல்லிக் குற்றம் சொல்லி வாழ்வார்கள். கோள் சொல்வதும் குறை சொல்வதும் குற்றம் சொல்வதும் தீய பழக்கமாகி, நோயாகி, தம்மை அழிக்கும் நோய் என்று அறியாமலே அத் தீய சுகத்திலே மகிழ்ந்திருப்பர். பொறாமை என்னும் நோய் அவர்களை அழித்துவிடும்; பெற்றிருக்கும் செல்வத்தையும், உற்றாரையும், நண்பர்களையும் விட்டுப் பிரித்துவிடும் என்பதை அறியாமலே அழிந்திடுவர்.

அழுக்காறு எனில் பொறாமை. பிறரது வளர்ச்சி, வாழ்வு கண்டு தாங்க முடியாத ஒரு மனத்தவிப்பு. ‘பிறரது ஆக்கமெல்லாம் அப்படியே ஒரு நொடியில் தனக்கு உரியதாக வந்துவிடக்கூடாதா?!’ எனும் ஆசை தூண்டும் அளவற்ற ஏக்கம்; அந்த அவா உடனே கை கூடி வராத போது, தன் ஆற்றாமை காரணமாகத் தூண்டப்பெறும் வெகுளி; அந்த வெகுளியைப் வெளிப்படுத்துவது வெறுப்போடு கலந்து வரும் கடுஞ்சொல்.

அழுக்காற்றிலிருந்து தொடங்கி, இன்னாச் சொல் வரை ஒரு தொடராகக் கிளை விரிக்கும் மாசுகளில் முதன்மை இடம் பெறுகிறது அழுக்காறு. ‘அழுக்கு ஆறு’ என அழுத்தமாகச் சொல்கிறார் வள்ளுவர். நடந்திட நல்ல சாலை இருக்க, அழுக்கிலும், சேற்றிலும் கால் வைக்க முற்படுவதில்லை அல்லவா? அதுபோல பல்வகையாகப் பரவிக்கிடக்கும் பொறாமை எனும் அழுக்கின் மீது பாதம் பதிக்க வேண்டாம் என்கிறார் அவர்.

இன்று சமூக வாழ்க்கையில் பொறாமையே ஆதிக்கம் செலுத்துகிறது. பிறரது வாழ்வு, வசதி கண்டு ஆற்றாமையால் தனது நெஞ்சிலும், வயிற்றிலும் நெருப்பை வெறுப்பாக வளர்த்து வருகிறது. பிறர் முயற்சி கண்டு, தானும் அவ்வாறு வளர்வதை விடுத்து, பழிசொல்லி, தீமை விளைவித்து அதிலேயே ஒரு சுகம் காணும் உணர்வை உருவாக்கி விடுகிறது. தனது வளர்ச்சியை அக்கறையோடு கருதுவதை விட, பிறரது முயற்சியை உன்னிப்பாகக் கவனித்து – எவ்வாறெல்லாம் அதற்கு உலை வைக்கலாம், அழிக்கலாம் எனப் பொறாமை கொள்ள வழிவகுக்கிறது. சாதாரண மக்களிடம்தான் இப்பொறாமை உண்டு எனக் கருதிவிடக் கூடாது; பதவியில், தொழிலில், செல்வாக்கில் திளைக்கும் பெரிய மனிதர்களிடம் தான் அழுக்காறு கொடிகட்டிச் செங்கோல் செலுத்துகிறது. அதனால் எத்தனையோ பகை உணர்வுகளையும், குரோதங்களையும், பொல்லாங்கு களையும் அலைவட்டம் போலச் சமுதாயத்தில் உருவாக்கி, நேரடித் தொடர்பு இல்லாதவர்களைக் கூட, பொய்மையில் மயங்கச் செய்து விடுகிறது. நல்ல மனிதர்களைக் கூட நச்சுப்பாம்புகளாக, கபடமற்ற மாடப்புறாவைப் போன்ற மனங்கொண்டவர்களைக்கூட, கழுகுகளாக மாற்றவல்ல உலைத் தீ அழுக்காறு. எனவே பண்பட்ட மனத்தால் அழுக்காறு எனும் தீமையை வெல்ல வேண்டும். நல்லெண்ணம் எனும் திருமகளைத் தள்ளிவிட்டு, தீமையை அரங்கேற்றவரும் பொறாமை எனும் மூத்தவளை ஏற்கலாமா? முதன்முதலில் பொறாமையை அகற்றிவிடுதல் வேண்டும். இல்லை எனில் அழுக்காறு திருவை அழித்து, தீயூழுக்கு உள்ளாக்கிவிடும். தீயானது தொட்டால் மட்டும் சுடும். அந்தக் காயம்கூட ஆறிவிட வாய்ப்புண்டு. ஆனால் அழுக்காறு எனும் தீயவள் ஏற்றும் தீ பிறவிதோறும் நிழல் போலத் தொடரும்…

வீட்டில் சிலந்தி வலைகளை அலங்காரத் தோரணம் என நினைப்பதில்லை. ஆனால் அளவற்ற அவாவை அழகுத் தோரணமாக நினைக்கிறோம். அழுக்காற்றுக்கு அடுத்தபடியாக அகற்றத்தக்கது. அவா என்கிறது வள்ளுவம். வாழ்வுக்கு ஆசை என்பது அடித்தளம். முறையான ஆசைகள் தான் முயற்சியைத் தூண்டி, நிலையான ஆக்கங்களுக்கு வழிகோலுகின்றன. அதை விடுத்து பிறரைப் போலத் தானும் ஒரு நொடியில் பெரியவராய் ஆகிவிட விழையும் பேரவாவினால் பெருந்துன்பமே மிகும். பிறரைப் போல, தானும் தகுதியை வளர்த்துக்கொண்டு ஆசைகளை அடுக்கு மாடிகளாக ஆக்க முற்படுவதில் தவறில்லை. ஆனால் அளவிறந்த, தவறான, தீய பேராசையால் அலைந்து திரிவதே குற்றம். முரட்டுத்தனத்தையும், மூர்க்கப் போக்கையும் கைக்கொண்டு எப்படியும், எதையும் பெற்றுவிடத் துணியும் அந்தப் பேரவா பேரிழப்பையே தருகிறது; மனத்தை மீளமுடியாத ஆசைப் படுகுழிக்குள் தள்ளிவிடுகிறது. எனவேதான் அறம் எனும் வாயிலில் நுழையும் முன்னர் அழுக்காற்றையும், அவாவையும் களைந்திடு என்று வள்ளுவம் ஆணையிடுகிறது. பேராசையால், பொறாமையால், அகந்தையால், அகங்காரத்தால், கோபத்தால், பகையால், குரோதத்தால் பிறருக்குத் தீமை செய்தால் அவனை அறக்கடவுள் அழித்துவிடுவார் என வள்ளுவம் எச்சரிக்கின்றது.

“ஒழுக்காறாக் கொள்க; ஒருவன்தன் நெஞ்சத்து

     அழுக்காறு இல்லாத இயல்பு”        (161)

     மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்

     அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு”        (204)

அறம் எனும் வாழ்க்கை வாயிலில் புகும்போது களைந்துவிட வேண்டிய அழுக்காறு, அவாவைப் போல, வெகுளியும் இன்னாச் சொல்லும் மிக முக்கியமானவை. கோபம் மனிதனை நிலைகுலையச் செய்துவிடும். வெகுளி, சினம், கோபம் எனும் பல வகையால் சொல்லப்படும் இது சில சமயங்களில் வாழ்க்கைப் போக்கில் அவசியமாகத் தேவைப்படுவது போலத் தோன்றலாம். ஏந்திய கொள்கையரும், சான்றோரும் சினம் கொள்ளவில்லையா? எனக் கேட்கலாம். கணத்தில் மாறிவிடும் நலன் கருதிய, இயல்பான, நல்ல கோபத்தை இங்கே குறிப்பிடவில்லை. அழுக்காறும், அவாவும் தூண்டி எரிய வைக்கும் ஆகா வெகுளியையே வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். வைரம் பாய்ந்த மரத்தைக் காற்று வீழ்த்தி விடுவதில்லை; வலிமையற்ற மரத்தைக் காற்று அலைக்கழிப்பது போல, பண்பாட்டால் உரம் பெறாத மனத்தையே வெகுளிக் காற்று அசைத்து வீழ்த்தும். ஓடுகிற வண்டியை ஆபத்துக் கண்டதும் உடனே நிறுத்திவிடும் சாரதியைப் போல, கோப உணர்வு ஒரு வேளை மூண்டால் அடக்கிவிட வேண்டும். அதை அடக்கிக் கொள்ளாத பண்பற்றவர்களின் வெகுளியால் அற வாழ்வுக்கு தனது – பிறரது வாழ்வுக்கு எல்லையற்ற இடரே விளையும்.

வெகுளி என்பது தீயைப் போல, எரியக்கூடிய பொருளை எரித்துவிட்ட பின்னரே தானாக அவியும்.  அதுபோல வெகுளியும் வெகுளிகொண்ட மனிதர்களை அழித்த பின்னரே, தானாக அடங்கும். இந்த வெகுளி, தனக்குப் பிரியமானவர் களைக்கூட ஒரு நொடியில் வேண்டாதவர்கள் ஆக்கி விடும். முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்கக் கண்டதும் நண்பர்கள் கூடத் தானாக நகர்ந்து விடுவர். அடக்கி வைத்த வெப்பம் சக்தியாக மாறிப் பயன் அளிப்பது போல, உரிய தருணத்தில் அடக்கிக் கொள்ளும் வெகுளியே ஆற்றலாக மாறும்; கோபம் தோன்றுதல் மனித இயல்பு.

அடங்காச் சினம் கொள்பவன், தன் கையால் நிலத்தில் ஓங்கி அறைந்துவிட்டு பின்னர் கை வலியால் வருந்துபவனைப் போலவே துயரடைவான். இந்த அடங்காச் சினம் அவனது அற உணர்வை முளையிலேயே தீய்த்துவிடும்.

“சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு

     நிலத்தறைந்தான் கைபிழையா தற்று”   (307)

“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

     செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்” (91)

அடங்காச் சினம் எரியும் முதல் அம்பு இன்னாச் சொல். கண்மூடிச் சினம், காது பொறுக்காத சொற்களை வீசும். சொல் பிறக்குமிடம் நாக்கு. மனித உறுப்புகளில் நீர்ப்பசை சூழ விளங்குவன கண்ணும் நாக்கும். கண்ணுக்கு நீர்மை கண்ணோட்டம் இவற்றுள் எந்நேரமும் ஈரப்பசையோடு இருப்பது நாக்கு. சுரக்கும் ஈரம் மட்டும் நாக்கின் ஈரம் இல்லை. அதனினும் சிறந்த ஈரங்கள் உள்ளன. அன்பு, இனமை, உண்மை, இங்கிதம், பரிவு, பாசம், நேசம், நிறைவு எனும் பலவித நீர்மைகளில் படிந்து நாக்கு இயங்குகிறது. அவ்வாறு தான் இயங்கவேண்டும் என்கிறார் வள்ளுவர்.

“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

     செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்” (91)

என்பதே வள்ளுவர் வாய்ச்சொல்.

பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் கூட – அதை இதமாகச் சொல்ல வேண்டும். அதுவும் முடியா விட்டால், பதம் கெட்ட வார்த்தைகளால் அடிக்கக் கூடாது. அதனால்தான் இனிய சொல்லாவிட்டாலும் இன்னாச் சொல்லைக் கைவிடுக என வேண்டுகிறார் வள்ளுவர். இன்சொல்லின் விலை மலிவு, எளிது. இது கையிருப்பாக உள்ளது. ஆனால் அதன் மதிப்பு அதிகம். வன்சொல்லின் விளைவு கொடிது. அதனால் விளைவது நாசம். சொன்ன இன்னாச்சொல் திரும்பி வருவதில்லை. எனவே வள்ளுவம் இன்னாச்சொல்லையேனும் கைவிடுக என வலியுறுத்து கிறது. அறன் எனும் வாழ்க்கை வாயிலில் நுழையும் முன்னர் – அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் எனும் நான்கையும் கட்டாயமாகக் களைய வேண்டும், நீக்க வேண்டும். பொறாமையும், பேராசையும், கோபமும், குரோதமும், கடுஞ்சொல்லும் எவ்வளவு செல்வம் படைத்தவர் களையும் அழித்துவிடும். நிகழ்காலத்தில் வாழும் துரியோதனர்கள், சகுனிகள் இதனை உணர வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவைகளில் இருந்து நீங்கியவர்கள் இன்பமும், புகழும், நிறைவும் நிரம்பப் பெற்று திருமகளைக் கைப்பிடித்து வாழ்வர். இத்தகைய நல்லோர்களின், அறவோர்களின் புகழை, சமுதாயம் என்றும் போற்றிப் பெருமை செய்யும். சமுதாயத்தில் ‘அல்லவைதேய அறம் பெருகும்.’

 

புலால் மறுத்தல்

 

உணவிற்காக உயிர்களைக் கொல்வது மிகக் கொடுமை யாகும். உலகத்தில் பலர் புலால் உணவு உண்பவர்கள். அவர்களுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுகின்றன. எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எல்லா உயிர்களும் அருமையானவை. தற்காத்துக் கொள்ள முடியாத உயிர்களைப் பதைபதைக்கக் கொல்வது பாவமாகும். நமது உடம்பில் ஏதேனும் ஓர் உறுப்பை இழக்கச் சம்மதிப்போமோ? நாம் பிற உயிரைக் கொல்லலாம் என்றால் நம்மையும் பிறர் கொல்லலாம் அல்லவா? பிற உயிர்களைப் பேணாது நம் உடம்பை வளர்ப்பதற்காக பிற உயிர்களைத் துடிதுடிக்கக் கொன்று தின்று வாழ்வது என்ன வாழ்க்கை?

நம்மோடு தொடர்பு இல்லாதவர்களிடமும் காட்டும் அன்புதான் கருணை. பிறர்படும் துன்பத்தைக் கண்டு வருந்தி உருகுவதுதான் கருணை. பிறர் துன்பத்தைத் தீர்க்க முயல்வதும் கருணை.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்க வேண்டும் என்பார் வள்ளலார்.

கருணை மிக்கவர்கள் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் நேசிப்பார்கள்.

அருள் ஆட்சி உள்ளவர்களுக்கு உயிர்களிடம் இரக்கம் உண்டு. தன் உடம்பை வளர்ப்பதற்காகப் பிற உயிர்களின் உடம்பைக் கொன்று தின்பவனுக்கு அருளாட்சி உண்டா என்று வினவுவார் வள்ளுவர்.

“தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

     எங்ஙனம் ஆளும் அருள்?”           (251)

தோலை நீக்கிவிட்டால் உடம்பின் உட்பகுதி புண் வடிவத்தில் தோன்றுகின்றது. சிறிது வெளியே தெரிந்தாலும் அருவருப்பு ஏற்படுகிறது. நமது உடலின் புண் நமக்கு அருவருப்பாக இருக்கிறது; பிறருக்கும் அருவருப்பாகத் தோன்றுகிறது. ஆதலால் அப்புண்ணை வெளிக்காட்டாமல் மறைத்து விடுகிறோம். நாவின் சுவையை மட்டும் கொண்டு இந்த அருவருப்பை மறந்து விடுகிறோம். புண்ணுக்கு என்ன என்ன தன்மை உண்டோ அனைத்தும் புலாலுக்கும் உண்டு. சுவையை மறந்து விட்டால் அது மற்றோர் உடம்பின் புண் என்று உணர்வோம்; அருவருப்பு அடைவோம். இதை உணர்ந்தாவது புலால் மறுக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.

“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்

     புண்அது உணர்வார்ப் பெறின்.”      (257)

பிற உயிர்களின் உடலைக் கொன்று தின்று சுவை கொண்டவன் சுவையிலே வெறி கொள்வானே தவிர நன்மையில் பெரிதும் நாட்டம் கொள்ள மாட்டான். படைவீரன் போர்க் கருவிகளை, கொலைக் கருவிகளைக் கொண்டு உயிர்களை அழிக்கும்போது ஏற்படும் வெறி போல் புலால் உண்பவனும் கருணையற்றவனாய் சுவை வெறி கொண்டு நன்மையை நாட மாட்டான்.

“படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்

     உடல்சுவை உண்டார் மனம்”              (253)

வாழ்வில் அருளாட்சியை இலட்சியமாகக் கொண்டவர்க்கு எந்தச் சூழ்நிலையிலும் புலால் மறுத்தலே தவமாகும். உயிர்க் கொலையால் வரும் புலால் உணவு மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பது; உடல் வளர்ச்சிக்கோ, மன நலத்திற்கோ பயன் தராதது; துன்பத்தையும் பாவத்தையும் தருவது.

“அருள்அல்லது யாதுஎனில் கொல்லாமை கோறல்

     பொருள்அல்லது அவ்வூன் தினல்”           (254)

புலால் உண்ணாமை என்பது அருளை அடிப்படையாகக் கொண்டது. அறத்தின் அடிப்படையில் புலால் உண்ணாமை என்ற அருள்உணர்வு உடம்பினுள் வந்து தங்கியுள்ளது.

ஊனைத் தின்பவர்க்குத் துன்பம் தரும் நரகம்தான் கிடைக்கும். ஊன் தின்பவரைக் கொடுமை மிகுந்த நரகம் விழுங்கும். அங்கிருந்து அவ்வுயிர் மீள முடியாது. இவ்வுயிர் மீண்டும் வந்து பிற உயிர்களைக் கொலை செய்து வயிறு வளர்க்கும் கொடுமையைப் பொறுக்காது நரகம் கூட வாயை மூடிக்கொள்ளும். உயிர் வெளியேற முடியாமல் வாயைத் திறக்காது மூடிக்கொள்ளும். இதை வள்ளுவர் அழகாகக் கூறுகிறார்.

“உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண

     அண்ணாத்தல் செய்யாது அளறு.”          (255)

மாமிசம் உண்பவர்களை, புலால் உண்பவர்களைப் பார்த்து, ‘உயிர்க்கொலை செய்யாதீர்கள், மாமிசம் உண்ணாதீர்கள்’ என்று கூறினால், அவர்கள் ‘நாங்களா கொல்கின்றோம்? கடையில் விற்பனையாகும் புலாலைத்தான் மாமிசத்தைத்தான் வாங்குகின்றோம். நாங்கள் கொன்று பாவம் செய்வதில்லை’ என்று கூறுவார்கள். வள்ளுவர் இங்குதான் அழகான பொருளாதாரத் தத்துவத்தைக் கூறுகிறார். தேவை இருந்தால்தான் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வார்கள் தேவை இல்லை என்றால் அங்கு உற்பத்தி இல்லை. ‘ஞிமீனீணீஸீபீ ணீஸீபீ ஷிuஜீஜீறீஹ் ஜிலீமீஷீக்ஷீஹ்’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தேவைதான் உற்பத்திக்கும், வியாபாரத்திற்கும் காரணம்.

மாமிசத்தை உண்பவர்கள் இருப்பதால்தான் அத் தேவையைப் பூர்த்தி செய்ய மாமிச விற்பனை நடைபெறுகிறது. அந்த விற்பனைக்காகவே உயிர்கள் கொல்லப்படுகின்றன. புலால் உண்பவர்கள்தான் உயிர்க்கொலைக்கு மூல காரணமாக இருப்பவர்கள் அவ்வகையில் மாமிசம் உண்பவருக்கே அதிகப் பாவம் விளைகின்றது.

“தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்

     விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்”    (256)

தற்போது மேலைநாடுகளில் கூட புலால் மறுப்பு இயக்கம் அமைதியாகவும் வேகமாகவும் நடந்து வருகிறது. மாமிசம் உண்பவர்களை விட சைவம் உண்பவர்களுக்கே நோய் விரைவில் குணமடைகின்றது. புலால் உணவு வலிமை தரும் என்பது தவறானது. விரைந்து ஓடும் குதிரையும் வலிமை மிகுந்த யானையும் புலால் உணவா உண்கின்றன? வாழ்வின் பயன் ஒழுக்கமும், கல்வியும், அறிவும் பெற்று உடல்நலமும், உள்ள நலமும், மனஅமைதியும், இன்பமும் பெற்றுக் கருணை மிகுந்தவராய் இறைநிலை அடைதலே ஆகும். இதற்கு அடிப்படை புலால் மறுத்தல் ஆகும்.

பிற உயிர்களை உணவிற்காகவும், மற்ற காரணங்களுக்கும் கொல்லாமல் இருக்க வேண்டும். பிற உயிர்களைப் பாதுகாத்து, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் வேண்டும். இவ்வாறு ஓர் உயிரையும் கொல்லாது, பிற உயிர்களைப் பாதுகாத்து, விற்பனைக்கு இருக்கிறது என விற்கும் புலாலையும் மறுத்தும் தவிர்த்தும் இருக்கும் ஒருவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் சென்று தொழுது ஏத்தி வாழ்த்தி நிற்கும் என்று வாழ்த்துகிறார் வள்ளுவர்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

     எல்லா உயிரும் தொழும்.”                (260)

 

 

கள்ளுண்ணாமை

சமுதாயம் சிக்கல்கள், துன்பங்கள் நீங்கி இனிதே செழித்து ஓங்கி வளர வேண்டும்.

சமுதாயத்திற்குத் துன்பங்கள் ஏற்படுத்துவன எல்லாம் மக்களின் தவறான நடத்தைகளும் குற்றங்களும் ஆகும். குற்றம் என்பது தனக்கே இழைத்துக் கொள்ளும் தீங்கும், பிற மனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் இழைக்கும் தீங்கும் ஆகும்.

இக்குற்றங்கள் பழங்காலத்திலிருந்தே தொடர்ந்து வந்துள்ளன. இக்குற்றங்கள் இன்று மிகுதியும் பெருகியுள்ளன.

இக்குற்றங்களும் தீமைகளும் நீக்கப்பட்டால்தான் சமுதாயம் இன்பம் நிறைந்ததாய், வளம் நிறைந்ததாய் வாழ்வு பெறும்.

சமுதாயக் குற்றங்களில் இன்று தலையாய குற்றமாய்ப் பெருகி வருவது குடி கெடுக்கும் குடி ஆகும். சிறுமை பல செய்து சீரழித்து வறுமையையும் துன்பத்தையும் பரிசாகத் தருவது குடியாகும்.

விரைவில் வளரும் புறநாகரிகமும் மாற்றங்களும், அக நாகரிகத்தை வளர்க்கவில்லை. தன்னலம் மிகுந்து, சூழலைப் பாழ்படுத்தி மற்றவர்களைப் பற்றி அக்கறையின்றி, பொறுப்புணர்வு இல்லாமல் வாழும்போது கேடு சூழ்கின்றது. வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், ஏமாற்றங்கள், மனக்குறைகள், குடும்பப் போராட்டம் இவைகளால் எழும் கசப்புணர்வுகள், குற்றங்கள் பெருக வித்தாகின்றன.

குடி மனிதனின் சிந்தனை ஆற்றலையும், ஆக்க அறிவினையும் மழுங்கச் செய்துவிடுகிறது. குடிப்பழக்கம் ஒடுக்கப்படாவிட்டால் சமுதாய நிலை பாழ்பட்டுப் போகும். குடி, மனிதன் மனத்தை மயங்க வைத்து, தீய நினைவுகளை உருவாக்கும். தீய நினைவுகளின் பயன்களாகவும் பலன்களாகவும் விளைபவை கீழ்மையும், துயரும், துன்பமும் ஆகும்.

கள்ளும், மதுவும் மனிதரை மயக்கி அழிக்கும் ஆற்றல் உள்ளவை. கள்ளுண்டவர் நஞ்சுண்டவர் ஆவர். கள் வெறியால் என்றும் போதையிலே மயங்கி, பேதையாய், பிணம் போல் கிடப்பர். இறந்தவர்களுக்கும் கள்ளுண்டு மதுவுண்டு மயங்கிக் கிடப்பவருக்கும் வேறுபாடு இல்லை, வேற்றுமையில்லை என்று குடியைக் கடிந்து பேசுவார் வள்ளுவர்.

“துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்

     நஞ்சுஉண்பார் கள்உண் பவர்”        (926)

குடி வெறியர் பகைவருக்கு மிகவும் எளியவர் ஆவர். குடி வெறியரைக் கண்டு பகைவர் அஞ்சமாட்டார்; ஏளனம் செய்வார்.

பெற்ற தாய் குற்றங்களைப் பொறுக்கக் கூடியவள். தாய்ப்பாசத்திற்கு இணையான வேறு பாசம் உண்டோ? குற்றங்களை எல்லாம், வெறுக்கும் தகைமைகளை எல்லாம் பொறுக்கும் பெற்ற தாயும் குடியர் முகத்தில் விழிக்காது வெறுத்து ஒதுக்குவாள் என்றால் சான்றோர் வெறுப்பைக் கூறவும் இயலுமோ?

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்

     சான்றோர் முகத்துக் களி?”           (923)

பணத்தையும் கொடுத்து உடலைக் கெடுத்துப் பிணம் போல் படுக்கச் செய்யும் போதையில் விருப்பங்கொண்ட பேதைகள், அறிவிலிகள் போல் வேறு யாரும் உண்டா?

“கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

     மெய்அறி யாமை கொளல்”               (925)

என்று இரக்கப்படுவர் வள்ளுவர்.

கள்ளின் மேல் விருப்பங்கொண்டு, கள்ளின்மேல் காதல் கொண்டு திரிபவர் எப்போதும் யாராலும் அஞ்சப்பட மாட்டார்; நன்மதிப்பையும் புகழையும் இழப்பர்.

“உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்

     கட்காதல் கொண்டுஒழுகு வார்”      (921)

பாதை மாறிச் சென்று என்றும்  போதை கொண்ட, பேதையருக்கு, கள்ளுண்டு மயங்கிக் களித்தவனுக்குக் காரணம் காட்டித் தெளிவித்தல் வீணாக முடியும். அம்முயற்சி நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுதலுக்கு இணையாகும்.

“களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

     குளித்தாணைத் தீத்துரீஇ யற்று”       (929)

மதியை அழித்து மானம் கெடுக்கும் குடிப்பெருமை அழிக்கும் குடியை நீக்கிச் சமுதாயம் வாழ வேண்டும்.

மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா போன்ற பெரியவர்கள் மதுவிலக்கில் தீரத்தோடு காட்டிய தீவிரம் இன்று பின்பற்றப் பட வேண்டும்.

குடியால் விளையும் தீமைகளை நன்கு உணர்ந்து, குடியால் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் சீரழிவு, வேலை இழப்பு, உழைப்புத் திறன் குறைதல், குழந்தைகளின் எதிர்காலம் பாழ்படுதல் இவைகளையெல்லாம் சிந்தித்து ஹரியானா மாநிலத்தைப் போல் நம் நாட்டிலும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும்.

‘உண்ணற்க கள்ளை’ எனக் கள்ளுண்ணாமையைத் தனி நபர் ஒழுக்கமாகவும் சமுதாய ஒழுக்கமாகவும் போற்ற வேண்டும்.

சமுதாய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் முடிவில் இன்பம் தரும் செயலாயின் முதலில் செயல்படுத்தும் போது துன்பம் வரினும் தொடர்ந்து சோர்வின்றி உறுதியோடு செய்து முடித்தல் வேண்டும்.

“துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

     இன்பம் பயக்கும் வினை”      (669)

கற்புடைமை

கற்புடைமை*

மனத்தைச் செம்மைப்படுத்தி, பண்படுத்தி, அலைய விடாமல் ஒருமைப்படுத்தி தன்னைக் காத்துக் கொள்ளும் மன உறுதியே கற்பாகும். கற்பு பெண்ணுக்கும் ஆணுக்கும் மாந்தர் அனைவருக்கும் பொதுவானது.

நாம் வாழும் சமுதாயம் பெரும் மாற்றம் பெற்று வளர்ந்து வருகிறது. பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல், ஆண்களைப் போல வெளியில் கடமை உணர்வோடு வேலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தை. மனைவியைக் கணவன் மட்டும் காப்பாற்றுதல் என்ற கொள்கை மாறிவருகிறது. திருக்குறளில் வள்ளுவர் மனையறத்திற்குக் கணவனைத் ‘துணை’ என்று கூறவில்லை. மனைவியைத்தான் ‘வாழ்க்கைத் துணை’ என்று கூறுகிறார்.

மனைவி தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையவளாக இருக்க வேண்டும். தன்னைத் துணையாக நம்பி மணம் செய்துகொண்ட கணவனைத் தன் கடமைகளாலும், தொண்டுகளாலும் காப்பாற்றும் திறன் படைத்தவளாக இருக்க வேண்டும்.

தன்னை நேசிக்கும், நம்பியிருக்கும் கணவனை அன்பினால் இணைத்துக்கொண்டு, அவனே எல்லாம் என்று அவனிடம் கொண்ட உறவு ஒன்றிலே ஒன்றி நிற்கும் மன உறுதியே, மனத்திண்மையே கற்பாகும்.

இம் மனஉறுதியே, மனத்திண்மையே அவளுக்கு காவல். எந்தச் சூழலிலும் பிற ஆண்களிடமும் தன் மனத்தில் எதிர்பாராது தோன்றும் ஆசைகளிலிருந்தும் சலனங்களிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்வதுதான் மனத்திண்மையாகிய ஒழுக்கம் மிகுந்த கற்புடைமை ஆகும். கணவன், குடும்ப நல்வாழ்வு, பிறந்த குடி, புகுந்த குடி இவைகளின் மேன்மைக்காகப் பெண்ணானவள் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறாள்.

தன்னையும், தன்னை மணந்தவனையும், தன் குடிப்பெயரையும் காப்பாற்றியும், எக்காலத்திலும் அப்பெருமையில் சிறிதுகூட வழுவிவிடாத ‘சோர்விலாத’ பெண்ணே பெருஞ்சிறப்புப் பெற்றவள். வாழ்க்கைக்கு இவளைத் தவிர துணை வேறு யாதும் இல்லை. இத்தகைய பெண்ணை ஒருவன் மனைவியாக அடையும் பேற்றினை விட மிக உயர்ந்த பேறு வேறு ஒன்றும் இல்லை என்பதை வள்ளுவர்,

“பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும்

     திண்மை உண்டாகப் பெறின்?”       (54)

என்று கூறுவார்.

எப்போதும் கணவனின் நல்வாழ்வு ஒன்றையே கருதி வாழ்பவள், அந்நினைவிலே ஒன்றிவிடுவதால் தவம் செய்பவர்களின் ஆற்றலைப் பெற்றுவிடுகிறாள். சாதாரணப் பெண் இவ்வொன்றிய உணர்வால் மாற்றம் பெற்று அளப்பரிய ஆற்றல் பெற்றுவிடுகிறாள்; சக்தி வடிவாகிவிடு கின்றாள். அவள் எண்ணியதை எண்ணியபடி பெறும் தவ ஆற்றல் பெறுகின்றாள்.

“வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

     வீழ்வார் அளிக்கும் அளி”                 (1192)

என்பார் வள்ளுவர். கணவன் மனைவிக்குக் காலமறிந்து காட்டும் பேரன்பு போல், காலமறிந்து உயிர்களை வாழவைக்கும் பருவமழை போன்றவள் கற்புடைய பெண், இப்பெண் பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யும் மழை போன்றவள். இச்சிறப்பை வள்ளுவர்,

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்

     பெய்எனப் பெய்யும் மழை”               (55)

என்று பாராட்டுவார்.

பெண்களுக்குக் கற்பு எவ்வளவு அவசியமோ அதே போல ஆண்களுக்கும் கற்பு அவசியம் என்று வலியுறுத்துவார் வள்ளுவர்! பெண்களின் கற்பு நிலைக்க வேண்டுமானால் ஆண்களும் தங்கள் கற்பைக் காப்பாற்ற வேண்டும். அதனால்தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்பைப் பொது நெறியாக வைக்க வேண்டும் என்று பாரதியும் வலியுறுத்துவார். ‘பிறன்மனை நோக்காத பேராண்மை’ என்று பிறன்மனை நோக்காத ஆண்மையே பேராண்மை என்றும், மற்றவையெல்லாம் ஆண்மையன்று என்றும் வள்ளுவர் கூறுவார்.

மனத்தை அலையவிட்டு, ஒழுக்கமில்லாமல் தீயஆசை என்ற புதைமணலில் சிக்கி, மயக்கம் காரணமாகத் தீய செயலில் இறங்குபவன் இனிய இல்லற வாழ்வைச் சிதைத்து விடுகிறான்; சமுதாயத்தின் புனித அமைப்பைச் சீர்குலைத்து விடுகிறான்; சமுதாயப் புற்றுநோய் ஆகிவிடுகிறான்; தானும் அழிந்தும், பிறரும் அழிவதற்குக் காரணமாகி விடுகின்றான்.

“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

     நின்றாரின் பேதையார் இல்.”              (142)

“பகை,பாவம், அச்சம், பழிஎன நான்கும்

     இகவாவாம் இல்இறப்பான் கண்”           (146)

என்று கடிந்து பேசுவார் வள்ளுவர்.

பெண்ணின் கற்பு என்பது பெண்ணின் மனத்திண்மை, சுயகட்டுப்பாடு, மனவுறுதி ஆகும். புறக்கட்டுப்பாடு, சிறை காக்கும் காப்பு, காப்பு அன்று, பாதுகாப்பு அன்று; குடும்பப் பொறுப்பும், மான உணர்வும், சுயகௌரவமுமே பாதுகாக்கும் அரண்கள். இவ்வுண்மைகள் ஆண்களுக்கும் பொருந்தும்.

“சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்

     நிறைகாக்கும் காப்பே தலை.”        (57)

 

 

செய்க பொருளை*

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திடப்’ பொருள் வேண்டும். ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என அறுதியிட்டுக் கூறிய வள்ளுவப் பேராசான், ‘செய்க பொருளை!’ என மாந்தருக்கெல்லாம் அறிவுறுத்துகிறார். குறள் முழுவதிலும், பல்வேறு மாந்தருக்கும் நிலைக்கும் ஏற்றவாறு, வெவ்வேறு நடைத்திறங்களைக் கையாளும் வள்ளுவச் செம்மல், ‘உண்ணற்க கள்ளை’ எனத் தீய பழக்கத்தைக் கைவிடுமாறு வியங்கோளாக வேண்டுதல் நடையில் கூறிய வள்ளுவர், இங்கே, ‘செய்க பொருளை!’ என ஆக்க நெறிக்கு ஆட்பட வருமாறு கட்டளையிடுகிறார்; கண்டிப்பாக வற்புறுத்துகிறார்.

தனிநபர், குடும்ப, சமுதாய உயர்வுகளுக்கு மட்டுமன்றி, ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் பொருள் வளம் மிகமிக இன்றியமையாதது. உலகின் புகழ்பெற்ற நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், இரசாயனம், உலக அமைதி, இலக்கியம் ஆகியவற்றில் சாதனை புரிந்த சான்றோர்க்கு வழங்கப்படுவதோடு மற்றுமொரு மாண்பார்ந்த துறைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதுதான் பொருளாதாரம் எனும் பொலிவுமிகு துறை. இப் பொருளாதார இயலில், புதியதொரு சித்தாந்தத்தை ஆய்ந்து விளங்கும் அறிஞருக்கு அப்பரிசு அளிக்கப்படுகிறது. வரலாறு, புவியியல், தத்துவ இயல் முதலியவற்றிற்குக் கிட்டாத நோபல் பரிசைப் பெறும் பெருமையும் பொருளாதார இயலுக்குக் கிட்டியிருப்பதே ‘பொருள்’ எனும் வாழ்வுண்மைக்கு அளிக்கப்படும் சிகரச் சிறப்பு எனக் கருதலாம்.

தமிழர்கள் வாழ்க்கை எனும் மாடத்திற்கு நாட்டிக் கொண்ட உறுதிப் பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் தொல்காப்பியம் தொட்டு, அனைத்துக் காலங்களிலும், புதுப்புதுச் சிந்தனைகளால் பொலிவு பெற்று, மெருகேறி வந்துள்ளன. ஆனால், வள்ளுவர், ‘வீடு’ என்பதனைத் தனியாக விரித்துப் பேசவில்லை! அறம், பொருள், இன்பம் என முப்பாலாக்கி, அறநெறிக்கும், இன்ப நுகர்விற்கும், பொருளையே நடுவணாக அமைத்து, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட வேண்டுமானால், வையகத்துள் வாழ்வாங்கு, இன்பமுற வாழ்ந்தால் போதும் என எல்லை கோலுகிறார்.

மனித இனம் கண்ட வலிமையானதொரு சமுதாய வரன்முறை ‘நாடு’ எனும் அமைப்பு. இந்த நாடு எனும் நிலப்பரப்பு மேடாக இருக்கலாம், பள்ளமாக இருக்கலாம்; காடாக இருக்கலாம், கட்டாந்தரையாகப் போகலாம்; பசுமையாகச் செழிக்கலாம், பாலைவனமாகவும் மாறிப் போகலாம். ஔவைப் பெருமாட்டி அருளிய புறநானூற்றுப் பாடல்,

“நாடாகொன்றோ, காடாகொன்றோ;

     அவலாகொன்றோ, மிசையாகொன்றோ;

     எவ்வழி நல்லவர் ஆடவர்;

     அவ்வழி நல்லை வாழிய நிலனே”          (187)

என மக்களோடு நிலத்தை வாழ்த்துவது போல, வாழும் நிலப்பகுதி எப்படி இருப்பினும், அதில் வதியும் மக்கள், நல்லவர்களாய், வல்லவர்களாய் இருப்பின், நிலமும் சிறந்து உயரும்; நிலத்தில் வாழும் மக்களும் நிலை உயர்ந்து தலைமை பெறுவர் என வரலாற்றில் படிக்கிறோம்.

வள்ளுவர் ஒரு ‘நாடு’ என்பது, எப்படி எல்லாம் இருத்தல் வேண்டும் என்பதற்குத் தனி அதிகாரமே செய்துள்ளார். வள்ளுவரைப் போல உலகில், நாடு என்பதனை விளக்க, சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், சாணக்கியர், மாக்கியவெல்லி, மார்க்ஸ் முதலியோர் காலம் காலமாக எண்ணற்ற இலக்கணங்களைப் புதுப்புதுவகையாய் எழுதி இருப்பினும் அவை எல்லாம் வள்ளுவரது ‘நாடு’ அதிகாரத்தின் 10 குறட்களுக்கு உள்ளேயே அடங்கி விடுகின்றன. அந்த அளவுக்கு அடிப்படை உண்மைகளை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் வள்ளுவர் பெருமான்.

‘நாடு’ என்பது நாடாத வளங்களை, எல்லாம், தன்னகத்தே கொண்டதாக அமைந்திருப்பது சிறப்பு. எல்லா நாட்டிற்கும் இத்தகைய இயற்கைக் கொடை கிட்டிவிடுவதில்லை.

ஒரு நாட்டில் எவ்வளவுதான் இயற்கைச் செல்வங்களும், எண்ணற்ற கனி வளங்களும், ஏடு தொலையாத நிதி நலன்களும் எல்லைகாணவியலாது பொதிந்து கிடந்தாலும் அவை எல்லாம், ‘தொட்டனைத்தூறும் மணற்கேணியைப் போல’ மனிதர்களின் தொடர்ந்த முயற்சிக்கும், முற்போக்குச் சிந்தனை முனைப்பிற்கும் தக்கவாறே ஒன்றாய் பலவாய் பயன் நல்கும்.

ஒரு நாட்டிற்கு நான்கு திசைகள்தான் எல்லை என வள்ளுவர் கருதவில்லை. இசையும் துறைகளை எல்லாம் எல்லைகளாக்கிக் கொள்ளலாம் என்றே நினைத்தார்.

பிணி இன்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமமாகிய காவலரசு ஆகிய ஐந்தும் நாட்டுக்கு உரிய நல்லணிகள்; நவைபடா அரண்கள் என்கிறார் வள்ளுவர். செல்வமாகிய சிந்தை நிறைவால் முதலீடு செய்து, உழைப்பால் விளைவு களைப் பெருக்கி, பிணி இன்மை எனும் பெருநலத்தோடு, இன்பம் தழைக்க, இனிது வாழலாம் என்றாலும், இவை நான்கிற்கும் வலுவான, நிலையான, ஏமமாகிய காவலும், கண்போலக் காக்கும் அரசமைவும் கட்டாயம் வேண்டும் என்கிறார் அவர். மேலும், எல்லா அமைவுகளும் இருந்து, வேந்தமைவு, நல்ல ஆட்சிப் பேறு இல்லாத நாடு, தலைமை பெற்று நீடித்து நிற்கமுடியாது என்கிறார்; பல்குழுவும், பாழ் செய்யும் உட்பகையும், அரசை அன்றாடம் அலைக்கழிக்கும் வன்முறைக் குறும்புகளும் ஒரு நாட்டில் கள்ளியாய்ப் படராமல் இருப்பது அந்த நாட்டின் இறையாண்மையைப் (ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) பொறுத்தது என்கிறார்.

நாட்டிற்கு ஆகாதன இவை இவை எனச் சொன்னமை போல, நாட்டு உயர்வுக்கு ஆக்கம் தருவனவும் இவை இவை என வள்ளுவக் குறளின் பொருட்பால் புதுமைக்குப் புதுமையாய் விளங்குகிறது:-

“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்

     செல்வதும் சேர்வது நாடு”      (731)

குன்றாத விளைவுகளும், கூட்டிச் சேர்க்கும் உழைப்பார்வம் மிக்க, தகுதி வாய்ந்த மக்களும், இவற்றை எல்லாம் கொண்டு செலுத்தும் குறைவற்ற செல்வரும் நாட்டின் முப்பரிமாணம் போன்ற அங்கங்கள்; ஆக்கங்கள். உலகப் பொருளாதாரச் சிந்தனையில் செல்வர்களை எல்லாம் முதலாளிகள் எனப் பேதப்படுத்திப் பார்க்கும் வர்க்கப் போராட்டச் சிந்தனைகளும், அவற்றைத் தூண்டும் சுயலாப ஆதிக்கப் போக்கும் அண்மை வரலாற்றில் இடர்ப்பாடான நிலைகளைத் தோற்றுவித்துள்ளன. என்றாலும், இந்த நூற்றாண்டில் நாம் வாழும் இந்தக் காலகட்டப் பகுதியில் அச்சிந்தனைப் போக்கிலும் புதிய திருப்பங்கள் ஏற்பட்டே வருகின்றன.

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் & அவன்

     காணத்தகுந்தது வறுமையாம்;

     பூணத்தகுந்தது பொறுமையாம்”

என்றும்,

“பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்

     புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்”

என்று பாரதிதாசன் குமுறியமை போல, ஏழையர் இன்னலுறவும், செல்வர்கள் நாளுக்கு நாள் சீமான்களாகச் செழிக்கவும் நேரிட்டன என்பதும் வரலாற்று உண்மைதான் என்றாலும், முதலாளித்துவமும் தொழிலாளி வர்க்கமும் எதிர்த் துருவங்களாகவே என்றும் இராமல், சமநிலைச் சந்திப்பிற்கு வரும் புதிய வரலாறு புலப்பட்டு வருவதும் நம் கண்களில் படுகிறது. இரு சாராரும் தத்தமது பொறுப்புக்களை உணர்ந்து, கூடிச் செயல்படும் கூட்டுணர்வு உலகெலாம் அரும்பு கட்டி வருவதும் தெரிகிறது.

இத்தகைய நாட்டுணர்வும் கூட்டுணர்வும் உடைய செல்வர்களே, உழைப்பாளர்களே நாட்டுக்குத் தேவை என்பது வள்ளுவத் திட்டம். மண்வளம் கொண்ட நாட்டைத் தமது அதிக உழைப்புத் திறத்தால் மேலும் செழிப்புறச் செய்பவர்களே பெரிதும் வேண்டும் என்பதும் வள்ளுவப் பொருளாதாரக் கொள்கை.

பொருள் என்பது பணம் மட்டும் அன்று.

“பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருள்அல்லது இல்லை பொருள்”         (751)

எனப் பொருளுக்கு வள்ளுவர் எக்காலமும் ஏற்ற பொலிவு மிக்க விளக்கம் தருகிறார். உடல் உழைப்பு, மூளை உழைப்பு, நிர்வாகத் திறன், நிதி அளிப்பு, கொள்கை வரையறை, கூடிச்செய்யும் ஆக்கம் ஆகிய அனைத்தும் பொருளாகவே கருதப்படும். அறிவு நலமும், ஆக்கச் சிந்தனையும், ஆய்வுத் திறமும், ஊக்க முயற்சியும் செல்வக்கூறுகளாகவே, திருக்குறள் வகுக்கும் பொருள் செயல் வகைகளாகவே கருதப்பட வேண்டும்.

இயற்கை வளம் இயல்பாக அமையப் பெற்றிராத சிறுசிறு நாடுகள் கூட, தமது ஆட்சிச் சிறப்பால், ஆக்க பூர்வமான அணுகுமுறையால் உலகில் இன்று பொருளாதார முதன்மை பெற்று நிற்கக் காண்கிறோம். வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பக் கலைகளைத் தேர்ந்து; மேம்பாட்டு நோக்கோடு திட்டங்களை வகுத்து; பொதுநல உணர்வோடு அவற்றைச் செயலாக்கி; கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளைக் கைக்கொண்டு அந்நாடுகள் – சிறுநாடுகள் எனினும், சீமான் நாடுகளாக- வெற்றிவலம் வரக் காணுகிறோம். இயற்கை வளத்தோடு. தொழில் திறமையோடு, மனித உழைப்போடு கொண்டு கூட்டிச் செயலாற்றும் ‘வினைத்திட்பம்’ எனும் ஆக்கஆட்சி முறையையும், பொதுநலம் பேணும் சீரிய அணுகுமுறையையும் (ஷிஹ்stமீனீ) கொண்டுள்ள நாடுகள் அகிலத்தன்மை பெற்றுவரக் கண்டு அதிசயிக்கிறோம்; ஆச்சரியப்படுகிறோம்.

“வளமை எல்லாம் ஒரு நாடு தன்னகத்தே

     வகை வகையாய்க் கொண்டாலும் & அவற்றை

     வழிநடத்த ஆள் இல்லாது போனால், அந்நாடு

     படுத்திருக்கும் நந்தியாய் ஆகும்”

எனப் புதுக்கவிதை ஒன்று குரல் கொடுத்துள்ளது. அதுபோல வளமை பெற்றிருந்தும் வழிநடத்தத் தக்க தலைமை பெறாத நிறுவனங்களும் நாடுகளும் சவலைப் பிள்ளைகளாக, சாண் ஏறி முழம் வழுக்கும் அவலங்களாகவே தத்தளிக்கும்.

“பொருள்எனும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்

     எண்ணிய தேயத்துச் சென்று”         (753)

என வள்ளுவர் கூறுவது போல, பொருள் எனும் பொய்யா விளக்கம் தனது நாட்டில் உள்ள பகையை வென்று, பதப்படுத்தித் தருவதோடு நில்லாது, பிற தேசங்களுக்கும் சென்று அங்கும் இருளகற்றும் என்பதை இன்று நடைமுறையில் காணுகிறோம். ஒரு நாட்டின் செல்வங்கள், பிற நாட்டிலும் பொருளாதாரங்களாகப் பூத்துக் குலுங்கும் புதுமைகளைக் காணுகிறோம். உள்நாட்டு உரிமைகளைப் பாதிக்காத அந்நிய முதலீடுகள் பல நாடுகளில் ஊக்கு விக்கப்படுவதையும், அவை ஊற்றுக்களாகச் சுரப்பதையும் இன்றைய பொருளங்காடியில் காணுகிறோம்.

நாட்டு மக்களின் செய்வினைத் திறனே, நாட்டின் செல்வமாகச் சேருகிறது. மதிநுட்பம் நூலோடு உடையவர்கள், அறிஞர்கள் நாட்டுச் சிந்தனை உடையவர்களாக வழிகாட்டவும் தலைமை ஏற்கவும் முற்பட வேண்டும். இலாப நோக்கிற்காகத் தொழிலில் முதலீடு செய்வது போல, நாட்டு மக்கள் உயர்வுக்காகவும் தொண்டுள்ளத்தோடு, தியாகம் எனும் முதலீடாகச் செய்ய வேண்டும். ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ ஆகையால், அறிவோடு செல்வமும் உடையவர்கள், சொந்த முயற்சியால் தாம் உயர்ந்து, சொந்த நாட்டையும் உயர்த்தும்போது எல்லாம் உடையதாக நாடும் ஓங்கி நிற்கிறது.

நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலத்தில் இருந்தே, இத்தகைய பொருளாதாரச் சிந்தனை, நம் தமிழ் மரபின் ஊடு சரமாக விளங்கி வந்துள்ளது. பல்வேறு நாடுகளுக்குச் சென்று, தம் உழைப்பினை ஈந்து, அந்நாடுகளைச் செல்வச் செழிப்புடையதாக்கிய செய்தி எல்லாம் தமிழின வரலாறு என எழுதப்பட்டுள்ளது. காலச்சூழல் மாறியமையால், எதிர்பார்ப்புச் சிந்தனையும், வருமுன் காக்கும் பெற்றியும் சேர்ந்தமையாமையால், தமிழ் மக்கள் பல்வேறு நாடுகளில் குடியேறி வதியும் நிலையே பெரும்பாலாகத் தோன்றுகிறது. இவ்வாறு குடியேறி வாழ்வது, தமிழினத்திற்கு மட்டுமே ஏற்பட்டுவிட்ட வரலாற்று நிகழ்வில்லை; பல இன மக்கள், பல நாடுகளில் குடியேறி வாழும் வகைமையே இப்போது வளர்ந்து வருகிறது.

இவ்வாறு குடியேறி வாழும் வகைமைக்கு உள்ளான மக்கள், அவ்வந்நாடுகளையே தமது சொந்த நாடு போலப் பாவித்து, வாழவும் வளரவும் முற்பட வேண்டும். தாயகத்தின் மீது ஒரு காலும், புகுந்த நிலத்தின் மீது மற்றொரு காலுமாக, இரட்டைப் படகின் பயணம் செய்யும் இரண்டும் கெட்டான் நிலைக்கு இடம் தரக்கூடாது. வாழும் மண்ணில் வளத்தைப் பெருக்குவதோடு, தாமும் இசைந்து வாழ்ந்து, உயரத் தலைப்பட வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் செலவிட்டுச் சோம்பலுறும் கேளிக்கை களுக்கு உள்ளாகாது, சிக்கனமாக வாழ்ந்து, சேமிப்பை எல்லாம் முதலீடாக்கி, சிறுசிறு தொழில், வணிக முயற்சிகளில் நாட்டமுற்று நாளும் வளரவேண்டும். புகுந்த நாட்டில் நன்கு வேரூன்றாமல், கூடித் தொழில் செய்ய முயலாமல், அன்றாடம் காய்ச்சி வாழ்க்கையில் அல்லல் படக்கூடாது.

“தண்ணீருக்குள் மூழ்குபவன், உயிர் பிழைக்க மூச்சு விடுவதற்காகத் துடிப்பதைப் போல, இவ்வுலக பந்தங்களில் மூழ்கியிருப்பவன் இறையருளைப் பெறுவதற்காகவும் துடிப்புணர்வு கொள்ள வேண்டும்” என்றார் விவேகானந்தர். இறையருளைப் பெற ஆன்மா துடிப்பதைப் போல, பொருட்சிறப்பைக் கைக்கொள்ள அருமுயற்சித் துடிப்பும் அமைதல் வேண்டும். இத்தகைய துடிப்புணர்வுடைய மக்களும் நாடுமே மாநில உயர்வு பெறும்.

இன்றைய வாழ்க்கை முறையில் விரைவு, துணிவு, ஆற்றல் என்பன பொருள் செய்யும் வகைக்கு மிகத் தேவை. காலத்தைப் பொன் எனப் போற்றி, கடமையைக் கண் எனக் கருதி, காலமறிந்து, இடமறிந்து, கருவிகளைப் பயன்கொண்டு, பொருளாக்கம் செய்யும் நாடே முன்னிடம் பெற்றுத் திகழ்கிறது. ‘நாள் ஒன்று புலர்ந்தால் புதுமை ஒன்று பூக்கும்’ என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், புதிய கண்டுபிடிப்புக்களும் அறிவியல் அற்புதங்களும் உலக அரங்கில் போட்டியிட்டு வந்துகொண்டே இருக்கின்றன. ‘வலிமையுடையதே வாழும்’ என்ற சட்டமே ஆட்சி புரியும் இன்றைய தொழில் வாணிபப் போட்டி உலகில் விரைந்து மதிநுட்பத்தோடு வினையாற்ற நாம் முயல வேண்டும். நமது சிந்தையிலும் செயலிலும் போட்டியுணர்வும் வெற்றி நாட்டமும் மேம்பட்டுத் துலங்க வேண்டும். எனினும் இழப்பீட்டிற்கு அஞ்சாமல், தொழில் முனைவோராகத் தலை எடுக்கும் நாட்டம் சிறக்க வேண்டும். ‘செய்க பொருளை’ எனும் வள்ளுவக் கட்டளை தனிநபரை உயர்த்தும், சமுதாயத்தை மேம்படுத்தும், நாட்டை வளமுறுத்தும், நல்லுலகை வாழ்விக்கும், நிறைநலத்தோடு இறையருளும் சேர்ந்து எல்லாவற்றையும் சித்தியாக்கும் என்கிறது அபிராமி அந்தாதியின் ‘கலையாத கல்வியும்’ எனத் தொடங்கும் பாடல்.

செய்வோம் பொருளை; சிறப்போம் வாழ்வில்!

 

‘எனைத்தானும் நல்லவை கேட்க!’

‘எனைத்தானும் நல்லவை கேட்க!’

வாழ்க்கையில் நாம் பல காரியங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கிறது. ஓர் ஆண் தன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதாயினும், ஒரு பெண் தனது கணவனைத் தேர்ந்தெடுப்பதாயினும் ஆய்ந்து பார்க்க வேண்டும்.

தொழிலில் பணியாட்களைத் தேர்ந்தெடுப்பதிலும், இயக்குநர்களை, நிர்வாகிகளை, துணையாளர்களை, பாதுகாப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அரசு தன் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அரசை மக்கள் தேர்ந்தெடுப்பதிலும் இன்ன பிறவற்றிலும் நாம் ஆராய்ந்து தேர்ந்து எடுக்க வேண்டும்.

தகுதியும் பொருத்தமும் இல்லாதவரை – அன்பு காரணமாக, உறவு காரணமாக, நட்புக் காரணமாக முகத் தாட்சண்யம் கருதித் தேர்ந்து எடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் துயரம் அடைய நேரிடும்.

குடும்ப வாழ்க்கை தொட்டு, தொழில் வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, நாட்டு வாழ்க்கை வரை, தகுதியான, பொறுப்பு மிகுந்தவர்களைத் தேர்ந்தெடுக்காவிட்டால் நாம் செய்யும் செயல்கள் எல்லாம் பயனற்றுப் போகும். உயர்ந்தவர் – தாழ்ந்தவர், பெரியவர் – சிறியவர், பெருமை- சிறுமை என்ற குணங்கள் எல்லாம் பணத்தாலோ, பட்டத்தாலோ பிறந்த குலத்தாலோ உருவாவதில்லை. பத்தரை மாற்றுத் தங்கமா என்று கண்டறியக் கல்லில் தங்கத்தை உரைத்துப் பார்த்துப் பொன்னின்  மாற்றுக் காண்பது போல், ஒருவன் எண்ணும் எண்ணமும், சொல்லும் சொற்களும், அவன் உயர்ந்தவனா? தாழ்ந்தவனா?, சிறியவனா? பெரியவனா? என்ற உண்மைகளை உரைகல்லாகக் காட்டி விடும். செய்கின்ற செயலின் திறத்தால் ‘தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்ற அடிப்படையில் அவரவர் தகுதியை அறியலாம்.

ஆதலால் ஒருவரை எத்துறைக்குத் தேர்ந்தெடுத்தாலும் அவரைப்பற்றி நன்றாக ஆராய்ந்து, எண்ணிப் பார்த்து தெளிவான முடிவுக்கு வரவேண்டும். பதற்றமில்லாமல், பரபரப்பு இல்லாமல், அன்பு, உறவு, நட்புப் பாராமல் பொறுப்புக்குத் தகுதியானவரா? திறமையானவரா? நற்குணங்கள் நிறைந்தவரா? பழிக்கு அஞ்சுபவரா? நேர்மையானவரா? என்று அவரை அளந்தறிய முற்பட வேண்டும்.

தீய நோக்கம் உள்ளவர்கள், நல்லெண்ணம் இல்லாத வர்கள், சுயநலம் மிக்கவர்கள், குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள், சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் கயவர்கள் ஆகியோர் பேச்சுக்களை எல்லாம் மக்கள் கேட்டு மயங்கிவிடக் கூடாது.

சொல் நயத்துடன், ஆற்றலுடன் நாவன்மையால் பேசும் நச்சுக் கருத்துக்கள் தீமையை விளைவித்துவிடலாம். வாழ்வாகிய வழுக்கு நிலத்தில் வழுக்கி விடாமல், சேற்று நிலத்தில் சிக்கிவிடாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வழுக்கல் நிலத்தில், சேற்றுப் பாதையில் சிக்கல் நீக்கிக் காப்பது வாழ்ந்து காட்டிய ஒழுக்கமுள்ள அறிஞர்களின் வாய்ச்சொற்கள் தாம். வாழ்ந்து காட்டாத நாநயம் மிகுந்தவர்கள் சொற்கள் ஒருபோதும் பயன் விளைவிப்பதில்லை.

தூய  எண்ணங்களை எண்ணி, எண்ணம் போலவே சொல் தூய்மையுடையராய், செயல் தூய்மையுடையராய் உள்ள வாய்மை மிகுந்த நல்லவரின் நயம் மிகுந்த சொற்களே நாட்டினரை நல்வழியில் அழைத்துச் செல்லும். நல்லவை நாடி இனிய சொல்பவரை நாம் நாடிச் சென்று கேட்க வேண்டும். எவ்வளவுக்கு இத்தகைய பெரியோர்களின், சான்றோர்களின் பேச்சுக்களை விரும்பிக் கேட்கின்றோமோ, அவ்வளவிற்கு அல்லவை தேயும், அறம் பெருகும்; தனி மனிதனும் நாட்டு மக்களும் பயன் பெறுவர். இத்தகைய நல்லோரின் நயம் மிகுந்த, நலம் மிகுந்த, அறிவோடு உறுதியும் மிக்க கருத்துக்களைக் கேட்டுப் பயன்பெற வேண்டும். இதனையே செந்நாப்புலவர் வள்ளுவனார், ‘கற்றிலனாயினும் கேட்க!’ (414) என்று கட்டளையிட்டு, கேட்பவையெல்லாம் நல்லவையாக இருக்க வேண்டும் என்றும், வலியுறுத்திக் கேட்ட அளவிற்குப் பெரும் பயன் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் உண்டாகும் என்றும் உறுதிபடக் கூறுகிறார். அக்குறளைக் கேட்போம்.

“எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்

     ஆன்ற பெருமை தரும்”        (416)